தேரோட்டம்

1

வைகாசி மாத சூரியன் கீழ்வானில் எழுந்த வேகத்தில் தகிக்க ஆரம்பித்திருந்தது நிலம்.

“அருணன் ஓட்டுற தேருல சூரியன் ஏறிட்டான். இனி குறுக்க எது போனாலும் நிறுத்தமுடியாது. யுகயுகமாட்டு இதாக்கும் கணக்கு. காலதேவன் வருசம் ரெண்டு தடவ அவன் தேரோட ஒத்தச் சக்கரத்துல முட்டுக்கட்டையப் போட்டு திசையை மாத்றான், அதனால உசுருக்கூட்டம் பூமிமேல பொழைச்சு கிடக்குது” என்ற சற்குணம் பாட்டா துண்டை எடுத்து கக்கத்தைத் தொடைத்துக்கொண்டே,

“வடக்க பூரி ஜெகநாத கோயிலு தேரு பார்க்கணுமே, ஆயிரமடிக்கு மேல உசரம், ஐயாயிரம் கிலோ எடை, நாட்ல உள்ள சனம் மொத்தமும் ஒண்ணுகூடி இழுத்தாலும் தேர் நிலைக்கு வரதுக்குள்ள அம்பது தலை உருண்டு வைகுண்டம் போய்டும். வெள்ளைக்காரன் பார்த்து நிறுத்த முடியாத அழிவுசக்தின்னு அவன் அகராதில ஜெகநாதர, ஜக்கர்நட்ங்கற வார்த்தையா சேர்த்துகிட்டான். அதுக்கு அவனுங்கள பொருத்தவரைக்கும் நிறுத்த முடியாதது அழிவு சக்தின்னு முடிவு பண்ணிகிட்டானுங்க. என்ன ஆனாலும் தேரு நிலைக்கு வரும்ங்கறது அவனுக புத்தியில ஏறவே இல்லை”.

“ஸ்தபதியே தேர்ன்னா என்ன நினைக்கிற நீ? எட்டு சக்கரம் மேல நானூறு எண்ணூறு மூங்கில வளைச்சு வச்சு சாமிய டூருக்கு கூப்ட்டு போறதுன்னா?  இதான் மொதக் கோயிலாக்கும். நம்ம முப்பாட்டமாருங்க கட்டுன கோயிலு. காட்டுல மேட்டுல போற இடமெல்லாம் தன்னோட சாமி தனக்கு துணைன்னும், சாமிக்குத் தான் துணைன்னும் நினச்சுக்கிட்டு இழுத்து சுமந்து திரிஞ்சதாக்கும். பின்னாடி வந்தவனுங்க இதப்பார்த்துதான் நிலையா கோயிலு கட்டிகிட்டானுங்க. ஆனா பழி வந்துபோடும்ன்னு தேர வெளியில நிறுத்தி வருசமாட்டு விழா” போட்டிருந்த தாம்பூலம் ஊறி வாயை நிறைத்துவிட, பக்கத்தில் வைத்திருந்த கும்பாவை எடுத்து துப்பிவிட்டு , “ஆமா வடக்க இருந்து வந்த பயலுவ நம்ம நிலம், சாமி எல்லாத்தையும் எடுத்துகிட்டானுவ”  என்று சொல்லி நிறுத்தினார் சற்குணம் பாட்டா.

“பாட்டா இது அதில்ல. நீங்க கொஞ்சம் வாய மூடுங்க. சின்ன பயலுவ மனசுல சேத்த எறியாதீங்க” என்றார் ஸ்தபதி முத்தையாண்ணன் ஆசாரி.

“ஸ்தபதி சேத்துலையாக்கும் தாமரை வளருது, என்னைய வாய மூட சொல்லுறியா, நான் உங்க ஆத்தாவா, அவ்வாவ பார்த்தவன்” என்று சொல்லி பல் இல்லாத வாயை திறந்து கெக்கெக்கெ என்று சிரிக்க ஆரம்பித்தார்.

“சரிதாங்க பாட்டா. இப்ப கொஞ்சம் வாயைய மூடுங்க. கணக்கு பார்க்கணும்” என்று நூலையும் உளியையும் எடுத்தார் ஆசாரி.

“அது சரி, கணக்கு ரொம்ப முக்கியமாக்கும், அங்குலம் பிசகுனா ஆயிரம் உயிர கேக்குற கணக்கு, மனுச கணக்காக்கும். சிவனுக்க கணக்க நாம போட முடியாது என்ன” என்றார் தாத்தா. 

“திருச்சிற்றம்பலம்” என்று முணுமுணுத்தப்படி வேலையைப் பார்க்க ஆரம்பித்தார் ஆசாரி.

2

ஸ்கூல் திறந்து ஒருவாரம் ஆகியிருந்தது. 

“சனியன் புடிச்ச வெயிலு குறையுதா பாரேன், காலைலேயே தீய அள்ளி கொட்டுற மாறி தகிக்குது” என்று அம்மா திட்டிக்கொண்டு இருந்தாள். 

“ஏம்மா, அப்பளம் வடவம் எல்லாம் காஞ்சிபோயி உன்  வேலை முடிச்சி போச்சுன்னு திட்டுறியா” என்று கேட்டதற்கு,

“எரும, வெயில்ல மேஞ்சி உடம்பு மூஞ்சி எல்லாம் வேர்க்குரு வாரிக்கொட்டி இருக்கு, பேச்சப்பாரு திண்ணைல கிடக்குற கிழவி மாறி. போய்ட்டு மதியமா சாப்பிட வா போதும், இங்க கிடந்து என் பிராணனை வாங்காத” என்றவள் தொடர்ந்து  “ரொம்ப சுத்தி மாரியாத்தாவ மேல ஏத்திக்கிட்டு வந்துடாத. ஏற்கனவே வீட்டுக்குள்ள இருக்கற சாமிக்கு எல்லாம் படைச்சு மாளல. போவும்போது மோரு சொம்ப கொண்டுபோயி திண்ணைல பாட்டிகிட்ட வச்சுட்டு போ, வேணும்போது எடுத்துக்கும்”  என்று சொல்லி நிறுத்தி, வெயிலில் நன்றாக காய்ந்து போய் இருந்த வடாம் எல்லாவற்றையும் துணியிலிருந்து பிரித்து எடுத்து செம்புடத்தில் அடுக்க ஆரம்பித்தாள். 

“போம்மா, கிழவிக்கிட்ட போனா கூப்ட்டு கொஞ்சும், எச்சியோட முத்தம் வேற கொடுக்கும், நீயே போய் கொடு” என்றேன்.

“அடி வாங்கப்போற நீ இப்ப! பாட்டிய இன்னொரு தடவ கிழவின்னு சொன்ன கரண்டிய அடுப்புல வச்சு நாக்குல இழுத்துடுவன் பார்த்துக்க” என்றவள், இடைவெளி விட்டு, “மோர் சொம்பு பக்கத்துல, இளநி சக்கரை போட்டு வச்சுருக்கேன். எடுத்து குடிச்சுட்டு, பாட்டிகிட்ட சொம்ப வச்சிட்டு விளையாட போ” என்றாள்.

தண்ணிப்பானை இருந்த மேடை மேல், பானைக்குப் பக்கத்தில் இருந்த மூடி போடாத சொம்பை எடுத்து வாயில் கவிழ்த்துக்கொண்டேன். இளநி  புளிப்பும், இனிப்பும்,உவர்ப்புமாக உள்ளிறங்கியது. ஒரே மூச்சில் குடித்து, சொம்பை அங்கேயே வைத்துவிட்டு இன்னொரு சொம்பை எடுத்துக்கொண்டு, முற்றத்தை சுற்றி இருந்த குட்டி சுற்றுச்சுவரில் ஏறினேன்.

திரும்பி, சமையலறையில் இருந்து அம்மா பார்க்கிறாளா என்று பார்த்தேன்.  செம்புடங்களை எரவானத்தில் ஏற்றிக்கொண்டு இருந்தாள். ஒரு கையில் மோர் செம்பை இறுக்கப் பிடித்தபடி ஒரு எம்பு எம்பி முற்றத்தில் போடப்பட்டிருந்த கம்பிகளை ஒவ்வொன்றாகப் பிடித்து தாவிப்போக ஆரம்பித்தேன். நடுவில் துணி காய்ந்து கொண்டிருந்த கயிற்றிடம் ஒரு கணம் நின்று தயங்கியபின் காற்றில் பறந்து இரண்டு கம்பிகளை தாண்டிச் சென்று பிடித்தேன். கடைசிக்கம்பியிலிருந்து சுற்றுச்சுவர் மீது குதிக்கும்போது, மோர் சிந்தாமலிருக்க ஊஞ்சல் போல இரண்டு முறை ஆடிய பின் கையை விட்டுவிட்டு சுவரின் மீது குதித்தேன்.

 “கலீர்” என்ற சத்தமும், தூரத்தில் இருந்து, “எரும மாடே, இன்னும் போகாம அங்க என்ன உடைச்சிட்டு இருக்க” என்ற சத்தமும் பின்னால் எழுந்தது.

ரேழியைத் தாண்டி, நிலைவாசப்படியை நெருங்கி ஒரு நிமிடம் நின்றேன். பக்கவாட்டில் சுழன்று மேலேறிச்சென்ற மாடிப்படியில் அப்பா வருகிறாரா என்று பார்த்தேன். ஒருநாள் அப்படித்தான் எட்டிப் பார்க்கும்போது, “என்னடா வேவு பார்த்துகிட்டு நிக்கற” என்று  முதுகில் விழுந்த அடி கால்களை தயங்கச் செய்திருந்தது. அப்பா வரும் சத்தமே யாருக்கும் கேட்காது, அம்மாவுக்கு மட்டும்தான் அது தெரியும். 

ஒருக்களித்து சாத்தியிருந்த கதவின் வழியே கண்ணை மட்டும் வெளியே நீட்டிப்பார்த்தேன். கிழவி எதிர்ப்புறமாக சுவரைப் பார்த்துப் படுத்திருந்தது.

சத்தமில்லாமல் காலை எடுத்து வெளியே வைத்து, சொம்பை திண்ணையில் வைத்த கணத்தில் எழுந்த “டங்” சத்தமும், பாட்டி திரும்பி கைநீட்டியதும் ஒரேநேரத்தில் நிகழ்ந்தது.

“பாட்டி, சொம்புல மோரு” என்று சொல்லிக்கொண்டே ஓட ஆரம்பித்திருந்தேன்.

“என் குலக்கொழுந்தே… ஒத்த மாணிக்கமே… பாட்டிகிட்ட வா. ஓடாத” என்ற குரல் முடியும் நேரத்தில் தெருவின் முனையை தொட்டு இருந்தேன்.

தெருமுனையில் இருந்த மூத்திர சந்தின் வழியே அடுத்த தெருவில் இருக்கும் எல். மோகன் வீட்டுக்கு குறுக்காகப் போய்விடலாம். கிளாசில் நான்கு மோகன் இருந்தாலும், ஹீரோ மோகன் போல ஒருத்தனும் பாடுறவன் கிடையாது.

மூத்திர வீச்சம் மூக்கில் ஏற, ஒண்ணுக்கு முட்டிக்கொண்டு வந்தது. டவுசர் உள்ளே கையை விடும்போது, கீழே ஒரு அரணை தின்ன மயக்கத்துல கிறங்கிக்கிடந்ததைப் பார்த்தேன். “அரணை மேல ஒண்ணுக்கு அடிச்சா குஞ்சாமணி அழுகி பொண்டாட்டி கிடைக்காது” என்று மாணிக்கம் தாத்தா சொன்னதும், இருவது தடவைக்கு மேல அப்படி செஞ்சும் அழுகவில்லை என்பதும், பெங்களூர் தக்காளி மாறி உருண்டையா சிவப்பா  இருக்கும் என்னோட மாமாபொண்ணு சத்யாவை எனக்கு பிடிக்காது என்பதும் ஒன்றாக ஞாபகத்தில் வர, குறி பார்த்து அதன் தலை மீது அடித்தேன். தூக்கத்தில் இருந்து விழித்த அது வாயைத் திறக்க அங்கும் பட, பதறி பயந்து ஓட ஆரம்பித்திருந்தது.

மூத்திர சந்தின் முடிவிலிருந்த நார்த்தங்காய் மரத்தின் இலைகளைப் பறித்து கைகளில் கசக்கி மூக்கில் வைத்து முகர்ந்தேன். மூத்திர வீச்சம் மூக்கிலிருந்து போய் நார்த்தங்காய் ஊறுகாய் மணம் அங்கு எழ நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்தது. கையில் இருந்த இலையை அப்படியே வாயில் போட்டுக்கொண்டேன். நார் நாராக நாக்கில் பட்டு எரிய, துப்பிய போது மோகன் வீட்டை அடைந்திருந்தேன். 

“மோக்கு டேய் மோக்கு” என்று கத்தினேன். திண்ணையில் படுத்திருந்த கண்ணாடி தாத்தா எழுந்து, “என்னடா காலைலியே வேட்டைக்கு கிளம்பியாச்சா? லஷ்மி நாராயணன்னு பாத்துப்பாத்து பேரு வச்சா மோக்கு மோக்குன்னு ஏலம் போடுற. காலையில எந்திரிச்ச உடனே படிக்கணும்னு உங்க ஸ்கூல் வாத்தி சொல்லி கொடுக்கலையா?” என்றார்.

ரேழி தாண்டி இருட்டில் ஒரு சின்ன நிழலாக மோகன் தெரிந்தான்.

“வாத்தியார்க்கு சுகமில்லை தாத்தா”.

“நம்ம வரதன் வாத்திக்கா? என்ன ஆச்சு?”

புயல் வேகத்தில் வாசலைத் தாண்டி வந்த மோகன், “வாடா போலாம்” என்றான்.

“வாத்திக்கு வாய்ல புண்ணு” என்று நான் சொல்லிய போதே  இருவரும் சிரித்துக்கொண்டே ஓட ஆரம்பித்திருந்தோம்.

ரெண்டு தெருவை குறுக்கில் தாண்டி, தோப்பு வீட்டு தோட்டத்தை அடைந்திருந்தோம்.

“என்னடா செய்யலாம்? பேசாம உங்க தோப்புல ஏறி தேங்காபறிச்சு தின்னுவோமா?”  என்றான் மோகன்.

“வேற ஒரு நல்ல ஐடியா எங்கிட்ட இருக்கு”

“ஐடியாவ முதல்ல சொல்லு, அது நல்லதா இல்லையான்னு நான் சொல்றேன்”

“போடா மயிரு”

“சரிடா சொல்லு. நல்ல ஐடியாவாதான் இருக்கும்” என்றான் மோகன். 

முறைத்துக்கொண்டே, “நாம தேரு செஞ்சு தெருத்தெருவா எடுத்துப் போயி தேர்க்காசு வசூல் பண்ணுவோம். அடுத்த மாசம் பெரிய தேரு வருதுல்ல எல்லாரும் காசு கொடுப்பாங்க. நாம சேர்த்து வச்சு சர்க்கஸ் பார்க்கப் போவோம்” என்றேன்.

“தேரா… பொட்ட புள்ளைங்க விளையாட்டுல்லா… நாம எப்படி?” என்றான்.

“டேய் தேரு செய்யற நம்ம மூத்த ஆசாரி முத்தையாண்ணன் யாரு? பொட்டையா? பெரிய ஆம்புளதானே ஒத்துக்கிறியா இல்லையா?” என்றேன்.

“ஆமாடா நீ சொல்றது கரெக்டதான். அன்னைக்கு எங்க வேலைக்காரி செல்வமக்கா ஆசாரி பெரிய ஆம்புள, ஆத்துப்பக்கம்ன்னு சொன்னவ என்னப் பார்த்து பேச்சை நிறுத்திட்டா. என்னம்மா பெரிய ஆம்பள? ன்னு கேட்டதற்கு அம்மா, தடிமாடு போடா போய் விளையாடுன்னு திட்டினா. நான் நகந்ததுக்கப்பறம் ரெண்டு பேரும் சிரிச்ச மாறி இருந்துச்சு” என்றான்.

“சரி அத விடு நாம நுணாக்காய் எடுத்து, ஓலை போட்டு தேர் செஞ்சு சாயங்காலம் வசூலுக்குப் போவோம். தண்டல்காரன் வர மின்னாடி போனாதான் காசு கிடைக்கும் பார்த்துக்க. நீ நுணா மரத்துல ஏறி ஒரு குண்டா காயி பறிச்சு வையி, நா வீட்டுக்கு ஓடிப்போய் விளக்கமாத்து குச்சி கொண்டு வரேன்” என்றேன்.

“மயிரு புடுங்கி” 

“என்ன?”

“ஒண்ணுமில்ல நீ போ”என்றான். 

அவன் வீட்டில விளக்கமாத்து குச்சி உருவினான்னா, அவன் அம்மா தோலை உரிச்சுடுவான்னு எனக்குத் தெரியும். அவர்கள் வீட்டில் தென்னை மரமே கிடையாது.

வடம்போக்கி தெருவின் முனையிலிருந்து ரெண்டாவது வீடு எங்கள் வீடு. எதிரில் குறுக்காக இருந்த சுபாஷிணி அக்கா வீட்டு திண்ணையில் ஏறி எட்டிப் பார்த்தேன். கிழவி நியூஸ்பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தது. வேற வழியில்லை, அது கையில படாம ஒரே ஓட்டமா வீட்டுக்குள்ள ஓடிட வேண்டியதுதான்.

வெயில் மேலேறி கண் கூசிக்கொண்டிருந்தது. அக்கா வீட்டுத் திண்ணையிலிருந்து குதித்த அடுத்த கணத்தில் நிலைவாசலைத் தாண்டி ரேழியின் இருட்டுக்குள் பாய்ந்தேன். இன்னுமொரு எட்டில் வெளிச்சத்தில் முற்றத்தில் ரெண்டு விளக்கமாரு கிடக்கும்.

“தட்”, ஜவ்வாது வாசனை மூக்கில் ஏற “அச்” என்றேன்.

அப்பா நின்று கொண்டிருந்தார்.

சலவை செய்து, இஸ்தரி போடப்பட்டு மொடமொடப்பாக இருந்த வெள்ளை வேட்டி சட்டையில் நெற்றி நிறைய விபூதி அடித்து வெளியில் செல்ல கிளம்பி இருந்தார்.

“என்னடா எல்லாத்துக்கும் அவசரம்?” என்றார்.

இருட்டுக்கு கண்கள் பழக, கையில் இருந்த சேறும் வியர்வையும் நார்த்தங்காய் இலை சாறும் அவர் சட்டைக்கு இடம் மாறி இருந்ததை பார்த்தேன். 

என் முதுகை விரைப்பாக்கி கொண்டு, வாய் குழற “தேரு, விளக்கமாறு தேரு” என்று திக்க தொடங்கினேன்.

“தும்மி இருக்கான் தடங்குது ஒக்காந்து போ” என்று திண்ணையிலிருந்து குரல் எழுந்தது.

என்னைப் பார்க்காமல் சுவரில் மாட்டியிருந்த தாத்தாவின் படத்தைப் பார்த்துக்கொண்டே, “சுந்தா, எப்பவும் ஏதோ பாம்பு கடிச்ச மாறி அவசரமா திரியாத. உடம்பாலையும் சரி, புத்தியாலையும் சரி. எதுவும் எங்கேயும் போய்டாது கண்ண தரையில வச்சு போ, கவனமா போ” என்றார்.

பின்னால் கையிலுள்ள  தண்ணி சொம்பு நடுங்கிக் கொண்டிருக்க அம்மா நின்றிருந்தாள்.

“அயர்ன் பண்ண வேற வெள்ளை சட்டை இருக்கா?” என்றார்.

அம்மா படிகளில் ஏறும் சத்தம் கேட்டது.

விளக்கமாரிலிருந்த கயிற்றை அவுத்து எல்லா குச்சியையும் எடுத்தேன். கட்டியிருந்த கயிறை டவுசர் பாக்கெட்டில் திணித்தேன். வெளி வாசல் வழியாக போக முடியாது. அப்பா இன்னும் இருக்கலாம்.

தொட்டிமுற்றத்தின் படிகளைத் தாண்டி, சமையல்கட்டில் நுழைந்து, நார்த்தங்காய் ஊறுகாய் சாடியில் கையை விட்டு அள்ளி இன்னொரு பாக்கெட்டை நிரப்பிக் கொண்டு, மூடி இருந்த தோட்டக்கதவைத் திறந்தேன்.

3

தோட்டக்கதவைத் திறந்து வெளியே வந்தால் நேராக அது தென்னந்தோப்புக்கு கூட்டிச்செல்லும். தோப்பில் ஆயிரத்துக்கும் மேல வளர்ந்த தென்னை மரங்கள் இருக்கின்றன. தோப்பின் மறுமுனை ஊர் எல்லையை தாண்டிச்சென்று நீண்டு கிடக்கும். முன்னெல்லாம் தோப்பில் தனியாகக் கூட விளையாட முடியும். இப்போது எல்லாம் தோப்பு பக்கமே போகக்கூடாது என்று அம்மா சொல்லி இருந்தாள். தோப்பின் உள்ளே உள்ள கோவிலுக்கு விளக்கு போட அம்மாவும், பாட்டியும், வேலைக்காரி செல்வமக்காவும் ஒண்ணாகவே போவார்கள். பின்வாசல் கேட் ஆறு வருஷமா மூடிக்கிடக்கிறது.

பக்கவாட்டில் நீளும் சந்தில் ஏதோ தெரிய, கிட்டே சென்று பார்த்தேன். தம்பியின் உடைந்துபோன நடைவண்டி. அதன் அடிப்பாகத்தில் காலை வைத்து அழுத்தி சக்கரத்தை இழுக்க, கையோடு வந்தது. நான்கு சக்கரங்களையும் எடுத்து, டவுசர் பாக்கெட்டில் போட்டேன்.

சக்கரங்கள் தொடையை உரச,

தோட்ட வாசப்படி… அம்மா… ஓலையிலிருந்து ஈர்குச்சிகளை உருவ… நான் ஓட… பின்னால் சக்கரம் உருண்டு வரும் சத்தம்… ன்னா ன்னா…  கேட்டின் சறுக்கல்… என்ன சத்தம்… டிராக்டர்… தேங்காய்  ஏற்றிய டிரெய்லர்… அப்பா… வேகம்… தம்பி… சக்கரம்…”

“தட்” 

கேட்டில் ஏறி தெருவில் குதித்த வேகத்தில் அங்கு வந்து கொண்டிருந்த புல்லட் மீது மோதி விழுந்தேன்.

மரிக்கொழுந்து மணமும், டீசல் புகையின் வாசனையும் கலந்து எழ “அச்” என்றேன்.

“சனியன் புடிச்சவனே! கண்ணைத் தரையில் வைய்யி. பாம்பு கடிச்ச மாறி எப்பப்பாரு அவசரம். எங்க போகும்போது குறுக்க விழுந்து சாகப் பார்க்கற” என்ற சித்தப்பா இஸ்திரி போட்ட வெள்ளை வேட்டியும் சட்டையும் அணிந்து நெற்றி நிறைய விபூதி பூசி இருந்தார்.

நான் திடுக்கிட்டு நிற்க, வண்டியை வளைத்துக்கொண்டு சென்றுவிட்டார். மூன்றாவது முறை  “அச்”  என்றபடி தெரு முனை நோக்கி ஓட ஆரம்பித்தேன். அம்மா பார்த்து விடக்கூடாது என்ற வேகம் மட்டும்தான் என் கால்களில் இருந்தது.

தோப்பில் ஒரு மூட்டை நுணாக்காய்களைப் பறித்து வைத்து தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்த மோகன் “எங்கடா தொலஞ்ச? எவ்ளோ நேரம்?” என்றான்.

“அப்பாகிட்டவும், சித்தப்பாகிட்டவும் மாட்டிக்கப் பார்த்தேன். அவங்களுக்குள்ள ஏற்கனவே பெரிய சண்டை, தப்பிச்சு வரதுக்குள்ள பெரிய விஷயமா போச்சு” என்றேன்.

“ஈர்குச்சிக்கா சண்டை?” என்றான்.

“ஆமா, வா. தேர்நிலைக்குப் போலாம்”.

“ஏன் இப்ப இங்க தேர் செய்யலையா?”

“டேய், ஆசாரி தேர் செய்யற கொட்டாய்க்கு போயி அதப்பார்த்து அந்த மாறி செய்வோம். நம்மலே செஞ்சா நிறைய காசு போட மாட்டாங்க” என்றேன்.

குழம்பியவன், “சரி போலாம்” என்றான்.

சிரித்தபடி, “டேய், எனக்கு எல்லாம் தெரியும்டா, அங்க ஆசாரி பொண்ணு பிரியாவ பார்க்கலாம்ன்னு தான ஒத்துக்கிட்ட” என்றேன்.

“மயிரு வாய மூடுடா. இவருக்கு எல்லாம் தெரியுமாம், நேத்து சபரி அண்ணன் சொன்ன ராஜா கதையில மந்திரி நாக்கு எப்படி கட்டாச்சு சொல்லு” என்றான்.

“சரி வா போலாம்” என்றேன் பதில் தெரியாத சோகத்துடன்.

4

கோயிலை ஒட்டியிருந்த வீதியில், தேர்நிலை அருகே கீற்றுக்கொட்டகையில் வேலை நடந்து கொண்டிருந்தது. ஊரில் தானே நடக்கும் தெம்புள்ள வயசாளிகள் சிலர் வந்து ஆங்காங்கே வாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஸ்தபதி  முத்தையாண்ணன் ஆசாரி நடுநாயகமாக உக்கார்ந்து கட்டளைகள் சொல்லிக்கொண்டு இருந்தார்.

அருகில் குத்துக்காலிட்டு உக்கார்ந்திருந்த சற்குணம் தாத்தா, “மின்னாடி இருந்த தேரு போசலே மகாராஜா, பொன்னு கொடுத்து நல்ல எண்ணை உள்ள இலுப்பையும், கருமருதும் இழைச்சு செஞ்சதாக்கும். அது இடி விழுந்து எரிஞ்ச அப்பறமா இந்த தேர உங்க அப்பாரு ஸ்தபதி உமாபதி வேங்கையும், வாகையையும் இழைச்சு செஞ்சாரு. அப்பவே நா சொன்னேன் பழைய மாறியே செய்வோம் ஸ்தபதின்னு, என்ன செய்யறது சர்க்காருப்பய ஒத்தப் பைசா இறக்கல. பெரிய பணம் போட்டது நம்ம கோயிலுக்காரரு குடும்பம். பணம் கொடுத்தா சாபம் போய்டும்ன்னு நினைச்சாங்க. எதோ இவ்ளோதான் முடிஞ்சுது” என்றவர், 

எங்களை நோக்கி “பள்ளிகூடப்பயலுவ பரதேசி சாமியாருங்க மாறி மூட்டை, விளக்கமாத்தோடு நிக்கிறானுங்க, என்னடா பள்ளிக்கூடம் போகல? இங்க எதுக்கு வந்தீங்க” என்றார்.

“தேரு செய்யறதப் பார்த்து ஒரு குட்டித்தேர் செஞ்சு வரச்சொல்லி இருக்காங்க. ஸ்கூல்ல புராஜக்ட்டு” என்றான் மோகன்.

ஒரு கணம் அவன் மீது பொறாமை எழுந்தது.

“என்னது” என்றார் தாத்தா மறுபடியும்.

“புராஜக்ட்டு” என்றான் மோகன் சத்தமாக.

“சிறுத்தேர்ப்பருவம் போயி கழுத வயசு ஆகும் போல தெரியுது. இன்னும் தேர் செய்ய திரியிறானுங்க,பயலுவ யாரு? என்றார் சற்குணம் தாத்தா.

சிரித்துக்கொண்டே முத்தையாண்ணன், “சைவவித்துதான், நம்ம கோயிலுகாரரு மவனும் அவன் கூட்டாளியும். என்ன பசங்களா என்ன வேணும்?” என்றார்.

இந்தமுறை நான் முந்திக்கொண்டு “உங்க கிட்ட தேர் செய்யறது பத்தி கேட்டு ஒரு குட்டி தேர் செய்யலாம்ன்னு வந்தோம், ஸ்கூலு புராஜக்ட்டு” என்றேன் .

கண்களை சுருக்கிய சற்குணம் தாத்தா, “கைலாசம் மவனா? உங்க அப்பனுக்கும் சித்தப்பனுக்கும் இன்னைக்கிள்ளா கோர்ட்டு தீர்ப்பு? போயிருக்கானுங்களா?” என்றார்.

தூரத்தில் மூங்கிலைப் பிளந்து கொண்டிருந்த சிவசு அண்ணன், “கண்ணும் காதும் முக்காவாசி போனப்பின்னும் இத்தன ஷார்ப்ன்னாக்கா, பாட்டா சுகமாயிருந்தா நம்ம கும்பிக் காயவேண்டியதுதான். ஸ்தபதியே எதுக்கும் உங்க அப்பாரு சீக்கிரம் சிவனை பார்க்கப் போனதுல பாட்டாக்கு பங்கு இருக்கும் போல, பார்த்துக்கிடுங்க” என்றார்.

“சிவசு நீ கொஞ்சம் வாய மூடிட்டு வேலையைப் பாருடா” என்ற முத்தையாண்ணன், 

எங்களிடம் திரும்பி, “இங்க எல்லாம் மாறிமாறிக் கிடக்கு, நீங்க கோயிலு மேலப்பிரகார சுவர்ல தேரு படம் இருக்கும். அதை பார்த்து செய்யப் பாருங்க” என்று சொல்லி நிறுத்தியவர், “அதுல எதாவது தெரியணும்ன்னா வந்து கேளுங்க. இப்ப ஒடுங்க” என்றார்.

திரும்பும்போது அங்கு கிடந்த கைப்பிடியுடன் கிடந்த மரக்கட்டைகளை பார்த்து இது என்ன என்றேன்.

“இது முட்டுக்கட்டை இதுதெரியாதா தேர் நிறுத்தறதுக்கும், வேணுங்கற பக்கம் போறதுக்கும் சக்கரத்துக்கு அடியில வைக்கிறது. ஸ்டீயரிங், ப்ரேக் எல்லாம் கிடையாதுல்ல தேர்ல” என்றார் ஸ்தபதி.

“சயன்டிஸ்டு ப்ரேக் எல்லாம் கண்டுபிடிச்சு ரொம்ப வருஷமாட்டு ஆச்சு இல்ல, இப்ப இன்னும் இதை ஏன் வச்சுக்கணும்” என்றான் மோகன்.

“ரெண்டுமூணாயிரம் எடையுள்ள தேரு வடத்த புடிச்சு ஆயிரம் சனம் இழுக்கும். நில்லுன்னா உடனே நிறுத்த முடியுமா? பிரேக்கு போட்டா அந்த விசயில மரச்சக்கரம் உடைஞ்சு போய்டும்” என்றார் ஸ்தபதி.

நான் முந்திக்கொண்டு “இத்துணூண்டு இருக்கறதா தேர் நிக்கவும், வேற பக்கம் போறதுக்கும் காரணம்? எப்படி?”என்றேன்.

“பய புடிச்சுப்புட்டானாக்கும். சைவ வித்தாக்குமே” என்றார் சற்குணம் தாத்தா.

ஸ்தபதி  முத்தையாண்ணன் சிரித்தபடி, ” பசங்களா அதை அப்பறம் பார்க்கலாம் இப்ப ஓடுங்க கோயிலுக்கு ” என்றார்.

“ஸ்தபதியே, புளியமர முட்டுக்கட்டையா? இலுப்பைன்னா நல்லாத் தாங்குமே இது எப்படி பார்த்துக்க” என்று சற்குணம் தாத்தா பேசிக்கொண்டே இருந்த சத்தம் காற்றில் பின்னாலேயே வந்தது.

கோயிலின் கிழக்குவாசலுக்குள் நுழைந்து சுற்றிக்கொண்டு சென்று மேற்கு பிரகாரத்தின் படிகளில் ஏறினோம்.

வவ்வால் புழுக்கைகளின் வீச்சம் எழுந்து மூக்கை எரியச் செய்தது.

“கருமம் வவ்வாலுக்க பஸ்ஸ்டாண்டு கக்கூசு போல இது” என்றான் மோகன்.

“டேய் வாய மூடு. கோயிலு” என்றேன்.

“எங்கிட்டதான் எகிற முடியும். வவ்வாகிட்ட ஒண்ணும் முடியாதுல்ல” என்றான்.

ரெண்டு பேருக்கும் சிரிப்பு பொத்துக்கொண்டது. பாக்கெட்டிலிருந்து சக்கரத்தினை எடுத்து அவனிடம் கொடுத்தேன்.

மேலச்சுவரில் இருந்த படத்தைப் பார்த்தவன், “கீழாட்டுக்க ஒருமாதிரி கனசெவ்வகம், அதுமேல ஒரு படுக்கப்போட்ட சதுரம், அப்பறம் நாலு முக்கோணம், உச்சியில ஒரு கொடி, நாலு சக்கரம். கோடு இணையர இடத்துல ஜாயின்ட்ட போட்டா முடிஞ்சுச்சு. எல்லாமே ஈஸி கணக்காக்கும்” என்றான். 

போன முழுப்பரீச்சையில் கணக்கில் என்னை விட அறுவது மார்க்கு கூட வாங்கி நூற்றுக்கு நூறு வாங்கியிருந்தான் என்பது நினைவுக்கு வர கடுப்புடன், “மோகன் டேய் இது ஒண்ணும் வெறும் கணக்கு இல்ல பார்த்துக்க, எல்லாமே சயன்சு. தேர்ன்னா என்ன, அது மனுஷ உடம்ப பார்த்துச் செஞ்சதாக்கும், உள்ளம் பெரும் கோவில் ஊனுடம்பு ஆலயமன்னு திருமூலரே சொல்லியிருக்காரு” என்றேன்.

நான் சொல்லி முடிப்பதற்குள் அவன் கைகள் ஒரு குட்டித்தேரை உருவாக்கி முடித்து இருந்தன.  கயிற்றை கட்டி இழுக்க ஆரம்பித்தான்.

கீழே கிடந்த வவ்வால் புழுக்கை மீது சக்கரம் ஏறி தேர் நிலை தடுமாறிக் கொண்டிருந்தது.

“டேய் மோகு, ரொம்ப ரொம்ப சின்ன புழுக்கைதான், ஆனாலும் பாரேன் முட்டுக்கட்டை. இது சரி வராது கேட்டியா, ஈர்க்குச்சி நாலுஅடி இழுக்கறதுக்குள்ள சின்னச்சின்ன கல்லு பட்டுக்கூட உடைஞ்சு போக ஆரம்பிச்சுடு்ம். நாம வேணா இத ஒரு சின்ன மாடலா செஞ்சு, அப்பறம் மூங்கி குச்சிய வச்சு செய்வோம். நாலு தெரு இழுத்து போனாலும் ஸ்ட்ராங்கா இருக்கும் என்ன?”  என்றேன்.

“டேய் சூப்பரு ஐடியா” என்று அவன் முகத்தில் புன்னகை எழுந்தது.

“லஷ்மி”

“என்னடா”

டவுசர் பாக்கெட்டில் கையைவிட்டு நார்த்தங்காய் ஊறுகாயை எடுத்து அவனிடம் கொடுத்தப்பின், “அந்தக் கதையில மந்திரி நாக்கு எப்படிடா கட் ஆச்சு?” என்றேன்.

ஊறுகாயை வாயில் போட்டவன் புன்னகை இன்னும் பெரிதாக, “இது கோவிலு, நீ என்னோட ரெண்டு மாச சின்னப்பய வேற. வா வெளியே போவோம். இந்த தேரத் தூக்கிக்க” என்றான்.

மறுபேச்சு இல்லாமல் அதை பத்திரமாக கையில் தூக்கிக்கொண்டேன்.

5

“சைவ சித்தாந்தம் என்ன சொல்லுது தெரியுமா, பொன் வெள்ளி இரும்புல மூணுக்கோட்டை கட்டிக்கிட்டு அட்டூழியம் செய்த மூணு அசுரனை அழிக்க சிவன் பூமிய தேராக்கி ஏறி போனான் சொல்லுது. திரிபுரம் எரித்த சிவன்னு சொல்றது அதான். திரிபுரன்னா என்னா அது என்ன ஊரா. திருமூலர் என்ன சொல்றார்ன்னா”, சற்குணம் தாத்தாவின் பேச்சின் குறுக்கே வடிவேலுவின் சைக்கிள் வந்து விழுந்தது.

“என்னடா வடிவேலு எங்கேயாவது இடி விழுந்து எரியுதா? ஏன் இப்படி ஓடி வர” என்றார் முத்தையாண்ணன்.

“இடிதான் ஆசாரியே… கோயிலு பையன் இங்கையா வந்தான்? அவங்க அப்பாவும் , சித்தப்பாவும் கோர்ட் வாசல்லயே ஒருத்தரையொருத்தர் குத்திக்கிட்டு செத்துட்டாங்க. ஊரே திரண்டு இப்ப கோயிலுகாரங்க வீட்டு முன்னாடிதான் இருக்கு. ரெண்டு பாடியும் சித்த நேரத்துல வந்துபோடும். இந்தப் பயலதான் தேடிக்கிட்டு இருக்கோம்” என்றான் வடிவேலு. 

வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அனைவரும் அப்படியே சிலையாக நிற்க ஆசாரி திக்கித்திணறி, “கோயில்ல இருப்பான் பாரு” என்றவர், ஈஸ்வரா என்று தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்தார். வடிவேலு கோயிலுக்குள் ஓடினான்.

துண்டை எடுத்துக்கொண்டு கோயிலுகாரங்க வீடு நோக்கி நடக்க ஆரம்பித்த சற்குணம் தாத்தா அங்குகிடந்த தேர் இழுக்கும் இரும்பு சங்கிலியின் கண்ணிகளை ஒருகணம் நின்று பார்த்து திடுக்கிட்டு பின்னர் கைகளை உயர்த்தி கோபுரம் நோக்கி கும்பிட்டார்.

6

அவன் அப்பாவையும், சித்தப்பாவையும் வீட்டின் பின் நீண்டு கிடந்த தென்னந்தோப்பில் அருகருகே புதைத்துவிட்டு வந்த அன்று பாட்டி அள்ளி அணைத்து முத்தமிட்டு அழுதுகொண்டே, “ஒத்தக் கொழுந்தா நிக்கிறியே சுந்தரா, ஒரு சொட்டாவது அழுதுடுடா? குடும்பத்து மேல விழுந்த சாபம் ஓன்வரைக்கும் வராம போகட்டும். அழுது கரைச்சுடு” என்றாள்.

பதினாறாம் நாள் காரியத்துக்குள் புதைத்த இடத்தில் சிறுகோயில் எழுப்பி லிங்கம் பிரதிஷ்டை பண்ண மாமாவின் மேற்பார்வையில் வேலை நடந்து கொண்டிருந்தது.

கோயிலிலிருந்து வடிவேல் அண்ணன் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வீடு வந்தது முதல், அவன் ஒருதுளி கண்ணீரும் விடவில்லை, ஒரு வார்த்தை பேசவும் இல்லை என்பது எல்லோரிடமும் பயத்தை உண்டாக்கி இருந்தது.

பதினாறாம் நாள்  துக்கம் கழிக்க சொந்தக்காரர்கள், ஊர்க்காரர்கள் எல்லாரும் புதிதாக கட்டப்பட்ட சிறுகோயில் முன் கூடி நின்றிருந்தனர். அவன் கண்ணில் இருந்து ஒரு சொட்டு நீராவது வருமா என்று எல்லோருடைய கண்களும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தன. 

அவன் அருகில் வந்த சத்யா, அவனுடைய இடுப்பில் கிள்ளி “ஏன்டா வாய தொறக்க மாட்டங்கற? தொறடா” என்றாள்.

கல்சிலை மாதிரி அசையாமல் நின்று கொண்டிருந்தான். 

தீபாராதனை காட்டும் முன், உள்ளிருந்து வெளியே தலையை நீட்டிய மாமா “சத்யா ஒரு பாட்டு பாடும்மா” என்று சொன்னார்.

சத்யா கண்களை மூடி, கைகளைக் குவித்துக்கொண்டு கரகர குரலில் பாட ஆரம்பித்தாள், 

“தன்‌ ஒளியில்‌ லீலை யாகி,
ஓதியது அனைத்தினும்‌ அடங்காமல்‌ வேறாகி,
உள்ளும்‌ புறம்பும்‌ ஆகி,
ஒளியில்‌ ஒளி ஆகி மற்று இரவுபகல்‌ அற்ற இடம்‌
ஒப்புவித்து எனை இருத்தித்‌
தீதினை அகற்றி நின்‌ திருவருள்‌ புரிந்தவா
சிறுதேர்‌ உருட்டி அருளே
சேவற்‌ பதாகைக்‌ குமார கம்பீரனே
சிறுதேர்‌ உருட்டி அருளே”

சுந்தரம் கண்களைத் திறந்தான். உடைந்த சிறுதேர் ஒன்று அங்கு கிடந்ததைப் பார்த்தான். சிறு தூறலென ஆரம்பித்த ஆனிமாத மழை மேகமொன்று சட்டென்று விலக வானில் சூரியனின் தேர் திரும்பி தெற்கு நோக்கி சென்று கொண்டிருந்தது.

உள்ளே தெரிந்த அசையாத தீப ஒளியில் சிவம் அங்கிருந்தது.


Discover more from சொல்வனம் | இதழ் 371 | 26 ஜூலை 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.