1. மரங்களின் தியானம்

நீரூற்ற வேண்டி எவரையும் தேடிப்போவதில்லை
மற்றபடி கிளைகளையோ
கனிகளையோ பூக்களையோ அபகரித்து
கொண்டு போனாலும்
பின்தொடரப் போவதில்லை
பின்தொடர முடியாதவற்றுக்குப் பின்னேயும்
சிலர் நெருப்பு வைக்கவும் விரைந்து
வருகிறார்கள்.
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
கூடுகளைச் சுமந்து
நெடுங்காலம் ஒரே இடத்தில்
விரிந்து இருக்கின்றன அவை
2. பிரார்த்தனைகளின் சுவடு
தடமழிந்த பாதையொன்றில்
சொற்களை வீசிவிட்டு
நகர்ந்துகொண்டிருக்கிறேன்.
நீங்கள் கடந்துபோன இரவுகளில்
மௌனம்
சுடர்விளக்கைப் போல
எரிந்துகொண்டே இருக்கிறது.
ஆழத்தில்
ஒரு சிறிய வெளிச்சம்
இன்னமும் துடித்துக்கொண்டிருக்கிறது.
வார்த்தைகள் ஓய்ந்த இடத்தில்
நான் விட்டுச்சென்ற பிரார்த்தனைகள்
உங்களுக்குத் தெரியாமல் போயிருக்கலாம்.
என்னை நீங்கள் மறந்திருக்கலாம்
நினைவிலிருந்தும்
ஒளியின் கீற்றை மறைத்திருக்கலாம்.
துளிர்க்காத பட்டமரத்தின்
வேரில் நீர் தேங்கியிருக்கலாம்.
நினைந்துருகச்
சிலர் இருக்கிறார்கள்,
பலர் பிறக்கவும்
கருவுற்றிருக்கிறார்கள்.
3. நிலை
சொற்களால் ஒரு சுவரை உயர்த்துகிறீர்கள்.
கைவிட்டுப்போகும் ஒவ்வொரு கணத்திற்கும் பின்னால்
ஒரு மிகப்பெரிய தந்திரம் ஒளிந்திருக்கிறது.
அதை நியாயப்படுத்தித் தீர்ப்பதற்கு வார்த்தைகளை அடுக்குகிறீர்கள்.
தேநீர்க் கோப்பைகளின் விளிம்பிலும்,
உதிரும் சிகரெட் சாம்பலிலும்,
அறையின் இருண்ட மூலைகளிலும் நிரம்பிக்கொண்டே இருக்கின்றன
உங்கள் தன்னிலை விளக்கங்கள்.
ஒரு துரோகம் நடந்து முடிந்த பிறகும்
அந்தக் கத்தியின் பிசுபிசுப்பு மாறுவதில்லை.
இரத்தம் உறைந்த அதன் கூரைக் கழுவ
நீங்கள் அவசர அவசரமாகச் சிந்தும் கண்ணீர்,
அது நீர்த்துப்போன ஒரு தற்காலிகச் செயல்.
துடைக்கப்பட்ட கத்தி பளபளக்கலாம்
ஆனால் அதன் அலகு இன்னமும்
அந்த வெட்டை நினைவில் வைத்திருக்கிறது.
அதற்கு மேல் அந்தக் கண்ணீருக்கு ஒரு பொருளுமில்லை,
ஒரு கவனமுமில்லை.
நகரத்தின் வீதிகள் எப்போதும் போலக் காலியாகத்தான் இருக்கின்றன.
மஞ்சள் விளக்குகளின் அடியில்
நிழல்கள் ஒன்றையொன்று
வெட்டிக்கொண்டு கடக்கின்றன.
இப்போது எல்லாமே தெளிவாகிவிட்டது.
விளக்கங்களை மூடி வையுங்கள்.
உங்கள் கம்பளங்களைச் சுருட்டிக்கொள்ளுங்கள்.
இதற்கு மேல் பேசுவதற்கும்
பரிமாறிக்கொள்வதற்கும்
எந்தப் புதிரும் மிஞ்சவில்லை.
வெளிச்சம் அவிந்த இச்சந்தடியில்
இதற்கு மேல் என்ன இருக்கிறது?
இந்த வெறுமையை அப்படியே விட்டுவிட்டு,
அமைதியாகப் போய்விடுங்கள்.
யாரும் பார்க்காத ஒரு தெருமுனையில்
தனக்கான தையல்களைத் தானே பிரித்துக்கொண்டிருக்கிறது
என் நிழல்.
4. புதிய மசோதாவின் மீது விவாதங்கள்
முட்டையிட்டுக் குஞ்சுகள்
பொரித்தாலும்
றெக்கைகள் இல்லையெனக்
கவலையாக இருக்கிறது
முதலைகளுக்கு;
கடவுள் வஞ்சித்து
விட்டதாகக் கலங்கின்றன.
தாகத்தோடு தேடி வருவதைக்
காத்திருந்து
தின்ன வேண்டியிருக்கிறது
எனவும்
சலிக்கின்றன.
கருணையோடு
தரப்படும் சில சலுகைகளுக்கு
அவைகளும்
விண்ணப்பங்களை நீட்டுகின்றன.
தரைக்கு வரலாம்,
போகலாம்,
தண்ணீர்தான் வாழ்வு என்கின்றன.
முதலைகளுக்கு
றெக்கைகளைத் தந்தால்
என்னாகும் என்பதைச் சபை
விவாதிக்கிறது.
ஒவ்வொரு குளிர்காலக் கூட்டத்தொடரின்
விவாதங்களைத்
தொலைக்காட்சியில்
உஷ்ணத்தோடு கவனிக்கின்றன
காட்டின் விலங்குகள்.
உணவு இடைவேளைக்குப் பின்
தரப்பட்ட 10 நிமிடங்களில் சுருக்கமாக,
“முதலைகளுக்கு றெக்கைகள் தந்தால்
எங்களுக்கும் றெக்கைகள் வேண்டும்”
என்கிறது ஒரு மான்.
வெகுநேரமாகக் காத்திருந்த
விலங்குகள் கைதட்டுகின்றன.
அவைகள் கைதட்டுவதற்காக மட்டும்
உள்ளே சென்றவை.
உறங்கிக் கொண்டிருந்த ஒன்றிரண்டு
விலங்குகளை விழிக்கச் செய்துவிட்டது
அவர்களின் கரவொலி.
எல்லோருக்கும் ஒரு குளோஸ்-அப்
போடுகிறது சபையின் ஒளிப்பதிவு.
5. சிலைகளின் நிரந்தரப் போர்
முதல் சிலை உடையும் பேரொலி
உன் செவிகளை எட்டுவதில்லை.
வேடிக்கை பார்க்கும் உன் மௌனமும்
என்றோ கல்லாய்ச் சமைந்திருந்தது.
உன் மௌனத்தின் மீது வந்து சரிகிறது
உடைந்து விழும் காலத்தின் புழுதி.
அவர்கள் எதையும் மிச்சம் வைக்கப்போவதில்லை,
ஒவ்வொன்றாகச்
சரிந்துகொண்டிருக்கின்றன
காலத்தின் சாட்சியங்கள்.
உடைப்பவர்களின் கரங்களில் இருப்பது
வரலாற்றை அழிக்கும் சம்மட்டி.
அது, அவர்கள் மூளைக்குள்
கெட்டிதட்டிப் போன இன்னொரு கற்பாறை.
ஆனாலும் விந்தையைப் பார்!
அவர்களே சிலைகளை ஆழமாக நம்புகிறவர்கள்,
சிலைகளின் நிழலில் தஞ்சம் புகுந்தவர்கள்.
பூஜையறையிலிருந்து
வீதிக்கு வந்திருக்கிறது அவர்களின் மூர்க்கமான பக்தி.
ஒரு கணம் உற்றுப் பார்,
அவர்கள் சிலைகளைத்தான் உடைக்கிறார்கள்;
ஏனெனில்,
எப்படியாவது தாமும் ஒருநாள்
சிலையாகிவிடத் துடிப்பவர்கள் அவர்கள்.
இங்கு மாமிசமும் இரத்தமும்
எப்பொழுதோ பாறையாக உறைந்துவிட்டன.
மனிதர்கள் யாருமற்ற வீதியில்
நடமாடும் சிலைகள்,
நிற்கும் சிலைகளின் மீது
தொடர்ச்சியாகப் போர் தொடுக்கின்றன.
அது,
சிலைகளை உடைக்கும் சிலைகளின் நிரந்தரப் போர்.
இரத்தத்திற்குப் பதிலாகத் தெருவெங்கும் சிதறிக் கிடக்கின்றன
வரலாற்றின் துகள்களும்
சிலைகளைத் தின்ற சிலைகளின்
எச்சங்களும்.
6. அலைகடல்
மிதக்கின்ற கப்பல்கள்,
அவற்றின் கட்டுப்பாடு,
ஆழத்தின் மௌனம்,
பாதி பேசாத சொற்கள்.
திரும்பி வந்து சேராமல் போகலாம்,
உள்ளிருக்கும் காயங்கள்
கண்ணீர்த் துளிகளைத் தாங்காது.
அலையடிக்கும் துயரங்களாக அவை
எஞ்சியும் இருக்கலாம்,
எப்பொழுதும்.
7. உயிர்களை வளர்ப்பவர்கள்
வழிபாட்டுக்காகவோ
அன்பின் ஆறுதலுக்காகவோ
அவர்கள் உயிர்களை வளர்ப்பவர்கள்.
நட்பின் பெயராலும்
போலிச் சமத்துவப் பிம்பத்தாலும்
தங்கள் மனதின் கருமையை
அவர்கள் நியாயப்படுத்திக் கொள்ளவே அவ்வாறு நடந்துகொண்டார்கள்.
தனிமையின் வெறுமையை நிரப்பவும்
தங்கள் தவறுகளிலிருந்து நழுவிக்கொள்ளவும்
அவர்களுக்கு உயிர்கள் தேவைப்பட்டன.
நல்லவர்களைப் போல முகமூடி அணிந்து
காரியங்களைச் சாதித்தபடி
வளர்த்த உயிர்களையெல்லாம்
தங்கள் வன்மத்தின் வடிகாலாகவும்
குற்றங்களை மறைக்கும் கேடயமாகவும்
பயன்படுத்திக் கொண்டார்கள்.
தக்க சமயத்தில் காட்டிக் கொடுக்கவும்
மற்றவர்களை மிரட்டவும்
பயன்படுத்தப்பட்ட அந்த உயிர்கள்
கடைசியில் அனுப்பப்பட்டது என்னவோ பலிபீடங்களுக்கு.
இன்னும் தீரவில்லை அவர்களின் பசி,
இப்போதும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்
வளர்ப்பதற்குப் புதிய உயிர்களை.
நீங்கள் அருகில் போனால்
உங்களையும் கருணையோடு வளர்க்கக் காத்திருக்கிறார்கள்.
8. மூடப்பட்டவைகளின் பசி
உனதென
எஞ்சியிருக்க
ஏதுமில்லை இங்கு,
எல்லாமே திறக்கப்பட்டோ
அல்லது மூடிக்கிடந்தோ
இருக்கின்றன.
வெறுமனே மூடிவிட
முடிவதில்லை எதையும்.
திறந்திருப்பதைக் காட்டிலும்
ஒன்றை மூடுவதற்கு
ஒரு பிரத்யேக சாமர்த்தியம் வேண்டியிருக்கிறது.
பசி தீர உண்ணவியலாமல்
மூடிவைக்கப்பட்ட இருளுக்குள்
அடங்கி விம்மிக்கொண்டிருக்கிறது
எஞ்சியவர்களின் தீராப் பசி.
என்றேனும் இவ்வுலகில் நீரின்றி
முளைக்கும் பசியும்கூட.
9. அசைவே இயக்கம்
எங்கோ உதிரும்
ஒரு சிறு சருகின் சுழற்சி
நான் விழித்திருப்பதை
எனக்கு உணர்த்துகிறது.
வெயிலில் அசையும் உன் நிழல்தீண்டல்,
முழுப்பகலும் ஓடும் நகரத்து வீதிகள்,
தூரத்து விமானம் வரையும் வெண்கோடு,
நீரில் கரையும் ஒற்றை மேகம்.
எங்கிருந்தோ வந்த இச்சிறு பட்டுப்பூச்சி,
ஜன்னல் கம்பியில் வழியும் மழைத்துளி,
என் காலம் நகர்வதை
மெல்லச் சொல்கிறது.
அலை இல்லையெனில்
சமுத்திரம் இல்லை;
அசைவுகளால் மட்டுமே
ஆகியிருக்கிறது உலகம்.
அசைவு உயிர் தருகிறது
இங்குள்ள எதற்கும்;
என்றும் ஒரு பிணத்துக்கு
எந்த அசைவுமில்லை.
அசையும் யானையின் காதுகளில்
பூச்சிகளுக்கு இடமில்லை;
இலை உதிர்ந்த அசைவற்ற மரம்
கைகூப்பிய தியானி.
சுற்றிப் பறக்கும் மரங்கொத்திகளால்
அதன் மனதைக் கொத்த முடியவில்லை;
எனக்கும் உண்டு சிறகுகள்,
அசைய அதற்கும் ஓர் ஆகாயம்.
10. வாழ்வு
நகரத்தின் சாலையோரத்தில்
இறங்கிவிட்டது ஒரு மைனா.
காலை எனினும் வெயில்,
அதன் பூர்வீக நிறம்
வெளுத்திருந்தது.
ஓரடி இரண்டடி முன்னகர்ந்து சென்றது,
நான்கடி பின்நகர்ந்து வந்தது,
ஆகாயத்தை ஒருமுறை
ஏறிட்டுப் பார்த்தது.
சட்டென்று
கட்டிடங்களின் நிழற்பகுதி நோக்கிப்
பறந்து சென்றுவிட்டது.
அது தூரத்தில் பறந்து மறையும் வரை நான் பார்த்துக்கொண்டே இருந்தேன்.
11. வெறுமையின் நிறைவு
எல்லாமே இருந்தது,
ஏதோ இல்லாமல் இருந்தது.
எதுவுமே இல்லை இப்பொழுது,
எல்லாமே நிறைந்திருக்கிறது.
நிரம்பியிருப்பது,
காலியாக இருப்பது—
அமைதியில்
ஒளி துலங்கும்
காட்டின் ஒற்றையடிப் பாதையென
கண்முன்னே விரிகிறது எல்லாம் இப்பொழுது.
12. காத்திருக்கும் கிழவன்
யாரும் வரப்போவதில்லை எனத் தெரிந்த பின்னரும்
வாசற்படியிலேயே அமர்ந்திருக்கிறான் ஒரு கிழவன்.
அவனது பார்வையில்
மெல்ல ஒளி மங்கிக்கொண்டிருக்கிறது.
இந்த நாளின் இருள் கவிய
இன்னும் சில மணி நேரம் இருக்கிறது.
13. ஒரு நாள் தொடங்கப்போகிறது
இளவெயிலில் மழைக்குப் பின்
தெருவோரக் குழியில்
முழு வானமும் தலைகீழாய் மிதக்கிறது.
ஒரு சிறிய எறும்பு
அந்த வானத்தைக் கடக்கக் கரை தேடுகிறது.
நாம் விட்டுச் சென்ற காலடிச் சுவடுகளும்
அந்த மழைநீரில் கரையவே காத்திருக்கின்றன.
ஜன்னலின் திரைச்சீலையைத் திறந்து,
அடுக்ககத்தின் உயரத்திலிருந்து
இந்த நகரத்தைப் பார்க்கிறாள் ஒரு சிறுமி.
ஒரு நாள் தொடங்கப்போகிறது.
Discover more from சொல்வனம் | இதழ் 377 | 25 அக் 2026
Subscribe to get the latest posts sent to your email.
