எரியும் காடுகள் – 1

This entry is part 1 of 4 in the series எரியும் காடுகள்

நான் அங்கே இருந்து மூன்று வாரங்கள் ஆனபின்னரே அவர் அந்தத் தீவைப் பற்றிச் சொன்னார், என் கணக்கில் நாங்கள் உரையாடியதில் அது மூன்றாவது அல்லது நான்காவது தடவையாக இருக்கும். முதல் சில நாட்களுக்கு அவர் என்னை அணுகாமல் என் போக்கில் இருக்க விட்டார். அந்த ஓய்வு வாசஸ்தலத்தில் (அப்படி ஒரு வர்ணிப்பு பழைய காலத்து அர்த்தத்தில்தான் அந்த இடத்துக்குப் பொருந்தும். அது எங்கோ மலைகளடர்ந்த, எட்டாக்கையான ஒரு பிரதேசத்தில் இருக்கும், பாசி படர்ந்த, பழைய சிறுகுடில்களின் தொகுப்பாக இருந்தது) நான் சேர்ந்தபோது குளிராக, இருண்ட, மிக நேரமாகி விட்ட பின்மாலைப் பொழுதாக இருந்தது.