நாலு பேருக்காக ஒரு கல்யாணம்
இன்று ஞாயிற்றுக்கிழமை. வாரத்தில் அலாரம் வைத்து எழுந்திருக்க வேண்டிய அவசியமே இல்லாத ஒரே ஒரு நாள்.
ஆனால், இன்று அலாரமாகவே அம்மா வந்துவிட்டாள். காலை ஏழு மணிக்கே என்னை மூன்று முறை எழுப்பியிருந்தாள்.
நான் தூங்கிக்கொண்டிருந்தது என்னவோ என் அறையில்தான். ஆனால், என்னைப் பொண்ணு பார்க்க வரப்போவது மட்டும் ஒட்டுமொத்தத் தெருவுக்கே தெரிந்திருந்தது. பத்மா மாமி வாசல் தெளிக்கும்போதே இந்தச் செய்தியை அடுத்த வீட்டுக்குக் கடத்திவிட்டதை என் காதால் கேட்டிருந்தேன்.
“கவிதா, எழுந்திருடி! இன்னைக்கு அவங்க வர்றாங்க!”
நான் போர்வையை முகத்திலிருந்து விலக்காமலேயே பதில் சொன்னேன்.
“வரட்டுமேம்மா. அவங்க நம்ம வீட்டுக்குத்தானே வராங்க? நாம ஒண்ணும் அவங்க வீட்டுக்குப் பையன் பார்க்கப் போகலையே! அப்புறம் ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க?”
அம்மா என்னைப் பார்த்த பார்வையில், நான் இன்னும் பத்து நிமிஷம் தூங்கினால் அந்தக் குடும்பத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்ற கவலை இருந்தது.
“காலங்காத்தாலேயே வாயைப் பாரு! எந்திரிச்சு முகத்தைக் கழுவிட்டு வா.”
சரி. முதல் தேர்வு ஆரம்பமாகிவிட்டது.
நம்ம ஊரில் ஒரு பெண்ணுக்கான தகுதிகள் என்னென்ன என்று யாராவது கேட்டால், என்னால் ஒரு பெரிய பட்டியலே கொடுக்க முடியும். அதில் முக்கியமானவை என்ன தெரியுமா?
காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும்.
பெரியவர்கள் பேசும்போது எதிர்த்துப் பேசக்கூடாது.
எப்போதும் முகத்தில் ஒரு சின்ன வெட்கச் சிரிப்பு இருக்க வேண்டும். ஆனால், அதிகமாகச் சிரிக்கக்கூடாது.
வேலைக்குப் போக வேண்டும். அதே நேரத்தில் வீட்டையும் கவனித்துக்கொள்ள வேண்டும்.
கை நிறையச் சம்பாதிக்க வேண்டும். ஆனால், சம்பாதிக்கிறோம் என்ற திமிர் இருக்கக்கூடாது.
எல்லாவற்றையும் அனுசரித்துப் போக வேண்டும்.
முக்கியமாக, யாராவது ஏதாவது சொன்னால் மனதில் வைத்துக்கொள்ளக்கூடாது.
ஆனால், யாராவது ஏதாவது சொல்வார்களோ என்று எப்போதும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்தக் கடைசி விதியைக் கண்டுபிடித்த விஞ்ஞானி யார் என்று மட்டும் எனக்குத் தெரியவில்லை. அனேகமாக அந்தப் புகழ்பெற்ற நாலு பேரில் ஒருவராகத்தான் இருக்க வேண்டும்!
என் பெயர் கவிதா. வயது இருபத்தொன்பது.
ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். மாதம் அறுபதாயிரம் ரூபாய் சம்பளம். வீட்டுச் செலவுக்கு அம்மாவிடம் பணம் கொடுக்கிறேன். அப்பாவுக்கு மருந்து வாங்கித் தருகிறேன். எனக்குப் பிடித்த புத்தகங்களை வாங்குகிறேன். எப்போதாவது தோழிகளுடன் வெளியே போய்க் காபி குடிக்கிறேன்.
மொத்தத்தில், என் வாழ்க்கை ஓரளவுக்கு என் கட்டுப்பாட்டில் இருந்தது.
அந்த ஓரளவுக்குத்தான் இப்போது ஆபத்து வந்திருக்கிறது.
எனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வீட்டில் முடிவெடுத்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. நான் எப்போது கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று யோசிப்பதற்காக அல்ல. எனக்குத் திருமணம் செய்து வைக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பதற்காக!
முதலில் ஜாதகம் பார்த்தார்கள். பிறகு புகைப்படம் கேட்டார்கள். அடுத்ததாகச் சம்பளம் கேட்டார்கள்.
அதற்குப் பிறகு, “பொண்ணு சம்பாதிக்கிறா, சரி. சமையல் தெரியுமா?” என்ற கேள்வி வந்தது.
எனக்குச் சம்பளம் வருவது அவர்களுக்குச் சந்தோஷம். நான் சமைக்கத் தெரிந்தவளாக இருப்பது அவர்களுக்கு நிம்மதி.
கல்யாணத்துக்குப் பிறகு வேலைக்குப் போவது என் விருப்பம். ஆனால், சமைப்பது என் கடமை என்பதில் மட்டும் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை.
இந்த விதி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எந்தப் பிரிவில் இருக்கிறது என்று ஒருநாள் தேடிப் பார்க்க வேண்டும். அப்படி ஒரு பிரிவு இருந்தால், அதற்கு ஆதரவாக முதல் கையெழுத்துப் போட்டது அந்த நாலு பேர்தான்!
அன்றைய தேர்வின் அடுத்த பகுதி என் புடவையில் தொடங்கியது.
“அந்தப் பச்சைப் புடவையை எடுத்து வச்சிருக்கேன். இன்னைக்கு அதைக் கட்டிக்கோ,” என்றாள் அம்மா.
“ஏம்மா?”
“ஏம்மாவா? பொண்ணு பார்க்க வர்றாங்க. நல்லா இருக்கணும்ல?”
“நான் தினமும் நல்லாத்தானே இருக்கேன்?”
அம்மா கிண்டுவதை நிறுத்திவிட்டு கையில் கரண்டியுடன் ஒரு நொடி என்னைப் பார்த்தாள், இல்லை முறைத்தாள்.
“உன்கிட்ட எவ பேசுவா… இணைக்கு ஒழுங்கா நான் சொல்றத செய்.”
“எனக்கு நீலப் புடவைதான் பிடிக்கும், மா.”
“இன்னைக்கு நீலமெல்லாம் வேண்டாம். பச்சை நல்லா இருக்கும்.”
“எனக்கா, இல்ல வர்றவங்களுக்கா?”
“கவிதா!”
அந்த ஒரு வார்த்தையிலேயே விவாதம் முடிந்துவிட்டது.
எனக்கு நீலப் புடவை பிடிக்கும் என்பது அம்மாவுக்கும் தெரியும். இருந்தாலும், அன்று பச்சைதான் கட்ட வேண்டும். ஏனென்றால், அவர்கள் என்னைப் பார்த்து நல்ல அபிப்பிராயத்தோடு போக வேண்டுமாம்.
அந்த அபிப்பிராயத்தை உருவாக்குவதில் என் விருப்பத்துக்கு எவ்வளவு இடம் இருக்கிறது என்று மட்டும் யாரும் சொல்லவில்லை.
ஹாலில் அப்பா செய்தித்தாளை விரித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். வீட்டில் நடக்கும் உரையாடல்களில் அவருக்கும் ஆர்வம் இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல் இருப்பது அவருடைய வழக்கம்.
அம்மாவுக்கும் எனக்கும் இடையில் நடந்த புடவை விவாதம் அவருடைய காதுகளை எட்டியிருக்கும். இருந்தாலும், செய்தித்தாளிலிருந்து தலையை உயர்த்தவில்லை, உயர்த்தவும் மாட்டார்.
அப்பாக்களுக்கென்று ஒரு தனித் திறமை இருக்கிறது. வீட்டில் என்ன நடந்தாலும் தெரியாத மாதிரி இருப்பார்கள். ஆனால், செய்தித்தாளின் பின்னால் இருந்தபடியே எல்லாவற்றையும் கவனித்துவிடுவார்கள்.
ஒன்பது மணிக்கு அத்தை என் அறைக்குள் வந்தாள்.
“கவிதா, ஒரு விஷயம் சொல்லணும்.”
“சொல்லுங்கத்தை.”
“பையன் பார்க்க வர்றப்போ கொஞ்சம் சிரிச்ச முகமா இரு.”
“சரியத்தை.”
“ரொம்பவும் சிரிக்க வேண்டாம்.”
நான் அத்தையைப் பார்த்தேன்.
“அப்படின்னா எவ்வளவு சிரிக்கணுமத்தை?”
“அதுக்குன்னு அளவு இருக்கா?”
“அதான் கேக்கறேன்.”
அத்தை என்னைச் சில நொடிகள் பார்த்துவிட்டு, “உனக்கு எல்லாமே விளையாட்டுத்தான்,” என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.
நான் மனதிற்குள் சிரித்துக்கொண்டேன்.
பொண்ணு பார்க்க வருகிறார்கள். புடவை சரியாக இருக்க வேண்டும். முகம் சரியாக இருக்க வேண்டும். சிரிப்பு சரியாக இருக்க வேண்டும். பேசுவதற்கும் சரியான அளவு இருக்க வேண்டும்.
இன்னும் கொஞ்ச நேரத்தில் மூச்சுவிடுவதற்குக்கூட வழிகாட்டுதல் வந்துவிடும் போலிருந்தது.
பையனின் பெயர் அருண். வயது முப்பத்திரண்டு. ஐ.டி. நிறுவனத்தில் வேலை. சொந்த வீடு. நல்ல குடும்பம். ஜாதகம் பொருந்தியிருக்கிறது. புகைப்படமும் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது.
எனக்கு மட்டும் அவனைப் பிடித்திருக்கிறதா என்று தெரியாது.
புகைப்படத்தில் சிரித்துக்கொண்டிருக்கும் ஒருவனைப் பார்த்து, வாழ்க்கை முழுவதும் அவனுடன் சிரித்துக்கொண்டிருக்க முடியுமா என்று எப்படி முடிவெடுப்பது?
அத்தையோ வேறு விதமாக யோசித்தாள்.
“பையன் நல்ல பையன். நல்ல வேலை. நல்ல குடும்பம். உனக்கு இதைவிட என்ன வேணும்?”
நான் மனதிற்குள் ஒரு பட்டியல் போட்டேன்.
எனக்குப் பிடித்திருக்க வேண்டும்.
என்னுடன் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
என்னை ஒரு மனிதராகப் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும்.
என் சம்பளத்தைப் பார்த்துச் சந்தோஷப்படுவதோடு, என் சுதந்திரத்தையும் ஏற்றுக்கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும்.
இந்தப் பட்டியலில் எதையும் வாய்விட்டுச் சொல்லவில்லை. சொன்னால், அடுத்த ஒரு மணி நேரத்திற்கு அத்தையின் அறிவுரையைக் கேட்க வேண்டியிருக்கும்.
“என்னடி, வாயைத் திறந்து பதில் சொல்ல மாட்டியா?”
“நீங்க சொல்றது சரிதானத்தை.”
அத்தை திருப்தியாகத் தலையாட்டினாள்.
அந்த ஒரு வாக்கியத்தில் எவ்வளவு அமைதி இருக்கிறது! ஒரு பெண் எல்லாவற்றுக்கும் சம்மதித்துவிட்டால், வீட்டில் எத்தனை பிரச்சினைகள் தீர்ந்துவிடுகின்றன!
அவளுக்கு மட்டும் பிரச்சினை தீர்ந்ததா என்று கேட்க யாருக்கும் நேரமில்லை.
காலை பத்து மணிக்குப் பையன் வீட்டார் வந்தார்கள்.
மொத்தம் நான்கு பேர்.
அருண், அவனுடைய அம்மா, அப்பா, தங்கை.
அவர்களைப் பார்த்ததும் எனக்குள் ஒரு சின்னச் சிரிப்பு வந்தது.
இத்தனை நாட்களாக என் வாழ்க்கையைப் பற்றி முடிவெடுத்துக்கொண்டிருந்த அந்த நாலு பேர் இவர்கள்தானோ?
இல்லை. இருக்க முடியாது.
இவர்கள் புதிதாக வந்தவர்கள். என் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று ஏற்கெனவே ஒரு பட்டியல் வைத்திருந்தவர்கள் வேறு யாரோ.
அந்த நாலு பேரைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமில்லை போலிருக்கிறது.
அம்மா காபி கொடுத்தாள். அத்தை பலகாரம் எடுத்து வைத்தாள். அப்பா செய்தித்தாளை மடித்து வைத்துவிட்டு விருந்தினர்களை வரவேற்றார்.
அருணின் அம்மா என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
“பொண்ணு ரொம்ப அழகா இருக்கா.”
நன்றி சொல்லலாமா என்று யோசிப்பதற்குள் அடுத்த கேள்வி வந்துவிட்டது.
“சமைக்கத் தெரியுமா?”
அம்மா பதில் சொல்ல வாயைத் திறப்பதற்குள் நான் முந்திக்கொண்டேன்.
“தெரியும், ஆன்ட்டி. ஆனா, தினமும் சமைக்க ரொம்பப் பிடிக்கும்னுலாம் சொல்ல முடியாது.”
அம்மா என்னைப் பார்த்த பார்வையில், இந்தப் பதிலால் கல்யாணமே நின்றுவிடுமோ என்ற பயம் தெரிந்தது.

அருணின் தங்கை மட்டும் சிரிப்பை அடக்க முடியாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
“அப்போ எங்க அண்ணனுக்குப் பட்டினிதான் போல!”
நான் அவளைப் பார்த்தேன்.
“ஏன், உங்க அண்ணனுக்குச் சமைக்கத் தெரியாதா?”
அந்தக் கேள்வி ஹாலில் இரண்டு நொடிகள் அமைதியை ஏற்படுத்தியது.
பிறகு அருண் மெல்லச் சிரித்தான்.
“மேகி செய்யத் தெரியும்.”
“அப்படின்னா தப்பிச்சீங்க. பசியோட சாக மாட்டீங்க!”
இந்த முறை எல்லோரும் சிரித்தார்கள்.
அம்மாவும் சிரித்தாள். ஆனால், அவளுடைய சிரிப்பில் மட்டும் கொஞ்சம் பதற்றம் இருந்தது. நான் எதார்த்தமாகப் பேசுவதாக நினைத்து தேவையில்லாமல் வம்பை விலைக்கு வாங்குகிறேனோ என்று அவளுக்குத் தோன்றியிருக்கலாம்.
அருணின் அம்மா பேச்சை மாற்றினாள்.
“இப்போதைய பிள்ளைங்க எல்லாம் ரொம்பத் தெளிவா இருக்காங்க.”
அது பாராட்டா, எச்சரிக்கையா என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
சிறிது நேரத்திற்குப் பிறகு, என்னையும் அருணையும் மொட்டை மாடிக்குப் போய்ப் பேசச் சொன்னார்கள்.
“பத்து நிமிஷம் போதும்,” என்று அத்தை கீழிருந்து குரல் கொடுத்தாள்.
பத்து நிமிஷத்தில் ஒருவருடைய குணத்தையும் எண்ணங்களையும் முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியும் என்றால், உலகத்தில் இருக்கிற அத்தனை உளவியல் புத்தகங்களையும் தூக்கி எறிந்துவிடலாம்.
மொட்டை மாடிக்குப் போனதும் அருண் நேராகக் கேட்டான்.
“உங்களுக்கு இந்தத் திருமணத்துல விருப்பம் இருக்கா?”
அன்று காலை முதல் என்னிடம் கேட்கப்பட்ட முதல் அர்த்தமுள்ள கேள்வி அதுதான்.
“எனக்குத் தெரியல.”
“ஏன்?”
“உங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. உங்களுக்கும் என்னைப் பற்றி எதுவும் தெரியாது. பத்து நிமிஷம் பேசினதுல உடனே கல்யாணம் பண்ணிக்கலாம்னு எப்படி முடிவு பண்ண முடியும்?”
அருண் சத்தமாகச் சிரித்தான்.
“உண்மைதான்.”
“அப்புறம் உங்களுக்குப் பிடிச்சிருக்கா?”
“எனக்கும் தெரியல.”
“பின்ன ஏன் இங்க வந்தீங்க?”
“எங்க வீட்டுல வந்து பார்த்துட்டு வரச் சொன்னாங்க.”
நான் புன்னகைத்தேன்.
“ஆஹா! எங்க வீட்டுலயும் அதே தான் ஓடுது.”
இருவரும் மனசுவிட்டுச் சிரித்தோம்.
“உங்ககிட்ட ஒண்ணு கேட்கலாமா?” என்றான் அருண்.
“கேளுங்க.”
“உங்களுக்கு என்னதான் எதிர்பார்ப்பு?”
கொஞ்சம் யோசித்துவிட்டுச் சொன்னேன்.
“என்னோட வேலையைத் தொடரணும். எனக்குப் பிடிச்ச விஷயங்களைச் செய்யணும். நம்ம வாழ்க்கையில ஏதாவது பிரச்சினை வந்தா, ஊருல இருக்கிற அத்தனை சொந்தக்காரங்களையும் கூப்பிட்டுப் பஞ்சாயத்து வைக்காம, நாம ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசித் தீர்க்கணும்.”
அவன் தலையாட்டினான். சிரித்துக்கொண்டே…
“கடைசி விஷயத்துல எனக்கும் நூறு சதவீதம் உடன்பாடு இருக்கு.”
“அப்போ உங்க வீட்டுல எல்லாரும் அப்படித்தானா?”
அவன் ஒரு நிமிடம் அமைதியாக இருந்துவிட்டுச் சொன்னான்.
“கண்டிப்பா இல்ல. ஆனா, நாம முயற்சி பண்ணலாம்.”
அந்தப் பதில் எனக்குப் பிடித்திருந்தது.
எல்லாவற்றுக்கும் பச்சைக்கொடி காட்டிவிட்டு, கல்யாணத்துக்குப் பிறகு வேறு மாதிரி நடந்துகொள்பவர்களை விட, “சிரமம்தான், ஆனா முயற்சி செய்றேன்” என்று சொல்பவர்களை நம்புவது கொஞ்சம் எளிது.
கீழே இருந்து அத்தையின் குரல் கேட்டது.
“போதும், போதும்! என்ன அப்படி ஒரு ஆராய்ச்சி? கீழே வாங்க!”
நான் அருணைப் பார்த்துச் சிரித்தேன்.
“பத்து நிமிஷம் முடிஞ்சிருச்சு போல. ஆனா, பேச வேண்டியதை விட விவாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு.”
அவன் எழுந்துகொண்டே கேட்டான்.
“அப்படின்னா இன்னொரு நாள் பேசலாமா?”
நான் தலையாட்டினேன்.
அன்று முதன்முறையாக, ஒரு திருமணப் பேச்சில் என் விருப்பத்துக்கும் இடம் இருந்தது.
அது கல்யாணம் உறுதியாகிவிட்டது என்று அர்த்தமல்ல. ஆனால், என் முடிவும் முக்கியம் என்று ஒருவர் ஏற்றுக்கொண்டிருந்தார்.
அவர்கள் கிளம்பிப் போனதும் வீட்டில் வழக்கம்போலப் பஞ்சாயத்து ஆரம்பமானது.
“பையன் நல்லா இருக்கான்,” என்றாள் அம்மா.
“குடும்பமும் ரொம்ப நல்ல குடும்பம்,” என்றாள் அத்தை.
“எனக்குப் பிடிச்சிருக்கு,” என்றார் அப்பா.
மூவரும் திருப்தியாக ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். கடைசியாக என்னை நோக்கித் திரும்பினார்கள்.
“உனக்கு என்ன தோணுது, கவிதா?” என்று அப்பா கேட்டார்.
“இன்னும் கொஞ்ச நாள் பேசிப் பார்க்கலாம்,ப்பா.”
அத்தை உடனே முகத்தைச் சுளித்தாள்.
“ஏன்? பையன்கிட்ட ஏதாவது குறை கண்டுகிட்டியா?”
“இல்லத்தை.”
“அப்புறம் என்ன? பையன் நல்லா இருக்கான். குடும்பம் நல்லா இருக்கு. ஜாதகம் வேற பக்காவா பொருந்தியிருக்கு.”
“அதெல்லாம் சரிதான்,த்தை. ஆனா, என்னோட வாழ்நாள் முழுக்க அவர்கூட வாழப்போறேனே!”
“அதுக்குத்தானே நாங்க எல்லாத்தையும் பார்த்துப் பார்த்துப் பண்றோம்!”
நான் அமைதியாக இருந்தேன்.
அத்தை விடாமல் தொடர்ந்தாள்.
“இப்படியே இழுத்தடிச்சா எப்படி? உனக்கு 29 வயசு ஆயிடுத்து இதுவே ரொம்ப லேட்… இப்படியே விட்டா நாளைக்கு நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க. நல்ல சம்பந்தம் வந்தப்போ உடனே முடிச்சுக்கணும்.”
வந்துவிட்டது. அந்த மந்திர வார்த்தை!
சிறுவயதில் தெருவில் பையன்களுடன் சைக்கிள் ஓட்டினால் நாலு பேர் பேசுவார்கள் என்றார்கள். கல்லூரியில் தோழிகளுடன் சுற்றுலா போக வேண்டும் என்றபோதும் அதே பதில். அலுவலகத்தில் வேலை பார்த்துவிட்டு லேட்டாக வீட்டுக்கு வந்தாலும் அதே பதில்.
இப்போது என் வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவிலும் அதே நாலு பேர்தான் வந்து நிற்கிறார்கள்.
அவர்கள் யாரென்று எனக்குத் தெரியாது. முகவரியும் தெரியாது. ஆனால், அவர்களுக்காக நான் என்னென்ன தியாகம் செய்ய வேண்டும் என்பது மட்டும் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது.
எனக்குச் சிரிப்பு வந்தது.
“யாருங்க அந்த நாலு பேரு?”
அத்தை என்னை முறைத்தாள்.
“என்னது?”
“அந்த நாலு பேரு யாரத்தை? நம்ம வாழ்க்கையைப் பத்தி அவங்களா வந்து பஞ்சாயத்து பண்ணுவாங்கன்னு சொல்றீங்களே. எங்க இருக்காங்க அவங்க?”
“அதெல்லாம் சும்மா ஒரு பேச்சுக்குச் சொல்றது.”
“அப்படின்னா அந்தப் பேரை வச்சுக்கிட்டு ஏன் நம்ம வாழ்க்கையை முடிவு பண்றீங்க?”
அப்பா செய்தித்தாளைக் கீழே இறக்கினார். அம்மா என்னைப் பார்த்தாள்.
அத்தைக்குக் கோபம் வந்துவிட்டது.
“உலகத்துல இருக்கிறவங்க எல்லாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா?”
நான் புன்னகைத்தேன்.
“அதான் நானும் கேட்கிறேன்! உலகத்துல இருக்கிற எல்லாரும் என்ன பேசுவாங்கன்னு உக்காந்து யோசிச்சிட்டிருந்தா, அப்புறம் நாங்க எப்பதான் மூச்சு விடுறது?”
“இன்னைக்கு இருக்குற வயசு பொண்ணுங்களுக்கு எல்லாமே விளையாட்டுத்தனமா போச்சு!” என்று முணுமுணுத்துக்கொண்டே அத்தை உள்ளே போய்விட்டாள்.
என் சிரிப்பு மெல்ல அடங்கியது.
தன்னைப் பற்றி யார் பேசுகிறார்கள் என்று தெரியாமலேயே, அவர்கள் பேசக்கூடும் என்பதற்காகத் தன் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை எவ்வளவு சோர்வாக இருக்கிறது!
அன்று இரவு அம்மா என் அறைக் கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தாள்.
நான் புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன்.
“உண்மையிலேயே உனக்கு அந்தப் பையனைப் பிடிக்கலையா, கவிதா?” என்று மெதுவாகக் கேட்டாள்.
“அப்படியில்லைம்மா. இன்னும் கொஞ்சம் பேசணும்னு தோணுது. அவ்வளவுதான்.”
அம்மா என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.
“நாங்க உனக்குக் கெட்டதா நினைப்போம், சொல்லு?”
“எனக்குத் தெரியும்மா. ஆனா, எனக்கு எது நல்லதுன்னு நானும் கொஞ்சம் அனுபவிச்சுத் தெரிஞ்சுக்கக் கூடாதா?”
அம்மா உடனே பதில் சொல்லவில்லை.
கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டுப் பேச ஆரம்பித்தாள்.
“என்னைப் பெண் பார்க்க வந்தப்போ, உங்க அப்பாவோட பேசக்கூட எனக்கு வாய்ப்பு கிடைக்கல தெரியுமா?”
நான் ஆச்சரியமாக அம்மாவைப் பார்த்தேன்.
“அவர் நல்லவர்தான். என்னை இந்நாள் வரைக்கும் நல்லாதான் பார்த்துக்கிறார். ஆனா, கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காதுன்னு என்கிட்ட யாரும் ஒரு வார்த்தைகூடக் கேட்டதில்லை. அப்பா சொன்னார், அம்மா சொன்னாங்க. நான் சரின்னு தலையாட்டினேன்.”
அம்மா மெல்லச் சிரித்தாள்.
“அப்போ அதுதான் ஒரு நல்ல பொண்ணுக்கு இலக்கணம்னு நினைச்சுக்கிட்டேன்.”
“அப்புறம் என்னாச்சும்மா?” என்று கேட்டேன்.
“அப்புறம் என்ன? காலம் ஓடிடுச்சு. வாழ்க்கையும் ஓடிடுச்சு.”
அம்மா அதைச் சாதாரணமாகச் சொன்னாள். ஆனால், அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் என்ன இருந்தது என்று என்னால் கேட்க முடியவில்லை.
“நான் அப்படியெல்லாம் வாழ்ந்ததுக்காக இப்போ வருத்தப்படல, கவிதா. உங்க அப்பா நல்லவர். குடும்பமும் நல்லா இருக்கு. ஆனா, நான் எடுத்த முடிவைத்தான் நீயும் எடுக்கணும்னு அவசியமில்லை.”
நான் அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டேன்.
“அப்போ ஏம்மா காலையிலிருந்து என்னைப் புடவை கட்டு, சிரி, இப்படிப் பேசாதேன்னு சொல்லிட்டே இருந்த?”
அம்மா சிரித்தாள்.
“எனக்குத் தெரிஞ்சது அதுதானே, மா!”
அதற்குமேல் என்னால் எதுவும் கேட்க முடியவில்லை.
அம்மாவுக்குத் தெரிந்த வழிதான் பாதுகாப்பானது. அதைத்தான் அவள் எனக்கும் காட்டியிருந்தாள். இப்போது வேறு வழியைத் தேர்ந்தெடுப்பதற்கு எனக்கு அனுமதி கொடுத்திருந்தாள்.
“சரிம்மா,” என்றேன்.
அம்மா எழுந்து கதவை நோக்கிச் சென்றாள். வாசலில் நின்றுவிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
“அந்தப் பையன்கிட்ட இன்னும் கொஞ்சம் பேசு. உனக்கு மனசுக்குப் பிடிச்சிருந்தா தைரியமா முடிவு எடு.”
நான் புன்னகையுடன் தலையாட்டினேன்.
அதன் பிறகு, அருணும் நானும் மீண்டும் சந்தித்தோம்.
இந்த முறை பத்து நிமிஷம் என்ற காலக்கெடு இல்லை. வேலை, குடும்பம், எதிர்காலம் என்று பல விஷயங்களைப் பற்றிப் பேசினோம். பல விஷயங்களில் எங்களுடைய கருத்துகள் ஒத்துப்போயின. சில விஷயங்களில் முரண்பட்டோம். ஆனால், கருத்து வேறுபாடு வந்ததற்காக யாரும் முகத்தைத் தூக்கிக்கொண்டு உட்காரவில்லை.
மூன்று வாரங்களுக்குப் பிறகு, ஒருநாள் மாலை காபி குடித்துக்கொண்டிருந்தபோது அருண் கேட்டான்.
“நம்ம வீட்ல எல்லாரும் கல்யாணத்துக்குப் பச்சைக்கொடி காட்டிட்டாங்க. நீ என்ன நினைக்கிற, கவிதா?”
“எனக்கும் சம்மதம்தான்.”
அவன் முகம் மலர்ந்தது.
“நிஜமாவா?”
“ஆமாம். ஆனா, ஒரு கண்டிஷன்.”
“என்ன அது?”
“நமக்குள்ள நாளைக்கு ஏதாவது பிரச்சினை வந்தா, முதல்ல நாம ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசித் தீர்த்துக்கணும். யாரோ என்னவோ சொல்றாங்கன்னு கேட்டுட்டு நம்ம உறவுக்குள்ள விரிசலை ஏற்படுத்திக்கக் கூடாது.”
அவன் தலையாட்டினான்.
“கண்டிப்பா. நோ காம்ப்ரமைஸ் ஆன் தட்.”
“இன்னொரு சின்ன விஷயம் இருக்கு.”
“அப்பப் பட்டியல் நீளுதா? சொல்லு, கேட்கலாம்.”
“நம்ம வாழ்க்கையைப் பத்தி அந்த நாலு பேரு பேசுவாங்கன்னு யாராவது சொன்னா, அந்த நாலு பேரையும் நீங்கதான் எனக்கு நேரில் அறிமுகப்படுத்தணும்.”
அவன் சிரித்துவிட்டான்.
“எதுக்கு?”
“அவங்க என்னதான் புத்திமதியைக் கிழிக்கிறாங்கன்னு நானும் நேர்ல கேட்டுத் தெரிஞ்சுக்க வேண்டாமா?”
அன்று இருவரும் வெகுநேரம் சிரித்தோம்.
திருமணம் முடிவானது.
வீட்டில் கல்யாண வேலைகள் பரபரப்பாகத் தொடங்கின. புடவை எடுத்தார்கள். நகை பார்த்தார்கள். மண்டபம் பதிவு செய்தார்கள். பத்திரிகை அடித்து உறவினர்களுக்குக் கொடுத்தார்கள்.
இந்த முறை என் விருப்பத்தையும் கேட்க ஆரம்பித்தார்கள்.
ஒருநாள் அத்தை என்னிடம் வந்து கேட்டாள்.
“கவிதா, இந்தப் புடவை கலர் பிடிச்சிருக்கா பாரு.”
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.
“ரொம்பப் பிடிச்சிருக்கு,த்தை.”
“அப்போ இதையே முடிவு பண்ணிடலாம்.”
“தாராளமா!”
அத்தை திரும்பிச் செல்லும்போது மீண்டும் என்னைப் பார்த்தாள்.
“என்னடி, இன்னைக்கு வழக்கம்போல என்கிட்ட எந்தத் தத்துவமும் பேசல?”
நான் சிரித்தேன்.
“கேள்வி கேட்க வேண்டிய நேரத்துல கரெக்டா கேட்பேன்,த்தை!”
அத்தையும் சிரித்துவிட்டுச் சென்றாள்.
அன்று மாலை எதிர்வீட்டு பத்மா மாமி வீட்டுக்குள் வந்தாள்.
“என்ன கவிதா, கல்யாண வேலை எல்லாம் களைகட்டுதா? உங்க அத்தை சொன்னாங்க. இந்த முறை எல்லாமே உன் விருப்பப்படிதான் நடக்குதாமே!”
“ஆமாம் மாமி. கல்யாணம் எனக்குத்தானே? அப்புறம் என் விருப்பப்படி இல்லாம வேற யாரு விருப்பப்படி நடக்கும்?”
பத்மா மாமி ஒரு நொடி திகைத்தாள். பிறகு சுதாரித்துக்கொண்டு சிரித்தாள்.
“அதுவும் சரிதான் போ!”
அவள் கிளம்பியதும் நான் வாசலுக்கு வந்து நின்றேன்.
எதிரே இருந்த வீடுகளைப் பார்த்தேன்.
ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஒவ்வொரு கதை இருந்தது. அந்தக் கதைகளில் எத்தனை பேருடைய ஆசைகள் மற்றவர்களுடைய கருத்துகளுக்காக மாற்றப்பட்டிருக்குமோ!
யாராவது என்னைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கலாம், திட்டிக்கொண்டு இருக்கலாம், கேலி செய்துக்கொண்டு இருக்கலாம். ஆனால், எனக்குச் செய்ய வேண்டிய வேலைகள் இன்னும் நிறைய இருந்தன. அலுவலகத்தில் முடிக்க வேண்டிய வேலை, வாங்க வேண்டிய பொருட்கள், கல்யாண ஏற்பாடுகள்.
அந்த நாலு பேர் என்ன பேசுவார்கள் என்று யோசிப்பதைவிட, என் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பதே முக்கியமாக இருந்தது.
திருமணத்துக்கு இன்னும் இரண்டு நாட்கள்தான் இருந்தன.
அன்று அத்தை வீட்டுக்கு வந்திருந்த சில சொந்தக்காரப் பெண்களிடம் என்னைப் பற்றிப் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தாள்.
“நம்ம கவிதா கொஞ்சம் திமிருப்பிடிச்ச பொண்ணுதான். ஆனா, தன் மனசுக்குச் சரின்னு படுறதைத் தெளிவா செய்வா.”
அதை ஓரமாக நின்று கேட்டுக்கொண்டிருந்த எனக்குச் சிரிப்பு வந்தது.
நான் அறைக்குத் திரும்பும்போது அத்தை என்னைப் பார்த்தாள்.
“என்னடி தனியா நின்னு சிரிக்கிற?”
“ஒண்ணுமில்லைத்தை.”
“சொல்லுடி, என்ன விஷயம்?”
“அந்த நாலு பேர்ல ஒருத்தர் நீங்கதான்ங்கிற உண்மையை ரொம்ப லேட்டா கண்டுபிடிச்சிட்டேன்னு நினைச்சேன்!”
அத்தை ஒரு நொடி என்னை முறைத்துப் பார்த்தாள். பிறகு அவளும் சிரித்துவிட்டாள்.
“போடி லூசு!”
நான் என் அறைக்குள் சென்று கதவைச் சாத்தினேன்.
இன்னும் இரண்டு நாட்களில் என் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்போகிறது. எல்லாமே நான் நினைத்த மாதிரி நடக்குமா என்று தெரியாது. யாரும் என்னைப் பற்றிப் பேச மாட்டார்கள் என்ற உத்தரவாதமும் இல்லை.
ஆனால், இனிமேல் யாராவது வந்து,
“ஐயோ… நாலு பேரு நாலு விதமா பேசுவாங்களே!”
என்று சொன்னால், நான் ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்பேன்.
“பேசட்டும் விடுங்க. அவங்க பேசுறதுக்காக நான் ஏன் என் வாழ்க்கையை மாத்திக்கணும்?”
அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டியது நான் அல்ல.
அந்த நாலு பேர்தான்.
அவங்க யாருன்னு முதல்ல கண்டுபிடிச்சுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு, அவங்களைப் பத்திப் பயமுறுத்துறவங்களுக்குத்தான்!
Discover more from சொல்வனம் | இதழ் 379 | 22 நவ 2026
Subscribe to get the latest posts sent to your email.
