நசுக்கப்படும் குரல்வளைகள்

என் தாத்தா பதவியிலிருந்து தூக்கியெறிப்பட்டு, அவருக்குப் பென்ஷனும் மறுக்கப்பட்டிருந்தது. அது சில அரசியல் காரணங்களுக்காக, அவர் சொன்ன கருத்துகளுக்காக. அவர் மொழியியல் துறையின் தலைசிறந்த பேராசிரியர்களில் ஒருவர். 23 மொழிகள் அவருக்குத் தெரிந்திருந்தது. கடும் உழைப்பாளி. எப்போதும் அவரை மாணவர்களும், நண்பர்களும் சூழ்ந்திருப்பார்கள். ஆனால் அவர் ஒரு ‘அரசியல் துரோகி’யாக அறிவிக்கப்பட்டபின் அவரை ஒருவர் கூட வந்துபார்க்கவில்லை. ஒருவரும் அவர் உதவிக்கு வரவில்லை. தனிமை சூழ்ந்த வருடங்களில் கொஞ்ச கொஞ்சமாக அவர் மனநிலை சிதையத் தொடங்கியது.