வெடித்துக் கிளம்பும் விக்கிலீக்ஸ்

இரண்டு வருடங்களுக்கு முன்பு அனைத்து ஐரோப்பிய வரி ஆணையங்களுக்கும் இறுமாப்பு கூடியதோர் அதிர்ச்சியான தகவல் வந்தது. அந்தச் செய்தியின் சாராம்சம் “ஒரு ஸ்விஸ் தேசத்து தனியார் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களின் பட்டியல்களுடன் அந்த வங்கியின் கணணி அமைப்புகளுக்கான இணைப்பையும் சேர்த்துத் தரத் தயாராக இருக்கிறோம். நாங்கள் ரெடி, நீங்கள் ரெடியா?”என்று தெனாவெட்டாக வினவியது அந்த மின்னஞ்சல். இந்த ஜெர்மனியின் ரகசிய காவல் படைக்கும், ஃப்ரெஞ்ச் அரசின் காவல் துறைக்கும், பிரிட்டிஷ் அரசின் வரி வசூலிக்கும் ஆணையத்திற்கும், அனைத்து ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கும் பறந்தது. இந்தச் செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் அந்தப் பட்டியலும் அந்த வங்கியின் தரவுத் தளத்திற்குள் நுழையும் அனுமதியும் தரப்படுகிறது என்றால் அதன் அர்த்தம் மிக மிக முக்கியமானது. ஆம் பல பில்லியன், ஏன் டிரில்லியன் கணக்கில் வரி செலுத்தாமல் ஏய்த்துக் கணக்கில் காட்டப்படாத கள்ளப் பணத்தை வைத்திருப்பவர்களின் தகவல்களும் அவர்கள் வைத்திருக்கும் பண விபரமும் கிடைக்கிறது என்றால் அதன் முக்கியத்துவம் மிகப் பிரமண்டாமானது.

அந்த முக்கியமான மின்னஞ்சல்கள் ஹெர்பே ஃபால்சியானி மற்றும் ஜியோர்ஜினா மிக்கைல் என்ற HSBC வங்கியின் இரு ஊழியர்களின் கம்ப்யூட்டர்களில் இருந்து வந்தவை. ஆம், தாம் வேலை பார்த்த வங்கியில் சட்ட விரோதமாகக் கணக்கு வைத்திருந்த அனைவரின் தகவல்களையும் நகல் எடுத்து ஐரோப்பிய அரசாங்களுக்கு அனுப்பி வைத்தனர் அந்த இரு ஊழியர்களும். அவர்கள் செய்தது வங்கியின் சட்டப்படி சட்டவிரோதமான ஒரு காரியமே. ஆனால் இவர்கள் செயலால் அனைத்து ஐரோப்பிய நாடுகள் பெறும்ம் பயனைப் பார்த்தால் அவர்கள் செய்திருப்பது மாபெரும் சேவை. அவர்கள் இருவரும் பிகில் ஊதும் பணியைச் செய்தவர்கள் அல்லது நாடுகளின் நன்மை கருதி எச்சரிக்கை மணி அடித்தவர்கள் என்ற வகையில் சேருகிறார்கள்.

falcioni_hsbc

38 வயதான கம்ப்யூட்டர் மென்பொருளாரான ஃபால்சியானியும், 35 வயதான மிக்கைலும் HSBC வங்கியின் ஆயிரக்கணக்கான ஆவணங்களுடன் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்ட தரவுகளுடன், ஸ்விஸ் நாட்டில் இருந்து ரகசியமாக எல்லை தாண்டி ஐரோப்பிய சட்ட அமைப்புகளிடம் தங்களிடமிருந்த ஆயிரக்கணக்கான ஆவணங்களை ஒப்படைத்திருக்கிறார்கள். எங்கள் வங்கியின் ரகசியப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை மீறி விட்டார்கள், வாடிக்கையாளர்களின் தகவல்களை வெளியில் அளித்து விட்டார்கள் என்று அந்த இரு ஊழியர்கள் மீதும் வங்கி வழக்கு தொடர்ந்துள்ளது. ஆனால் அந்த இரு பிகில் ஊதுபவர்களும் தாங்கள் அந்தத் தகவல்களைக் காசுக்காக விற்கவில்லை, வங்கியின் ரகசியப் பரிமாற்றங்களை நாடுகளின் நலன் கருதி அம்பலப்படுத்தினோம் நாங்கள் செய்ததில் எவ்விதத் தவறும் இல்லை என்கிறார்கள்.

ஃபால்சியானி மற்றும் மிக்கைல் திருடிய ஆவணங்கள் யாவும் ஃப்ரெஞ்ச் அரசாங்கத்தின் கைகளில் முதலில் சிக்கின. தங்களுக்கு இலவசமாகக் கிட்டியதாகச் சொல்லப்படும் ஆவணங்களைக் கொண்டு ஃப்ரெஞ்ச் அரசாங்கம் வரி கொடாதவர்களைத் துரத்தி அவர்களின் கள்ளக் கணக்குகளை முடக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதே போன்று ஒரு வருடம் முன்பாக ஜெர்மனிய அரசாங்கம் ஒரு ஸ்விஸ் வங்கி ஊழியரிடமிருந்து அந்த வங்கியின் வாடிக்கையாளர் தகவல்களை 5.3 மில்லியன் டாலர்கள் விலை கொடுத்து வாங்கியது. இரண்டு நாடுகளிடமும் இருக்கும் தகவல்களில் அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் பட்டியல் மட்டும் அல்லாமல் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களின் கணக்கு விபரங்களும் அடங்கியிருந்தன. அந்த நாடுகளில் மிக அதிகமான கள்ளப் பணம் சேமிப்பில் வைத்திருந்த நாடுகளிலேயே முதல் இடம் இந்தியாவுக்குத்தான். உடனே ஜெர்மனி அரசாங்கம் இந்திய அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியது. உங்கள் நாட்டில் வரி கொடாமல் ஏமாற்றி ஸ்விஸ் வங்கியில் பல பில்லியன் டாலர்கள் கள்ளக் கணக்கு வைத்திருப்போர்களின் தகவல்கள் அனைத்தும் எங்களுக்குக் கிட்டியுள்ளது. நீங்கள் முறையாகக் கேட்டால் நாங்கள் அனுப்பி வைப்போம் என்றது.

உடனே நேர்மையாளரும், கறைபடியாக் கரங்களுக்குச் சொந்தக்காரரும், தூய்மையையே ஆடையாக அணிந்தவருமான நம் பாரதப்பிரதமர் மன்மோகன் சிங் என்ன செய்திருப்பார்? உடனே அந்தத் தகவல்களை எங்களுக்கு அளியுங்கள் நாங்கள் அவர்களைக் கைது செய்து கள்ளப் பணத்தைத் திருப்பிப் பெறுவோம் என்றுதானே செய்திருப்பார் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்? அப்படி நீங்கள் நினைத்தால் உங்கள் அரசியல் மற்றும் பொது அறிவு பூஜ்யம் என்று அர்த்தம். ஆம், மன்மோகன் சிங் உடனடியாக இந்தியத் தூதுவரை அனுப்பி ஜெர்மனி அரசாங்கத்தைக் கெஞ்சிக் கூத்தாடி ஒரு விண்ணப்பம் அளித்தார். அதாவது தயவு செய்து அந்த ஆவணங்களை எங்கும் வெளியிடாமல் உங்களிடமே பத்திரமாக வைத்துக் கொண்டு அந்த ரகசியத்தை காப்பாறுங்கள் என்று அழாத குறையாக நம் மன்மோகன் கேட்டுக் கொண்டார். இதை குறித்து விரிவாகப் பின்னால் பார்ப்போம். நான் இங்கு சொல்ல வந்தது மற்றொரு விஸில் ப்ளோயர் (Whistle Blower) குறித்து.

இப்படி உலகம் முழுவதும் அதி ரகசியம், சூப்பர் சீக்ரட், ஹைலி க்ளாஸிஃபைட், ராணுவ ரகசியம், என்றெல்லாம் கருதப்படும் அனைத்து விதமான ரகசியங்களையும் பொது மக்களிடம் போட்டு உடைப்பதையே தொழிலாகச் செய்து கொண்டிருக்கிறார்கள் ஒரு சில அமைப்பினர். அதற்கான முன்னோட்டம் மட்டுமே மேற்கண்ட ஃபிரெஞ்ச், ஜெர்மன் வங்கி ஆவணக் கடத்தல் நிகழ்ச்சிகள். இணையத்தால் இணைக்கப்பட்ட இன்றைய சைபர் உலகில் ரகசியம் என்பதே கிடையாது என்பதுதான் ரகசியமே. எப்போது ஒரு தகவல் மின்காந்தத்தகடுகளில் ஏற்றப்பட்டு விட்டதோ அப்போதே அது ஒரு பொதுச் சொத்தாகி விடுகிறது. இணையத்தில் ஒரு விஷயத்தை அனுப்பினால் அது பொதுச்சொத்து. திறமையுள்ள யார் வேண்டுமானாலும் அதைத் திருடி விடலாம் என்பதே இன்றைய சைபர் யதார்த்தம். இணையத்தில் அனுப்பினால் மட்டுமே தகவல்களைத் திருடமுடியும் என்பதில்லை. எங்கு எதை சேமித்து வைத்திருந்தாலும் அது களவு போகப்பட விதிக்கப்பட்டதே  என்பது இன்றைய க்ளோபல் சைபர் விதியாகிப் போனது.

ஜார்க்கண்டில் இந்தியப் படையினர் மீது மாவோயிஸ்டுகள் கொலைவெறித் தாக்குதல் நடத்தி 80 காவலர்களைக் கொன்ற கொடூரமான நிகழ்ச்சி நடப்பதற்கு சில நாட்கள் கழித்து கனடாவில் இருந்து இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஒரு தகவல் வந்தது. அந்த தகவலைப் பற்றி இந்திய ஊடகங்கள் எவையும் மூச்சு விட்டதாக நினைவில் இல்லை. இந்தியாவையே உலுக்கி புரட்டிப் போட்டிருக்க வேண்டிய பூகம்பம் போலான அதி முக்கியமான இந்தியாவின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் ஒரு தகவல் அது. அமெரிக்காவிலும், கனடாவிலும் அரசாங்க ரகசியங்களைக் களவு செய்யும் சைபர் கொள்ளையர்களைக் கண்காணிப்பதற்காக ஒரு சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சி அமைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த அமைப்பு கனடாவின் மன்க் ஸ்கூல் ஆஃப் க்ளோபல் அஃபேர்ஸ் என்ற டொராண்டோ பல்கலைக்கழகத்துறையில் இருந்து இந்திய உளவுத் துறைக்கு அனுப்பியதே அந்த அதிர்ச்சிகரமான தகவல்.

இந்தியாவின் அதி முக்கியமான ராணுவம், வெளியுறவு, உள்நாட்டு ஆவணங்களும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தால் மிக மிக ரகசியம் என்று எச்சரிக்கை செய்யப்பட்ட பல்வேறு ஆவணங்களும், இந்தியா ஆப்கானிஸ்தானில் செய்து வரும் வேலைகள் பற்றிய தகவல்களும், இந்திய தூதர்கள், ஒற்றர்கள் பற்றிய தகவல்களும் ஒன்று விடாமல் களவாடப்பட்ட விபரத்தை அந்த ஆராய்ச்சி அமைப்பினர் இந்தியாவுக்குத் தெரிவித்தனர். இந்த மாபெரும் சைபர் கொள்ளை நடந்து கொண்டிருப்பதை கனடாவில் இருந்த அந்தக் குழுவினர் கண்டு பிடித்திருக்கின்றனர். எந்தெந்த தகவல்கள் களவு செய்யப்பட்டன என்பதை திருடு போன வீட்டில் காணாமல் போன பொருட்களின் பட்டியலை அளிப்பது போல அந்த நிறுவனம் இதை இதையெல்லாம் உங்களிடமிருந்து திருடி விட்டார்கள் என்று பட்டியலையும் அனுப்பியுள்ளார்கள். இந்தியாவுக்கும் ஒரு சில நாடுகளுக்குமான உறவு சம்பந்தப்பட்ட தகவல்கள், இந்தியாவின் அதிநவீன ராக்கெட்டுகள் பற்றிய தகவல்கள் என்று அந்தப் பட்டியல் நீள்கின்றது. நம் வீட்டில் களவு போன விஷயத்தை பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஒருவன் நம் வீட்டில் காணாமல் போன குண்டூசி வரை மிகத் துல்லியமாகத் தந்திருக்கிறான். இந்த லட்சணத்தில் இந்தியா உலகத்தின் மென்பொருள் சிங்கம் என்று நாம் பெருமை பேசித் திரிகிறோம். உலகத்தின் தகவல் சங்கிலியின் மிக பலவீனமான இணைப்பு இந்தியாவின் பாதுகாப்பு நெட்வொர்க் என்கிறார் இந்தக் கனேடிய அமைப்பைச் சேர்ந்த ரஃபால் ரொஹோஸின்கி.

கனேடிய விஞ்ஞானிகள்
கனேடிய விஞ்ஞானிகள்

மார்ச் மாதம் இந்தியாவின் அமைச்சர் சச்சின் பைலட் இந்தியாவின் பாதுகாப்புத் துறை கம்ப்யூட்டர்களுக்குள் சீனா ஊடுருவ முயன்றதாகவும் ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார். அடுத்த வாரமே கனடாவில் இருந்து இந்த அதிர்ச்சித்தகவல் சொன்னது உன் வேட்டியுடன் கோவணத்தையும் சேர்த்தே திருடிக் கொண்டு போய் விட்டான் என்று. வேட்டி, சட்டையுடன் கோவணமும் கூட களவு போனது தெரியாமல் திரு திருவென முழித்துக் கொண்டிருக்கும் இந்தியப் பாதுகாப்பு அதிகாரி சித்தான்ஷு கார் சொல்கிறார் நாங்கள் எங்களுக்குக் கிடைத்த தகவல்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம் என்று.

எது எது களவு போனது என்ற தகவல் மட்டும் இன்றி யார் எப்படி களவாண்டார்கள் என்பதையும் அந்த கனேடிய அமெரிக்க அமைப்பு தெளிவாகவே சொல்லியிருக்கிறது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இருந்த சைபர் அட்டாக்கர்களால் இந்த ஊடுருவல் நடத்தப்பட்டது என்றும், இந்தியாவின் பலவீனமான நெட்வொர்க்குகளுக்குள் அவர்கள் மிக எளிதில் உட்புகுந்து இந்திய அரசாங்கத்தின் மிக மிக ரகசிய ஆவணங்களை எல்லாம்  ஏற்கனவே ஒரு நகல் எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள் என்பதையும், இனி இந்தியாவில் எந்த ஆவணமாவது தவறுதலாக அழிந்தோ தொலைந்தோ போனால் பேசாமல் சீனாவிடம் கேட்டால் அவர்கள் ஒரு காப்பி அனுப்பி வைப்பார்கள் என்ற கேவலமான உண்மையை கனேடிய அமைப்பு இந்தியாவுக்குத் தெரியப்படுத்தியது. ஆனால் சீனாவோ வழக்கம் போலவே இது ஆதாரம் இல்லாத குற்றசாட்டும் விஷமத்தனமான பிரச்சாரம் என்றும் மறுத்துள்ளது. இப்படிக் கோமணம் வரை உருவப்பட்ட விவகாரம் இந்தியாவில் மறைக்கப்பட்டு தாவூத் இப்ராஹிமின் அருமைத்தம்பி சுட்டுக் கொல்லப்பட்ட உலக மகா கொலையை அதிமுக்கியமாக நம் சிபிஐ துப்பறிந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் இனி எதுவும் ரகசியம் கிடையாது. நம் ராணுவத்தின் கைகளில் இருக்க வேண்டிய தகவல்கள் இன்று சோமாலியா கப்பல் கொள்ளைக்காரர்களிடம் கூட ரூபாய்க்கு ஐந்து என்ற கணக்கில் சீரழியும் நிலையில் இன்று இந்தியா இருக்கிறது. களவு போன ஆவணங்களில் ஒன்றாக மாவோயிஸ்டுகள் மீதான தாக்குதல் குறித்த திட்டமும் இருந்திருக்கலாம். அது சீனாவிடம் சென்ற பின்னால்தான் மாவோயிஸ்டுகள் நம் காவலர்களை உயிரோடு கொளுத்த முடிந்திருக்கிறது.

இந்த விசில் ப்ளோயர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிடக்கூடிய ஒரு ராட்சச விஸில் ப்ளோயர் இன்று உலக அளவில் முளைத்திருக்கிறது அதன் பெயர் விக்கி லீக். அந்த அமைப்பு இப்போது பொதுவில் வெளியிட்டுவிட்ட அமெரிக்க ராணுவத்தின் ஆப்கான் குறித்த மிக முக்கியமான ஆவணம் அமெரிக்காவையே உலுக்கியிருக்க வேண்டியது. அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய ரகசிய ராணுவ ஆவணக்கசிவு ஒன்று சென்ற ஜூலை 25ம் தேதி நடந்தது. முதல்நாள் வரை அமெரிக்க ராணுவத்தின், பெண்டகனின் அதி முக்கிய, மிகவும் பாதுகாக்கப்பட்ட  90,0000 பக்கங்களுக்கும் மேலான ராணுவ ரகசியங்கள் ஜூலை 25 அன்று உலகம் முழுவதும் தெரியும் வண்ணம் யார் வேண்டுமானாலும் படித்துக் கொள்ளும் வண்ணம் பொதுவெளியில் அம்பலப்படுத்தப்பட்டுவிட்டது. துரதிர்ஷ்டவசமாக அணுகுண்டு போல வெடித்திருக்க வேண்டிய அந்த ரகசிய ஆவணக்கசிவை வெறும் வெற்றுவேட்டாக, வெறும் ஊசிப் போன பட்டாசாக மாற்றி விட்டது அமெரிக்க அரசாங்கம்.

61151643

ஜூலை 25ல் இருந்து விக்கி லீக் என்ற பெயரே இணையத்தில் அதிக அளவு தேடப் பட்ட ஒரு சொல்லாக, அமெரிக்க தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் அனைத்திலும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு பெயராக இருந்தது. அதே வேகத்தில் ஒரு வார காலத்திற்குள்ளாகவே அந்தப் பெயர் மீடியாக்களின் கவனத்தில் இருந்து திட்டமிட்டு மறக்கடிக்கப்பட்டும் விட்டது. ‘விக்கி லீக்’ யார், அவர்கள் எதை வெளியிட்டார்கள்? ஏன் வெளியிட்டார்கள்? அமெரிக்காவில் அதன் தாக்கம் என்ன? இந்தியாவுக்கு அந்தக் கசிவினால் ஏற்படும் சாதக பாதகங்கள் என்ன? அதன் முக்கியத்துவம் ஏன் அமெரிக்க அரசால் அமுக்கப் படுகிறது? இவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக அடுத்த பதிவில் விபரமாகக் காணலாம்.