இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம்- நேர்காணல்

This entry is part 7 of 22 in the series இசைவாணர்

பிறந்து வளர்ந்ததெல்லாம் திருவாரூரில். திருவாரூர் இசையும், குறிப்பாக லயமும் என்னைச் சுற்றி எப்போதும் முயங்கிய அற்புதமான ஊர். கண் விழித்ததிலிருந்து உறங்கச் செல்வது வரை வெவ்வேறு வகையான தாளங்கள் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். தியாகராஜர் உற்சவ மூர்த்தியாய் வலம் வரும் போது ஆடப்படும் அஜபா நடத்திற்கொரு லயம்; சிவன் மயானம் நோக்கி செல்கையில் ‘மசான பத்திரம்’ என்று வேறொரு லயம்; ஊர்வலங்களில் வாசிக்கப்படும் வெவ்வேறு வகையான மேள வாசிப்புகள், இறப்பின் போது கேட்கும் பறை, காளி கோயிலில் கேட்கும் உடுக்கை என வெவ்வேறு தாளங்கள் என்னைச் சுற்றிக் கேட்டுக்கொண்டே இருக்கும்.