துளிம இயற்பியலும் வேத வேதாந்தங்களும்

‘நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’

“நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. நீங்கள் கேட்பதும் தெளிவாக இல்லை.”

‘ஒரு உதவிப் பேராசிரியருக்கு நாங்கள் விளக்க வேண்டுமா? சரி, உங்களுக்கும் கம்யூனிசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?’

“நான் எந்தக் கட்சியும் சார்ந்தவனில்லை.”

‘அப்படியென்றால், பெர்க்லியில் ஆப்பன்ஹைமரின் மாணவனாக நீங்கள் படித்த காலத்தை நினைவூட்ட வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருக்கிறது.’

“நல்லது. நான் அதில் ஒரு செயல்பாட்டாளன் அல்ல. இப்போதும் எதிலுமில்லை.”

‘நீங்கள் மாணவர்களை கம்யூனிசத்தை நோக்கி இழுப்பதாக, தூண்டுவதாக, உங்கள் வகுப்புக்களை அதற்கு பயன்படுத்துவதாக…’

“நிறுத்துங்கள். நான் மாணவர்களுக்கு நேர்மையாக பாடம் மட்டுமே கற்பிக்கிறேன். எந்த கட்சி கோட்பாடுகளுமல்ல. தேவையென்றால், அவர்களிடமே கேளுங்கள்.”

‘விசாரணை முடிந்தது. நாங்கள் மீண்டும் அழைத்தால் நீங்கள் வர வேண்டும்.’

“என் தேசம் விரும்பினால் அவசியம் வருவேன்.”

1940 இறுதிகளில் பனிப்போர் பீதி அமெரிகாவை சூழ்ந்திருந்தது. HUAC- என்ற அமைப்பு,( The House Un-American Activities Committee) அமெரிக்காவின் நோக்கங்களுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களை அடையாளம் காணும் நோக்கில், காரணமின்றி, குடி மக்களை அமெரிக்க இறையாண்மைக்கு எதிரானவர்கள் என்று சுட்டிக் காட்டி வந்தது. அரசாங்கத்தில், கலைத்துறையில், கல்வித் துறையில் கம்யூனிச சித்தாந்தம் ஊடுறுவாமல் தடுக்க, சந்தேகப்படும் நபர்களை பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாக்கியது HUAC. ஆய்வற்ற குற்றச்சாட்டுகள், வழக்கமான அவமானப்படுத்துதல் எல்லாம் நடந்தன. பொதுவில் விசாரணை நடந்தாலும் ஐயமுறப்பட்ட மனிதர்கள் பீதியில் இருந்தனர். சாட்சிகள் அழைக்கப்பட்டு, சில பெயர்களைச் சொல்லுமாறு வலியுறுத்தப்பட்டு, அவ்வாறு செய்ய மறுத்தவர்களையும் சந்தேகப் பட்டியலில் வைத்தார்கள். வெற்று சந்தேகத்தின் பேரிலேயே பலரது தொழிலும் முடக்கப்பட்டது. அச்சம் என்னும் ஆயுதம் கொண்டு பலரது சுய விருப்பக் கொள்கைகள் அழிக்கப்பட்டன.

அறிவுக்கூர்மை மிக்க, அரசியல் சாராத, ப்ரின்ஸ்டன் பல்கலையில் குவாண்டம் இயற்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக இருந்த டேவிட் போம் (David Bohm) இந்த HUACவின் விசாரணைக்கு 1949ல் உட்படுத்தப்பட்டார். தன்னுடன் பணிபுரிந்தவர்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்கும்படி வற்புறுத்தப்பட்டார். அமெரிக்க இறையாண்மையின் திருத்தப்பட்ட 5வது பிரிவின் கீழ் அவர் சாட்சியம் சொல்ல, காட்டிக் கொடுக்க மறுத்தார். 1950ல் அமெரிக்க காங்கிரசை எதிர்த்தார் என்று அவர் கைது செய்யப்பட்டு, குற்றமற்றவர் என்று 1951ல் விடுதலை செய்யப்பட்டார். அதற்குள் அவரை பதவி நீக்கம் செய்திருந்த ப்ரின்ஸ்டன் பல்கலை அவரது ஒப்பந்தத்தை புதுப்பிக்க மறுத்துவிட்டது. நீதிமன்றம் விடுதலை செய்த ஒருவரை ஒரு பல்கலை தண்டித்தது.

போமின் மிக நெருங்கிய தோழரும், அவரது மொழி பெயர்ப்பாளராக மேம்பட்ட கல்விக் கூடுகைகளில் பங்கேற்றவரும், அவரது அறிவுசார் நண்பருமான ஐன்ஸ்டெய்ன், வெளி நாட்டில் பணி செய்ய வாய்ப்பு கிடைப்பதற்காக சிபாரிசுக் கடிதம் தந்தார். சாவ் பௌலோ பல்கலையில் போம் சேர்ந்தார். அவர் அங்குசென்று சேர்ந்த ஒரு மாதத்தில் அமெரிக்க தூதரகம் அவரது கடவுச்சீட்டை பறிமுதல் செய்தது. அமெரிக்கன் கல்வித் துறையில் அவர் என்றென்றைக்குமாக விலக்கிவைக்கப்பட்டார்.

சாவ் பௌலோவிலிருந்து இஸ்ரேல் பின்னர் இலண்டனின் பிர்க்பெக் கல்லூரி. அந்தக் கல்லூரியில் பணி செய்து ஓய்வு பெற்றார். இந்தப் புலம் பெயர் வாழ்வில், நிறுவனத்தின் பாதுகாப்பின்றி, கடும்பழமை தீண்டாத இடத்தில் அவர் துளிம இயற்பியல் இயங்கியலை புதுப் பார்வை கொண்டு பார்த்தார். 

இந்தப் பாதையில் இவரைச் செல்லத் தூண்டியதும் ஐன்ஸ்டெய்ன் தான். ப்ரின்ஸ்டனில் இருந்த போதே ‘கோபன்ஹேகன் உணர்த்தும் குவாண்ட இயங்கியல்’ (Copenhagen Interpretation of Quantum Mechanics)என்ற நூலை எழுதினார் போம் .

உலகில் பல இயற்பியலாளர்களும் கோபன் ஹேகன் விளக்கத்தை ஏற்றுக் கொண்டவர்களே. குவாண்ட இயங்கியலை மிகத் தெளிவாகச் சொன்ன புத்தகம் இதுதான் என்று போற்றிய ஐன்ஸ்டெய்ன், தான் அதிலிருக்கும் எந்த வார்த்தையையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று போமிடம் சொன்னார். “ஏதோ ஒன்று ஆழமாக இருக்கிறது; இந்தக் கணக்கீடுகளின் அடி நாதமாக உண்மை மறைந்திருக்கிறது.” போம் அதைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டார்.

போமிற்கு ஒரு குறிப்பட்ட பரிசோதனையும், அதைப் பார்ப்பதும் மிகவும் பிடிக்கும். ஒன்றுக்குள் ஒன்று பொருந்தும், இடையே இடைவெளியை நிரப்பும் கனமான சிரப்பைப் போன்ற திரவம் இருக்கும், இரு சுத்தமான உருளைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த திரவத்தில் ஒரு இங்க் துளியை இடுங்கள். உள்ளிருக்கும் குடுவையை அதாவது உருளையை மிக மெதுவாக கைப்பிடி கொண்டு சுழற்றுங்கள். மிக நீளமாகும், இங்க் ஒரு நூலைப் போலாகி, பின்னர் மெலிந்து, இன்னமும் மெலிந்து மறைந்துவிடும். மீண்டும் தெளிவான திரவத்தைத்தான் பார்ப்பீர்கள். இங்கின் சுவடில்லை.

இப்போது கைப்பிடியை, அதே அளவு சுற்று எண்ணிக்கையில், மாற்றிச் சுழற்றுங்கள். அந்த நூல் மீண்டும் இப்போது காணப்படுகிறது, கெட்டியாகி வருகிறது, திரள்கிறது, முன்னர் இருந்தது போலவே அந்த இங்க் துளி காணப்படுகிறது. அந்த ஒழுங்கு எப்போதும் அழிக்கப்படவில்லை- சுருளென சுற்றிக் கொண்டுள்ளது.

இதுதான் உண்மை என்று போம் சொன்னார். தனித்தனியே நாம் பார்க்கும் பொருட்கள், துகள்கள், காலம், நேரம் போன்றவை, வெளிப்படும் ஒழுங்கின்பாற்பட்ட காணக்கிடைக்கும் தெளிவான வரிசைகள்-(Explicit Order- காணப்படும் மேற்பரப்பு) (அதாவது காணும்போது விரிவடையும், மடித்தலற்ற வகைமைகள். இதற்குக் கீழ் இருப்பது மிகவும் ஆழமானவை. அதை அவர் உட்பொதிந்த ஒழுங்கு (Implicit Order) என்று அழைத்தார். ஒவ்வொன்றும் மடித்தலாகி இன்னொன்றாக மாறுவது- முழுமையானது, பிரிவற்றது.

நிலையாக நடைபெறும் இதை அவர், (அதாவது, விரிதலும், மீள் சுற்றுதலும்) ஹோலோ இயக்கம் (Holomovement) என அழைத்தார். இது ஒரு பொருளல்ல, செயல்முறை. இந்த உயிருள்ள, பரவுதலும், சுருளும் தன்மையும் உள்ள இதை துல்லியமாக விவரிப்பது இயலாத ஒன்று. இப்படிப் பாருங்கள், துள்ளும் மிகச் சிறிய பந்தல்ல எதிர்மின்னணு. இந்த ஹோலோ இயக்கத்தின்படி விரிந்தும் சுருண்டும் செயல்படும் ஒன்று அது. கண்களுக்குத் தெரியாத ஒரு கட்டளை, அந்த இங்க்கை தோன்றி, மறைந்து மீண்டும் தோன்றச் செய்வது நாமறியாத ஒன்றாகவே இருக்கும், நமக்கு அதை எப்படிப் பார்ப்பது என்ற தெளிவில்லாவிடில். இதை தத்துவம் என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டாம், போம் அதற்கு கணித விளக்கமளித்தார்.

1952ல், டேவிட் போம், குவாண்ட இயங்கியலுக்கு முழு மறுவடிவமைப்பு தரும்  “de Broglie–Bohm pilot-wave theory” (டி ப்ரோக்லி போம் வழிகாட்டி அலைக் கோட்பாடு)நூலை வெளியிட்டார். மரபார்ந்த குவாண்ட இயற்பியலில், அளக்கும் வரை துகள்களுக்கு தெளிவான நிலை இல்லை. போமின் கூற்றுப்படி எப்போதுமே தெளிவான நிலைத் தன்மை உள்ளது. ‘குவாண்ட மின்னழுத்தம்’ (Quantum Potential)என்று அவர் குறிப்பிடும் அலைப்புலம் (Wave field)  இதில் பங்காற்றுகிறது. எவ்வாறு? இந்த அலைப்புலம் துகள்களை வலிமையாக அழுத்தாது. மாறாக அவற்றிற்கு தகவல்களைத் தரும். நிகழ்ச்சித் தருணத்திலேயே, நிகழ்விடத்தை மட்டுமே சாராது, முழு அமைப்பின் தகவல்களும் அதனிடம் இருக்கும்.

போமின் கூற்றுப்படி நிகழ்விடம் மட்டுமே சாராது நடைபெறும் இது ஒரு புதிரல்ல. உலகத்தில் மிக இயற்கையாக நிகழ்கிறது இது. பின்னிப்பிணைந்து சிக்கி விண்மீன் மண்டலத்தில் எங்கோ இருக்கும் ஒரு துகள் இங்கிருக்கும் ஒன்றின் குணங்களை வெளிப்படுத்தி செயல்படுவது, பயமுறுத்தும்  சமிக்ஞை அல்ல. மாறாக, அவை என்றும் உண்மையாகப் பிரிந்தவை அல்ல. உட்பொதிந்த ஒழுங்கின் மடிப்புகள் அவை.

அவரது இந்தக் கோட்பாட்டை 1964ல் போமால் ஈர்க்கப்பட்ட ஜான் பெல் நிரூபித்தார். நிகழ்விடம், அதாவது அந்த ‘லோகல்’ எல்லைகளுக்குள், அந்தப் பொருளுக்கு, நிச்சயமான குணங்களும், அந்த எல்லைக்குள்ளேயே ஒன்றின் மேல் மற்றொன்றும், மற்றொன்றின் மேல் ஒன்றும்  ஏற்படுத்தும் தாக்கம் அந்த எல்லைக்குள்ளேயே நிகழும் என்று சொல்லும் எந்தக் கோட்பாடும் ஏற்புடையதல்ல. இந்தப் ‘பிணைப்புச்சிக்கல்’  (Entanglement) பரிசோதனைக்காக, அலெய்ன் ஆஸ்பெக்ட், ஜான் க்ளாஸர், ஏன்டன் செய்லிங்கர் ஆகியோருக்கு 2022ம் ஆண்டு இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பிரிந்து காணப்படும் இந்த அகிலம் ஒன்றே. பல தசாப்தங்களுக்கு முன்னரே போம் இதை அறிந்திருந்தார். பல இயற்பியலாளர்கள் சமன்பாட்டை வடிவமைப்பதுடன் நின்றுவிடுவார்கள். ஆனால், போம் அப்படியல்ல. உட்பொதிந்த ஒழுங்கு அல்லது கட்டளை என்பதுதான் ஆழ்ந்த உண்மையென்றால், அனைத்தும் அதிலிருந்து சுருள் நீக்கம் பெறப்பட்டு வந்தவை என்றால், பிரக்ஞை இதில் எங்கே பொருந்துகிறது?

அவரது விடை ‘தீவிரமான அடிப்படைக் கூறு’. மனம் (மூளை) மற்றும் பொருள் இரண்டும் தனித்தனியானவை அல்ல. ஒரே அடிப்படை இயக்கத்தின் இருவேறு அம்சங்கள் அவை. ‘சோமா (பொருண்மையான) முக்கியத்துவம்’ (Soma significance) என்ற ஒற்றைச் சொல் இணைப்பால் அதை அவர் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு நிகழ்விற்கும் பொருண்மை திசையனும், (பரிமாணம்)அர்த்தமுள்ள முக்கியத்துவம் வாய்ந்த திசையனும் உண்டு. அவை ஒன்றிலொன்று பரவுகிறது. அர்த்தம், பொருளிற்கு வடிவமைப்பு தருகிறது; (உதாரணம் பந்து) பொருள் அர்த்தத்தை உணர்த்துகிறது. இவ்விரண்டில் எதற்கும் முதன்மையில்லை. (நம்மைப் போல அவை பிரிவினை செய்வதில்லை). உணர்வு/ ப்ரக்ஞை என்பது உட்பொதிந்த கட்டளையின்படி, பொருளைக் காட்டிலும், அந்த ஒழுங்கின் ஆளுமையில் அதிகம் இடம்பெறுகிறது. இன்னமும் கூட அவர் சொல்கிறார் “எதிர்மின்னணுவிற்கு சில தகவல்களை மனம் சொல்லும்”

இது மேம்போக்கான மெய்யியல் அல்ல. அவரது இயற்பியலின் தர்க்கபூர்வமான ஒன்று. குவாண்ட மின்னழுத்தத்தில் உள்ள தகவல்கள், எல்லை சாராது, துகள்களுக்கு வழிகாட்டியாக அமையும் என்றால், தகவலும், பொருளும், உண்மையின் ஆழத்தில் ஒற்றை நெசவாகும். தன்னுணர்வை, மூளை உற்பத்தி செய்வதில்லை-அது உட்பொதிந்த கட்டளையாகும்.

25 ஆண்டுகளாக மெய்ஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து அவர் இந்த சிந்தனையை வளர்த்தெடுத்தார். The Ending of Time and The Future of Humanity என்று அவர்கள் உரையாடல் ஒரு அருமையான புத்தகமாக வெளியானது. அறிவியலுக்கும், சிந்தனைமிக்க அறிவிற்குமிடையேயான இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்ட மிகச் சிறப்பான ஒன்று. பல உரையாடல்கள் பதிவு பெறாமல் போய்விட்டதை உணர்ந்தால், இந்த புத்தகத்தின் மகத்துவம் புரியும். தங்கள் உரையாடல் மூலம் அவர்கள் ‘அடிப்படை’ என்ற இடத்திற்கே வந்து சேர்ந்தார்கள். இந்த அடிப்படை என்பது, அறிகுறி தோன்றாத, வெளிப்படாத ஒன்று. அதிலிருந்துதான், சிந்தனைகள், நேரம், தன்னுணர்வு என்பது தோன்றுகிறது என்ற முடிவை அடைந்தார்கள்.

முதலில் அவர்கள் ‘ரியாலிடிக்கும்’ ‘சத்தியத்திற்கும்’ உள்ள வேறுபாடு என்ன என்று வினவிக்கொண்டார்கள். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ‘ரியாலிடி’யின் லத்தீன் மொழியின் வேர்ச்சொல்லான ‘ரெஸ்’ என்பது பொருளைக் குறிப்பதால், ‘ரியாலிடி’, எதைப் பொருள் என்று எண்ணம் காட்டுகிறதோ அப்படி அமைகிறது என்று சொன்னார். மாறாக ‘சத்தியம்’, உருவாக்கப்படாத, மனித் அறிவால் அறிய முடியாத ஒன்று என உணர்ந்தார்கள்.

போம், ‘மாயா’வின் வேர்ச்சொல்லான ‘மா’ என்பது அளத்தலைக் குறிக்கும் என்றார். நிலங்களை அளக்கையில் ‘இத்தனை மா’ என்று குறிப்பிடுவார்கள். கட்டுப்படுத்தப்பட்ட எண்ணங்கள், மெய்மையைக் காட்டாமல், தன்னைத் தானே ஏமாற்றும் செயலில் ஈடுபடுவது ‘மாயா’வின் வேலை என்றார். ஈச உபனிஷத், அருமையாக ‘உண்மை தங்க முககவசம்’ அணிந்திருக்கிறது என்று சொல்கிறது.

‘பார்ப்பவர்தான், பார்க்கப்படுகிறார்’ என்ற ஜிட்டுவின் வாக்கியம் உலகப் புகழ் பெற்றது. அதைதான் முன்னரேயே ‘அஹம் ப்ருமாஸ்மி’ என்று உபனிடதம் சொல்லிவிட்டது. ஒரு குவாண்ட இயற்பியலாளராக, போம் துணை அணுப்பொருளுடன் இக்கருத்தை பொருத்துகிறார். நான், அவன் என்ற பேதங்களற்ற, அபேத நிலையே சத்தியம் என்று போம் சொல்கிறார். சத்தியத்தை அறிய, ‘ரியாலிடி’யின் மூலம் செல்வது இயலாது. இருவருமே ப்ருஹதாரண்யக உபனிடதத்தின் ‘அஸதோமா சத் கமய- அசத்தியத்திலிருந்து, சத்யத்திற்கு அழைத்துச் செல்’ என்பது ‘ரியாலிடிக்கும்’  ‘சத்தியத்துக்கும்’ இருக்கும் வேறுபாடு என்று வலியுறுத்துகிறார்கள். இவ்வாறு தொகுத்துக் கொள்ளலாம்

  • முழு உண்மை- ப்ரும்மன்
  • அண்டம் சார்ந்த உண்மை- ஹிரண்யகர்ப்பம்- இருத்தலின் மொத்த உணர்வு- நிலா, சூரியன். ஒரு அணு உடலுக்குள் வந்த பிறகு புத்திசாலியாவதில்லை. வரும் போதே அதில் தகவல்கள் பொதிந்துள்ளன.
  • தனி உண்மை- மனம், எண்ணம் வடிவமைப்பவை.

தலாய் லாமா தனது ‘அறிவியல் குரு’ என்று போமைச் சொன்னார். அலை சமன்பாடுகளையும், குவாண்ட மின்னழுத்தத்தையும் பயன்படுத்தி, போம் கண்டடைந்த ஒன்றை, மெய்ஞானிகள், வெவ்வேறு மொழிகளில் சொன்னாலும், இருவரும் ஒரே கட்டுமானத்தைச் சுட்டியுள்ளது வியப்பிற்குரியது.

முடிவற்ற, மாறாத தூய உணர்வை வேதாந்தம் ‘ப்ரும்மன்’ என்று சொல்கிறது. வெளி உலகை அது ‘மாயா’ என்று சொல்கிறது. அது தோற்றத்தை அவ்வாறு சொல்கிறதே தவிர, ‘காட்சி மயக்கம்’ என்று சொல்வதில்லை. பரப்பை ஆழமென நினைத்துக் கொண்டு நாம் அலைபாய்கிறோம். அவர் சொல்கிறார் : “இந்தத் துண்டுகள் எல்லாம் தனித்தனி என்று எண்ணிக் கொண்டால், அனாவசியமான, முடிவற்ற சர்ச்சைகளும், பிரிவுகளும், குழப்பங்களும் மட்டுமே எஞ்சும்.” மாண்டூக்கிய உபனிடம் சொல்வதை ஒரு இயற்பியலாளர் சொல்கிறார்.

The Tao Te Ching (தாவோ தே ஜிங்) இவ்விதம் தொடங்குகிறது ‘எந்த உண்மை சொல்லப்படக்கூடியதாக இருக்கிறதோ, அது நிரந்தரமான உண்மையில்லை’. அதாவது அடிப்படை என்பது பெயரற்றது. உள்முகமாக உணர்வதும், நேரடியாக, முழுமையாக அறியப்படாததுமாகிய ஹோலோ இயக்கமானது வரையறை செய்ய இயலாத ஒன்று, அதை அளக்க முடியாது என்றும் போம் சொல்கிறார்.

‘இந்திர வலை’ என்று பௌத்த ஆவதாம் சாகா சூத்திரம் ஒன்றைச் சொல்கிறது. முடிவற்ற விண்மீன் மண்டல வலையில் ஒவ்வொரு சந்திப்புச்சந்தியிலும் ஒரு ஆபரணம் ஜொலிக்கிறது; ஒவ்வொரு ஆபரணமும், மற்ற ஆபரணத்தை பிரதிபலிக்கிறது. மையமில்லை, ஓரமில்லை, ஊடுருவல் மட்டுமே. இது மெய்யியல் காட்டும் உட்பொதிந்த கட்டளை. ஒவ்வொரு மடிப்புச் சுருளிலும், முழுமை உள்ளது- ஒவ்வொரு நகையின் பிரதிபலிப்பினைப் போல.

நாம் வாழும் இந்த உலகு, தேச எல்லைகளால், கற்பித மொழி மேன்மைகளால், கலாசாரங்களால், அதிக அளவில் சிதறுண்டிருக்கிறது. கல்வியால், பண்பாட்டால், மொழியால் இந்த உலகை நாம் பிரிவாக, இரட்டைத்தன்மை கொண்டதாக பார்க்கப் பயிற்றிவிக்கப்பட்டுள்ளோம். எனது உடல், உனது உடல்; மனம், பொருளிலிருந்து மாறுபட்டது; பார்ப்பவரும், பார்க்கப்படுவதும் வேறு வேறு என்றே நாம் அறிந்திருக்கிறோம்.

உண்மைக்கு இரு பிரிவுகள் கிடையாது என்பதை தன் வாழ்நாள் முழுதும், சிந்தித்தும், நிரூபித்தும் வந்தார் போம். உண்மையைப் பற்றிய நம் எண்ணம் தான் இருமை. உட்பொதிந்த ஒழுங்கிற்கு இது ஒரு பொருட்டே அல்ல. அது முழுமையானது, பிளவுபடாதது. ஆழத்தில் மனித உணர்வு என்பது ஒன்றே. போம் சொன்னார்: ‘இதை நிகர்நிலை கொண்டு அறியலாம். வெற்றிடத்திலும் பொருள் ஒன்றே. நாம் கண்களை மூடிக்கொண்டு உண்மையைத் தவற விடுகிறோம்.

உசாவிகள்:

https://fragmentsofcoherence.substack.com/p/the-physicist-who-saw-what-the-mystics– Fragments of Coherence


Discover more from சொல்வனம் | இதழ் 376 | 11 அக் 2026

Subscribe to get the latest posts sent to your email.

மறுமொழி இடவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.