வரலாறும் பொறுப்புணர்வும்

இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் ஜெர்மனி இழைத்த கொடுமைகள், உக்ரெய்ன் எதிர்கொண்ட கொடூரங்கள், இவற்றின் பின்னணியில் உள்ள
யூரோப்பிய கொள்கைகள், கோட்பாடுகள்- இவை நமக்கு ஏன் முக்கியமாக இருக்க வேண்டும்? யூரோப்பிய மோதல்களின் வரலாற்றை நாம் ஏன் வாசிக்க வேண்டும்? ஜெர்மனியின் பாராளுமன்றத்தில் திமோதி ஸ்னைடர் 20.6.2017 அன்று ‘Germans must remember the truth about Ukraine – for their own sake‘ என்ற தலைப்பில் ஆற்றிய உரையில் உக்ரெய்ன் விஷயத்தில் ஜெர்மனியின் வரலாற்றுப் பொறுப்பு பற்றி அவர் பேசுகிறார். வரலாற்றுப் பொறுப்பை ஏன் பேச வேண்டும், அதிலும் குறிப்பாக ஜெர்மனிய வரலாற்றுப் பொறுப்புணர்வை ஏன் பேச வேண்டும், என்ற கேள்வியை எதிர்கொள்ளும் ஸ்னைடர் முதலில் ஒரு பொதுப் பார்வையை முன்வைக்கிறார்.