பில்லியன் நிழல்கள்

(1)

கேப் காட் கடற்கரையில் நின்றிருந்த நிக்கிற்கு, அட்லாண்டிக் பெருங்கடலின் அலைகள் வேறொரு அந்நிய மொழியில் பேசுவது போல் தோன்றின. பிப்ரவரி மாதத்தின் ஊசி முனைக்காற்று முகத்தில் அறைந்தது. அந்தக் குளிர் அவனது உடலை மட்டும் நடுங்கச் செய்யவில்லை; அவனுள் ஆழமாக உறைந்து கிடந்த ஏதோ ஒன்றை மெல்லக் கிளறிவிட்டது. அலைகள் கரையை நெருங்கும்போது, அவை வெறும் இரைச்சலாக ஒலிக்கவில்லை. ஒவ்வொரு அலையும் மணற்பரப்பில் மோதுவதும், ஒரு கணம் நிலைத்து நிற்பதும், பின் மறைவதுமாக இருந்தது. அது மறைவா? இல்லை சிதைவா? நிக் தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டான்.

அவன் இங்கே வந்தது யாரிடமும் உரையாடுவதற்காக அல்ல. கடந்த ஒரு வாரமாக அவனது நினைவுகள் அவனது கட்டுப்பாட்டில் இல்லை. காலையில் கண் விழிக்கும்போது, அன்றைய பொழுதை ஏற்கனவே வாழ்ந்து முடித்துவிட்டதான ஒரு பிரமை அவனுக்குள் எழும். உணவு உண்ட நினைவு இருக்கும், ஆனால் வயிற்றில் பசி. யாரிடமோ தொலைபேசியில் நீண்ட நேரம் பேசியதாக ஞாபகம் இருக்கும், ஆனால் அழைப்புப் பட்டியலில் அதற்கான தடையமே இருக்காது. ஒரு பெண்ணுடன் உணவகத்தில் அமர்ந்து சிரித்துப் பேசிய நினைவு மட்டும் நிழலாடும், ஆனால் அவள் யார்? அவள் முகம் எப்படி இருக்கும்? எதுவுமே பிடிபடவில்லை.

நேற்று மாலை, பாஸ்டன் நகரின் சம்மர் வீதியில் நடந்தபோது, திடீரென்று அவன் சான் பிரான்சிஸ்கோவின் கோல்டன் கேட் பாலத்தின் கம்பியை தொட்டுக்கொண்டிருந்தான். ஒரு வினாடி மட்டுமே. ஆனால் அந்த ஒரு வினாடியில், அங்கிருந்த உப்புக்காற்று, வெதுவெதுப்பான சூரியன், கைகளில் பட்ட குளிர்ந்த உலோகம், எல்லாமே உண்மையாக இருந்தது. அடுத்த கண் சிமிட்டலில் பாஸ்டனின் பனிக்காற்றில் மீண்டும் நின்றான். ஆனால் உள்ளங்கையில் அந்த உலோக உணர்வு இன்னும் மங்காமல் இருந்தது.

“நிக்! இங்கே என்ன செய்கிறாய்?” என்ற குரல் பனிக்காற்றை துளைத்துக்கொண்டு வந்தது.

நிக் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். அங்கே எமிலி நின்றிருந்தாள். எம்.ஐ.டி ஆய்வகத்தில் அவனது சக ஆராய்ச்சியாளர். அவளது கம்பளிக் கோட் கடற்பனியில் நனைந்திருந்தது. உறையும் குளிரால் சிவந்திருந்த கன்னங்களுக்கு இடையே, அவள் விடும் மூச்சுக்காற்று வெண்ணிற ஆவியாக வெளிப்பட்டது. அவளது பார்வையில் கவலை தென்படவில்லை. மாறாக, ஆழமான பயம் அங்கே வேரூன்றி இருந்தது. குளிரால் உடல் நடுங்கியதா அல்லது அந்தப் பயத்தினால் நடுங்கியதா என்று அவனால் பிரித்தறிய முடியவில்லை

“எமிலி? நீ இங்கே எப்படி?” என்று தடுமாற்றத்துடன் கேட்டான்.

“என்ன நிக்? ஒரு மணி நேரத்திற்கு முன்புதானே லேப்பில் அலைச்சார்பு சோதனையை தொடங்கினோம். நீ திடீரென்று  யதார்த்தம் போலியானது என்று சொல்லிக்கொண்டு வெளியே ஓடி வந்தாய். உன்னை தேடி இங்கே வந்தேன்.”

நிக்கின் கண்கள் விரிந்தன. “ஒரு மணி நேரத்திற்கு முன்பா? எமிலி, என் நினைவில் கடந்த ஒரு வாரமாக நாம் சந்திக்கவே இல்லை. நான் தனியாக ஒரு ஹோட்டலில் தங்கியிருப்பதாக நினைவு ஆனால் அதே நேரத்தில், நீ சொல்வதுபோல் லேப்பில் இருந்ததும் ஒரு நிழலைப்போல் மனதில் ஆடுகிறது. இரண்டும் ஒரே நேரத்தில் உண்மையாக தோன்றுகின்றன.”

நிக் தன் கைகளை பார்த்தான். அவனது விரல்களின் விளிம்புகள் கூர்மையாக இல்லை. சுற்றியிருந்த காற்றுடன் கலந்துபோவதுபோல் மங்கலாக இருந்தன. அவன் கையை நகர்த்தும்போது, மங்கலான நிழல் ஒரு நொடி தாமதித்து பின்தொடர்வதுபோல் தெரிந்தது.

“எமிலி, அலைகளை பார்,” என்று கடலை சுட்டிக்காட்டினான்.

அலைகள் கரையை தொடும்போது, நீர் நீராக இல்லாமல், சில மெல்லிய ஒளிக்கீற்றுகளாக சிதைந்து, பிறகு மீண்டும் திரவமாக மாறுவதுபோல் இருந்தன. நீர் ஒளியாவதும், ஒளி நீராவதும் இயற்கை விதிக்கு முரண்பட்டது. ஆனால் அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர்.

எமிலியின் முகத்தில் அச்சம் படர்ந்தது. “இது சாத்தியமில்லை, நிக். நம்முடைய சோதனை இவ்வளவு பெரிய அளவில் பாதிக்கக் கூடாது. குவாண்டம் விளைவுகள் அணுத்துகள் அளவில்தான் நடக்கும்,  நாம் பார்க்கும் உலகில் அல்ல.”

“நாம் அந்த எல்லையை கடந்துவிட்டோம் என்று நினைக்கிறேன்,” என்றான் நிக் மெதுவாக.

“ஷ்ரோடிங்கரின் பூனை பெட்டிக்குள் உயிரோடும் இருக்கும், பிணமாகவும் இருக்கும். அதுபோல் நான் இப்போது இங்கேயும் இருக்கிறேன், வேறொரு இடத்திலும் இருக்கிறேன். நம் ஆய்வு வெறும் துகள்களை மட்டும் பாதிக்கவில்லை எமிலி அது மிகப் பெரியதை தொட்டுவிட்டது.” எமிலி அவனைத் தொடுவதற்காகத் தன் கையை நீட்டினாள், ஆனால் சில அங்குல இடைவெளியில் சட்டென நிறுத்திக்கொண்டாள். ஏதோ ஒரு தயக்கம் அல்லது கண்ணுக்குத் தெரியாத ஒரு தடுப்பு அவளைத் தடுத்தது.

“நிக், நாம் உடனடியாகத் திரும்ப வேண்டும். என்ன நடந்தாலும் சரி, ஆய்வகத்தில் மட்டும்தான் இதற்கான விடை இருக்கும்,” என்று பதற்றத்துடன் கூறினாள்.

நிக் கடலை பார்த்தான். ஒவ்வொரு அலையும் வெவ்வேறு நிறத்தில் தெரிந்தன. ஒன்று பச்சை, ஒன்று ஊதா, ஒன்று கருப்பு. அவன் எமிலியின் கையை பிடித்தான். அந்த தொடுதல் உண்மையானதாக இருந்தது, ஆனால் ஒரே நேரத்தில் மாயைபோலவும் உணர்ந்தான். 

“செல்வோம்,” என்றான்.

(2)

பேராசிரியர் சந்திரசேகரின் அறை பாஸ்டனின் குளிரிலும், கலிபோர்னியாவின் வெயிலிலும் ஒரே நேரத்தில் இருப்பதுபோல் தோன்றியது. அறையின் இடது ஜன்னல் வழியே பனிப்பொழிவு தெரிந்தது, வலது ஜன்னல் வழியே பனை மரங்கள். அந்த இரண்டு காட்சிகளும் ஒரே சட்டத்தில் அமர்ந்திருந்தன ஒன்றை ஒன்று விலக்காமல், இரண்டும் சேர்ந்து. கூர்மையான பிளவு. இரண்டு யதார்த்தங்கள் ஒரே இடத்தில்.

மேசையில் இருந்த புத்தகங்கள் இரண்டு நிலைகளில் தெரிந்தன.  ஒரு நிலையில் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தன, மறுநிலையில் சிதறிக் கிடந்தன. அவன் கண்களை இறுக்க மூடி மீண்டும் திறந்தான். இரட்டை பார்வை மறையவில்லை.

“சார், என் கண்களுக்கு இரண்டு இடங்கள் தெரிகின்றன. நீங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே ஜன்னல் வழியாகப் பனிப்பொழிவைப் பார்க்கிறேன்; அதே நேரத்தில் பனை மரங்களையும் பார்க்கிறேன்,” என்றான் நிக். அவனது குரலில் குழப்பம் மேலோங்கியிருந்தது.

பேராசிரியர் சந்திரசேகர் தனது தடிமனான கண்ணாடி வழியே அவனை உற்றுப் பார்த்தார். அந்தப் பார்வையில் கவலையும் ஆர்வமும் கலந்திருந்தது, ஆனால் ஆச்சரியம் ஏதுமில்லை. அவர் இதை ஏற்கனவே எதிர்பார்த்திருந்தது போல் தோன்றியது. முதிர்ந்த மரத்தின் பட்டை போன்ற சுருக்கங்கள் அவர் முகத்தில் படர்ந்திருந்தாலும், கண்கள் இன்னும் தீட்சண்யமாக இருந்தன.

“நிக், உன் மூளை இப்போது ஒரு குறிப்பிட்ட முடிவை எடுக்க மறுக்கிறது,” என்றார் பேராசிரியர் மெதுவாக, ஒவ்வொரு வார்த்தையையும் எடைபோட்டு. “சாதாரணமாக, நமது உணர்வு நிலை கோடிக்கணக்கான சாத்தியக்கூறுகளை ஒரு கணத்தில் வடிகட்டி, ஒரே ஒரு யதார்த்தத்தை மட்டும் உருவாக்குகிறது. கண் திறந்ததும் நாம் “இங்கே இருக்கிறோம்” என்று உணர்கிறோம். அந்த வடிகட்டுதல் நிகழவில்லை என்றால், எல்லா சாத்தியக்கூறுகளும் ஒரே நேரத்தில் காட்சி தரும். அதுதான் இப்போது உன் நிலை.

“அதாவது நான் ஒரே நேரத்தில் பல இடங்களில் இருக்கிறேன் என்று சொல்கிறீர்களா?” 

நிக்கின் குரலில் ஓர் இருத்தலியல் அச்சம் நடுக்கமாய் வெளிப்பட்டது.

“சரியாகச் சொன்னாய்,” என்றபடி பேராசிரியர் கரும்பலகையை நோக்கி நடந்தார்.  “ஒரு துகள் ‘A’ இடத்திலிருந்து ‘B’ இடத்திற்குச் செல்லும்போது, அது நேர்க்கோட்டில் மட்டும் செல்வதில்லை. அது ஒரே நேரத்தில் சாத்தியமான எல்லாப் பாதைகளிலும் பயணிக்கிறது. ரிச்சர்ட் ஃபைன்மேன்  இதைத் தர்க்கரீதியாக நிரூபித்தார். அந்த அனைத்துப் பாதைகளின் கூட்டுத்தொகையே அந்தத் துகளின் இறுதி நிலை. நீயும் இப்போது அப்படித்தான் இருக்கிறாய்  பல இடங்களில், பல நிலைகளில், ஒரே நேரத்தில்.”

நிக் அந்தக் கருத்தை ஜீரணிக்க முயன்றான். “இதை எப்படிச் சரி செய்வது?”

பேராசிரியர் கரும்பலகையிலிருந்து திரும்பினார். அவரது முகத்தில் கவலை, நம்பிக்கை, பயம் என அனைத்தும் கலந்த ஒரு சிக்கலான உணர்வு நிலவியது. “குவாண்டம் இயக்கவியலின்படி, ஒரு அமைப்பை அதன் பழைய நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றால், இடையில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்த அத்தனைத் தகவல்களையும் நாம் அழிக்க வேண்டும். தகவல் எஞ்சி இருக்கும் வரை, அந்த மாற்றமும் நிலைத்திருக்கும். அந்தத் தகவலை முழுமையாகத் துடைத்தெறிந்தால், அந்த அமைப்பு தானாகவே தனது ஆரம்ப நிலைக்குத் திரும்பக்கூடும்.”

“அப்படியென்றால்…” நிக் மெதுவாகச் சொன்னான், அவனது குரல் கம்மியது. “நான் பார்த்தவை, அனுபவித்தவை என அத்தனை நினைவுகளையும் நான் அழிக்க வேண்டுமா?”

“ஆம்,” என்றார் பேராசிரியர் அழுத்தமாக. 

“உன் நினைவுகளை மட்டுமல்ல… உன் அடையாளத்தின் ஒரு பகுதியையே நீ இழக்க வேண்டியிருக்கும்.”

அறையில் நிசப்தம் சூழ்ந்தது. ஜன்னலில் பனியும் பனை மரங்களும் இன்னும் இணைந்து இருந்தன. நிக் ஒரு தேர்வை எதிர்கொண்டான். ஆனால் அது இன்னும் தொலைவில் இருந்தது இன்னும் பல கேள்விகள் மீதி இருந்தன.

                                   (3)

பேராசிரியர் சொன்ன வார்த்தைகள் நிக்கின் காதுகளில் ஆழமாய் இறங்கின. “உன் நினைவுகளை அழிக்க வேண்டும்”  அந்த வாக்கியம் அவனது மனதில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது. “நினைவுகள் இல்லாமல் நான் யார்?” என்ற கேள்வி உள்ளத்தின் ஆழத்திலிருந்து மேலெழுந்தது. அது தத்துவக் கேள்வியல்ல; தன்னைத் தொலைத்துவிடுவோமோ என்ற உண்மையான இருத்தலியல் அச்சம்.

அவன் தன் கைகளைப் பார்த்தான். ஒரு கணம் அவை திடமாகத் தெரிந்தன. தோலின் சுருக்கங்கள், நகங்களின் விளிம்புகள், விரல்களின் ரேகைகள் என அனைத்தும் தெளிவாய் இருந்தன. ஆனால் அடுத்த கணம், விரல்களின் எல்லைகள் மங்கின; சுற்றியுள்ள காற்றுடன் கலந்து போவது போல் தோன்றியது. வலது கையால் இடது கையைத் தொட முயன்றான். சில நேரங்களில் பிடிமானம் இருந்தது; சில நேரங்களில் மெல்லிய உணர்வு மட்டுமே மிஞ்சியது.

“சார், அப்படியென்றால் நான் இப்போது மனிதன் இல்லையா? வெறும் சாத்தியக்கூறு மட்டும்தானா?” நிக்கின் குரல் நடுங்கியது.

பேராசிரியர் சந்திரசேகர் அவனைப் பரிவுடன் பார்த்தார். “நீ இன்னும் மனிதன்தான் நிக். உன் உணர்வு, நினைவுகள், அச்சம் என அனைத்தும் அப்படியே இருக்கின்றன. அந்த அச்சமே உன்னை இன்னும் மனிதனாக வைத்திருக்கிறது.”

அப்போது, அறையிலிருந்த அந்தப் பழமையான பித்தளைக் கடிகாரம் விசித்திரமாகச் செயல்படத் தொடங்கியது. நிமிட முள் வினாடிக்கு ஒரு மணிநேரம் என்ற வேகத்தில் சுழன்றது. கடிகாரம் நேரத்தை விழுங்கியது. பின் சட்டென நின்று, முட்கள் பின்னோக்கிப் பாய்ந்தன. நேரம் அவிழ்ந்துகொண்டே போனது. முன்னும் பின்னுமாக அலைபாய்ந்த அந்த முட்களால், காலம் என்ற கருத்தே அர்த்தமற்றதாக மாறியது.

சுவரிலிருந்த பேராசிரியரின் குடும்பப் புகைப்படம் நிலைமாறியது. ஒரு நொடி, பத்து வயதுச் சிறுவன்; மறுநொடி, எழுபது வயது முதியவர். அடுத்த நொடி, வெறும் காலியான சட்டகம். யாருமே இல்லாத ஒரு யதார்த்தம்.

“என்ன நடக்கிறது இங்கே?” நிக் அலறினான்.

“காலத்தின் திசை தொலைந்துவிட்டது நிக்,” என்றார் பேராசிரியர் அமைதியாக. “கடந்த காலம், எதிர்காலம், நிகழ்காலம் என அனைத்தும் இப்போது ஒரே புள்ளியில் குவிகின்றன.”

நிக் தன் உடலைப் பார்த்தான். அதுவும் மாறிக்கொண்டிருந்தது இளமையாகவும், முதுமையாகவும் ஒரே நேரத்தில். அவன் திசையற்ற கால நதியில் மிதக்கத் தொடங்கினான்.

                                           (4)

இரண்டு நாட்களுக்குப் பிறகு நிக்கும் எமிலியும் சுவிட்சர்லாந்தில் இருந்தனர். அந்த இரண்டு நாட்கள் அவர்களுக்கு இரண்டு வருடங்கள்போல் நீண்டன. விமானப் பயணத்தின்போது நிக்கிற்கு இரட்டைப் பார்வைகள் ஏற்பட்டன. சில நேரங்களில் விமானம் பாஸ்டனிலிருந்து பறப்பது போலவும், சில நேரங்களில் நியூயார்க்கிலிருந்து கிளம்பியது போலவும் தோன்றியது. இரண்டு முரணான நினைவுகளும் அவன் மனதில் ஒரே நேரத்தில் குடியேறியிருந்தன.

CERN வளாகம் பிரம்மாண்டமாக விரிந்திருந்தது. சுவிட்சர்லாந்தும் பிரான்சும் சந்திக்கும் எல்லையில் அமைந்திருக்கும் அந்த அறிவியல் கோட்டையின் ஜன்னல்களில், ஆல்ப்ஸ் மலைகளின் பனிச்சிகரங்கள் பிரதிபலித்தன. ஆனால், உண்மையான அற்புதம் நிலத்தடியில் 27 கிலோமீட்டர் நீளத்திற்குப் பரவியிருந்த அந்த வட்ட வடிவச் சுரங்கத்தில்தான் இருந்தது. அங்கே துகள்கள் ஒளியின் வேகத்திற்கு இணையாக மோதி, பிரபஞ்ச ரகசியங்களை அவிழ்த்துக் கொண்டிருந்தன. விபத்திற்குப் பிறகு இன்று அந்த இயந்திரம் மௌனமாகக் கிடந்தது.

டாக்டர் வெர்னா அவர்களை வரவேற்றாள். கருமையான தோல், நீண்ட கருப்பு முடி, வெள்ளை லேப் கோட் என முப்பதுகளின் தொடக்கத்தில் இருந்த அவளது கண்களில் தூக்கமில்லாத இரவுகளின் சோர்வு தெரிந்தது.

“நிக், எமிலி… உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி,” என்றாள் வெர்னா. ஆனால் அவள் குரலில் மகிழ்ச்சி துளியுமில்லை. அவள் கண்கள் நிக்கின் கைகளையும், அவனது விரல் நுனிகளையும் ஏதோ ஒரு பரிசோதனை செய்வது போல் உற்றுப் பார்த்தன. “உன் விரல்கள்… அவற்றின் விளிம்புகள்…” என்று அவள் இழுத்தாள்.

“ஆம், சில நேரங்களில் தெளிவாக இருக்கின்றன. சில நேரங்களில் மறைந்து விடுகின்றன,” என்றான் நிக்.

வெர்னா கவலையுடன் தலையசைத்தாள். “நிலைமை மிக மோசமாகிவிட்டது. நேற்று எங்கள் ஆய்வகத்திலிருந்து ஒரு விஞ்ஞானி காணாமல் போனார்.”

“காணாமல் போனாரா?” நிக் அதிர்ச்சியுடன் கேட்டான்.

“டாக்டர் மார்ட்டின் ஷ்மிட். நாங்கள் மூன்று பேர் அதே அறையில் இருந்தோம். அவர் கணினியில் தரவுகளை ஆய்வு செய்து கொண்டிருந்தபோதே, எங்கள் கண்கள் முன்பாகவே மங்கத் தொடங்கினார். உடல் வெளிறி, உருவம் தெளிவற்றது. ஐந்து வினாடிகள் அவர் முழுமையாக மறைந்து போனார். பிறகு மீண்டும் தோன்றினார், ஆனால்…” வெர்னா ஒரு கணம் நிறுத்தினாள்.

“ஆனால் என்ன?” எமிலி பதற்றமாகக் கேட்டாள்.

“அவருக்குத் தன்னை யாரென்று தெரியவில்லை. “நான் எங்கே இருக்கிறேன்? நீங்கள் யார்?” என்று ஒரு குழந்தையைப் போல் பயந்து கேட்டார். அவரது கடந்த கால நினைவுகள் அனைத்தும் துடைத்தெறியப்பட்டிருந்தன. மூளை இயல்பாக இருந்தாலும், அதில் தகவல்கள் எதுவுமே இல்லை.”

அவர்கள் பிரம்மாண்டமான ஆய்வகத்திற்குள் நுழைந்தனர். அங்கே கேபிள்களும், கணினித் திரைகளும் மின்னிக் கொண்டிருந்தன. அறையின் நடுவே ஒரு கண்ணாடிக் கூண்டு இருந்தது. அதன் வழியாகப் பாயும் ஒளி விசித்திரமாக வளைந்தது.

“இதுதான் Q-Field Stabilizer,” என்றாள் வெர்னா. “இதை இயக்கினால், சிதறிப்போயிருக்கும் குவாண்டம் நிலைகள் மீண்டும் ஒரு நேர்க்கோட்டில் அமையும். யதார்த்தம் நிலைபெறும். ஆனால், இதை இயக்க ஒருவர் அந்தக் கூண்டுக்குள் செல்ல வேண்டும். அங்கே அவர் ட்ரில்லியன் கணக்கான சாத்தியமான யதார்த்தங்களை ஒரே கணத்தில் அனுபவிப்பார். அது அவரது மனதைச் சிதைக்கலாம். அல்லது… அந்த அலைச்சார்பு நிலைகளுக்கிடையே அவர் ஒரு குறிப்பிட்ட யதார்த்தத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் உலகம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும்.”

(5)

நிக் அந்தக் கண்ணாடிக் கூண்டைப் பார்த்தான். அது ஒரு இயந்திரம் என்பதைத் தாண்டி பிரம்மாண்டமான காலப் பெருவெளியின் வாயிலாக  அவனுக்குத் தோன்றியது. அதன் கண்ணாடிப் பரப்பில் பிரதிபலித்த அவனது முகம், நிலையற்று அதிர்ந்து கொண்டிருந்தது. பயம், கடமை, தியாகம் எனப் பல உணர்வுகள் அவனுள் மல்யுத்தம் செய்தன. கடந்த சில நாட்களில் அவன் கண்ட அந்தச் சிதறிய யதார்த்தங்கள் காலம் ஒரு சுருள் போல தன்னைத் தானே சுற்றிக் கொண்டது, இடங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இவை அனைத்தும் முடிவுக்கு வர இதுவே இறுதி வழி என்பதை அவன் உள்மனம் உணர்ந்திருந்தது.

“நான் செய்கிறேன்,” என்றான் நிக். அவன் குரலில் ஒருவிதமான கனம் இருந்தது. அது மரணத்திற்குச் செல்லும் ஒருவனின் குரலல்ல, மாறாக  புதிய உலகத்தைப் பிரசவிக்கப் போகும் ஒருவனின் உறுதி.

“வேண்டாம் நிக்!” எமிலி அவனது கையை எந்நேரமும் நழுவிவிடும் ஒரு கனவு போல இறுக்கமாகப் பற்றினாள். “இதை வேறு யாராவது செய்யட்டும். நாம் ஏன் பலியாக வேண்டும்? சிதைந்து கொண்டிருக்கும் இந்த உலகத்திலேயே நாம் வாழ்ந்துவிடலாம்.”

“எமிலி, இதைத் தொடங்கியது நான். எச்சரிக்கையையும் மீறி எம்.ஐ.டி ஆய்வகத்தில் நான் செய்த அந்தப் பரிசோதனை, பிரபஞ்சத்தின் அஸ்திவாரத்தையே உலுக்கிவிட்டது. என் பிழையை நானே திருத்த வேண்டும். இது தொடர்ந்தால், இன்னும் ஒரு மாதத்தில் யதார்த்தம் என்ற சொல்லுக்கே அர்த்தம் இருக்காது. மக்கள் தாங்கள் நேசிப்பவர்களின் முகங்களை மறந்துவிடுவார்கள், தங்களின் பெயர்கள் வெறும் சத்தங்களாக மாறும். ஒரு சூன்யத்தில் வாழ்வதை விட, ஒரு முடிவை எடுப்பது சிறந்தது.”

எமிலியின் கண்களில் கண்ணீர் கோடுகளாக இறங்கின. அவள் மெதுவாகத் தன் கையைத் தளர்த்தினாள். அவளது மௌனம் அவனது தர்க்கத்திற்குத் தலைவணங்கியது.

வெர்னா இயந்திரத்தின் கட்டுப்பாட்டுத் திரையைத் தட்டியபடி முன்னால் வந்தாள். “நிக், உள்ளே செல்லும்போது உன் மூளை அத்தனை சாத்தியக்கூறுகளையும் ஒரே கணத்தில் அனுபவிக்கும். அது ஒரு மல்டிவெர்ஸ் அனுபவம். நீ ஒரே நேரத்தில் அழும் குழந்தையாக, கையில் கதிர் அரிவாளுடன் நிற்கும் விவசாயியாக, விண்வெளியில் மிதக்கும் வீரனாக என அத்தனை பரிமாணங்களிலும் இருப்பாய். அந்த அலைச்சார்பு நிலைகளுக்கிடையே, உன் உணர்வு எதை உண்மை என்று தீர்க்கமாக நம்புகிறதோ, அங்கே பிரபஞ்சம் உறைந்துவிடும். மற்ற அனைத்தும் காற்றில் கரையும்.”

நிக் ஒரு கணம் எமிலியைத் தீர்க்கமாகப் பார்த்தான். அந்தப் பார்வையில் ஒரு வாழ்நாள் முழுக்கச் சொல்ல வேண்டிய காதலைச் சுருக்கி வைத்திருந்தான். “நான் இந்த நிக்கைத் தேர்ந்தெடுக்கிறேன். எமிலியைச் சந்தித்த, அவளை நேசிக்கும் இதே நிக்கை.

                                        (6) 

நிக் கூண்டுக்குள் நுழைந்தான். கனமான கதவு மர்மமான ஒலியுடன் மூடியது. உள்ளே இருந்த காற்று லேசான ஓசோன் வாசனையுடனும், விவரிக்க முடியாத மின்சார அதிர்வுடனும் இருந்தது. திடீரென்று உலகம் அடியோடு அவிழ்ந்தது.

அவன் ஒரு புள்ளியில் நிற்கவில்லை. அவன் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான புள்ளிகளில் சிதறினான். ஆஸ்திரேலியக் கடற்கரையின் மணல் அவனது கால் விரல்களுக்கிடையே மென்மையாக இருந்தது, அதே நொடியில் இமயமலையின் உறையும் பனி அவனது நுரையீரலைத் தீய்த்தது. அவன் ஒரு குழந்தையாகத் தன் தாயின் சூடான மடியில் பால் வாசனையை நுகர்ந்தான், மறுபுறம் ஒரு முதியவனாகத் தனது இறுதி மூச்சிற்காகப் போராடிக் கொண்டிருந்தான்.

அனைத்தும் அவனது வாழ்வின் வெவ்வேறு சாத்தியங்கள். ஒரு நிக்கிற்குத் திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் இருந்தனர், இன்னொரு நிக் ஒரு விபத்தில் தனது கால்களை இழந்திருந்தான்.

“நான் யார்? இதில் எது நான்?” அவன் அலறினான். அந்த ஒலி பிரபஞ்சத்தின் கோடிக்கணக்கான அடுக்குகளில் எதிரொலித்து மீண்டும் அவனிடமே வந்தது.

ஆயிரம் எமிலிக்கள் அவனைச் சுற்றித் தெரிந்தனர். ஒரு எமிலி அவனைக் கண்டு பயந்து ஓடினாள், இன்னொருத்தி அவனைக் கட்டிப்பிடித்து அழுதாள், மற்றொருத்தியோ அவன் யாரென்றே தெரியாமல் சாலையைக் கடந்து சென்றாள்.

அப்போது பேராசிரியரின் குரல் அவனது ஆன்மாவின் ஆழத்திலிருந்து ஒலித்தது: “கவனிப்பவனே யதார்த்தத்தைப் படைக்கிறான். நீ எதை தேர்வு செய்கிறாயோ, அதுவே நிலையான உண்மையாகும்.”

நிக் தனது முழு மனோபலத்தையும் திரட்டி ஒரு நீண்ட மூச்சை எடுத்தான். அவன் தன்னைத் தேர்ந்தெடுத்தான். பாஸ்டனில் எமிலியை முதன்முதலில் சந்தித்த அந்தத் தருணத்தையும், அதன் பிறகு வளர்ந்த அந்த எளிய வாழ்க்கையையும் தனது மனக்கண்ணில் ஆணித்தரமாகப் பதித்தான். மெல்ல மெல்ல மற்ற பிம்பங்கள் கானல் நீர் போல மறையத் தொடங்கின. பனிமலைகள் கரைந்தன, முதிய நிக்கின் புன்னகை காற்றில் கரைந்தது. அந்த ட்ரில்லியன் சாத்தியக்கூறுகள் ஒரு புனலில் விழுந்த நீர்த்துளிகள் போல ஒரே புள்ளியில் குவிந்து, ஒரே நிக்காக உருமாறின.

அவன் கண் விழித்தபோது, ஒரு வெள்ளை அறையில் இருந்தான். மருத்துவமனை வாசனையும், சீரான ‘பீப்’ சத்தமும் அவனது உணர்வுகளை மீட்டெடுத்தன. அவனது கையில் ஒரு குளுக்கோஸ் குழாய் ஏறியிருந்தது. படுக்கையோரம் எமிலி அமர்ந்திருந்தாள். அவளது முகம் வாடியிருந்தது, ஆனால் கண்கள் அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன.

“நிக்! நீ திரும்பி வந்துவிட்டாய்!” அவள் அவனது கைகளைப் பிடித்துக் கொண்டாள். அந்தத் தொடுதல் அவனுக்கு அத்தனை உண்மையாக இருந்தது.

(7) 

இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. யதார்த்தம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியதாக உலகம் நம்பியது. நிக் மற்றும் எமிலி மீண்டும் அதே கேப் காட் கடற்கரைக்கு வந்திருந்தனர். மாலை நேரத்துச் சூரியன் கடலில் தங்கம் உருக்கி ஊற்றியது போல் ஜொலித்தது.

“இனி என்ன செய்யப் போகிறாய் நிக்? ஆய்வுக்கூடத்திற்கு மீண்டும் திரும்புவாயா?” எமிலி மெதுவாகக் கேட்டாள்.

நிக் அலைகளின் ஓயாத இரைச்சலையே பார்த்துக் கொண்டிருந்தான். “ஒன்று புரிகிறது எமிலி. நாம் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சாத்தியக்கூறுகளிலிருந்து ஒரு நொடியைத் தேர்ந்தெடுக்கிறோம். நாம் எடுக்கும் ஒவ்வொரு சிறிய முடிவும் ஒரு புதிய உலகத்தைப் படைக்கிறது. ஆனால் அந்தத் தேர்வுதான் நாம் யார் என்பதைச் செதுக்குகிறது. நான் இப்போதைக்கு இந்த நிம்மதியைத் தேர்ந்தெடுக்கிறேன்.”

எமிலி அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள். “எல்லாம் முடிந்துவிட்டது, நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் அல்லவா?”

நிக் புன்னகைத்தான். ஆனால் அந்தப் புன்னகையில் ஒருவிதமான தயக்கம் இருந்தது. அவன் தனது சட்டைப் பையில் இருந்த அந்தப் பழைய பித்தளைக் கைக்கடிகாரத்தைத் தொட்டுப் பார்த்தான். அதன் முட்கள் இப்போது எவ்விதத் தடங்கலுமின்றி ஓடிக்கொண்டிருந்தன. ஆனால், மணற்பரப்பில் விழுந்த அவனது நிழலை அவன் கவனித்தான்.

சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருந்த ஒரு திசையில் இருக்க, அவனது நிழல் மட்டும் சில வினாடிகள் இரண்டாகப் பிரிந்து, பின் ஒருவிதமான பதற்றத்துடன் மீண்டும் ஒன்றாக இணைந்தது.

“நிக்? ஏன் ஒரு மாதிரியாகப் பார்க்கிறாய்?” எமிலி அவனது முகத்தை உற்று நோக்கினாள்.

“ஒன்றுமில்லை எமிலி. குளிர் காற்று அதிகமாகிறது, நாம் நடக்கலாம்,” என்றான் அவன்.

அவர்கள் மணலில் நடந்து சென்றபோது, அவர்களுக்குப் பின்னால் பதிந்த கால் தடங்கள் ஒரு விசித்திரமான கதையைச் சொன்னன. ஒரு ஜோடி மனிதத் தடங்கள் நேராக விழுந்திருக்க வேண்டிய இடத்தில், ஒரு கணம் மூன்று அல்லது நான்கு ஜோடித் தடங்கள் வெவ்வேறு திசைகளில் பதிந்து, அடுத்த அடியிலேயே காற்றில் கரைந்து மாயமாயின.

கடல் அலைகளின் சத்தம் மெல்ல அடங்கியபோது, அந்த நிசப்தத்தின் நடுவே மிக மிக மெல்லியதாக, அந்த மருத்துவமனையின் ‘பீப்-பீப்’ சத்தம் இப்போதும் நிக்கின் காதுகளில் கேட்டுக் கொண்டே இருந்தது.

அவன் இப்போது எமிலியுடன் கடற்கரையில் நடக்கிறானா? அல்லது அந்தக் கண்ணாடிக் கூண்டுக்குள் இன்னும் பல கோடி யதார்த்தங்களில் சிக்கித் தவிக்கிறானா? அல்லது மருத்துவமனைப் படுக்கையில் ஒரு கோமா நிலையில் அவனது மூளை இந்த அழகிய யதார்த்தத்தைக் கற்பனை செய்கிறதா?

அவன் எமிலியின் கையை இன்னும் பலமாகப் பற்றிக் கொண்டான். எது உண்மையாக இருந்தாலும், இந்த நொடியில் இந்தத் தொடுதல் அவனுக்குப் போதுமானதாக இருந்தது. கடற்கரையின் அடிவானத்தில் ஒரு நட்சத்திரம் மினுக்கியது  அல்லது அது ஒரு திரையின் பிக்சல் சிதைவா? பதில் சொல்ல யாருமில்லை.


Discover more from சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.