பாறை, பனி, பனியாறு பகரும் காலங்களின் வரலாறு

சூரியன் உறங்க மறுக்கும் மாகாணம்

சில பயணங்கள் பல மாதங்களாகத் திட்டமிட்டு தொடங்கும். எங்களது அலாஸ்கா பயணமும் அப்படித்தான். ஆனால், அதில் நாங்கள் கவனிக்காமல் இருந்தது சிறிய விஷயம்தான், இப்பயணத்திற்கு சில நாட்கள் முன்புதான், நாங்கள்  கோடைக்கால சங்கராந்தி (Summer Solstice, ஜூன் 22, 2026) முடிந்த மறுநாள்  செல்கிறோம் என்பதை உணர்ந்தோம்.

எங்களது விமானம் அலாஸ்காவின் ஆங்கரேஜ் நகரில் தரையிறங்கவிருந்தது.  இந்த காலகட்டத்தில், வட துருவத்திற்கு அருகே உள்ள நாடுகளில் எல்லாம் மிக நீண்ட பகல்நேரம் இருக்கும். அதாவது, அலாஸ்காவை அதன் ஒளி மிகுந்த பருவத்தில் காணும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. 

சிகாகோவிலிருந்து புறப்பட்ட விமானம் ஆங்கரேஜை நோக்கி மெதுவாகத் தாழத் தொடங்கியபோது, ஜன்னலுக்கு வெளியே விரிந்த காட்சி சில நிமிடங்களில் மாறியது. நகரங்களும், விவசாய நிலங்களும் மறைந்து, அளவிட முடியாத வனப்பகுதிகள் தோன்றின. பனியால் போர்த்தப்பட்ட மலைத்தொடர்கள் பூமியிலிருந்து எழுந்து நின்று மாபெரும் கோட்டைகளைப் போலக் காட்சியளித்தன. அதன் இடையே பள்ளத்தாக்குகள் நிரம்பிய பனியாறுகள் (glaciers) மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தன. மேலிருந்து பார்க்கும்போது அவை காலமே உறைந்து கிடப்பதுபோல் தோன்றின. ஆனால் அவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் செதுக்கிக் கொண்டிருக்கும் இயற்கையின் சிற்பிகள். அலாஸ்கா தனது பிரம்மாண்டமான இயற்கை முகத்தைக் காட்டி வரவேற்றது.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தில்லியில் வாழ்ந்த எங்களுக்கு, இந்த அனுபவம் இன்னும் ஆழமானதாக இருந்தது. சுமார் 29° வட அட்சரேகையில் அமைந்துள்ள தில்லியிலும் கோடைக்காலத்தில் பகல் நீளமாக இருக்கும். ஆனால் அதிகபட்சம் பதினான்கு மணி நேரத்திற்கு அருகில்தான் பகலொளி நீடிக்கும். மாலை வந்ததும் சூரியன் மேற்கில் மறைந்து, சிறிது நேரத்தில் இருள் முழுமையாகப் பரவி விடும். ஆனால் 61° வட அட்சரேகைக்கு அருகில் அமைந்துள்ள ஆங்கரேஜ் முற்றிலும் வேறொரு உலகமாக இருந்தது. கோடை சங்கராந்தியைத் தொடர்ந்து வரும் வாரத்தில், பகலொளி ஏறத்தாழ 22 மணி நேரம் நீடிக்கிறது. மீதமுள்ள இரண்டு மணி நேரமும் நாம் எப்போதும் அனுபவித்த இருள் அல்ல. சூரியன் மலைகளுக்குப் பின்னால் சற்று ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் எழத் தயாராக இருப்பதைப் போல, வானம் மென்மையான மங்கலொளியில் தொடர்ந்து பிரகாசித்துக்கொண்டே இருந்தது.

இன்னொரு ஆச்சரியம் சூரியனின் பயணப்பாதை. தில்லியில் கோடைக்காலத்தில் சூரியன் வானத்தின் உச்சியை நோக்கி ஏறிச் செல்லும். சில நாட்களில் தலைக்கு நேராகவும் தோன்றும். ஆனால் அலாஸ்காவில் அது அப்படியில்லை. தெற்கு வானத்தின் குறைந்த உயரத்தில் நீண்ட வளைவை வரைந்தபடி நாள் முழுவதும் மெதுவாகச் செல்கிறது. நள்ளிரவும் இருளாக இல்லாமல், புகைப்படக் கலைஞர்கள் பொன்னிற ஒளி என்று கருதும் நேரமாக மாறிவிடுகிறது. மலைகளும், ஏரிகளும், பனியாறுகளும், மரங்களும் அந்த மென்மையான ஒளியில் வேறொரு உலகத்தைச் சேர்ந்தவை போலத் தோன்றியது.

பதினொன்று மணியிலும் பூங்காக்களில் குழந்தைகளும், சிறுவர்களும் விளையாடிக்கொண்டிருப்பதைக் காண முடிகிறது. கடற்கரைகளிலும் நடைபாதைகளிலும் மக்கள் அந்த நேரத்தில் உலாவிக் கொண்டிருந்தார்கள். இந்த விசித்திரமான ஒளிச்சூழல் சுற்றுலாப் பயணிகளின் அனுபவத்தை மட்டுமல்ல, அலாஸ்கா மக்களின் வாழ்க்கையையும், அங்குள்ள விலங்குகளையும் வேறுவிதமாக வடிவமைக்கிறது. விலங்குகள் நீண்ட நேரம் உணவு தேடி அலைகின்றன. செடிகளும் மலர்களும் குறுகிய கோடைக்காலத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு வேகமாக வளர்கின்றன. நீண்ட குளிர்காலம் மீண்டும் வருவதற்கு முன், அனைத்து உயிரனமும் ஒவ்வொரு ஒளி மணித்துளியையும் வாழ்வின் கொண்டாட்டமாக மாற்றிக் கொள்ள பழகிவிட்டனர்.

பின்னோக்கிப் பார்க்கும்போது, அலாஸ்காவை அறிமுகப்படுத்திக் கொள்ள இதைவிடச் சிறந்த வாரத்தை நாங்களாக தேர்ந்தெடுக்கவில்லை, அதுவாகவே அமைந்தது எங்கள் பாக்கியம். விமான ஜன்னலில் முதன்முதலாகக் கண்ணில் பட்ட அந்தப் பனியாறுகள் இந்தப் பயணத்தின் முதல் காட்சிமட்டுமே. அடுத்த சில நாட்களில் மலைகளும், ஃபியோர்டுகளும்(Fjords), ஏரிகளும், வனங்களும், கிட்டத்தட்ட மறையாத சூரிய ஒளியின் கீழ் தங்களது அற்புதமான அழகை ஒவ்வொன்றாக எவ்வாறு காட்டப் போகின்றன என்பதை அப்போது நாங்கள் அறிந்திருக்கவில்லை.

காலை எட்டு மணியளவில் Grizzly Bear Resortல் இருந்து எங்கள் டெனாலி(Denali) பயணம் தொடங்கியது. விடுதியை விட்டு புறப்பட்டபோது, அலாஸ்காவின் கோடைக்காலத்திற்கு உரிய அந்தத் தூய்மையான குளிர் காற்று முகத்தை வருடிச் சென்றது. வானம் முழுவதும் மெதுவாக மேகங்கள் திரண்டு கொண்டிருந்தன; இருப்பினும் அவ்வப்போது கதிரவனின் பார்வை அவற்றின் இடைவெளிகளில் ஊடுருவி நிலத்தின் மீது மென்மையான ஒளியைப் பரப்பியது.

நாங்கள் தேசியப் பூங்காவின் நுழைவாயிலை நெருங்கும் போதே, வெள்ளை ஸ்ப்ரூஸ்(White spruce), ஆஸ்பென்(aspen) மரங்களுக்கிடையில், பெண் மூஸ்(Moose) ஒன்று தனது குட்டியுடன் அமைதியாக மேய்ந்து கொண்டிருந்தது. ஜூன் மாதம் வளமான பருவமாதலால், புதிய வில்லோ(Willow) இலைகள், சிறிய பெர்ச்(Birch) செடிகளின் இளம் தளிர்கள், சதுப்பு நிலங்களில் வளரும் நீர்ச்செடிகள் போன்றவை அனைத்தும் மூஸ்களுக்கு சிறந்த உணவாக அமைகின்றன. சில வாரங்களுக்கு முன்பே பிறந்த குட்டிகள் தாயைப் பின்தொடர்ந்து மேயக் கற்றுக் கொள்ளும் காலமிது.

நுழைவாயிலருகே சுற்றுலாப் பயணிகள் வரைபடங்களைப் பார்த்துக் கொண்டும், பைகளைக் கட்டிக் கொண்டும், பச்சை நிற ஷட்டில் பேருந்துகளில் ஏறிக் கொண்டும் இருந்தனர். ஆனால் அந்த மனிதக் கூட்டத்தை விட்டு சில நிமிடங்கள் சென்றவுடன், அலாஸ்காவின் அளவற்ற வனப்பகுதி மனிதர்களின் இருப்பையே மறக்கச் செய்தது.

முதலில் ஸ்லெட் நாய்(Sled dog) காட்சிக்காக சென்றோம். டெனாலியின் ஸ்லெட் நாய்கள் வெறும் சுற்றுலா நிகழ்ச்சிக்காக வளர்க்கப்படும் நாய்கள் அல்ல. பனிக்காலத்தில், வாகனங்கள் செல்ல முடியாத நேரங்களில், இவைகள் பூங்கா காவலர்களுக்கு உதவும் பணியாளர்கள். இயந்திரங்கள் பலவற்றை மாற்றியிருந்தாலும், இந்தப் பனிப் பிரதேசத்தில் ஸ்லெட் நாய்களின் இடத்தை இன்னும் எதுவும் முழுமையாகப் பிடிக்கவில்லை.

பிறகு, மற்றொரு பேருந்தில் மவுண்டன் விஸ்டா பாதை(Mountain Vista Trail) நோக்கிப் பயணித்தோம். வழியெங்கும் ஸ்ப்ரூஸ் காடுகள், சதுப்பு நிலங்கள், பனிநீரோடைகள், தூரத்தில் மேகங்களுடன் கண்ணாமூச்சி விளையாடும் மலைத்தொடர்கள். இந்த பாதையில், வட அமெரிக்காவின் உயரமான சிகரமான டெனாலி மலையையும்(20,310 ft), அதன் அருகே எழுந்திருக்கும் மவுண்ட் ஃபோரேக்கர்(Mt Foraker), மவுண்ட் ஹண்டர்(Mt Hunter), மல்ட்ரோ(Muldrow) பனிப்பாறை ஆகியவற்றை தெளிவான வானமாக இருந்தால் காண முடியும். ஆனால், அன்று கருமேகங்கள் முழுவதுமாக மலைகளை சூழ்ந்திருந்ததால்,  மேகங்கள் விலகிய சில கணங்கள் மட்டுமே சாம்பல் நிற பாறைச் சரிவு தெரிந்தது.

மதியத்திற்கு பிறகு சாவேஜ் ஆற்றை (Savage River) நோக்கிப் புறப்பட்டோம். அங்கிருந்த இயற்கை முற்றிலும் மாறுபட்டிருந்தது. அடர்ந்த காடுகள் மெதுவாக விலகி, அகன்ற பள்ளத்தாக்குகள் காட்சி அளித்தன. நடுவே சாவேஜ் ஆறு வெள்ளி நூலைப் போல வளைந்து ஓடியது. இரண்டு மைல் சுற்றுப்பாதை அந்த நாளின் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. முதலில் காதுகளில் விழுந்தது ஆற்றின் ஓசை. ஆற்றைக் காண்பதற்கு முன்பே அதன் இசை எங்களைச் சென்றடைந்தது. பனிப்பாறைகளில் இருந்து பிறக்கும் இந்த ஆறு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பாறைகளை அரைத்து உருவான நுண்துகள்களைத் தன்னுடன் சுமந்து வருகிறது.

அதனால் அதன் நீர் சில நேரம் பச்சை கலந்த சாம்பல் நிறமாகவும், சில சமயம் பால்நிற நீலமாகவும் தோன்றுகிறது. ஆற்றங்கரையில் நடந்தபோது, அது திறந்தவெளி புவியியல் அருங்காட்சியகமாக மாறியது. இங்கு காணப்படும் பல பாறைகள் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் ஆழத்தில் மிகுந்த வெப்பம் மற்றும் அழுத்தத்தின் கீழ் உருவான உருமாற்றப் பாறைகள். பல இடங்களில் மினுமினுக்கும் மைக்கா துகள்களால் ஒளிர்ந்த ஷிஸ்ட்(Schist) பாறைகள் தென்பட்டன. சில பாறைகளில் வெளிர் மற்றும் கருநிற கனிமப் பட்டைகள் மாறிமாறி க்னைஸ்(Gneiss)ஸாக உருவாகியது. மற்ற சில இடங்களில் மிகக் கடினமான குவார்ட்சைட்(Quartzite) பாறைகள் காணப்பட்டன. அவை முதலில் மணற்கற்களாக இருந்தவை; பின்னர் மிகுந்த வெப்பத்தாலும் அழுத்தத்தாலும் முழுமையாக மறுபிறவி பெற்றவை.

ஆற்றங்கரையில் கிடந்த சிறிய கூழாங்கற்களும் தனித்தனி கதைகளைச் சொல்லியது.
வெண்மையான குவார்ட்ஸ்(quartz) இழைகள் பல பாறைகளைக் குறுக்கே வெட்டிச் சென்றன.
சூரிய ஒளி படும்போது மின்னிய மஸ்கோவைட் மைக்கா (muscovite mica) துகள்கள் கண்களை ஈர்த்தன.
கருமையான பயோடைட்(biotite) துகள்கள் சில பாறைகளில் தென்பட்டன.
இளஞ்சிவப்பு நிற ஃபெல்ட்ஸ்பார்(feldspar), வெண்மையான குவார்ட்ஸ், கருநிற ஹார்ன்பிளெண்ட்(hornblende) ஆகியவை சேர்ந்து கிரானைட் துண்டுகளின் அமைப்பை வெளிப்படுத்தின. சில பாறைகளில் பச்சை நிறமுடைய குளோரைட்(chlorite), எபிடோட்(epidote) போன்ற கனிமங்களும் காணப்பட்டன. இரும்புச் சத்துள்ள கனிமங்கள் ஆக்சிஜனுடன் சேர்ந்து உருவாக்கிய ஹெமடைட்(haematite), லிமோனைட்(limonite) போன்ற சிவப்பு-பழுப்பு நிறப் படிவங்களும் பல இடங்களில் தென்பட்டன. இந்தக் கற்களைப் பார்த்தபோது, பொருளியல் வேதியியலாளனாக என் மனம் தானாகவே கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் சென்றது. இன்று காலடியில் கிடக்கும் இந்தச் சிறிய கற்கள், ஒருகாலத்தில் பூமியின் ஆழத்தில் ஆயிரக்கணக்கான வளிமண்டல அழுத்தத்தையும் நூற்றுக்கணக்கான டிகிரி வெப்பத்தையும் அனுபவித்திருக்கும். அவற்றின் கனிமத் துகள்களின் ஒழுங்கே அந்த வரலாற்றின் அமைதியான சான்றாக இருந்தது.

அலாஸ்கா மலைத்தொடர் இன்று வரை உயர்ந்து கொண்டே இருக்கிறது. பசிபிக் நிலத்தட்டு வட அமெரிக்க நிலத்தட்டின் கீழ் நுழைந்து கொண்டிருப்பதால் இந்த மலைகள் தொடர்ந்து மேலெழுகின்றன. அதே நேரத்தில் பனிப்பாறைகளும், மழையும், ஆறுகளும் அவற்றை தொடர்ந்து அரித்துக் கொண்டிருக்கின்றன. ஒரே நேரத்தில் உயர்த்தலும் அரிப்பும் நிகழும் இந்த சமநிலையே டெனாலியின் தனித்துவமான நிலவியலை உருவாக்கியுள்ளது.

ஜூன் மாதம் டெனாலியில் காட்டுப்பூக்களின் திருவிழா என்று கூறலாம்.
பாதையோரங்களில் உயரமாக மலர்ந்திருந்த ஃபயர்வீட் அதன் ஊதா-இளஞ்சிவப்பு நிற மலர்களால் நிலத்தை அலங்கரித்திருந்தது.அலாஸ்காவின் மாநில மலரான அல்பைன் ஃபார்கெட்-மி-நாட் சிறிய நீலப்பூக்களாகக் காட்சியளித்தது. மஞ்சள் நிற ஆர்க்டிக் சின்குஃபோயில்(cinquefoils), வெள்ளை மவுண்டன் அவென்ஸ், நீல-ஊதா லூபின், ஈரநிலங்களில் மார்ஷ் மேரிகோல்ட், காற்றில் அசைந்த காட்டன் கிராஸ், பல வகை செட்ஜ்(sedge) புல்கள் ஆகியவை அந்தப் பள்ளத்தாக்கை வண்ணமயமாக மாற்றியிருந்தன.

சிறிய பெர்ச், வில்லோ புதர்கள், அல்பைன் புளூபெர்ரி(alphine blueberry), பாசிகள், லைக்கன்கள்(lichens) ஆகியவை பாறைகளின் மீது மெதுவாக மண்ணை உருவாக்கும் இயற்கையின் முதல் படியாக இருந்தன.

இங்கே கோடை மிகக் குறுகியதாக இருப்பதால், இந்தத் தாவரங்கள் சில வாரங்களுக்குள் மலர்ந்து, விதைகளை உருவாக்கி, அடுத்த குளிர்காலத்திற்குத் தயாராக வேண்டும். ஆற்றின் அமைதியான பகுதிகளில் பழுப்பு நிற அமெரிக்கன் விஜியன்களைக்(Wigeons) காண முடிந்தது. ஆற்றங்கரையோர துளைகளில் ஆர்க்டிக் தரை அணில்கள்(arctic ground squirrels), ஒரு துளைக்குள் மறைந்து, சில விநாடிகளில் வேறு துளையிலிருந்து தலையைக்காட்டி, இரண்டு கால்களில் நிமிர்ந்து நின்று விளையாடியது குழந்தைத்தனமான மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆற்றங்கரையின் ஈரமான மணலில் நடந்த அனுபவமும் தனித்துவமானது. பனிநீர் ஒவ்வொரு ஆண்டும் புதிய மணலையும் கற்களையும் கொண்டு வந்து பழையவற்றை மாற்றுகிறது. இன்று நாங்கள் பதித்த காலடிச் சுவடுகள் நாளை மறையலாம். ஆற்றின் மேல் கட்டப்பட்ட பாலத்தின் நடுவில் நின்று பார்த்தபோது, மேல்புறம் பள்ளத்தாக்குக்குள் ஓடும் ஆறு, இருபுறமும் எழுந்திருக்கும் மலைச்சுவர்கள், தூரத்தில் மேகங்களில் மறைந்திருக்கும் சிகரங்கள், எல்லாம் ஒன்றாக இணைந்து ஓர் அற்புதமான இயற்கை அரங்கத்தை உருவாக்கின. கீழ்நோக்கிப் பார்த்தபோது, ஆறு பள்ளத்தாக்கில் வளைந்து வளைந்து ஓடுவது தெளிவாகக் தெரிந்தது.

பாறைச்சரிவுகளில் குளிர்காலத்தில் உறையும் நீர் விரிசல்களை மெதுவாகப் பெரிதாக்கி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் முழுப் பாறைகளையும் உடைத்து கீழே தள்ளுகிறது. இந்த உறைதல்–உருகுதல் (Freeze–Thaw Weathering) செயல்முறையின் விளைவாக மலை அடிவாரங்களில் பாறைத் துண்டுகள் குவிந்திருந்தன.

அங்கு நாங்கள் கண்ட மற்றொரு காட்சி, கருநிறப் பாறையின் விளிம்பில் பளிச்சென்ற வெண்மையான டால் செம்மறியாடு (Dall sheep) ஒன்று, பயணிகளைக் பார்த்தபடி புகைப்படத்திற்காகவே நின்றது போலத் தோன்றியது. மனிதனுக்குப் பயமூட்டும் அந்தச் செங்குத்தான பாறை அதன் இயல்பான வாழ்விடம். அதன் குளம்புகள் மிகச் சிறிய பாறை மேற்பரப்புகளிலும் உறுதியாகப் பிடித்துக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளன.

பின்னர் சுமார் 1500 அடி உயரம் கொண்ட அல்பைன் பாதையில் ஏறும் போது ஒவ்வொரு அடியிலும் பள்ளத்தாக்கின் தோற்றம் மாறியது. கீழே ஓசையுடன் ஓடிய ஆறு மெதுவாக வெள்ளி நிற நூலாக மாறியது. மேலே ஏறும் போது புதர்கள் குறைந்து, தரையோடு ஒட்டிய தாவரங்கள் மட்டுமே காணப்பட்டன. காற்றின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாக்க அவை அனைத்தும் தரைக்கு மிக அருகில் வளர்கின்றன.

பாறைகளின் மீது ஆரஞ்சு, பச்சை, சாம்பல் நிற லைக்கன்கள் ஓவியங்கள் வரைந்திருந்தன. மேலே சென்றபோது பேசும் வார்த்தைகள் குறைந்து, உடல் சோர்வுடன் இயற்கையின் அமைதி மனிதனை மெளனமாக்குகிறது. தொலைவில் உள்ள டெனாலி சிகரத்தை விட அருகில் நடைபெறும் இயற்கை நிகழ்ச்சிகள் எங்களை ஆழமாகத் தொட்டது. கோடிக்கணக்கான ஆண்டுகளின் வரலாற்றைத் தாங்கிய பாறைகள், பனிப்பாறைகளால் அரைக்கப்பட்ட கனிமத் துகள்களைச் சுமந்த ஆறு, ஊதா நிற ஃபயர்வீட் மலர்கள், மண்ணிலிருந்து திடீரெனத் தலைகாட்டிய ஆர்க்டிக் தரை அணில்கள், செங்குத்துப் பாறையில் நின்ற டால் செம்மறியாடு, பள்ளத்தாக்கை வளைத்து ஓடிய சாவேஜ் ஆறு ஆகியவை அனைத்தும் சேர்ந்து டெனாலி எங்களை பரவசப்படுத்தியது.

சில நேரங்களில், சிகரங்கள் மறைந்து நின்றாலும், அவற்றின் பள்ளத்தாக்குகள், ஆறுகள், பாறைகள், மலர்கள், விலங்குகள் ஆகியவை தங்கள் தோற்றத்தினால் காலத்தின் பிரமாண்டத்தை வேறு வகையில்  பிரதிபலிக்கிறது.

பல்லாயிரம் ஆண்டுகளாக காலம் பனியில் எழுதும் தொடர்கதை

சிறிய சீவார்டு துறைமுகத்திலிருந்து எங்கள் படகு மெதுவாகக் கடலுக்குள் நகர்ந்தவுடன், விரைவிலேயே இருபுறமும் செங்குத்தான உயர்ந்த மலைகளுக்கு நடுவே கடல் நீர் நீண்ட கால்வாய்களைப் போல நிலப்பரப்புக்குள் நுழைவதைக் காண முடிகிறது. இதைத் தான் இவர்கள் ஃபியோர்ட்ஸ் என்று அழைக்கிறார்கள். ஆனால், இவைகள் ஆறுகளால் தோண்டப்பட்ட பள்ளத்தாக்குகள் இல்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும் பனிப்பாறைகள் மலைகளை அரைத்தும் செதுக்கியும்தான் இந்த ஆழமான பள்ளத்தாக்குகளை உருவாக்குகின்றன. பின்னர் பனிப்பாறைகள் பின்வாங்கும் போது, கடல் அங்கு உண்டாகும் வெற்றிடங்களை நீரால் நிரப்புகிறது. இன்று நாம் காணும் செங்குத்தான பாறைச் சுவர்கள், வழுவழுப்பாக உராய்ந்து மின்னும் பாறைகள், அகன்ற U வடிவ பள்ளத்தாக்குகள் ஆகியவை அனைத்தும் ஒருகாலத்தில் அங்கு பனி ஓடியதற்கான  கையொப்பங்களாகும்.

இப்பனிப்பாறைகளின் ஆரம்பம், எப்போதும் சிறிய பனித்துளிகளில் இருந்துதான் தொடங்குகிறது. ஒவ்வொரு குளிர்காலத்திலும் பெய்யும் பனி முழுவதும் உருகாமல், ஆண்டு தோறும் ஒன்றின் மேல் ஒன்றாக படிந்து, மெதுவாக அடர்த்தியான பனிப்பாறையாக மாறுகிறது. அது, தனித்துவமான தனது எடையின் காரணமாக மலையிலிருந்து கீழ்நோக்கி நகரச் செய்கிறது. நமது கண்களுக்கு அசைவில்லாததாகத் தோன்றினாலும், இது இடைவிடாது நகர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் பாறைகளை நகர்த்தியும், மலைகளை அரைத்துக் கொண்டும் நிலப்பரப்பை தொடர்ச்சியாக மறுவடிவமைக்கிறது. இயற்கை எப்போதும் அவசரப்படாமல் தனது பணியை நிதானமாக நடத்திக் கொண்டிருக்கிறது.

இந்தப் பயணத்தின் இன்னொரு மறக்க முடியாத காட்சி பனிப்பாறையின் ஆழ்ந்த நீல நிறமாகும். அந்த நிறம் எந்த நிறமிகளாலும் உருவானது அல்ல. நூற்றாண்டுகளாக ஏற்பட்ட அழுத்தத்தால் பனிக்குள்ளே சிக்கிய காற்றுக் குமிழ்கள் கிட்டத்தட்ட மறைந்து விடுகின்றன. அப்போது சூரியஒளி பனியின் ஆழம் வரை செல்லும் போது, நீள அலைகளான சிவப்பு
நிற ஒளிக்கதிர்கள் மட்டும் உறிஞ்சிப்படுவதால், நம் கண்கள் குறைவான அலை கதிர்களை மட்டும்
உணர்வதால் நமக்கு நீலமாகத் தெரிகின்றது. சில நேரங்களில், பொருள்களின் நிறமானது அதன் மேற்பூச்சினால் அல்ல, அதன் உள்கட்டமைப்பிலிருந்து இயல்பாக உருவாகிறது என்பதையும் இது நினைவூட்டுகிறது.

பனிப்பாறைகள் பூமியின் மிகப் பெரிய நன்னீர் சேமிப்புக் களஞ்சியமாகும். குளிர்காலத்தில் சேமித்த பனி, கோடைக்காலத்தில் மெதுவாக உருகி ஆறுகளாக மாறுகின்றன. அந்த நீர்தான் காடுகளையும், சால்மன், ஹென்ரிக் போன்ற மீன்கள் வாழும் நதிகளையும், அதன் காரணமாக எண்ணற்ற உயிரினங்களையும் வாழவைக்கிறது. மலைச்சரிவுகளில் விழும் ஒவ்வொரு அருவியும், பல தசாப்தங்கள் அல்லது நூற்றாண்டுகளுக்கு முன்பு பெய்த பனியின் தொடர்ச்சி என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அந்த நீலப் பனிச்சுவரின் முன் நின்றபோது, நானோ அளவிலான சிறிய படிகத்தையும் பிரம்மாண்டமான நிலப்பரப்பையும் இயக்குவது ஒரே இயற்கை விதிகள்தான் என்ற உணர்வு மனதில் எழுகின்றது.

எவ்வாறு மூலக்கூறுகளின் அமைப்பு பனியின் பண்புகளை நிர்ணயிக்கிறதோ, அதே போல் கனிமங்களின் பிணைப்பில் உருவாகும் அமைப்புகளும் மலைகளின் வடிவத்தை உருவாக்குகிறது. இது வேதியியல் ஆய்வகத்தில் மூலகத்திலிருந்து உருவாகும் படிமங்களின் வடிவத்தை புரிந்துகொள்வது போல் இல்லாவிட்டாலும், அலாஸ்காவில் இயற்கை தன் அளவிட முடியாத பிரம்மாண்டத்தை நமக்குக் காட்டுகிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு லதாக் மலையகத்தில் நின்று கொண்டிருந்தபோது, அங்கிருந்த வெறிச்சோடிய மலைகள் கோடிக்கணக்கான ஆண்டுகளாக பூமிக்குள் இயங்கும் உள்ளியக்கத்தைப் பற்றி எழுதி வைத்திருக்கும் வரலாற்றைப் பேசிக் கொண்டிருந்தது. சில காலமாக, முன்னூறு கோடி ஆண்டுகள் பழமையான ஹைதராபாத் கிரானைட் பாறைகளின் நடுவில் பலமுறை நடந்து செல்லும் வாய்ப்பு கிட்டியது. காலத்தின் எண்ணற்ற மாற்றங்களை அமைதியாகச் சுமந்து நிற்கும் அப்பாறைகள், கற்களுக்குள்ளும் நினைவகம் ஒன்றிருப்பதை உணர்த்தியது. தற்போதைய அலாஸ்காவின் கீனாய் ஃபியோர்ட்ஸ் பயணம், வரலாறு பாறைகளில் மட்டுமல்ல, பனியிலும் எழுதப்படுகிறது என்பதை உணர வைக்கின்றது.

ஹைதராபாதின் பண்டைய பாறைகள் பூமியின் ஆழ்ந்த காலத்தைப் பேசுகின்றன. இமயமலையில் வீற்றிருக்கும் லதாக் மலைகள் கண்டங்கள் மோதிய கதையைக் கூறுகின்றன. கீனாய் ஃபியோர்ட்ஸ் அதில் இன்னொரு அத்தியாயத்தைச் சேர்க்கிறது. மெதுவாக நகரும் பனிப்பாறைகள், மலைகளைச் செதுக்கும் பொறுமையிலும், நீரைச் சேமிக்கும் கருணையிலும், ஒளியையே நீலமாக மாற்றும் அற்புதத்திலும், புவியியல், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று தங்கள் திறனை வெளிப்படுத்துகின்றன!

பள்ளிப் பருவத்தின் ஆறு ஆண்டுகள் மேட்டூரில் கழிந்தன.  இரண்டு மலைகளுக்கு இடையே காவிரி ஆற்றை அடக்கி நிறுத்தப்பட்டிருந்த அந்தப் பெரிய நீர்த்தேக்கம், எங்களது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகவே இருந்தது. அந்த ஊரில் எந்த இடத்தில் நின்றாலும் கண்களுக்கு எட்டும் தூரத்தில் ஏதோ ஒரு மலையையோ அல்லது குன்றையோ காண முடியும். ஆறு, அணை, பாலங்கள், வளையமிட்டு நின்ற அந்த சிறிய மலைத்தொடர்கள் அனைத்தும் அறியாமலேயே என் மனத்தின் நிலப்பரப்பை வடிவமைத்தன. அந்த குன்றுகளில் பலவற்றின் மீது நண்பர்களுடன் விளையாட்டாக ஏறி இறங்கியிருக்கிறோம். ஆனால் பின்னாளில் நினைத்துப் பார்க்கும்போது, நிலத்தையும், பாறைகளையும், ஓடும் நீரையும், தொலைவையும் கவனித்து ரசிக்கக் கற்றுக் கொடுத்த முதல் ஆசிரியர்கள் அவையே. பொருட்களின் அமைப்பையும், இயற்கையின் உருவாக்கங்களையும் ஆராயும் அறிவியல் வாழ்வில் பின்னர் வந்தாலும்,அவற்றைக் கவனித்து வியக்கும் பார்வையின் விதை அன்றே விதைக்கப்பட்டு விட்டது.

காலம் என்னை மேட்டூரிலிருந்து வெகுதூரம் அழைத்துச் சென்றிருக்கிறது. ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் கடந்துவிட்டன. சிற்றூரின் அமைதியைப் பெருநகரங்களின் பரபரப்பு மாற்றியது. மலைச்சரிவுகளில் அலைந்த கால்களை ஆய்வகங்கள் கட்டுப்படுத்தின. வாழ்க்கை வேறு திசையில் நகர்ந்தாலும், மேட்டூரின் அந்த நிலக்காட்சிகள் இன்றும் மனதின் ஓர் மூலையில் நிழலாக அசைந்து கொண்டிருக்கிறது. இங்குள்ள நதிக்கரையைச் சுற்றியுள்ள மலைகள் பிரமாண்டமானவையாக இருக்கின்றன. இவ்வாறுகள் பனியின் குளிரைத் தாங்கி அகன்ற பள்ளத்தாக்குகளில் ஓடுகின்றன. சூரிய ஒளியில் பனிப்பாறைகள் நீலமாக ஒளி வீசுகின்றன. அளவிலும், காலநிலையிலும், புவியியல் வரலாற்றிலும் எல்லாமே மாறுபட்டு இருந்தாலும், மனதில் எழும் உணர்வுகள் மட்டும் புதிதல்ல. ஆற்றின் ஓசைகளில் அமைந்த ஆனந்த ராகத்தில், அசையாதுபோல் அசைந்திடும் மலைகளை ரசிக்கும் போது, காலம் தன்னையே மடித்துக் கொண்டு சிறுவயதிற்கே அழைத்துச் சென்றதுபோல் தோன்றியது.
பயணங்கள் என்றும் சாதாரண சுற்றுலாக்களாக இருப்பதில்லை. ஆண்டுகள் பல கடந்தாலும் கால இடைவெளியில் நிற்கும் நிலப்பரப்புகளுக்கு இடையேயான உரையாடல்கள் நடந்து கொண்டுதானிருக்கும். அன்று இருந்தது காவிரியின் கரையில் அமைந்த மேட்டூரின் வெப்பமும் நெருக்கமும் நிறைந்த உலகம். இன்று நிற்பது பனியாறுகள், ஆழமான ஃபியோர்டுகள், அடர்ந்த காடுகள், உயர்ந்த மலைகள் கொண்ட அலாஸ்காவின் பரந்த வனப்பகுதி. இந்தப் பயணத்தின் ஒவ்வொரு அடியும், ஒவ்வொரு மலையும், கடக்கும் ஒவ்வொரு நதியும், ரசிக்கும் ஒவ்வொரு பனிப்பாறையும், சிறுவயது மேட்டூரின் நினைவுகளை மெதுவாகத் திறந்து விடுகின்றன. மனிதன் பிறந்து வளர்ந்த நிலம் அவனை ஒருபோதும் விட்டு நீங்குவதில்லை. அது மனதின் ஆழத்தில் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும். புதியதான பயணம் தொடரும்போது மறுபடியும் உயிர்பெற்று நம்முடன் நடக்கத் தொடங்குகிறது.

மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலை இய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல

-புறநானுறு


Discover more from சொல்வனம் | இதழ் 373 | 23 ஆக 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.