பால் மாறிய பாறைகள்

1) ஒப்பந்தம்

ஒரு ஒப்பந்தம் போட்டு
இடது கை வலது கையாக
இருந்து பார்த்தது
பிறகுதான் நினைத்துக் கொண்டது
நம் பிழைப்பே தேவலை என்று
இடது கையாக மாறி இருந்த
வலது கையோ
தனது விரல்களை
பூவிதழ்கள் போல் விரித்து விரித்து
அழகு பார்த்துக் கொண்டது


2) சந்திப்பு

நாங்கள் நிஜத்தில்
அவ்வளவாக சந்தித்துக் கொள்வதில்லை
கனவுக்குள்ளந்த கட்டுப்பாடில்லை
ஒன்று என் கனவுக்குள்
அவன் வந்து விடுகிறான்
அல்லது
அவன் கனவுக்குள்
நான் சென்று விடுகிறேன்
கனவுக்குள் எப்போதும்
ஒன்றாக இருந்தே பழகிவிட்டதால்
எப்போதாவது நாங்கள்
நிஜத்தில் சந்திக்கும்போதும்
அது கனவு போலவே இருக்கிறது


3) பாறைகளின் சொர்க்கம்

இரவு முழுவதும் சுத்தியலின் பாடலை
கேட்டுக்கொண்டே உறங்கி விட்டது
பால்பேதமற்ற பாறை
விழித்த போது
நானொரு அழகிய யுவதியாக
மாறி இருப்பது கண்டு திகைத்தது
தனது பால் அடையாளங்களை
அதனால் சகித்துக் கொள்ள முடியவில்லை
அதன் புலம்பலை மற்ற பாறைகள்
செவிமடுப்பதற்கு முன்பே
நகராட்சி பூங்கா ஊழியர்கள்
வண்டியோடு வந்துவிட்டார்கள்
கண்களால் விடை பெற்றுச் சென்ற
கனத்த நெஞ்சுடைய யுவதியிடம்
துறவிப்பாறை சொல்லியது
பாலற்ற ஒரு மனித உயிர்
உன்னை கண்களால் தழுவும் போது
உன் பெண்மையை
நீ அதற்கு வழங்கி விடு
அதுவே உனக்கு பாவ விமோசனம்
பிறகு தனித்து தவமிருந்து
மீண்டும் பாறைகளின் சொர்க்கத்திற்கு
வந்து சேர்வாய் என ஆசீர்வதித்தது


4) டிக் டிக்குகளின் வரிசை

ஒன்றை ஒன்று தொடாமல்
ஊர்ந்து செல்லும்
கடிகாரத்தின் டிக்டிக்குகளைப் போல
அருகருகே படுத்துக் கிடக்கிறோம்
ஒருவரை ஒருவர்
தொட்டணைத்துக் கொள்ளும் போது
டிக் டிக்குகள் குழம்பி விடும்
இன்பத்தின் காற்றில்
மனதின் மணிக்கதவம்
துடிப்பதும் நீடிக்கும்
பிறகு எதுவுமே நடவாததுபோல்
எங்கள் தளர்ந்த உடல்களின் மீதேறி
மீண்டும் அமைதியாக
நகர்ந்து கொண்டேயிருக்கும்
டிக் டிக் களின் இந்த செவ்வரிசை


5) அவலச் சுவை

சிஸ்கின்ஸ் பறவையின்
அழகிய கோப்பை வடிவக் கூடு
பைன் மரத்திலிருந்து
காற்றில் நழுவி
கீழே விழுந்து விட்டது
எடையின்மையின் துயரம்
மனதை உடைத்திட
தாமிர வயல்களில் மலரும்
எஃகு பூக்களை
அசைத்துக் கொண்டிருக்கக் கடவது
என்று காற்றை சாபமிடுகின்றன
சலசலக்கும் இலைகள்
சிவப்பு கழுத்து
மரங்கொத்திக்கு பயந்து
மரப்பட்டைகளில் ஒளிந்து
கொண்டிருக்கும்
லார்வாக்களின்
கண்களிலும் கண்ணீர்
நீண்ட தூரத்திலிருந்து
மரத்தை நோக்கி
பறந்து வருகிறது அந்த பறவை
தூரம் குறையக்குறைய
துயரம் கூடுகிறது மரத்துக்கு
அவலச் சுவை மிகுந்த
இந்த கவிதையில்
பறவையின் பயண தூரத்தை
முடியாது பெருகச் செய்யும்
வார்த்தை யொன்றுமில்லை
என்பதுதான்
ஆகப் பெருந்துயரம்


6) சூடான சம்பவங்கள்

காலத்தை முந்தி செல்லும் மனிதன் நான்
என் வேகத்தின் மேல் பொறாமை கொண்டு
என்னை சபித்து விட்டது காலம்
என் கால்கள் சிலைத்து விட்டன
என்னால் நகர முடியவில்லை
சம்பவங்கள் வரலாறுகளாக மாறி
அதன் வறண்ட சருமத்தால்
என்னை உரசி சொல்வதை
என்னால் பொறுக்க முடியவில்லை
இருவரும் இணைந்து செல்வோம் என்று
காலத்தோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டேன்
ஒரு நிமிடத்திற்கும்
இன்னொரு நிமிடத்துக்கும் இடையில் உள்ள
கண்ணுக்கு தெரியாத இடைவெளியில்
எப்படி பதுங்கி நடப்பது என்பதை
காலம் எனக்கு கற்றுக் கொடுத்தது
எனது இடது கை விரல்களில்
தனது வலது கை விரல்களை நுழைத்து
பிணைந்துக் கொண்டது
விரல்களின் கதகதப்பில்
சம்பவங்கள் சூடேறத் தொடங்கின


Discover more from சொல்வனம் | இதழ் 368 | 14 ஜூன் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.