kamagra paypal


முகப்பு » அனுபவங்கள், இலக்கியம், புத்தக அனுபவம்

கதை சொல்லியின் ரயில் வண்டி

ஒரு கதைத்தொகுப்புக்கு, அதில் இடம்பெற்றுள்ள கதை ஒன்றின் தலைப்பையே பெயராக‌ வைத்தல் பெரும்பாலும் இயல்பானதே. ஆனால் அவ்வாறு அமைந்த புத்தகத்தின் பெயர், அதன் கதைகள் அனைத்தின் மீதும் படர்ந்து பொருள் தருவது அரிது. முத்துலிங்கம் அவர்கள் “செலுத்தும்” “மகாராஜாவின் ரயில் வண்டி” அத்தகைய அரிதான கதைத்தொகுப்பு. இச்சொற்தொடரை வாசிக்கும் போது எனக்கொரு எண்ணம் எழும்… அழகிய வேலைப்பாடுகள் உடைய பல்லக்குகளை ரயில் பெட்டிகள் போல் ஒன்றன்பின் ஒன்றாய் இணைத்து, ஒரு யானை, இஞ்சின் போல் முன் செல்ல, ஒருவித லயத்துடன் இந்த “ரயில்” அசைந்து குலுங்கிச் செல்லும் கவின்மிகு காட்சியை கற்பனை செய்து பாருங்கள்! “மகாராஜாவின் ரயில் வண்டி” இப்படியான படிமத்தில்தான் எனக்குள் “ஒடி”க் கொண்டிருக்கிறது.

மேற்சொன்ன அழகை ஒத்த கதை சொல்லும் நயம் இப்புத்தகத்தின் அனைத்து கதைகளிலும் உண்டு என்று முன்னறிவிப்பு செய்வது போல, முதல் கதையே “மகாராஜாவின் ரயில் வண்டி” தான். இவ்வளவுக்கும், இச்சொற்தொடர், இக்கதையின் முக்கிய அம்சமல்ல. கதையின் போக்கில் ஒரு பாத்திரம் சொல்லும் உபரித் தகவல் போலத்தான் இது வருகிறது. ஆனால், ஜன்னலோர ரயில் பயணத்தின் ஒரு நொடியில் தாண்டிச் செல்லும் ஒரு பூச்செடியின் வாசம், அதன் இருப்பிடம் விட்டு நெடுந்தூரம் ரயில் போன பின்பும் நம் மனதில் வீசுவது போல தங்கி விடுகிறது இச்சொற்தொடர். இது எப்படி சாத்தியம்? அதற்கு முத்துலிங்கத்தின் கதை சொல்லும் பாங்கில் பதில் இருக்கிறது.

இவரின் கதைகளின் சாரம் பிரத்யேகமானது. எளிமையானது. எளிமையும் பிரத்யேகத்தன்மையும் இணைந்திருப்பதே அதற்கொரு வலிமை தருகிறது. இவரின் பெரும்பாலான கதைகள் “விவரணம்” செய்யும் பாணியில் இருக்கிறது. அந்த விவரிப்பில் நினைப்பு இருக்கிறது. அந்த நினைப்பில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பு, எதிர்பாராத தருணத்தில் உடையும் சம்பவம் நடக்கிறது. அந்த சம்பவத்தின் வழியே மீண்டுமொரு நினைப்பு பிறக்கிறது. இவை அனைத்துக்கும் மேலாய், இவற்றை ஒன்றுகோர்க்கும் சரடாய் அங்கதம் இருக்கிறது. அந்த அங்கதத்தில் கூட இங்கிதம் தெறிக்கிறது. ஆம். முத்துலிங்கத்தின் கதைகளின் மூலக்கூறுகள் இவை. இவற்றை அவர் நிகழ்த்தும் களமும் நமக்குப் புதிது. பாத்திரங்கள் பிரான்ஸ், கனடா, ஆப்ரிக்கா என்று அன்னிய மண்ணில் நடமாடுகின்றனர். பீவர் மரங்களையும் தேவதாரு மரங்களையும் ரசிக்கின்றனர். ஆனாலும் வாசிப்பவருக்கு எவ்வித அன்னியத்தன்மை தாராது அப்பாத்திரங்களுடன் நடமாடும் ஒரு தேசாந்திரி போல அந்தந்த தேசத்து கதைக் களத்தில் எளிதாக பொருத்தி விடுகிறது அவர் எழுத்து. உலகின் எந்த மூலையில் கதை நடந்தாலும் அதனடியில் இருக்கும் உணர்வுக்கு நம்மை நெருங்கிப் போக வைப்பதால் இது அவருக்கு சாத்தியப்பட்டிருக்கக்கூடும். எனவே தான், “ஆப்பிரிக்க காட்டில், ஒரு நடுநிசியில், மின்விளக்குகள் எரியும் ஒரேயொரு தனி வீட்டில்” காருக்குறிச்சி கரகரப்பிரியாவை வாசித்தாலும், அதன் கனத்த தனித்த ஏகாந்தம் வாசிக்கும் நமக்கும் அடுத்த நொடி வந்து விடுகிறது.

“மகாராஜாவின் ரயில் வண்டி”யில் ஒரு சிறுவன், திட்டமிடல் ஏதுமின்றி முன்பின் பழக்கமில்லா ஒரு குடுப்பத்தினர் வீட்டில் இரண்டு நாள் தங்க நேரிடுகிறது. ஒரு பதின்வயது பெண்ணின் அறிமுகம் கிடைக்கிறது.

அவளின் அறிமுகம் கிடைத்தபின் அதை நீட்டிக்கும் பொருட்டு அவருள் ஏற்படும் எதிர்பார்ப்பு… ஒரு நாளிலேயே அந்த எதிர்பார்ப்பு உடைந்து ஏற்படும் ஏமாற்றம். மறக்க முடியா அந்த இரண்டு தினங்கள்…ஆனால் இதை ஒரு உணர்ச்சி பிழம்பாக மாற்றவில்லை முத்துலிங்கம். மாறாக மிகச் சாதாரணமாக சொல்வது போல், “இது நடந்து பல வருடங்கள் ஓடி விட்டன. பல தேசங்கள் சுற்றி விட்டேன்….பல கதவுகளை திறந்தேன். ஆனாலும் சில சமயங்களில் கடித்தவுடன் கரையும், ஒன்பது சிறுதுளைகள் கொண்ட நீள்சதுர பிஸ்கட்டை சாப்பிடும்போது ஒரு கித்தாரின் மணம் வருவதை என்னால் தவிர்க்க முடியாமல் இருக்கிறது” என்று நச்சென்று கதையை முடிக்கிறார். ஒரு பிஸ்கெட்டின் வடிவத்தை கூட அது சார்ந்த நொடியின் வழியே நுண்ணியமாய் நினைப்பில் நிறுத்தியிருக்கும் ஒருவனிடம், உணர்வின் நினைப்பு எத்தனை கெட்டித்து நிற்கக்கூடும் என்பது அவர் எழுதாமல் வாசகனுக்கு விட்ட குறிப்பு.

எளிமையான எழுத்தில் வசீகரமோ வலியோ அவற்றின் அடர்த்தியோ காட்டுதல் அத்தனை எளிதன்று. ஆனால் முத்துலிங்கத்தின் எழுத்துக்களில் இது மிக இயல்பாக நடக்கிறது. “தொடக்கம்” என்றொரு கதை. அடிபட்டு விழுந்த பறவையை தூக்குகையில் “காம்பில்லாத ஒரு பூவை தூக்குவது போல லேசான கனம் கனத்தது” என்கிறார். ஒரு அடிபட்ட பறவையை உள்ளங்கையில் வைத்திருந்த அனுபவம் நமக்கிருந்தால், “காம்பில்லாத பூவின் கனம்” ஆயுளுக்கும் நினைவிருக்கும்.

“கொம்புளானா” அங்கதத்தின் அடியில் மனவலியை சொல்லும் பாணிக்கு, ஒரு சோறு பதம்.”சின்ன வயதில் ஏற்பட்ட கஷ்டங்களில் பாதிக்கு மேல் இந்த கொம்புளானாவினால் வந்தது தான் என்று நகரத்தொடங்கும் கதை, “அவர் சொன்னால் அதில் நியாயம் இருக்கும்” என்று ஆங்காங்கே ஆணாதிக்கம் வைத்து, அவர் மனைவி பத்மாவதி தொலைத்த வாழ்க்கையின் வழியே பயணிக்கிறது. “இந்த கொம்புளானா தமிழுக்காக எவ்வளவு உழைக்கிறது…ஆனால் ஒருவருக்கும் அதன் மதிப்பு தெரியவில்லை. தேவையில்லாத எழுத்தென்று எரிச்சல் வேறு. ஒருவேளை அதற்கும் தன்னுடைய நிலைதானோ என்ற அச்சம் அவளுக்கு ஏற்பட்டது” என்ற வரிகளில் கதையின் ஒட்டுமொத்த பாரத்தையும் ஏற்றி விடுகிறார் முத்துலிங்கம். சமையலறை வாசத்திலேயே வாழ்க்கை தொலைத்த நம் அம்மாக்கள் பற்றி நினைக்காமல் இந்த கதை வாசிப்பு முடிவதற்கில்லை.

“கடன்” வீரியமிக்கது. வீட்டில் உள்ள பேருறவைக் கூட கவனிக்க நேரமின்றிப் போன அவசர உலகத்தையும், வீட்டின் ஓர் அறையில் நிகழ்ந்த மரணத்தைக் கூட திறக்கப்படாத உணவுப் பெட்டியின் மூலம் அறிய நேரிடும் அவலத்தையும் ஆழமாகச் சொல்லும் “கடன்” நம்மிடம் விட்டுச் செல்லும் கேள்விகள் பல. எது கடன்? எவருக்கான கடன்? யாருடைய கடன்? நமக்கான மிகப்பெரிய கடன், அன்பை அறிதலும் அதனை பிரதிபலித்தலும் இல்லையா? தங்கம்மாவுக்கு உரிய கடனை “இவர்” செய்யாததால் தான் முதுமையில் அவருக்குச் சேர வேண்டிய “கடனும்” சேராமல் போனதோ? இக்கதையில் ஒரு அற்புதமான வரி இருக்கிறது. சற்று அசந்தால் கவனிக்காமல் நாம் கடந்துவிடக்கூடிய வாய்ப்பும் உண்டு. “மறந்து கொண்டிருப்பதிலேயே நேரம் கழிந்தது…” எப்படி இது? ஒன்றை நினைத்துக் கொண்டிருப்பதில் நேரம் கழியும். மறந்து கொண்டிருப்பதில் என்றால்? நினைக்கக் கூடாத ஒன்றின் நினைப்பினாலா? மறக்கக் கூடாத ஒன்றின் மறப்பினாலா? மறந்து கொண்டிருத்தல் என்பதிலேயே நினைப்பின் நிமித்தம் இருக்கிறதே…அருவியின் அடியில் இருக்கும் பாறைகளின் இடுக்குகள் போல் அமைதியும் ஆழமும் கொண்டது “மறந்து கொண்டிருப்பதில்லையே நேரம் கழிந்தது”…

“நாளை” என்பது அகதிகளின் துயர் கூறும் கதை. “அகதி” என்ற வார்த்தை ஒரே ஒருமுறை தான் பயன்படுத்தப்படுகிறது. அறையும் விதத்தில். சகோதரர்கள் இருவர் உணவுக்காக அனுமதியற்ற முகாம் ஒன்றில் ரகசியமாய் நுழைந்து வரிசையில் நிற்பதும், பெற்ற உணவில் அன்பை பரிமாறுவதும் கரு. ஓரிடத்தில் அவர்களின் கையிலிருக்கும் உணவை பார்த்து நாய் ஒன்று வருகிறது. “அதுவும் அகதி நாய் தான்” என்கிறான் சகோதரர்களில் ஒருவன். “அதுவும்” என்பதில் உள்ள “வும்”மில் கதையின் பரிமாணம் கட்டமைக்கப்பட்டு விடுகிறது.

“பூர்வீகம்” கதையின் முடிவில் “அன்றைய அதிர்ச்சிகள் எல்லாம் தீர்ந்து விட்டன என்று நினைத்தோம்” என்று சொன்னவுடன், வாசகனும் கதை முடிந்தது என்று நினைக்கும் தருவாயில், அதை விட பெரிய அதிர்ச்சி ஒன்றை அடுத்த‌ பத்தியில் அளித்து, அதிலிருந்து மீள்வதற்குள், கடைசி பத்தியில் மற்றுமொரு எதிர்பாரா செய்தியை ஒளித்து ஒரே கதையில் எண்ணற்ற அதிர்ச்சிகளின் திருப்புமுனைகளை வைக்கிறார் முத்துலிங்கம்.

“தில்லை அம்பலப் பிள்ளையார் கோயில்” கதையின் கடைசி இரு பத்திகள் மிகவும் வித்தியாசமானவை. குடும்பத்தினர் அனைவரும் வண்டியெடுத்து கோயிலுக்குப் போகின்றனர். அருகில் ஓடும் நதிக்கு கட்டாயப்படுத்தி தம்பியை அழைத்துச் செல்லும் அண்ணன், தம்பி மூழ்குவதை தடுப்பதற்கு மனமின்றி பார்க்கிறான். பெற்றோரிடம் தானே அதற்கு காரணம் என்று சொல்லாமல் மறைக்கிறான். கடைசிக்கு முந்தைய பத்தியில் இதைச் சொல்லி விட்டு கடைசி பத்தியில், “கோயிலில் இருந்து திரும்பும் போது சன்னலோர இருக்கையை தம்பிக்குத் தருகிறேன் என்று சொல்லியிருந்ததையும் சொல்லவில்லை” என்று கதை முடிகிறது. மிகப்பெரிய விஷயம் முடிந்த பின், மிகச் சிறிய விஷயம் பற்றிய நினைப்பை சொல்வது ஏன்? குற்றவுணர்ச்சி பரவும் விதம் காட்டவா?

என்னால் மறக்க இயலாத முத்துலிங்கத்தின் வரிகள் சில:

  • “அம்மா குளித்துவிட்டு நடந்து போன தடத்தில் காற்று சற்று நேரம் மினுமினுக்கும்”.
  • “மயிர் வளர்வது போல கண்ணுக்குத் தெரியாமல் விரோதம் வளர்ந்தது”
  • “காய்ந்த சருகிலே நெருப்பு பற்றுவது போல சில பேரைக் கண்டதும் ஆயிரம் காலமாக அறிந்தது போல ஒரு உணர்வு வரும்”
  • “சூரியனே இல்லாத நாட்களில் திசையறிவது எப்படி?”
  • “பனிதான் நிரந்தரம். தண்ணீர் பனியின் மாறுவேடம்தான்”

முத்துலிங்கத்தின் பெரும்பாலான கதைகளின் முடிவு “நினைப்பில்” நினைவுறுகிறது. அவ்வாறல்லாத கதைகளில் கதைமாந்தர்களே நினைப்பின் வழியே பயணிக்கிறார்கள். கதையும் உடன் பயணிக்கிறது. துவக்கத்தில் கூறிய “மகாராஜாவின் ரயில் வண்டி” தரும் படிமத்திற்கு மீண்டும் வருவோம். நிகழ்வுகள் நம் கைமீறி நடக்கலாம். நம் விருப்பு வெறுப்புக்கு மாறாக இருக்கலாம். ஆனால் நினைவு? அதற்கு நாம் தானே ராஜா? நினைப்பின் ரயில் வண்டியை நாம் விரும்பும் திசையில் நமக்கேற்ற தண்டவாளத்தில் விடுவதன் உரிமை பொருட்டு நாம் அனைவரும் நம் நினைப்பின் மகாராஜா. அதற்குத் தோதான “இருப்பு பாதை”களை தன் கதையோட்டத்திலும் சொல்லாக்கத்திலும் நமக்களிக்கும் முத்துலிங்கத்தின் எழுத்துக்களின் வழி “நம் ரயில் வண்டி”யும் ஓடும்.

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.