முருகன் ஏஜன்சிஸ்

1

காலை எட்டு மணி இருக்கும். முருகன் வழக்கம்போல் நான்காவது வரிசையில், மூன்றாவது இடத்தில் வண்டியை நிறுத்தினான். தினமும் அதே இடம்.

“வணக்கம் சார்,” என்றார் காவலாளி பழனிசாமி, கேட்டைத் திறந்தபடி. கையில் இருந்த பதிவேட்டில் நேரத்தையும் வண்டி எண்ணையும் எழுதிக்கொண்டார், TN 09 CX 4471.

“வணக்கம்,” முருகன் சொன்னான், நடையை நிறுத்தாமல்.

பழனிசாமிக்கு அது பழக்கமான விஷயமாகிவிட்டது. மூன்று ஆண்டுகளாக முருகன் சொல்லி வைத்தது போல் அதே நேரத்துக்கு வருவதும், அதே பதிலைச் சொல்வதும். “வணக்கம்” என்பதற்கு மேல் ஒரு வார்த்தை கூட அவன் உதிர்க்காததும். “இன்னிக்கு மழ வர மாதிரி இருக்கு ஸார்” என்று பழனிசாமி ஒரு நாள் சொன்னதற்கு, முருகன் “ம்ம்” என்று தலையாட்டிவிட்டு பேச்சை வளர்க்க விரும்பாதது போல் விரைந்தான். பதினைந்து ஆண்டுகளாக அதே வாசலில் நின்று, பழனிசாமி எத்தனையோ பேரைப் பார்த்திருந்தார். சிலர் பேசுவார்கள், சிலர் பேசமாட்டார்கள். முருகனைப் பற்றித் தனியாக யோசிப்பதற்கு அவருக்குக் காரணம் ஏதும் இல்லை. அன்று மாலை பேரக்குழந்தையைப் பள்ளியிலிருந்து அழைத்து வர வேண்டும் என்பதே அவர் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

லிஃப்ட் ஏறி மூன்றாவது மாடிக்கு வந்தான். வலது பக்கம் மூன்றாவது கியூபிக்கிள் அவனுடையது. லேப்டாப்பைத் திறந்தான். இன்பாக்ஸில் பதினொரு மெயில்கள் இருந்தன, அதில் மூன்று அமெரிக்கக் குழுவிடமிருந்து, ஒன்று “INC0045892 – RESOLVED – Payment Gateway Timeout” என்ற தலைப்புடன்.

“மச்சி முருகா!” என்று அருகில் வந்து உட்கார்ந்தான் சேகர், அவனுக்கு அருகிலேயே அமர்ந்திருக்கும் கூட்டாளி. “நேத்து நைட் அந்தப் பேமெண்ட் கேட்வே இஷ்யூ பாத்தியா? ‘892 டிக்கெட். எவ்ளோ நேரம் ஆச்சு தெரியுமா சரி பண்ண?”

“பாத்தேன்,” முருகன் சொன்னான். “பிக்ஸ் பண்ணியாச்சு. காலைலயே டிக்கெட்ட க்ளோஸ் பண்ணிட்டேன்; ரூட் காஸ் கூட எழுதிட்டேன்.”

“அப்போ நேத்து தூங்கவே இல்லன்னு சொல்லு.” சேகர் சிரித்தான்.

“கொஞ்சம் தூங்கினேன்,” முருகன் சொன்னான், திரையைப் பார்த்தபடியே.

சேகர் அவனையே சற்று உற்றிருந்துவிட்டு, தன் திரைப் பக்கம் திரும்பினான். முருகன் எப்போதுமே இப்படித்தான். கடந்த மூன்று ஆண்டுகளில் அவன் ஒரு நாள் கூட லீவு எடுத்ததாக இவனுக்கு நினைவில்லை. ஒரு முறை கூட “உடல் நலம் சரியில்லை” என்றுகூட சொன்னதில்லை. குடும்பத்தைப் பற்றியோ, வீட்டைப் பற்றியோ ஒரு வார்த்தை கூடப் பேசியதில்லை. கேட்டாலும், “எல்லாம் ஓகே” என்ற ஒரே பதில். சேகருக்கு அதைப் பற்றி யோசிக்க அவகாசம் இருக்கவில்லை. அவனுடைய சொந்த டிக்கெட்டுகள் மூன்று பென்டிங்கில் இருந்தன, அதை நொந்துகொண்டே வேலையைத் தொடங்கினான்.

பத்து மணிக்கு ஸ்டேண்ட்-அப் மீட்டிங். டீம் லீட் ப்ரியா அறையின் முன்னால் நின்று திரையைக் காட்டினார். “மார்னிங் ஃபோக்ஸ். இன்று மதியம் ஸ்ப்ரிண்ட் 14 ரிவ்யூ இருக்கிறது. அதற்கு முன் எல்லோரும் டெலிவரபிள்ஸ் ஸ்டேட்டஸை ஜீரா-வில் அப்டேட் செஞ்சிடுங்க.” என்று கூறியபடியே திரையில் இருந்த பட்டியலைப் பார்த்தார். “முருகன், உங்கள் இன்வாய்ஸ் ரீகன்சிலியேஷன் மாட்யூல் எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது?”

“முடிந்துவிட்டது, இன்று மாலைக்குள் டெஸ்டிங் முடிந்துவிடும். நாளை காலை டிப்ளாய்மென்ட்.”

“குட்” ப்ரியா தலையாட்டினார். “நீங்கள் எப்போதும் திட்டமிட்டபடியே எக்ஸிகியூட் செய்கிறீர்கள். மற்றவர்களும் இப்படி இருந்தால் என் வேலை சுளுவாகிவிடும்.” அவர் சிரித்தார்.

முருகன் எதுவும் சொல்லவில்லை. சிரிக்கவும் இல்லை.

மீட்டிங் முடிந்து எல்லாரும் எழுந்து போகும்போது, சேகர் முருகனிடம் “நாளைக்கு எங்க டீம் அவுட்டிங் இருக்கு, ஈசிஆர் பீச்சுக்கு போறோம். வர்றியா?” என்று கேட்டான்.

“வேலை இருக்கு,”.

“சாட்டர்டே மச்சி! எல்லாருக்குமே ஆஃப்தான் ப்ரோ!”

“வேலை இருக்கு,” முருகன் மறுபடியும் மறுதலித்தான், அதே உப்புச்சப்பில்லாத தொனியில்.

சேகர் தோள் குலுக்கிச் சிரித்தபடியே சென்றுவிட்டான். ஓராண்டுக்கு முன்பு இருந்த அதே பதில், அதே தொனி. முருகன் ஒரு முறை கூட வெளியே வந்து யாருடனும் சாப்பிட்டதில்லை, எந்தக் கூடுகைக்கும் சென்றதில்லை. “அவன் அப்படித்தான்” என்று குழுவும் அதை ஏற்றுக்கொண்டுவிட்டது.

மதியம், HR-இடமிருந்து முருகனுக்கு ஒரு தனி மெயில் வந்தது; “Action Required: Q2 Performance Appraisal Self-Assessment – Due June 27.” என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த அஞ்சல் “பெர்ஃபார்மன்ஸ் அப்ரைசல் சைக்கிள் தொடங்கியிருக்கிறது. தயவுசெய்து உங்கள் செல்ஃப்-அசஸ்மென்ட் ஃபார்மை அடுத்த வெள்ளிக்குள் சமர்ப்பிக்கவும்.” என்று கோரியது. ஒவ்வொரு கேள்விக்கும் பதில் ஏற்கனவே அவனுக்குள் தயாராக இருந்தது போல் முருகன் விரைவாகத் தட்டச்சு செய்தான். “இந்தக் காலாண்டில் என் முக்கிய சாதனைகள் என்ன?” என்ற கேள்விக்கு: “மூன்று மாட்யூல்கள் காலக்கெடுவுக்குள் முடிக்கப்பட்டன. ப்ராடக்ஷன் இஷ்யூக்கள் நான்கு மணி நேரத்திற்குள் தீர்க்கப்பட்டன, டவுன்டைம்கள் ஏதுமின்றி.” என்று பதிலிட்டான். அவன் பதில்கள் துல்லியமாக இருந்தன.

மாலை ஆறு மணி. அலுவலகம் காலியாகிக்கொண்டிருந்தது. சேகர் தன் பையைத் தூக்கிக்கொண்டு, “கிளம்பறேன் டா, நாளைக்கு ஈசிஆர்-லேந்து ஃபோட்டோ அனுப்றேன், பாத்து வருத்தப்படு,” என்று நக்கலடித்துவிட்டு அவன் கிளம்பிச் சென்றான்.

முருகன் இன்னும் ஒரு மணி நேரம் உட்கார்ந்திருந்தான். அலுவலகம் காலியாக இருந்தது. ஏழு மணிக்கு எழுந்தான். லேப்டாப்பை மூடினான். வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போனான்.

வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கையில் அன்று மாலை ஐந்து மணிக்கு, நிறுவனத்தின் அனைவருக்கும் வந்திருந்த ஒரு மீட்டிங் அழைப்பு மெயில் ஏனோ நினைவுக்கு வந்தது. “Town Hall Invite – Organizational Update – Friday, 3:00 PM.” உள்ளடக்கம் நான்கே வரிகள்: அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர், நிறுவனத்தின் புதிய “தொழில் தொடர்ச்சித் திட்டம்” குறித்து விவரங்கள் அப்போது பகிரப்படும் என்று மட்டும் இருந்தது. என்னாவாக இருக்கும் என்று யோசித்தபடியே வண்டியை வீட்டுச் சாலைக்குள் வலப்பக்கமாகத் திருப்பினான்.

2

கல்யாணி நான்கு மணிக்கே பள்ளியிலிருந்து திரும்பியிருந்தாள். ஹாலில் இருந்த சுவரொட்டி காலெண்டர், அருகிலிருந்த நகைக்கடை அன்பளிப்பாகக் கொடுத்தது, இன்னும் கடந்த மாதத்தையே காட்டிக்கொண்டிருந்தது. சுவர்க் கடிகாரம் எப்போதுமே பத்து நிமிடம் முன்னால் ஓடும், சரிசெய்ய வேண்டும் என்று இருவரும் வருடக்கணக்காக நினைத்துக்கொண்டு, இதுவரை செய்தபாடில்லை.

செல்வி, வீட்டு வேலைக்கு வரும் பெண், தரையைத் மொழுகிக்கொண்டிருந்தாள். “அக்கா, இன்னிக்கு காலை மார்க்கெட்ல தக்காளி விலை நூத்தி இருபது, அநியாயம்.” அவள் சிரித்தாள். “நாளைக்கு வரமாட்டேன்கா, என் பொண்ணு ஸ்கூல்ல ஆனுவெல் டே.”

“சரி, போய்ட்டு வா,” கல்யாணி சொன்னாள். “வாழைப்பழம் எடுத்துக்கிட்டுப் போ, மேசைமேல இருக்கு.”

செல்வி போன பிறகு, கல்யாணி பேப்பர்களைத் திருத்தத் தொடங்கினாள். சிறிய ரேடியோவை சன்னமாக ஒலிக்கவிட்டிருந்தாள், மதிய நேரக் கச்சேரி ஒன்று ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது, ஹம்சத்வனி ராகம். அவள் அதற்கு ஏற்ப மெல்ல தலையாட்டியபடி பேப்பர் திருத்தினாள்.

ஏழரை மணிக்கு முருகன் வந்தான். பையை மேஜை மேல் வைத்தான், ஃபோனைப் பார்த்தபடியே. “ஹால் பல்பு ஃப்யூஸ் ஆயிடுச்சா?” என்று கேட்டான், மேலே பார்க்காமலேயே.

“ஆமா, நேத்திலேந்தே,” கல்யாணி சொன்னாள்.

“நாளைக்கு வாங்கிட்டு வரேன்.” ரேடியோவை ஒரு நொடி பார்த்தான். “இன்னும் அந்த ரேடியோ கெடல பாத்தியா, அப்பா வாங்கினது.”.

“இன்னிக்கு வகுப்புல ஒரு பையன் தேவாரம் பாடிக் காட்டுனான்,” கல்யாணி சொன்னாள், பேப்பர்களை மடித்து வைத்துவிட்டு எழுந்தாள். “குரல் அவ்ளோ நல்லா இருந்துச்சு. எனக்கு ஏதோ மாதிரி ஆயிடுச்சு.”

“ஓ.” முருகன் ஃபோனைப் பார்த்தபடியே சொன்னான். “நாளைக்கு கரண்ட் பில் கட்டணும். டியூ டேட் நாளைக்குதான்.”

கல்யாணி ஒரு நிமிடம் அவனைப் பார்த்தாள். பிறகு அடுக்களைக்குள் போனாள்.

இரவு உணவுக்கு வெண்டைக்காய் சாம்பார் வைத்திருந்தாள். சாப்பிடும்போது முருகனின் ஃபோன் இரண்டு முறை வைப்ரேட் செய்தது, ஆபீஸ் குரூப்பிலிருந்து. இரண்டு முறையும் அவன் படித்துவிட்டு பதில் தட்டச்சு செய்தான், சாப்பிடுவதை நிறுத்தாமலேயே. கல்யாணி அவனுக்கு இன்னும் கொஞ்சம் சாம்பார் ஊற்றினாள், அவன் கேட்காமலேயே.

இரவு உணவுக்குப் பின், கல்யாணி படுக்கையறையின் மேசை டிராயரிலிருந்து ஒரு சிறிய நோட்டுப் புத்தகத்தை எடுத்தாள். அட்டையில் “வரிகள்” என்று அவள் கையெழுத்தில் இருந்தது. அன்று வகுப்பில் சொல்லிக்கொடுத்த தேவாரப் பாடலின் ஒரு வரியை அதில் எழுதினாள். பள்ளிப்படிப்பு காலத்திலிருந்தே வைத்திருக்கும் பழக்கம், முருகனிடம் ஒரு முறை கூட காட்டியதில்லை. காட்டும்படி அவனும் கேட்டதில்லை. 

முருகன் ஏற்கனவே படுக்கையில் இருந்தான், லேப்டாப்பைத் திறந்து அடுத்த நாளைய டிப்ளாய்மென்ட் செக்லிஸ்டைப் பார்த்துக்கொண்டிருந்தான். பின் ஏதோ நினைவுவந்தவனாக எழுத்து சென்றான். படுத்துக்கொள்வதற்கு முன் தினமும் மூன்று முறை முன் கதவைத் தள்ளிப் பார்த்துப் பூட்டியிருக்கிறதா என்று சரிபார்ப்பான், அது ஏற்கனவே பூட்டியிருந்தாலும்.

கல்யாணி விளக்கை அணைத்தாள். இருவரும் அமைதியாகப் படுத்திருந்தார்கள்.

3

பத்து மணிக்கு ஸ்டேண்ட்-அப் தொடங்கியது. ப்ரியா அலுவலகத்திலிருந்து ஜீரா போர்டைத் திரையில் பகிர்ந்தார். கூட்டத் திரையில் முருகனின் பெயர் ஒரு கருப்புச் சதுரத்தில் தெரிந்தது, காமிரா ஆஃப். சில வழக்கமான முகங்களுடன் பல கருப்புச் சதுக்கங்களிருந்தன. 

“சரி, ஸ்ப்ரிண்ட் 125-க்கு நான்கு நாட்கள்தான் மிச்சம் இருக்கிறது. பர்ன்டவுன் கொஞ்சம் பின்தங்கி இருக்கிறது.” அவர் பட்டியலைப் படித்தார். “தன்யா, முதலில் நீங்கள்.”

“என்னுடைய இரண்டு டிக்கெட்டுகளும் கோட் ரெவ்யூவில் இருக்கின்றன,” தன்யா சொன்னாள். “விக்னேஷ் இன்னும் அப்ரூவ் செய்யவில்லை, அவர் நேற்று லீவில் இருந்தாராம்.”

“விக்னேஷ், டேக் கேர் ஆஃப் இட் டுடே, சேகர்?”

“என் ‘3042 டிக்கெட் மூடப்பட்டுவிட்டது,” சேகர் சொன்னான். “ஆனால் ஒரு புதிய ப்ளாக்கர் வந்திருக்கிறது, ஸ்டேஜிங் என்விரான்மென்டில் டேட்டாபேஸ் கனெக்ஷனில் ஏதோ பிரச்சனை. இன்ஃப்ரா டீமுக்கு டிக்கெட் ரெய்ஸ் பண்ணிருக்கேன்.”

“சரி, அதை போர்டில் ரிஸ்க் ஆக ஃபிளாக் செய்யுங்க, முருகன்?”

கருப்புச் சதுரத்திலிருந்து குரல் வந்தது. “வெண்டர் ஆன்போர்டிங் மாட்யூல் முடிந்துவிட்டது. டெஸ்டிங் இன்று மாலைக்குள் முடியும். நாளை காலை டிப்ளாய்மென்ட்.”

“நல்லது.” ப்ரியா தலையாட்டினார். “ஆஸ் யுஷுவல், ஆன் டிராக். இன்னும் வேறு ஏதாவது ப்ளாக்கர் இருக்கிறதா?” யாரும் பேசவில்லை. “சரி, ரிவ்யூ மூன்று மணிக்கு.”

கூட்டம் முடிந்தது.

மாலை வீட்டில், முருகனின் ஃபோனுக்கு ஒரு நோட்டிஃபிகேஷன் வந்தது. “NEURON TECH – CONTINUITY BENEFIT CREDITED – Rs 42,000.” இந்த முறை அவன் அதைத் திறந்தான். பேங்க் ஆப்பில் கடந்த முப்பத்தாறு மாதங்களின் பட்டியல் இருந்தது, ஒவ்வொரு மாதமும் அதே தொகை, அதே தேதி வாக்கில்.

அவன் இன்பாக்ஸில் பழைய கடிதங்களைத் தேடினான். “Fw: Murugan – RCA Appreciation” என்ற தலைப்புடன் ஒரு மெயில் கிடைத்தது, மூன்று ஆண்டுகளுக்கு முன் அவனுடைய அப்போதைய மேனேஜர் அனுப்பியது. பேமெண்ட் கேட்வே சம்பவம் குறித்த அவனுடைய ரூட் காஸ் அனாலிசிஸ், அந்தக் குழுவிலிருந்து மேனேஜர் இதுவரை பார்த்ததிலேயே தெளிவானது என்று எழுதியிருந்தார். அவன் அதை இரண்டு முறை படித்தான். பிறகு மெயிலை மூடினான்.

கம்பெனியில் சேர்ந்தபோது கொடுத்த பழைய அலுவலக அடையாள அட்டை இன்னும் அவன் பர்சில் இருந்தது. அதை எடுத்துப் பார்த்தான். புகைப்படத்தில் இப்போதைவிட சற்று இளமையாக இருந்தான். அட்டையைத் திரும்பப் பர்சுக்குள் வைத்துக்கொண்டான்

கல்யாணி வேலையிலிருந்து திரும்பும் நேரம் ஆகிவிட்டது. முருகன் லேப்டாப்பை மூடினான், டீவியை ஆன் செய்தான்.

கல்யாணி வந்ததும், நைட்ஷோ ஒரு படத்திற்குப் போலாமா என்று கேட்டான். கல்யாணி ஒரு நொடி அவனைப் பார்த்துவிட்டு “சரி,” என்றாள்.

தியேட்டரில் இருவரும் பின் வரிசையில் அமர்ந்தனர். இடைவேளையில் முருகன் எழுந்தான். “பாப்கார்ன் வேணுமா?” என்று கேட்டான். “வேண்டாம்,”. தனக்கு மட்டும் வாங்கிக்கொண்டு வந்தான். ஒரு காட்சியில் மொத்த தியேட்டரும் சிரித்தது, கல்யாணியும் சிரித்தாள். முருகன் திரையை வெறித்துப் பார்த்தபடி இருந்தான், முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல். இன்னொரு காட்சியில், ஒரு தாய் தன் மகளிடமிருந்து பிரியும் காட்சி வந்தபோது, கல்யாணியின் கண்கள் கலங்கின. அவள் ஒரு நொடி அவன் பக்கம் திரும்பினாள். அவன் ஃபோனைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

வீடு திரும்புகையில் இருவரும் எதுவும் பேசவில்லை.

இரவு, விளக்கை அணைக்கும் முன், முருகன் அவளருகில் நகர்ந்தான். “இன்னிக்கு வேணாம்,” கல்யாணி சொன்னாள், முதுகைத் திருப்பிக்கொண்டு. “தலை வலிக்குது.”

முருகன் எதுவும் சொல்லவில்லை. திரும்பிப் படுத்தான்.

4

பத்து மணிக்கு வழக்கமான ஸ்டேண்ட்-அப் மீட்டிங் இருக்கவில்லை. அதற்குப் பதிலாக, “Team Sync – Important” என்ற தலைப்பில் ஒரு காலெண்டர் அழைப்பு வந்திருந்ததை முருகன் கவனித்தான்.

ப்ரியா திரையில் இருந்தார், ஆனால் அலுவலகத்திலிருந்து அல்ல, வீட்டிலிருந்து. “இந்தக் காலாண்டில் நிறுவனம் சில கார்ப்பரேட் காஸ்ட் கட்டிங் நடவடிக்கைகளை எடுக்கிறது.” அவர் ஒரு காகிதத்திலிருந்து படிப்பதுபோல் பேசினார். “இதன் பகுதியாக, சில ரோல்ஸ் தேவையற்றதாகக் கருதப்படுகின்றன.”

அவர் ஒரு பட்டியலைப் பகிர்ந்தார். திரையில் முருகனின் பெயரும் இருந்தது.

“இது யாருடைய பெர்ஃபார்மன்ஸ் குறைபாடும் இல்லை,” ப்ரியா தொடர்ந்தார். “இது வெறும் ரீஸ்ட்ரக்சரிங். எச்.ஆர் இன்று மாலைக்குள் அனைவரையும் தனித்தனியாகத் தொடர்பு கொள்வார்கள்.”

முருகனின் கட்டத்திலிருந்து கேளிவிகள் எதுவும் கேட்கப்படவில்லை.

அவன் தன் கோப்புகளைப் பார்த்தான். “இன்வாய்ஸ் ரீகன்சிலியேஷன்,” “வெண்டர் ஆன்போர்டிங்” என்ற இரண்டு ஃபோல்டர்கள். ஒவ்வொன்றிலும் நூற்றுக்கணக்கான கோப்புகள். அவற்றை யாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்று கேட்கவில்லை. யாரும் கேட்கவும் இல்லை.

மாலை ஐந்து மணிக்கு, முருகனின் ஆக்சஸ் நீக்கப்பட்டது. லேப்டாப் திரையில் “Session Expired” என்று வந்தது.

டீம்ஸ் செயலியில் அவனுடைய ஸ்டேட்டஸ் இன்னும் சில நிமிடங்கள் “Active” என்று காட்டியது. பிறகு “Offline” ஆனது. குழு சாட்டில் யாரும் எதுவும் போஸ்ட் செய்யவில்லை. 

மதியம் மூன்று மணிக்கு, HR-இடமிருந்து முருகனுக்கு ஒரு தனி மெயில் வந்தது, “Role Phasing – Next Steps” என்று தலைப்பிடப்பட்டு. இணைப்பில்: “Continuity Program – Phase 2 – Severance Terms.” என்ற PDF இருந்தது. முருகன் அதைத் திறந்து படித்தான். நிபந்தனைகள் ஒரு நிலையான வார்ப்புருவில், முறையான, சுருக்கமான வாக்கியங்களில் இருந்தன. மாதப்படி எவ்வளவு குறையும் என்பதைக் கணக்கிட்டான். 

5

மூன்று ஆண்டுகளாக ஜீரா க்யூ ஒரு நிமிடம் கூடக் காலியாக இருந்ததில்லை. ஒரு டிக்கெட் முடிந்தவுடன் அடுத்தது ஏற்கனவே காத்திருக்கும். பழக்க தோஷத்தால் ஒருமுறை ஜீரா-வைத் திறக்க முயன்றபோது. “Access Denied” என்று வந்தது.

வேலை இருந்தபோது, சேகர் நக்கல் அடிப்பதும், தன்யாவும் விக்னேஷும் லஞ்ச்-க்குப் போகும்போது சிரிப்பதும் பின்னணி சத்தங்களாக மட்டுமே இருந்தன, கவனிக்கப்படாமல் கடந்துபோனவையாக. இப்போது, அவை ஏனோ நினைவுகளாகத் திரும்பத் திரும்ப வந்தன. தான் மட்டும் எப்போதும் அடுத்த டிக்கெட், அடுத்த டெலிவரபிள் என்று மட்டுமே யோசித்துக்கொண்டிருந்ததின் தாத்பரியங்கள் கேள்விகளாக அலைக்கழித்தன.

யோசிப்பதற்கென்றே நேரம் இருப்பது புதியதாக இருந்தது.

இணையத்தில் மேய்ந்ததில் “இலவச ஆன்லைன் கோர்ஸ்கள்,” “மனிதர்கள் ஏன் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்,” “ஆன்மா என்றால் என்ன,” “திருப்தி மற்றும் சந்தோஷத்திற்கும் உள்ள வித்தியாசம்.” போன்றவை ஈர்த்தன.

கோர்சராவில் “Introduction to Philosophy” மற்றும் “Psychology of Emotions” என்ற இரண்டு கோர்ஸ்களை முடிக்கப்பட்டன. குறுந்தொகையின் ஆங்கில மொழிபெயர்ப்பு படிக்கப்பட்டது, ஒவ்வொரு பாடலும் இரு முறை. பாரதியின் கவிதைகள் பற்றிய ஒரு விமர்சனக் கட்டுரையும். செய்துகொண்டிருந்த வேலைக்கும் அவற்றுக்கும் சம்பந்தமே இல்லை என்பது உற்சாகத்தை அளித்தது.

டேட்டா அனலிட்டிக்ஸ் வேலை வாய்ப்புகளுக்கான தேடலுக்கிடையே “மனிதர்கள் ஏன் ஒருவருக்கொருவர் பேச விரும்புகிறார்கள்” போன்ற தேடல்களும் தொடர்ந்தன.

***

பள்ளியில் மதிய இடைவேளையில், ரேவதி தன் டிபன் பாக்ஸைத் திறந்தபடி கல்யாணி அருகில் வந்து அமர்ந்தாள். “என்ன கல்யாணி, முகம் வாடியிருக்கு? உடம்பு கிடம்பு சரியில்லையா?”

“அதெல்லாம் பெரிசா ஒன்னும் இல்ல நேத்து சரியா தூங்கல, அவ்ளோதான்.”

“வீட்ல எல்லாம் ஓகேதானே?”

கல்யாணி ஒரு நிமிடம் யோசித்தாள். “ஓகே தான். ஆனா… ரொம்ப நாளா யாருகிட்டயும் சரியா பேசாம இருக்கறது இப்பலாம் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. முருகன்கிட்ட எத சொன்னாலும், அவன் கண்டுக்க மாட்டான், அவன் கவனமெல்லாம் வேற எங்கயோ இருக்கும்.”

ரேவதி தலையாட்டினாள். “எனக்குத் தெரிஞ்ச ஒரு பொண்ணு, அவளுக்கும் இப்படித்தான் இருந்தது. ‘பிளாட்டோனிக்’ அப்படின்னு ஒரு ஆப் யூஸ் பண்றா. டேட்டிங் மாதிரி இல்ல, வேற மாதிரி. ஜஸ்ட் பேச, யாராவது பேசறத கேக்கிறதுக்கு. ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னா.”

“ஆப்ல பேசி என்ன ஆகப் போகுது?” கல்யாணி சிரித்தாள்.

“டிரை பண்ணேன், நஷ்டம் ஒன்னும் இல்லையே,” 

கல்யாணி அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. வீட்டுக்கு வந்து வழக்கம்போல் பேப்பர் திருத்தினாள்.

அன்று இரவு, முருகன் ஏற்கனவே தூங்கிவிட்டிருந்தான். கல்யாணி தண்ணீர் குடிக்க அடுக்களைக்குச் சென்றாள். வீடு முழுவதும் அமைதியாக இருந்தது, சுவர்க் கடிகாரத்தின் முள் ஓசை மட்டும் கேட்டது. தண்ணீர் குவளையைக் கையில் பிடித்தபடி, எதற்காக என்று தெரியாமல் திடீரென்று அழ ஆரம்பித்தாள். சத்தம் எழுப்பாமல் இருக்க. கையால் வாயை மூடிக்கொண்டாள். படுக்கையறையிலிருந்து முருகனின் சீரான மூச்சு மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் முகத்தைக் கழுவிக்கொண்டு வந்து படுத்தாள்.

மறுநாள் காலை, பள்ளிக்குப் போகும் வழியில், ஃபோனில் “பிளாட்டோனிக்” என்று தேடினாள்.

6

“இன்னிக்கு மூட் சரியில்ல,” அவள் தட்டச்சு செய்தாள்.

“ஏன், என்னாச்சு?”

“தெரியல, ஒரே சோர்வா இருக்கு.”

“ஹோப் யூ ஃபீல் பெட்டர் சூன்.”

இரண்டு மாதங்களில், அவர்களுக்கிடையே ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெசேஜ்கள் பரிமாறப்பட்டிருந்தன.

“நேத்து டீவில ‘மைக்கேல் மதன காமராஜன்’ போட்டாங்க,” “எத்தனை தடவை பாத்தாலும் அந்தக் காமெடி சலிக்காது.”

“ஆமாம், அது என்னோட ஃபேவரிட்டும் கூட!” பதில் உடனே வந்தது. “நாலு பேரும் ஒரே மாதிரி இருந்தாலும், ஒவ்வொருத்தரும் எவ்ளோ வித்யாசமா நடந்துப்பாங்க.”

“ஐ நோ வாட் யூ மீன்”

“ஹா, இது அந்த மீன் ஸீனுக்கு வந்துட்டீங்க போல!”

கல்யாணி சிரித்தாள். “ஆமாம்! அந்த ஒரு வரிக்காகவே அந்த ஸீனை எத்தனை தடவை பாத்திருப்பேன் தெரியுமா.”

“நானும்தான். அதே வரிதான், ஆனா ஒவ்வொரு தடவையும் சிரிப்பு வரும்.”

பல வாரங்களுக்குப் பிறகு, ஒரு இரவு, அவன் தொடங்கினான். “கல்யாணி, நீங்க சொன்ன ஒரு விஷயத்த ரொம்ப நாளா யோசிச்சிக்கிட்டு இருக்கேன்”

“என்ன.”

“நீங்க அன்னிக்கு சொன்ன ‘மனமே கோயில்’ அப்படின்னு ஒரு வரி இருக்குன்னு சொன்னீங்கல்ல, தேவாரத்துல. அது எனக்கு ஒரு பழைய தத்துவவாதி சொன்ன ஒரு விஷயத்தை நினைவுபடுத்திச்சு. சாக்ரடீஸ் அப்படின்னு ஒருத்தர், ‘உன்னை நீயே அறிந்துகொள்’ அப்படின்னு சொல்லியிருக்காரு. ரெண்டுமே ஒரே மாதிரி இருக்கில்லையா, வெளியில எங்கயோ தேடாம, உள்ள இருக்குறதப் பாருன்னு?”

கல்யாணி ஒரு நிமிடம் யோசித்தாள். “நான் இதுவரைக்கும் அப்படி யோசிச்சதே இல்ல. நீங்க தத்துவம் படிக்கிறீங்களா?”

“கொஞ்சம் கொஞ்சமா, இப்போதைக்கு.”

“ஏன்?”

பதில் வரச் சற்று நேரமானது. “தெரியல. நம்பள நாமே புரிஞ்சுக்கிறத்துக்கான விடைகள் அதுல கிடைக்குங்கற ஒரு சின்ன நம்பிக்கை.”

***

ஏழரை மணிக்கு முருகன் வீட்டுக்கு வந்தான். அடுக்களையில் அடுப்பு அணைந்திருந்தது. வெண்டைக்காயை நறுக்கிக்கொண்டிருந்த கத்தி, பாதி வெட்டப்பட்ட காயுடன், மேசை மேல் அப்படியே கிடந்தது.

“கல்யாணி?”

படுக்கையறையிலிருந்து பதில் வந்தது, தாமதமாக. “இதோ வரேன்.”

அவள் வந்தபோது ஃபோனை இன்னும் கையில் வைத்திருந்தாள், முகத்தில் ஒரு சிரிப்பு அப்படியே இருந்தது. “சாரி, நேரமே தெரியல,” என்றாள், அடுக்களைக்குள் விரைந்தபடி.

“என்ன விஷயம், இவ்ளோ சிரிப்பு?” முருகன் கேட்டான்.

“ஒண்ணுமில்ல,” கல்யாணி சொன்னாள், இன்னும் சிரித்தபடியே அரிசியை அளைந்தாள்.

முருகனுக்கு அது எதுவும் புரியவில்லை.

அன்று இரவு, விளக்கை அணைப்பதற்கு முன், கல்யாணியே அவனருகில் நகர்ந்தாள். முருகன் ஒரு நிமிடம் ஆச்சரியப்பட்டான். எதுவும் கேட்கவில்லை.

இரவு தூக்கம் வராமல், முருகன் அவளைப் பார்த்தபடி கிடந்தான். ரெண்டு வாரமா இப்படியொரு மாறுதல். என்ன காரணம் என்று அவனுக்குப் புரியவில்லை. கேட்கவும் இல்லை.

7

அந்த மாதம், பேங்க் நோட்டிஃபிகேஷனில் ஒரு வித்தியாசம் இருந்தது. “NEURON TECH – CONTINUITY BENEFIT CREDITED – Rs 21,000.” மாதப்படி பாதி ஆகிவிட்டது அவனை ஒரு கணம் திகைக்க வைத்தது. அதே நாள் ஒரு மெயிலும் வந்தது, “Continuity Program – Benefit Recalibration Notice” என்ற தலைப்புடன். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பலன் படிப்படியாகக் குறைக்கப்படும் என்று அதில் எழுதப்பட்டிருந்தது, ஒப்பந்தத்தின் ஒரு பிரிவுக்கான சுட்டியுடன்.

அந்த மாதம் மட்டும் அவன் கேட்டெழுதியிருந்த பதினேழு விண்ணப்பங்களுக்குப் பதில் வரவில்லை.

கல்யாணி குளித்துக்கொண்டிருந்தாள். மேஜை மேல் அவள் லேப்டாப் திறந்தே இருந்தது, திரை இன்னும் ஆஃப் ஆகாது. முருகன் ஒரு கணம் தாமதித்தான், பிறகு உட்கார்ந்து படிக்கத் தொடங்கினான்.

நூற்றுக்கணக்கான மெசேஜ்கள். “மனமே கோயில் அப்படின்னு ஒரு வரி இருக்கே, தேவாரத்துல…” என்று ஒன்று தொடங்கியது. இன்னொன்றில் அவள் சிரிப்பதைக் குறிக்கும் “ஹஹஹ” வரிசைகள். திரையின் மேலே ஒரு பெயர் இருந்தது: கார்த்திக்.

முருகன் லேப்டாப்பை இறுக்கமாகப் பிடித்தான். அந்தப் பெயரை மறுபடியும் மறுபடியும் படித்தான். அவன் யார், எங்கே இருக்கிறான், எப்படி இருக்கிறான், தனக்குத் தெரிந்தவனா என்று அவன் மனம் அலைபாயத் தொடங்கியது. கல்யாணி குளியலறையில் முணுமுணுத்துக்கொண்டிருந்த பாடல் அவனைக் கோபப்படுத்தியது. முகம் இல்லாத ஒரு பெயருக்கு எதிராக என்ன செய்ய முடியும், செய்தும் என்ன ஆகப்போகிறது என்று தன் கையாலாகாத்தனத்திற்கு அவன் மனம் சப்பைக்கட்டு கட்டியது. குளியலறைக் கதவு திறந்த சத்தம் கேட்டதும் அவன் லேப்டாப்பை மூடினான்.

“என்ன பாத்துக்கிட்டு இருந்த?” கல்யாணி கேட்டாள்.

“ஒண்ணுமில்ல,” முருகன் சொன்னான்.

அடுத்த சில நாட்களில் முருகன் யாருடனும் அதிகம் பேசவில்லை, அவனது வழக்கமான ஒற்றைவரி சம்பாஷனைகளைக்கூட. இரவு உணவைத் தொடவில்லை. கல்யாணி என்ன ஆச்சு என்று கேட்டபோது, “ஒண்ணுமில்ல” என்ற அதே ஒற்றைச் சொல் பதிலே திரும்ப வந்தது.

வெள்ளிக்கிழமை இரவு, கல்யாணி பள்ளி வேலைக்காக ரேவதி வீட்டுக்குப் போயிருந்தாள். திரும்பி வந்தபோது கதவு திறந்திருந்தது. அதைத் தாழிட்டு மூன்று முறை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள முருகன் அங்கில்லை.

***

கல்யாணி மெசேஜ்களுக்குப் பதில் போடுவதை நிறுத்திவிட்டாள். முதலில் ஒரு நாள், பிறகு ஒரு வாரம். “எல்லாம் ஓகே தானே?” என்று இரண்டு மூன்று மெசேஜ்கள் அனுப்பப்பட்டன. அவற்றுக்கும் பதில் வரவில்லை. ஒரு மாதம் கழித்து, அவளுடைய ப்ரொஃபைல் “பிளாட்டோனிக்”கிலிருந்தே மறைந்தது.

முன்பு ஒரு முறை, ஜிரா க்யூ காலியாக இருந்தபோது எழுந்த வெறுமை மீண்டும் குடிகொண்டது. வேறு வடிவில். 

மறுபடியும் தேடல் தொடங்கியது. டேட்டா அனலிட்டிக்ஸ் வேலை விண்ணப்பங்களுக்கு யாரும் தொடர்பு கொள்ளவில்லை. ஆனால் ஒருவருடன் எப்படிப் பேசுவது, எப்படிப் பழகுவது, எது ஒருவருக்கு நிறைவு தருகிறது என்பதை எப்படி உணர்வது. போன்றவையெல்லாம் சந்தையில் விலைபோகும் திறமைகளாகக் கண்டறியப்பட்டன. 

வேறொரு காலத்தில், “முருகன்” என்ற பெயரில் இன்வாய்ஸ் ரீகன்சிலியேஷன் செய்து, பிறகு “கார்த்திக்” என்ற பெயரில் தேவாரமும் தத்துவமும் பேசியது இப்போது ஏஐ ஏஜெண்டுகளை பயிற்றுவிக்கும் முருகன் ஏஜன்சிஸ் நிறுவனத்தைத் தொடங்கியது. 


Discover more from சொல்வனம் | இதழ் 371 | 26 ஜூலை 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.