காரியம்

அவனது பேச்சு செய்யும் தொழில் பற்றி தாவியது. மரியாதைக்குக் கூட அவன் என்னைப் பற்றி விசாரிக்காமல் இருப்பது எனக்கு துக்கம் தருவதாக இருந்தது. தொழிலில் அவனது சாம்ராஜ்யம் எப்படி நீண்டது என்று குறித்து விளக்கும் போது என்னிடம் இருந்த வெள்ளரி தீர்ந்து போயிருந்தது. இதை எப்படி அவன் கவனித்தான் என்று தெரியவில்லை அவனிடம் இருந்த பொறித்த சிக்கன் துண்டுகளை கொண்ட தட்டை என்னிடம் தள்ளினான். நான் மறுக்காமல் எடுத்துக்கொள்வேன் என்று நினைத்துவிடக்கூடாது என்பதால் மறுத்தேன். இதை எடுக்காவிட்டால் நம்மிருவருக்கிடையே இனி ஒட்டுமில்லை உறவுமில்லை என்று எழ முற்பட்டான். நான் சிக்கனை எடுத்துவிட்டேன் ஆனால் வாயில் வைக்கவில்லை. வெகுநேரம் அப்படியே இருந்ததால் மீண்டும் கோபித்துக்கொண்டான். சிக்கனை எடுத்து வாயில் வைத்ததும்தான் மீண்டும் இயல்பானான்.