பட்டம்

இன்றைய வாஷிங்டனில் இருக்கும் தேசிய விமான வான்வெளி அருங்காட்சியகத்தில் இருக்கும் ஒரு கேடயத்தில், ‘உலகின் ஆகப்பழமை வாய்ந்த வானூர்தி சீனத்தின் பட்டங்களும் எறிகணைகளுமாகும்’, என்று எழுதப் பட்டிருக்கிறது.

சீனாவின் கண்டுபிடிப்பான பட்டம் நவீன விமானங்களின் முன்னோடியாகக் கருதப்படுகிறது. காற்றை விட லேசான பலூன் முதன்முதலில் 1783-லும் விசை விமானம் 1903-லும் பறக்கவிடப் பட்டன என்பார்கள். இவை சீனப்பட்டத்தின் வரலாற்றை ஒப்பு நோக்கினால் மிகவும் சமீப காலங்களில் நடந்தவை என்றே சொல்ல வேண்டும்.

kitesதுல்லியமான ஆண்டு தெரிய வரவில்லை. எனினும், சீனாவில் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே பட்டம் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றது. சுமார் கி.மு 200ல், ஹ்ஹன் முடியாட்சியின் போது சீனத் தளபதி ஹன் ஹ்யூஸின் ஒரு நகரின் கோட்டைச் சுவரைத் தாண்டிப் பறந்த பட்டத்தை வைத்து, மாளிகையின் அரண்களின் தூரத்தையும் எண்ணிக்கையையும் அறிந்தார். அதன் பிறகு, நகருக்குள் புகுந்து ஆக்கிரமிக்கவும் வென்றிடவும் எளிதானது. முதன்முதலில் பட்டம் பறக்க விட்டதற்கான பதிவு இதுவே!

ஒரு சீன விவசாயி பறந்து விடாதிருக்க தன் தொப்பியில் ஒரு நூலைக்கட்டிக் கொண்டிருந்தான் என்றும் பலத்த காற்று அடித்ததில் முதல் பட்டம் பிறந்தது என்று சீனப்புராணக்கதை ஒன்றும் சொல்வதுண்டு.

ஓர் உயர் அதிகாரியின் பதாகை எல்லோர் கண்ணுக்கும் புலப்படட்டும் என்ற நோக்கத்துடன் மூங்கில் சட்டத்தைக் கொண்டு உயர தூக்கி மேலே பறக்கும்படி பிடித்திருக்கிறார்கள். இப்படியும் பட்டம் பிறந்ததற்கான சாத்தியம் உண்டு என்கிறார்கள். பழைய சீனப்பட்டங்கள் பிரமாண்ட இலைகளை நூலில் கட்டி உருவாக்கினர். இதற்கேற்ற ஒரு வகை இலை உண்டு. பட்டம் பழஞ்சீனத்தில் சமயத்துடன் கூடிய இறைத்தன்மையுடன் பார்க்கப் பட்டிருகின்றன. பிறகுதான் அவை விஞ்ஞானபூர்வமான பயன்பாடுகளையும் ஆய்வுகளையும் அடைந்தன.

பட்டம் ஆசியாவிற்குள் பரவி, பின்னர் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வேறு கண்டங்களுக்கும் பரவியிருக்கிறது. ஒவ்வொரு நாடும் தனக்கென ஒரு பாணியையும் பாரம்பரியத்தையும் ஏற்படுத்திக் கொண்டன. பட்டம் என்பது வெறும் விளையாட்டுப் பொருள் மட்டுமில்லை. அது விஞ்ஞானத்துறைக்கும் உற்பத்தித் துறைக்கும் பங்களித்திருக்கிறது. பட்டத்தைப் போன்ற வடிவில் தான் முதன்முதலில் விமானங்கள் தயாராகின.

மிகப்பழைய சீனப் பட்டம் மூயுவன் எனும் மரத்தால் செய்யப்பட்டது. இதன் காலத்தை வாரிங் (கி.மு 475-221) முடியாட்சியின் போது ஷான்தோங்கில் தான் முதன்முதலில் பட்டம் உருவாக்கப்பட்டு பறக்கவிடப் பட்டது என்று ஆய்ந்திருக்கிறார்கள். அதாவது, சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு. காகிதம் சீனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, பட்டங்களைக் காகிதத்தினால் உருவாக்கினார்கள். பட்டத்திற்கென்றே தயாரிக்கப்பட்ட ஜியுவன் என்ற காகிதத்தினால் பட்டங்கள் செய்யப்பட்டன. பெரும்பாலும் சீனப்பட்டங்கள் முப்பரிமாணமுடையவை. மூங்கில் சட்டத்துடன் பட்டோ காகிதமோ கொண்டு உருவாகும். மிகவும் அரிய வகைகளை மூங்கில்களை உருவத்திற்கேற்ப நெருப்பில் காட்டி வளைத்தும் நீரில் ஊறவைத்து வளைத்தும் செய்வார்கள். சில டிராகன் முகப் பட்டங்களுக்கு 100 துண்டு மூங்கில்கள் வரை கூடத் தேவைப்படும்.

நீண்ட சீன இலக்கியப் பாரம்பரியக் காலத்தைப் பற்றியும் பட்டம் கண்டுபிடிக்கப் பெற்றதையும் குறித்த சான்றுகள் உள்ளன. ஹன் ஃபேய் ஜியும் மூ ஜியும் சேர்ந்து எழுதிய நூலில் மனிதனைத் தூக்கிக் கொண்டு பறக்கும் ‘கருங்காதுடனான மரப்பட்டம்’ குறித்த பதிவுகள் இருக்கிறன. ஹோங் ஷுவின் நூலில் குறிப்பிடப்படுவதன் அடிப்படையில் லூ பன் தன் பங்கிற்கு வேறு ஒரு ‘கருங்காதுடனான மரப்பட்டம்’ ஒன்றைச் செய்திருக்கிறார். இது பழம் நகரமான ஸோங்ச்செங்கின் மீதான வானின் வானிலை நிலவரங்களை அறியப் பயன்பட்டிருக்கிறது.

இந்த இரண்டு தத்துவ அறிஞர்களும் சீனத்தின் பழமைமிகு மாநிலமான லூவிலிருந்து (இன்றைய ச்சூஃபூ) வந்தவர்கள். சீனத் தத்துவஞானி கன்ஃப்யூஷியஸ் (கி.மு 551-479) பிறந்த இடம் ச்சூஃபூ என்பதும் குறிப்பிடத்தக்கது. கன்ஃப்யூஷியஸ் வழித்தோன்றல்களான பல சீமான்களையும் அவரின் கல்லறையையும் கொண்ட இந்நகரம் மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ச்சிங் முடியாட்சியைச் சேர்ந்த குவோ லின் எழுதிய ‘வசந்தகாலக் கவிதை’யில் பட்டங்கள் குறித்த பதிவைக் காணலாம்.

மூன்றாம் மாதத்துப் பௌர்ணமியில்
காற்றின் குளுமைக் கொண்டாட்டம் துவங்கும் போது
உல்லாசிகள் பாய்லாங் ஆற்றங்கரைகளில் உலாத்துவர்
சிறுவர்கள் பட்டங்கள் பறக்கவிட்டபடியும்
சிறுமிகள் ஊஞ்சலாடியபடியுமிருக்க
வசந்தத்தில் புற்கள் நீண்டிருக்கும் போது
பல பறவைகள் திரும்பும்

கிழக்குச் சீனாவிலிருக்கும் ஷான்தோங் மாநிலத்தின் ‘வேய்ஃபங்’கில் 1984லிருந்து ஆண்டுதோறும் வேய்ஃபங் பட்டவிழா எனும் அனைத்துலக பட்டவிழா, இன்றைய காலகட்டத்திலும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறுகிறது. பல்வேறு நாடுகளிலிருந்து பார்வையாளர்கள் வருவார்கள். 1988ல் வேய்ஃபங் பட்டங்களின் உலகத் தலைநகரம் என்று அறிவிக்கப் பட்டது. அதற்கடுத்த ஆண்டே இந்நகரில் ‘ஐக்கிய உலகப் பட்ட கழகம்’ நிறுவப்பட்டது. இங்கு ஒரு பட்ட அருங்காட்சியகமும் இருக்கிறது. தூரத்திலிருந்து பார்த்தால் இந்த அருங்காட்சியகத்தின் கட்டடம் ஒரு ராட்சத பூரானைப் போலிருக்கும். இது தவிர பேய்ஜிங், தியன்ஜின், ஸிச்சுவன், குவோங்தோங் போன்ற வட்டாரப் பட்டங்கள் தனித் தனியான பாணியில் பிரபலமானவை.

வளமையான வரலாற்று முக்கியத்துவமும் கலாசாரமும் இயற்கை அழகும் கொண்ட வேய்ஃபங் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளைத் தன்னுள் கொண்டிருக்கும் ஒரு நவீன நகரம். இன்றைய அதன் மக்கள் தொகை 1 மில்லியன். இந்நகரத்தில் தயாராகும் பட்டங்கள் தான் உலகின் ஆகச் சிறந்தவையாகக் கருதப் படுகின்றன. ச்சிங் மற்றும் மிங் முடியாட்சி காலங்களிலிருந்து வேய்ஃபங் பட்டம் தயாரிப்பின் மைய நகரமாக விளங்குகிறது.

வேய்ஃபங் நகரில் உருவாகும் பட்டங்கள் கலைநயத்துடனும் கலை நுட்பத்துடனும் விளங்கும். வடிவங்களும் உருவங்களும் மிகவும் தனித்துவமானவை. பறவை, பூச்சி, வண்ணத்துப்பூச்சி, மின்மினிப்பூச்சி, ஆமை, தவளை என்று விலங்குகளும் புராண, சமய, நாட்டுப் புறக்கதைகளின் கதாப்பாத்திரங்களின் உருவங்களும் கொண்டு இவை உற்பத்தியாகின்றன. பூரான் பட்டங்கள் மற்றும் டிராகன் தலை பட்டங்களில் பல்வேறு வகைகளை இந்நகரில் உற்பத்தி செய்கிறார்கள். சீனப்பட்டம் பூரான் பட்டங்கள், உறுதிமிகு இறக்கைகள் கொண்ட பட்டங்கள், மென்மையான இறக்கைகள் கொண்ட பட்டங்கள் மற்றும் சாதாரண ஒற்றைப்பரிமாண தட்டையான பட்டங்கள் ஆகிய நான்கு முக்கிய வகைப்படும்.

792017183471வேய்ஃபங் நகருக்கு வெளியில் யாங்ஜியாபூ என்றொரு கிராமம் இருக்கிறது. இங்கு ஏராளமான கலைஞர்கள் வாழ்கிறார்கள். இவர்களின் ஓவியப்பாணி தனித்துவமானது. சீனாவில் வேறெங்கும் காணக் கூடியதல்ல. வேய்ஃபங் நகரின் பட்டங்களின் ஓவிய வகைகளும் வண்ண வகைகளும் யாங்ஜியாபூவின் ஓவிய வகையைச் சார்ந்தவை. இன்றும் சீன வீடுகளும் கதவுகளும் இவ்வகை ஓவியங்களைத் தாங்கியிருக்கின்றன. சின்னங்களும், அடையாளக் குறிகளும், சிறப்பு சித்திர எழுத்து வகைகளும் இவ்வகை ஓவியத்தில் தீட்டுகிறார்கள். முக்கியமாக, சந்திரப்புத்தாண்டின் போது தீயசக்திகளை விரட்டி அதிருஷ்டத்தைக் கொணரும் தூரிகையெழுத்தை இப்பாணியில் தீட்டுகிறார்கள். புத்தாண்டு ஓவியங்களைப் பாரம்பரியச் சீனப் பட்டத்தில் தீட்டும் பாணியை வேய்ஃபங் நகரில் தான் கண்டுபிடித்தார்கள். பளிச்சென்ற கண்ணைப் பறிக்கும் வண்ணமும் அழகும் கொண்ட பட்டங்கள் இங்கு இன்றும் உற்பத்தியாகின்றன. உயிருள்ள பறவைகளைப் போன்று பறக்கும் பறவை உருவ பட்டங்கள் தான் மிகவும் பிரபலமானவை. பல தலைமுறைகளாக இந்நகரின் பட்டங்கள் சீனத்தில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிரபலமாகியுள்ளன. எல்லா கண்டங்களிலிருக்கும் எல்லா வெளிநாடுகளுக்கும் இந்நகரின் வண்ணப்பட்டங்கள் ஏற்றுமதியாகின்றன.

ஆதிகாலத்து சீனத்தில் வெறும் விளையாட்டுப் பொருட்களாக இருந்த பட்டங்கள் முதன்முதலில் இராணுவப் பயன்பாடுகளுக்குள் வந்தன. சில பட்டங்கள் எதிரிகளின் நடவடிக்கைகளை நோட்டம் பார்க்கவென்று மனிதர்களை ஏற்றிச் செல்லக்கூடிய அளவில் பெரிதாக இருந்தன என்று வரலாறு சொல்கிறது. சில வேளைகளில் எதிரிகள் பகுதியில் துண்டுப் பிரசுரங்களை வீசியெறியவும் பட்டங்கள் பயன்பட்டிருக்கின்றன.

தூ யீ ஜி என்பவரின் மிகப் பழம் நூலான ‘விநோத நிகழ்வுகளின் பதிவுகள்’ளில் வரும் ஒரு குறிப்பு மிகவும் சுவாரஸ்யமானது. லியாங் முடியாட்சியில் வூதியின் பேரரசர் ஸியாவ் யான் (கி.பி 464-549) நான்ஜிங்கின் தாய்ச்செங்கில் ஹோவ் ஜிங்கின் கீழிருந்த கலகக்காரர்களால் சுற்றி வளைக்கப் பட்டார். அப்போது பேரரசர் ஒரு பட்டத்தில் தான் அவசர உதவி கேட்டு செய்தி அனுப்பியிருக்கிறார். உதவியும் வந்திருக்கிறது!

தூரத்தைக் கணக்கிடவும், காற்றின் வேகத்தைக் கண்டறியவும், மனிதனை உயரப் பறந்து கூட்டிப்போக, செய்திகள் அனுப்ப, தொலைத் தொடர்புக்கு, இராணுவப் பயன்பாடுகளுக்கு என்றும் பல்வேறு விஷயங்களுக்குப் பட்டங்கள் பயன்பட்டிருக்கின்றன. மிகப்பழைய சீனப்பட்டம் தட்டையாக இறக்கைகளில்லாமல் தான் இருந்தது. பிறகு, வாலில்லாமல் இறக்கைகளுடன் உருவாகின. அதன் பிறகு, ஊதல்கள் மற்றும் நூல்களை இணைத்துச் செய்தார்கள். இவ்வகைப் பட்டங்கள் பறக்கும் போது இனிய இசையை உருவாக்கின.

கி.பி 600ல் கொரியாவின் ஸில்லா முடியாட்சியின் போது ஒரு கலகத்தைக் கட்டுக்குள் கொண்டு வர தளபதி கிம் யுன்-ஸின்னுக்கு கட்டளையிடப்பட்டது. ஆனால், அவரது படைகள் சண்டையிட மறுத்தன. அப்போது வானில் ஒரு எரிநட்சத்திரம் விழுவதைக் கண்டனர். முதலில் அதை துர்சகுனம் என்று கருதினர். அவர்களை அவ்வாறு நம்ப வைக்க தளபதி தான் ஒரு பட்டத்தில் நெருப்புப் பந்தை இணைத்துப் பறக்கவிட்டார். படை வீரர்கள் விழுந்த நட்சத்திரம் மேலேறிச் சென்றதைக் கண்டது நல்ல சகுனமாகக் கருதி உற்சாகமாகப் போரிட்டு கலகக்காரர்களை வீழ்த்தினர்.

டாங் முடியாட்சியின் போது (கி.பி 618-907) மக்கள் பட்டங்களை மூங்கில் விளாறுகளை இணைத்துச் செய்தனர். மேலே காற்றில் பறக்கும் போது இவ்விளாறுகள் அசைந்து ஜெங் என்ற சீனத் தந்தி இசைவாத்தியத்தைப் போல ஒலித்தது. அப்போதிருந்து பட்டங்கள் ‘காற்று ஜெங்’ என்ற பொருளில் ‘ஃபெங் ஜெங்’ என்றறியப்பட்டன. இன்று சில வட்டாரங்களில் பட்டம் பட்டு நூலிலோ ‘ரப்பர் பாண்ட்’டிலோ இணைக்கப்படுகின்றன. இது இனிய ஓசையைக் கொடுக்கின்றது.

ச்சிங் முடியாட்சியின் போது (கி.பி 1644-1911) பட்டத்தைப் பறக்க விடுவதும், பிறகு அதை அப்படியே போகவிட்டு விடுவதும் வெறும் பொழுதுபோக்கிற்கும் மகிழ்ச்சிக்கும் மட்டுமன்று. அது ஒருவரின் துரதிருஷ்டத்தையும் நோயையும் விரட்டும் வழியென்றும் நம்பப்பட்டது. இதே போல யாரோ பறக்கவிட்ட பட்டத்தைக் கண்டெடுத்து வருவது, அவர் கழித்த துரதிருஷ்டத்தை இவர் தனக்கென்று கொண்டு வருவதாகவும் கருதப்பட்டது. இது மூட நம்பிக்கை என்று கருதப்படக் கூடும். எனினும், முழுக்கவும் காரணங்களில்லாமல் இவ்வாறு நம்பப்படவில்லை என்பதே சீனத்தில் பலரும் சொல்கிறார்கள். மைதானத்தில் இறங்கி நல்ல காற்றைச் சுவாசித்துக் கொண்டு பட்டம் விட்டால் உடல் நோயும் மனநோயும் விலகி உற்சாகம் பிறக்கத்தானே செய்தது…

303744892_257359899_7a28ad6f7d_o

சில ஆர்வலர்கள் பட்டத்தை இரவில் பறக்க விடுவர். கொளுத்தப் பட்டிருக்கும் சின்னச்சின்ன மெழுகுவத்திகள் கொண்ட வண்ண லாந்தர்களை இணைத்து பறக்கவிடும் பட்டங்கள் மேலே வானில் பறந்து இரவு வானை அலங்கரிக்கும். காணக் கண்கொள்ளாக் காட்சி!

சீனப் பட்டங்கள் இரண்டு முக்கிய வகைகளிலானவை. ஒன்று, தனியே கழட்டி எடுக்கக் கூடிய இறக்கைகளுடனானவை. மற்றொன்று, கழட்டியெடுக்க முடியாத நிரந்தரமாகப் பொருத்தப்பட்டிருக்கும் இறக்கைகளையுடையவை. முதல் வகையைப் பெட்டியில் வைத்துக் கட்டுவது எளிது. பரிசளிக்க ஏற்றது. ஆனால், இரண்டாவது வகை முதல் வகையைவிட மிக நன்றாக உயரப் பறக்கக் கூடியது. படிவங்கள் மற்றும் உருவங்களை வைத்துப் பார்த்தால் மனித உருவம், மீன், பூச்சி, பறவை, விலங்குகள், எழுதப்பட்டிருக்கும் சித்திர எழுத்து என்று 300 வகைக்கும் மேல் இருக்கின்றன. சுமார் 30 செண்டி மீட்டரிலிருந்து 304 மீட்டர் அளவு வரையிலும் பல்வேறு அளவுகளில் இவை கிடைக்கும்.

பட்டங்கள் வாலில்லாமல் பறக்கவிடப் பட்டால் வளையும் தன்மையற்றிருக்கும். பட்டம் உருவாக்க நாட்டுக்கு நாடு வேறுபட்ட விதிமுறைகள் நிலவினாலும் பறக்க விடும் போது எதிரிப் பட்டத்தின் நூலை அறுக்க வேண்டும் என்பதே விளையாட்டின் பொதுவிதியாக இருந்து வருகிறது.

xin_2220805241229828110236

மிகவும் பெருமைக்குரிய பெரிய ஒரு பட்டத்தைச் செய்வதொன்றும் எளிதல்ல. சட்டத்திற்கு உகந்த சரியான மூங்கில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தடிமனாகவும் உறுதியாகவும் இருத்தல் வேண்டும். அப்போது தான் வேகமான காற்றில் பெரிய பட்டத்தால் அழுத்தத்தை எதிர்கொள்ள முடியும். சின்னப்பட்டங்களுக்கு மெல்லிய மூங்கில் விளாறுகளே போதுமானது. காகிதம் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. என்றாலும், பட்டுத் துணியும் பட்டத்துக்கு மிகவும் ஏற்றது. பட்டு மிக நீண்ட காலத்துக்கு உழைக்கக்கூடிய உறுதியைப் பெற்றிருக்கும். தவிர, பட்டுத் துணியால் செய்யப்படும் பட்டம் பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். ஆகவே, இதன் மதிப்பும் கூடுதலாக இருக்கும்.

பட்டத்துக்கு வண்ணமிடுதல் தான் மூன்றாவது கட்டம். இதை இரண்டு முறைகளில் செய்யலாம். பெருமளவு உற்பத்தியில் ஏற்கனவே அச்சிடப்பட்ட காகிதத்தையே பயன்படுத்துவார்கள். சிறிய எண்ணிக்கையில் பயன்படுத்த ஏற்றாற்போல உருவாகும் பட்டங்கள் கையால் வண்ணம் தீட்டப்படுகின்றன. இவற்றில் ஒரு பைன் மரம், கொக்கு போன்ற அதிருஷ்டத்தையும் நீண்ட ஆயுளையும் பிரதிபலிக்கும் உருவங்களும் தூரிகையெழுத்துகளும் தீட்டப்படுவதுண்டு. வவ்வால்கள், பீச் பழங்கள் போன்ற செல்வத்தையும் நீண்ட ஆயுளையும் குறிக்கும் வடிவங்களையும் கூடத் தீட்டுவார்கள்.

டாங் முடியாட்சியில் (618-907) மத்தியில், சீனச்சமூகம் நிலைப்பையும் வளத்தையும் எட்டியிருந்தது. அப்போதுதான் பட்டத்தை இராணுவப் பயன்பாட்டுக்கு ஏற்றாற்போல மேம்படுத்தினர். பட்டுக்கு பதிலாகக் காகிதம் பயன்பட்டது. ஸோங் முடியாட்சியின் (960-1279) போது பட்டம் சார்ந்த ஆய்வுகளும் முன்னேற்றங்களும் பயன்பாடுகளும் உச்சத்தை எட்டின. பட்டங்களின் தேவை அதிகரித்தது. ஆகவே, அதைச் செய்வோரும் அதிகரித்தனர். மிங் முடியாட்சியும் (1368-1644) ச்சிங் முடியாட்சியும் பட்டத்தின் பொற்காலமாகக் கருதப்பட்டன. தாமே பட்டம் செய்து வண்ணம் தீட்டி பிரியமானவர்களுக்குப் பரிசளிக்கும் வழக்கங்கள் உயர்குடியினரிடையே பெருகியது. இந்த நடவடிக்கைகள் கலைக் கண்ணோட்டமும் பெற்றன.

ஏழாம் நூற்றாண்டில் ஒரு பௌத்த பிக்கு பட்டத்தை ஜப்பானுக்குக் கொண்டு போனார். அங்கு முதலில் பட்டங்கள் தீய சக்திகளை விரட்டி,  நல்ல அறுவடையைப் பெற உதவும் என்று  கருதிப் பயன்பட்டன. பிறகு, ஏடோ காலத்தில், பொதுமக்களுக்குப் பட்டம் விட அனுமதி கிடைத்தது. அன்றைய ஏடோ (இன்றைய தோக்கியோ) அரசாங்கம் இந்தப் பொழுதுபோக்கை ஊக்கவில்லை. மக்கள் வேலையைக் கருத்தில் கொள்ள மறந்ததால் அரசாங்கத்துக்கு பட்டம் விடுவது பிடிக்கவில்லை. ஜப்பானில் ஒரு கதை சொல்வார்கள். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திருடன் பெரிய பட்டத்தில் பறந்து நகோயா கோட்டைக்கு மேல் போனான். அங்கிருந்த தங்கச் சிலை ஒன்றைத் திருட நினைத்தான். ஆனால், சில துண்டுகளை மட்டுமே அவனால் எடுக்க முடிந்திருக்கிறது. அவன் பின்னர் பிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டிருக்கிறான்.  எடுத்த வேலையை முடிக்காமல் கவனம் திரும்பியது பட்டத்தால் என்பது உள்கருத்து போலும்.

16-17ஆம் நூற்றாண்டுகளில் ஜப்பானுக்கும் தென்கிழக்காசியாவுக்கும் இடையில் பட்டம் விற்கவும் வாங்கவும் பட்டிருக்கின்றன.

கி.பி 1232ல், மங்கோலிய எல்லையில் பட்டங்கள் அம்புகள் மற்றும் வில்களுடன் வீரர்களை உயரே பறக்க விடப் பயன்பட்டிருக்கின்றன. அங்கிருந்து எதிரிகளைத் தாக்கியிருக்கிறார்கள்.

13ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் பட்டத்தை மார்கோ போலோ இத்தாலிக்குக் கொண்டு போனார். பின்னர், 1500களில் ஐரோப்பாவிற்குப் பரவியது. அதன் பிறகு, ஐரோப்பியர்களின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கும் ஆய்வுகளுக்கும் பட்டம் பல்வேறு வழிகளில் உதவிற்று. கடல் வணிகத்தின் போது வேண்டாதவருக்குத் தண்டனையளிக்க, மீன்பிடித்துறையில் மீன்பிடிக்க, மதக் கொண்டாட்டங்களில் அலங்கரிக்க, வானிலையைக் கணிக்க, காற்றின் வேகத்தை அறிய என்று ஏராளமான பயன்பாடுகள் பட்டத்திற்கு இருந்திருக்கின்றன.

போக்குவரத்துறையில் பட்டம் உதவியிருக்கிறதென்றால் சிலரால் நம்ப முடியாமலிருக்கலாம். பட்டத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற சக்தியை ஆய்ந்தறிந்தவர் ஜியார்ஜ் பொக்கோக். 1822ல், இவர் ஒரு ஜோடி பட்டங்களைக் கொண்டு ஒரு வண்டியை ஒரு மணி நேரத்தில் 20 மைலுக்குச் செலுத்தியிருக்கிறார். அவரின் சில பயணங்கள் ஒருமணி நேரத்தில் 100 மைல் வரையிலும் கூட இருந்திருக்கிறது. அன்றைய காலகட்டத்தில் ஒரு வண்டியில் பூட்டியிருக்கும் குதிரைகளின் எண்ணிக்கையைப் பொருத்தே சாலைவரி விதிக்கப்பட்டது. ஆகவே, இவரின் இப்பயணங்களுக்கு வரி விதிக்கப்பட வில்லை!

1782ல், பென்ஜமின் ஃப்ராங்க்லின் எனும் அமெரிக்க விஞ்ஞானி மின்னலையும் இடியையும் ஆராய்ந்தறிய பட்டங்களைப் பயன்படுத்தியிருக்கிறார். இவர் பட்டங்களைக் கொண்டு செய்த ஆய்வுகளின் மூலம் காற்றுவெளியில் இருந்த மின்சாரத்தை ஆராய்ந்தார். அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் மற்றும் ரைட் சகோதரர்கள் ஆகியோரும் பட்டங்களைக் கொண்டு பல ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். பெட்டி வடிவிலான பட்டங்களைக் கொண்டு 1890களில் துவங்கி 40 ஆண்டுகளுக்கு காற்றின் வேகம், வெப்பம், அழுத்தம் மற்றும் ஈரப்பதத்தைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

இன்றும் மீனவர்கள் தூண்டிலைக் கடலுக்குள் விட பட்டத்தைப் பயன்படுத்துகிறார்கள். புகைப்படக்கலைஞர்கள் பட்டத்தின் உதவியுடன் மேலிருந்து பருந்துப் பார்வையில் புகைப்படங்களைச் சுட்டுத் தள்ளுகிறார்கள்.

1894 நவம்பர் 12ல், லாரென்ஸ் ஹார்கிரேவ் என்பவர் தனது பட்டத்திலேறி நிலத்திலிருந்து எம்பிச் சிறிது தூரம் பறந்தார். அன்றே அவர் விமானத்தைக் கிட்டத்தட்ட கண்டுபிடித்தார் என்று சொல்லலாம். மேலும் நுட்பமாக ஆராய்ந்து வளைந்த இறக்கைகள் கொண்டதும் விசையுடனானதும் என்று பல்வேறு வகைப் பட்டங்களை உருவாக்கினார். அத்துடன் வானிலைக் கருவிகளும் புகைப்படக் கருவிகளையும் பட்டங்களை வைத்து மேற்கொண்ட ஆய்வுகளில் கண்டுபிடித்தார். தன் கண்டுபிடிப்புகளுக்கு அவர் காப்புரிமை பெறத் தவறி விட்டார். மனிதகுல மேன்மைக்குப் பயன்படட்டும் என்று கருதிவிட்டார். ஆகவே, அவரது ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வில் இறங்கி இலாபம் ஈட்டியோரைத் தாக்கிப் பேசினார்.

19ஆம் நூற்றாண்டில் விஞ்ஞான ஆய்வுகளுக்கும் 20ஆம் நூற்றாண்டில் இராணுவப் பயன்பாடுகளுக்கும் பட்டம் உதவியிருக்கிறது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டிலும் பட்டங்கள் இராணுவ ஒற்றர்களை ஏற்றிக்கொண்டு உயரப் பறந்திருக்கின்றன. முதல் உலகப்போரின் போது பிரித்தானிய, பிரெஞ்சு, இத்தாலிய மற்றும் ரஷ்ய இராணுவங்கள் பட்டங்களைக் கொண்டு எதிரிகளைக் கண்காணிக்கவும் செய்திகள் பரிமாறிக் கொள்ளவும் செய்தன. ஜெர்மானிய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலில் இராணுவ வீரனைத் தூக்கிக் கொண்டு பறக்கும் பட்டங்களைத் தொடர்ந்தும் பயன்படுத்தி வந்தது.

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கக் கடற்படையில் பட்டங்களின் பல்வேறு பயன்கள் நடைமுறையில் இருந்தன. ஹாரி சாவ்ல்லின் பேரேஜ் பட்டம், இலக்கிற்கு மிக அருகில் விமானங்கள் பறக்காமல் முன்னெச்சரிக்கையாகத் தடுத்தன. விமானி கடலில் காணாமல் போனால் கிப்ஸன்-கேர்ள் எனும் பெட்டிப் பட்டத்தைப் பறக்க விட்டு உதவியை நாடினர். பால் கர்பர் பட்டத்தில் இயக்கும் தன்மையுடனான வைரம் இலக்காகப் பயன்படுத்தப்பட்டது. இதைக் கொண்டு இலக்கைக் குறிபார்த்துச் சுடும் பயிற்சியளிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போது (1939-1945) பட்டங்கள் துப்பாக்கி இலக்குகளாக இருந்து பயிற்சிக்கு உதவியிருக்கின்றன. பிரெஞ்சு இராணுவப்பட்டங்கள் பட்ட ஆர்வலர்களிடையே மிகவும் பிரபலம். அதன் தூக்குதிறன் மற்றும் நிலைத்தன்மை மிக உயரப் பறப்பதற்கு ஏற்றவை. 1903 நவம்பரில் சாமுவேல் ஃப்ராங்க்லின் கோடி என்பவர் பட்டங்களால் செலுத்தப்பட்ட கப்பலில் இங்க்லிஷ் கால்வாயைக் கடந்தார்.

விமானத்தின் அறிமுகம் இந்தப் பட்டங்களின் பயன்பாட்டைப் பழைமையாக்கி விட்டன. அதன் பிறகு தான், பட்டம் விடுதல் வெறும் பொழுதுபோக்காயிற்று. கடந்த 50 ஆண்டுகளில் இந்தப் பொழுதுபோக்கு மிகவும் தீவிரமடைந்துள்ளது. நைலான், ஃபைபர் கிளாஸ், கார்பன் கிராஃபைட் போன்றவற்றைக் கொண்டு மிக உறுதியான பட்டங்களைச் செய்தனர். இவை குறைந்த எடையுடன் நீண்ட நாள் உழைக்கும் தன்மை கொண்டவை. நவீன பட்டங்களும் கண்டுபிடிக்கப் பட்டன. பீட்டர் லின் என்பவர் 1980களில், ந்யூஸிலந்தில் ஒரு ‘ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்’ பட்டத்தை உருவாக்கினார். இது இயந்திரத்துடன் கூடியது. 1999ல், ஒரு குழுவினர் பட்டத்தைக் கொண்டு வடதுருவத்தில் ‘ஸ்லெட்ஜு’களை இழுத்திருக்கிறார்கள்.

1972ல், பீட்டர் பவெல் என்பவர் பொழுதுபோக்குக்கு மட்டுமில்லாமல் தீவிர விளையாட்டாகவும் பட்டத்தை விடலாம் என்று கருதினார். அப்போதிலிருந்து பட்டங்களில் மாற்றங்களும் மேம்பாடுகளும் செய்யப்பட்டன. நுட்பமான வித்தைகள் செய்து காட்டினர். வேகமாகப் பறக்க விட்டனர். பல போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. இசைக்கு ஏற்ப ஆடிப் பறக்கும் பட்டங்களும் எல்லோரது கருத்தையும் கவர்ந்தன.

சீனாவின் கலாசாரப்புரட்சியின் போது பட்டம் விடுதல் தடைசெய்யப் பட்டது. பட்டம் செய்யும் தொழிலாளிகளில் சிலர் இதைப் பொருட்படுத்தாமல் தொழிலில் ஈடுபட்டனர். இவர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை கொடுக்கப் பட்டது. அத்துடன் செம்படையினர் அவர்கள் உருவாக்கிய பட்டங்களையெல்லாம் அழித்தனர். சில கலைஞர்கள் தொழில் மறந்து விடாதிருக்கவென்று சின்னச்சின்ன பட்டங்களை ரகசியமாகச் செய்து வைத்துக் கொண்டனர். இவை பிறகாலத்தில் மிகவும் அரும்பொருட்களாகின. பட்டம் தயாரித்து ஏற்றுமதி செய்வது நாட்டின் பொருளாதர மேன்மைக்கும், பட்டம் பறக்க விடுதல் தனிமனித ஆரோக்கியத்துக்கும் உகந்தது என்று நினைத்து இன்றைய சீன அரசாங்கம் பட்டங்கள் தயாரிப்பதையும் பறக்க விடுவதையும் மிகவும் ஊக்கப் படுத்துகிறது.

1983ல் பட்டம் விடும் போட்டி ஒன்று தியான்ஜின்னில் பெரியளவில் நடைபெற்றது. நூறு மீட்டர் நீளமும் நூறு பாகங்களும் கொண்ட ‘டிராகன்முகப் பூரான்’ பட்டம் தியான்ஜின் நுண்கலைகள் தொழிற்சாலையிலிருந்து வந்த ஐந்தாறு ஆட்கள் கொண்ட குழுவால் பறக்கவிடப் பட்டது. பட்டம் சீறிப் பறந்தது வானத்தில். ஜாப்பானிலிருந்து ஓர் ஆர்வலர் 270 பாகங்களுடன் 300 மீட்டர் நீள பட்டத்தைப் பறக்கவிட்டார். இவையும் மேலும் சில பட்டங்களும் கூட்டத்தினர் தன்னிலை மறந்து கரகோஷத்தை எழுப்பினர்!

(எழுதிக் கொண்டிருக்கும் ச்ங் மிங் நூலில் இருந்து)