பெரும் மௌனம்

அலெக்ஸ் என்ற ஆஃப்ரிக்க சாம்பல் நிறக் கிளி இருந்தது. அந்தக் கிளி அதன் அறிவுத் திறனால் புகழ் பெற்றதாக இருந்தது. அதாவது, மனிதர்களிடையே புகழ்.
ஐரீன் பெப்பர்பெர்க் என்ற மனித ஆய்வாளர் அலைக்ஸை முப்பதாண்டுகள் கவனித்து ஆராய்ந்தவர். அவர் அலெக்ஸுக்கு வடிவங்களுக்கும், நிறங்களுக்கும் உள்ள சொற்கள் தெரிந்திருந்தன என்பதோடு, அவனுக்கு வடிவுகள், நிறங்கள் ஆகியவற்றின் கருத்துருக்களும் புரிந்திருந்தன என்றும் கண்டறிந்திருந்தார்.
ஒரு பறவையால் அரூபமான கருதுகோள்களைப் புரிந்து கொள்ள முடியும் என்பது பற்றிப் பல அறிவியலாளர்கள் ஐயம் கொண்டிருந்தனர். மனிதர்களுக்குத் தாம் ஏதோ தனிச் சிறப்புள்ள உயிரினம் என்று நினைக்கப் பிடிக்கும். ஆனால் இறுதியில் பெப்பர்பர்க் அவர்களை அலெக்ஸ் வெறுமனே சொற்களைத் திருப்பிச் சொல்லவில்லை, அவனுக்குத் தான் என்ன சொல்கிறோம் என்பது புரிந்திருந்தது என்று ஏற்க வைத்தார்.