kamagra paypal


முகப்பு » அஞ்சலி, ஆளுமை, இலக்கியம்

வெங்கட் சாமிநாதன் – முழுமையின் தொடக்கம்

vsl”நமது நாஸ்திக சமுதாயப் புரட்சியும் ஆஸ்திக ஆன்மிகப் புரட்சியும் ஒரே குணத்தவை. ஒரே எண்ணம் கொண்டவை” என்று சொன்னார் வெங்கட் சாமிநாதன்.

சில பத்தாண்டுகளுக்கு முன்னால் –எந்த பத்திரிகை என்று மறந்துவிட்டது- துணுக்காக ஒரு செய்தி வெளிவந்திருந்தது. எந்த ஆண்டு என்பது நினைவில்லை. எந்த இடம் என்பதும் நினைவில்லை. ஒரு கோவிலில் ஒரு தூண் சிற்பம் ஒன்றை சனீஸ்வரர் என்று சொல்லி பிரமாதப்படுத்தினார்கள் அந்த கோவில் அர்ச்சகர்கள். கூட்டம் குவிந்தது. பிறகு தற்செயலாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அந்த சிற்பத்தை முருகன் என அடையாளம் கண்டார்கள். எந்த அளவு நம் ஆன்மிகம் பண்பாட்டு அறிவின்மையுடன் இருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு இது. ‘பகுத்தறிவு’ என்றால் சொல்லவே வேண்டியதில்லை. இன்று முற்போக்கு பகுத்தறிவு என்றெல்லாம் சொன்னாலே அது பண்பாட்டு நிராகரிப்பு என்பதாக மட்டுமல்ல பண்பாட்டு அறிவின்மையை பெருமையுடன் பறை சாற்றும் ஒரு போக்காகவே இருக்கிறது.

VeSaa_Venkat_Saminathan_6
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் வெங்கட் சாமிநாதனை, அவர் பார்வையை, அவர் பணியை, மேதமையை தமிழ்நாட்டின் பொதுமனதிற்கு கொண்டு வருவது இன்றியமையாத ஒன்றாகிவிடுகிறது. அது அவரை சந்தைப்படுத்துவதில்லை. அல்லது ஒரு சித்தாந்த தரப்பாக முன்னெடுப்பதும் இல்லை. அவரது மதிப்பீடுகளை அவரது உறைகல்லை ஏற்கும் அளவுக்கு பொதுவெளியை மேம்படுத்துவது அவசியமான ஒன்று. ஏனெனில் சாமிநாதன் சமுதாயத்துக்காகத்தான் எழுதினார். ‘கலை சமூகத்துக்கே’ என்றெல்லாம் அரசியல் கோஷம் போடுகிறவர்களை எதிர்த்தவர் தான் எழுதுவது தமிழனை போய் சேர வேண்டுமென்று விரும்பினார்:

எனக்கு தெரிந்தவையெல்லாம் எழுதி மற்றவர்களை மலைக்க வைக்க வாய்பிரமிக்க வைக்கச் செய்ய என்னால் முடியும். அது வெறும் snobbery. அபத்தம். நான் என்றுமே அதை செய்ததில்லை. … எனக்கு முக்கிய குறி தமிழ் சமூகம். 25 வருடங்களாக என் செயற்பாடுகளை நிர்ணயித்திருப்பது அதற்கு ஒரு எல்லைக் கோடு இட்டிருப்பது இதுவே: இந்தத் தமிழ் சமூகத்திற்கு relevant ஆக, அதற்கு அர்த்தம் தருவதாக, அதற்கு புரியும்படி என்ன சொல்ல வேண்டும் என்ன சொல்ல முடியும் அதை எப்படி சொல்வது என்பதுதான். இதில் நான் இந்த சமூகத்திற்கு எப்படி பயன்பட முடியும் என்பதே தவிர, நான் எனக்கு எப்படிப்பட்ட image ஐக் கொடுத்துக் கொள்ள முடியும் என்பதல்ல. இந்த நோக்கில் நான் எந்த தூஷணையையும், கல்லெறியையும் தாங்கிக் கொள்ள தயார்தான். தாங்கிக் கொண்டு வருகிறேன். வசைத்துப்பல்களும் கற்களும் வீசப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

இந்தியாவில் சில விஷயங்கள் அடிப்படையான விஷயங்கள் மத நம்பிக்கைகள் அல்ல. பண்பாட்டு மதிப்பீடுகளின் வாழ்வியல் வெளிப்பாடுகள். காலில் பட்ட புத்தகத்தை கண்ணில் ஒற்றிக் கொள்வது மதநம்பிக்கை என அடையாளம் படுத்தினாலும் அது உண்மையில் அன்றாட வாழ்வில் இணைந்துவிட்ட ஒரு பண்பாட்டு அழகியல். அதற்கு மத பேதங்கள் இல்லை. யாராவது அதை மத நம்பிக்கை மூடநம்பிக்கை என சொல்லி அடையாளப்படுத்துகிற வரையில். அப்படி அது இந்த மண்ணில் மட்டும் இருக்கும் அந்த வழக்கம் ’மூடநம்பிக்கை’ என அழிக்கப்படும் போது வறியவர்களாகி நிற்க போவது நம் அடுத்த சந்ததியினர்தான். எல்லாவற்றையும் பணமாகவும் GDP யாகவும் மட்டுமே கணக்கு போட்டால் எந்த இழப்பும் இல்லை என்பதையும் சொல்லியாக வேண்டும்.

மதத்தின் தனிக்கூறுகள் நம்பிக்கைகள் தாண்டி அது தன்னுள் தக்க வைத்துக் கொண்டிருக்கும் கலையையும் அதன் அழகியல் கூறுகளையும் அறிவது கலைஞர்களுக்கும் கலை அறிஞர்களுக்கும் இயல வேண்டுமென நினைக்கிறார் வெசா. ஆனால் இன்றைய சூழலில் அது அப்படி ஒன்றும் எளிதான விஷயமல்ல போலும். வடுவூர் கோதண்ட ராமஸ்வாமி கோவிலில் கைசிகி நாடகத்தை உயிர்ப்பிக்க ஒரு முயற்சி. எஸ்.ராமானுஜம் அம்முயற்சியை காண நாடக நண்பர்களை அழைத்து வந்திருக்கிறார். கோவில் உட்பிரகாரத்தில் நடக்கிறது. பிறகு அங்கு நிகழ்ந்தது வெசாவின் வார்த்தைகளில்:

அதே சமயம் உற்சவமூர்த்திக்கு முன்னால் நிவேதனமாக நடக்கும் நாடகத்திற்கு அருகில் இருக்கக் கூட சம்மதமின்றி ராமானுஜம் அழைத்திருந்த நாடக நண்பர்களில் ஒரு கணிசமான கூட்டம் கோவில் கோபுர வாசலிலேயே நின்றுவிட்டனர். நாடகம் என்கிற ஒரு பொதுமை கூட அவர்களை ஈர்க்கத் தயாராக இல்லை. உஸ்தாத்கள் டாகர் சகோதரர்களுக்கும் சரஸ்வதி வணக்கத்துக்கும் இடையே, உஸ்தாத் பிஸ்மில்லா கானுக்கும் சரஸ்வதி வணக்கத்துக்கும் இடையே, ரோடினுக்கும் தாண்டவ மூர்த்தியின் சிற்ப உன்னதத்துக்கும் இடையே விழாத திரை, அத்தமிழக நாடக ‘கலைஞர்களுக்கும்’ நாடகம் மாத்திரமல்ல ஒரு உன்னத கலை வடிவமாக இருந்த கோதண்ட ராம உற்சவமூர்த்திக்கும் இடையே விழுந்துவிட்டது. கலை மதங்களை, மொழியை இன்னும் என்னென்னவோ தடைகளை எல்லாம் மீறும் என்று சொன்னார்கள். கலை என்ற ஒரே தளத்தில் நிகழும் சந்திப்பாக உறவாடலாக இருந்தால் அது தடைகளை மீறும்தான். மீறி இருக்கும்தான். கலை என்ற தளத்தை மீறிய இன்னொரு குறுகிய பார்வை கொண்ட தளமாக மற்றது இருந்தால் உறவாட இயலாமல் போகிறது. …கோபுரவாசலில் அவர்களுக்கு வழி மறித்த நந்தி அவர்களே தமக்குத் தந்து கொண்ட க்ஷீணத்தின் நந்தி. தமிழ்நாடு எல்லா கலைத்துறைகளிலும் அறிவுத்துறைகளிலும் எதிர்கொள்ளும் தேக்கத்திற்கும் க்ஷீணத்திற்கும் காரணம் வழி மறைக்கும் இந்த நந்தி.

’ஆராய்ச்சி’ விநோதங்கள் குறித்த கடுமையான சர்ச்சையின் போது மார்க்ஸிய அழகியலாளர்கள் அன்று மிகவும் கட்டுப்பெட்டித்தனமாக முன்வைத்த அழகியல் கோட்பாடுகளை வெசா மறுத்தார். கலை, சமயம் என்பது எல்லாமே எப்போதுமே உற்பத்தி உறவுகளின் மேல் கட்டுமானம். கலை என்பது முற்போக்கு சித்தாந்தத்தின் சேடிப் பெண். கலைகளில் வெளிப்படுவது எல்லாம் டயலடிக்ஸ்தான் என்றெல்லாம் சாதித்து கொண்டிருந்த போது எப்படி சோழர் கால கலை வெளிப்பாடுகள் தம் காலத்தின் உற்பத்தி உறவுகளைத் தாண்டி இன்றும் தம் உயிர் சக்தியுடன் விளங்குகின்றன என்பதை அவர் சொன்னார். அவர் சொன்னதை தட்டையாக புரிந்து கொண்டு, இன்றைக்கும் வியப்பளிக்கக் கூடிய கேள்விகளை – பொருள் முதல் வாதம் சார்ந்த கேள்விகளை- இந்திய மரபில் அந்த காலத்திலேயே கேட்கப்பட்டிருப்பதை முற்போக்கு ஆராய்ச்சியாளர் கூறுகிறார். ’எப்படிப்பட்ட கேள்விகளை கேட்டுவிட்டான்!’ என்று வெசாவும் வியக்கிறார். அதெப்படி ஐயா இன்றைக்கும் வியப்பளிக்கும் இன்றைக்கும் relevant ஆன கேள்விகளை அன்றைக்கு அவனால் கேட்க முடிந்தது? உற்பத்தி உறவுகளின் மேல் கட்டுமானங்களைத் தாண்டி என்றைக்கும் நிற்கிற ஒரு கேள்வியை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒருவனை கேட்கத்தூண்டிய அகவிசை எது?

’ஆராய்ச்சி’ இடதுசாரிகள் கவனிக்கத் தவறிய விஷயம் இதுதான். அவர்கள் கருத்து முதல் வாதம் பொருள் முதல் வாதம் என கோடு பிரித்து விளையாடினார்கள். அதை தாண்ட அவர்களால் இயலவே இல்லை. ஆனால் வெசாவுக்கு இந்த கோடு பிரித்து ஆட்டமாடுவது விஷயமே இல்லை. அவருக்கு முக்கியம் கோட்டின் எந்த பக்கம் இருந்தாலும் ஆத்மார்த்தமான உண்மை வெளிப்பாடு கலைஞனிலிருந்து வெளியாகிறதா என்பதுதான். எனவேதான் அவர் எப்படி மார்க்ஸிய வறட்டு சித்தாந்தவாதிகளின் கலைப்பார்வை என்கிற கட்டுப்பெட்டித்தனத்துக்கு எதிராக இருந்தாரோ அப்படியே கலை சந்தைப்படுத்தப்படுவதற்கும் எதிராக இருந்தார்.

முற்போக்கு மக்கள் கலைஞர்கள் குழு ஓவியர்கள் இறுதியில் சந்தைக்கு மசிந்தார்கள் என்பதை சொல்லும் போது அதில் எள்ளி நகையாடல் இல்லை. ஸையத் ஹைதர் ரஸா மக்கள் கலைஞர்கள் குழு என்கிற முற்போக்கு குழுவில் இருந்தவர். அவரது ஓவியங்களை கொண்டு ஸ்கார்ப் தயாரிக்கிறார்கள். ஸ்கார்பின் விலை ரூ 8000 முதல் 12,000 வரை. ”முப்பதுக்களின் மக்கள் கலைக்குழுவின் ஸ்தாபகர்களில் ஒருவர் அல்லவா? தலையிலோ கழுத்திலோ ரூ 8000 , 12000 கொடுத்து ஸ்கார்ஃப் கட்டிக் கொள்ளும் மக்களை காண்பது பெரும்பாக்கியம்தான்” என்கிறார் வெசா. இந்த சித்தாந்த அபத்தத்தைத் தாண்டி அவரை வலி கொள்ள வைப்பது இன்னும் அடிப்படையான ஒன்று. ”பிக்காஸோ பீங்கான் தட்டில் ஓவியம் வரைந்தால் அது அந்தத் தட்டுகளில் காணக்கிடைக்கும். ஆனால் தலையிலோ கழுத்திலோ மடித்துச் சுருட்டி கட்டிய ஸ்கார்ஃபில் ரசா எங்கே காணப்படுவார்?”

v
சாமிநாதனின் அழகியலில் ஒரு அறிவியலுக்கான கறார் தன்மை இருந்தபடியே உள்ளது. அபிநவ குப்தரின் தொடர்ச்சி என்று கொள்ளலாம் – அல்லது தொல்காப்பியரின். இந்திய மரபில் அழகியல் கோட்பாட்டாளர்கள் எப்போதுமே அழகியலுக்கான ஒரு பொதுமைத்தளத்தை தேடியிருக்கிறார்கள். மேற்கத்திய விமர்சகர்கள் அதை மெல்ல மெதுவாக எட்டினார்கள். அதற்குள் நாம் விக்டோரிய மதிப்பீடுகளுடன் கலை ஆன்மிகம் பக்தி ஒழுக்க விதிகள் எல்லாவற்றையும் இணைத்த ஒரு bastardized நிலைக்கு வந்துவிட்டோம். எம்.எஃப்.ஹுசைன் ஓவியத்தால் புண்படுகிற மனநிலை அதிலிருந்துதான் வருகிறது. லியோனி பட்டிமன்றத்தை அதிநவீன தொழில்நுட்பத்தால் நம் வீட்டு வரவேற்பறையில் குடும்பத்துடன் கேட்டு ரசித்து சிரிப்பதும் அதே பண்பாட்டு மனநிலைதான். மற்றொரு பக்கமோ கலை உக்தியை மட்டும் கை கொண்டு சித்தாந்த சிமிழுக்குள் சமுதாயத்தையும் வரலாற்றையும் அடைக்கும் முற்போக்குகள். எது அதிக பாலைத்தனம் கொண்டது என்பதை தீர்மானிக்க தமிழகம் மற்றொரு பட்டிமன்றத்தை சன் டிவியில் நேரலையாக்கலாம். கழுத்தை நெறிக்கும் இந்த அரக்கத்தனமான வர்த்தக சித்தாந்த பிடிகளிலிருந்து விடுபட வைக்கத்தான் வெசா எழுதினார். அவர் எழுதுவதை விரும்பவில்லை. தன்னை ரசிகனாக –அது வெறும் வார்த்தை அல்ல: கலைப்படைப்பின் ரசத்தை அனுபவிக்கும் சஹிருதயனாக- பார்த்த அளவு என்றுமே தன்னை எழுத்தாளனாக பார்த்ததில்லை. ஆனால் தமிழின் விதி அவள் நன்றாக மேலெழ ஒருவர் வாழ்நாள் முழுக்க, அதற்கு பிறகும், கல்லடி பட வேண்டும் என்கிற விதி. வெசா எழுதினார்.

பண்பாட்டு வரலாற்று சமுதாய தனித்துவங்களைத் தாண்டிய ஒரு பொதுமை அழகியலை பார்க்கும் பார்வையை சாமிநாதன் வலியுறுத்தினார்:

ரூபங்களின் அழகோ மனித அசைவுகளின் அழகோ ஒலி அலைகளின் அழகோ, அது வடிவமேற்று எழுந்த மண் சமூகம் சரித்திரம் முதலியவற்றின் இயல்பேற்று இருந்த போதிலும் இவற்றையெல்லாம் மீறிய ஒரு பொதுமைத்தான வடிவ அழகும் ஆத்ம உள்ளீடும் அவற்றுக்கு உண்டு. மண் சமூகம் சரித்திரம் பற்றிய கூறுகளும் இயல்புகளும் வெளித்தெரிவதாலும் அவையே வடிவ அழகின் மாண்பாக தெரியக்கூடும். அத்தோடு நின்றுவிடுபவர்கள்தாம் பெரும்பான்மை. இதை மீறிய பொதுமைத்தான வடிவ அழகையும் ஆத்மீக உள்ளீட்டையும் உணர்பவர்களுக்கு நாடு, சமூகம், மண் இவற்றின் தனிக்கூறுகள் பற்றிக் கவலை இல்லை.

அந்த பொதுமை அழகியலின் காரண காரிய தொடர்பின் இறுதியில் முகுர நியூரான்கள் (mirror neurons) இருக்கலாம் வி.எஸ்.ராமச்சந்திரன் கூறுவது போல. அல்லது கூட்டு நனவிலி இருக்கலாம் கார்ல் உங் கூறுவது போல. இவை இரண்டுமே mutually exclusive சமாச்சாரங்களும் இல்லை என்பதால் இரண்டுமே கூட இருக்கலாம். ஆனால் இந்த பொதுமை அழகியல் உதிக்கும் இடமே ஒருவேளை மதம் உருவாகும் களமாகவும் இருக்கலாம். அப்படி கருதும் ஒரு மரபு இருக்கிறது. ஆனந்த குமாரசுவாமி தொடங்கி கபிலா வாத்ஸ்யாயன் வரையிலான ஒரு மரபு. மிர்ஸா எலியாடாவின் ஷமானிஸம் குறித்த பார்வை தொடங்கி ஸ்டெல்லா க்ராம்ரிஸ்ச்சின் சிவன் குறித்த ஆராய்ச்சி என மேற்கிலும் பரிணமித்த முக்கியமான மரபு அது. ஆனால் அது இங்கே வேர் கொள்ளவே விடப்படவில்லை. வெசா அந்த மரபின் நீட்சி. இந்திய பாரம்பரியத்துடன் ஆழ் தொடர்பு கொண்ட மரபுதான் அது.

மதமும் கலையும் ஆழமானதொரு கூட்டுநனவிலியில் இருந்துதான் தோன்றுகிறது என்கிறார்கள். கூட்டுநனவிலி என்கிற கருத்தாக்கத்தை மறுக்கிறவர்கள் கூட அவை ஒரே உயிரியல் வேர்கள் கொண்டவை என கூறுகிறார்கள். எனவேதான் கலைக்கும் மதத்துக்கும் மானுட சமுதாய பரிமாண வளர்ச்சியில் தொடர்ந்து உறவிருக்கிறது. ஆனால் அந்த உறவு எப்படிப்பட்டது? மதம் கலையை பிரச்சாரத்துக்கு பயன்படுத்துகிறது என்று எளிதாக சொல்லிவிட முடியும். உண்மையில் மதத்துக்கும் கலைக்குமான உறவென்பது பிரச்சார உறவல்ல.

நடராஜரின் சிலை என்பது கலை மூலம் செய்யப்பட்ட சைவ சமய பிரச்சாரம் அல்ல. அப்படி பார்ப்பது ஒரு குறுகிய பார்வை. இந்திய சமயத்துக்கு எவ்விதத்திலும் தன்னளவில் மதிப்பான உள்ளீடும் இல்லை என கருதும் காலனிய பார்வை. இதையே நவீன பார்வை என சுவீகரித்து கொண்டவர்கள் உண்டு. வெங்கட் சாமிநாதன் பிரச்சாரம் தாண்டிய ஒரு ஆழமான உறவினை கலைக்கும் மதத்துக்குமான இணைப்பில் கண்டார். கம்போடிய நாட்டியம் குறித்து அகஸ்ட் ரோடின் ”நான் எப்போதும் மதம் சார்ந்த கலையையும் கலையையும் ஒருங்கிணைத்திருக்கிறேன். ஏனெனில் மதம் இழக்கப்படவில்லை. எனில் கலையும் இழக்கப்படுவதில்லை.” என்று கூறியது வெசாவுக்கு ஏற்புடையது. இப்பார்வை வாய்க்கப் பெற்ற பண்பாடுதான் இது. ஆனால் அந்த பண்பாட்டை மறந்துவிட்ட அல்லது பாழ்படுத்துகிற தலைமுறை நாம். நம் சில்லறை அரசியலுக்காக. நாம் உருவாக்கிக் கொண்ட பார்வை மறைக்கும் நந்திகளுக்காக.

மைக்கேல் பெர்சிங்கரும் ஆண்ட்ரூ நியூபெர்க்கும் மதத்தின் பரிணாம பரிமாணங்களையும் அதன் உயிரியல் வேர்களையும் ஆராய்கிறார்கள். ஆனால் ராமச்சந்திரன் மட்டுமே சமய அனுபவத்தையும் கலையையும் நரம்பியலையும் இணைக்கும் ஒரு புள்ளியில் இருந்து பேசுகிறார். முக்கியமான முன்னகர்வு அல்லது பார்வை திறப்பு. குறைந்தது மேற்குக்காவது. வெசா குறித்து ராமச்சந்திரன் அறிந்திருந்தால், அவருடன் கலை குறித்து உரையாடியிருந்தால் … எப்படிப்பட்ட ஒரு விஷயத்தை கண்ணெதிரில் கை நழுவ விட்டிருக்கிறோம் என்பதை நினைத்து இப்போது ஏங்க மட்டுமே முடிகிறது.

வெங்கட் சாமிநாதன் முன்வைத்த ’உள்வட்டம், வெளிவட்டம்’ அன்று முற்போக்குவாதிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஒருவித பார்ப்பன மேட்டிமை மனநிலை என்று வசதியான மலின ஆயுதங்களால் அன்றைய சிற்றிதழ் அறிவுஜீவிகள் தாக்கினார்கள். மரபு சார்ந்த பேரிலக்கியங்கள் எப்படி சமுதாயத்தில் பண்பாட்டலைகளை உருவாக்குகின்றன என்கிற இயங்கியலாக வளர்த்தெடுக்கப்பட வேண்டிய ஒரு அறிதல் சட்டகத்தை சாமிநாதன் நமக்களித்தார் நாம் வழக்கம் போல அதை அரசியலை தாண்டி அறிதலாக முன்னெடுக்கவே இல்லை. ஒரு அல்ப – உண்மையிலேயே அல்பத்தனமான சந்தோஷம்- காலின் வில்ஸன் outsider என்கிற கோட்பாட்டை வைத்த போது ஏற்கனவே பழம் தின்று கொட்டை போட்ட பல மேற்கத்திய எழுத்தாளர்கள் ஆர்தர் கொய்ஸ்லர் உட்பட அதை நிராகரித்தார்கள். ஆனால் ஆபிரகாம் மாஸ்லோ அந்த கோட்பாட்டின் வலிமையை உணர்ந்து காலின் வில்ஸனுடன் கடிதப் போக்குவரத்தை தொடங்கி உரையாடினார். என்ன… காலின் வில்ஸனை எவரும் அவர் பிறப்படிப்படையில் நிராகரிக்கவில்லை. வெசாவின் ’உள்வட்டம் வெளிவட்டம்’ அப்படிப்பட்ட வலிமையான ஒன்றுதான். முன்னெடுக்கப்பட வேண்டிய ஒரு அறிதல் சட்டகம்.

விமர்சகன் என்றெல்லாம் சுருக்கமுடியாத படிக்கு அறிதல் சாத்தியங்களை நம் பண்பாட்டு மனவெளியில் விதைத்து விட்டு சென்றிருக்கிறார் மனிதர். அவை விழுந்த நிலம் மருதமா பாலையா என்பதையும் நம்மிடம் விட்டு சென்றிருக்கிறார் என்பதுதான் உறுத்துகிறது. ஒன்று அவர் அசாத்திய நம்பிக்கைசாலி. இல்லையென்றால் மகா அசடு.

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.