பூட்டும் பாலையும் 

காத்தலின் மடமை

ஒவ்வொரு முறை கடக்கும்பொழுதும்
திரும்பிப் பார்க்கும்
அந்த வீட்டின் பூட்டு
திறக்க சாத்தியமற்றதாக
மண்டிக் கிடக்கிறது
துயரங்கள் நாலாபுறமும்.

உள் நுழையும்
சாவியால்
உருவாகியக் கிளர்ச்சி
தள்ளாத நாளில்
அதனிடம்
தங்கி இருக்குமா
தனிமைகள் போக்கும்
ஒத்தடமாக.

பிரிந்து கிடக்கும்
சாவிக்கு
பேச்சுத் துணைக்கு
ஆளிருக்கும்
இணைப்பு வளையத்திற்குள்
இருட்டறையில்
சிறைபட்டிருந்தாலும்.

கைககளின் கடைசி ஸ்பரிசம்
கண்டபொழுதின்
திறக்காத
வேதனைக் கறைகள்
திட்டுத் திட்டாக தெரிகிறது
பூட்டில் அவலமாக.

துயரத்தைப் பாதுகாத்து
யாரிடம்
கையளிக்கக் காத்திருக்கிறது
இந்தப் பூட்டென
அறியும் ஆவலில்
அனிச்சையாக திரும்புகிறது
என் பார்வைகள்
எப்பொழுதும்.

வீடடைத்த வெறுப்புக்கதைகளில்
வெல்லும் நீதி
யாருக்காவது கிடைக்கட்டும்
நாளைய வெறுமையில்.

பூட்டையும் சாவியையும்
பிரித்ததற்கு
கிடைத்தத் தண்டனைதான்
இந்நரகமென
யார்
அவர்களிடம் சொல்வது
இப்பொழுது.


இணைவின் ஒன்று கூடாமை

பிரிதலில் ஒளிந்திருக்கும்
இயலாமை.
பண மீட்டும் காரணத்தில்
பதுங்க முயல்கிறது
ஒன்றாகாமல் இரண்டாய்.

சேமிப்புக் கணக்குகளில்
மாறிக் கொண்டிருக்கும்
எண்கள்
மகத்தான மாறுதலைத் தருமென நம்புகிறது
மனம்
வாரிசு வந்த பின்னும்
வருந்தி.

ஒன்று கூடிய
ஒரு சில மணித்தியாளங்களில்
உருவாகிவிடும்
புகைச்சல்
எதன் சிக்கி முக்கியென
அறிவதைத் தவிர்த்து
முடிந்த மட்டும்
முகத்தை ஓட்டிற்குள்
உள்ளிழுக்கப் பழக்கி இருக்கிறது
வாழ்க்கை
ஏற்கும் துயரில்.

கவனிக்கும்
விடலைகளுக்கு
அவசரப் படத் தோன்றும்
சக இணைக்கான தேடலில்
புறத்தில் வசீகரிக்கும்
எங்கள்
வாழ்க்கையைப் பார்த்து
ஏங்கி.

போகப் போகச் சரியாகிவிடுமென்ற
நதியோட்டம்
கடலைக் காணாமல்
பாலையில் ஓடுகிறது
நீர் இருப்பதான பாவனையில்
எப்பொழுதும்.


Discover more from சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.