சங்கீத் சாம்ராட் மன்னா டே

பர்ஸாத் கி ராத் என்ற இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து 1960-ல் வெளிவந்த படத்தின் இசையமைப்பாளர் ரோஷன் பாடல்கள்- சாஹிர். பரத்பூஷண் – மதுபாலா ஜோடி. அதில் வரும் ஒரு கவாலிப் பாடல் mother of all qawalis  என்ற மகத்துவம் பெற்றது. ‘நா தோ காரவான் கி தலாஷ் ஹை’ தொடர்ந்து ‘ஹே இஷ்க் இஷ்க்’ என்று காதலின் பெருமையை உயர்த்தும் பாடலைப் பாடியவர்கள் ரஃபி, மன்னா டே, ஆஷா போன்ஸ்லே, பாடிஷ் (batish – qawali specialist) சுதா மல்ஹோத்ரா குழுவினர்.கண்டிப்பாக பாடலைக் கேட்டுப் பாருங்கள்.

கூறுகிறேன்…. முடிந்தால் கேளுங்கள் – 1

ரஃபி என்கிற புயல் திலீப் குமார், ஷம்மி கபூர் முதலிய சூப்பர் ஹீரோக்களுக்குப் பாடும் குரலாகையில் ராஜ் கபூருக்கு முகேஷும், தேவானந்துக்கு கிஷோரும் என்று பொருந்திப் போய் விட்டது. தலத் முகம்மதும், ஹேமந்த் குமாரும் மங்கிப் போகையில் ராஜ் கபூருக்கும், பால்ரஜ் சஹானிக்கும் பின்னணி பாடிய மன்னா டே அசரீரியாகவும், நகைச்சுவை நடிகர்களின் குரலாகவும் ஆகி விட்டார். ராஜேஷ் கன்னா என்கிற சூப்பர் ஸ்டாரின் வருகை மேதை கிஷோர் குமாரை முன்னணிக்குக் கொண்டு சென்று பிறரைப் பின்னுக்குத் தள்ளிய போதும் மன்னா டே இருந்தார்.