
புது மொழி
இந்த ஊருக்கு வந்து
எட்டு வருடங்கள் கழிந்து
ஒரு வழியாக
இவ்வூரின் மொழியைக்
கற்றுக்கொள்ளத் தொடங்குகிறேன்.
இப்பொழுதெல்லாம்
பற்பல கதைகள் காதில் விழுகின்றன.
புதுப்புது அர்த்தங்கள் விளங்குகின்றன.
வெவ்வேறு மனிதர்கள் அறிமுகமாகிறார்கள்.
குழந்தைகள் என்னுடன் விளையாட விழைகிறார்கள்.
தெருப் பூனைகள் என் வீட்டிற்குள்
வந்து போகத் தொடங்கியிருக்கின்றன.
இதோ இப்பொழுது கூட
தூரத்தில் பாடிக் கொண்டிருக்கும்
இவ்வூரின் காட்டுப் புறா ஒன்றுடன்
கதை பேசத் தான்
கிளம்பிக் கொண்டிருக்கிறேன்.
பரிசு
பார்க்கும் அத்தனையையும்
துரத்தித் தீர்த்த தெருப்பூனையொன்றிற்கு
அதன் வேட்டையை நிறுத்தும் பொருட்டு
உணவிடத் தொடங்கினாள்.
பனிக்காலம் முழுக்க
அவள் வீட்டிலேயே கழித்து
கொழுப்பு தரையைத் தொடுமளவு
பருத்துப் பெருத்திருந்த அப்பூனை
வசந்த காலத்தின் தொடக்கமொன்றில்
வாயில்
எலியொன்றைக் கவ்வியவாறே
அவளது வாயிலில் காத்து நிற்கிறது.
Hibiscus
கவிதையொன்றில் பயன்படுத்த இம்மலரின்
தமிழ்ப் பெயரை இணையத்தில் தேடுகிறேன்.
‘செம்பருத்தி’ என்கிறது.
நீண்ட சூலகம்.
நன்கு விரிந்து மடிந்திருக்கிற இதழ் வட்டம்.
அதே மிருதுவான இதழ்கள் தாம்.
ஆனாலும்
ஏதோ இடறிக் கொண்டேயிருக்கிறது.
தற்போதைக்கு
‘நான் அறிந்திராத
நீங்கள் அறிந்திராத
திருச்சி அன்பு நகரின்
செம்பருத்திப் பூக்கள் அறிந்திராத
செம்பருத்தி’
என இதை
அழைத்துக் கொள்வோம்.
Discover more from சொல்வனம் | இதழ் 376 | 11 அக் 2026
Subscribe to get the latest posts sent to your email.
