ஒளி – ஒரு குறுஞ்சரித்திரம்

இன்று நீங்கள் மருத்துவரைப் பார்ப்பதானால் கண்ணாடி மாற்றிக் கொள்ளவோ காண்டாக்ட் லென்ஸ் பொருத்திக் கொள்ளவோ கண் மருத்துவரை நாடுகிறீர்கள். அல்லது வெவ்வேறு இயந்திரங்களின் அலைவரிசைகள் உங்கள் உடலை ஊடுருவி கண்ணுக்குத் தெரியாத உறுப்புகளை, அவற்றின் இயக்கங்களை, ஒளி கொண்டு வரைந்து கொடுக்கின்றன- ஒளி என்றால் என்ன என்று யாரிடமாவது கேட்டால், அவர்கள் “அது ஒரு சக்தி”, “அது ஒரு வெப்பம்”, “அது நாம் பார்க்க உதவுகிறது” என்றெல்லாம் சொல்லக்கூடும். ஒளி என்றால் என்ன என்பதை நாம் யோசித்துப் பார்க்காமலேயே பதில் சொல்லக்கூடிய வகையில் அறிந்திருக்கிறோம், ஆனால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னர், இருபதாம் நூற்றாண்டின் துவக்கங்களில்தான் ஒளியின் அடிப்படைத் தன்மை என்ன என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது- மின் மற்றும் காந்த மண்டலங்களின் மிக நுட்பமான பின்னல் அது, ஒளி தன் இயல்பில் அலை போலவும் துகள் போலவும் பரவக்கூடிய தன்மை கொண்டது. இது குறித்த தேடலின் சாதனைகள் மற்றும் தேடல் நாயகர்களை அறிந்து கொள்ள ஒரு சிறு பயணம் மேற்கொள்வோம்.