சினிமாவும் ஆண் பார்வையும்

முதலாவதாக ஊடகங்களின் ஆண்பார்வையில் பெண்கள் செயலற்ற,மந்தமான, உடமையான, பாலியல்  பொருளாகவே பயன் படுத்தப்படுகிறார்கள். இரண்டாவதாக பெண்கள் எவ்வாறு தம்மைத்தாமே பார்க்கிறார்கள் என்பதாகும். மூன்றாவதாக பெண்கள் மற்றைய பெண்களை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதாகும். பெண்களில் ஒரு பகுதியினர் ஆண்பார்வையில்  தங்களது செயலான்மையை விளங்கிக் கொண்டாலும், பெரும் பகுதியினர் ஆணாதிக்க ஆண்பார்வைக்கே பலியாகிப் போகிறார்கள். அப்பார்வையே இயல்பானது எனவும் நம்புகிறார்கள். அழகு, கவர்ச்சி என சில பெண்கள் தமது உடலமைப்பு குறித்து அதீத கவனம் செலுத்துவதைத் காணலாம். குறிப்பாக இளம் வயதினரின் தமது உணவை தவிர்த்து உடல் எடையை குறைப்பார்கள். முழு கவனமும்  உடலின் எடை, அளவு (shape and size) என்பதாகவே இருக்கும். இறுதியில் உடல்நலத்திற்கு அவசியமான கலோரியினை இழப்பதினால் கனியுப்புகள், விற்றமின்கள் குறைபாடும் ஈமோகுளோபின் குறைபாடும் ஏற்பட்டு நோயாளியாகிறார்கள். இதனை eating disorder என்று அழைப்பர். இது ஆணாதிக்க கருத்தாக்கத்தின் பின்புலத்தில் உருவாக்கப்படும் ஆண்பார்வையை ஏற்றுக்கொண்ட பெண்களின் விழிப்புணர்வின்மை அல்லது அறியாமை என்பதுடன் மனநிலை பாதிப்பிற்கே இட்டுச் செல்கிறது எனலாம்.