களவாணிகள் : யதார்த்த சினிமாவின் இறங்குமுகம்

‘திரையில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது எம்.ஜி.ஆரும் நம்பியாரும் வாள் சண்டை போடுகிறார்கள். ஒரு கட்டத்தில் நம்பியாரின் கை ஓங்க , படத்தை டூரிங் டாக்கீஸில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த நரிக்குறவர் ஒருவர் கோபத்தில் தன் கையிலிருந்த துப்பாக்கியை எடுத்து நம்பியாரைச் சுட, திரை ரெண்டாய் கிழிந்து எம்.ஜி.ஆர் இந்த பக்கமும் நம்பியார் அந்த பக்கமும் போய்விட்டார்கள்..’ என்று நகைச்சுவையுடன் எழுதுகிறார் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தனது ‘சினிமாவுக்கு போகலாம் வாங்க’ புத்தகத்தில். மிகையாகவோ நகைச்சுவைக்காகவோ சொல்லப்பட்டதாகத் தோன்றினாலும் சினிமாவின் தாக்கம் இல்லாத தமிழர்களே இல்லை எனும் அளவுக்கு தமிழ்நாட்டில் அதன் பாதிப்பு மிக அதிகமாய் இருக்கிறது, இன்றும். இன்று நாம் மாயஜாலுக்கோ PVR க்கோ ஜீன்ஸ், டி-ஷர்டுடன் ஸ்டைலாக சென்று பார்த்தாலும் நம் அடிப்படை ரசனை ஏறத்தாழ ஒன்றுதான். அன்று நூறு பைசாவுக்கு பார்த்தோம் இன்று நூறு ரூபாய்க்கு.

கலையின் தொழில்நுட்ப வெளிப்பாடுகளில் முக்கியமான ஒன்றான சினிமா, உலகின் எல்லா பிரதேசங்களிலும் வெவ்வேறு அளவில் தாக்கத்தை ஏற்படுத்தித்தான் இருக்கிறது. எனினும், பார்வையாளனை சம நேரத்தில் சிந்திக்க விடாமல் தன்வயமாக்கும் வலிமை உள்ள இவ்வூடகத்தை இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் எப்போதும் மற்ற எவரையும் விட மிக வித்தியாசமாகத்தான் பாவித்து வந்துள்ளார்கள். நாடகங்களின் தாக்கம் இருந்த ஆரம்பகாலம் முதல் தொழிநுட்பரீதியாக உலகின் சினிமா ஜாம்பவான்களுக்கு சவால் விடும் அளவுக்கு இங்கு வளர்ந்துள்ள இக்கலை,உண்மையில் சரியாகத்தான் கையாளப்படுகிறதா என்று பார்க்கப்போனால் ஏமாற்றம் தான் கிடைக்கிறது.

ஐம்பதாண்டுகளுக்கு முன்பே வணிகரீதியாக மிகப்பெரிய அளவில் தமிழகத்தில் வளர்ந்துவிட்ட சினிமா, காலப்போக்கில் வெளிநாட்டுத் தாக்கங்களையும் காலமாற்றத்தின் விளைவுகளையும் உள்வாங்கி மிகப்பெரிய உருமாற்றம் கண்டிருக்கிறது. இப்போது தமிழ் சினிமா உலகம், யதார்த்தம் என்ற ஆயுதத்தை உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆயுதம் என்று சொல்ல காரணம் உண்டு. நாளிதழ்களைப் புரட்டினால் செய்தியை விட அதிகமாய் சினிமா விளம்பரங்கள். கைலி கட்டிய பரட்டைத்தலை கதாநாயகன் கையில் அரிவாளுடன் ஊருக்கு வெளியே ஒரு பாறையில் அமர்ந்திருக்க, பள்ளிச்சீருடை அணிந்த பதின்வயது பெண்ணொருத்தி அவனைக் காதலுடன் பார்த்துக்கொண்டிருக்கிறாள். தமிழ் சினிமாவின் யதார்த்தம் என்பது இதுதான். இங்கு வாழ்க்கை என்பது காதலும் காதலை சார்ந்த விஷயங்களும்தான் என்றாகி விட்ட பிறகு ‘யதார்த்தம்’ என்னதான் செய்து விட முடியும்?

மலையாளம், கன்னடம், வங்காள மொழிகளில் யதார்த்த படங்கள் எப்போதோ ஆரம்பித்துவிட்டன. தாம் சார்ந்த நிலத்தை, கலாசாரத்தை , வாழ்க்கையைப் படமாக்க அவர்கள் என்றோ கற்றுக்கொண்டு விட்டார்கள். இலக்கியம், வரலாறு, பயணக்கட்டுரைகள் போன்றவை, நேரில் கண்டு அறிய முடியாத தூரப்பிரதேசங்களை பற்றிய ஒரு புரிதலை ஓரளவுக்கு வழங்கவல்லவை. அதே போல் சினிமா அல்லது எந்தக் கலையின் வடிவமும் அந்தந்த பிரதேசம், வாழ்க்கைச் சூழல், பிரத்யேக பழக்க வழக்கங்கள், சொல்லாடல்கள் போன்றவற்றை பிரதிபலிப்பது இயற்கையே. அப்படித்தான் நிகழவும் வேண்டும். அந்த வகையில் தமிழ் சினிமா தன் போலி அரிதாரங்களைக் களைந்து விட்டு நிஜத்தை நோக்கிய பயணத்தை துவங்கி விட்டது என்று சொல்லலாம், வெகு தாமதமாகவே. ஆனால் அந்த முயற்சியையும் முற்றிலும் வணிகத்தனமாக்கி, மலினமான ஸ்டீரியோடைப் திரைப்படங்களின் இன்னொரு திறப்பாக இந்த முயற்சியும் பயனற்றுப்போய்விடுமோ என்ற அச்சமும் எழுந்திருக்கிறது.

உண்மையில் தமிழ்சினிமாவில் நல்ல திரைப்படங்களுக்கான முயற்சி முப்பதாண்டுகளுக்கு முன்பே துளிர்விடத் தொடங்கியது. ஸ்டுடியோவுக்குள் பக்கம் பக்கமாக நாடக வசனங்கள் பேசிக் கொண்டிருந்த வேளையில், பாரதிராஜாவின் ‘பதினாறு வயதினிலே’ அதுவரை பார்த்திருந்திராத கிராம வாழ்க்கையைத் திரை உலகுக்கு வழங்கியது. அது ஒரு தொடக்கம் என்றால் மகேந்திரனின் ‘முள்ளும் மலரும்’ அதன் இன்னொரு பரிமாணத்தைத் தந்தது எனலாம். முற்றிலும் இயல்பு வாழ்க்கை இல்லைதான் என்றாலும் உரையாடல்களிலும் காட்சி அமைப்புகளிலும் இயல்பின் நம்பகத் தன்மையோடு அவை எடுக்கப்பட்டிருந்தன. அந்த நூலிழையைப் பிடித்து மேலேறிவிடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தன.

தொடர்ந்து ‘உதிரிப்பூக்கள்’ போன்ற சில படங்கள் வெற்றி கண்டன. பாலுமகேந்திரா, மகேந்திரன், ருத்ரையா போன்றோர் தங்களால் முடிந்த அளவுக்கு இப்படியான சினிமாவை முன்னெடுத்து செல்ல ஆரம்பித்தனர். ஆனால் இந்த கிராமியப் படங்களின் வெற்றிகளை சாதகமாக்கிக் கொண்டு ஏ.வி.எம் போன்ற பெரிய நிறுவனங்கள் முற்றிலும் வணிக நோக்கில் பல மசாலா சினிமாக்களைத் தயாரித்து நம்மைத் துன்பப்படுத்தின. வெளிப்புறப்படப்பிடிப்பு, இயல்பான வசனங்கள் என்று நம் சினிமா முன்வைத்திருந்த காலடி ‘சகலகலா வல்லவன்’ , ‘ முரட்டுக்காளை’ என்று திசை மாறியது. பிறகு வரிசையாக வாழ்க்கைக்கு எவ்விதத்திலும் சம்பந்த இல்லாத படங்கள், சிறுபிள்ளைகளின் நாடக முயற்சிக்கு இணையான ‘ காவியங்கள்’ ரசிகர்களின் ரசனையை வேறுபக்கம் திருப்பி விட்டன. நல்ல சினிமாவைத் தர இயக்குனர்கள் பயந்தார்கள் என்றே சொல்லலாம். ‘திரையில் ரெண்டு நிமிஷம் சத்தமில்லாமல் மௌனமான காட்சி வந்தால் தமிழ் ரசிகன் பொறுக்கமாட்டான்’ என்று ஒரு இயக்குனர் சொன்னது நினைவுக்கு வருகிறது.

மலையாளத்தில் பல யதார்த்த படங்கள் நம்மூர் வணிகப்படங்கள் போல் ஓடியிருக்கின்றன. நாம்தான் இது கலைப்படம் – இது வணிகப்படம் என்று பிரித்துப்பார்த்துப் பழகி இருக்கிறோம். நம்மூரின் யதார்த்தப் பட முயற்சிகள் தூர்தர்ஷனில் ஞாயிறு மதிய ஒளிபரப்பில் ‘வெளியாகி’ மறைந்தே விட்டன. இந்தியத் திரைப்படங்களை உலக அரங்கில் கொண்டு சென்ற சத்யஜித்ரே, ரித்விக் கட்டக் முதல் நமக்கு வெகு அண்மையில் உள்ள கேரளாவின் அடூர் கோபாலகிருஷ்ணன் வரை பலர் எத்தனையோ யதார்த்த படங்களை கொடுத்திருக்கிறார்கள்.

தமிழில் பல ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முதலாக உண்மையான கிராமத்து மனிதர்கள், இடங்கள், பள்ளிக்கூடங்கள் என்று ஒரு அருமையான அனுபவமாக தங்கர்பச்சானின் அழகி அமைந்தது. அதுதான் தொடக்கம். தொடர்ந்து மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்த சேரனின் ஆட்டோகிராப் இளம்பிராயத்து காதல்களையும் வாழ்க்கையில் ஒருவன் எதிர்கொள்ளும் இடர்களையும் சற்று இயல்பாக சொன்னது. பள்ளிக்கூட குறும்புகள், பதின்வயது காதல் என்று பலரைத் தன் இளமைக்காலத்தை நினைத்து ஏங்கும்படி செய்ததில் சேரனுக்கு வெற்றிதான். இது போன்ற படங்களின் வெற்றி, சிகப்பான முகங்களைப் பார்த்து பழகிய தமிழ் மக்களுக்கு தலையில் எண்ணெய் வழியும் கிராமத்து முகங்களை திரையில் அசலாக காட்டியது. மக்கள் தங்களைத் தாமே திரையில் பார்த்து மகிழ்ந்தார்கள். சினிமாவின் கதை சொல்லும் போக்கில் ஓர் திடீர் மாறுதல். களம் நேரடியான கிராமம். துணை நடிகர்களாக அந்தந்த வட்டாரத்தை சேர்ந்தவர்களே நடித்தால் நம்பகத்தன்மை கூடியது.

மிக முக்கியமாக தமிழ் சினிமா மேதைகள் என்று போற்றப்படும் பாலசந்தர், மணிரத்னம் போன்றோர் செய்ய துணியாத ஒரு விஷயத்தை இவ்வியக்குனர்கள் தைரியமாக செய்தார்கள். நம் முன்னோடி இயக்குநர்கள் புவியியலை என்றுமே பொருட்படுத்தியது கிடையாது. பாலச்சந்தரின் படங்கள் பலவற்றில் திரைக்கதையினூடே திடீரென்று மலைகள் முளைக்கும். ஆங்காங்கே அருவிகள் வழியும். அது இந்தியாவின் எந்த பிரதேசமானாலும் சரி. பாடல் காட்சிகளில் கடல் அலை பொங்கி பிரவாகமெடுக்கும். மணிரத்னம் போல் புவியியல் நிபுணர் யாருமில்லை எனலாம். அவரைப் பொருத்தவரை சிறுநகரம், கிராமம் எல்லாம் திருநெல்வேலியுடனேயே முடிவடைகின்றன. மதுரையைத் தாண்டினால் மத்திய ஆப்ரிக்கா வந்து விடுவதால் அவர் அங்கெல்லாம் செல்வதில்லை. காட்டுக்குள் நடக்கும் கதை என்றால் இந்தியாவின் எந்த காட்டிற்கும் சென்று வந்து விடுவார். நமக்கு விஷுவல் தானே முக்கியம். கதையுடன் தொடர்புடைய நிலமாவது மண்ணாவது. இல்லை என்றால் குரு (பாய்) தன குஜராத்தி மனைவியுடன் மதுரை திருமலை நாயக்கர் மகாலில் ‘தேரே பினா’ என்று பாடுவாரா? ஏமாற்றம் தரும் விதமாக உண்மையிலேயே முக்கியத்துவம் தரப்பட வேண்டிய இயக்குனரான மகேந்திரனின் ஜானியில் ஒரு மிகப்பெரும் அபத்தம் இருக்கும். ஊரை (சென்னை) விட்டு தள்ளி இருப்பவர் என்று அந்த கால நிரந்தர போலீஸ் அதிகாரி பாலாஜி சொல்லும் வித்யாசாகர் (ரஜினி) ஊட்டியில் இருப்பார். படத்தை பார்த்தவர்களுக்கு தெரியும். ஜானி ரஜினியின் வாழிடமும், வித்யாசாகர் ரஜினியின் வாழிடமும் முற்றிலும் வெவ்வேறாக இருப்பினும், கதைப்படி அவர்கள் ஒரே ஊர்காரர்கள். இப்படி கதை நடக்கும் களத்தை பற்றி எந்த தெளிவும் இல்லாமல் தான் படங்கள் உருவாகி வரலாறு படைத்தன.

இந்த மாபெரும் அபத்தத்தை தகர்த்தது இன்றைய இளம் இயக்குனர்களின் சாதனை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவால் ஒரே ஒரு காமெடி காட்சிக்கும், சில கல்லூரி காட்சிகளுக்கும் மட்டுமே உபயோகப்பட்ட புதுக்கோட்டை பகுதியை மையமாக வைத்து மிக எளிமையாக ஆனால் சுவையாக ‘பசங்க’ என்று ஒரு படத்தை எடுக்கும் தைரியத்தை பாண்டிராஜ் பெற்றிருக்கிறார். பெரும் வெற்றி பெற்ற ‘சுப்ரமணியபுரம்’, கவனிக்கப்பட்ட ‘வெண்ணிலா கபடிக்குழு’ போன்ற படங்கள் கதைக்கு தேவையான புவியியலை படம் முழுவதும் கொண்டிருந்தன. வட்டார வழக்கின் வசனங்கள் திரைப்படம் பார்க்கும் அனுபவத்தையும் தாண்டி அசலான மக்களை நேரில் பார்க்கும் உணர்வை தந்தன. ஜெயமோகன் வசனத்தில் வசந்தபாலன் இயக்கிய ‘அங்காடித் தெரு’ இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு மனிதர்களின் மத்தியில் உறைந்துகிடக்கும் சொல்லப்படாத கதை ஒன்றைக் களமாகக் கொண்டது முக்கியமான காரணம். அன்றாடம் சென்று பொருட்கள் வாங்கும் கடையில் வேலை செய்யும் சிப்பந்திகளின் வாழ்வை, அதில் மறைக்கப்பட்டிருக்கும் துயரத்தை மட்டுமல்லாது, வாழ்க்கையை எந்தக் கோணத்திலும் எதிர்கொள்ளத் துணியும் மனிதனின் மன உறுதியையும் சிறப்பாகச் சொன்னது படம்.

நல்ல சினிமா ரசிகர்கள் மகிழ ஆரம்பித்த நேரத்தில் நடுவில் எங்கோ ஒரு சறுக்கல். இளையராஜா ஒரு முறை சொன்னது போல் ஏணியை பிடித்து மேலே ஏறுவதற்கு பதில் இறங்க ஆரம்பித்து விட்டது யதார்த்த சினிமா. இப்போது வரும் படங்களின் வேர்களை ஆராய்ந்தால் அங்கு அரிவாளை தூக்கியபடி நிற்பது பருத்திவீரன்தான். அதை விடவும் சுப்ரமணியபுரம் இன்னும் அழுத்தமாக மக்கள் மனதில் பதிந்து வெற்றியும் பெற்றுவிட சும்மா விடுவார்களா காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளும் கலையில் வல்லவர்களான சினிமாக்காரர்கள்? தலைசீவாத கதாநாயகன், அவனுக்கென்று வேலை எதுவும் இருக்காது; கால் சட்டை தெரியும் அளவுக்கு உயர்த்திக்கட்டப்பட்டுள்ள கைலியும் வாயில் புகையும் பீடியும் தான் இன்றைய தமிழ் இளைஞர்களின் அடையாளம் என்று சொல்கிறது தமிழ் சினிமா. கதாநாயகிக்கு காதலிக்கவும் செத்துபோகவும் தெரிந்திருக்க வேண்டும். தமிழ் பேச தெரியக்கூடாது எனபது எழுதப்படாத விதி. ஆனால் தமிழ் கிராமத்து பெண்களே மறந்துவிட்ட தாவணியை உடலில் சுற்றிக்கொண்டு கதாநாயகன் போகும் வழியில் குறுக்கேயும் மறுக்கேயும் போய் அவனைக் கண் சிமிட்டாமல் சைட் அடிக்க தெரிந்திருக்க வேண்டும். கதாநாயகன் வாயெல்லாம் பல்லாக தலையை ஆட்டிக்கொண்டே நிற்க வேண்டும். கடந்த மூன்றாண்டுகளாக வரும் தமிழ் படங்களை பார்த்திருப்பவர்கள் கவனித்திருக்கலாம். இப்படிப்பட்ட ‘யதார்த்தத்தை’த்தான் முன்வைக்கிறது இன்றைய தமிழ் சினிமா.

சமீபத்திய உதாரணமாக திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘களவாணி’ தமிழ் ரசிகர்களின் ‘ரசனைக்கு’ ஒரு பதம். படத்தில் எந்த இடத்திலும் லாஜிக் இல்லை. ஆனால் மதுரையை தாண்டி காமெராவை கொண்டு போனதற்காகவே பாராட்டலாம் என்றொரு சலுகை; படத்தில் வெட்டு குத்தே இல்லை.. அப்பாடா நல்ல படம் என்றொரு பரவசம்; ‘டே நம்மூர்காரன் மாதிரியே பேசறாண்டா’ என்றொரு பிரத்யேக குதூகலிப்பு; யதார்த்தமாய் படமெடுக்கிறேன் பேர்வழி என்று வரும் புத்திசாலி இயக்குனர்களின் வலையில் விழாமல் இருக்க நம் ரசிகர்கள் ‘மேம்பட்ட ரசனையில்’ குறைந்தவர்களா என்ன?

கதாநாயகனை ‘நெகடிவ்வாக’ காட்டுவது நமக்கொன்றும் புதிதில்லை. ஆங்கிலப் படங்களில் கடைசி வரை நாயகன் கொடூரமாக வருவான். ஆனால் அதன் பின்னால் இருக்கும் வாழ்க்கை முரண்கள் சித்தரிக்கப்பட்டிருக்கும். புதிய ‘யதார்த்தத்’ திரைப்பட ஹீரோக்களின் வன்முறை உளவியலின் பின்னணி யாருக்குமே புரியாதது. நம் ஆட்களுக்கு அது பற்றி என்ன கவலை? காசு தரவில்லை என்றால் டிவியை உடைத்துவிடுவேன் என்று தன் தாயிடம் ஒருவன் மிரட்டினால் நம் ரசிகர்கள் கைதட்டி சிரிக்கிறார்கள்; காதலியிடம் இருந்து அலைபேசி அழைப்பு வந்து விட்டால் மாட்டு வண்டியில் அமர்ந்திருக்கும் பெண்களைப் பற்றி கவலைப்படாமல் குதித்தோடி விடுகிறான்; கைதட்டல் விண்ணை பிளக்கிறது. காதலித்த பெண்ணுக்கே தெரியாமல் அவள் கண்களை மூடி கடவுளை வணங்கும்போது தாலி கட்டுகிறான் நம் ‘மகான்’ ; கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. ‘சின்ன தம்பியில்’ ரஜினி படம் பார்க்கும் கவுண்டமணி தான் நினைவுக்கு வருகிறார். ஒரு வயதானவரை ‘சைடு வில்லன்’ தள்ளி விட்டதும் கூட்டம் பதறிப்போக கவுண்டர் மட்டும் கை தட்டுவார். அவருக்காவது படத்தில் கண் தெரியாது. நம் மக்களுக்கு சினிமா என்றாலே என்ன என்று தெரியவில்லை.

இப்படி ஒரு படம் எடுத்து அதற்கு நகைச்சுவை என்று பெயர் வேறு கொடுக்கிறார்கள். ‘சித்தி’, ‘கோலங்கள்’ போன்ற மகத்தான படைப்புகளை , இரவு சாப்பிடும்போதாவது பார்த்து வளர்ந்த மக்கள் அல்லவா? இப்படியான தலைமுறை ரசிகர்களிடம் இம்மாதிரி படங்கள் எடுபடுவதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. யதார்த்தம் எனும் ஆயுதம் என்று முன்பு குறிப்பிட்டது இதற்குதான். தற்போதைய இயக்குனர்கள் பிடித்து வைத்திருக்கும் நாடியில் தெரிவது இயல்பான கிராமத்து படங்கள்(!) . நான்கு கைலி இளைஞர்கள், ஒரு தாவணி பெண், ஒரே ஒரு வயல் வெளி போதும்.. மொத்த படத்தையும் முடித்து விடுவார்கள். கிராம வாழ்க்கை எப்போதும் காதலும், கும்மாளமுமாக தான் இருக்குமா? வாழ்க்கையின் ஓட்டத்தில் தேய்ந்து போன மனிதர்களை இந்த யதார்த்த இயக்குனர்கள் காமெரா கொண்டு பார்ப்பார்களா? இவர்கள் காட்டும் வெவ்வேறான ஊர்கள், சிரிப்பூட்டும் உள்ளூர் இளைஞர்கள், பள்ளிக்கூட மாணவியுடனான காதல் இவை வாழ்க்கை பின்னணிதான். வாழ்க்கை என்ன?

ஆனால் களவாணி போன்ற ‘உயர்ந்த ரக’ எண்ணங்களை தான் நம் மக்கள் தாம் ஏமாற்றப்படுவது தெரியாமல் பார்த்து ரசிக்கிறார்கள். ஏன் இப்படி அநியாயமாக ஏமாறுகிறீர்கள் என்றால் இது எங்கள் ரசனை. யாரும் குறுக்கே வர வேண்டாம் என்கிறார்கள். சற்று விலாவாரியாக எடுத்து சொன்னால் , நாங்கள் இதை ‘ஜாலியாக’ பார்க்கிறோம். இத்தனை சீரியஸாகவா படம் பார்ப்பார்கள் என்று கேட்கிறார்கள். இந்தப் படம் சினிமா உலகில் ஒரு புரட்சி செய்து விட்டது என்று பேசுகிறார்கள். படத்தின் கதையை(!) தயாரிப்பாளரிடம் முப்பது முறைக்கு மேல் சொன்னாராம் இயக்குனர். எத்தனை பொறுமை இருந்திருக்க வேண்டும் தயாரிப்பாளருக்கு. அது சரி அதனால்தானே அவர் பூமி ஆள்கிறார்?

உண்மையான யதார்த்த படங்களை எடுக்க வேண்டும் என்று காத்திருக்கும் இயக்குனர்கள் முதலில் நிறைய படிக்கவேண்டும். இந்தியாவின் மற்ற மொழிகளில் சிறந்த இயக்குனர்கள் தங்கள் பிரதேச வாழ்க்கை சூழலை எப்படி திரைப்படமாக தந்திருக்கிறார்கள் என்று அவதானிக்க வேண்டும். நம்மிடையில் எத்தனையோ கதைகள், குளியலறை ஓரத்தில் நம் பார்வைக்கு மறைந்து ஊறும் பூரானை போல் நெளிந்து கொண்டிருக்கின்றன. பிற மொழிகளில் அந்ததந்த பிரதேசத்து இலக்கியங்களை படமாக்கி வருகின்றனர். தமிழில் வாழ்க்கையின் யதார்த்தங்களை சொல்லும் எத்தனையோ படைப்புகள் இருக்கின்றன. அவற்றை படமாக்கலாம். எந்த ஒரு முயற்சியிலும் போலிகளின் தலையெடுப்பு நடப்பது இயல்பு தான். அப்படியானவர்களை அடையாளம் காட்டும் வகையில் சிறந்த படங்கள் வர வேண்டும். எல்லா மொழிகளிலும் சிறந்த படங்களை பார்க்கும் ஒரு தமிழ் ரசிகன் தன் மொழியில் உண்மையான சினிமாவை காண வேண்டும் என்று ஏங்குகிறான் . எப்போது நடக்கும் இவையெல்லாம்?