”மாமா! உங்கக் கிட்ட உரிமை எடுத்துண்டு ஒரு கேள்வி கேட்கறேன்…”, என்று மெல்ல தொடங்கினார் செம்பூர் ராஜகோபாலன்.
“பீடிகையெல்லாம் பலமாயிருக்கே, என்னவாக்கும் சம்ஷயம்?”, என்று கையிலிருந்த வெற்றிலைச் சீவலில் இருந்து கவனம் திரும்பாமல் கேட்டார் பி.கே.வி என்று பரவலாய் அறியப்பட்ட பாலக்காடு விஸ்வநாதன்.
”எங்கப்பா உங்கப் பாட்டைத் தவிர வேற பாட்டை ஏறெடுத்துக்கூடப் பார்க்க மாட்டார். நானும் உங்கப் பாட்டைக் கேட்காத நாளில்லை. மாசம் ஒரு தடவையானும் நேரில கேட்டுடணும்…”
“அதான் தெரியுமே! நான் பாம்பேக்கு வரலைன்னா, நீ மெட்ராஸ்க்கு வந்துடுவாய். இப்ப அதுக்கென்னவாக்கும்?”
“உங்கக் கச்சேரி மாத்திரம் குறைஞ்ச பட்சம் 500-வது நேரில கேட்டு இருப்பேன். ரெக்கார்டிங்குல கேட்டதை எல்லாம் சேர்த்தா 1000 கச்சேரி கேட்டு இருப்பேன்.”
“என் கச்சேரி ஆயிரம் கேட்ட கஷ்டத்தை அனுபவிச்சதுக்கு அவார்ட் குடுக்கணுங்கறியா?”
“ஐயோ! மாமா! ” என்று பதறினார் ராஜகோபாலன்.
“ராஜு! என்னத்துக்காக்கும் இப்படி மென்னு முழுங்கறாய்?.”
“உங்கக் கச்சேரி ஒவ்வொண்ணும் ஜெம்தான். ஆனால் நான் கேட்ட ஆயிரத்துல ‘டாப் டென்’-னு ஒரு லிஸ்டு போட்டா, அந்தப் பத்துல ஒவ்வொரு கச்சேரியிலையும் ரகுராமன் சார் மிருதங்கம். அவர் உங்கப் பக்கத்துல இருக்கும் போது நீங்க பாடற தினுசே வேற.”
பி.கே.வி மௌனமாக வெற்றிலையை மென்று கொண்டிருந்தார்.
ஐந்து வருடங்களாய் மனத்தில் தேக்கியிருந்த விஷயம். இன்று ஏதோ அசட்டு தைரியத்தில் வெளிப்படுத்தியதை பி.கே.வி எப்படி எடுத்துக்கொண்டிருக்கிறார் என்று புரியாமல் 20 நொடிகளுக்குள் தவித்துப் போனார் ராஜகோபாலன்.
“மாமா! தப்பா ஏதும் சொல்லி இருந்தா மன்னிக்கணும்.”
அவர் சொன்னதை பி.கே.வி காதில் வாங்கிக் கொண்டது போலவே தெரியவில்லை.
”ஹும்ம்” என்று ஒற்றைப் பெருமூச்சு மட்டும் அவரிடம் எழுந்தது.
பேச்சைத் தொடராமல் அவரைத் தனிமையில் விட்டுச் சென்றால் உசிதமாக இருக்குமா என்று குழம்பியபடி இருக்கையை விட்டு எழுந்திருக்கும் போது ராஜகோபாலனைக் கையமர்த்தி அமரச் சொன்னார் பி.கே.வி.
“ரெகுராமன் எங்க வாத்தியாருக்கு வாசிச்சுக் கேட்டிருக்கியோ?”
ரகுராமன் பி.கே.வி-யை விட இரண்டு வயது இளையவர். ஆனால் துறையில் பி.கே.வி-க்கு அரங்கேற்றம் நடப்பதற்கு பத்தாண்டுகள் முன்பே அனைத்து முன்னணி கலைஞர்களுக்கும் வாசித்து முக்கியக் கலைஞராக பெயர் பெற்றுவிட்டிருந்தார்.
“நேக்கு அவ்வளவு வயசு போறாது. அப்பா நிறைய சொல்லிக் கேள்வி. ஒண்ணு ரெண்டு ரிக்கார்டிங் இருக்கு…”
“ரிக்கார்டிங்கெல்லாம் வைத்தாண்ணா தளர்ந்து போன பின்னாடி பண்ணினது. அந்த ஜாஜ்வல்யத்துல ஆயிரத்துல ஒரு பங்கு கூட ரிக்கார்டிங்குல பெயராதாக்கும். ‘ஹெச்சரிக்ககா ராரா’”, பி.கே.வி உற்சாகமாய் பாட ஆரம்பித்துவிட்டார்.
“ஹே ராமசந்திரா…” இடையில் நிறுத்தி, ‘இந்தக் காலபிரமாணத்தை கவனிச்சியோ? இது சவுக்கமா மத்தியமமா?’.
“…”
“ரெண்டுங்கட்டான் காலபிரமாணம். கேட்க அத்தனை சுகமாயிட்டு இருக்கும். பாடிப் பார்த்தாதான் கஷ்டம் தெரியும். அண்ணா அநாயாசயமா நிர்வாகம் பண்ணுவர். அந்தக் காலபிரமாணத்தைக் க்ஷணத்துல கவ்விடுவார் ரெகுராமன். பாட்டு முடிஞ்சதும் நறுக்குனு ஒரு தீர்மானம் வைப்பர். எப்பவும் மிருதங்கக்காரா நன்னா வாசிச்சா, ‘பலே, பேஷ்’-னுதானே பாடறவா வாய்ல வரும். இந்தத் தீர்மானத்துக்கு மட்டும் வைத்தாண்ணா, ‘ஆஹா! தெய்வீகம்!’-னு சிலாகிப்பாராக்கும். அவர் இப்படிச் சொல்றதைக் கேட்கணும்னே இந்தப் பாட்டுக்குச் சீட்டு வரும்.”
”வாணி மகால்ல நீங்களும் ரகுராமன் சாரும் இதேப் பாட்டை எடுத்த போது, பல்லவி முடிஞ்சு மோரா வெக்கும்போதே அரை நிமிஷத்துக்கு அப்ளாஸ் கிடைச்சுதே.”
“ஏய்! அண்ணா பாடினதுக்கு மின்னால என் பாட்டெல்லாம் உறை போடக் காணாது. அரை நிமிஷம் படபடன்னு கைத்தட்ட வைக்கறதுல இல்லையாக்கும் சங்கதி. அண்ணாவும் ரகுராமனும் சேர்ந்தா, பாட்டு முடிஞ்சும் கூட்டம் வாயில ஈ புகுந்தது தெரியாம ஸ்தம்பிச்சுப் போய் உட்கார்ந்து இருக்கும். ஸ்மரணை இல்லாதைக்குப் பண்ணிப்பிடுவா. அதுவாக்கும் சங்கீதம்.”
“இவ்வளவு அபிமானம் வெச்சுண்டு இருக்கேள். அப்புறம் ஏன் ரகுராமன் சாரோட கச்சேரி பண்ணி 8 வருஷம் ஆச்சு?”
”ம்?”
பி.கே.வி வேகமாகத் திரும்பியதில் ராஜகோபாலன் கொஞ்சம் பயந்துதான் போனார். தொடக்கூடாத இடத்தைத் தொட்டுவிட்டோமோ என்றெண்ணியபடி பேச்சைத் தொடர முடியாமல் தவித்தார்.
“ரெகுராமனோட கச்சேரி பண்ணாததுக்கு நானாக் காரணம்?”
“உங்க ரெண்டு பேருக்குள்ள என்னனு நேக்குத் தெரியாது. ஆனா, போன வருஷம் செம்பூர்ல உங்கக் கச்சேரிக்கு அவரைக் கேட்கட்டுமானு கேட்ட போது, ‘அதொண்ணும் வேண்டாம்’னு சொன்னேள்”.
“ஓ! அதனால நான் அவர் வேண்டாம்னு வெச்சுட்டேன்னு நினைச்சுண்டுட்டியா?”
“…”
“அதுக்கு மின்னால எத்தனை சபால அவரைக் கேட்டாச்சு? நானே அவர் ஆத்துக்குப் போய், ‘உங்க வித்வத்துக்கு காலுல விழலாம். உங்களை விட வயசானவன் நான். உங்கக் காலுல விழுந்தா பாவம் உங்கக் காலையாக்கும் சுத்தும். அதனால நமஸ்காரம் பண்ணாதைக்குக் கேட்கறேன். நான் என்ன தப்பு பண்ணி இருந்தாலும் க்ஷமிக்கணும்னு கேட்டுண்டாச்சு. அன்னிக்கு என்னமோ நன்னாத்தான் பேசி அனுப்பினார். அப்புறமும் ஆரேனுங்கேட்டா, பி.கே.வி-க்கு வாண்டாம். வேறாருக்குன்னாலும் வாசிக்கறேன்; போடுங்கோன்னாராம். உனக்கும் அந்தப் பதில் வேண்டாமேனுதான் நானே கேட்கண்டாம்னு சொன்னேன்.”
ராஜகோபாலனுக்குப் பரபரப்பாகிவிட்டது. இரண்டு பேருக்கும் ஏதோ சேர்க்கவே முடியாத சண்டை என்று நினைத்திருந்தவருக்கு, ரகுராமன் சம்மதித்தால் பி.கே.வி அவருடன் பாடத் தயாராகவே இருக்கிறார் என்பது பெரும் உற்சாகத்தைக் கொடுத்தது. பி.கே.வி குடும்பம் போலவே ரகுராமன் குடும்பமும் ராஜகோபலன் குடும்பத்துக்கு தலைமுறை தலைமுறையாய் நெருங்கிய நட்பு.
“மத்தவா அவரைக் கூப்பிடறதும் நான் கூப்பிடறதும் ஒண்ணு இல்லை. நான் கூப்பிட்டு அவர் ஒத்துண்டா உங்களுக்குப் பாட ஆட்சேபணை இல்லையே?”
“உன் வாய்க்கு சர்க்கரைதான் போடணும்! அப்படி மட்டும் அவர் ஒத்துண்டுட்டார்னா நீ எங்கெல்லாம் கூப்பிடறயோ அங்கெல்லாம் என் செலவுல வந்து பாடிட்டுப் போறேன். போறுமா?”
**********************
ரகுராமனின் ஃபோன் அதிர்ந்தது. கண்களைக் குறுக்கி அழைப்பது யார் என்று பார்த்துவிட்டு, செல்ஃபோனைக் காதில் வைத்து, “ராஜு! சௌக்யமா இருக்கியா?”, என்று உற்சாகமாய்ப் பேச ஆரம்பித்தார்.
“சௌக்யம் மாமா. ஒரு சந்தோஷமான சமாசாரம்?…”
“என்ன?”
“இந்த வருஷம் நம்ப சபா ஆரம்பிச்சு அம்பதாவது வருஷம். அதைக் கொண்டாடற சாக்குல, சங்கீதத்துல முக்கியமான வித்வான்கள் மூணு பேருக்கு எங்களாலான கௌரவம் பண்ணலாம்னு இருக்கோம்.”
“பேஷாப் பண்ணுங்கோ! நல்ல விஷயம்; நன்னா நடக்கட்டும்.”

“ஒரு பாடகர், ஒரு வயலின் வித்வான், ஒரு மிருதங்க வித்வானுக்கு இந்த அவார்டைக் கொடுக்கலாம்னு. இந்தச் சபாவை ஆரம்பிச்சவா மூணு பேர். அதுல எங்கப்பாவும் ஒருத்தர். சபாவோட மொதக் கச்சேரியில நீங்க வாசிச்சி இருக்கேள். எங்கப்பா பேர்ல ஒரு கௌரவம் பண்ணறோம். அந்த அவார்டை நீங்க வந்து வாங்கிண்டு எங்களை ஆசிர்வாதம் பண்ணனும்.”
“நான் கெளம்பின புதுசுல எந்த ஊர்ல கச்சேரி நடந்தாலும் உங்கப்பா அங்க இருப்பார். வெங்கடராமன் பேரைச் சொன்னாலே நான் வந்துடுவேன். அவார்டெல்லாம் ரெண்டாம் பட்சம்.”
“ரொம்ப சந்தோஷம் மாமா. அப்புறம் இன்னொரு விஷயம்..”
“ம்?”
“பாட்டுக்கு பி.கே.வி அண்ணாவுக்கும், வயலினுக்கும் அனந்தராமன் சாருக்கும் தரலாம்னு இருக்கோம்”.
பி.கே.வி பெயரைச் சொன்னதும் ஏதேனும் எதிர்மறையாய் சொல்லுக்கூடுமோ என்று எதிர்பார்த்தபடி காத்திருந்தார் ராஜகோபாலன்.
“நல்ல செலக்ஷன். இன்னிக்கு இருக்கறவாள்ல இவாதான் பெஸ்ட்.”
ராஜகோபாலனுக்குக் குளிர்ந்துவிட்டது. “பெரியவா பெரியவாதான். திறமையுள்ளவாள எப்படி மதிச்சுப் பாராட்டணும்னு மாமாட்டத்தான் கத்துக்கணும். எங்களுக்கெல்லாம் அன்னிக்கு பெரிய விருந்து கிடைக்கப் போறது. பி.கே.வி மாமாவோட சேர்ந்து உங்களோட மிருதங்கத்தைக் கேட்கத் துடிக்கற எங்கள மாதிரி ரசிகாளுக்கு அன்னிக்குத் தீபாவளிதான்.”, என்று சத்தமில்லாமல் ஊசியை இறக்கினார்.
“என்ன? என்ன? கச்சேரியா? நீ அவார்ட் கொடுக்கறேன்ன, அதுக்கு ஒத்துண்டேன். கச்சேரிக்கு எல்லாம் நான் ஒத்துக்கலையே?”
“அண்ணா! உங்களுக்குத் தெரியாதது இல்லை. சங்கீத நாடக அகாடமி விருது நீங்க வாங்க டெல்லிக்குப் போன போது கூட, அந்த வருஷம் அவார்ட் வாங்கின பாடகரோடயும், வயலின் வித்வானோடயும் சேர்ந்து நீங்க கச்சேரி பண்ணிட்டுத்தானே வந்தேள். இது எல்லா சபாவுலையும் உள்ள பழக்கம்தானே?”
“சபா வழக்கமெல்லாம் சரி. கச்சேரின்னா நான் வரலை.”
“மாமா, வெளிப்படையவே சொல்றேன். நீங்களே ஒத்துக்கறேள் பி.கே.வி-தான் இன்னிக்கு இருக்கற வித்வான்கள்ல தகுதியானவர்னு. அவரோட சேர்ந்து அவார்ட் வாங்கிக்க உங்களுக்கு எந்த இடைஞ்சலும் இல்லை. ஆனால், கச்சேரினா வேண்டாங்கறேள். ஏதோ உங்களுக்குள்ள மனஸ்தாபம். போன வாரம் பி.கே.வி மாமா இங்க வந்த போது பேசிண்டு இருந்தோம். நீங்க அவருக்குத் திரும்ப வாசிக்க மாட்டேளானு ஏங்கிப் போயிருக்கார். நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து கச்சேரி பண்ணாம இருக்கறது எங்களை மாதிரி எத்தனையோ ரசிகாளுக்கு நஷ்டம் இல்லையா?”
“ராஜு! எனக்கு எண்பது வயசாயிடுத்து. இன்னொருத்தருக்காக கச்சேரி செய்யணும்னு இப்ப எனக்கு ஆசையுமில்லை, ஆண்டவன் புண்ணியத்துல அவசியமுமில்லை. எங்கண்ணா எனக்கு ஒன்பது வயசாகும்போது அவர் ஆத்துல வெச்சு சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சார். கடைசி மூச்சு வரைக்கும் எனக்கு சொல்லிக் கொடுத்து இருக்கார். அதை மறக்காம இருக்க எனக்குத் தெரிஞ்சதை சொல்லிக் கொடுத்துண்டு இருக்கேன். அதக் கூட கொஞ்சம் குறைச்சுண்டா தேவலாம்னு தோணறது. சிஷ்யப் பையன் யாரானும், கிளாசுக்கு முன்னாடி போன் பண்ணி, ‘சார்! இன்னிக்கு வர முடியாம போயிடுத்து’-னு சொன்னா உள்ளுக்குள்ள ஒரே குஷியாயிடறது. வாத்தியத்தை எடுத்து வெச்சு, முக்கா மணியோ, ஒரு மணியோ – அடுத்த கிளாசுக்குப் பையன் வர வரைக்கும் எனக்கே எனக்கா வாசிச்சுக்கலாம்னு மனசு குதிச்சு ஆடறது. அண்ணா வாசிச்ச ஒரே ஒரு கோர்வையை எடுத்து சொல்லு சொல்லாப் பிரிச்சு மூணு காலம் வாசிச்சா முழுக்க நிறைஞ்சு போயிடறது. எந்தக் கச்சேரியும், அவார்டும் இப்ப நான் இருக்கற நெலைமையில இந்த நிறைவுக்கு முன்னாடி பெரிசாத் தெரியலை. இதுக்கு மேல என்னை வற்புறுத்த வேண்டாம்….”
ராஜகோபாலனுக்கு என்ன சொல்லவென்று தெரியவில்லை. கைக்கு எட்டிய பழம் வாய்க்கு எட்டாமல் நழுவியது போல மனம் புழுங்கியது.
“மாமா, நீங்க இவ்வளவு சொன்னதுக்கு அப்புறம் நான் உங்களை வற்புறுத்தலை. உங்கக் கிட்ட இருக்கற உரிமையில ஒரே ஒரு கேள்வி கேட்கலாமா?”
“தாரளமாக் கேளேன்!”
“உங்களுக்கும் பி.கே.வி-க்கும் என்னதான் பிரச்னை? நான் அவர் கிட்டையும் இதைக் கேட்டுட்டேன். அவருக்கே தெரியலைன்னுதான் சொல்றார்.”
“ராஜு! பாட்டுக்காரனுக்கும் மிருதங்கக்காரனுக்குமான உறவு புருஷன் பொண்டாட்டி உறவு மாதிரி. எங்களுக்குள்ள ஆயிரம் மனஸ்தாபம் வரலாம். அதையெல்லாம் வெளியில சொல்லிண்டு இருக்க முடியாது. இதை இத்தோட விட்டுடு. ”
அரை மனத்துடன் ராஜகோபாலன் தொடர்பைத் துண்டித்தார்.
*********************************
ரகுராமன் காலையில் எழுந்து காப்பியை அருந்தியவுடன் வீட்டின் மேற்பக்தியில் இருந்த தன் அறைக்குள் நுழைந்தார். அறையில் மாட்டிய இருந்த குருநாதர் படத்தை வணங்கிவிட்டு அந்த அறையில் இருந்த பல வாத்தியங்களுள் ஒன்றை எடுத்துக் கொண்டார். தொப்பிக்கு மாவு வைத்து,
’தொம்’ என்று சொல்லைப் போட்டதும் அண்டமே அதை ஆமோதித்தது போல அறை அதிர்ந்து நாதம் சூழ்ந்தது. இடது கை விரல்களை மடக்கி உள்ளங்கைக்கு கீழுள்ள சதை மேடுகளை வாத்தியத்தில் தேய்த்தபடி ‘கும் கும் கூகூகூகூ’ என்று சிலமுறை வாசித்துப் பார்த்தார், மாவு வைத்து உடனேயே தொப்பி அத்தனை கச்சிதமாய்ப் பொருந்திப் போயிருந்தது.
வலந்தலையில் மீட்டுக் கொடுத்தபடி தொப்பியில் சுழற்று குமுக்கிகளை வாசிக்கத் தொடங்கினார். மந்திர ஜெபம் போல அதே நடையை மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டேயிருந்தார்.
அரை மணி நேரம் ஓடி இருக்கும்.
அறைக் கதவு லேசாகத் தட்டப்படுவதைக் கேட்டு வாத்தியத்தை நிமிர்த்தினார். விட்டிருந்தால் அன்றைக்கு இன்னும் 2 மணி நேரம் கூட அந்தச் சொற்கட்டுகளிலேயே மயங்கி இருந்திருப்பார்.
அறைக்கு வெளியே பத்மநாபன் நின்றிருந்தார்.
‘அடடே! ஆஞ்சநேய ஸ்வாமி தரிசனம்! இன்னிக்கு காலைல இருந்து என்னமோ உள்ளுக்குள்ள பொங்கிப் பொங்கி வந்தது. நீர் வரப் போறீர்னுதான் பட்சி கூவியிருக்கு போல.’
பத்மநாபனுக்கு ரகுராமன் வைத்திருந்த செல்லப் பெயர் ஆஞ்சநேய ஸ்வாமி. நல்ல சங்கீதம் எங்கு இருந்தாலும் அங்கு கடைக் கோடி ரசிகனாய் ஆஞ்சனேயர் அமர்ந்திருப்பார் என்றொரு ஐதீகம். பத்மநாபனும் அப்படித்தான் என்பதால் இந்தப் பட்டப் பெயர். பத்மநாபன் எந்த வேலைக்குப் போனார், எப்படிக் குடும்பத்தைக் கரை சேர்த்தார் என்றெல்லாம் சங்கீதத் துறையில் இருப்பவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. தன்யாசியில் ‘பருவம் பார்க்க’ பாடம் பண்ண வேண்டுமெனில் பத்மநாபனுக்குத்தான் ஃபோன் வரும். ‘பழைய ரெக்கார்டிங்குன்னா முசிறி ஐயர்வாளோடது இருக்கு. நல்ல ரெக்கார்டிங்கா வேண்டும்னா நாராயணசாமியோடதுதான் பெஸ்ட்’, என்று கேட்ட மாத்திரத்தில் சொல்லிவிடுவார்.
ரகுராமன் வீட்டிலிருந்து கூப்பிடு தூரம்தான் பத்ம்நாபன் வீடு. ஆனாலும் எப்போதாவது இருவரும் சந்தித்துக் கொள்வர். பத்மநாபனே வந்திருக்கிறார் என்றால் ரகுராமனின் குருநாதர் நடேசப் பிள்ளை வாசித்த ஏதோ பதிவு புதியதாய் கிடைத்திருக்கிறது என்றுதான் அர்த்தம்.
‘நான் வந்து பத்து நிமிஷம் ஆச்சு. வலந்தலைல இத்தனை அழுத்தம், தொப்பியில இத்தனை குளுமை – என்ன ஒரு காம்பினேஷன்! கேட்டுண்டே கதவைத் தட்டாம நின்னுட்டேன்.’
பத்மநாபன் சொன்னதைக் கேட்டு குழந்தை போலப் பூரித்துப் போனார் ரகுராமன்.
‘இன்னிக்கு என்னமோ அப்படி அமைஞ்சுடுத்து. இதெல்லாம் வீட்டுலதான் அமையறது. கச்சேரியில் போய் என்ன மெனக்கெட்டாலும் இந்த சுகம் வாத்யத்துல கிடைக்கறதில்லை.’ என்று சொல்லும்போதே அவருக்கு நடேசப் பிள்ளையின் நினைவு வந்துவிட்டது.
‘ஒரு தடவை நன்றுடையான் கோயில்ல எங்களை டபுள் மிருதங்கமாப் போட்டுட்டா. வர்ணம் முடிஞ்சு, வாதாபி கீர்த்தனை ஆனதும் ஸ்வரம் பாட ஆரம்பிச்சா. அண்ணா தலையை காட்டி சேர்ந்துக்கோன்னார்.வயலின் ஸ்வரத்துக்கு நான் வாசிக்கலாம்னு போனா வாத்தியம் படுத்துண்டுடுத்து. மிருதங்கத்தை நிமிர்த்தி வெச்சு கல்லுப்பில்லை வச்சு என்னென்னமோ பண்ணி பார்க்கறேன். ஸ்வரம் முடிஞ்சு பந்துவராளி ஆலாபனை வரைக்கும் போராடியாச்சு. வாத்தியம் ஏறுவேனாங்கறது. கீர்த்தனை எடுக்கறதுக்கு முன்னாடி, அவர் வாத்தியத்தை என்கிட்ட குடுத்துட்டு, என் வாத்தியத்தை எடுத்து அவர் மடியில வெச்சுண்டுட்டார். ‘ம்! வாசி’-னு என்கிட்டத் தலையை ஆட்டிட்டு அவர் காதை வலந்தலையோட ஒட்டி என்னமோ ரகசியம் கேட்கறாப்புல வெச்சுண்டுது இன்னும் கண்ணுலையே இருக்கு. ‘ரகுவர நன்னு’ பல்லவி முடிஞ்சு ஒரு மோரா வெச்சு நிமிர்ந்து பாக்கறேன், கன்னுக்குட்டி மாதிரி வாத்யம் அவர் சொல்றபடியெல்லாம் கேட்கறது. மீட்டுச் சாப்பு அப்படி சேர்ந்து இருக்கு! இத்தனை வருஷமானாக் கூட, ரெண்டுக்கு மூணா வேணும்னா மிருதங்கத்தைச் சுமக்கத் தயாரா இருக்கேன். கச்சேரில வாத்தியம் விழுந்து போனா சரி பண்ணிக்கலாங்கற தைரியம் எனக்கு இன்னும் வரல.’
‘போயி அறுபத்திரெண்டு வருஷம் ஆகியும் நடேசப் பிள்ளையை இன்னும் கொண்டாடறோம்னா சும்மாவா?’
’வாஸ்தவம்! இந்தப் பக்கம் நீர் வரீர்ன்னா – புது ரெக்கார்டிங் ஏதும் கிடைச்சு இருக்கா?’
’ஆமாம் சார். இதுவரைக்கும் நம்ம கிட்ட இல்லாத ஒரு நவராத்திரி மண்டபக் கச்சேரி கிடைச்சு இருக்கு. வைத்தியநாத ஐயர் பாட்டு, நடேசப் பிள்ளை மிருதங்கம்’
‘ஆஹா! ஆஹா! ஒரு விஷயம் தெரியுமா பத்மநாபன்?’
’…’
‘எனக்கு நடேசண்ணா மாத்திரம் குரு இல்லை. வைத்தாண்ணாவும் குருதான். நடேசண்ணா காலமாகும் போது எனக்கு 18 வயசுதான். அடுத்த 20 வருஷத்துக்கு என்னைக் கையைப் பிடிச்சு இந்த சங்கீத உலகத்துல ஒரு இடத்துல கொண்டு வெச்சது வைத்தாண்ணாதான்.’
பத்மநாபன் கொண்டு வந்திருந்த பதிவை தன் அறையில் இருந்த கருவியில் போட்ட இசைக்கவிட்டார் ரகுராமன்.
‘ம க ஸா…
நி த ம, ம நி த..
நி த நி ஸா..’
அந்த நீண்ட ஷட்ஜமும், மெலிந்து படரும் நிஷாதமும், ஊஞ்சலாடும் மத்யமமுமாய் நாட்டைக்குறிஞ்சியின் முதல் பிடியிலேயே அத்தனை நகாசு.
ரகுராமன் கண்களை மூடிக் கொண்டார். ராகம் பெருக ஆரம்பித்தது. அவ்வப்போது பத்மநாபன் தன்னை மறந்து உடலை அசைக்கும் போது அவ்வப்போது உள்ளுக்க்கிழுக்கும் சத்தமான மூச்சுக் காற்று ஹும்காரம் ஒரு தேர்ந்த வயலின் வித்வானின் ஷட்ஜம் போல அந்த நாட்டைக்குறிஞ்சிக்கு இன்னு மெருகேற்றியது. அதிகமில்லை, வயலின் வாசித்ததைச் சேர்த்தால் கூட பதினெட்டு நிமிடங்களுக்கு கொஞ்சம் குறைவுதான். அதில் பத்து நிமிடங்கள் சஞ்சாரங்கள் எல்லாம் தார ஷட்ஜத்தை மையமாகக் கொண்டே அமைந்திருந்தன.
ராகம் முடிந்து தானம் தொடங்குவதற்குள் பத்மநாபன் அவசரமாய்ப் பேசினார்.
‘பார்த்தேளா! ’பாஹி ஜனனி’ கீர்த்தனை வைத்தாண்ணா பாடாந்திரத்துல தார ஸ்தாயி சஞ்சாரம் நிறைய இருக்கும். அதுக்கு ஏத்தா மாதிரியே ராகம் பாடி இருக்கார். ‘இது வேணுமா’-னு யோசிக்கறா மாதிரி ஒரு சங்கதி இல்லைப் பாருங்கோ. இன்னும் கொஞ்சம் வேணும்னு இருக்கும் போதே நிறுத்தற அந்த சாமர்த்தியம் அவரோடயே போயிடுத்து.’
ரகுராமன் தலை ஆட்டத்தான் அவகாசமிருந்தது. தானத்துக்குத் தயாராக மிருதங்கத்தை இரண்டுமுறை நடேசப் பிள்ளை தட்டிய போது ரகுராமனுக்கு முதுகு சிலிர்த்தது.
‘ஆனம் தம்தா, தானம் தம்த’ கம்பீரமான சதுஸ்ர கதியில் தானம் தொடங்கிற்று.
சிறு சிறு நகாசுகளுடன் ஸ்திரமான காலபிரமாணத்தில், ஆங்காங்கே கார்வை குடுத்தபடி நாட்டைக்குறிஞ்சியின் வளைவுகளை வெவ்வேறு ஸ்தாயியில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் வைத்தியநாதன். நங்கூரம் போல நடேசப் பிள்ளையின் நடைச் சொற்கள் உடன் ஒலித்துக் கொண்டிந்தன. நாட்டைக்குறிஞ்சியின் மென் பிரயோகங்கள் அழுந்திவிடக் கூடாது என்று சிரத்தை எடுத்து மிருதங்கத்தின் ஒலி அளவை மட்டுப்படுத்தி வாசித்துக் கொண்டிருந்தார் நடேசன். நடேசனின் நடைச் சொற்களைக் கேட்க வேண்டுமென்பதற்காகவே சில சதுஸ்ரங்களை மௌனங்களாக்கிக் கொண்டார் வைத்தியநாதன்.
கேட்டுக் கொண்டிருந்த ரகுராமன் காதுகளிலோ அந்த மென் முழுக்கம் தவிர வேறொன்றுமே ஏறவில்லை. வலது கால் பெருவிரல் சதுஸ்ர கதியில் மேலும் கீழுமாக தரையில் மெதுவாக மோதியபடி இருந்தது. அவர் கண்கள் மீண்டும் மூடின.
நடேசண்ணா அடிக்கடி சொல்வது ரகுராமனுக்கு நினைவுக்கு வந்தது.
’ரகு! வாசிக்கறதுல முதல் படி என்ன தெரியுமா? எந்த இடத்துக்கு எந்த சொல்லு பொருத்தமில்லைனு தெரிஞ்சு அதை வாசிக்காம இருக்கணும். ரெண்டாவது படி எந்தச் சொல்லை வாசிக்கணும்னு தெரிஞ்சு வாசிக்கணும். இது ரெண்டைவிட முக்கியமான ஒரு படி இருக்கு. அது வாசிக்கற சொல்லை எப்படி வாசிக்கணும்னு தெரிஞ்சு வாசிக்கணும்.’
‘தெரிஞ்சு’ என்கிற வார்த்தையில் அவர் அழுத்தியது ஓர் அலையாய் மனத்தில் வந்து அடித்தது.
’இந்தத் தானத்தில் அப்படி என்ன வாசித்துவிட்டார் நடேசண்ணா? ஒரு மோராகூட வைக்கலை. வைத்தாண்ணாவின் போக்குக்கு தன் வாத்தியத்தில் கால்பிரமாணம் கெடாமல் நடையை மட்டும்தானே வாசிக்கிறார். ஒவ்வொரு சொல்லையின் மந்திரம் போட்டது போல வாசிக்க அவரால எப்படி முடியறது?’ என்று நினைக்கும் போதே ‘தெரிஞ்சு’ என்று அவர் அழுத்திச் சொன்னக் குரல் மீண்டும் காதில் கேட்க சிரித்துக் கொண்டார் ரகுராமன்.
’அம்ப பாஹி’
கீர்த்தனை தொடங்கியது.
திஸ்ர திரிபுடையில் மோதிர விரலில் ‘பாஹி’ எடுப்பு. காலபிரமாணத்தை கவ்வியதைக் காட்டும் வகையில் பாஹி என்றதும் லகு முடிந்து திருதம் தொடங்கும் போது இம்மி பிசகாமல் நடேசப் பிள்ளையின் வலந்தலையில் பளீரென்று ஒலித்தது அரைச்சாப்பு.
ரகுராமனுக்கு மின்சாரத்தைத் தொட்டது போன்ற உணர்வு. சட்டென்று எழுந்து பதிவை நிறுத்திவிட்டார்.
‘பத்மநாபன்! என்னப்பா ரெக்கார்டிங் இது. அமிர்தம்னாலும் ஒரு அளவு வேண்டாமா? அந்தச் சாப்பை மட்டும் இன்னு ரெண்டாயிரம் தடவை கேட்காம என்னால் அடுத்த சங்கதிக்குப் போக முடியாது.’
பத்மநாபன் புன்னகையுடன் எழுந்திருந்தார்.
‘நீங்கப் பொறுமையாக் கேளுங்கோ. அணு அணுவா ரசிக்க வேண்டிய பதிவு. உங்கக் கிட்ட சேர்த்தாச்சு. என் கடமை ஓஞ்சுது’.
பத்மநாபன் அறையைவிட்டு வெளியே போக காலடி வைத்துவிட்டு, எதையோ மறந்ததுபோல திரும்ப நுழைந்தார்.
‘அனேகமா எல்லாரும் இந்தக் கிருதியை மிஸ்ர சாபுலதான் பாடறா. கணக்குனு பார்த்தா மிஸ்ர சாபுக்கும் ஏழுதான்; திஸ்ர திரிபுடைக்கும் ஏழுதான். ஆனாலும் ரெண்டும் ஒண்ணில்லையோனோ? மான் மாதிரி துள்ளற மிஸ்ர சாபு கிருதியை நல்ல அலங்காரம் பண்ணின மத்தகஜமா மாத்திடறதோன்னோ திஸ்ர திரிபுடைக் காலபிரமாணம்! நீங்களும் நிறைய நவராத்ரி மண்டபத்துல வாசிச்சு இருக்கேள். இந்த நாட்டைக்குறிஞ்சிக்கும் வாசிச்சு இருப்பேள். திஸ்ர திரிபுடைல வாசிச்சு இருக்கேளா?”
ரகுராமனால் எதுவும் பதில் சொல்ல முடியவில்லை. தலையை மட்டும் இல்லையென்று ஆட்டினார்.
பத்மநாபன் போனதும் பதிவை மீண்டும் ஒலிக்கவிட்டார் ரகுராமன்.
‘அம்ப பாஹி’ – அரைச் சாப்பு. கூடவே, ‘திஸ்ர திரிபுடைல வாசிச்சு இருக்கேளா?’, பத்மநாபனின் கேள்வியும் சேர்ந்தே ஒலித்தது.
இந்த முறை சாபுவிற்குப் பின் நிறுத்தத் தோன்றவில்லை. நாட்டைக்குறிஞ்சியும் திஸ்ர திரிபுடையும் மனத்தில் விழுந்தாலும் கூடவே பத்மநாபனின் கேள்வியும் மீண்டும் மீண்டும் ஒலித்து கவனத்தைச் சிதற வைத்தது.
அனுபல்லவியில் வைத்தியநாதன், ‘தேஹி’ என்று குழைந்த போது ’எனக்கும் கொடம்மா’ என்று அம்பிகையை இறைஞ்ச வேண்டும் போல ரகுராமனுக்குத் தோன்றியது.
’கமனீயதாமரூபே’
அம்மையின் பேரிழில்!
குறிலும் நெடிலும் மாறி மாறி கலந்து வரும் கமனீயம்! நிரவலுக்கு வேறென்ன வேண்டும்?
வைத்தாண்ணா ஒவ்வொரு ஸ்வரமாய் கார்வையால் இழைத்துத் தள்ளிக் கொண்டிருந்தார். இன்னும் இன்னும் என்று நடேசப் பிள்ளையின் நாதம் அவரை எக்கிக் கொண்டிருந்தது.
ஒவ்வொருமுறை வயலினுக்கு நிரவல் வாசிக்க விடும் முன்பு, ‘க ம நீய’ என்று அருதியை வைத்தாண்ணா பாடும் போதும் நடேசப் பிள்ளை மூன்று அரைச் சாப்புகளை ஒத்து வாசித்து நிறுத்தும் போதெல்லாம் பத்மநாபனின் கேள்வியும் கூடவே ஒலித்தது.
சில ஆவர்த்தங்களில் பொறுக்க முடியாமல் த்ருதத்தில் நடேசண்ணாவின் அருதியில் பதிவை நிறுத்திவிட்டார் ரகுராமன்.
வாத்தியத்தை எடுத்துக் கொண்டு தரையில் அமர்ந்துகொண்டார். வைத்தாண்ணாவின் கால்பிரமாணத்தை மனத்தில் ஒரு ஆவர்த்தம் ஓட்டியபின்
’தத் தின் தின்னா….
தின் தின்னா….
தத தின் தின்னா…
தின் தின்னா’
ஒரு சில ஆவர்த்தங்கள் போனதும் நாட்டைக்குறிஞ்சியை மனத்தில் ஓட்ட ஆரம்பித்தார்.
வைத்தா அண்ணா சொல்லுவார், “நாம ஏதோ தாளத்துக்கு வாசிக்கறோம்னு நினைச்சுக்கக் கூடாது. அப்புறம் வாய்ப்பாடு ஒப்பிக்கறா மாதிரி சொல்லு வந்து விழும். பாடற கீர்த்தனையைப் புரிஞ்சு, அதோட நீக்குப் போக்கு தெரிஞ்சு வாசிக்கணும். கச்சேரி வாசிக்க ஆரம்பிச்சதும் நிறைய வாசிக்க வாசிக்க அது அனுபவத்துல வந்துடும். அதுக்கு மேல ஒண்ணு இருக்கு. சங்கீதத்துக்கு வாசிக்கணும். ‘அம்ப காமாக்ஷி’ ஆஸு தெரிஞ்சா குறையில்லாம வாசிக்கலாம். ஆனால் பைரவி தெரிஞ்சா இன்னும் நிறைவா வாசிக்கலாம். பாடறவனை விட கூட வாசிக்கறவனுக்கு இன்னும் பாட்டு தெரியணும்.’
சஞ்சாரங்களுக்கு ஏற்றபடி குழைவுகளை தன் வாத்தியத்தில் கொடுக்க ஆரம்பித்தார். அரைச் சாப்புக்கு சுண்டுவிரலை உயர்த்தும் போதெல்லாம் பத்மநாபன் கேட்டது நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது. அந்தக் கேள்வியை மனத்திலிருந்து வெளியில் தள்ளி வாசிப்பில் மனத்தை குவிக்க முயன்று கொண்டிருந்தார் ரகுராமன்.
பத்து நிமிடங்களாகியும் அவர் நினைத்த லயிப்பு கைகூடவில்லை.
அவருக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது.
மோராக் கோர்வை வாசித்து வாத்தியத்தை நிமிர்த்தி வைத்தார்.
எழுந்து சென்று தன் செல்போனை எடுத்து செம்பூர் ராஜகோபாலனை அழைத்தார்.
”ராஜு! சௌக்யமா?”
”உங்க ஆசிர்வாதம். நீங்களா கூப்பிடவே மாட்டேளே…சொல்லுங்கோ மாமா…”
“செம்பூருக்கு வந்து கச்சேரி பண்ணனும்னு சொன்னியே”
“ஆமாம் மாமா. நானே சொல்லணும்னு இருந்தேன். ரெண்டு மிருதங்க வித்வானுக்கு அவார்ட் கொடுக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கோம். அப்படிச் செஞ்சா ரெண்டு கச்சேரி வெச்சுடலாம். அனந்தராமன் சார் வயலின் சோலோவுக்கு நீங்க வாசிச்சுடுங்கோ. பி.கே.வி மாமா கச்சேரிக்கு இன்னொரு மிருதங்க வித்வானைப் போட்டுடலாம். இன்னும் யாருக்கு அவார்ட்னு முடிவு பண்ணலை…”
“மிருதங்கத்துக்கு ரெண்டு அவார்ட் நல்ல விஷயம்தான். ஆனால் எனக்கு சோலோ கச்சேரி வேண்டாம்”
ராஜகோபாலனுக்கு கோபம் தலைக்கேறியது.
“நீங்க பிடிவாதம் பிடிக்கறேள். சரி, நீங்க கச்சேரி வாசிக்கலைன்னாலும் பரவா…”
“இருப்பா, அவசரப்படாத..”
“…”
“நான் சோலோ கச்சேரிதானே வேண்டாம்னு சொன்னேன். கச்சேரியே வேண்டாம்னா சொன்னேன்? பி.கே.வி-க்கே வாசிச்சுடறேன்னு சொல்றதுக்குள்ள அவசரப்படறையே…”
“ஆஹா! நான் காணறது கனவில்லையே!”
“நிச்சயமா இல்லை.”
“ரொம்ப சந்தோஷம். எவ்வளவு சந்தோஷம்னு சொல்ல முடியாத சந்தோஷம் மாமா”
“சரி, முழுசாக் கேளு, எனக்கு ஒரு கண்டிஷன்?”
“என்ன வேணும்னாலும் சொல்லுங்கோ மாமா”
“கச்சேரியில மெயினா நாட்டைக்குறிஞ்சி பாடணும். ஸ்வாதி திருநாளோட நவராத்ரி கிருதியை மெயினாப் பாடணும்.”
“அதுக்கென்ன, பி.கே.வி மாமா கிட்ட இப்பவே சொல்லிடறேன்.”
“ரொம்ப சந்தோஷம், வெச்சுடட்டுமா?”
“மாமா..”
“?”
“நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து கச்சேரி பண்ணி பல வருஷமாச்சு. எத்தனையோ பேர் சொல்லியும் நீங்கக் கேட்கலை. நான் போன தடவை பேசின போது முடியவே முடியாதுனுட்டேள். இப்ப எப்படி..”
“ராஜு! வித்வான்களுக்குள்ள சண்டையெல்லாம் வரும். அதை எப்ப வேணும்னாலும் போட்டுக்கலாம். அந்தச் சண்டையை விட சங்கீதம் பெருசு. ”
“எனக்குப் புரியலையே மாமா”
“விசு கிட்ட பேசும் போது ‘ரகுராமனுக்கு சண்டையை விட திஸ்ர திரிபுடை பெருசு’னு சொன்னார்னு சொல்லு.”
புரிந்தும் புரியாமலும் குதூகலமாய் இணைப்பைத் துண்டித்தார் ராஜகோபாலன்.
Discover more from சொல்வனம் | இதழ் 368 | 14 ஜூன் 2026
Subscribe to get the latest posts sent to your email.
