எதிர்வளர்ச்சி

This entry is part 17 of 17 in the series 20xx கதைகள்

இயந்திரப் பொருளாதாரத்தினால் சில தலைமுறைகளாக நம் உடைமைகளின் எண்ணிக்கை அதி வேகத்தில் உயர்ந்து வருகிறது. அதற்கேற்ப நம் வருமானம் பணவீக்கத்தையும் தாண்டி அதிகரித்து இருக்கிறது. நமக்குப் புதுப்புது விருப்பங்கள். அவற்றில் பல அவசியங்களாக மாறிவிட்டன. அவற்றை நிறைவேற்ற புதுப்புது தொழில் நுட்பங்கள். நாளை இன்றைவிட சிறப்பாக இருக்கும் என்பது அரசியல் கோஷம் மட்டுமல்ல. அது ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பு, சமுதாயத்தின் முக்கிய அங்கம். புதிய தொழில் முயற்சிகளுக்கு அதுவே ஊக்கம். ஊர்திகள் வீடுகள் வாங்குவதற்குத் தேவையான கடன், ஓய்வுக்காலத்தில் உழைப்பில்லா வருமானம், உலகெங்கும் கூடிக்கொண்டே போகும் பங்குச் சந்தைகளின் மதிப்பு போன்ற பணத்தினால் அளக்கக்கூடிய எல்லா பரிமாற்றங்களுக்கும் அது தான் அஸ்திவாரம். அது இல்லை யென்றால் வர்த்தக மற்றும் அரசியல் நிறுவனங்களின் திட்டங்களும் இல்லை.