Site icon சொல்வனம் | இதழ் 370 | 12 ஜூலை 2026

றெக்கை –  அத்தியாயம் 23

This entry is part 23 of 24 in the series றெக்கை

நான் நிர்மலா. டாக்டர் நிர்மலா, ஸ்பெயின் நாட்டுத் தலைநகர் மேட்ரிட்டில் ப்ராக்டிஸ் செய்து கொண்டிருக்கிறேன்.வெகுநாள் கழித்து டயரி எழுதுகிறேன். சரியாகச் சொன்னால் நாலு வருடமும் இருநூற்று நாட்களும் சென்று எழுதுகிறேன். மருத்துவர் தொழில் வெகு மும்முரம் ஆகிவிட்டதால் இந்த தினசரிக் குறிப்பு எழுதவே முடியாமல் போனது. அதைத் தவிர இந்தத் தொழிலில் தினசரி ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது என்பதால் அதை எல்லாம் படித்து, புத்தியில் ஏற்றிக் கொண்டு முன்னால் போய்க் கொண்டே இருக்க வேணும். செய்கிறேன். 

கடைசியாக எப்போது டயரி எழுதினேன் என்று பழைய டயரிகளைப் புரட்டிப் பார்த்தேன், நாலுவருடம் முன்பு மாயசண்டிகை என்ற விஞ்சயர் உலக ஆரணங்கான நிறைசூலி பெண்பிள்ளை குழந்தை பெற்றுக்கொள்ள உதவ நானும் மற்றும் முத்தச்சன் தம்பதியும் வந்ததைக் குறித்து அது நடந்த ஞாயிற்றுக்கிழமைக்கு அடுத்து வந்த செவ்வாய்க் கிழமையன்று விரிவான நாட்குறிப்பு எழுதியிருக்கிறேன்.

அடுத்து வேறு எதுவும் எழுதவில்லை,போகட்டும். நிர்மலா டயரி எழுதாவிட்டால் எட்டு திசையும் ஒன்றாகி சூரியன் பிரபஞ்ச வெளியில் ஜோதியும் உஷ்ணமும் அற்று சும்மாக் கிடக்கப்போவதில்லை,.

இனியும் எழுதவில்லை என்றால் எனக்கு நானே இழுத்துப் போட்டுக்கொண்ட காரியத்தில், கடமையின்படி    நடக்காமல் போனதற்கு தண்டனையாக நரகத்தில் வீழ்வேனாகுக. ஒரே ஒரு கோரிக்கை மாத்திரம் உண்டு. நரகத்தில் தள்ளுவதுதான் தள்ளட்டும். அது ஹிந்து நரகமாக இருக்கட்டும். டயரியை தொடர்கிறேன்,

மாயசண்டிகை வந்து போன நாலு வருடம் முந்திய நீண்ட அந்த இரவில் அவள் அழகே உருவான ஒரு ஆண் குழந்தையைப் பிரசவித்தாள். தொப்பூள் கொடியை அறுத்து தாயையும் மைந்தனையும் நலம் வாழவைக்க முத்தச்சி குலவையிட்டாள். அப்போது கண் விழித்து அவளை நோக்கிய குழந்தை புன்சிரிப்போடு எழுந்து நின்றது, ஜாக்கிரதையாக அடி வைத்து நடக்க ஆரம்பித்தது,

அற்புதம், இது ஆச்சரியம். நான் குரல் கிரீச்சிட வியப்பை சொல்லிக் கொண்டிருந்தேன். பிறந்த உடன் குழந்தை நடப்பதாவது – நம்பத்தான் முடியவில்லை. 

முத்தச்சி அது ஏதோ தினசரி மேட்ரிட் பெருநகரில் நடக்கிற சாதாரண காரியம் என்பதுபோல், மாயசண்டிகையின் உடைகளைக் களைந்து வெந்நீரில் அமிழ்த்திய  துவாலை  கொண்டு அவள் தலையிலிருந்து பாதம் வரை அழுந்தத் துடைத்துக் கொண்டிருந்தாள்.  

மாயசண்டிகை சொன்னாள் – விஞ்சயர் உலகில் சிசு  பிறந்ததுமே வளர ஆரம்பித்துவிடும் என்பதைச் சொல்ல மறந்து போனேன், ரெண்டு வயசு வரை உடலும் புத்தியும் மனமும் நினைவும் சரசரவென்று   நீட்சி அடைவதைத்தான் பார்க்கிறீர்கள்.

நம் உலகத்தில் கழுதை மட்டும் தான் பிறந்து ஆறு மணி நேரத்தில் எழுந்து நின்று நடக்க ஆரம்பித்து விடும் என்றாள் முத்தச்சி,

முத்தச்சன் வாசலில் நின்று ஜன்னல் கதவைத் தட்டி வரலாமா என்று கேட்டான்.இன்னும் பத்தே நிமிடம். இறகு எஜமானி ஸ்பாஞ்ச் குளியல் முடித்து உடுத்து வருவாள் —- முத்தச்சி சட்டென்று மனதில் ஏதோ பட நிறுத்திச் சொன்னாள்.

இந்த சிறகு எஜமானி துவாலைத் துடைத்தல் முடிந்து எதை உடுத்தப் போகிறாள்? நியாயம் தான் என்று எனக்குப் பட்டது.

டாக்டர் எஜமானி, உங்கள் உடைகள் இறகுப் பெண்ணுக்கு சரியாக இருக்கும். பிடவை, முலைக்கச்சு இரண்டும் இரவல் கொடுப்பீரோ,

சரியென்றேன், வீட்டுக்கு உள்ளே போய் சலவை செய்து வைத்திருந்த உடுதுணி அள்ளி எடுத்துக் கொண்டு வேகமாக வெளியேறினேன், அவுட் ஹவுஸில் ஏக கோலாகலமாக பிரசவம் நடந்தேறிய தடமே இன்றி அமைதியான அரையிருளில் வீடு இருந்தது, தரையில் மெத்தை விரித்து மாயசண்டிகை நித்திரை போயிருந்தாள். பக்கத்தில் இன்னொடு மெத்தை. அதில் இந்த ராத்திரியில் ஜனித்த ஆண் குழந்தை. அவன் உறங்கவில்லை.

 ந்ந்நஙக என்று வினோத மொழியில் தன் அம்மாவை எழுப்பினான்.

முத்தச்சி அவளை ஆதரவாகப் பற்றி உட்காரவைத்தாள்.’’

பெண்ணாளே உடுத்தி வந்து குழந்தைக்கு முலை கொடு,

சித்திரம் : ஷங்கரா

ரெம்பிராண்ட் ஓவியம் போல காலம் உறைய அவள் மங்கலான மெழுகுவர்த்தி ஒளியில் குழந்தைக்கு அமுதூட்டினாள்.

வித்தைக்காரன் சாக்கு மூட்டையிலிருந்து பாம்பை எடுத்துக் காட்டிக் கைதட்டலையும், கொஞ்சம் போல் பணத்தையும் எதிர்நோக்கிப் புன்னகைத்திருக்கும் மனம் கண்ணில் தெரிய  மறுபடி தரையில் அமர்ந்தாள்.

இன்னிக்கு இவனுக்கு நீங்கள் விரும்பிய பெயரை சூட்டுங்கள். அவன் சகோதரிக்கும் தான். அவளுக்கு வயது ஆறு. அவனுக்கு வயது ரெண்டு.

நான்  கொஞ்சமும் யோசிக்காமல், இந்தப் பயலுக்கு கிட்டாவய்யன் என்று நாமகரணம் செய்வோம் என்றேன். எங்க அப்பா பெயர் என்று மாயாவுக்கு சிறு விளக்கம் கொடுத்தேன்.இந்தப் பெண்குழந்தை பெயர் விசாலாட்சி. என் பெரியம்மா பெயர் அது.

வீட்டுப் பெயர்களாக கிட்டா என்றும் விசி என்றும் சுருக்கி அழைக்கலாம் என்று சொன்னது ஏனோ மாயாவுக்கு அத்தனை உடன்பாடில்லை.

அது என்ன முழுப் பெயர் ஒண்ணு சுருக்கிய பெயர் வேறொண்ணு?

முத்தச்சி முறுகக் காய்ச்சிய பசும்பாலை மாயசண்டிகைக்கு ஊட்டினாள். பசு ஈன்றது போல் சகலவிதமான மணமும் பரப்பிக்கொண்டு ஓய்ந்து கிடந்தாள் மாயா.

தொளதொளத்து உடலோடு வழியும்  உடுப்பில் கை நுழைத்து எதையோ தேடி எடுத்து முத்தச்சியின் உள்ளங்கையில் வைத்துப் பொத்தினாள். வைரக்கல் பதித்த தங்க மோதிரம்.

உங்கள் பிரபஞ்சத்திலும் தங்கமும் வைரமும் நிறைய மதிப்பு உள்ளவையா? நான் மாயசண்டிகையைக் கேட்டேன், முத்தச்சி  முத்தச்சனை விளித்துக் கொண்டே மோதிரத்தை திரும்பத் திரும்ப கண்களுக்கு அருகில் வைத்து எடுத்தபடி வாசலுக்குப் போனாள். அவளும் வீட்டுக்கார முத்தச்சனும் கிசுகிசுவென்று ஏதோ சொல்லவும் கேட்கவுமாக இருக்க மோதிரத்தை மாயாவிடம் திரும்பக் கொடுத்தாள்.

எங்க பிரபஞ்சத்தில் இதெல்லாம் குழந்தைகள் விளையாட செய்து தரும் விளையாட்டு பொருட்கள். உங்க செல்வ மதிப்பில்  இங்கே ஒரு ரெண்டு மாடி வீடு கட்டிடலாம் இதை விற்றால், மாயசண்டிகை முத்தச்சியை எப்படியாவது மோதிரத்தை வாங்கிக்கொள்ளச் செய்யணும் என்று பிரயத்தனம் செய்தாள். கிழவி கையெடுத்துக் கும்பிட்டு மெல்ல சொன்னது இந்தத் தோதில் இருந்தது – 

இறகு எஜமானி, எனக்கும் கிழவருக்கும் பொன்னும், வைரமும், முத்தும் மரதகமும் பவிழமும் எல்லாம்  வீட்டில் வைத்தும் விரலில் அணிந்தும் மகிழ்ச்சியோடு பாடி ஆடவும் வயசு பாக்கியாக ஒன்றும் இல்லை. நானோ என் கணவர் கிழவரோ நினைத்தால்  மனதில் கொடூரமாகத் திரும்பும் நினைவுகள் திரும்பத் திரும்ப  நெஞ்சில் ஆழமாகக் குருதி நனைத்து நிலைக்கவொட்டாமல் ஒரு நொடியில் சுவாசிக்க மறந்துபோக வைக்கும். பொன்னும் வைரமும் எம் போன்ற தொண்டு கிழங்களுக்கு ஏற்பில்லை. டாக்டர் எஜமானி,  சரிதானே?

நான் அவசரமாக சரியென்றேன். எது சரி?

இருக்கட்டும், டாக்டரே, இந்த மோதிரத்தை நீராவது வைத்திருக்கட்டும், நான் ஒரு பணி நிமித்தம் போக வேண்டியுள்ளது.  ஒரு வாரம் சென்று திரும்ப வந்து மோதிரத்தை  வாங்கிக் கொள்கிறேன்.  வரும்வரை பிள்ளைகள் உன்னோடு இங்கே இருக்கட்டும். அதுகளை பராமரிக்க ஆகும் செலவு நான் வந்ததும் தருகிறேன், சரியா?

மாயா என் கையைப் பிடித்து முத்தமிட்டபடி கூறினாள்.

நிகழ்ந்தது புரியாதது. நிகழ்வதும் ஏதோ ஒரு வகையில் அர்த்தம் நிறைந்த, அர்த்தம் இல்லாத அபத்த நிகழ்வு, இதற்கு அடுத்து என்ன நிகழும் என்பது புதிரானது,

இவள் என்ன மாதிரி பெண்பிள்ளை.பெற்றுப் போட்டதும் கடமை முடிந்தது என்று வேறே வேலையை பார்க்கப் போகணுமா?வேலை? ஒரு மண்ணாங்கட்டியும் இருக்காது. இவர்களின் உலகில் போகம் அனுபவிக்கப் படுக்கை விரிப்பது தவிர வேறே முக்கிய வேலை இருக்காது, 

இறக்கை முளைத்த      இந்தத் தேவரடியாளோடு நான் என்னை ஒப்பிட்டு  புனிதவதியாக என்னை புனைய சௌகரியமான  சந்தர்ப்பம் .

மாயா என் பிரச்சனை உனக்கு புரிந்ததா என்று தெரியவில்லை. நான் ஒரு டாக்டர், விடிந்து எழுந்தால் நோயாளிகளின் பிரவாகம் இந்த வீட்டுக் கதவு திறக்க, என்னை எதிர்பார்த்துக் காத்திருக்கும். பிறந்து இரண்டு மணி நேரத்தில் நடக்கும் சிசுவுக்கோ அவனை விட நான்கே வயசு அதிகம் வரும் குழந்தைப் பெண்ணுக்கோ இருக்கத் தகுந்த இடம் இதுவல்லவே. மேலும் என் கணவனிடம் சொல்லி அனுமதி வாங்கிக் கொள்ள வேண்டும். நடக்கிற காரியமா என்ன?

மாயா புன்சிரிப்போடு நான் கூறியதெல்லாம் ஒரு வார்த்தை சிந்தாமல் கேட்டுக் கொண்டிருந்தாள்.     சட்டென்று கண்கள் திருப்தி கா ட்ட என் தோளில் தட்டினாள்.

ரெண்டு நாள் தானே.இந்த வயசனும் கிழவியும்     இங்கே இந்த அவுட் ஹௌஸில்  பசங்களோட இருந்துட்டு போகட்டுமே

மாயசண்டிகை  என்னிடம் கே ட்டாள்.

இந்த வேலை மட்டும் வரல்லேன்னா நான் வந்த சுவடு தெரியாமல் திரும்பப் போயிருப்பேன் முறையிடும் சன்னமான  falsetto குரலில் தாலாட்டு ராகமிழுத்தாள். ரெண்டு பசங்களும் நல்ல உறக்கத்தில் இருந்தார்கள்.

அப்படி என்ன அவசரமான வேலை இருக்குன்னு ஓடறே, மாயாவை கேட்டேன்.

என் காதலன் அவன் நண்பர்களோடு எக்காளப் பூஞ்செடி வளர்க்கறான், இப்ப அது பூத்திருக்காம்.    நானும் வரணும்னு குரூப் விரும்புது.

போய் என்ன பண்ணுவே?

மாயா சற்றே தயங்கினாள். என் காதில் சொன்னது -நாங்க பத்துபேர். ஒரு வாரம் பகல் இரவு தெரியாமல், யார் யாருக்கு ஜோடி என்று  கருதாமல் ராட்சசத்தனமாக கூட்டுக் கலவியில் இருப்போம்.

எனக்கு குமட்டிக்கொண்டு வந்தது, ரெண்டு பேர் ஈடுபட்டால் காதல். பத்து பேர் ஈடுபட்டால் நரகம்.

அதென்ன எக்காளப் பூ?

ஊமத்தை போல. அதை தின்றால் ராட்சச பலம் தற்காலிகமாக உடம்பின் நவதுவாரங்களில்  கசியும். காலம் உறைந்து போகும். என்ன வாழ்க்கை!

ஜாக்கிரதை மாயா. ஒரு வாரம் அந்த வினோதச் செடிகொடி தின்றால் உன் இறக்கை ரெண்டும் உதிர்ந்து விழுந்துவிடும்.நான் பாதி கிண்டல் மீதி கரிசனம் என்று  சொல்லி வைத்தேன்.

இறக்கைக்கு ஒண்ணும் ஆகாது. வேறே ரெண்டு தான் வற்றிப் போகும். யோனி வரண்டு போகும்.

சொல்லியபடி முத்தச்சி மடியில் தலைவைத்து உறங்கத் தொடங்கினாள்.

நான் எழுந்து வாசலுக்குப் போனேன். ஓரமாக பழைய துணியும் தோட்டப் வேலைக்கு பயன்படும் இரும்பு வாளிகளும், பூச்சிதறலாக நீர் தெளிக்கும் பூவாளியும் ஒரு ஓரமாக குவித்திருந்தன.வௌவால் ஒன்று நீர்ச்சுவடு உலராத தரையோடு பறந்து ஜன்னலில் மோதித் தரையில் விழுந்தது, மரநாய் ஒன்று மரம் விட்டு மரம் பறந்து கொண்டிருந்தது.சாரட்டு வண்டிக் குதிரை ஏதோ சொல்ல முற்பட்டு அருகில் இருப்பவர்கள் கவனத்தைக் கவர கனைத்தது. இன்னொரு சாரட் குதிரை நின்றபடியே தூங்கியது.

பின்னால் இருந்து ஏதோ சத்தம் வர நான் திரும்பி பார்த்தேன், அவுட் ஹவஸ் உள்ளே  பிரகாசமாக வெளச்சம் ஆழச் சூழ்ந்து நிலைத்தது. சில கணங்கள் சென்ற கணம்  நசித்தது.

மாயசண்டிகை என்ற விஞ்சயர் பேரிளம்பெண்ணை  காணவில்லை..

(  தொடரும்)

றெக்கை

றெக்கை –  அத்தியாயம் 22 றெக்கை –  அத்தியாயம் 24  
Exit mobile version