‘வியப்பளிக்கும் ஆளுமை வெங்கட் சாமிநாதன்’ – நேர்காணல் – பகுதி 2

வெங்கட் சாமிநாதன் எழுத ஆரம்பித்து இந்த வருடத்தோடு ஐம்பது வருடங்களாகின்றன. இத்தருணத்தில் வெ.சாவின் விரிவான பேட்டியை வெளியிடுவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது.

இந்த நேர்காணலின் முதல் பகுதி.

ஒரிஸ்ஸாவில் இருந்தபோது கல்கத்தா போயிருக்கிறீர்களா?

ve_saமகாநதியின் எதிர்க்கரையில் இருந்த புர்லாவில் நாங்கள் இருந்த போது ஒருமுறை கல்கத்தா போயிருந்தோம். ஒரு வாரம் கல்கத்தாவைச் சுற்றினோம். அங்கே விக்டோரியா மெமோரியல் ஹாலில் ராஜா ரவி வர்மா, பின் டேனியல் ப்ரதர்ஸின் கம்பெனி பெயிண்டிங்க்ஸ், ஒரிஜினல் பெயிண்டிங்கஸ் நிறைய இருந்தன. அவற்றையெல்லாம் நான் அங்குதான் ஒரிஜினலில் முதல் தடவையாகப் பார்த்தேன். அப்போது கல்கத்தாவில் அங்கே அகில இந்திய கலைக் கண்காட்சியும் ஒன்று நடந்து கொண்டிருந்தது. புதிதாக  அப்போது தொடங்கப்பட்டிருந்தது லலித கலா அகாடமி வருடா வருடம் நடத்தும் ஒரு அகில இந்திய கலைக் கண்காட்சியும் நடந்து கொண்டிருந்தது. அதில் ஹூசேனுடைய ஒரிஜினல் பெயிண்டிங்குகளையும் பார்த்தேன். நீலமும், மஞ்சளும் குழைத்து அப்படியே மனதை மயக்கி விடுவதாக அது இருந்தது. ஹுசேனுக்கு ஒரு tremendous sense of colours. வாட்டர் கலரிலேயே பெரிய பெரிய மாயங்களை, ஜாலங்களையெல்லாம் செய்து விடலாம். கோபால் கோஷ் அதில் மிகுந்த திறமைசாலி. ஷைலோஸ் முகர்ஜீயும்தான். இந்த ஓவியர்களும் சரி, ஓவியங்களும் சரி, இல்லஸ்டிரேடட் வீக்லியில் பிரசுரமாகியிருந்ததிலிருந்து பரிச்சயமானவை. சி.ஆர்.மண்டி என்பவர் அந்தப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த போது நிறைய அக்கால பிரசித்தி பெற்ற ஒவியர்களின் ஓவியங்கள் அதில் பிரசுரமாகும். அவற்றில் சிலவற்றை ஒரிஜினலாக கல்கத்தாவில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம். இப்படி ஒரு சின்ன ஆரம்பத்திலிருந்து அது வர வர தொடர்ந்து exposure வந்து கொண்டே இருந்திருக்கிறது. இப்போதும் எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் என்னால் எங்கும் போக முடியவில்லை. பத்து வருடங்களாக என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. இங்கே அந்த மாதிரி இருக்கு, இல்லை என்று ஒன்றும் சொல்ல முடியவில்லை. It may vary in its intensity. It may vary in the degree of intensity in relationship now, but it is there, and it has been continuing.

உங்களுடைய அனுபவம் அல்லது அனுபவம் சார்ந்த அறிவு தமிழ்நாட்டைத் தாண்டியும் செறிவூட்டப் பட்டிருக்கிறது. நீங்கள் தமிழ்நாட்டிலேயே இருந்திருந்தால் அது கட்டுப்படுத்தப்பட்டி ருக்குமா, அல்லது வெளியே சென்றதனால் அது மன விரிவு பெற்றதா?

பெரிய பெரிய அனுபவங்கள், ’பெரிய’ன்னு சொன்னால், என்னை உருவாக்கிய அனுபவங்கள் என்று சொல்லணும். அதெல்லாம் எனக்குக் கிடைத்திருக்கின்றன. என்னைத் தேடிப் போக வைத்த அனுபவங்களை விட தற்செயலாக என் முன்னால் வந்து நின்றவை அதிகம். முதலில் அவற்றை நான் தேடிப் போனேன் என்று சொல்ல முடியாது. ஆனால் அவை என் முன் எதிர்ப்பட்டு, அதில் எனக்கு ஒரு ஆர்வம் ஏற்பட்டவுடன், நான் அதைத் தொடர்ந்து தேடிப்போக, அதன் மூலம் பின்னால் பல அனுபவங்கள் கிடைத்தன என்று சொல்லலாம். ஆனால் இங்கேயே இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதைச் சரியாகச் சொல்ல முடியாது. நிச்சயமாக இப்படி என்றும் சொல்ல முடியாது. அப்படி என்றும் சொல்ல முடியாது. ஆனால் அங்கே இருந்த அனுபவங்கள் இங்கே கிடைக்காது என்று சொல்லலாம். எனக்கு இங்கே அவை கிடைக்கவில்லை. இங்கே கிடைத்த அனுபவங்களுடன் என் உறவு எப்படி இருந்ததோ அதை, இன்னும் intense ஆக, மிக உக்கிரமாக அங்கே தொடர முடிந்தது.

ஆனால் அங்கே கிடைத்திருக்கக் கூடிய அனுபவங்கள் எதுவுமில்லாமல் நான் இங்கேயே இருந்திருந்தால் எனக்கு எவ்வித அனுபவமும் கிடைக்காமலேயே போயிருக்கும். ஓவியங்கள், சிற்பங்கள் என்று இப்போ இங்கேயும் ஏதோ இருக்கத்தான் இருக்கின்றன. “இப்போ” என்பதை அடிக்கோடிட்டுச் சொல்லணும். ஆனால் அப்போ அங்கே அவற்றோடு எனக்குக் கிடைத்த உறவுகள் குறிப்பிடத்தகுந்தவை. அதுபோல ஹிந்துஸ்தானி சங்கீதம் ஈர்த்த அளவு என்னை கர்நாடக சங்கீதம் ஈர்க்கவில்லை. இங்கு கர்நாடக சங்கீதம் சாகித்யத்தைச் சார்ந்தே இருந்திருக்கிறது. ஆனால் ஹிந்துஸ்தானி சாகித்யத்தைத் தாண்டி சஞ்சரிக்கிறது. ஒரு ஒன்றரை மணிநேரம் ஸ்லாமத் அலிகான் பாடுகிறார் என்றால் அவருக்கு வேண்டிய சாகித்யம் இரண்டே இரண்டு வரிகள் தான். மீதி எல்லாம் ’ஆ’ஹா காரத்திலேயே இழையும் இசைதான். வெற்று சப்த லோகத்தில் அவர் இழைக்கும் மாயம்தான். ஆனால் அது இங்கே சாத்தியமில்லை இங்கே சாகித்யத்தில் தான் ஒரு ராகத்தின் சப்த ரூபம் சொல்லப்படுவதால் சாகித்யத்துக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. வாத்திய சங்கீதமாக இருந்தால் கூட ’நான் இந்தக் கீர்த்தனை பாடுகிறேன்’ என்று சொல்லித்தான் பாடுகிறார்கள். வாசிக்கிறவர் சொல்லாவிட்டலும் கூட, “காபி பாடினீங்களே ரொம்ப நல்லா இருந்தது, ‘என்ன தவம் செய்தனை’ தானே பாடினீங்க?” என்று கேட்டு மகிழ்கிறார்கள். வாத்தியத்தில் மொழியும் அர்த்தமும் தாண்டிய சப்த லோகத்தை உருவாக்கலாம் இல்லையா? எனக்குத் தெரியவில்லை. இதைச் சொல்வதற்கு எனக்குத் தகுதி உண்டா என்பதும் புரியவில்லை. ஆனால் என்னுடைய அனுபவத்தில், என்னுடைய பார்வையில் இதைச் சொல்கிறேன்.

நீங்கள் எழுதத் தொடங்கியது எப்போது, எப்படி?

இப்போது யோசித்துப் பார்க்கும்போது தெரிகிறது. பள்ளிப்பருவத்திலேயே வித்யாசமான மனது கொண்டவனாக இருந்திருக்கிறேன் என்று. சிறு வயதில் எனக்கு என் அக்கறைகளும், அனுபவங்களும் சாதாரணமாகத்தான் தெரிந்தன. ஆனால் நான் எழுதத் தொடங்கியது முதன் முதலில் ’எழுத்து’ பத்திரிகையில்தான். அதுவும் தற்செயலாகத்தான் நேர்ந்தது.

நான் ஹிராகுட்டில் இருந்து டெல்லிக்குச் சென்று, அங்கு மூன்று வருஷம் இருந்து விட்டு, பின்னர் ஜம்முவிற்கு மாற்றலாகிப் போனேன். அங்கே ஒரு மூன்று வருடம் இருந்தேன். அதற்கு முன்னால் டெல்லியில் இருந்தபோது அங்கே வீட்டிலிருந்து ஆபிஸிற்குச் செல்லும் வழியில் ஒரு வீட்டின் ஒரு காரேஜ். அங்கே ஒரு ரீடிங் ரூம் இருக்கும். அதில் கல்கி, ஆனந்தவிகடன் எல்லாம் வந்திருக்கும். அத்தோடு எழுத்து என்ற ஒரு பத்திரிகையைப் பார்த்தேன். அது சி.சு.செல்லப்பாவினுடையது. அவர் எழுதிய ’மணல் வீடு’ கதையை ஏற்கனவே நான் படித்திருந்தேன். அதுபோல க.நா.சுவின் ’ஒருநாள்’ என்ற நாவலை நான் ஹிராகுட்டில் இருந்தபோதே படித்திருந்தேன். லா.ச.ரா., ஜானகிராமன் தொகுப்புகள் எல்லாம் கலைமகள் பிரசுரத்தின் மூலம் வரும். அதையும் நான் முன்பே படித்திருக்கிறேன். பிச்சமூர்த்தி, சிதம்பர சுப்ரமணியன் எழுத்துக்கள் எல்லாம் எனக்கு முன்பே பரிச்சயமானவைதான். எழுத்து பத்திரிகையைப் பார்த்தால் இவர்கள் எல்லாம் அதில் எழுதியிருந்தார்கள். என் மனத்தில் இருந்ததை எல்லாம் இவர்கள் சொல்கிறார்களே என்று எனக்கு மிகவும் ஆச்சரியம்.

அதற்கு முன்னால் ஹிராகுட்டில் இருந்த போது ‘சாந்தி’ என்ற பத்திரிகை வரும். சிதம்பர ரகுநாதன் கதைகள், கு.அழகிரிசாமி கதைகள் என்று தொகுத்து புத்தகங்கள் வந்தன. சிதம்பர ரகுநாதன் தான் சாந்தியை நடத்திக் கொண்டிருந்தார். நான் ஒவ்வொரு மாதமும் நாலணா ஸ்டாம்ப் அனுப்பி அதை வரவழைத்துப் படிப்பேன். அதில் எல்லோரும் போற்றிக் கொண்டிருந்த கல்கியின் எழுத்துக்களைப் பற்றி ஒருமுறை அவர் மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். அதைப் படித்ததும் தான், நாம் நினைப்பதையே இவரும் எழுதியிருக்கிறாரே. ஆக, நாம் நினைத்தது நியாயமான ஒன்றுதான். வெளியில் சொல்லக் கூடிய ஒன்றுதான், அதில் பைத்தியக்காரத்தனம் ஏதும் இல்லை என்ற எண்ணம் வந்தது. அதே சமயம் அதெல்லாம் எழுத்திலும் வெளிவந்ததும் எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது. என்னை மாதிரி நிறைய பேர்கள் இருக்கிறார்கள் என்ற சந்தோஷமும் வந்தது.

பின் எனக்கு ஜம்முவுக்கு டிரான்ஸ்பர் ஆனது. ஜம்முவில் தமிழர்கள் என்று யாருமில்லை. ஆக, நான் என் தமிழ் அக்கறைகளைப் பேசி, பகிர்ந்துகொள்ள ஜம்முவில் எனக்கு யாருமில்லை. எனக்கு ’எழுத்து’ தவறாமல் வரும். சுதேசமித்திரன் வரும். அதில் ஜானகிராமன் மலர்மஞ்சம் என்ற ஒரு தொடரை எழுதிக் கொண்டிருந்தார். அப்போதெல்லாம் தொடர்கதைகள் நிறைய வரும். எழுத்து இதழில் ’பெரியவன்’ என்று ஆர்.சூடாமணி எழுதிய கதை ஒன்று வந்தது. செல்லப்பா வேறு அந்தக் கதையைப் பாராட்டி ஒரு குறிப்பு எழுதியிருந்தார். அந்தக் கதை எனக்குப் பிடிக்கவில்லை. அதுவும் எழுத்தில் ஏன் வெளியானது? என்று எனக்கு எரிச்சல். உடனே நான் எழுத்துக்கு ஒரு கடிதத்தை அனுப்பினேன். “இந்தக் கதையில் என்ன இருக்கிறது என்று இதை வெளியிட்டிருக்கிறீர்கள், இது மிகவும் அபத்தமான கதையாக இருக்கிறதே! எழுத்தில் வருமளவிற்கு இதில் என்ன இருக்கிறது?, வேறு எங்காவது வெளியாகி இருந்தால் அதுபற்றி நான் கவலைப் பட்டிருக்க மாட்டேன். ஆனால் உங்கள் எழுத்து பத்திரிகைக்கு இது ஏன்?” என்று கேட்டு நான் எழுதியிருந்தேன். உடனே சி.சு. செல்லப்பா அந்தக் கடிதத்தைப் பத்திரிகையில் பிரசுரம் செய்து, எழுத்து தலையங்கத்திலும் என் கடிதத்தைப் பாராட்டி சில வரிகள் எழுதிவிட்டு, தொடர்ந்து என்னை எழுத்துக்கு எழுதுமாறு கடிதமும் எழுதினார். அப்படித் தொடங்கியதுதான் எழுத்துப் பயணம். ஜம்முவில் எனக்குப் பேசுவதற்கு யாரும் ஆள் கிடைக்கவில்லை. யாரும் இல்லவும் இல்லை. மனதில் இருப்பதை எழுத ஒரு இடம் கிடைத்தது. எழுதினேன். அவ்வளவுதான். ஆக, தற்செயலோ அல்லது விபத்தோ, எப்படி எடுத்துக்கொண்டாலும், இப்படித்தான் நான் இங்கு, எழுத்துலகுக்கு வந்து சேர்ந்தது.

அப்படி நீங்கள் எழுதிய முதல் படைப்பு எது?

படைப்பு என்று சொல்வதா என்று எனக்குத் தெரியாது. எழுத்து, அல்லது என் எழுத்து என்று பேசலாமே. எனக்கு ஆத்மார்த்தமாக மனசுக்குள் இருக்கும் எதையும் இந்த மாதிரியெல்லாம் எழுதலாம் என்று எழுதுவதற்கு முதலில் தைரியம் கொடுத்தவர் ரகுநாதன். அவரது கதைகளைப் படித்து அதனால் ஈர்க்கப்பட்டவன் நான். அவர் ஒருமுறை ஒரு கட்டுரை எழுதியிருந்தார். தமிழ்நாட்டுக் கதைகள், நாவல்கள் எல்லாமே காதல், அது இது என்று மிக மோசமாக இருக்கிறது, வர்க்கப் போராட்டம், பாட்டாளிகள் போராட்டம், தொழிலாளர்கள் பிரச்சனை என்று மக்களை முன்னெடுத்துச் செல்லும் படைப்புகளையெல்லாம் யாருமே எழுத மாட்டேன் என்கிறார்கள் என்று. இப்படித்தான் ஏதோ எழுதியிருந்தார். அவர் எழுதியிருந்தது எதுவும் பிடிக்கவில்லை எனக்கு. வேடிக்கையாகவும் இருந்தது. உடனே, எழுத்து பத்திரிகையில் ஒரு கடிதம் எழுதினேன். அப்போது கம்யூனிஸ்ட் கட்சியின் அமிர்தசரஸ் மகாநாடு நடந்து முடிந்திருந்தது. அதன் தீர்மானங்கள் மக்கள் பிரச்சனைகளைப் பற்றித்தானே இருந்தது? உடனே நான் அவருக்கு “நீங்கள், பஞ்சும் பசியும் எழுதியிருந்தீர்கள், அடுத்தபடியாக உங்கள் கட்சியின் அமிர்தசரஸ் மகாநாட்டுத் தீர்மானங்கள் பற்றி நாவல் எழுதுங்கள். அதில் நிறைய பாட்டாளிகள் பிரசினைகள் இருக்கு” என்று எழுத்து பத்திரிகைக்குக் கடிதம் எழுதினேன்

‘பஞ்சும், பசியும்’ நாவலை முதல் சமூக புரட்சி என்றும் பாட்டாளிகள் என்றும் பேசும் முதல் நாவல் என்று ஏதேதோ சொல்லுகிறார்கள். அதில் ஒரு தொழிலாளி, முதலாளியின் மகளைத் தான் காதிலிக்கிறான். ஏன் அவன் காதலிக்க வேறு பெண்ணே கிடைக்கவில்லையா? இப்படி என்னெனவோ பேத்தல் எல்லாம் அதில் இருந்தது. அதில் முக்கியமானது அவர் பாட்டாளி மக்களுக்குத் தலைமை தாங்குகிற ஒரு புரட்சியாளர். அவருக்கு முதலாளியின் மகள் மீது காதல். முதலாளியோ ஒரு வில்லன். டிபிகல் எம்.ஜி.ஆர் சினிமா கதை. இதைக் கடுமையாக விமர்சித்து நான் எழுத்து பத்திரிகைக்கு எழுதினேன். செல்லப்பாவும் அதைப் பிரசுரம் செய்து விட்டார். அதனால் ரகுநாதனுக்கு என் மேல் கோபம். “என்ன இருக்குன்னு இதைப் போட்டீங்க?” என்று செல்லப்பாவிடம் சண்டை போட்டதாக, அடுத்த முறை விடுமுறையில் நான் சென்னை வந்த போது செல்லப்பா சொன்னார். ஆக, இந்த ரகுநாதன் நான் முன்னர் அறிந்திருந்த ரகுநாதன் இல்லை. விசுவாசமான கட்சித் தொண்டராகக் கீழே இறங்கி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அடுத்ததாக நான் எழுதியதுதான் பாலையும் வாழையும்.

அதைப் பற்றிச் சொல்லுங்களேன்!

தமிழ்நாட்டில் எல்லாத் தளங்களிலும், எல்லா கலைகளிலும் ஒரு வறட்சி. creative vision இல்லாத, creative energy, creative spirit என்பதே இல்லாத ஒரு வறட்சி. ஆரம்ப காலத்தில் இருந்தே ஒரு காவியத்திற்கு, ஒரு படைப்பிற்கு உரை எழுதினார்களே தவிர, அவர்கள் அதை கிரியேடிவாகப் பார்க்கவில்லை. அதாவது, ஏன் என்று பார்க்கவில்லை. அதில் என்ன எழுதி இருக்கிறது என்பதற்கு உரை எழுதினார்கள். அவ்வளவுதான். நம் பெரிய அறிஞர் பெருமக்கள் எல்லாம் வெறும் உரையாசிரியர்களாகவே இருந்திருக்கிறார்கள். அரும்பத உரையாசிரியரிலிருந்து ஆரம்பித்து இன்றைய, அல்லது நேற்றையவா?, மு.வரதராசனார் வரைக்கும். ஆக இது பாலை நிலம் இங்கே வாழைப்பயிருக்கு இடமில்லை என்பதாக எழுதியிருந்தேன். So that was the first long article covering all areas of creative endevour. அது எழுத்தில் வெளியானது. 1961ல் என்று நினைக்கிறேன்.

அதற்கு வரவேற்பு எப்படி இருந்தது?

வரவேற்பு என்றால் எழுத்து பத்திரிகை எவ்வளவு தூரம் பரவியிருந்ததோ அவ்வளவு தூரம் அதுவும் பரவியது. அகிலன், நா.பா என்னும் அந்த அளவிற்குப் பரவவில்லை. பரவாது. ஆனால் எழுத்து எடுத்துப் போகும் இடங்களுக்குப் போய்ச் சேர்ந்தது. சிலோனிலிருந்து அதற்கு நல்ல கவனிப்பு இருந்தது. ஆனால் இங்கே அந்த அளவிற்கு இல்லை. ஆனால் மிக முக்கியமான விஷயம் இதையெல்லாம் பற்றி எழுத முடிந்தது, அதைப் படித்து வரவேற்கிறவர்களும், கவனம் கொள்கிறவர்களும், தொடர்பவர்களும் இருந்தார்கள் என்பதுதான். அந்த எழுத்துக்கள் அந்தக் காலத்தில் அதைப் படித்தவர்களிடையே ஒரு சின்ன வட்டத்துக்குள்ளே ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. அது ஒரு புது குரலாக அவர்களுக்கு இருந்திருக்கிறது. இருந்தாலும் அது சிறிய வட்டம் தான். மிகச் சிறிய வட்டம்.

படைப்பின் மீதான விமர்சனத்தை விடுத்து விமர்சனம் செய்தவரையே கடுமையாகச் சாடும் இலக்கியப் போக்கு குறித்து உங்கள் கருத்து என்ன?

அதற்கு என்ன செய்வது? அந்த மாதிரியான சூழல்கள்தான் இங்கே இருக்கின்றன. நான் சில இயக்கங்களை மிகக் கடுமையாகத் தாக்கி எழுதியிருக்கிறேன். அதே போன்று இலக்கியத்தை வியாபாரப்படுத்தியவர்களை – தொடர்கதை போன்று – அகிலன், நா.பா வகையறாக்களை கடுமையாக விமர்சித்து எழுதியிருக்கிறேன். இவர்களுக்கும் இலக்கியத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. இவர்களெல்லாம் இலக்கியம் என்று சொல்லி வேறு ஏதோ காரியத்தைச் செய்து கொண்டிருந்தவர்கள். அதற்கு எதிர்வினையாகக் கருத்துக் கூறாமல் என்னை சாதிப் பெயர் சொல்லித் திட்டியும், அமெரிக்கக் கைக் கூலி என்றும் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்தவர்கள் எழுதினார்கள், பேசினார்கள். மற்றவர்களோ, ”நீ யார் என்னைச் சொல்ல, லட்சோப லட்சம் வாசகர்கள் ஏற்றுக் கொண்ட பிறகு நீ எதற்கு?” என்று சொன்னார்கள். அதாவது பரவாயில்லை. அவர்கள் சொல்வதில் ஒரு நியாயம் இருக்கிறது. அது இலக்கியம் சம்பந்தப்பட்டதாக இல்லாமல் இருக்கலாம். சாதாரண மக்களின் ரசனைக்கேற்ப எழுதுகிறவர்கள், அவர்கள் எழுத்தில் ஒரு நிலைப்பாடு உண்டு. ஆகவே அவர்கள் கேள்வியில் ஒரு அர்த்தமுண்டு. அவர்கள் பார்வையை எழுதினார்கள். அதில் பொய்யில்லை. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் எனக்கு அமெரிக்காவில் இருந்து மணியார்டர் வருகிறது என்றெல்லாம் சொன்னார்கள். இது திட்டமிட்ட தெரிந்தே செய்த பொய் பிரசாரம். தி.க.சிவசங்கரனும் அவர்களுள் ஒருவர். சிகரம் செந்தில்நாதன் தன்னுடைய பத்திரிகையில் அப்படி எழுதினார். இதற்கெல்லாம் என்ன ஆதாரம்? என்று யாரும் கேட்கவில்லை. கோவை ஞானி மட்டுமே, ”ஏன் இப்படியெல்லாம் ஆதாரமில்லாமல் எழுதுகிறீர்கள்?” என்று கேட்டாராம். ஞானியை தொன்னூறுகளில் முதல் முறையாக கோயம்புத்தூர் போயிருந்தபோது சந்தித்தேன். அப்போது அவர் இந்தக் கதையைச் சொன்னார். அதற்கு இவர்கள், ‘அவர் அமெரிக்கக் கைக்கூலியாக இப்போது இல்லாமல் இருக்கலாம். ஆனால் இப்படி எழுதியதால் இனிமேல் அமெரிக்காவிலிருந்து பணம் வருவதாக இருந்தால் அது வராமல் தடுத்து விடும் இல்லையா?’ என்றார்களாம். என்னை அமெரிக்காவின் சி.ஐ.ஏ. ஆள், அமெரிக்காவுக்கு அடிக்கடிப் போய் வருகிறேன் என்றெல்லாம் 1994-95களிலிருந்தே கூறி வருகின்றனர். இன்னும் நான் அமெரிக்கா என்ன, கும்மிடிபூண்டி கூட நான் போனதில்லை. இந்தத் தகவல்களெல்லாம் வனமாலிகை நாகர்கோவிலிலிருந்து நடத்திய ஒரு பத்திரிகையில் வந்திருக்கிறது. அதை எழுதியவர் இப்போதும் இருக்கிறார். ஆனால் என்னை அமெரிக்க ஏஜெண்ட் என்று சொன்னவர்களின் கூட்டம் தலைவலி வயிற்று வலி என்று சொல்லிக்கொண்டு ரஷ்யா போய் வருவதை வழ்க்கமாகக் கொண்ட கூட்டம்தான். அடிக்கடி மாஸ்கோவிலிருந்தும் இவர்களுக்கு அழைப்பு வரும். இவர்களும் ஏதாவது அரசியல் முடிவு எடுக்க வேண்டுமெனில், இவர்களுக்கு உடனே வயிற்று வலி வரும். அதற்கு நம்மூர் ஆஸ்பத்திரி உதவாது. மாஸ்கோ போவார்கள். இப்போது அந்த வயிற்று வலி, தலை வலி எல்லாம் வருவது நின்று விட்டது போலும். அவர்கள் மாஸ்கோ போவதும் நின்றுவிட்டது.

ஒருமுறை நக்கீரனில் தேர்தல் பற்றிய ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். நக்கீரன் என்னை எழுதச் சொல்லிக் கேட்டு எழுதியதுதான். அப்போது நக்கீரன் பத்திரிகையையே நான் பார்த்ததில்லை. ”நான் என்ன எழுதுவது?” என்று என்னை எழுதச் சொல்லிக் கேட்க நக்கீரனிலிருந்து வந்தவரைக் கேட்டேன். ”இப்போ எலெக்‌ஷன் நடக்கப்போகுதுங்களே, அதைப் பத்தி எழுதுங்களேன்,” என்று சொன்னார்கள். எழுதினேன். அதில், அந்தக்காலத்தில் நீதிக்கட்சியின் பி.டி.ராஜனை, கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக எதிர்த்து நின்ற பி.ராமமூர்த்தி, சிறையில் இருந்தவாறே ஜெயித்ததை, ’பிரியாணிப் பொட்டலங்கள், புடவை, வேட்டி, கொடுக்காமலேயே ஜெயித்தார்’ என்று எழுதியிருந்தேன். அது சம்பந்தப்பட்டவர்களை மிகவும் உறுத்தியிருக்கிறது. அதற்கு எனக்கு ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின தலைவரிடமிருந்து எதிர்ப்பும் கண்டனமும் வந்தது. அந்தக் கட்சியின் தலைவர் நக்கீரனுக்கு போன் போட்டுத் திட்டினார் என்று சொன்னார்கள். அந்தத் தலைவர் திட்ட ஆரம்பித்தால் என்ன பாஷையில் என்ன மாதிரியான திட்டுக்கள் விழும் என்று அனேகமாக எல்லோருக்கும் தெரியும். நீங்களும் யூகித்துக் கொள்ளலாம் என்றார்கள். பெரியார் திராவிட கழக தலைவர் ஒருவர் தன் மாப்பிள்ளையிடம், “இன்னும் கொஞ்ச நாளைக்கு உங்க ஃப்ரண்டை ’வெளியே தலை காட்ட வேண்டாம்னு சொல்லி வை.” என்று சொன்னதாக மாப்பிள்ளை எனக்கு டெலிபோனில் சொன்னார். அந்த மாப்பிள்ளை எனக்கு நண்பர். நான் தில்லியில் இருந்த காலத்திலிருந்து என் நண்பர். அவர் திராவிட கழக அனுதாபி என்பது எனக்குத் தெரியும். திராவிட கழகங்கள் பற்றி என் நிலை என்ன என்பதும் அவருக்குத் தெரியும். இருந்தாலும் நாங்கள் நண்பர்கள். அவர் எனக்கு டெலிபோனில் எச்சரிக்கை செய்தார். இப்படியெல்லாம் இங்கே சூழல் நிலவியது. நிலவிக் கொண்டிருக்கிறது.

பல எழுத்தாளர்களது நூல்களைப் படித்து நீங்கள் விமர்சனம் செய்திருக்கிறீர்கள். நிறைய படைப்பாளிகளை அடையாளம் காட்டியிருக்கிறீர்கள். இது எப்படி சாத்தியமானது?

அது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆரம்ப காலத்தில் நல்ல எழுத்து என்று எடுத்துச் சொல்ல கொஞ்சப் பேர்தான் இருந்தார்கள். முடிந்தது. ஆனால் இப்போது நிறைய பேர் வந்திருக்கிறார்கள். எல்லோரையும் படிப்பது என்பது சாத்தியமில்லாதது. மேலும் நான் ஒன்றும் registrar of companies கிடையாது. அவங்க மாதிரி எல்லாத்தையும் படித்து நல்லது கெட்டது முத்திரை குத்த. என் விருப்பத்திற்கு, என் தேடலுக்கு படிக்கிறேன். ஆகையால் படிப்பது என்பது எனது சுதந்திரம். எனக்குப் பிடித்திருந்தால் படிக்கிறேன். படிப்பது மட்டுமில்லை, எனக்கு இன்னும் எத்தனையோ வேறு ஈடுபாடுகள். ஆகவே, தற்போது படிக்கிற நேரம் குறைவுதான். அப்போது ஹிராகுட்டில், ஜம்முவில் இருந்தபோது நிறைய நேரம் இருந்தது. நிறைய விஷயங்களைப் படிக்க முடிந்தது. ஆனால் தற்போது அப்படி இல்லை. மேலும் நிறைய படைப்பாளிகளைப் பற்றி நான் அபிப்ராயம் சொன்னதும் நடந்திருக்கிறது, அதற்கு மாறாக என் அபிப்ராயஙக்ள் தவறாகியிருப்பதும் உண்டு. துளிர்ப்பதைக் கண்டு சந்தோஷப்படுகிறோம். துளிர்ப்பது எலலாமே செடியாகி மரமாகி, காய்த்து, பழம் தர… அப்படியெல்லாம் நடப்பதில்லையே.

தற்காலப் படைப்பாளிகளில் தங்கள் மனம் கவர்ந்தவர்கள் என்று யார், யாரைச் சொல்வீர்கள்?

ஜெயமோகன், நாஞ்சில்நாடன், யூமா வாசுகி என்று பலரைச் சொல்லலாம். யூமா வாசுகியின் இரத்த உறவு ஒரு முக்கியமான படைப்பு. படிப்பது என்பது இன்பத்துக்காக, பொழுது போக்குவதற்காக, சிந்தனையை வளர்ப்பதற்காக என்று என்னென்னவோ சொல்வார்கள். ஆனால் இரத்த உறவின் ஒரு வரி கூட உங்களை சந்தோஷப்படுத்தாது. ரொம்பவும் gloomy and depressing. இப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பார்களா? இப்படியெல்லாம் பாட்டிகள், அப்பாக்கள் இருப்பார்களா? என்று திகைக்க வைக்கும். ஒரு இடத்தில் கூட, ஒரு சிறு புன்னகையைக் கூட தராத படைப்பு. எங்கு பார்த்தாலும் கொடுமைப் படுத்தும் உறவுக்காரர்கள். கொடுமைப்படுத்தும் உலகம். குழந்தைகளிடம் கூட ராட்சஸத்தனமாக நடந்து கொள்ளக் கூடிய மனிதர்கள் என்று. நினைத்துப் பார்க்கவே இயலாத படைப்பு. எப்படி இது சாத்தியமானது? எது உங்களை ஆர்வத்தோடு படிக்க வைப்பது? அது ஒரு முக்கியமான நாவல்.

அது போல இமையம். அவருடைய செடல் போன்ற படைப்புகள் மிக முக்கியமானவை. தேவதாசிகளின் வரலாற்றை மாறுபட்ட கோணத்தில் சொல்வது. ஒரு சின்னப் பெண்ணை பொட்டுக்கட்டி விடுவது, அவள் மாட்டேன் என்று சொல்வது என தலித் இலக்கியத்தில் அது ஒரு மாறுபட்ட படைப்பு. rebels can come from anywhere, from any strata of society. இதற்கு கல்வி வேண்டும், அப்போதுதான் சுதந்திரம் பற்றித் தெரியும் என்பதெல்லாம் கிடையாது. இது மனித சுபாவம். உள்ளுக்குள் இருப்பது. அதை யாரோ ஒருவன் தத்துவமாக எழுதி விட்டுப் போகிறான், அவ்வளவுதான். செடல் ஒரு தலித் பெண். அவள் எந்தப் பள்ளியில் படித்தாள்? பெற்றோரை, சமூகத்தை எதிர்க்கும் உணர்வும் தைரியமும் அந்த தலித் பெண்ணுக்கு யாரைப் பார்த்து வந்தது? அவளுடைய ரோல் மாடல் யார்? அவளுக்கு யார் இன்ஸ்பிரேஷன்? அது அவளுக்கு இயல்பாக வந்தது. எப்படி வந்ததென்று எப்படிச் சொல்ல முடியும்? அது மனிதர்களின் இயல்பான சுபாவம் இல்லையா? எல்லாவற்றுக்கும் மேலாக, தலித் சமூகங்களில் கூட பொட்டுக்கட்டும் வழக்கம் உண்டு என்பது இமையம் சொல்லித்தான் எனக்குத் தெரியும். இது போன்ற படைப்புகள் முக்கியமானவை. [இந்த நாவலைக் குறித்து வெ.சா சொல்வனத்தில் எழுதிய கட்டுரை: “பொட்டுக்கட்டப்பட்ட தேவதாசியாக மறுக்கும் ஒரு தலித் பெண்”] இப்படி அவர் எழுதி யிருப்பது அவர் சார்ந்துள்ள கட்சிக்கும் பிடிக்காது. தலித் சித்தாந்திகளுக்கும் பிடிக்காது. செடல் என்னும் இந்த தலித் சிறுமியிடம் காணும் எதிர்ப்புணர்வு, சமூகத்துடன் போராடும் தைரியம், எதுவும் தலித்துகளுக்காக்ப் போராடுவதாகச் சொல்லிக்கொள்ளும் கட்சித் தலைவர்களிடம் கிடையாது. ஆக, செடலுக்கு ரோல் மாடல் செடலே தான்.

பெண் கவிஞர்களின் பெண்ணியம் மற்றும் பெண் உடல் மொழியை அடையாளப்படுத்துதல் என்பது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அது இயல்பானதுதானா, அல்லது வலிந்து சொல்லப்படுவதா?

அது வலிந்து சொல்லப்படுகின்ற விஷயம்தான். இயல்பாக வரக்கூடிய, உள்ளே இருக்கும் ஆதங்கமோ, ஆத்திரமோ, வெளிக்கிளம்பி எரிமலை வெடிக்கிற மாதிரி வெடிக்கக் கூடிய நிலையில்தான் நாம் பெண்களை வைத்திருக்கிறோம். அது வேறு விஷயம். ஆனால் இதை எழுதுகிறவர்களிடமெல்லாம் உண்மையில், உள்ளத்தில் அது போன்று எரிமலையாக ஏதும் கொந்தளிக்கிறதா என்பது ஒரு விஷயம். மேலும் அந்த எழுத்துக்கள் எல்லாம் உண்மையில் எரிமலையாகக் கொந்தளிக்கக் கூடியவைதானா என்பதும் ஒரு விஷயம். இயல்பாக வரக் கூடியதென்றால், எந்த மொழியில் வர வேண்டுமோ அந்த மொழியில் வரவில்லை அது. தேடிச் சென்று பெற்ற மொழியாக அது இருக்கிறது. பெண்ணிய எழுத்துக்கு அடையாள மொழி இதுதான் என்ற முன் தீர்மானத்தில், நிர்ப்பந்தித்து வரும் ஒன்றாக அது இருக்கிறது. அது சமஸ்கிருத மொழியாகவே இருந்தாலும். அது ஏன்? அது செயற்கைதானே! இதெல்லாம் கொத்துக்கடலையில் மசாலா தூவுவது போன்ற காரியம்தான். கொரிக்க சுவையாக இருக்க வேண்டாமா? அப்பத்தானே சன்ங்க வாங்குவாங்க.

இதெல்லாம் உண்மையாகவே இருந்தால் இவர்களில் ஒரு சிலர் ஏன் பெண்களை மதிக்காத, பெண்களைக் கேவலப் படுத்துகிற, பெண்களை போகப் பொருளாகவும், அலங்காரப் பொருளாகவுமே நினைக்கிற கட்சியில், அக்கூட்டத்தினருடன் இணைய வேண்டும் என்பதும் ஒரு மிகப்பெரிய கேள்வி. இது மிகப்பெரிய முரண் இல்லையா? இதில் எங்கே இயற்கை இருக்கிறது?

புதுக்கவிதை வந்த பிறகுதான் தமிழில் சமஸ்கிருத வார்த்தைகள் மீண்டும் அதிகம் புழக்கத்தில் வந்தன என்பது குறித்து…

பெரும்பாலும் வானம்பாடிகளிடமிருந்து வந்தவைதான் அவை. முதலாவது அவர்கள் பேசக் கூடிய விஷயங்கள் கோஷங்களாகவே வந்து விழுகின்றன. அவர்கள் எழுதுவது அனுபவங்களாக இல்லை. உரத்த கோஷங்கள். அவை எல்லாமே மிகச் செயற்கையானவை. இரண்டாவது அவர்களது மொழியும் செயற்கையானது. ஒரு பரவலான கவனம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகச் செய்ததுதான் அது. சாதாரணமாக கவிஞர்கள் எல்லாம் தனித்த ஆளுமைகளாக இருப்பார்கள். கம்யூனிஸ்ட் கட்சி எழுத்தாளர்கள் போல, வானம்பாடிகள் எல்லாம் ஒரு யூனியன். திராவிட கழக கவிஞர்கள் போல, வானம்பாடி என்பது ஒரு ட்ரேட் யூனியன். அவர்கள் ஒரு கூட்டமாகச் சேர்ந்து செயல்பட்டவர்கள். பின்னால் பிரிந்து போகும் வரைக்கும் அவர்கள், ஒருவருக்கொருவர் அனுசரணையாகத்தான் பேசினார்கள். தங்களுக்குள் சப்போர்ட்டாக இருந்தார்கள். கோவை ஞானி கூட இவர்களைப் பற்றி மிக உயர்வாக, மிகுந்த நம்பிக்கையோடு எழுதினார். வெளிச்சங்கள் என்று வெளிவந்த வானம்பாடிகள் கவிதைத் தொகுப்பின் முன்னுரையில். ஆனால் இப்பொழுதும் அதே வார்த்தையைச் சொல்வாரா என்பது எனக்குத் தெரியாது. நியாயமான பார்வை மாற்றம் என்பது, கருத்து மாற்றம் என்பது அப்படித்தான் வர வேண்டும். திடீர் திடீரென்று கட்சி மாறுவது பார்வை மாற்றம் ஆகாது.

முக்கியமான பெண் படைப்பாளிகள் குறித்து…

தமிழச்சி ஒரு நல்ல பேச்சாளர். சுமுகமாக ஏதும் பந்தா இல்லாமல் அனைவருடனும் பழகக் கூடியவர். அதுபோலத்தான் சல்மாவும். அவரது ஒரு சில கவிதைகளில் கையாண்ட மொழி செயற்கையாக இருந்தாலும் அவர் எழுதிய இரண்டாவது ஜாமங்களின் கதை ஒரு குறிப்பிடத்தக்க மிகவும் கவனிக்க வேண்டிய படைப்பு. அது அந்தச் சமூகத்து மக்கள் அன்றாடம் பேசும் வாய்மொழியை வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் அவர்களது வாழ்க்கையை, அவர்கள் உறவுகளுக்குள்ளேயே உள்ள ஆசாபாசங்களை, தனக்குத் தெரிந்த உலகைச் சொல்லும் ஒரு இயற்கையான படைப்பு. அதை எழுதுவதற்கு உண்மையிலேயே ஒரு அசாதாரண தைரியம் வேண்டும். அதுவும் ஒரு பெண்ணுக்கு. முஸ்லீம் மத ஆண்களுக்கே இல்லாத தைரியம் சல்மாவிடம் இருக்கிறது. அது போல பாமாவின் படைப்புகளையும் சொல்லலாம். வெளியிலிருந்து தரப்பட்ட எந்த விதமான தியரிகளையும் பின்பற்றாமல், இயல்பாக, வாய்மொழி இலக்கியமாக அவரது எழுத்து இருக்கின்றது. ஆனால் அவரது அண்ணன் (ராஜ் கௌதமன்) ஒரு தியரிட்டீசியன். ஒரு கொள்கையை உருவாக்கிச் சொல்லும் அவசியம் அவருக்கு. அது அரசியல் இலக்கியம். ஆனால் பாமாவுக்கு வாழ்க்கையை எழுதினால் போதும். அந்த வாழ்க்கையின் யதார்த்தம் எந்த அரசியலுக்கு இட்டுச் சென்றாலும் சரி. பரவாயில்லை. அதை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.

(இன்று வழங்கப்படும் விருதுகள், தன்னுடைய சமகாலத்திய எழுத்தாளர்களுடனான நட்பு, ஈழ இலக்கியம் குறித்த வெ.சா-வின் பார்வை – அடுத்த இதழில்)