வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் என்ற ஸாக்ஸிஃப்ரேஜ் மலர்

இந்த நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளில் ஆங்கில மொழியின் இலக்கியங்களில் நிகழ்ந்த ஒரு மாற்றம் கவிதையையும் உரை நடையையும், சொற்றொடர் இலக்கணத்தையும் நுண்மையையும் (sensibility), கவிதையியலையும் கற்பனையையும் ஒருங்கே பாதித்தது. ஐரோப்பா மற்றும் லதீன் அமெரிக்கா பகுதிகளில் அதே சமயம் நிகழ்ந்த மாற்றங்களை ஒத்த இம்மாற்றம் முதன்முதலில் ஒரு சில, அனேகமாக அமெரிக்க, கவிஞர்களாலேயே உருவாக்கப் பட்டது. இந்த ஆரம்ப கர்த்தாக்களிலான குழுவில் வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் ஒரு தனித்துவமிக்க மைய இடத்தை வகிக்கிறார் : பவுண்டையும் எலியட்டையும் போல வேரோடு லண்டனிற்கோ பாரிஸிற்கோ புலம் பெயராமல், நியூயார்க்கிற்கு புறத்தேயுள்ள சிறு நகரமொன்றில் தன்னை ஆழ்த்திக் கொள்வதையே அவர் விரும்பினார்…