நசுக்கப்படும் குரல்வளைகள்

நீதிபதி: பொதுவாக நீ என்ன தொழில் செய்துகொண்டிருக்கிறாய்?

குற்றம்சாட்டப்பட்டவர்: நான் ஒரு கவிஞன், இலக்கிய மொழிபெயர்ப்பாளன்.

நீதிபதி: யார் உன்னைக் கவிஞனாக அங்கீகரித்தது? யார் உன்னைக் கவிஞர்களின் பட்டியலில் உறுப்பினராகச் சேர்த்தது?

குற்றம்சாட்டப்பட்டவர்: யாருமில்லை. யார் என்னை மனிதர்களின் பட்டியலில் ஒருவனாகச் சேர்த்தது?

நீதிபதி: நீ இதைக் கற்றுக்கொண்டாயா?

குற்றம்சாட்டப்பட்டவர்: எதை?

நீதிபதி: எப்படிக் கவிதை எழுதுவது என்பதை. நீ உயர்நிலைப்பள்ளிக் கல்வியைக் கூடப் படித்து முடிக்கவில்லை போலிருக்கிறதே? அங்கேதானே இதைச் சொல்லிக்கொடுக்கிறார்கள்? தயார் செய்கிறார்கள்?

குற்றம்சாட்டப்பட்டவர்: இதைப் பள்ளியில் கற்றுக்கொள்ளமுடியும் என நான் நினைக்கவில்லை.

நீதிபதி: பிறகெப்படி?

குற்றம்சாட்டப்பட்டவர்: இது… கடவுளிடமிருந்து வருகிறது என நான் நினைக்கிறேன்.

brodskyமேற்கண்ட விசாரணை நடந்தது ரஷ்யாவில். குற்றம்சாட்டப்பட்டவர் ஜோஸஃப் ப்ராட்ஸ்கி என்ற கவிஞர். 1987-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்றவர். விசாரணை நடந்த வருடம் 1964. அந்த வருடம் ரஷ்ய கலை, இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கியமான வருடம். அந்த வருடம்தான் லியோனீத் ப்ரெஷ்னெவ் (Leonid Brezhnev) ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜெனரல் செக்ரட்டரியாகவும், நாட்டை வழிநடத்திச் செல்லும் தலைவராகவும் பொறுப்பெடுத்துக்கொண்டார். 1964-ஆம் வருடம் தொடங்கி 1982-ஆம் வருடம் அவர் இறக்கும்வரை ரஷ்யா அவர் பிடியில் இருந்தது. அதைப் போலவே ரஷ்யக் கலை, இலக்கிய உலகமும். இக்காலம் ஸ்டாலினுக்குப்பின் ரஷ்ய இலக்கியத்தின் இருண்ட காலம் என்றே சொல்லவேண்டும். அதற்கான உதாரணம்தான் மேலே கொடுக்கப்பட்ட விசாரணை உரையாடல். நோபல் பரிசு பெறக்கூடிய அளவுக்கு முக்கியமான கவிஞராக விளங்கிய ஒருவரை, ‘பள்ளிப்படிப்பையே முடிக்காத நீ எப்படி கவிஞனாக முடியும்?’ என்று ‘விசாரித்த’ காலம்.

ஜோஸஃப் ஸ்டாலின் ரஷ்யத் தலைவராகப் பொறுப்பேற்றபின் நடந்த அடக்குமுறைகள் இன்று உலகெங்கும் அறியப்பட்ட விஷயங்கள். அலெக்ஸாண்டர் சோல்ஸெனிட்ஸின் போன்ற மாபெரும் எழுத்தாளர்கள் கடும் உழைப்புச்சிறைகளில் – அதாவது குலாகுகளில் – அடைத்துச் சித்திரவதை செய்யப்பட்டார்கள். ரஷ்யாவின் உண்மையான, துயரடைந்த ஏழ்மை நிலையைச் சித்தரித்தவர்கள், கொடுங்கோலாட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்கள். அல்லது வெளியுலகுக்கே தெரியாமல் ‘நீக்கப்பட்டார்கள்’. இவர்களுடைய அரசாங்க ஆவணங்கள், புகைப்படங்கள், எழுத்துகள் ஒன்றுவிடாமல் அழித்தொழிக்கப்பட்டன. இப்படி வெளியுலகின் கவனத்துக்கே வராமல் மறைக்கப்பட்ட எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் எத்தனை எத்தனையோ!

ஸ்டாலின் மறைவுக்குப்பின் குருஷ்சேவ் தலைமைப் பொறுப்புக்கு வந்தபின் ஓரளவு இந்தநிலை மாறியது. தணிக்கை விதிகள் குறைக்கப்பட்டன. பல சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் குலாகுகளிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். பல எழுத்தாளர்கள் ஒளித்துவைத்திருந்த கைப்பிரதிகளைப் பிரசுரித்தார்கள். கலை, இலக்கியம், சிந்தனையுலகம் மெதுவாகத் துளிர்க்கத்தொடங்கியது. 1953-இலிருந்து 1964-வரை குருஷ்சேவ் ஆட்சி செய்த இக்காலம் ‘குருஷ்சேவ் தளர்வு‘என்றழைக்கப்படுகிறது. நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும், குளிர்பதனப்பெட்டியில் வைத்தோ, இயற்கையாகவோ உறைந்திருக்கும் பொருட்களை, வெளியில் வைத்து அறை வெப்பநிலைக்குக் (room temperature) கொண்டுவரும் செய்கையை ‘thaw’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அந்த வினைச்சொல்லை ‘தளர்வாக்குதல்’ என்றும் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். 1954-இல் இலியா ஏரன்பர்க் எழுதிய ‘The Thaw’ என்ற இப்படி இருபொருளைச் சுட்டும் நாவல் தலைப்பால் இக்காலம் குறிக்கப்படுகிறது. ஆனால் இக்காலத்திலும் முற்றிலும் சிந்தனைச் சுதந்திரம் வந்துவிடவில்லை. 1958-இல் போரிஸ் பாஸ்டர்நாக்குக்கு ‘டாக்டர் ஷிவாகோ’ நாவலுக்காக நோபல் பரிசு கிடைத்ததைத் தொடர்ந்து, அவரை ஒரு தேச துரோகியாக கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. கட்சியின் தூண்டுதலின் பேரில் பல ‘மக்கள்’ போராட்டங்களும் நடத்தப்பட்டன. அவரை நாடு கடத்தப்போவதாகப் பரவலான யூகங்கள் எழுந்தபோது அவர், “என் தாய்நாட்டை விட்டுப்போவது மரணத்துக்குச் சமம்,” என்று அதிபர் குருஷ்சேவுக்குக் கடிதம் எழுதினார். அவர் நாடுகடத்தப்படாவிட்டாலும், இறுதிக்காலத்தைத் தனிமையிலும், நோயிலும் கழித்து இறந்தார். இது போன்ற கொடூரங்கள் இருந்தாலும் பொதுவாக இக்காலம் ஓரளவு அடக்குமுறைகளைக் குறைவாகச் சந்தித்த காலம்தான்.

குளிர்பதனப்பெட்டியில் வைக்கப்பட்ட உணவுப்பொருட்களை வெளியே எடுத்து, தளர்வாக்கியபின் சில உணவுப்பொருட்கள் முழுவதுமாக உட்கொள்ளப்படும். சில பொருட்கள் மீண்டும் பெட்டிக்கே திரும்பி உறைநிலைச் சூழலுக்குச் செல்லும். குருஷ்சேவ் காலத்து ரஷ்யர்களின் தலைவிதி இரண்டாம் வகைப் பண்டங்களை ஒத்திருந்தது. உறைநிலையிலிருந்து வெளியே எடுத்துத் தளர்வாக்கப்பட்ட ரஷ்யர்கள், ப்ரெஷ்னெவ் ஆட்சியில் மீண்டும் உறைநிலைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்கள். 1964-இல் குருஷ்சேவ் மறைவுக்குப்பின் ஆட்சிக்கு வந்த லியோனீத் ப்ரெஷ்னெவுக்கு ஸ்டாலினின் அடக்குமுறைதான் ஆதர்சம். மீண்டும் பல எழுத்தாளர்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டனர்; நாடுகடத்தப்பட்டனர்; கொடுஞ்சிறையில் தள்ளப்பட்டனர்; பலர் என்ன ஆனார்களென்றே தெரியாமல் மாயமாய் ‘மறைந்து’ போனார்கள். அவர்களில் ஒருவர்தான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் பள்ளிச்சிறுவனைப்போல் விசாரிக்கப்பட்டக் கவிஞர் ஜோஸஃப் ப்ராட்ஸ்கி.

இப்படியான ‘ப்ரெஷ்னெவ் உறைவுக்காலம்’ (Brezhnev freeze) ஆண்ட்ரே சின்யாவ்ஸ்கி, யூலி தானியேல் என்ற இரண்டு எழுத்தாளர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட காலத்திலிருந்து ஆரம்பமானது. அலெக்ஸாண்டர் ஸோல்ஷெனிட்ஸின் 1974-ஆம் ஆண்டு ரஷ்யாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆண்ட்ரே அமெல்ரிக், அலெக்ஸாண்டர் காலிச், லெவ் கோபெலெவ் போன்றோர் ரஷ்யாவுக்குள்ளிருந்தே போராடி KGB-யால் சிறைபிடிக்கப்பட்ட எழுத்தாளர்கள்.

இக்காலத்தில் பொதுவாகவே பத்திரிகையில் எழுதும் எல்லா எழுத்தாளர்களும் வெகு நுணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டார்கள். சிறு சலனம், சந்தேகம் ஏற்பட்டாலும் அவர்கள் ‘writer non grata’ என்று அறிவிக்கப்பட்டுவிடுவார்கள். இப்படி அறிவித்தால் என்ன ஆகும்? ரஷ்யாவில் வேறு எந்த பத்திரிகையுமே அவர்களைத் தீண்டாது. அவர்கள் படைப்புகள் பிரசுரமாகாது. அவர்கள் எழுத்து வாழ்க்கையே முடிவுக்கு வந்ததன் குறியீடுதான் அது. அடுத்து அப்படி ‘தடை செய்யப்பட்ட’ எழுத்தாளர்கள் மேலும் தீவிரமாகக் கண்காணிப்படுவார்கள். அவர்களுக்கென்று KGB-யில் தனியாக ஒரு கோப்பு திறக்கப்படும். (“உன் பெயரில் KGB-யில் ஒரு கோப்பு திறக்கப்பட்டிருக்கிறது,” என்று சொல்வது அக்கால ரஷ்யாவில் ஆகப்பெரிய மிரட்டல்.) பிரபலமான எழுத்தாளர்கள் தங்கள் கைப்பிரதிகளை எப்படியோ மேற்குலகுக்குக் கடத்தி, பிரசுரித்து, பின் கைதாகி ரஷ்யாவை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் அல்லது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். ரஷ்யாவில் இப்படிப்பட்ட கொடுமையான தணிக்கை விதிகள் இருப்பதையே இப்படிக் கைப்பிரதியைக் கடத்திப் பிரசுரித்த எழுத்தாளர்கள் மூலமும், நாடுகடத்தப்பட்ட எழுத்தாளர்கள் மூலமும்தான் தெரியவந்தது.

ஆனால் அப்போதுதான் எழுதத்துவங்கிய, பின்புலம் இல்லாத எழுத்தாளர்களின் கதி? அவர்கள் ப்ரெஷ்னெவ் 1982-ஆம் ஆண்டு சாகும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அதாவது 18 ஆண்டுகள். (1964 – 1982 வரை ப்ரெஷ்னெவ் ரஷ்ய அதிபராக இருந்தார்.) இவ்வாறு 1982-க்குப் பின் சில எழுத்தாளர்கள் ‘புதிதாகக்’ கண்டுகொள்ளப்பட்டார்கள். அவர்களில் ஒருவர் பெண் எழுத்தாளர் ல்யூட்மிலா பெத்ரூஷெஃப்ஸ்கா.

lydmila

இவருடைய சிறுகதைகள் இரண்டே இரண்டு ரஷ்ய பத்திரிகைகளில் வெளிவந்தபின் இவர் தடைசெய்யப்பட்ட எழுத்தாளராக அறிவிக்கப்பட்டார். அப்படியென்ன அந்த இரண்டு சிறுகதைகளில் எழுதிவிட்டார் ல்யூட்மிலா? கம்யூனிஸ விமர்சனமா? KGB-யைக் குறித்த கிண்டலா? எதுவும் இல்லை. ரஷ்யாவின் தினப்படி வாழ்க்கையை உள்ளது உள்ளபடி எழுதிவிட்டார். அந்த வாழ்க்கையின் ஏழ்மையை, தனிமனித உறவுகளுக்கிடையே நிலவிய கசப்பை, நம்பிக்கையின்மையை எழுதிவிட்டார். ரஷ்யா ஒரு வளம் கொழிக்கும் பூமி, புரட்சியால் விளைந்த பூலோக சொர்க்கம், அங்கே மனிதர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் போன்றவை மட்டுமே பிரசுரிக்கத்தகுந்த எழுத்துகள். அவை மட்டுமே திரும்பத் திரும்ப பத்திரிகைகளில் பிரசுரமாகின. ல்யூட்மிலா எழுதியதைப் போல நிஜ வாழ்க்கையைச் சித்தரித்த படைப்புகள், அவை என்னதான் அரசியல் கலக்காமல் எழுதப்பட்டாலும் அவை தடைசெய்யப்படவேண்டிய எழுத்துகளே!

இத்தனைக்கும் வெளிப்படையாகவே அரசியலைக் குறித்துப் பேசுவதோ, எழுதுவதோ இல்லை என்று ல்யூட்மிலா முடிவெடுத்திருந்தார். கம்யூனிஸ்ட் கட்சிக்காகப் பாடுபட்ட, மொழியில் அறிஞரானத் தன் தாத்தா கடைசி காலத்தில் கட்சியால் ‘துரோகி’ முத்திரை குத்தப்பட்டு மனநிலை சிதைந்து இறந்ததை அருகிலிருந்து பார்த்தவர் ல்யூட்மிலா. பல உறவினர்களும் ஸ்டாலின் காலத்தில் கைது செய்யப்பட்டுத் துன்புறுத்தப்பட்டதைப் பார்த்திருந்ததால் அரசியல் எழுத்துப் பக்கம் செல்லக்கூடாது என்று கவனமாக இருந்திருக்கிறார். இருந்தும் அவர் சித்தரித்த குடும்ப வாழ்க்கையின் துயரம், ரஷ்ய நிஜ வாழ்க்கையை ஆவணப்படுத்துவதாக இருந்தது. அதனால் தடை செய்யப்பட்டார். கதையின் முடிவுகளை ‘சந்தோஷமாக’ மாற்றிவிட்டால் கூட, அவற்றைப் பிரசுரிக்க முடியும் என்று பத்திரிகைகள் தெரிவித்த பின்னும் அதற்கு இணங்கவில்லை அவர். பிறகு குறைவான தணிக்கைகள் நிலவிய நாடகங்கள் எழுதத் தொடங்கினார். அவை கூட ஆரம்ப காலத்தில் தரையடிக் கிடங்குகள், நாடக மேடைகளின் பின்புறங்கள் போன்ற பொது வாழ்க்கையின் பார்வையிலிருந்து மறைந்திருந்த இடங்களிலேயே நடந்தன.

ல்யூட்மிலாவின் இந்தத் துயர் மிகுந்த சிறுவயது நினைவுகளும், அவர் சந்தித்த தணிக்கைகளும் ப்ரெஷ்னெவின் மறைவுக்குப்பின் முதன் முதலில் அவர் கொடுத்த பேட்டியிலிருந்துதான் தெரிய வந்தது. அப்பேட்டியின் சில பகுதிகளைப் படித்தால் கூட ரஷ்ய எழுத்தாளர்களின் வாழ்க்கை நிலையையும், பொதுவாகவே மக்கள் எவ்விதமான வாழ்க்கையை வாழ்ந்திருந்தார்கள் என்பதையும் அறியலாம்.

உங்கள் சிறு வயது நினைவுகள்…

ல்யூட்மிலா: எனக்குப் பத்து வயதாகியிருந்தபோது (1948) நான் எல்லா விதமான நரகங்களையும் பார்த்துவிட்டேன் என நினைக்கிறேன். எட்டு வருடங்களுக்கு, நான், அம்மா, தாத்தா மூவரும் 12 சதுர மீட்டர் அளவேயிருந்த ஒரு சிறு அறையைத்தான் பகிர்ந்துகொண்டோம். என் தாத்தாவின் பெரிய வீட்டிலிருந்து எங்களுக்கு எஞ்சியது அதுதான். அதே அறையில்தான் என் தாத்தாவின் ஐந்தாயிரம் புத்தகங்களுக்கும் இடம் ஒதுக்கவேண்டியிருந்தது. என் தாத்தா பதவியிலிருந்து தூக்கியெறிப்பட்டு, அவருக்குப் பென்ஷனும் மறுக்கப்பட்டிருந்தது. அது சில அரசியல் காரணங்களுக்காக, அவர் சொன்ன கருத்துகளுக்காக. அவர் மொழியியல் துறையின் தலைசிறந்த பேராசிரியர்களில் ஒருவர். 23 மொழிகள் அவருக்குத் தெரிந்திருந்தது. கடும் உழைப்பாளி. எப்போதும் அவரை மாணவர்களும், நண்பர்களும் சூழ்ந்திருப்பார்கள். ஆனால் அவர் ஒரு ‘அரசியல் துரோகி’யாக அறிவிக்கப்பட்டபின் அவரை ஒருவர் கூட வந்துபார்க்கவில்லை. ஒருவரும் அவர் உதவிக்கு வரவில்லை. தனிமை சூழ்ந்த வருடங்களில் கொஞ்ச கொஞ்சமாக அவர் மனநிலை சிதையத் தொடங்கியது. அவர் தூக்கம் வராத insomnia வியாதியால் அவதிப்பட்டு, இரவில் அந்த இருளில் அழுவார். ஒரு சிறிய அறையை எங்களோடு பகிர்ந்துகொண்டததால் insomnia வியாதி இருந்தாலும், அவரால் விளக்கைப் போட்டுப் புத்தகங்கள் படித்து அந்த துயரைப் போக்கிக்கொள்ளவும் வழியில்லாமல் போனது. எனவே சுதந்திரமான இடமில்லாத அவருக்கும், நிம்மதியில்லாத இரவைக் கழிக்க வேண்டிய எங்களுக்கும் அது ஒரு சிறு குலாக் போல இருந்தது. 1956-க்குப் பின் 15 வருடங்கள் அவர் மனநல மருத்துவமனையில் கழிக்கவேண்டியிருந்தது.

இவற்றிலிருந்து தப்பித்துக்கொள்ள ஒரு சிறுமியாக உங்களுக்கு என்ன வழிகள் இருந்தன?

நாளின் பெரும்பகுதியை நான் நூலகங்களில் புத்தகங்களில் படிப்பதில் செலவழித்தேன். நூலகம் மூடி வீட்டுக்கு வந்தால் என்ன செய்வதென்று புரியாமல் போகும். என்னைப் போல ஆயிரக்கணக்கான சிறுவர்கள் இருந்தார்கள். எங்களுக்கு இரண்டு வழிகள்தான் இருந்தன. ஒன்று நூலகத்துக்குப் போவது. இல்லை தெருவில் சுற்றுவது. தொழிலாளர்களுக்கும், அறிவுஜீவிகளுக்கும் வேறுபாடு அங்கேயே வந்துவிட்டது. அறிவுஜீவிகளின் பிள்ளைகள் நூலகங்களிலும், தொழிலாளர்களின் பிள்ளைகள் தெருவிலும் சுற்றிக்கொண்டிருக்கும். தெருவில் சுற்றிக்கொண்டிருக்கும் பிள்ளைகள் சண்டை போட்டுக்கொண்டு, திருடிக்கொண்டு, குடித்துக்கொண்டு இருக்கும். இந்த இரண்டு வர்க்கங்களுக்கிடையே தொடர்பே இல்லை. என் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருக்கும் பிள்ளைகளோடு ஒட்டமுடியாமல் தனிமையில் அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தது நினைவுக்குவருகிறது. அந்த விலக்கத்திலிருந்துதான், அவர்களோடு பழக முடியவில்லையே என்ற குற்ற உணர்விலும்தான் எளிய மனிதர்கள் மீதான என் கவனமும், அன்பும் வந்தது என நினைக்கிறேன். ஒரு சிறுமியாக எனக்கு மறுக்கப்பட்ட உலகத்தை ஒரு எழுத்தாளராக நெருங்கி, அவர்களுடைய மொழியையும், துயரத்தையும் எழுத நினைக்கிறேன்.

அதுதான் உங்கள் எழுத்தின் முக்கியமான அம்சம். ஒரு எழுத்தாளராக நீங்கள் அரசியல் சமூக நிலைகள் குறித்து நேரடியாக எழுதவில்லை. எல்லாமே வீடு, குடும்பம், அலுவலகம் என நெருங்கிய பார்வையிலிருந்து சொல்லப்படுகிறது. இது நீங்கள் விரும்பி எடுத்த நிலைப்பாடா?

எனக்கு அரசியல் எப்போதுமே ஆர்வமூட்டுவதாக இருந்திருக்கவில்லை. உங்களுக்குப் புரியும் என நினைக்கிறேன் – நான் பிறந்து, வளர்ந்த சூழல் அப்படி. I was born in the belly of a beast.

என் தலைமுறையைச் சேர்ந்த பலரைப்போல நானும் அக்கொடிய சூழலின் அரசியலை முற்றாக நிராகரித்துவிட்டேன். கவிஞர் அலெக்ஸாண்டர் குஷ்னர் – நம் காலத்தின் ஆகச்சிறந்த வாழும் கவிஞர் சொன்னதைப் போல –

“மனிதர்கள்,
காலத்தை – தங்கள் வாழ்க்கையை எப்போது தொடங்கி, எப்போது முடிக்கிறார்கள் என்பதைத்
தெரிவு செய்பவர்களாய் இருப்பதில்லை.”

நாங்கள் உயிர்வாழ்வதே பெரிய விஷயமாயிருந்தது. உருகிக் கரைந்து போகாமல் முழுமையாக உயிரோடு இருப்பதே பெரிய வித்தையாக இருந்தது.

ஸ்டாலின் காலத்தில், 1930களின் இறுதியில் உங்கள் தாயாரின் பல உறவினர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறியிருக்கிறீர்கள். ஸ்டாலினின் அழித்தொழிப்பு நடவடிக்கைகளை உங்கள் சிறுவயதிலேயே அறிந்திருந்தீர்களா?

இல்லை. 1956 வரை தெரியாது. என் அம்மா அவை எல்லாவற்றையும் என்னிடமிருந்து மறைத்திருந்தார். அவர் ‘கட்சியின்’ உறுப்பினராக இருந்தார். ‘மக்களின் எதிரிகள்’ அவருடைய உறவினர்கள் என்று வெளியே தெரிந்திருந்தால் அவருக்கு வேலை போயிருக்கும். அந்த வேலையை நம்பிதான் நாங்கள் உயிர் வாழ்ந்திருந்தோம். அவ்விஷயங்களைப் பற்றி வெகு குறைவாகவே எழுதப்பட்டிருக்கிறது. அக்காலத்தில் எண்பது சதவீதம் மக்கள் தலைமறைவு வாழ்க்கையையே நடத்தினார்கள். ஒருவரிடமிருந்து ஒருவர் விலகியிருந்தார்கள். படாத பாடுபட்டு ரகசியங்களைக் காப்பாற்றினார்கள். குடும்பத்துக்குள்ளே கூட அதிகம் எதையும் பகிர்ந்துகொள்ளவில்லை. சிறுவர்கள் வெளியே சென்று ஏதாவது உளறி வைத்தால் என்ன ஆகும்! அந்தக் கொடூரமான காலத்தில், எல்லோரும் ரகசியத்தைக் காப்பாற்றும் இந்த வித்தையைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

அதனாலேயே பொது வாழ்க்கையில் ஈடுபடுவதையோ, அரசியலில் இறங்குவதையோ நான் விரும்பவில்லை. என் காலம் பூராவும், நான் ஒரு எழுத்தாளராகவும், என் குழந்தைகளுக்குத் தாயாகவும் ‘வாழ முடிவதே’ எனக்குப் பெரிய விஷயமாக இருந்தது. நான் எழுத ஆரம்பித்தபோதுதான் – இந்த அமைப்போடு நான் நேரடி முரண்பாட்டுக்கு உள்ளானேன். ஏனென்றால் இந்த அமைப்பு நான் எழுதிய எல்லா விஷயங்களையும் நிராகரித்தது.

இவ்வாறு அரசியலில்லாமல், அதே சமயம் எளிய மனிதர்களின் நேரடி வாழ்வைப் பதிவு செய்த ல்யூட்மிலாவைப் பிரசுரிக்க எவரும் முன்வரவில்லை. ‘Novy Mir’ என்ற பிரபலமான, கொஞ்சம் சுதந்திர மனப்பான்மை கொண்ட பத்திரிகையின் ஆசிரியர் ல்யூட்மிலாவின் கதைகளைப் படித்துவிட்டு, “இக்கதைகளைக் பிரசுரிக்காமல் கிடப்பில் போடுங்கள், ஆனால் எழுத்தாளரைத் தொடர்ந்து கவனத்தில் வைத்திருங்கள்” என்று சொல்லியிருக்கிறார். 1987-இல்தான் ‘Novy Mir’ ல்யூட்மிலாவின் கதைகளைப் பிரசுரிக்க ஆரம்பித்தது.

லியோனீத் ப்ரெஷ்னேவின் மறைவுக்குப் பின், தணிக்கை விதிகள் தளர்த்தப்பட்டு, சுதந்திரமான எழுத்தும், சிந்தனையும் ஓரளவுக்கு அனுமதிக்கப்பட்ட பின்புதான் ல்யூட்மிலாவின் சிறுகதைகள் ரஷ்யாவில் பிரசுரமாகின. அவர் சிறுகதைத் தொகுப்பும் அதற்குப்பின்புதான் வெளியானது. 1990-களுக்குப் பின் அவர் எழுத்து மீது அமெரிக்கா, ஐரோப்பாவில் புதிய கவனம் ஏற்படத்தொடங்கியது. அவர் சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. தொடர்ந்து பல்வேறு விருதுகளையும் பெற்றுவருகின்றன. அவர் சிறுகதைகளை அடிக்கடி ஆங்கிலப் பத்திரிகைகளில் படிக்க முடிகிறது.

சென்ற வாரம் ‘தி நியூயார்க்கர்’ இவருடைய ‘ஒரு வாடிய கிளை’ (The Withered Branch) சிறுகதையின் மொழிபெயர்ப்பை வெளியிட்டிருந்தது. அச்சிறுகதை ஒரு விதத்தில் ல்யூட்மிலாவின் சொந்த வாழ்க்கை என்று கூட சொல்லலாம். அதில் கணவனை இழந்த ஒரு ரஷ்ய எழுத்தாளர், ரஷ்யாவில் ‘தடைசெய்யப்பட்ட’ எழுத்தாளராகிறார். ரஷ்யாவில் இரு சிறுகதைகள் மட்டுமே பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. பிரசுரித்து வரும் வருமானத்தை மட்டுமே நம்பியிருக்கும் அவர், மிகவும் சிரமப்பட்டு லித்துவேனியாவுக்குச் சென்று தன் சிறுகதைகளை அங்கே ஒரு பத்திரிகையில் கொடுத்துப் பிரசுரிக்கிறார். ல்யூட்மிலாவும் ரஷ்யாவில் தடைசெய்யப்பட்ட தன் சிறுகதைகளை லித்துவேனியாவில் பிரசுரித்திருக்கிறார்.

ludmillapetrushevskayaஅச்சிறுகதையின் அடிநாதமாகப் பெண்களின் தனிமையையும், துயரத்தையும் பதிவு செய்திருக்கிறார் ல்யூட்மிலா. ரஷ்யாவில் தன் கணவனை இழந்த ஒரு பெண், நோயுற்ற தன் மகனைக் காப்பாற்றுவதற்காகத் தன்னந்தனியாகப் போராடுகிறார். அப்போராட்டத்தின்போது பயணங்கள் மேற்கொண்டுப் பலரையும் சந்திக்கவேண்டியிருக்கிறது. அங்கே அவருக்கு உதவுபவர்கள் எளிய மனிதர்களாக இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையிலும் துயரங்களும், இழப்புகளும் இருந்திருக்கின்றன. ஆனாலும் அப்பெண்ணுக்கு உதவுகிறார்கள். தூரத்தாலும், காலத்தாலும் பிரிக்கப்பட்டிருந்தாலும் அப்பெண்களின் வாழ்க்கை ஒரே மாதிரியாக, தனிமையின் இருள் சூழ்ந்து இருப்பதை உணர்கிறார் கதையின் மைய கதாபாத்திரமாக வரும் பெண்.

எளிய மனிதர்களின், பெண்களின் துயரமும், இழப்பும்தான் ல்யூட்மிலாவின் பல சிறுகதைகளின் கருவாக இருக்கிறது. இதற்கு முன் நியூயார்க்கரில் வெளிவந்த ஒரு சிறுகதையிலும் ஒரு எளிய குடும்பத்தில் திடீரென்று ஏற்படும் உயிரிழப்பு, அக்குடும்பத்தலைவரை எப்படி மனநோயின் வாசல் வரை கூட்டிச் செல்கிறது என்பதையும், குடும்பத்திலுள்ள பெண்களுக்கு துயரத்தை வெளிப்படுத்தும்சுதந்திரம் கூட இல்லாமல், ஒரு இழப்புக்குப் பின் அடுத்த இழப்பு நேரக்கூடாது என்று பதறித் துடிப்பவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் சுட்டுகிறது.

“ரஷ்யா குடும்பத்தைத் தாங்கி நிறுத்தும் பெண்களாலானது. அப்பெண்கள் அவர்கள் கதைகளை வாய்வழியாகச் சொல்பவர்கள். அவர்கள் மிகச்சிறந்த கதைசொல்லிகள். நான் அவர்கள் சொல்வதை வெறுமனே கேட்டுக்கொண்டிருப்பவள்,” என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் ல்யூட்மிலா.

பல எழுத்தாளர்களையும், சிந்தனையாளர்களையும் பேசவிடாமல், எழுதவிடாமல் தடுத்து நிறுத்தியதில் ஸ்டாலின் செய்த அராஜகத்துக்குக் கொஞ்சமும் குறைவில்லாதது ப்ரெஷ்னெவின் அராஜகம். ஆனால் ப்ரெஷ்னெவ் குறித்து நம் தமிழ்ச்சூழலில் அறிவுஜீவிகள் பேசுவதேயில்லை. உண்மையில் இவர்கள் முன்வைக்கும் கருத்துச் சுதந்திரத்தின் ஆகப்பெரிய எதிரியாக இருந்திருக்கிறார் ப்ரெஷ்னெவ். ஆனால் இவர்களோ கம்யூனிஸத்தின், இடதுசாரி அடக்குமுறையின் கொடூரங்களைக் குறித்துப் பேசுவதேயில்லை. என் நண்பர் ஒருவர் எழுபதுகளில் ரஷ்ய எழுத்தாளர்கள் சந்தித்த தணிக்கைகளைக் குறித்து ஒரு புத்தகம் வெளியாகியிருக்கிறது என்றார். ஆனால் அப்புத்தகத்தை எழுதியவர் அதற்கு மாற்றாக அதைவிடத் தீவிரமான கொடுங்கோலர்களையும், பிரிவினைவாதத்தையும் இன்றும் ஆதரிப்பவராக இருப்பதுதான் பெரிய முரண்நகை.

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட கவிஞர் ஜோஸஃப் ப்ராட்ஸ்கி, 1972-ஆம் வருடம் ரஷ்யாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவர் 1975-இல் இங்கிலாந்தில் எழுதிய ஒரு கவிதை, ரஷ்யாவுக்கும் பொருந்துவதாக இருக்கிறது. தன் துயரத்தையும், பிரிவையும் தன் கையோடு எடுத்துச் சென்றுவிட்ட ப்ராட்ஸ்கி, இங்கிலாந்திலும் அதைக் குறித்துதான் எழுதுகிறார். அக்கவிதையின் கடைசி இரு பத்திகள்:

பூச்சியரித்த கோட் அணிந்திருக்கும் மனிதன்,
எல்லா வண்டிகளையும் போல கடலில் சென்று சேரும்
கிழக்கு நோக்கிச் செல்லும் புகைவண்டியில் கிளம்பும்
தன் மகளைப் பார்த்துப் புன்னகைத்து வழியனுப்புகிறான்.
ஒரு விசில் ஒலிக்கிறது.

ஓடுகளுக்கு மேலிருக்கும் முடிவில்லாத ஆகாயம்
ஒரு பறவையின் பாட்டில் நிரம்பி நீலமாகிக்கொண்டிருக்கிறது.
எவ்வளவு தெளிவாகப் பாடல் கேட்கிறதோ,
அவ்வளவு சிறியது பறவை.

—oOo—

ப்ரெஷ்னேவ் 1982-இல் மறைந்து, கம்யூனிஸ அரசும் வீழ்ந்து எல்லாம் முதலியமாகிக் கொண்டிருக்கும் இந்த நாட்களில் இப்படிக் காலாவதியான இந்த விஷயங்களைக் குறித்து ஏன் பேசுகிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். அரசுகள் முன்வைக்கும் கொள்கைகள்தான் மாறியிருக்கின்றவே தவிர, மக்களின் சுதந்திரத்தை மதிக்காத, தங்கள் விருப்பத்துக்கு அவர்களை அலைக்கழிக்கும் பகடைக்காய்களாகப் பயன்படுத்தும் சர்வாதிகாரம் எப்போதும் சாசுவதமாகவே இருக்கிறது. சீனர்களின் வாழ்வுரிமையைக் கேட்டுப் போராடிய லீ ஜியாபெள, ‘சமத்துவத்தை’ நிலைநாட்டும் சீனாவில் சிறைக்கைதியாக இருக்கிறார். அவருக்காகக் குரல் கொடுத்த அய் வெய்வெய் (Ai Weiwei) என்ற ஓவியர் சென்ற மாதம் கைது செய்யப்பட்டிருக்கிறார். இத்தனைக்கும் இவர் தந்தை சீனாவின் மிக உயரிய ஓவியராகக் கருதப்படுபவர். அய் வெய்வெய்யும் சீனாவில் மட்டுமில்லாமல், பல்வேறு நாடுகளிலும் நன்கறியப்பட்ட ஓவியர்.

ai-weiwei-web

என் கேள்வியெல்லாம் உலகெங்கும் பல்வேறு நாடுகளில் பேசப்பட்ட இந்தக் கைது விவகாரம் குறித்து, எப்போதும் மனித உரிமைகளுக்காகப் பாடுபடுவதாகச் சொல்லிக்கொள்ளும் நம் சிறுபத்திரிகைகளோ, அறிவுஜீவிகளோ ஒருவர் கூட பேசாதது ஏன்? இப்படிப்பட்டதொரு கைதை அமெரிக்காவோ, இந்தியாவோ செய்திருந்தால் அய் வெய்வெய் படத்தை அட்டையிலும், அவர் ஓவியத்தை வீட்டிலும் மாட்டியிருப்பார்களே? எதற்காக இந்த தெரிவு செய்யப்பட்ட கலகக்குரலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கள்ளமெளனமும்? ஆனால் இவர்களைத்தான் சிந்தனையாளர்களாக எளிய மக்கள் மட்டுமில்லாமல், படித்தவர்களும், உயர்பதவியிலிருப்பவர்களும் கூட நினைக்கிறார்கள். எனக்கென்னவோ தோழர்கள் சொல்லும் ‘பொன்னுலகம்’ இந்தியாவுக்கு அவசியம் என்றே தோன்றுகிறது. சீன, ரஷ்ய மக்களைப் போல, குரலெழுப்பவே வழியில்லாமல் சக்கையாகக் கசக்கிப் பிழியப்பட நாம் அருகதையானவர்கள்தான்.

[இதே இதழில் ல்யுட்மிலா பெத்ரூஷெஃப்ஸ்கா எழுதி சமீபத்தில் ‘தி நியூயார்க்கர்’ பத்திரிகையில் வெளியான ‘ஒரு வாடிய கிளை’ என்ற சிறுகதையை ரமேஷ் ராமனின் மொழிபெயர்ப்பில் படிக்கலாம்.]

2 Replies to “நசுக்கப்படும் குரல்வளைகள்”

Comments are closed.