kamagra paypal


முகப்பு » ஆளுமை, இயற்கை விவசாயம்

அரியன்னூர் கலசப்பாக்க அற்புதங்கள்

அரியன்னூர் ஜெயச்சந்திரன் பட்டதாரி விவசாயி மட்டுமல்ல. படித்த அறிவைச் செழுமையாகப் பயன்படுத்தும் ஒரு தலைவரும்கூட. பதினைந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக அரியன்னூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தும்கூட தனக்கென வாழாத பண்பாளர். தலைவர் என்ற பந்தா இல்லாதவர். கட்சி சார்பற்றவர். மக்களால் மிகவும் மதிக்கப்பட்டு போட்டி இன்றி தேர்ந்தடுக்கப்பட்ட உன்னத தலைவர். அவரை அவரது ஊரில் இரண்டு முறை சந்தித்து பேட்டி எடுத்த அனுபவம் உண்டு. சென்னையில் படித்துவிட்டு அரசு வேலைக்கு விண்ணப்பிக்காமல் தனது கிராமத்தில் தனது முன்னோர் செய்த உழவுத் தொழிலை இயற்கை முறையில் செய்து வருகிறார்.
WP_20131215_004
இவர் வாழும் வீடே ஒரு அதிசயம். இவரது அப்பா காலத்தில் சுமார் 50, 60 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மெட்ராஸ் டைல் ஹவுஸ். சுவர்களில் விரிசல் விழுந்து விட்டாலும் மனதில் விரிசல் இல்லாதவர். பழைய நிலபிரபுத்துவப் பின்னணி இருந்தாலும் அப்படிப்பட்ட தற்பெருமையோ ஆடம்பரமோ இல்லாத ஒரு காந்தியவாதி. இயற்கை விவசாயமாகட்டும், சுற்றுச் சூழலாகட்டும், இவை குறித்த தகவல்களின் சுரங்கம். நல்ல படிப்பாளி. பல்வேறு ஆங்கில நாளிதழ், மாத இதழ்களில் வெளிவந்த அறிவியல் தகவல்களை ஏகப்பட்ட கோப்புகளில் சேகரித்து வைத்துள்ளார். அவற்றில் எனது தினமணி கட்டுரைகள் சிலவும் உண்டு.
 
படித்து முடித்தபின் சென்னையிலிருந்து அரியன்னூர் வந்ததும் இவர் முதலில் செய்தது நஞ்சான பசுமைப்புரட்சி விவசாயமே. அரியன்னூர் காஞ்சிபுரம் மாவட்டத்தில், மதுராந்தகம் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் உள்ளது. சென்னையிலிருந்து கல்பாக்கம் வழியாகவும் அரியன்னூர் வரலாம், மதுராந்தகம் வழியாகவும் வரலாம்.
 
“வையம் பெறினும் பொய்யுரைக்காதவர் தொண்டை நாட்டினர்” என்ற வாய்மொழியின் இலக்கணமாயுள்ள ஜெயச்சந்திரன், 1975ஆம் ஆண்டில் நெல் சாகுபடியில் இறங்கியபோது பசுமைப்புரட்சியின் உச்சக்கட்டம். இவர் அனுபவமும் சுந்தரராம ஐயர் அனுபவமும் ஒன்றே. இவரும் பசுமைப்புரட்சி காலகட்டத்தில் சாதனை புரிந்தவரே. ரசாயனப் பயனாய் முதலில் விவசாயம் ஓகோ என்று தொடங்கினாலும் பின்னர் படிப்படியாகக் குறைந்தபோது மண் வளமிழந்து வருவதையும் உணர்ந்து நீடித்த விவசாயத்துக்கு வழி காட்டும் இயற்கை விவசாயம் பற்றி யோசிக்கும் வேளையில் – அதாவது 1997க்குபின் தன்னை வழிகாட்டி முழுமையாக இயற்கையில் தடம் பதிக்க வைத்த மூன்று குருமார்களில் முதலாவதாக இவர் கூறுவது ஞானி நம்மாழ்வாரைதான். இரண்டாவதாக அரு. சோலையப்பன். மூன்றாவதாக அடியேன் ஆர்.எஸ். நாராயணன்.
 
அரு. சோலையப்பனைப் பற்றி சில வரிகள். சோலையப்பன் ஜெயச்சந்திரனுக்கு மட்டுமல்ல, முகுந்தனுக்கும் உந்து சக்தி வழங்கியவர். தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் முன்னாள் உயிரியல் ஆய்வு மைய விஞ்ஞானியும்கூட. தமிழ்நாட்டில் பஞ்சகவ்யத்தைத் தயாரித்து முதலில் பயன்படுத்தியவர் கொடுமுடி டாக்டர் நடராஜன் என்றாலும் அப்பயனை அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து துணிவுடன் ஒரு செய்தி வெளியிட்டார்: “வேளாண்துறை வழங்கும் நுண்ணுயிரிகள் கரிப்பொடியில் கலந்து வழங்கப்பட்டு சேமித்து வைக்கப்படும்போது, அவை நாட்பட நாட்பட இறந்துவிடுவதாகவும் பஞ்சகவ்யத்தில் உள்ள நுண்ணுயிரிகள் திரவ வடிவில் உள்ளதால் 2,3, மாதங்கள் அவை அழியாமல் பயன்படுகின்றன”. நுண்ணுயிரிகள் பெருகி வளர்வதையும் குறிப்பிட்டு தினமும் திறந்து மூடி ஒரு குச்சியால் சுழற்றிவிடுவது அவசியம் என்று கூறியதும் இந்த விஞ்ஞானியே.
 
ஜெயச்சந்திரனிடம் நஞ்சை புஞ்சை 25 ஏக்கர் வரை உள்ளது. ஆறு ஏக்கரில் பாரம்பரிய நெல் வகையான ஆற்காடு கிச்சடியுடன் பொன்னி தவிர புஞ்சையில் மா, முந்திரி போன்ற பழம் பருப்புடன் வேர்க்கடலை, காய்கறி சாகுபடியும் உண்டு. இவர் கடைபிடிக்கும் சில உழவியல் தொழில்நுட்பங்களை அறிவது பயனுடைத்து.
 
டாக்டர் நடராஜனின் அதே பார்முலாப்படி பஞ்சகவ்யம். எனது சிபாரிசும் அதுவே : கோமயம் (பசுவின் சாணி) – 5 கிலோ, கோஜலம் (பசுவின் மூத்திரம்),  பசுந்தயிர் 2 லிட்டர், பசும்பால் 2 லிட்டர், பசுநெய் 1 கிலோ, வெல்லம் 1 கிலோ, இளநீர் 3 லிட்டர், வாழைப்பழம் ௧ சீப்பு, 3 லிட்டர் கள் அல்லது ஈஸ்ட் 25 கிராம். முதலில் பசுஞ்சாணத்தை காய்ச்சி ஆற வைத்த நெய்யுடன் பிசைந்து 2 நாட்கள் மூடி வைக்க வேண்டும். மூன்றாவது நாள் 3 லிட்டர் கோஜலம் கலந்து மேலும் மூன்று நாட்கள் மூடி வைக்க வேண்டும். தினம் காலை மாலை 2 வேளை குச்சியால் சுழற்றிவிட வேண்டும். ஆறாவது நாள் தயிர், பால், மூன்று லிட்டர் தண்ணீரில் 1 கிலோ வெல்லம் கலந்த பானகத்தையும் ஒன்றாகக் கலந்து கூடவே மூன்று லிட்டர் இளநீர் கலந்து கள் அல்லது ஈஸ்ட் போட்டு பிசைந்து ஒருவகை பஞ்சாமிர்தம் செய்து அதை கோமயம், கோஜலம், நெய் கலவையில் சேர்த்து தினமும் குச்சியால் கலக்கி விட்டுக் கொண்டு வந்தால் 21ஆம் நாள் பஞ்சகவ்யம் ரெடி. இப்படிப்பட்ட பஞ்சகவ்யத்தை 3 சதவிகிதம் (100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யம்) 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிப்பதால் / ஸ்ப்ரே செய்வதால் பழம் பெரிதாகும், நெல்லில் பதர் இல்லாமல் கதிர்களில் மணி வைக்கும்.
 
இவ்வாறே மூலிகைப் பூச்சி விரட்டியை வேம்பு, நொச்சி, புங்கன், பிரண்டை சேர்த்து கற்றாழை இடிக்கப்பட்டு கோ ஜலத்தில் ஊற வைத்து 10 சதவிகிதம் வழங்குகிறார்.
 
யூரியாவின் மாற்றாக மீன் குணபம் “மச்ச குணப ஜலம்” என்ற பெயரில் வழங்குகிறார். ஒரு கிலோ மீன் வாங்கி ஒரு சின்ன மீன் பானையில் இட்டு மூடி மண்ணில் புதைத்து, பின் ஒரு கிலோ வெல்லத்தைத் தூள் செய்து மூன்று நாட்களுக்குப் பின் அப்பானை மீனுடன் கலந்து 20 நாட்கள் கழித்து எடுத்துப் பார்த்தால் தேன் போன்ற, மணமுள்ள திரவம் கிட்டும்.இதை 1/2 சதவிகிதம் அல்லது 1 சதவிகிதம் (100 லிட்டருக்கு 1 லிட்டர்) ஸ்ப்ரே செய்யலாம். மோர் கலந்த மூலிகை கரைசலும் தயாரிக்கிறார்.
 
இவ்வளவுக்கு மேல் ஜெயச்சந்திரனின் சிறப்பு பயோடைனமிக் (உயிராற்றல்) வேளாண்மை. இந்திய பஞ்சாங்கம் இந்தியாவிலிருந்து பிரான்ஸ் சென்று மீண்டும் இந்தியாவுக்கு வந்தது போல் தோன்றுகிறது. உயிராற்றல் வேளாண்மை என்று கிறுகச் சுழற்சியுடன் கோள்களின் ஆற்றல்களை வேளாண்மைக்குள் புகுத்தியவர் ருடால்ஃப் ஸ்டைனர். 18-19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்த பிரஞ்சு மேதை 1924ல் இறந்துவிட்ட பின்னர், 1984ல் “உயிராற்றல் விவசாயம்’ நூல் வடிவம் பெற்றது. தமிழ் நாட்டில் உயிராற்றல் விவசாயத்தைப் பரப்பியவர்களில் முதலாவது பி. விவேகானந்தன், வத்தலகுண்டு அருகில் உள்ள கெங்குவார்ப்பட்டி அருகில் உள்ள மேட்டுப்பாளையம் குறிஞ்சிப்பண்ணை நவநீதகிருஷ்ணனும் அரியன்னூர் ஜெயச்சந்திரனும் தங்கள் நிலங்களில் வெற்றிகரமாகச் செயல்படுத்தியவர்கள்.
 
இவர்கள் உயிராற்றல் வேளாண்மை பயிற்சியை விவசாயிகளுக்கு எளிய முறையில் வழங்குகிறார்கள். இதுபற்றி சுருக்கமாகக் கூறினால், கொம்புச்சாண உரம் தயாரிப்பது. கம்போஸ்ட் செய்த தொழுவுரத்தை பசுமாட்டுக் கொம்புகளில் அடைத்து நுனி வெளியே தெரியும்படி புதைத்துவிட்டு மறு ஆண்டு பயன்படுத்துவது. கிரகங்களில் சக்தியை பசுமாட்டுக் கொம்பு கிரகித்துக் கொண்டு கம்போஸ்ட் உரத்தை வீரியப்படுத்துகிறது. தவிர, 501, 500 + CPP திரவ உரம் உண்டு. கிரகங்களின் ஆற்றல்களை ஏற்கும் திரவங்களின் சாறுகள் அவை. இவற்றை உயிராற்றல் வேளாண்மைச் சங்கம் (குறிஞ்சிப்பண்ணை, கொடைக்கானல்) மூலம் பெறலாம். சில சொட்டுகள் விட்டால் போதுமாம். 
 
இந்த வேளாண்மை வெற்றி பெற உயிராற்றல் வேளாண்மை பஞ்சாங்கத்தை விவேகானந்தன் ஆண்டுதோறும் வெளியிடுகிறார். மேல்நோக்கு நாள்  கீழ்நோக்கு நாள் (வளர்பிறை, தேய்பிறை) என்று திட்டமிட்டு அதன்படி விதைத்தல், நடுதல், தெளித்தல் செய்ய வேண்டும். உயிராற்றல் வேளாண்மை உணவுக்கு கூடுதல் ருசி வழங்குகிறது.
 
ஜெயச்சந்திரன் பெருமையாகக் கூறும் விஷயம் அரியன்னூர் ஆல மரங்கள். அரியன்னூரின் தனிச்சிறப்பு பறவைகளால் உருவாக்கப்படும் பல்லுயிர்ப் பெருக்கத்தால் ஏரிகளில் நீர் வற்றுவதில்லை. எல்லாம் திறந்தவெளிக் கிணறுகளே. அந்த ஊரில் யார்ம ஆழ்துளை கிணறு இறக்காமல் மழை நீர் செமிப்பால் கிணறுகள் ரீசார்ஜ் ஆகின்றன. இவர் தலைவராயிருந்தபோது  அரியன்னூர் உயிர்ச்சூழல் கிராமமாக அறிவிக்கப்பட்டு மாநில அரசு பாராட்டு பெற்றுள்ளது.நல்ல தலைவன் இருந்தால் நாடு முன்னேறும் என்ற எண்ணம் ஜெயச்சந்திரனைப் பார்த்தால் ஏற்படுகிறது.
 
கலசப்பாக்கம்.

திருவண்ணாமலையிலிருந்து போளூர் செல்லும் சாலையில் 27 கிலோமீட்டர் கலசப்பாக்கம் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் புளியங்குடி ஆசான் கோமதிநாயகத்தின் வழிகாட்டுதல் உள்ளதுபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில்  கலசப்பாக்கம் அ. மீனாட்சிசுந்தரம். இவருக்கு உறுதுணையாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவரான ராஜேந்திரன் இப்பகுதி விவசாயிகளின் நலனுக்கு உழைத்து வருவதுடன் விவசாயிகளை இயற்கை வழிக்குத் தூண்டவும் செயல்பட்டு வருகிறார். 
WP_20131215_007
 
இவர் வயது 78. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 36 ஆண்டுகள் பணியாற்றியவர். 1965 முதல் விவசாயத்தில் ஈடுபட்டு பசுமைப் புரட்சியில் கையைச் சுட்டுக்கொண்டு மண்வளம் கெடுவதையும் மகசூல் குறைவதையும் கண்டு மாற்றுவழியில் சிந்தனை செய்யும்போது செங்கம் வளையாம்பட்டு வெங்கடாசலம், ஞானி கோ நம்மாழ்வார் தொடர்பால் 2000ஆம் ஆண்டு அளவில் மெல்ல மெல்ல இயற்க வழி விவசாயத்துக்கு மாறி ஒரு சாதனையாளராகவும் திகழ்கிறார்.
 
இயற்கை விவசாய வரலாற்றில் வளையாம்பட்டு வெங்கடாச்சலத்திற்கு பெரிய பங்குண்டு. இயற்கை விவசாயத்துடன் 1960களிலேயே விதைவங்கி உருவாக்கி பாரம்பரிய விதைகளின் சேமிப்பில் முதன்மை முன்னோடியாக திகழ்பவர் இவர். செங்கம் தாலூகாவில் வளையாம்பட்டு கிராமத்தில் மலைவாழ் மக்களிடமிருந்து ஏராளமான சிறுதானிய விதை சேமிப்புடன் ஆற்காடு கிச்சடி போன்ற அரிய நெல்வகைகளையும் சேமித்து வந்துள்ளார். எனினும் போதிய வசதியில்லாத சூழ்நிலையில் இவரை எம்.எஸ். சுவாமிநாதன் தொடர்பு கொண்டு இவருடைய விதை வங்கியை தன பொறுப்பில் ஏற்றுக்கொண்டு சுமார் பத்தாண்டுகள் கடந்துவிட்டன. இவரும் இவர் புதல்வரும் தீவிர இயற்கை விவசாயிகள்.
 
கலசப்பாக்கம் மீனாட்சிசுந்தரத்தின் இயற்கை விவசாயத்தில் வேர்க்கடலை கொடி ரகத்தில் ஒரு கொடியில் 200 கடலைகள் பெற்று சாதனை. பெருங்கார் நெல் சாகுபடியில் பயிர் 6 அடி வளர்ந்து திடமான கதிர்களைப் பெற்றும் சாதனை புரிந்தார். இந்தச் சாதனைகளை விவசாய ஏடுகள் பதிவு செய்துள்ளன.
 
மீனாட்சிசுந்தரத்தை வெங்கடாசலம் வடக்கே வார்தா, குஜராத்தில் வதோதரா போன்ற இடங்களுக்கும் கர்நாடகாவில் சில பகுதிகளுக்கும் கூட்டிச் சென்று பெற்ற செய்திகள் மூலம் சிறுதானிய சாகுபடியில் (small millets) இருசால் உழவில் 34 வகையான சிறுதானியங்களை விதைத்து மானாவாரியில் ஒரு ஏக்கர் 52000 லாபம் பெற்றதும் சிறப்பு.
 
இவர் ஏமாந்தது கரும்புச் சாகுபடியில்.போளூர் தரணி ஆலையை நம்பி 3.5 ஏக்கரில் கரும்புச் சாகுபடி செய்து வெட்டும் உத்தரவு வராததால் கரும்பு கருகி வீணானது. அதனால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்ட அந்த நிலத்தையே விற்கும் நிலை ஏற்பட்டதாம்.
 
காலம் செல்லச் செல்ல எல்லா விவசாயிகளும் சந்திக்கும் பிரச்சினை இவருக்கும் வந்தது. 100 நாள் வேலைத்திட்டம் காரணமாக இவர் வேண்டும் நேரத்தில் ஆள் கிடைக்காத காரணத்தால் 30 சென்ட் நிலத்தில் மட்டும் சொந்த உபயோகத்துக்கு நெல் பயிரிட்டுவிட்டு மற்ற எல்லா நிலங்களிலும் பழமர சாகுபடி முழுமையாகத் திட்டமிட்டுவிட்டார். எனினும் ஏற்கனவே 18 ஆண்டுகளுக்கு முன்பு ஈட்டி என்றும் தோதகத்தி என்றும் பெயருள்ள ரோஸ்வுட் என்ற பணமதிப்புள்ள மரம் நூற்றுக்கு மேல் நட்டு உயர்ந்து விட்டன. குறைந்தகால பயனுள்ள மலைவேம்பு இருநூறு தவிர நாட்டு மாமரம் வடுமாங்காய்ப் பயனுக்கென்றே நிறைய உண்டு. இந்தப் பெரியவர். அகர்பத்தி என்று கூறப்படும் அகில்மரம் ஐநூறுக்கும் மேல் நடப்பட்டுள்ளன. 40 தென்னை மரங்களுக்கு ஊடே மல்பெரி பட்டுப்பூச்சிகள் வளர்க்கவும் உதவும். 
 
ஆங்காங்கே வெளிச்சமுள்ள இடங்களில் கீரை, காய்கறி என்று மெருகுடன் திட்டமிட்ட இவர் விவசாயி என்ற சினிமா பாடலில் வரும் ‘ஏன் கை ஏந்த வேண்டும்?” என்ற கேள்வியை மேற்கோள் காட்டி தான் திட்டமிட்டுள்ளபடி வார வருவாய், மாத வருவாய், ஆண்டு வருவாய், அரிய வருவாய் என்று திட்டமிட்டுள்ளார். தனது தோட்டப் பாதுகாப்புக்கு கான்கிரீட் வேலியாக சிமெண்டுக் கம்பம் நட்டு வலைக்கம்பி போர்த்தி உட்பகுதியில் மூன்று அடி தள்ளி மூன்று அடிக்கு ஒரு பனங்கொட்டை நட்டு கன்று வளர்க்கிறார். பத்து ஆண்டுகளில் பலன் தரும்போது நூறடி ஆழத்தில் நீர் கிட்டும் என்றும் மேல்மட்டத்தில் பனைமரம் சிறந்த காற்றுத் தடுப்பாய் பணியாற்றும் என்றும் கூறுகிறார். நுங்கு விற்பனை நல்ல வருவாய். வடுமாங்காய் ஆண்டு வருவாய். பெரிய நட்சத்திர ஓட்டல்களுக்குரிய வடுமாங்காய் தேவையை நிறைவு செய்தால் லட்சக்கணக்கில் பணவரவு உண்டு என்கிறார் இந்தப் பெரியவர். பட்டு வளர்ப்பில் மாத வருவாய் உண்டு. அகிர் மரமும் ஆண்டு வருவாயாக பல லட்சங்கள் வழங்கும். ஐம்பது ஆண்டுகளுக்குப்பின் ரோஸ்வுட் அரிய வருவாய் தரும். இடையிடையே கொய்யா, பப்பாளி மூலமும் வருவாய் உண்டு. தற்சார்பும் தன்னிறைவும் பெற்றவர்களாய், தன்மானத்துடன் நம் பாரம்பரியம் காத்து மேன்மையுடன் வாழலாம். இவருடைய உரத் தேவைக்கு இவர் வளர்க்கும் நாட்டு மாடுகள் கோழைப்படாத மேழிச் செல்வமாயுள்ளது. 
 
கலசப்பாக்கத்தில் தன் பண்ணையை முன்மாதிரியாகக் காட்டி நாற்பது விவசாய கருத்தரங்குகளை நிகழ்த்தியுள்ளார். தான் பெற்ற இன்பத்தை வையம் பெற வேண்டுமென்று குறள் நெறிப்படி வாழ்வாங்கு வாழும் இவர் நூறாண்டுகாலம் வாழ்வாங்கு வாழ வாழ்த்துவோம்.

One Comment »

  • Rajasubramanian s said:

    Very inspiring and informative article.

    # 17 December 2013 at 2:10 am

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.