கருக்கலைப்பு உரிமை- அமெரிக்க அரசியலின் வினோதங்கள்

இவர்களில் கணிசமானோர் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள். வேலை இழப்பு, குடும்ப வன்முறை காரணமாக தனித்து விடப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள், பொருளாதார பின்னடைவில் சிக்கியவர்கள் என பட்டியல் நீளுகிறது. இந்த தீர்ப்பின் மூலமாக இனி இவர்கள் கருக்கலைப்பு செய்து கொள்ள முடியாதவர்களாகி விடுவர். இந்த வருடத்தில் மட்டும் 100,000 பெண்கள் கருக்கலைப்பு செய்ய முடியாதவர்களாகி விடுவர் என்றொரு ஆய்வறிக்கை கூறுகிறது. இதனால் இந்தப் பெண்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிவரும். இவர்களின் மனநிலை மற்றும் உடல்நிலை பாதிப்புகள், பொருளாதார சிக்கல்கள், விருப்பமில்லாத உறவில் நீடிக்க வேண்டிய கட்டாயம், குழந்தைகள் பிறந்த பின்னர் அவர்களை வளர்க்க போதுமான ஆதரவில்லாத நிலமை என பெண்களுக்கான பாதிப்புகளுக்கான தீர்வுகள் அல்லது மாற்றுத் திட்டங்கள் எதனையும் இந்த தீர்ப்பு பேசவே இல்லை.இச்சட்டம் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களைக் கூட கருத்தில் கொள்ளவில்லை என்பதே பெண்களின் மீதான வன்முறை தான். மேலும், கருத்தடை செய்து கொள்பவர்களுக்கும் கருவைக் கொன்ற குற்றவாளியாக கருதி தண்டனைகள் வழங்குவதும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி.