இரவில் வானத்தைப் பார்க்கிறீர்கள். கரு நிறப் பின்னணியில் பூப்பூவாக மலர்ந்து இருக்கின்றன நட்சத்திரங்கள். “பட்டுக் கரு நீல புடவை பதித்த நல் வைரம்” என்ற பாரதியின் பாடல் உங்கள் நினைவில் எழுகிறது. அந்த நிலையில் நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று புன்னகைத்துக் கொண்டு ஏதோ சொல்கின்றன. உங்களுக்குப் புரிகிறது நாம் அவர்களின் குழந்தைகள் என்று.
புகழ்பெற்ற இயற்பியலாளரான கார்ல் செகன் (Carl Segan) சொல்கிறார் ‘நாம் விண்மீன் தூசுகளால் உருவாக்கப்பட்டவர்கள்’ என்று. நாமும் ‘அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது’ என்று எளிமையாக ஆனால் சிறப்பாக சொல்லி வருகிறோம்.
இந்தக் கட்டுரையில் வானியல் கட்டிடக்கலை என்பது என்ன என்றும் அது இந்த உலகில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்றும் அதனுடைய நீட்சியாக நமது தனிப்பட்ட வாழ்க்கை எப்படி அமைந்திருக்கிறது என்பதையும் பார்க்க போகிறோம். வானியல் கட்டிடக்கலை என்பது, அண்டவியல் கோட்பாடுகளையும், கோள்கள் அமைந்திருக்கும் பாகைகளையும், ஆற்றல் மையங்களையும் பயன்படுத்தி, அகிலத்துடன் இசைந்த கட்டுமானங்களை, அனைத்து உயிரினத்திற்கும் நன்மை பயக்கும் விதத்தில், ஜோதிடத்தையும், கட்டுமான வடிவுகளையும் ஒன்றிணைத்து, உயிரினச் சூழல்களில் சம நிலை, செழுமை, அமைதி ஆகியவற்றைக் கொண்டு வரும் ஒரு அருமையான செயல்பாடாகும். உலகெங்கிலும் இந்த முறை அவரவர் கலாசாரத்தைச் சார்ந்து பின்பற்றப்படுகிறது. எடுத்துக்காட்டாக, அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராமர் கோயில், அபுதாபியில் உள்ள BAPS ஸ்ரீ சத்ய நாராயணா கோயில் இரண்டும் வேத சாத்திரங்களின்படி, நல்ல விண்மீன்களும், கோள்களும் அமைந்த நாட்களில் தொடங்கப்பட்டதென்றால், அர்ஜென்டினாவிலுள்ள புனித பெர்னார்ட் சிறு கோயிலில், தினமும் சூர்ய ஒளி சிலுவை நிழலை உண்டாக்கும் கட்டிட அமைப்பும் ஷாங்காய் உலக நிதி மையத்தின் வளைவுகள், பூமியையையும், சொர்க்கத்தையும் குறிப்பாக பிரித்துக் காட்டும் விதம் வடிவமைக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிடலாம். கட்டுமானங்கள், அண்டத்துடன் உரையாடும் விதத்தில் எகிப்பிதிய பிரமிடுகள், (ஓரையன் அரைஞாண் வடிவ மேம்பட்ட இணைப்பு) இரவும், பகலும் சமமான நாளில் (வருடத்திற்கு இரு முறை- செப்டம்பர்21-24க்குள் மற்றும் மார்ச் 19-21க்குள்) சூர்யக் கதிர், ஒரு பாம்பு இறங்கி வருவதைப் போன்ற மாயத்தை ஏற்படுத்தும் வண்ணம் கட்டப்பட்டுள்ள மாயன் நகரத்து சிசென் இட்ஸா (Chichen Itza)கோயில், இங்கிலாந்தில் உள்ள ஸ்டோன்ஹெஞ்ச், (Stonehenge) கதிர் திருப்பம் (solstice) மற்றும், சந்திரனின் பயணங்களையும் காட்டும் விதத்தில் அமைந்துள்ளன.
இந்தப் பிரபஞ்சத்தில், அறிவியலாளர்கள் சொல்வதன்படி ஏகப்பட்ட கிரகங்களும் நட்சத்திரங்களும் இருக்கின்றன. மிக சமீபத்தில் வெளியாகி உள்ள ஒரு அறிவியல் குறிப்பு இவ்வாறு சொல்கிறது.
நம்முடைய விண் மண்டலத்தில் இருக்கும் 3.2 ட்ரில்லியன் கிரகங்களில் பூமியும் ஒன்று. பால் வீதியில் 200 பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கின்றன, அவற்றின் சூரியனும் ஒன்று. புலப்படும் அண்டத்தில் நமது பால்வீதி என்பது இரண்டு ட்ரில்லியன் விண் மண்டலத்தில் ஒன்று.
இவ்வளவு மகத்தான அகிலம் எப்படி உருவானது? நமக்குத் தெரிந்து உயிர்கள் இருக்கும் இந்த பூமியானது எதனால் படைக்கப்பட்டது? இதன் கட்டுமானம் என்ன? வானத்தின் கோள்களுக்கும், விண்மீன்களுக்கும், பூமிக்கும் என்ன தொடர்பு? வானியல் சார்ந்த கட்டுமானங்கள் அதுவும் குறிப்பாக வழிபாட்டு இடங்களும், அறிவியல் இடங்களும், இரண்டும் ஒன்று சேரும் இடங்களும் எப்படி உருவாயின? யார் இத்தகைய அருமை மிக சிந்தனையைக் கொண்டிருந்தார்கள்?
க்வார்க்ஸ் தொடங்கிய பயணம், புரோட்டான் நியூட்ரான், பிறகு அணுக்கரு மையம்; அணுவாகி, மூலக்கூறாகி, திசுவாகி மனிதனாகிறது.
பூமி கிரகமானது, கண்டங்கள் இதற்கான விண்மீன் மண்டலங்கள், பால் விதிகள் , மண்டல தொகுப்புகள், பிரபஞ்சவலை என்று காணக் கிடைக்கிறது.

அண்டத் தொழிற்சாலையில் விண்மீன்களின் பிறப்பு நிகழ்கிறது; விண்மீன் மேகங்கள் என்றழைக்கப்படும் பெரிய, குளிரான, மூலக்கூறு மேகங்களில், வாயு மற்றும் தூசு ஈர்ப்பு விசைகளால் கவரப்பட்டு அடர்ந்த பைகளைப் போலாகின்றன. இந்தப் பைகள் அழுத்தத்தினால், தகர்ந்து போகின்றன. இப்படி உடையும் ஒன்று, வெப்பத்தினால், நட்சத்திரத்தின் முன்வடிவை எடுக்கிறது. பெரு வெடிப்பு விட்டுச் சென்ற ஆதி ஹைட்ரஜன் (~75%) ஹீலியம் (~25%), கொஞ்சம் லிதியம் இந்த நிலையில் பங்காற்றுகின்றன. இந்த விண்மீனின் உள் வெப்பம் 15 மில்லியன் செல்சியஸ் ஆக அதிகரிக்கும்போது, ந்யூக்ளியர் இணைவு ஏற்படுகிறது. உள்ளே இழுக்கும் ஈர்ப்பு விசைக்கும், வெளியே தள்ளும் ந்யூகிளியர் இணைவிற்கும் இடையே சமநிலை ஏற்படுவது, ஒரு விண்மீனின் வளர்ந்த பருவம். ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றாக இணைந்து(புகைந்து?) ஹீலியம் உருவாகிறது. விண்மீனின் உள்ளகத்தில் ஹைட்ரஜன் எரிந்து எரிந்து குறையும்போது, ஈர்ப்பு விசை தற்காலிகமாக வென்று, நட்சத்திரத்தின் மையத்தை மேலும் நெருக்கி, அதிக எடை மிக்க மூலகக் கூறுகளை உண்டாக்கி, அதனால், அதன் வெளி அடுக்குகள் பேரளவில் விரிவாக்கம் அடைகின்றன. இந்த நிலைகளில், ஒரு விண்மீன், காப்பர், ஆக்ஸிஜன், மெக்னீசியம், சிலிகான், சல்ஃபர், கேல்சியம், இரும்பு ஆகிய மூலகங்களை, தன் செயற்பாட்டு ஆயுள் காலங்களில் உருவாக்கிவிடுகிறது. இரும்பு உண்டான பிறகு, ஒரு விண்மீனால், மேலும் ந்யூக்ளிய இணைவு எரிசக்தியைக் கொண்டு செயல்பட முடியாது. அப்போது அதனுடைய மறைவை மீப்பெரு விண்மீன் வெடிப்பு என்று சொல்கிறோம். இந்த மீப்பெரும் விண்வெடிப்பு உண்டாக்கும் மாபெரும் ஆற்றல், ந்யூட்ரானை உடனே அணுவாக்கிவிடுகிறது. விளைவு, தங்கம், வெள்ளி, ப்ளாட்டினம், துத்தநாகம், ஈயம், யுரேனியம் என்ற மூலகங்கள், விண்வெளியில் பல கிரகங்களைச் சென்று சேர்கின்றன. இத்தனை மூலகங்களும் நம் பூமியில், கல், மண், நதி, பாறை, மலை அனைத்து அசையாப் பொருட்கள், அனைத்து உயிரிகளிடம் வந்து சேர்கிறது. இப்படி தொகுத்துக் கொள்ளலாம்.
விண்வெளியில் மிதக்கும் வாயு மற்றும் தூசிகள் நிறைந்த ராட்சத மேகங்கள் (நெபுலாக்கள்) ஒன்றிணைந்து, ஈர்ப்பு விசையால் சுருங்கி வெப்பமடைவதன் மூலம் நட்சத்திரங்கள் உருவாகின்றன.
இந்த பிரம்மாண்டமான நிகழ்வு கீழ்க்கண்ட முக்கிய நிலைகளில் நடைபெறுகிறது:
- வாயு மேகங்கள் (நெபுலா): விண்வெளியில் ‘மூலக்கூறு மேகங்கள்’ (Molecular clouds) என்று அழைக்கப்படும் பரந்த ஹைட்ரஜன் வாயு மற்றும் தூசி நிறைந்த பகுதிகள் உள்ளன.
- ஈர்ப்பு விசை சுருக்கம்: இந்த மேகங்களின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஈர்ப்பு விசை காரணமாக வாயுக்கள் ஒன்று சேரத் தொடங்குகின்றன. சுருக்கம் அதிகமாகும்போது ஈர்ப்பு விசையும் அதிகரிக்கிறது.
- புரோட்டோஸ்டார் (Proto-star): சுருங்கும் வாயுக்கள் ஒன்றோடொன்று மோதி உராய்வு ஏற்பட்டு கடுமையான வெப்பம் உருவாகிறது. இந்த ஆரம்ப நிலை நட்சத்திரம் ‘புரோட்டோஸ்டார்’ எனப்படுகிறது.
- அணுக்கரு இணைவு (Nuclear Fusion): மையப்பகுதி மில்லியன் கணக்கான டிகிரி வெப்பநிலையை அடையும் போது, ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியமாக மாறத் தொடங்குகின்றன.
- நட்சத்திரத்தின் பிறப்பு: இந்த தீவிர அணுக்கரு இணைவு வினையின் போது வெளிப்படும் மகத்தான ஆற்றல் மற்றும் ஒளியால் ஒரு முழுமையான நட்சத்திரம் உருவாகிறது.

விண்மீன்கள், வாயு மற்றும் தூசுக்களின் இணைப்பால் உண்டாகின்றன எனப் பார்த்தோம். ஆனால், விண்மீன் வெடித்து அதன் இறப்பை நெருங்குகையில், அதன் சிதறல்கள், அதாவது, அந்த வாயு மற்றும் தூசுக்களின் மீதங்கள் விண்மேகங்களில் மிதந்து கொண்டேயிருக்கும். சில பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு அவை இணைவதால் கோள்கள் உருவாகின்றன. இந்தக் கோள்களுக்கு மெல்லிய அகச்சிவப்பு ஒளிதானிருக்கும். அவற்றில் ஒளி பட்டால்தான், (சூரியனின் ஒளி பூமியின் மீது படுவதைப் போல,) அந்தக் கிரகங்கள் தென்படும். வியாழன், வெள்ளி போன்ற கிரகங்களின் நிலையும் இதுவே. ஆனால், கவனத்தில் கொள்ள வேண்டியது, நட்சத்திரம் உருவாகிய அதே வாயு, தூசுக்களின் மீதம்தான் கோள்களாகின்றன. எனவே, கிரகங்களின் ஆதிக்கம் இந்த பூமியின் மேல் இயல்பாகவே அமைந்துவிடும். இதைத் தான் கோயில் கருவறையின் அடக்கத்திலும், அதில் ஏற்றப்படும் தீப ஒளியிலும் நம் முன்னோர்கள் சுட்டிக் காட்டினார்கள். கிரகம் ஒரு பொருள். அதை துலக்கிக் காட்டுவது ஒளி. அதாவது உடல் என்பது பொருள், அதை இயங்கச் செய்வது, விளக்கிக் காட்டுவது ஆன்மா. ஒரு குறிப்பிட்ட விண்மீன், ஒரு குறிப்பிட்ட கிரகத்திற்கு பெற்றோர் என சொல்ல முடியாது. அற்புதமாக ஜோதிடம், மும்மூன்று விண்மீன்களின் கூட்டணியில், என்ன தசா நடக்கிறது என்று கணிக்கும். உதாரணமாக, கார்த்திகை, உத்திரம், உத்ராடம் நட்சத்திரத்தில் பிறந்தால், அவருக்கு பிறப்பில் சூர்ய தெசை.
ஒரு அட்டவணையைப் பார்ப்போமா?
| பிரபஞ்ச நிலைகள் | மூலகங்கள் | அண்டத்திலிருந்து மூலம்/ உதாரணம் |
| பெருவெடிப்பு | ஹைட்ரஜன்,ஹீலியம், லித்தியம் | ப்ரபஞ்சம் தோன்றுதல் |
| முதல் நிலை | ஹீலியம் | சூரியன் (பூமி) |
| ப்ரும்மாண்டமானவை | கார்பன், ஆக்ஸிஜன், நியான், சிலிகான், இரும்பு | பிடெல்ஜ்யூஸ் போன்ற வயதாகும் நக்ஷத்திரங்கள் |
| மீப்பெரு விண்மீன் வெடிப்பு | தங்கம், வெள்ளி, ப்ளாட்டினம் யுரேனியம் | மீப்பெருவெடிப்பு இணையம், நாசா இணையம் |
நம் உடலே அந்த விண்மீன்களின் அணுவால் ஆனது. இந்த அணுவானது உலகிலுள்ள அனைத்து உயிர்களிலும், அசையாப் பொருட்களிலும், கல், பாறை என்ற திடப் பொருட்களிலும் இருக்கிறது. அவையும், நம்மைப் போலவே விண்மீன்களின் குழவிகளே! அதனால்தான், கல்லைக் கொண்டு சிலை வடிக்க முடிகிறது; பாறையின் மேல் கோயில் கட்ட முடிகிறது.
இந்த மூலகங்கள், நம் உடலில் எவ்வாறு இடம் பெற்றுள்ளன என்றும் பார்க்க வேண்டும் தானே. சுருங்கச் சொல்வதற்கு இந்த அட்டவணை உதவும்.
| ப்ரபஞ்ச தோற்ற நிலை | மூலகங்கள் | மனித எடையில் % |
| பெரு வெடிப்பு | ஹைட்ரஜன் | 10.0% |
| இறந்து கொண்டிருக்கும் அதிக எடையற்ற விண்மீன் நிலை | ஆக்ஸிஜன், கார்பன், கால்சியம், நைட்ரஜன், | 84.5% |
| வெடிக்கும் பெரு நட்சத்திரம் | இரும்பு, சல்ஃபர், பாஸ்பரஸ், மெக்னீசியம், சோடியம், | ~2.0% |
| மீப்பெரு விண்மீன் வெடிப்பு, அண்டக் கதிர் பிளவு | துத்த நாகம், செம்பு அயோடின், போரான்- மீச்சிறு அளவு, | <0.5% |
விண்மீன் பிறப்பிலிருந்து இறப்பு வரை இந்தப் பூமியில், நம் உடலில், நம் அணுக்களில், இயற்கையில் இருக்கையில், நாம் அண்டக் கோள்களின் அமைப்பையும், அவை நம் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தையும், அதைச் சொல்லும் கணித நூற்களான வான சாஸ்திரம், ஜோதிடம் என்பதை ஏன் மறுக்க வேண்டும்? இக்கட்டுரை எழுதப்படும் இந்த வாரத்தில் மேலை அந்தி வானில் சுக்கிரனும், வியாழனும் அருகருகே நெருங்கி பின்னர் வியாழன் மேற்கில் அப்பால் செல்வதையும், அதை நம் பஞ்சாங்கங்கள் கணித்திருப்பதையும் ஏன் வெறுக்க வேண்டும்? நம்முடைய தமிழிலும் வானியல் நூற்கள் உள்ளன. ஜோதிட நூல்கள் உள்ளன. நாம் நாகரீக, அறிவு வளர்ச்சி இல்லாதவர்கள் என்று நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் சொல்வதை இன்னமும் ஏன் தீவிரமாக நம்ப வேண்டும்? நமக்கு எல்லாம் தெரியும் என்று சொல்வதும், அறிவிலிகள் நாம் என்று சொல்வதும் காட்டுவது நமது அறிவின்மையைத்தான்.

முக்கடலும் கூடும் கன்னியாகுமரி. அங்கே இந்திய பெருங்கடலும், அரேபிய கடலும், வங்காள விரிகுடாவும் கூடுகின்றன. ஆனால், அந்த கடல் நீர்கள் ஒன்றாகக் கலப்பதில்லை. அந்தந்த நீரின் உப்பு அடர்த்தியைப் பொறுத்து, அவைகள் ஓரிடத்தில் தென்பட்டாலும் ஒன்றாகத் தென்படுவது இல்லை.
இந்த இடத்திலிருந்து அண்டார்டிகா வரையிலான ஒரு நேர்கோடு போட்டோம் என்றால் அங்கே எந்த ஒரு நிலப்பகுதியும், தீவுகள் உட்பட, இல்லை என்பது ஒரு வியப்பு. அந்தப் பகுதியில் பூமித் தட்டுக்கள் மிக நேர்த்தியாக, வலிமையான கட்டுமானத்திற்கு உதவுவதாக எதன் மூலம் கண்டறிந்தார்கள்? பொறியியல், புவியியல், தொழில்நுட்பங்கள் அதிகமாக வளர்ச்சி அடையாத அல்லது அப்படி நாம் நம்பிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் கோயிலின் அடியே குகை மற்றும் சுரங்கப்பாதையை எப்படி அமைத்தார்கள்? அறிவியலின்படி பார்க்கப் போனால், அது ஒரு நீர் வழிப்பாதை. கடல் சீற்றத்தின் போதும், கடலில் அதிகப்படியான அலைகள் வரும்போதும், கோவில் சேதப்படாமல் இருக்க, நீர் சக்தியாலேயே இயங்கும் ஒரு சுழல் எந்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது. சுனாமி பலமாகத் தாக்கினாலும் அதை எதிர்கொள்ளும் விதத்தில் இந்த நீர் சக்கரம் சுழன்று அதிகப்படி தண்ணீரை உட்புகாமல் தடுக்கிறது. கன்னியாகுமரி கடல் மணலில் இருக்கும் மோனோசைட் அதில் இருக்கும் தோரியம், வண்ண வண்ண மணற் துகளாக காணப்படுகின்றது. அவை ஆற்றல் அணுக்கள். கோவில் அமைந்திருக்கும் சார்னாக்கய்ட் (Charnockites) என்ற பாறை வகை, இந்த மணல் இரண்டுமே ஆற்றல் மையமாகின்றன. பாறைகளின் வலிமை, பூமித் தட்டுக்களின் உறுதி, நீர் சுழற்சி மூலம் வெள்ளத் தடுப்பு, ஆற்றல் மையத்தை அறிந்து கொண்டு சரியாக அந்த புள்ளியில் மூலவரை நிர்மாணித்தது, இதையெல்லாம், எப்படி அறிந்தார்கள்?
நவீன உலகில் ‘கிரீன்விச்’ (Greenwich) எவ்வாறு பூஜ்ஜிய தீர்க்கரேகையாக (0° Longitude) கருதப்படுகிறதோ, அதேபோல் பண்டைய பாரதத்தில் உஜ்ஜயினி தீர்க்கரேகைதான் முதன்மைத் தீர்க்கரேகையாக (Prime Meridian) இருந்தது.
கோவில் நிர்மாணத்தில், குறிப்பாக இந்தியாவின் முக்கிய பிரசித்தி பெற்ற கோவில்களின் அமைப்பில், இந்த உஜ்ஜயினி தீர்க்கரேகை மிக முக்கியமான ஆன்மீக மற்றும் அறிவியல் பங்கைக் கொண்டுள்ளது:
1. ஒரே நேர்க்கோட்டு சீரமைப்பு (Linear Alignment)
பண்டைய இந்தியக் கோவில் கட்டிடக்கலையின் மாபெரும் அதிசயங்களில் ஒன்று, இந்தியாவின் வடக்கிலிருந்து தெற்கு வரை உள்ள மிக முக்கியமான சிவாலயங்கள் மற்றும் சக்தி பீடங்கள் பலவும் உஜ்ஜயினி வழியே செல்லும் அதே தீர்க்கரேகையின் நேர்க்கோட்டில் (சுமார் 75°E – 77°E தீர்க்கரேகை) மிகத் துல்லியமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
வடக்கில் இமயமலைத் தொடரில் தொடங்கி தெற்கில் கன்னியாகுமரி வரை இந்த நேர்க்கோட்டு அமைப்பை நாம் காண முடியும்:
- கேதார்நாத் (உத்தராகண்ட்)
- உஜ்ஜயினி மகாகாலேஸ்வர் (மத்திய பிரதேசம்)
- காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் (தமிழ்நாடு)
- திருவண்ணாமலை அண்ணாமலையார் (தமிழ்நாடு)
- திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் (தமிழ்நாடு)
- சிதம்பரம் நடராஜர் (தமிழ்நாடு)
- ராமேஸ்வரம் ராமநாதசுவாமி (தமிழ்நாடு)
- கன்னியாகுமரி பகவதி அம்மன் (தமிழ்நாடு – இந்தியாவின் தென் கோடி
பூகோள வரைபடம் மற்றும் ஜி.பி.எஸ் (GPS) போன்ற நவீன தொழில்நுட்பங்கள் இல்லாத 1,000 முதல் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திலேயே, இந்த அனைத்துக் கோவில்களும் ஒரே நேர்க்கோட்டு தீர்க்கரேகையில் அமையுமாறு மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது வியக்கத்தக்கது.
2. ‘காலக் கணக்கீடு’ மற்றும் பிரபஞ்ச ஆற்றல் (Cosmic Energy Center)
- சூரிய சித்தாந்தம்: பண்டைய வானியல் நூலான சூர்ய சித்தாந்தம், உஜ்ஜயினியைப் பூஜ்ஜிய தீர்க்கரேகையாகக் குறிப்பிட்டு, அங்கிருந்துதான் பிரபஞ்சத்தின் கால நேரமும், கிரகங்களின் இயக்கமும் கணக்கிடப்பட வேண்டும் என்று கூறுகிறது.
- மகாகாலேஸ்வர் – காலத்தின் கடவுள்: உஜ்ஜயினியில் உள்ள சிவபெருமான் ‘மகாகாலேஸ்வரர்’ (காலத்தைக் கடந்து ஆள்பவர்/காலத்தின் கடவுள்) என்று அழைக்கப்படுகிறார். இந்த தீர்க்கரேகையின் நேர்க்கோட்டில் கட்டப்படும் கோவில்கள், பூமியின் காந்தப்புல ஆற்றலையும் (Magnetic Field), பிரபஞ்சத்தின் நேர்மறை ஆற்றலையும் (Cosmic Energy) மிக அதிகமாக ஈர்க்கும் திறன் கொண்டவை என்ற ஆன்மீக-அறிவியல் கோட்பாட்டின் அடிப்படையில் இவை நிர்மாணிக்கப்பட்டன.
3. பஞ்சபூதத் தலங்களின் தொடர்பு
தமிழகத்தில் உள்ள பஞ்சபூதத் தலங்களில் மூன்று தலங்கள் (காஞ்சிபுரம்-நிலம், திருவண்ணாமலை-நெருப்பு, சிதம்பரம்-ஆகாயம்) மற்றும் உஜ்ஜயினி தீர்க்கரேகைக் கோட்டில் வரும் பிற தலங்களும் புவியியல் ரீதியாக நேர்க்கோட்டில் சீரமைக்கப்பட்டுள்ளன. இது அண்டவெளியின் ஆற்றலை பூமியின் குறிப்பிட்ட புள்ளிகளில் நிலைநிறுத்துவதற்காக நம் முன்னோர்கள் பயன்படுத்திய மேம்பட்ட கட்டிடக்கலை (Vastu & Sacred Geometry) தொழில்நுட்பமாகும்.
சுருக்கமாகக் கூறின், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உட்பட இந்தியாவின் முதன்மைத் தலங்கள் அனைத்தும் வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமில்லாமல், உஜ்ஜயினி தீர்க்கரேகையை மையமாகக் கொண்ட ஒரு மாபெரும் பிரபஞ்ச ஆற்றல் கட்டமைப்புடன் (Cosmic Grid) இணைக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
4. ஆற்றல் கட்டமைப்பு (The Energy Grid)
- பூமியின் காந்தப்புலம்: பூமி ஒரு பெரிய காந்தக் கோளமாகும். உஜ்ஜயினி தீர்க்கரேகைக் கோட்டில்தான் கடக ரேகையும் (Tropic of Cancer) சந்திக்கிறது. (இந்தக் கடக ரேகை வானில் உள்ள ஒன்று. உஜ்ஜயினியைத் தாண்டி சூரியன் வடக்கு நோக்கி பயணிப்பதில்லை. அவன் தன் பயணத்தை தெற்கு நோக்கித் திருப்புகிறான்.) இந்த அச்சின் நேர்க்கோட்டில் அமைந்துள்ள கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இருப்பதால், பிரபஞ்ச ஆற்றல் (Cosmic and Magnetic Energy) அதிகமாகக் குவியும் புள்ளியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. மற்றொரு விஷயத்தையும் நம் முன்னோர் சொன்னார்கள். அது கன்னியாகுமரிக்கு மேற்கே லங்கா (ஸ்ரீலங்கா இல்லை) என்ற கற்பனைத் தீவு. அங்கே அட்சரேகையும், தீர்க்க ரேகையும் ஒன்றையொன்று இடை வெட்டுகின்றன. உஜ்ஜயினி தீர்க்க ரேகையாகவும், மேற் சொன்ன லங்கா அட்ச ரேகையாகவும் கொள்ளப்பட்டு, நாள், கரணம், கோள்களின் நிலை, இடப்பெயர்வு, சந்திரனின் சுழற்சிகள், கிரஹணங்கள், பூமியின் ஆற்றல் மையங்கள், கணிதக் கணிப்புகள், கட்டிடங்களின் அமைப்பு, அவை அமைய வேண்டிய திசைகள் என்று இன்னும் பலவற்றையும் அவர்கள் கணித்தார்கள். உஜ்ஜயினி தொடக்கப் புள்ளியாக இருக்க, வெவ்வேறு நகரங்களில் நேரம் என்னாவாக இருக்கும், சூரிய உதயம் எப்போது என்று துல்லியமாக கணக்கிட்டார்கள். கொனார்க்கின் சூர்யக்கோயில் கிழக்கே இருக்க, மேற்கில், குஜராத்தில் மதோரா சூர்யக் கோயில் என்று வந்தது.
- கன்னித் தெய்வத்தின் தவம்: கன்னியாகுமரி அம்மன் “ஒற்றைக் காலில் நின்று பிரபஞ்ச ஆற்றலை சமநிலைப்படுத்த தவம் செய்கிறார்” என்ற ஆன்மீகக் கூற்று, பூமி அச்சின் சமநிலை மற்றும் இந்த தீர்க்கரேகை வழியாகப் பாயும் ஆற்றல் ஓட்டத்தைக் குறிப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்திய வானவியல் அறிவையும், கோள்கள் மற்றும் விண்மீன்களின் அமைப்பையும், கொண்டு ஒரு மாபெரும் கோயிலை அமைத்து அதை வழிபாட்டிடமாகவும் ஒளியியல், ஒலியியல்,(கடலோசை கோயிலின் உள்ளே கேட்பதில்லை) நீர் சுழற்சி பொறியியல், என்று அறிவியல் மையமாகவும் அமைத்திருக்கிறார்கள். அணுசக்தி ஆற்றலை அவர்கள் அவ்விதம் பயன்படுத்தி உள்ளார்கள். அதற்கு உதவியது எது, குறிப்பாக அந்தக் கட்டுமானம் எவ்வண்ணம் சாத்தியமாகியது என்று சிந்தித்தால் நம்முடைய விஸ்வகர்மா, மயன் ஆகம, சிற்ப சாத்திரம், உலோகக் கலை வார்ப்புகள் என்று வளர்ந்து வந்துள்ள வரலாறும், உஜ்ஜயினீ தீர்க்க ரேகையின் பங்கும் தென்படுகிறது.

இதற்கும் வானில் இருக்கும் கோள்கள் மட்டும் நட்சத்திரங்களுக்கும் என்ன தொடர்பு? அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் கடல் அலைகள் எவ்விதம் செயல்படுகின்றன என்பதை நாம் கவனித்திருப்போம். வானில் சூரியன் ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில் உதிப்பதில்லை என்று நம் முன்னோர்கள் அறிந்திருந்தார்கள். அந்தப் பாகை வேறுபாடுகளை மிகத் துல்லியமாக கணித்தார்கள். சந்திரனின் சுழல் அமைப்பையும், அவனது கலைகள் வளர்ந்து தேய்வதையும், முக்கியமாக 27 நட்சத்திரங்களுக்குள் அவனது பயணங்கள் அமைகின்றன என்பதையும், அறியப்படாத மறுபக்கம் அவனுக்கு இருக்கிறது என அறிந்ததோடு மட்டும் இல்லாமல் அப்படியெல்லாம் நிகழும் காலகட்டத்தில் என்ன விதமான கோள் சேர்க்கைகள் , பாகைகள், அமைந்திருக்கின்றன என்றும் பார்த்தார்கள்.
தத்துவார்த்தங்கள்
ஆன்மீகமும், அறிவியலும் இணைந்து சொல்வது ஒன்று. நம் வாழ்வு இந்தப் பரந்து விரிந்த விண்மண்டலத்துடன் ஒத்திசைய வேண்டும். கிரகங்கள் மெல்லிய அகச்சிவப்பு ஒளியை உமிழ்கின்றன. தானே ஒளிரும் சக்தி அவற்றிற்கில்லை. நட்சத்திரம் அவற்றிற்கு ஒளி தருகிறது. நம் எலும்பு, குருதி இவை நட்சத்திர தூசுகளிலிருந்து என்றால், நமக்கும், அகிலத்திற்கும் இடையே பிரிவினை இல்லாமலாகிறது அல்லவா? அதே நேரம் நம் உடல் என்பது அண்டத்தின் கூறு என்றாலும், பூமி ஒரு கிரகம் என்பதால், அதில் வாழும் அனைத்திற்கும் உள்ளொளியாக சைதன்யம் திகழ்கிறது.
கோயிலைப் பார்த்திருப்போம்- அதன் கருவறை சிறியதாக, சூழப்பட்டதாக இருக்கும். பெரும்பான்மையான முதன்மை வழிபாட்டிடங்களில், சூரியனின் முதல் கதிர், கருவறையில் இருக்கும் கடவுளின் திருவுருவில் விழும். அந்த ஒளியால் துலங்கி வருவது அமைதியும், ஆனந்தமும். பல கோயில்களிலும் சரவிளக்கொன்று சன்னதியில் இருக்கும். அது ஆன்மக் குறியீடு. இதை ஏற்றுக் கொள்ளாவிடில் பரவாயில்லை, அதில் இருக்கும் அறிவியலை எண்ணிப்பார்க்கலாம்.
ரிக் வேதம் (1.35.9):
हिरण्यपाणिः सविता विचर्षणिरुभे द्यावापृथिवी अन्तरीयते ।
अपामीवां बाधते वेति सूर्यमभि कृष्णेन रजसा द्यामृणोति ॥ Rig Veda 1.35.9, 10.22.14, 10.149.1, மேலும் சில செய்யுள்கள் உள்ளன
விளக்கம்:
பிரகாசமான கதிர்களைக் கொண்ட சூரியன், விண்வெளிக்கும் பூமிக்கும் இடையே சஞ்சரிக்கிறான். அவன் தனது ஈர்ப்பு ஆற்றலால் விண்வெளிப் பொருட்களைத் தாங்கிப் பிடித்து, பிரபஞ்சத்தின் இருளை நீக்கி ஒளியூட்டுகிறான்.
வேதாங்க ஜோதிடத்தை இயற்றிய லாகத முனிவர், (இவர் பொ.யு.மு 1200-1400ல் வாழ்ந்திருக்கிறார். வேதங்களில் காணப்படும் வானியல் மற்றும் ஜோதிடக் கூற்றுக்களை கண்டறிந்து தானும் பரிசோதித்து மேம்படுத்திய அறிஞர் எனக் கொண்டாடப்படுகிறார்) வேதக் கல்வியில் வானியலுக்கு எவ்வளவு உயரிய இடம் உண்டு என்பதை ஒரு அழகான உவமையோடு விளக்குகிறார்.
வேதாங்க ஜோதிடம் (ஸ்லோகம் 4):
यथा शिखा मयूराणां नागानां मणयो यथा ।
तद्वद्वेदांगशास्त्राणां गणितं (ज्योतिषं) मूर्धनि स्थितम् ॥ (Vedas, vedangas and upangas series | Episode 14)
விளக்கம்:
மயிலின் தலையில் உள்ள கொண்டையும், பாம்புகளின் தலையில் உள்ள மாணிக்கமும் எவ்வாறு மிக உயர்ந்த இடத்தில் திகழ்கின்றனவோ, அதேபோல அனைத்து வேதாங்க சாஸ்திரங்களுக்கும் மேலாக கணிதமும் வானவியலும் (ஜோதிடமும்) தலைப்பகுதியாக மிக உயர்ந்து நிற்கிறது.
விஷ்ணு புராணத்தின் சூரிய குடும்ப அமைப்பு ஸ்லோகம்
சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களும், விண்மீன்களும் பூமிக்கு மேலே எந்தெந்த தூரத்தில் (அடுக்குகளில்) அமைந்துள்ளன என்பதை விஷ்ணு புராணம் (2-ஆம் அம்சம், 7-ஆம் அத்தியாயம்) துல்லியமாகப் பட்டியலிடுகிறது. [1]
सूर्याच्चन्द्रमा लक्षयोजने विप्रकृष्टे अवतिष्ठते ।
चन्द्रमसोऽपि लक्षयोजनोपरिष्टात् नक्षत्रमण्डलमशेषमेव भ्रमति ॥
नक्षत्रमण्डलादुपरिष्टाद् द्विलक्षयोजने बुधः अवतिष्ठते ।
(விஷ்ணு புராணம் – 2.7.2-4)
விளக்கம்:
- சூரியன் மற்றும் சந்திரன்: சூரிய மண்டலத்தின் மையப் பகுதிக்கு மேலே சந்திரன் உள்ளது.
- நட்சத்திர மண்டலம் (Nakshtra Mandala): சந்திரனின் சுற்றுப்பாதைக்கு மேலே முழுமையான விண்மீன் கூட்டங்கள் (Constellations) சுழன்று கொண்டிருக்கின்றன.
- புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி: இந்த நட்சத்திர மண்டலத்திற்கு மேலே முறையே புதன் (Mercury), சுக்கிரன் (Venus), செவ்வாய் (Mars), குரு (Jupiter) மற்றும் சனி (Saturn) ஆகிய கோள்களின் சுற்றுப்பாதைகள் அடுக்கடுக்காக அமைந்துள்ளன.
- கவனியுங்கள்; நிழல் கிரகங்களான ராகு, கேதுவைப் பற்றி அப்போது குறிப்பிடப்படவில்லை.
வேத வானியலில் (Vedic Astronomy) ‘கோளம்’, ‘பூகோளம்’ (Bhugola) மற்றும் ‘பகோளம் / ககோளம்’ (Khagola) ஆகிய சொற்கள் பிரபஞ்சத்தின் வடிவம், பூமியின் அமைப்பு மற்றும் விண்வெளி மண்டலங்களை விவரிக்கப் பயன்படும் மிக முக்கியமான அறிவியல் சொற்களாகும். பழங்கால இந்து சாஸ்திரங்கள் பிரபஞ்ச அமைப்பை விளக்கும் போது மூன்று பிரிவுகளாகப் பிரித்துக் கூறுகின்றன.
1. கோளம் (Gola – The Sphere):
- பொதுவாக வான்வெளியில் உள்ள அனைத்து கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றும் அண்டவெளிகளின் வட்ட வடிவ அல்லது உருண்டை வடிவத் தன்மையைக் குறிக்க ‘கோளம்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.
- விண்வெளியில் உள்ள பொருட்கள் அனைத்தும் தட்டையானவை அல்ல, அவை முப்பரிமாண பந்து வடிவம் கொண்டவை என்பதை உணர்த்தவே ‘கோள சாஸ்திரம்’ என்ற வானியல் பிரிவு உருவானது.
2. பூகோளம் (Bhugola – The Terrestrial Sphere):
- ‘பூ’ (மண்/பூமி) + ‘கோளம்’ (உருண்டை) = பூகோளம். இது நாம் வாழும் பூமி உருண்டையைக் குறிக்கும் சொல்லாகும்.
- உலகம் தட்டையானது என்று மேலைநாடுகள் பல நூற்றாண்டுகளாக நம்பி வந்த நிலையில், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பாரத மக்கள் பூமிக்கு ‘பூகோளம்’ (Geography/Earth Globe) என்று பெயரிட்டதே பூமி உருண்டையானது என்பதற்கான மிகப்பெரிய சான்றாகும் [Vedic Cosmology and Earth Science | PDF – Scribd, Yogavasistha 7.126 on Bhoogola/Earth].
3. பகோளம் அல்லது ககோளம் (Khagola – The Celestial Sphere):
- ‘கம் / க’ (விண்வெளி/ஆகாயம்) + ‘கோளம்’ (உருண்டை) = ககோளம். இது பூமியைச் சுற்றியுள்ள மாபெரும் வான்வெளி மண்டலத்தைக் (Celestial Sphere) குறிக்கிறது.
- பூமியை மையமாக வைத்து விண்வெளியை ஒரு பெரிய முப்பரிமாண உருண்டையாக பாவித்து, அதில் சூரிய, சந்திரர்களின் நகர்வுகளை வேத கால முனிவர்கள் கணக்கிட்டனர் [Khagola Shastra: Ancient Astronomy Insights | PDF – Scribd]. இதன் பொருள் பூமியிலிருந்து வான் மண்டலங்களைக் கணித்தார்கள் என்பதே. சிலர் தவறகப் புரிந்து கொள்வதைப் போல், பூமியை மையத்தில் வைத்து சூரியனைப் புறம் தள்ளினார்கள் என்பதில்லை. அன்றே சார்பு நிலைக் கோட்பாட்டை பயன்படுத்தியுள்ளார்கள். இரு வழியில் கணக்கிட்டார்கள். Geo-centric, cosmo- centric.
சூரிய சித்தாந்தம் போன்ற வானியல் நூல்கள் இதனைப் புரிய வைக்க ஒரு அழகான உவமையைக் கூறுகின்றன:
ஒரு பெரிய நெல்லிக்கனி அல்லது கடம்ப மலரை எடுத்துக் கொண்டால், அதன் மையப் பகுதி ‘பூகோளம்’ (பூமி). அதைச் சுற்றி எழும்பி நிற்கும் மகரந்தக் காம்புகளும், அதன் மேல் சுழலும் வண்டுகளும் ‘ககோளம்’ (விண்வெளி மற்றும் கோள்கள்) ஆகும் [Vedic Cosmology and Earth Science | PDF – Scribd, Yogavasistha 7.126 on Bhoogola/Earth]. இவை அனைத்தும் சேர்ந்த மொத்த அமைப்பே ‘கோளம்’ எனப்படும்.
சுருக்கமாக, பூகோளம் என்பது நாம் வாழும் நிலப்பரப்பு; ககோளம் (பகோளம்) என்பது கோள்களும் நட்சத்திரங்களும் நகரும் வான்வெளிப் பரப்பு; கோளம் என்பது இவற்றின் பொதுவான உருண்டை வடிவ தத்துவம் [Vedic Cosmology and Earth Science | PDF – Scribd, Yogavasistha 7.126 on Bhoogola/Earth]
ஆரியபட்டரின் ‘கோளபாதம்’ (Golapada):
ஆரியபட்டர் தான் எழுதிய உலகப் புகழ்பெற்ற ‘ஆரியபட்டீயம்’ (Aryabhatiya) நூலின் நான்காவது பகுதியை ‘கோளபாதம்’ (Spherical Astronomy) என்று பெயரிட்டு முற்றிலும் வானியல் வடிவியலுக்காக ஒதுக்கினார் [Aryabhatta and Varahamihira’s Works | PDF | Astronomy – Scribd, Aryabhata: A True Gem of Indian Mathematics and …].
அண்டத்தின் மீச்சிறு அளவிலான வானாய்வகம் நம் உடல் என்றும், நம் மூச்சு சுழற்சிகள், கிரகங்களின் சுற்றை ஒத்திருக்கிறது என்றும் அகத்தியரின் சித்த சாத்திரமும், உடலே கோயில், ஆன்மாவே ஒளி என்று திருமூலரும் சொல்லியிருக்கிறார்கள். ரிக் மற்றும் யஜுர் வேதங்கள், வேதாங்க ஜோதிடத்தைச் சொல்கின்றன.
ஆம், அனைத்தும் விண்மீனின் குழவிகள்.
உசாவிகள்:
- கன்யாகுமரி அறநிலையத் துறையின் வெளியீடு
- காணொலிகள், இணையம், செ நு தரவுகள்
- https://architizer.com/blog/inspiration/stories/architecture-astrology-cosmic-principles-theories-design/ by Sam Frew
Discover more from சொல்வனம் | இதழ் 373 | 23 ஆக 2026
Subscribe to get the latest posts sent to your email.

Excellent article! Congratulations! it was an ey-opening article for me pertaining to Ujjain! I intend to visit it asap. Also of noteworthyness is that some of the temples of Tamilnadu (Chidambaram, Kaanjipuram, Thiruvannamalai etc) are exactly aligned on the lines of Ujjain Prime meridian !
Interesting to see that Kanyakumari to Antarctica does not have a single island. However, that is more a coincidence as the earth has evolved over millions of years. By most geological accounts, there was less landmass earlier than now. If you look at Cape Town, SA to Antarctica, there are no islands in that path. You may argue that Cape Town is closer to Antarctica compared to KK. I will take Lagos, Lome, Accra and all the way down to Antarctica, there are no islands. The distance is greater than KK from Antarctica.