kamagra paypal


முகப்பு » அஞ்சலி, ஆளுமை

கலைவெளியில் ஒரு தாரகை: வெ.சாவுக்கான இடம்

வெ.சா. மறைந்து விட்டார். வாழ்நாள் முழுவதும் கலையையே சுவாசித்து வந்த பேரிதயம், புனிதமான சரஸ்வதி பூஜை நாளின் அதிகாலையில் கலைவெளியில் கலந்து விட்டது (அக்டோபர் 21, 2015). யதேச்சையான நிகழ்வு என்பதைத் தாண்டிய ஒரு தெய்வ சங்கல்பம் என்றே இதைக் கருதுகிறேன். இனி ஒவ்வொரு வருடமும் அந்த நாளில் சரஸ்வதியின் திருவுருவத்தைப் பூஜிக்கும் போது, வெள்ளைத் தாமரையின் விகசிப்பில் வெ.சாவின் புன்னகையும் கலந்திருக்கும்.

vsl அன்று மதியம் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டேன். அவரது விருப்பத்தின் படி கண்கள் தானம் செய்யப் பட்டிருந்தன. மேதைமையும் விசாலமும் கூர்மையும் குழந்தைத் தனமும் குறும்பும் இழையோடிய அந்தக் கண்கள் இன்னொரு ஜீவனின் வழி உலகைக் காணும் என்ற எண்ணமே மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் அதுபோக நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் எழுதிக் குவித்தவர் வெ.சா. அவற்றில் கணிசமான ஒரு பகுதியை நான் வாசித்திருக்கிறேன். ஆயினும் அந்தத் தருணத்தில் உற்சாகம் ததும்பும் அந்த முகமும், மிகுந்த பரிவுடனும் நட்புடனும் தோளில் கைபோட்டு நடக்கும் அவரது கரத்தின் ஸ்பரிசமும் தான் நெஞ்சில் எழுந்தன. கடந்த எட்டு வருடங்களாக தனிப்பட்ட அளவில் வெ.சாவுடன் கொண்டிருந்த நட்பை ஒரு பெரும்பேறாகவே கருதுகிறேன்.

அந்த உணர்ச்சிகளைத் தாண்டி, நமது கலை இலக்கியப் பரப்பில் வெ.சாவின் ஒட்டுமொத்த பங்களிப்பும் வீச்சும் எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளும் ஒரு முயற்சி இந்தப் பதிவு. “வெ.சா – விமர்சனங்களும் விவாதங்களும்” நூலில் நான் ஏற்கனவே எழுதியுள்ள கட்டுரையின் நீட்சி இது.

IMG_2449

தன் கையில் அகப்படும் ஒவ்வொரு விஷயத்தையும் கூர்மையான, கறாரான அளவீடுகளில் மதிப்பிடுபவர் வெ.சா. ஆனால், 2011ல் அவரது ஐம்பதாண்டு கால பங்களிப்பை நினைவு கூரும் விழாவின் ஏற்புரையில் “அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளன் அல்ல, நான் எழுத வந்தது ஒரு விபத்து, பெரும்பாலும் நான் எழுதியது எதுவும் கலை சார்ந்த பொதுப்புத்திக்கு அப்பாற்பட்டது அல்ல” என்று குறிப்பிட்டது அந்த நெகிழ்ச்சியான தருணத்தில் அவரிடமிருந்து வெளிப்பட்ட தன்னடக்கமான பேச்சே அன்றி, மதிப்புரை அல்ல. வாழ்நாள் முழுவதும் தகுதி வாய்ந்த புகழுரைகளுக்கு மாறாக, நியாயமற்ற கண்டனங்களையும் அவதூறுகளையுமே சந்தித்து வந்திருந்தாலும், தனது ஆளுமைக்கும் மதிப்பீடுகளுக்குமான உயர் இடம் பற்றிய உள்ளார்ந்த தெளிவு அவருக்கு கட்டாயம் இருந்தது என்றே நினைக்கிறேன்.

வெ.சா நமக்கு விட்டுச் சென்றிருக்கும் காத்திரமான எழுத்துக்களின் தொகையை இவ்வாறு வகைமைப் படுத்தலாம்.

1. இலக்கியப் படைப்புகள், எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியச் சூழல் மீதான விமர்சனங்கள், சர்ச்சைகள், விவாதங்கள்.
2. கலையுணர்வு, கலைநுட்பம், கலாரசனை சார்ந்த அவரது பொதுவான கொள்கை விளக்கங்கள், கோட்பாடுகள்.
3. நாடகம், நாட்டார் கலைகள், ஓவியம், சிற்பம், சினிமா ஆகிய ஒவ்வொரு துறைகளையும் முன்வைத்து அவர் எழுதிய விரிவான கட்டுரைகள், விமர்சனங்கள்.
4. சமூக விமர்சனங்கள். பல வகையான பிரபலங்கள், ஆளுமைகள் குறித்த பதிவுகள்
5. சுயசரிதம், வாழ்க்கை அனுபவங்கள்.
6. மொழிபெயர்ப்புகள், தொகுப்புகள், ஒரு திரைப்பிரதி.
7. தமிழகக் கலைகள், இலக்கியங்கள் குறித்து ஆங்கிலத்தில் எழுதியவை.

இவற்றில் கடைசி மூன்று வகைமைகள் தவிர்த்து, மற்றவை நாம் கட்டுக்கோப்பான பிரிவுகளுக்குள் அடக்கமுடியாத வகையில் உள்ளன. இவற்றில் கணிசமான பகுதி எழுத்துக்கள் பல சமயங்களில் எதிர்வினைகளாகவோ அல்லது தன்னிலை விளக்கங்களாகவோ வெ.சா எழுதியவை. எனவே ஒரு புதிய தமிழ் வாசகன் அவை எழுதப் பட்ட சூழல், காலகட்டம் பற்றிய அறிமுகம் இல்லாமல் அவற்றைப் புரிந்து கொள்வது கொஞ்சம் கடினம் தான். ஆனால், அத்தகைய எழுத்துக்களிலும் கூட, வெ.சா தனது விசாலமான அறிவின், கூர்த்த நுண்ணுணர்வின் கீற்றுகளை வாசகனுக்குத் தந்து சென்றபடியே இருக்கிறார் என்பதை உணர முடியும். மேலும், தமிழில் எழுதினார் என்பதற்காக தனது பார்வைகளை தமிழ் மொழி, தமிழ்நாடு என்ற எல்லைகளுக்குள் வெ.சா குறுக்கிக் கொள்ளவில்லை. சிறு வயதிலேயே அகில இந்திய அளவிலான பணிச்சூழல் வாய்த்ததும், உலக இலக்கியம் மற்றும் கலைகள் குறித்த தேடலும் அவரது சிந்தனைகளுக்குப் பெரும் விசாலத்தையும் வீச்சையும் அளித்திருந்தன. இந்தியக் கலை வரலாற்றில் பரதமுனி, அபினவ குப்தர், ஆனந்த வர்த்தனர், தண்டி என நீளும் ஒரு புகழ்மிக்க மரபின் நம் காலத்திய பிரதிநிதி அவர். இவர்கள் யாரும் தாங்களே கலைஞர்களோ காவியகர்த்தாக்களோ அல்லர். ஆனால், கலையின், காவியத்தின் ஜீவனைக் கண்டுணர்த்தியவர்கள். விமர்சன பிதாமகர் என்பதைத் தாண்டி ஒரு கலை இலக்கிய மேதையாக, கலைவெளியில் ஓர் தாரகையாக வெ.சா நிற்கிறார் என்று நான் கருதுவற்கான காரணம் இது தான்.

நல்ல விமர்சகர் ஆனால் காலாவதியாகி விட்டவர், நேர்மையானவர் ஆனால் படைப்பாளிகளின் மீது தனிப்பட்ட “வசைகளை” வைத்தவர், இலக்கிய டிக்கெட் பரிசோதகர் என்பதே அவருக்கான இடம் – இந்த ரீதியில் தற்போது வெ.சாவைக் குறித்து கட்டமைக்கப்படும் கருத்துக்கள் எந்த அளவுக்கு ஆதாரமற்றவை, தவறானவை, முன்முடிவுகளுடன் கூறப்படுபவை என்பதை வெ.சாவின் எழுத்துக்களுடனும், செயல்பாடுகளுடனும் ஆழ்ந்த பரிச்சயம் கொண்டவர்கள் உணர முடியும். சிலவற்றை எடுத்து ஆராயலாம்.

தமிழின் செவ்விலக்கிய மரபைக் குறித்து வெ.சா அறிந்திருக்கவில்லை, அதை முற்றிலுமாக அவர் புறக்கணித்தார் என்று கூறப் படுகிறது. இது உண்மையல்ல. அகநானூறு முதலான சங்கப் பாடல்களின் அழகியலையும் காதா சப்தசதி என்ற பிராகிருத மொழியின் பழம்பாடல் தொகுப்பையும் ஒப்பிட்டு வெ.சா எழுதியிருக்கிறார். சுவடிகளை மீட்டெடுத்த உ.வே.சாமிநாதையரின் பணியை உயர்வாகவே மதிப்பீடு செய்திருக்கிறார். தமிழின் இரண்டாயிரம் ஆண்டுக்கால மரபிலக்கியம் முழுவதையும் எந்தக் கலாபூர்வமான அளவீடும், ஆழமான நோக்கும் இன்றி சகட்டுமேனிக்குப் புகழ்ந்து தள்ளும் போலித் தனத்தைத் தான் அவர் கண்டித்தார். தனது ‘பாலையும் வாழையும்’ என்ற கடுமைத் தொனி கொண்ட பிரபல கட்டுரையில் கூட கம்பராமாயணம் ஒரு மகத்தான பேரிலக்கியம் என்பதை அவர் மறுதலிக்கவில்லை. அதற்குப் பிறகான அதன் பிரக்ஞை பூர்வமான தொடர்ச்சி எங்கே என்று தான் கேட்கிறார். “கம்பனுக்குப் பிறகு தமிழ்நாட்டில் கவிஞன் என்று யாருமே தோன்றவில்லை” என்று புதுமைப்பித்தன் கூறிய அதே விமர்சனம் தான் இது. பாரதியே கூட இந்த நீண்ட நெடிய மரபில் “கம்பனைப் போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல்” என்று தெரிவுசெய்து தான் தனது புகழ்மாலையை அளிக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்.

இத்தகைய விமர்சன நோக்கை வலியுறுத்திய போதிலும் கூட, செவ்வியல் இலக்கியத்தின் தன்மையையும் அழகியலையும் வெ.சா மிக நன்றாக அறிந்திருந்தார். அதனால் தான் “ரசிகமணி” டி.கே.சி கம்பனின் பாடல்களை வைத்து தன்னிச்சையாகப் பந்து விளையாடுவதையும் சிதைப்பதையும் வெ.சா கண்டித்தார் – “இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்வதும், தானே சிருஷ்டித்தவற்றை இலக்கியாசிரியரின் தலையில் கட்டுவதும், ஆஹா ஒஹோ என்று கூவுவதும், தனக்குப் பிடிக்காதவற்றை அந்த ஆசிரியரின் படைப்பேயில்லை என்று நீக்குவதும் விமர்சனம் என்றோ, புதிய படைப்பு என்றோ யாரும் சொல்வதற்கில்லை. இவை விமர்சனம் போன்ற ஒரு கனமான தொழிலைக் கேலிக்கிடமாக்குவதாகும்”. கடந்த இரண்டரை ஆண்டுகளாக பெங்களூரில் கம்பராமாயணத்தின் பன்னிரண்டாயிரம் பாடல்களையும் ஒரு குழுவாக வாசித்து, விவாதித்து முற்றோதல் செய்ததில் நாங்கள் அனுபவ பூர்வமாகக் கண்டு கொண்ட உண்மை, வெ.சா கூறியதுடன் முழுமையாகவே பொருந்தி வருகிறது.

மரபிலக்கியங்கள் குறித்த கலாபூர்வமான நோக்கு என்பதே இங்கு இல்லாதிருந்ததால் தான், சங்கப் பாடல்களின் இயற்கை வர்ணனைகள் அலங்காரத்திற்காக எழுதப் பட்டவை அல்ல, அவை உண்மையில் அகநிலக் காட்சிகள் (interior landscapes) என்பதைச் சொல்வதற்கு தமிழ்நிலத்திற்கு வெளியிலிருந்து ஒரு ஏ.கே.ராமானுஜன் வர வேண்டியிருந்தது. ஆனால் அதற்குப் பிறகும் கூட, ஒரு சுஜாதாவோ அல்லது தமிழாசிரிய புலவர் பெருமக்களோ இன்றுவரை அதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஜெயமோகனின் “சங்க சித்திரங்கள்” நூல் தான் இந்த அழகியல் அம்சத்தைத் தெளிவாகக் கண்டு எடுத்துரைத்தது. எனவே, வெ.சா முன்வைத்த கலாபூர்வமான செவ்விலக்கிய வாசிப்பு என்பது தமிழில் இன்னும் பல தளங்களில் நிகழவே இல்லை என்பதே உண்மை. அந்த விமர்சனத்திற்கான முக்கியத்துவம் அப்படியே தான் இருக்கிறது.

அடுத்ததாக, என்னாலுமே கூட ஜீரணிக்க முடியாத விஷயம் அசோகமித்திரனைப் பற்றிய வெ.சாவின் மதிப்பீடு. நல்ல இலக்கியம் என்றால் அடிப்படையான உண்மைத் தன்மை இருக்க வேண்டும், அத்துடன் பீறிட்டு எழும் பரவசமும் (trance) இருக்க வேண்டும் என்பது வெ.சாவின் அளவீடாக இருந்தது. அதற்காக, இயல்பாக எழுதப் படும் யதார்த்தவாத எழுத்துக்களை அவர் நிராகரித்தார் என்று கூறி விட முடியாது. ‘தலித்களும் தமிழ் இலக்கியமும்’ என்ற நீண்ட கட்டுரையில் பாமாவின் ‘கருக்கு’, பூமணியின் ‘பிறகு’ ஆகிய படைப்புகளைக் குறித்து நல்லவிதமாகத் தான் வெ.சா சொல்லுகிறார். ஜாகிர் ராஜாவின் ‘செம்பருத்தி பூத்த வீடு’ தொகுப்பிலுள்ள விவரணத் தன்மை கொண்ட யதார்த்தமான சிறுகதைகளை நல்லதாகவே மதிப்பிடுகிறார். ஆனால், அதே வகைமை சார்ந்த அசோகமித்திரனின் அற்புதமான நாவல்களும், மிக நல்ல சிறுகதைகளும் கூட ஏதோ காரணங்களால் அவருக்குப் பிடிக்கவில்லை. அவர் அடிக்கடி பயன்படுத்தும் அவருக்கான நுண்ணுணர்வு (sensibility) என்ற தளத்தில் அவை பொருந்தவில்லை என்று தோன்றுகிறது. ஆங்கில இலக்கிய உலகமே கொண்டாடும் ஷேக்ஸ்பியரைக் குறித்து டால்ஸ்டாய் என்ன விதமான கருத்துக் கொண்டிருந்தார் என்பதை நாம் அறிவோம் (“Shakespeare is not even an average author, and his words have nothing whatever in common with art and poetry”). அதை வைத்து இன்றும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. எனவே, இதற்குள் புகுந்து நான் ஆராய்ச்சி செய்ய விரும்பவில்லை.

ஆனால், ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும் – வெ.சாவின் நிராகரிப்புகளில் ஒன்றுகூட தனிப்பட்ட விரோதத்தாலோ அல்லது சாதி மதம் அரசியல் சித்தாந்தம் ஆகியவற்றின் அடிப்படையிலோ ஆனவை அல்ல. அவரது ஆதரவான, பரிவான நிலைப்பாடுகளும் இதே போலத் தான். எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாத அவரது அறிவுசார் நேர்மை ஒரு மகத்தான ஆதர்சம். 1997ல் அமெரிக்க தூதரகத்தின் பணி அழைப்பை மறுத்து வெ.சா எழுதிய புகழ்பெற்ற கடிதத்தைக் குறிப்பிட்டு அ.முத்துலிங்கம் எழுதுகிறார்

“ஒரு ஞானியிடமிருந்து மட்டுமே அப்படியான வார்த்தைகள் வெளிவரும்… அவருக்கு ஏமாற்றங்களும் இழப்புகளும் பழகிப்போனவை. அவற்றை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் அவருக்கு இருந்தது… “

திராவிட இயக்கத்தை ஏறக்குறைய மூர்க்கமாகவே எதிர்த்தவர் வெ.சா. ஆனால் 1969ல் சாகித்திய அகாதமியின் தமிழ்ப் பரிசு பாரதிதாசனுக்கு வழங்கப் பட்டது குறித்து 1972ல் வெ.சா. எழுதிய கட்டுரை எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பாரதிதாசனின் குறைநிறைகளை துல்லியமாக மதிப்பீடு செய்து அதில் வெ.சா எழுதுகிறார் –

“பாரதிதாசனின் பிற்கால எழுத்துக்கள் பற்றியும், அவரது ஆரம்பகால எழுத்துக்களின் கணிசமான பகுதி பற்றியும் கவித்வம் என்று சொல்வதற்கு ஏதும் இல்லை என்ற போதிலும், எஞ்சியுள்ள அவரது கவிதைகளில் தமிழ் இலக்கியத்திற்கு அவரது பங்களிப்பு என்று சொல்லக் கூடியது கணிசமாகக் கிடைக்கும், அதை ஏதும் மகத்தானது, ஆழமானது, தமிழ்க் கவிதைக்கு major contribution என்று சொல்லமுடியாது போகலாம். ஆனால், பாரதிக்குப் பிறகு ஏற்பட்ட ஒரு இடைவெளியை அவர் நிரப்புகிறார்….. தனி மனிதராக அவர் முரண்பாடுகளின் தொகுப்பு. இதுவே எதிர்காலத்தில் இது பற்றிச் சிந்திக்கும் போது குறிப்பிடத் தக்கதும் சுவாரஸ்யமானதுமான குணமாக இருக்கும்.. உண்மையில் சாகித்ய அகாதமி செயல்படத் தொடங்கி 1956ம் வருடம் தமிழுக்கான முதல் பரிசே பாரதிதாசனுக்குத் தான் கொடுக்கப் பட்டிருக்க வேண்டும்.. அவர் மரணத்திற்குப் பின்பு தரப்பட்ட போதிலும், அந்தப் பரிசுக்கு ஒரு கௌரவத்தையும் மரியாதையையும் அவர் ஏற்படுத்தித் தந்திருக்கிறார், ஏனெனில் இப்பரிசு தமிழில் ஒரு இலக்கியவாதிக்குத் தரப்படுவது இது தான் முதல் முறை. இலக்கிய எனும் அடைமொழி இப்போதுதான் இப்பரிசுக்கு அர்த்தம் தருவதாயுள்ளது. இதற்கு முன் பரிசுபெற்ற அ-இலக்கியக் காரர்களெல்லாம் பாரதிதாசன் மேல் பட்டுப் பிரதிபலிக்கும் பிரகாசத்தால் தான் இப்போது தாமும் கௌரவம் பெறுகிறார்கள். மரணத்திற்குப் பின்னும் ஒரு கவியின் ஆளுமையின் தாக்கம் அத்தகையது..”.

இது தான் வெ.சா. இன்று சாகித்திய அகாதமி உட்பட நாட்டின் அனைத்து விருதுகளும் மதிப்பிழந்து பல்லிளித்துக் கொண்டு அவலட்சணமாக நிற்கையில் வெ.சாவின் மேற்கண்ட வரிகள் பெருமூச்சை வரவழைக்கின்றன.

இறுதியாக ஒன்று. இன்றைய காலகட்டத்திலும் சூழலிலும், ஒட்டுமொத்தமாக வெ.சாவைக் கற்றுப் புரிந்து கொள்வது என்பது தீவிரமான வாசக உழைப்பையும் ஆய்வு மனப்பான்மையையும் கோரும் விஷயம். எனவே, ஏற்கனவே வெளிவந்துள்ள வெ.சாவின் நூல்களுடன் கூடுதலாக, “வெ.சாவின் உலகம்: தேர்ந்தெடுத்த எழுத்துக்கள்” என்பதான ஒரு தொகுப்பைக் கொண்டு வர வேண்டியது அவசியமாகிறது. மேற்கத்திய அறிவுலகில் அதிகமாகவும், தொடர்ந்தும் எழுதி வந்த எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் (ஷேக்ஸ்பியர், எமர்சன், பெட்ரண்ட் ரஸ்ஸல், டி.எஸ்.இலியட், நியோம் சாம்ஸ்கி…) மாபெரும் எழுத்துத் தொகையிலிருந்து தேர்ந்தெடுத்து “ரீடர்” என்ற வகையிலான நூல்கள் வெளிவந்து மிகவும் பிரபலமடைந்துள்ளன. பொதுவாக, அவை அந்த சிந்தனையாளரின் பன்முகத் தன்மையையும், அவரது எழுத்தாளுமையின் வீச்சையும் வண்ணங்களையும் பிரதிநித்துவப் படுத்தும் வகையில் அமையும். அவை தரும் அறிமுகம், தேடல் கொண்ட வாசகர்கள் தாங்கள் விரும்பும் எழுத்தாளர்களின் நூல்களை விரிவாகக் கற்பதற்கான தூண்டுதலை ஏற்படுத்தும். அதே பாணியில் ஒரு “வெ.சா. ரீடர்” இன்றைய தமிழ் வாசகர்களை உத்தேசித்து வர வேண்டும். வெ.சாவுடனும் அவரது எழுத்துக்களுடனும் ஆழ்ந்த உறவு கொண்டவர்கள் ஒரு குழுவாக அமர்ந்து செய்ய வேண்டிய முக்கியமான பணி இது.

One Comment »

  • Aekaanthan said:

    ஜடாயுவின் கட்டுரை வெ.சா.-வின் மீதான சிலரின் விஷமமான, பாரபட்ச விமர்சனங்களைக் கேலிக்குள்ளாக்குகிறது. எழுத்தாளர்களின் படைப்புக்களுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ அவரின் கருத்து நிலைப்பாடுகள் எந்தவிதமான சாதி, மதம், அரசியல், சித்தாந்த அடிப்படையிலானவை அல்ல என்று சரியாக நிறுவியிருக்கிறார்.(குறிப்பாக பாரதிதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது பற்றி வெ.சா கூறியதைக் காண்பித்திருப்பது). எந்தவிதத்திலும் சமரசம் செய்துகொள்ளாத அறிவுசார் நேர்மையுடையவராகத்தான் திகழ்ந்திருக்கிறார் வெ.சா. அவரது எழுத்துக்களைத் திறந்த மனதுடன், நேர்மையான மனநிலையில் வாசிக்கும் இலக்கிய வாசகன் எவனும் இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியும் எனத் தோன்றுகிறது.
    -ஏகாந்தன்

    # 1 November 2015 at 8:08 am

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.