காவிய ஆத்மாவைத் தேடி… – 2

This entry is part 2 of 3 in the series காவிய ஆத்மாவைத் தேடி

ஒரு கவிதை வரி வருகிறது. ‘சந்தனுவுக்குக் கங்கையில் வீடு’ என்று. சந்தனு பற்றி மகாபாரதம் மூலமாகத் தெரிந்துள்ளதால், கங்கையை மணந்தவன் சந்தனு என்று நாம் பெற்ற இதிகாசப் படிப்பறிவால், சந்தனுவுக்குக் கங்கைக் கரையில் வீடு என்ற இலக்கணப் பொருளை விட மூன்றாவது விதமாக ஒரு பொருள் நமக்கு ஸ்புரிக்க முடியும். அதாவது ‘கங்கையைத் தன் மனைவியாகக் கொண்டவன்’ என்று. இந்தப் பொருளை ‘கங்கையில் வீடு’ என்ற சொற்றொடர் நேரிடையாகவோ, தொடர்பு முறையாகவோ – அபிதையாகவோ, இலக்கணையாகவோ உணர்த்தாது. படிப்பவருடைய இதிகாச அறிவு, சொல்லப்பட்ட பெயர், சொல்லவந்த பொருளின் முன் பின் தொடர்ச்சி, சூழல் இவற்றையெல்லாம் பொருத்து, தேர்ந்த ரசனை உணர்வு காரணமாக, சொல்லாமல் சொன்ன பொருளாக, படிப்பவர் மனத்தில் பட்டெழுகின்ற பொருளாக அறியக் கிடக்கும். இந்த அர்த்தத்திற்கு ‘த்வனி’ என்று பெயரிட்டார் ஆனந்தவர்த்தனர்.