புதுமைப்பித்தன் எனும் அறிவன்

புதுமைப்பித்தன் இறந்து சரியாக முக்கால் நூற்றாண்டு ஆகிவிட்டது என்ற அடிப்படையில் புதுமைப்பித்தனும் ஒரு ‘வரலாறு’ (அவர் தன்னைப்பற்றி ‘வாழ்ந்துகெட்ட வரலாறு’ என்று சொல்வாராயிருக்கும்) என்று கொள்ளத்தக்கவரே. புதுமைப்பித்தன் குறித்து இலக்கிய விமர்சகன் அல்லது எழுத்தாளன் என்ற அடிப்படையில் அவரை அழகியல் ரீதியாக மதிப்பிடுவதுதான் என் வேலையாக இருக்க முடியும். அவர் எழுதியவற்றில் இன்றும் எஞ்சுவது எது என்பதைப் பார்க்க வேண்டியதே சமகாலத்தவர்களாக நம்முடைய முதன்மையான நோக்கம். ஆனால் இலக்கியம் என்பது சமூகத்துடனும் தொடர்புடைய கலையாக இருக்கிறது. எல்லை கடந்து இலக்கியம் ‘சமூகத்துக்குப் பயன்தர வேண்டும்’ என்றெல்லாம் கூட சொல்லப்பட்டது. ஆனால் இலக்கியம் முதன்மையாக வாசகருக்கு ஒரு அனுபவத்தை வழங்குவதன் வழியாக அவருக்குள் விழுந்திருக்கும் சில முடிச்சுகளை அவிழ்க்கிறது. அவர் போதத்தை இன்னும் சற்று கூர்மைப்படுத்துகிறது.