111

பெரும்பாலான இந்தியக் குழந்தைகள் போலவே, என் வாழ்க்கையிலும் முதலில் நுழைந்த சர்வதேச விளையாட்டு கிரிக்கெட். பள்ளிச் சிறுவனைப் போல் இருந்து கொண்டு கோர்ட்னி வால்ஷையே கலங்கடித்த சச்சின், மூக்குறிஞ்சிக் கொண்டே அவுட்டாகிச் செல்லும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், எப்போதும் தவறான முடிவுகளையே எடுத்த கேப்டன் அசாருதீன் இவர்களையெல்லாம் 1992-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய உலகக்கோப்பையில் அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து போர்வையைச் சுற்றிக்கொண்டு பார்த்தது என் ‘கிரிக்கெட் வாழ்வின்’ ஆரம்பம். இந்த விளையாடும் பிரபலங்களெல்லாம் போக விளம்பர இடைவேளைகளில் தினேஷ் சூட்டிங் விளம்பரத்தில் வந்துபோகும் கவாஸ்கர் பெரிதாக சிலாகிக்கப்படுவார். “இவருதான் கவாஸ்கர் தெரியுமுல்ல? ஒரே ஒருக்கா டக் அவுட் ஆனாக்கூட கிரிக்கெட் வெளையாடறதையே உட்றுவேன்னு சொன்னவரு.. அதே மாரி ஒருக்கா அவுட்டானப்போ ரிடயர் ஆகிட்டாரு” என்று சண்முகம் ‘அடித்து விட்டதையெல்லாம்’ வெள்ளந்தியாக நம்பியிருக்கிறேன். கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில்தான் எனக்குக் கிரிக்கெட்டில் அறிமுகமான இன்னொரு பிரபலம் நடுவர் டேவிட் ஷெபர்ட்.

28david-shepherdஉருண்டையான மொழுக், மொழுக்கென்ற உருவம். வெள்ளை கோட். பரங்கிப்பழம் போன்ற வட்டமுகம். எப்போதும் முகத்திலிருக்கும் புன்சிரிப்பு எனப் பார்த்தவுடன் மனதில் ஒட்டிக் கொண்டவர் டேவிட் ஷெபர்ட். வழக்கமாக ஆட்ட மும்முரத்தில் வீரர்களல்லாத மற்றவர்களைக் கவனிக்க முடியாதென்றாலும், தவறவிடவே முடியாதவர் ஷெபர்ட். அத்தனை பெரிய ஆகிருதி. ஒல்லியான, குள்ளமான வெங்கடபதி ராஜு என்ற ஆந்திர சுழற்பந்து வீச்சாளர் டேவிட் ஷெபர்டுக்குப் பின்னாலிருந்து வந்து பந்து போடும்போது ஏதோ ஒரு பெரிய பாறைக்குப் பின்னால் ஒளிந்திருந்து திடீரென்று வெளிவந்து கல்லெறிவது போலிருக்கும்.

கிரிக்கெட் போட்டியை சுவாரசியமாக்குவதில் பெரும்பங்கு நடுவரின் முடிவுகளைப் பற்றி விவாதிப்பதிலும் செலவழியும். கெட்ட கெட்ட வார்த்தைகளில் கடுமையான வசவுகளை நடுவர்கள் எங்களைப் போன்ற ஐந்தாம் வகுப்பு, ஆறாம் வகுப்புப் பொடியன்களிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள். அப்படியும் கொஞ்சம் அன்பு கலந்து திட்டு வாங்குவது ஷெபர்ட் மட்டுமே! ‘மாமா கவுத்திட்டாரே!’ என்பதுதான் எனக்கு நினைவு தெரிய இவர் வாங்கிய அதிகபட்சத் திட்டு.

சர்வதேச நடுவர்கள் ஒவ்வொருவருமே ஏதாவது ஒரு காரணத்துக்காக அறியப்படுவார்கள். வெங்கட்ராகவன், இந்தியர் என்ற காரணத்தால் பாசத்தோடு பார்க்கப்பட்டவர். ஹரிஹரன் என்ற இன்னொரு இந்தியர் நடுவராகப் பணியாற்றிய தன்னுடைய முதல் போட்டியிலேயே பிரபலமானார். அது இந்தியா – இலங்கை மோதிய கொச்சினில் நடந்த போட்டி. இந்தியா பேட்டிங் செய்து கொண்டிருக்கிறது. ஆட்டத்தின் வெகு தீவிரமான கட்டத்தில் பந்துவீச்சாளர் கொலைவெறியோடு அம்பயரிடம் ‘அவுட் சார்’ என்று கத்த, ஹரிஹரன் ஒரு ஃப்ளோவில் விரலை உயர்த்திவிட்டார். ஆனால் கையை உயர்த்திய பின்பு மனதை மாற்றித் தன் தொப்பியை சரி செய்வதைப் போல் மாற்றிவிட்டார். முகத்தில் ஒரு அசட்டுச் சிரிப்பு வேறு! நண்பர்கள் வட்டத்தில் எழுந்த சிரிப்பலை அடங்க வெகு நேரமானது. இலங்கை வீரர்கள் கூட விக்கெட் கிடைக்காத வருத்தத்தை மறந்து சிரித்தார்கள். ஸ்டீவ் பக்னர் அவுட் என்று அவ்வளவு சீக்கிரம் சொல்லிவிடமாட்டார். தலையை ஆட்டி, ஒரு சிரிப்பு சிரித்து, மெது….வாக விரலை உயர்த்துவார். அதனால் அவர் ‘ஸ்லோ டெத்’ என்று பிரபலமானார். தன்னுடைய பெயருக்காகவே பிரபலமானவர் ‘டிக்கி பேர்ட்’. இப்போதும் பருத்த பின்புறம் உள்ள ஒரு நண்பன் ‘அம்பயர்’ என்றே அழைக்கப்படுகிறான்.

david-shepherd-in-his-mem-001டேவிட் ஷெபர்ட் ‘நெல்சன் நம்பர்’ சந்தர்ப்பங்களில் ஒற்றைக் காலில் நிற்பதற்காகப் புகழ்பெற்றவர். பத்தை நூறாக்கும் பாச்சா வயிற்றைப் பிடித்துக் கொண்டு கத்துவான்: “ஐயையோ, டேவிட் ஷெபர்ட் காலைத் தூக்கி நிக்கறார்டா.. Nelson Eye! ஆண்டவனே.. நல்லா ஆடிக்கிட்டு இருக்கறது இவன் மட்டும்தான், இவனும் அவுட்டானான்னா அழிஞ்சோம் நாம!”

‘நெல்சன் ஐ’ என்றால் என்னவென்று கேட்டு, பாச்சாவால் அற்பப்புழுவைப் போல் பார்க்கப்பட்டு, பின்னால் உபதேசம் பெற்றேன். கிரிக்கெட்டில் 111, 222, 333 இந்த நம்பர்களுக்கெல்லாம் ‘நெல்சன் நம்பர்’ அல்லது ’நெல்சன் ஐ’ என்று பெயர். ஒரு அணியோ, வீரரோ இந்த ரன்களை எடுத்திருக்கும்போது விக்கெட் விழும் என்பது கிரிக்கெட்டில் இருக்கும் ஒரு (மூட) நம்பிக்கை. டேவிட் ஷெபர்ட் தன் சிறுவயதில் கிராமத்தில் நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த காலத்திலிருந்தே அவருக்கும் இந்த ‘நம்பிக்கை’ ஏற்பட்டிருக்கிறது. நெல்சன் நம்பரால் ஏற்பட்ட துரதிர்ஷ்டம் நீங்க வேண்டுமென்றால் செய்ய வேண்டிய பரிகாரம், பேட்டிங் அணியின் வீரர்கள் அனைவரும் ஒற்றைக் காலைத் தூக்கிக் கொண்டு நிற்பது. நடுவரான பின்பும் இந்த நம்பிக்கை டேவிட் ஷெபர்டைத் துரத்தியிருக்கிறது. கூடவே பரிகாரமும். அதனால் இவர் நடுவராக இருக்கும் போட்டிகளில் அணியின் ரன்கள் 111 ஆக இருக்கும்போது காலைத் தூக்கிக் கொண்டு நிற்க ஆரம்பித்து விடுவார். மொத்த கூட்டமும் கத்தி ஆர்ப்பரிக்கும்.

பெரும்பாலும் டேவிட் ஷெபர்டின் தீர்ப்புகள் சரியாகவே இருந்தாலும் 2001-ஆம் ஆண்டு இங்கிலாந்து – பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியில் அவர் அளித்த மூன்று தவறான முடிவுகளுக்காகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். மிகவும் வருத்தமடைந்து கிட்டத்தட்ட நடுவர் பணியிலிருந்து ஓய்வு பெருமளவுக்குப் போய்விட்ட அவரை, அவர் நண்பர்கள் சமாதானப்படுத்தித் தொடர வைத்தார்கள். அப்போட்டிக்கு முன் அவருடைய சக நடுவருக்கு அறை எண் 111 ஒதுக்கப்பட்டதிலிருந்தே, தான் வெகுவாகப் பதற்றமடைந்திருந்ததாக பின்னாளில் ஒத்துக் கொண்டார் ஷெபர்ட்.

ஷெபர்ட் நடுவராவதற்கு முன் பதிமூன்று வருடங்கள் முதல்தர கெளண்டி கிரிக்கெட் விளையாடியிருக்கிறார். ஆனால் ஒருபோதும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. விளையாண்ட நாட்களிலேயே அவர் அர்ஜுன ரணதுங்கா, இன்சமாம் உல்-ஹக் போல குண்டு வீரர்தான். அதனால் ஓடி, ஓடி ரன் எடுப்பதற்கு பதிலாக எப்போதும் சிக்ஸர் அடிப்பதிலேயே குறியாக இருப்பார் என்று நண்பர்கள் சொல்கிறார்கள். அதுவும் வலுவான அடி! எந்த அளவுக்கு வலுவான அடியென்றால், ஒருமுறை இவரடித்த சிக்ஸரில் ஒரு பார்வையாளர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், கிரிக்கெட்டை விட மனம் வராததால், போட்டியின் ‘சிறந்த இருக்கை’ என நண்பர்களால் பரிந்துரைக்கப்பட்டு நடுவர் தொழிலுக்கு வந்தார் டேவிட் ஷெபர்ட்.

svshepherd_article_wideweb__470x3470

நடுவர் பணியிலிருந்து 2005 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே ஜமைக்காவில் நடந்த டெஸ்ட் போட்டிதான் அவர் கடைசியாகப் பணியாற்றிய போட்டி. போட்டிக்குப்பின் ப்ரையன் லாரா, “உங்கள் சேவைக்கும், நினைவுகளுக்கும், தொழில்நேர்த்திக்கும் நன்றி” என்ற வாசகங்களோடு கூடிய கிரிக்கெட் மட்டையைப் பரிசளித்தார். ஓய்வுக்குப் பின் இங்கிலாந்தில் தன் சொந்த கிராமப்பகுதிலேயே நாட்களைக் கழித்தார் டேவிட் ஷெபர்ட். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் தன்னுடைய 68-ஆம் வயதில் நேற்று (அக்டோபர் 27) காலமானார்.

நெல்சன் நம்பர் சார்ந்த நம்பிக்கைக்கு மட்டுமல்லாது, ஒவ்வொரு முறை பந்து எல்லைக் கோட்டைத் தொடும்போதும், தலையை ஆட்டிக் கொண்டே அவர் நான்கு ரன்களுக்கான சிக்னலைக் கொடுப்பதற்கும் அறியப்படுபவர். இப்போதும் பல ரசிகர்கள் பவுண்டரி சமயங்களில் டேவிட் ஷெபர்ட் பாணியில் தலையை ஆட்டிக் குதூகலிப்பதைக் காணலாம். உலகின் நம்பர் 1 நடுவர் என்று கருதப்படும் சைமன் டஃபல், “ஒரு நல்ல நடுவராக இருப்பதற்கு முதலில் ஒரு நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்பதை டேவிட் ஷெபர்ட் எனக்கு உணர்த்தினார்” என்கிறார்.

கிரிக்கெட் போன்ற பெரும்பணம் விளையாடும், பல வெறித்தனமான ரசிகர்களைக் கொண்ட விளையாட்டுகளில் நடுவராக இருப்பது வெகு கடினம். நவீன கேமராக்களும், கணினிகளும் வெகு துல்லியமான முடிவுகளைத் தருகின்றன. நடுவர்கள் செய்யும் சிறு சிறு பிழைகள் கூட உடனுக்குடன் அறியப்பட்டு விடுகின்றன. இந்த அதீத மன அழுத்தம் தரக்கூடிய பணியைத் திறமையாகச் செய்வது கஷ்டமான வேலை. டேவிட் ஷெபர்ட் இந்தத் தொழில்நுட்பம் சீராக மேல்நோக்கிச் சென்ற காலகட்டத்தில்தான் (1983 – 2005) நடுவராகப் பணிபுரிந்தார். அவர் இந்த வளர்ச்சியையும், அழுத்தத்தையும் வெகு திறமையாகக் கையாண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

தன்னுடைய நேர்மைக்காகவும், நட்புணர்வுக்காகவும், நகைச்சுவை உணர்வுக்காகவும் வீரர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷெப்பர்ட். “கிரிக்கெட் வெகு வேகமாகத் தன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது வெறும் பணம் கொழிக்கும் ஒரு சூதாட்டமாகிவிட்டது. நாமறிந்த ஹன்ஸி க்ரோனியே, சலீம் மாலிக், மொஹமத் அசருதீன் இவர்களையெல்லாம் தாண்டி வெகு மோசமாகச் சூதாடிய வீரர்கள் இருக்கிறார்கள். இந்த விளையாட்டு தன் மதிப்பை மீட்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அவ்வளவு நம்பிக்கைத் துரோகம் அதில் நடந்திருக்கிறது” என்று தன் சுயசரிதையில் எழுதுகிறார் டேவிட் ஷெபர்ட். நிச்சயம் தன் ஒற்றைக்காலைத் தூக்கி முன்னகர்ந்து கிரிக்கெட்டின் போக்கைப் பதற்றத்தோடு கல்லறையிலிருந்து கவனித்து வருவார் ஷெபர்ட்.