வருகை

அந்த இரவில் அபரிமிதமாய் ஓர் உச்சகட்ட விறுவிறுப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்த இயற்கையின் கூத்தோடு தொடர்புகொள்ளும், மனம் இணையும் வாய்ப்பை இழந்து அவ்வூர் மக்கள் துக்கம்கொண்டிருப்பதாக அவன் எண்ணமிட்டான். திறந்திருந்த பாதி ஜன்னல் கதவு ஒருதரம் மடார் என்று அடித்து மூடி உடந்தானே மீண்டும் திறந்துகொண்டது. ஒரு காலைத் தூக்கி வைத்து அக்கதவு அசையாதபடி அவன் அமுக்கிக்கொண்டான். தலைமாட்டிலிருந்து புகைப்பெட்டியை எடுத்து ஒன்றைக் கொளுத்தி இழுக்கத் தொடங்கினான்.