இடுக்கி கோல்ட்

தாத்ரிக்குட்டி வாழ்ந்து முடிந்து துரத்தியடிக்கப்பட்டிருந்த அந்தத் தோப்பு, காலத்தின் புயல் வீசிச் சாய்ந்த தென்னை மரங்களும் நெருக்கடியான கனவுகளின் தாங்கொணாப் புழுக்கம் சுமந்த பெண்ணின் கண்ணீர் பெய்து பழுத்துப்போயிருந்த மாமரங்களும் சோபையுடன் நிற்க காட்சியளித்தது. இன்னும் சிறிது நேரத்தில் இருட்டிப்போய்விடும் என்னும் நிலையில், நாங்கள் அந்தத் தோப்பினூடே அவள் மிச்சம் வைத்துச் சென்ற தடயங்கள் இருக்கிறதா என்று தேடினோம். அவள் எப்பொழுதோ அவ்விடத்தை விட்டுப்போயிருந்தாள். அவளுக்குச் சாட்சியாக, அங்கே பாழடைந்து கிடந்த கிணறும் அவள் வழிபட்ட முழங்கால் அளவே உயரம் உடைய அம்பாளும் மட்டுமே இருந்தன. அம்பாளுக்கும் வேதனை தாங்கமுடியாததாக இருந்திருக்கவேண்டும்.