1953-ல் எனக்கு ஐந்து வயது. இப்போது இருப்பதைப் போலவே, அந்தக் காலத்திலும் ஹிந்துக்கள் சரஸ்வதி பூஜை அன்றுதான் கல்வி கற்றுக் கொடுக்க ஆரம்பிப்பார்கள். இதை வித்யாரம்பம், படிப்புச் சொல்லித் தருதல் என்பார்கள். எங்கள் சொந்த ஊரான தாதன்குளத்தில், ஒரு சரஸ்வதி பூஜையன்றுதான் எனக்குப் படிப்பு சொல்லித் தர ஆரம்பித்தார்கள். தாதன்குளத்தில் ‘சி.எஸ்.ஐ.’எனப்படும் சர்ச் ஆஃப் சவுத் இந்தியா அமைப்பு நடத்தி வந்த ஆரம்பப் பள்ளி இருந்தது. இதன் ஹெட் மாஸ்டர் சாமுவேல்.

என்னுடைய வித்யாரம்பம் உறவினர்களை எல்லாம் அழைத்து, விருந்து வைத்து, வெகு விமரிசையாக நடந்தது. உறவினர்கள் சூழ்ந்திருக்க தலைமை ஆசிரியர் சாமுவேல், புத்தாடை அணிந்திருந்த என்னைத் தன் மடியில் அமர வைத்து, பச்சரிசி நிரப்பப்பட்டிருந்த தம்பாளத்தில் என் ஆள்காட்டி விரலைப் பிடித்து ‘அ’னா, ‘ஆ’வன்னா என்று எழுதினார். சாமுவேல் சாரின் முகம் இன்னும் நினைவிலிருக்கிறது.
தாதன்குளம் பள்ளிக்கு ஒன்றிரண்டு மாதங்கள்தான் போயிருப்பேன். அப்பாவுக்கு ஆபீஸ் கொக்கிரகுளத்தில். தாதன்குளத்திலிருந்து தினசரி ரயிலியில் சென்றுவந்தார்கள். என் அம்மாவுக்கு திருநெல்வேலி டவுன். தினசரி ரயிலில் சென்று வருவது கஷ்டமாக இருக்கிறது என்று அப்பா, திருநெல்வேலி டவுனுக்கு, அம்மா வீட்டுக்கே எங்களை எல்லாம் அழைத்துச் சென்றுவிட்டார்கள்.
திருநெல்வேலி டவுனில் ஷாஃப்டர் ஹைஸ்கூல் ரொம்பப் பிரபலமான பள்ளி. இதற்கு ஈஸ்டர்ன் பிராஞ்ச், வெஸ்டர்ன் பிராஞ்ச் என்று கிளைப் பள்ளிகள் உண்டு.
அப்பா தாதன்குளத்திலிருந்து டி.சி. வாங்கி வந்து, டவுன் தெற்குப் புதுத் தெருவிலிருந்த ஈஸ்டர்ன் பிராஞ்சில் சேர்த்து விட்டார்கள். இந்தப் பள்ளியில்தான் எனக்கு இரண்டு வகுப்புகள் முன்னதாக. வண்ணதாசனும் படித்தார். பிறகு கலாப்பிரியாவும் இதே பள்ளியில் படித்தார். எனக்கு அப்போது அவர்களை எல்லாம் தெரியாது.
ஈஸ்டர்ன் பிராஞ்சில் முதல் வகுப்பில் சேர்ந்துதான் படித்தேன். ஆசிரியர் பெயர் நல்லபெருமாள் பிள்ளை. நல்ல உயரம், கதராடைதான் அணிவார். ‘அ’னா, ‘ஆ’வன்னா, வாய்பாடு எல்லாவற்றையும் வகுப்பே சத்தம் போட்டுச் சொல்லும். பள்ளிக்குச் சொந்தக் கட்டிடம் கிடையாது. ஒரு பெரிய வீட்டின் மாடிப் பகுதியில் பள்ளி வகுப்புகள் இயங்கி வந்தன. அதுவும் சி.எஸ்.ஐ. நிர்வாகத்தின் கீழ் செயல்பட்ட பள்ளிதான். ஹெட்மாஸ்டரின் பெயர் டேனியல். பள்ளிக்கு லேட்டாக வந்தால் பிரம்பினால் அடிப்பார்.
அதே பள்ளியில் ஆறாவது வகுப்பை மருதகுளம் அகஸ்டஸ் சார்வாள் வகுப்பில் முடித்தேன். நான் ஃபர்ஸ்ட் ஃபாம் ‘டி’ செக்ஷன். ‘ஏ’ செக்ஷனில் ஆர்தர் ஆசீர்வாதம் என்ற ஆசிரியர்தான் வகுப்பாசிரியர். மல்வேஷ்டி கட்டி, அதன் மேல் சட்டையும், கோட்டும் அணிந்திருப்பார். ஃபுல் கோட்டின் கைக்குள் பிரம்பை மறைத்துவைத்திருப்பார். எப்போதும் மென்றுகொண்டே இருப்பார். மாணவர்கள் ‘சார்வா அல்வா சாப்பிடுகிறார்’ என்பார்கள். ஃபர்ஸ்ட் ஃபார்ம் ‘சி’ செக்ஷனின் ஆசிரியர் அகஸ்டீன் சார். அவருக்குப் பிள்ளைகளை அடிக்க மனசே வராது. மாணவர்களிடம் ரொம்பப் பிரியமாக இருப்பார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் ராகவன் ஐயங்கார். சைக்கிளில் பள்ளிக்கூடத்துக்கு வரும் பாலையா சார்வாள் ரொம்பக் கண்டிப்பானவர். ஆறு முடிந்து ஏழாவது வகுப்பு போகும்போது, அப்பா என்னை ஸ்ரீவைகுண்டத்தில் சித்தப்பா வீட்டில் கொண்டு போய்விட்டார்கள். சித்தப்பா வீட்டுக்கு என்னை அப்பா அனுப்பி வைத்ததற்கான காரணம் இன்று வரை எனக்குத் தெரியவில்லை. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் உயர்நிலைப் பள்ளியில் ஏழாவது வகுப்பில் சேர்ந்தபோது நான் ‘ஏ’ செக்ஷனில் இருந்தேன். சேஷய்யர்தான் வகுப்பாசிரியர். குண்டாக இருந்தார் சேஷய்யர். தெப்பக்குளத் தெருவில் அவருக்கு வீடு. வேட்டியைத் தழையத் தழைய கட்டமாட்டார், முழங்கால் வரைதான் அவருடைய வேட்டி இருக்கும். மகா கோபக்காரர். தன் அகலமான உருட்டுக் கையால் தலையில் குட்டுவார், முதுகில் அறைவார், காதைப் பிடித்துத் திருகுவார். சேஷய்யர் என்றால் டெர்ர்தான். இருளப்பக் கோனார்தான் பள்ளியின் தமிழாசிரியர். அவருக்கு சதா சளித் தொந்தரவு இருந்தது. தன் நாற்காலியைச் சுற்றி மூக்கைச் சிந்திப் போட்டுவிடுவார்.
சண்முகம் சார் கணக்கு எடுத்தார். முகமது அலியார் விஞ்ஞான பாடம் எடுத்தார். நான் டீடெய்ல் வகுப்புக்கு வரும் சுப்பிரமணிய ஐயருக்கு கால் சற்று ஊனம். அவர் மாடிப்படியேறி வருவதைப் பார்த்தால் பாவமாக இருக்கும். எட்டாவது வகுப்பை பாளையங்கோட்டை கதீட்ரல் ஹைஸ்கூலில் படித்தேன். எஸ். எஸ். எல். சி. வரை இந்தப் பள்ளிக்கூடத்தில்தான் படித்தேன்.
ஜான் பொன்னையா சட்டைக்கு மேலே ஓவர் கோட்டு அணிந்திருப்பார். இவர்தான் எட்டாங் க்ளாஸில் எனது வகுப்பாசிரியர். ஆங்கில இலக்கணம் அருமையாகக் கற்றுத் தருவார். ஆக்டிவ் வாய்ஸ், பாஸிவ் வாய்ஸ் பாடத்தை இன்றுவரை நினைவிருக்கிறது. எனக்கு கணக்கே வராது. தாமஸ் சார்வாள்தான் கணக்கு எடுத்தார். கணக்குத் தேர்வில் முட்டை எடுப்பது சர்வ சாதாரணம். ஒன்பதாவது வகுப்பில் ஸ்டீபன் தம்பான் வகுப்பு ஆசிரியர். அப்பா என்னை இவரிடம் டியூஷனுக்குப் போட்டார்.
ஸ்டீபன் தம்பான் வீடு குலவணிகர்புரத்தில் இருந்தது. எங்கள் வீடோ பாளை மார்க்கெட் பக்கம். வீட்டிலிருந்து தம்பான் வீட்டுக்கு ஒரு மைலாவது இருக்கும். நடந்துதான் போக வேண்டும். கடனே என்று டியூஷன் போனேன். தாம்ஸன் அஸரையா இறுக்கமாகப் பேண்ட் போடுவார். பேண்ட் கட்டையாகவும் இருக்கும். இவர் சோஷியல் ஸ்டடீஸ் எடுத்தார். கைலாசம் ஐயர் குடுமி வைத்திருப்பார். வண்ணார்பேட்டையிலிருந்து சைக்கிளிலேயே வருவார். இவர்தான் விஞ்ஞானம் எடுத்தார். அடிக்கவே மாட்டார்.
தலைமையாசிரியர் சொர்ண பாண்டியன் ரொம்பக் கண்டிப்பானவர். கோபம் வந்தால் கண்மண் தெரியாமல் அடித்துவிடுவார்.
அந்தக் காலத்தில் மாணவர்களை அடிக்க ஆசிரியர்களுக்கு உரிமை இருந்தது. எப்படியோ கதீட்ரல் ஹைஸ்கூலில் எஸ். எஸ். எல். சி.யை முடித்துவிட்டு வெளியே வந்தேன்.
Discover more from சொல்வனம் | இதழ் 378 | 08 நவ 2026
Subscribe to get the latest posts sent to your email.
