ஸீபால்டின் “பிரதி மேய்தல்கள்” இயல்பாகவே சற்று முரண்பாடானவை. ஒரு வகையில், அவை நிர்ணயிக்கப்பட்ட தொடக்கத்திலிருந்து முன்னதாகவே அறியப்பட்ட முடிவிற்கு நேர்க்கோட்டில் விரையும் வழமையான கதையாடலிலிருந்து மாறுபடுவதற்கான முயற்சிகள். ஆனால் இலக்கிய, வரலாற்று நாயகர்களின் நினைவுகள் மற்றும் கதைகளிலிருந்து காலம்காலமாக வரலாற்றிலும் இயற்கையிலும் “மீண்டும் மீண்டும்” பரவலாக நிகழும் அழிவின் “நிரந்தரத்தையே” இம்மேய்தல்களில் அகழ்ந்தெடுக்கிறார். அந்நிரந்தரமோ அவரது அக/புற உலகு மேய்தல்களை அர்த்தமற்றதாக்கி விடுகிறது.