அறிவியல் கல்விக்கான சமுதாயத்தேவை

தனது ஆசிரியருக்கே வகுப்பு எடுக்கும் வாய்ப்பு யாருக்கும் அத்தனை எளிதாகக் கிடைத்துடுவதில்லை. எனவே என் உயர்நிலை பள்ளி உயிரியல் ஆசிரியர், என்னுடைய வார இறுதி உளவியல் வகுப்புகளில் சேர்வதாகக் கூறிய போது சந்தோஷமாகத்தான் இருந்தது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் பணி ஓய்வு பெறப்போகும் அவர் எப்படி உளவியல் படிக்க ஆர்வம் கொண்டார் என கேட்டபோது அவர் கூறிய பதில் ஆச்சரியமளித்தது. உயிரியல் பெரும்பாலான உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு ஒரு சுமையாக ஆகிவிட்டிருக்கிறது. அவர்களுக்கு எப்படியும் ஏதாவது ஒரு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்பதால் உயிரியலில் அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இது எனது ஆசிரியருக்கு பெருத்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே உயிரியல் பாடத்தைக் குறித்த மாணவர்களின் மனநிலையை ஆராய்வதற்காக ஒரு  கொஸ்டினயர் உருவாக்க நினைத்திருக்கிறார். அதற்காக திருவனந்தபுரம் பல்கலைக்கழக நூல்நிலையத்துக்கு சென்று உளவியல் நூல்களை படித்திருக்கிறார்.

அங்குள்ள உளவியல் நூல்களை பார்த்த போது இந்த துறையின் மீது சுவாரசியம் தட்டியிருக்கிறது. இந்த காலத்தில் இப்படியும் ஆசிரியர்கள் இருப்பதால்தான் பூமி இன்னும் தன் அச்சில் சுழல்கிறது போலும். ஆனால் அவர் கூறிய விஷயம் என்னை சிந்திக்க வைத்தது. படிப்பு என்பது வயிற்றுக்கு சாப்பாடும், வாழ வசதியும் பெற்றுத்தரும் ஒரு தொழிலுக்கான கடவுச்சீட்டு என்கிற முறையில் நம் கல்வி முறை உருவானதால் ஏற்பட்டுள்ள சீர்கேடு இது என்பது புரிந்தது.   பொதுவாகவே அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு மொழி குறித்த பாடங்கள் ஒரு பெருஞ்சுமையாக கனப்பவை.  ‘ஏதோ  வேறு வழியில்லாமல் படித்து தொலைக்க வேண்டியது’ என்கிற எண்ணத்துடன்தான் தமிழையும் ஆங்கிலத்தையும் (அல்லது பிரெஞ்ச்) கற்பார்கள். மொழி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களும் மாணவர்களின் மனநிலையையும் தங்கள் கற்பிக்கும் பாடங்களுக்கு மாணவர்கள் தரும் மரியாதையின் எல்லைகளையும் உணர்ந்து அவற்றை மீறமாட்டார்கள்.

இன்றைக்கு உயிரியலுக்கும் அதே நிலை வந்துள்ளது. இது உயிரியலுக்கு மட்டுமான பிரச்சனை அல்ல. வேலை கிடைப்பதற்கான ஒரு சடங்காக இருக்கும்வரை ஒவ்வொரு அறிவியல் துறை மீதான ஆர்வத்துக்கும் இந்த பிரச்சனை ஏற்படத்தான் செய்யும்.

மாறாக, கல்வி வெறும் வாழ்க்கையின் வசதி என்பதற்கான கடவுச்சீட்டல்ல, பிரபஞ்ச அதிசயங்களை உணர்ந்து கொள்ள அதன் மர்மங்களில் பிரயாணிக்க ஒரு துடுப்பு என்பதனை மாணவர்களை உணரச் செய்யவேண்டும். அதற்கு அறிவியல் கல்வி இன்று கொண்டுள்ள நிலைப்பாட்டினையே மாற்றியமைக்க வேண்டும். சி.பி.ஸ்னோ என்கிற அறிவியல் வரலாற்றறிஞர் அறிவியலுக்கும் சமுதாய அறிவுப்புலங்களுக்கும் இடையில் விரிந்து கொண்டு போகும் அபாயகரமான பிளவினைக் குறித்துக் கூறியுள்ளார். அந்த அபாயகரமான பிளவு நம் சமுதாயத்தில் வெறும் அபாயகரமாக மட்டுமல்லாமல் கீழ்த்தரமாகவும் விரிந்து வருகிறது. இதன் விளைவுதான் போலித்தனமான பகுத்தறிவு ஒருபுறமும், மூடத்தனமான ஆன்மிகம் மறுபுறமும்.

பிராந்திய இயற்கை வளங்களையும் அதனுடன் தன் வாழ்வு பின்னிப்பிணைந்து கிடப்பதையும் சிறிதும் உணராமல் நம் மாணவர்கள் பள்ளிகளிலிருந்து வெளிவந்து பட்டமும் பெற்றுவிடுகிறார்கள். அவர்களுக்கு அறிவியல் என்பது முற்றிலும் மேற்கத்திய விஷயம்; வெள்ளைக் கோட்டுடன் வெள்ளைத்தோலுடன் இணைந்த ஒரு பண்பாட்டு அன்னியம். எனவே அறிவியல் மனப்பான்மை என்றாலே அது தன் பண்பாட்டு விலகலுடன்தான் ஆரம்பிக்கிறது. அதன் இன்னொரு பரிமாணம் தன் பண்பாட்டுக்கூறுகளையே ஏளனம் செய்வது. மாரியம்மனுக்குக் கூழ் ஊற்றுவதை ஏளனம் செய்துவிட்டு ஆபாசமாக பெண்களை ஏளனம் செய்து ஆட்டம் போடும் விவேக் போன்ற மூன்றாந்தர நடிகர்களுக்கு ‘அறிவுஜீவி’ நகைச்சுவையாளர் என பெயர் கிடைப்பது இந்த மனநிலையால்தான். பல அறிவுஜீவிகளின் சுயபண்பாட்டு வெறுப்பும் கூட இந்த மட்டரக நகைச்சுவையின் டீலக்ஸ் பிரதிதான்.

ஆனால் நம் கல்வியாளர்கள் சிறிது முயன்றாலும் கூட நம் மாணவர்களுக்கு நம் பண்பாட்டின் மீது இருக்கும் இயல்பான ஈடுபாட்டினை நல்ல அறிவியல் கல்விக்கான அடித்தளமாக பயன்படுத்த முடியும். ஏனெனில் நம் பண்பாட்டில் இயற்கை குறித்த வியப்புணர்ச்சியே ஆன்மிகத்தின் அடித்தளமாகவும் அமைகிறது. இயற்கைக்கு அப்பாலாக வேறுபட்டு நிற்பதல்ல இறை. இயற்கையோடு ஊடோடி நிற்பதே இறை.  ‘ஈஸாவாஸ்யம் இதம் சர்வம்’ என்பதே நம் பண்பாட்டின் வேர் என்றார் மகாத்மா காந்தி. பரிபாடல் இந்தப் புரிதலை வடித்துத் தருகிறது.

தீயினுள் தென்றல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;
..
நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள;
நின் தண்மையும் சாயலும் திங்கள் உள;
நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள;
நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள;
நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள;
நின் தோற்றமும் அகலமும் நீரின் உள;
நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள;
நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள;
அதனால், இவ்வும், உவ்வும், அவ்வும், பிறவும்,
ஏமம் ஆர்த்த நிற் பிரிந்து,
மேவல் சான்றன, எல்லாம்…

இந்த வரிகளை ஆழ உணரும் மாணவனுக்கு அறிவியல் காட்டும் மகோன்னதத்தைப் புரிந்து கொள்வது எத்தனை எளிது! அல்லது பிரபஞ்ச தோற்றம் குறித்த க்வாண்டம் இயற்பியலின் அதிசய தேற்றங்களை அறிந்து கொண்ட ஒருவனுக்கு இந்த வரிகள் எத்தகைய எழுச்சியை தரும்? நிலவில் மனிதன் கால் வைத்தவுடன், நடராஜர் மீதிருக்கும் நிலவில் அமெரிக்க விண்வெளி வீரன் கால்பதிப்பதாக உருவகப்படுத்தி போஸ்டர் ஒட்டிய திராவிட “பகுத்தறிவு” நம்மை அறிவியலின் அழகியலிலிருந்து அன்னியப்படுத்தியது.  அதே சமயம் ஆனந்த குமாரசாமியின் அழகியலும், ஜியார்க் சுதர்ஷனின் இயற்பியலும் , ப்ரிட்ஜஃப் காப்ராவின் இணைக்கும்  பார்வையும்,  கார்ல்சாகனின் பிரபஞ்சவியலும் உரையாடிய போது நம் வெகுஜனப் பண்பாடு அந்த உரையாடலை அன்னியப்பட்ட நிலையில் அண்ணாந்து பார்க்க மட்டுமே முடிந்தது. அல்லது இன்னும் மோசமாக “நம்முடைய முன்னோர்களுக்கு அணுத்துகள்கள் குறித்த அறிவு இருந்தது” என்பது போல ஒரு போலியான கர்வ உணர்வை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

நாம் சிவதாண்டவத்தை ஒரு நம்பிக்கை வட்டத்துக்குள் சிறைபடுத்திப் பார்த்துக்கொண்டிருந்த போது, ஆனந்த குமாரசாமியின் புத்தகம் சர்வதேச அளவில் சிவ தாண்டவத்தை ஒரு பிரபஞ்சக் குறியீடாக வெளிக்கொணர்ந்தது. அதை மேலெடுத்துச் சென்று, நம்பிக்கை வட்டங்களுக்கு வெளியே நடராஜரை அறிவியல் குறியீடாக வடிவமைத்து நம் மாணவர்களுக்கு இயற்பியல் குறித்த அடிப்படைத் தாகத்தை ஏற்படுத்த  நாம் ஏன் தவறினோம்?

siva
1. ஆனந்த-குமாரசாமியின் “சிவனின் நடனம்” எனும் இந்திய கலை, சமூக பாரம்பரியம் குறித்த கட்டுரைகள் தொகுப்பு. இந்நூலே சர்வதேச அளவில் சிவ தாண்டவத்தை ஒரு பிரபஞ்சக் குறியீடாக வெளிக்கொணர்ந்தது.
2. நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர் இலையா ப்ரிகோகைன் தமது வெப்ப இயங்கியல் குறித்த நூல் அட்டையில் சிவதாண்டவத்தை குறியீடாகக் காட்டுகிறார்.
3. திராவிட கழக சுவரொட்டிகளில் சிவ தாண்டவத்தில் அவர் சூடிய பிறையில் அமெரிக்க விண்வெளி வீரன் இறங்குகிறான்.
4. ஆனந்த குமாரசாமியின் நடராஜ தாண்டவ விவரணத்தால் ஈர்க்கப்பட்ட அணுத்துகள் இயற்பியலாளர் ப்ரிட்ஜாஃப் காப்ரா பபிள் சாம்பர்களில் கிடைக்கும் அணுத்துகள் இயக்கத்தைக் காட்டும் புகைப்படத்துடன் நடராஜ தாண்டவத்தை இணைத்துக் காட்டும் இப்படம் உலகப்புகழ் பெற்றுவிட்டது.
5. கார்ல்சாகன் தமது புகழ்பெற்ற “காஸ்மாஸ்” எனும் பொதுஜன அறிவியல் தொடரில் நடராஜ தாண்டவத்தை பெரும் பிரபஞ்சவியல் குறியீடாகக் கூறுகிறார்.

உண்மையைத் தேடுவதும், அதனை ஒவ்வொருவரும் அனுபவபூர்வமாக அறிவதும் நம் பண்பாட்டின் அடிப்படைகள் ஆகும். இந்தியாவைப் போன்ற காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு வளரும் சமுதாயத்தில் அறிவியல் கல்வி மற்றும் பொது அறிவியல் பிரக்ஞை என்பது அந்த சமுதாயத்தின் பண்பாட்டுக் குறியீடுகளைப் பயன்படுத்துதல் மற்றும் பாரம்பரிய அறிவுக் களஞ்சியத்தை முறைப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் நிகழவேண்டும். ஆனால் இங்கோ அதற்கு எதிர்மறையான ஒரு நீரோட்டம் காணப்படுகிறது. இத்தனைக்கும் நம் பண்பாட்டு அறிவுப்புலமானது அறிவியலுக்கு உகந்த ஒன்றாகவே இருந்து வருகிறது.

ஏனெனில் அறிவியலின் அடிப்படையாக இருப்பது தேடல். தேடல் மானுடத்தின் முக்கிய வேட்கைகளில் ஒன்று. உணவை, பொன்னை, பொருளை, இணையைத் தேடி ஓடும் மானுடம் தன்னையும் தேடுகிறது. தன் தோற்றத்தை, தன்னைக் கொண்டிருக்கும் பூமியின் தோற்றத்தை, பூமியின் மேல் கவியும் ஆகாயத்தின் தன்மையை அது தேடுகிறது. அத்தேடல் புறத்தும் அகத்தும் நடக்கிறது. அகக்கருவிகளால் புற உலகினை புரிந்து கொள்ள முயல்கிறது மானுடம். பின் தன் அகத்துள்ளும் தேடுகிறது. அற்புத உணர்ச்சியையும் இயலாமையையும் கலவையாய்க் கொண்ட  ஓர் உணர்வினால் உந்தப்பட்டு அதன் அகம் விம்முகிறது. அந்த அகப்புலத்திலிருந்து  பீறிட்டெழும் ஆவேசக் கவிதைகளில் இறைவர்களும், இறைவிகளும் பிரபஞ்சத்தின் ஆழ்ந்த இரகசியங்களுக்குள் சஞ்சரிக்கின்றனர். அவர்களின் போரும், புணர்ச்சியும், ஆனந்தமும், ஆத்திரங்களும் இயற்கையின் நிகழ்வுகளாக மாறுகின்றன. ஆனால் இந்த தெய்வ வடிவங்களுக்குப் பின்னும் ஒரு பிரபஞ்ச ஒழுங்கியக்கம் உள்ளது. கட்டுமரப் படகுகளைத் தூக்கியடிக்கும் இராட்சத அலை  மானுடக் கற்பனையின் வார்ப்புக்களைத் தூக்கியடிக்கும் பிரம்மாண்ட ஒழுங்கியக்கம் அது. மானுட தெய்வங்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அவற்றைக் கிஞ்சித்து சட்டை செய்யாத அந்த ஒழுங்கியக்கத்தின் முன்னால் மானுடத்தால் மண்டியிட மட்டுமே இயலும். அதனை அறிய முயற்சிப்பதே, அதன் இருப்பை மிக நுண்ணிய பின்னமாகவேனும் உணர்வதே அந்த பிரபஞ்ச ஒழுங்கியக்கத்துக்கு மானுடத்தால் செய்ய முடியும் ஒரே வணக்கம்.

அதனை ரிக் வேத ரிஷிகள் உணர்ந்தனர். பெயரிடமுடியாத அப்பேரியக்கத்தின் தொடக்கத்தை இருமைகளுக்கு அப்பால் சென்று உணர்ந்திட தலைப்பட்டனர். அவ்வுணர்தலின் அற்புதப் பேருணர்ச்சியை கவிதாவேசத்துடன் வடித்தனர். அந்தப் பெயரிடமுடியாத ஏதோ ஒன்று தம்முள் எழுப்பிய அதே அதிர்வுகளை தன்னுளும் மிகப்பிரம்மாண்டமாகக் கொண்டிருக்க வேண்டுமென  உணர்ந்தனர். நாஸதீய ஸூக்தம் மானுடத்தின் ஆகச்சிறந்த உச்சமாக அமைந்துள்ளது. அதன் பின்னரும் முன்னரும் பல பண்பாடுகளில் படைப்பு கீதங்கள் உருவாகியுள்ளன. மானுடத்தின் சாயலாக உருவாக்கப்பட்ட படைப்பு தேவன் ஏதுமற்ற சூனியத்திலிருந்து உலகைப் படைத்த கதைகள் பெரும் ஏகத்துவ மதங்களின் அடிப்படையாக உள்ளன. ஆனால் இந்த மண்ணில் மட்டுமே படைப்பின் மகோன்னதத்தின் முன் மானுட அறிதலின் எல்லைகள் அடக்கத்துடன் பிரகடனப்படுத்தப்பட்டன.

உண்மையில் இந்தப் படைப்பு எங்கிருந்து தோன்றியது என்று யார் அறிவார்? இந்தப் படைப்பு எங்கிருந்து தோன்றியது? இதை யார் சொல்ல முடியும்? தேவர்கள் இந்தப் படைப்பிற்குப் பிறகு தோன்றியவர்கள். எனவே அவர்களுக்கு அது தெரியாது. எனவே இந்தப் படைப்பு எங்கிருந்து தோன்றியது என்று யார் அறிவார்? இந்தப் படைப்பு எங்கிருந்து தோன்றியதோ அது இந்தப் படைப்பைத் தாங்குகிறதா இல்லையா? மேலான விண்ணில் வாழும் இந்தப் படைப்பின் தலைவர் யாரோ அவர் கட்டாயமாக அறிவார். ஒருவேளை அவருக்கும் தெரியாதோ?

அத்தகைய ஒரு பெரும் அடக்க உணர்ச்சியிலிருந்தும், அற்புத உணர்ச்சியிலிருந்தும் வடிவமைக்கப்பட்டவையே இந்த மண்ணின் தெய்வ வடிவங்கள். எனவேதான் அவை நம் அறிவியல் உணர்வை தூண்டப் பயன்படும்படி வளர முடிந்தவை. நம் அறிதலின் திரை விசாலமாகவும் ஆழமாகவும் செல்லச் செல்ல அவையும் நம்முடன் வளரும். தன்னுள்ளும் தன்னைச்சுற்றியும் இருக்கும் இந்த அற்புத உணர்வின் நெருப்பைக் கல்வியின் மூலம் மாணவர்களின் உள்ளத்தில் ஊட்டுவதே அறிவியல் கல்வியின் பணியாகும். நாம் இன்றைக்கு அறிவியல் சார்ந்த சமுதாயமாகத் தொழில்நுட்ப அளவில் மாறி வருகிறோம். ஆனால் நமது மனதில் அறிவியலிலிருந்து வெகுவாக அன்னியப்பட்டு நிற்கிறோம். இங்கு நாம் என குறிப்பிடுவது இந்தியர்களையோ தமிழர்களையோ மட்டும் அல்ல – மேற்கத்திய சமுதாயத்தையும் அதனை பிரதியெடுக்கும் நம் மனநிலையையும் சேர்த்துத்தான். இதன் விளைவாகவே 170 இலட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய ராமர் பாலத்தை குறித்து நாஸா சான்றிதழ் அளித்ததாகக் கூறும், குரானில் விண்வெளிப் பயணம் குறித்த முன்னறிவிப்பு செய்திருப்பதாகக் கூறும், அறிவார்ந்த படைப்புக்கு உயிரியியலில் ஆதாரம் இருப்பதாகக் கூறும் நம்பிக்கை வெறியாளர்களை உருவாக்கியிருக்கிறோம்.

பிரபஞ்சதரிசனம் காட்டும் பேருணர்ச்சியை கல்வி நமக்கு அளிக்க முடியுமா என்பதுதான் நம்முன் நிற்கும் கேள்வி. அதில் இதுவரை நம் நவீன கல்வி முறை மிக மோசமாக தோற்றுப்போனது என்பதுதான் யதார்த்தம். பாடப் புத்தகங்களின் முன்னால் சடங்காக சேர்க்கப்படும் கடவுள் வணக்கத்தை விட நம் கல்விமுறை முழுவதுமாக ஊடுருவி நிற்கும் பிரபஞ்ச ஆன்மிக உணர்வு முக்கியமானது. அதனை ஏற்படுத்த அறிவுசார்ந்த கல்வி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். நம் இலக்கியங்களில் இந்த உணர்வைக் காட்டும் எத்தனையோ அழகிய பாடல்கள் உள்ளன. ரிக்வேத ரிஷிகள் முதல் பாரதி, தாகூர் வரை. நம் மண்சார்ந்த, நம் சமுதாயத்தின் இதயத்துடிப்பை உணர்ந்த தொழில்நுட்பங்களை உருவாக்கியவர்கள் எண்ணற்றவர்கள். ஆனால் நம் கல்வி முறையோ அறிவியலை ஒரு மேற்கத்திய அறிதலாக மட்டுமே அதுவும் குற்றுயிரும் குலையுயிருமாக சொல்லிக்கொடுக்கிறது. மாணவன் அன்னியப்பட்டுப் போகிறான். இலக்கியம் அன்னியப்படுகிறது. தொழில்நுட்பம் அன்னியப்படுகிறது. நாமே நம்மில் பிளவுப்பட்டு நிற்கிறோம்.

நமக்கென நாம் அறிவியல் புனைவுகளை ஏற்படுத்த முடியுமா எனும் கேள்விக்கு மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி அந்த அளவுக்கு நாம் இன்னும் அறிவியலுடன் இணைந்த உறவை உருவாக்கிவிடவில்லை என்பதாக சொல்லியிருந்தார். அதாவது நாம் அறிவியலில் பின் தங்கி நிற்கிறோம். நம் பண்பாடு ஒரு மேற்கத்திய நிலையை அல்லது அதற்கு இணைகோடான ஒரு நிலையை அடைந்தால் ஒழிய அறிவியல் புனைவு உருவாவது சாத்தியமில்லை என்ற தொனியில் அவர் சொல்லியிருந்தார். ஆனால் “நம் அறிவியல் புனைவுகளை” நம் மரபு சார்ந்தும் நம் சூழலிலும் அதீத கற்பனையின் வருங்காலத்துக்கு செல்லாமலே உருவாக்கினார் ஜெயமோகன். அவரது புனைவுகள் சொல்லும் ஒரு முக்கிய செய்தியே அறிவியல் என்பது தொழில்நுட்பம் சார்ந்ததில்லை, பார்வையும் அறிதலும் சார்ந்தது என்பதுதான். அதற்கான வெளியும் அவ்வெளியில் கலை எழுவதற்கு தேவையான முரணியக்கமும், உரையாடல் புலமும்  இங்கு வெகுவாகவே உள்ளது என்பதுதான்.