“இந்த வீடுதானா ?”
டாக்சி நின்றது. நான் கலாவிடம் அந்த வீட்டைப் பார்த்து சந்தேகமாகக் கேட்டேன். கடைசியாக வந்து சுமார் ஐந்து வருடங்கள் ஆகி இருக்கும். பெரியப்பா அதை அக்ரிகல்சுரல் யூனிவர்ஸிடி அருகில் நிலம் வாங்கி கட்டியபோது பெரியம்மாவால் “ காட்டுக்கு நடுவில வீடு “ என்று சொல்லப் பட்ட இடம் இப்போது ஊருக்கு நடுவில், அடுத்த மெயின் ரோடில் எப்போதும் வாகன போக்குவரத்தும் சாலையில் நடக்கவே முடியாத இடமாகவும் ஆகி இருந்தது. அங்கே கார் நிறுத்த இடம் இல்லாமல், தெரு முழுவதும் கிடைத்த இடத்தில் இரு சக்கர வாகனங்கள். பார்க்க ஐம்பது நூறு வருடம் ஆன கட்டடம் போல இருந்தது. சுவர்களில் திட்டு திட்டாக கரிய பாசி.
காம்பவுண்ட் சுவர் பக்கத்தில் வேப்ப மரம் வளர்ந்து அதை சாய்த்திருந்தது.
“ கலா, இதற்கு பொடானிகல் நேம் என்ன சொல்லு ? “
“ஆரம்பிச்சிட்டீங்களா ? எனக்கு ஞாபகம் இல்லை, ஏதோ இண்டிகா அப்படின்னு வரும்.”
“அஸார்டிராஹ்டா இண்டிகா”
எல்லா பூ, செடி, மரம் எல்லாத்துக்கும் பொடானிகல் நேம் தெரியணும், அப்படின்னு பெரியப்பாதான் சொல்லிக் கொடுத்தார். அவர் அக்ரிகல்சுரல் யூனிவர்ஸிடியில் ப்ரொஃபசராக இருந்தவர். பெயருடன் அந்த மரம், செடி,பூ பற்றி ஏதாவது சுவாரசியமான கதை சொல்லுவார்.
“கலா, அதை எப்படி மறக்க முடியும் ? வேப்ப மரத்துக்கு தாவரவியல் பெயர் பெர்ஷியாவிலிருந்து வந்தது. ஆஸாத் தரகத் இ ஹிந்த் – அதாவது இந்தியாவின் சுதந்திர மரம் அப்படின்னு சொல்லுவாங்களாம். வேப்ப மரம் பூச்சி, வியாதி எதுவும் வராத சுதந்திரமான மரம் அப்படின்னு.”
கலா நான் சொன்னது காதில் கேட்காத மாதிரி காம்பவுண்டு கேட்டை திறந்தாள். துருப்பிடித்த கேட் கையைக் கிழிக்காமல் ,அது தரையில் தேய்த்து அழுத்தி இருந்த அரை வட்டப் பாதையில் மெதுவாகத் தள்ளி உள்ளே சென்றோம்.
பெரியப்பாவின் வீடு இன்னும் பழையதாகி இருந்தது, மொட்டை மாடியில் நிறைய துணிகள் தொங்கிக் கொண்டிருந்தன. நிறைய சிறு துணிகள்.
“குழந்தை இருக்கற வீடு மாதிரி இல்ல துணி காயுது !” என்றாள் கலா.
முன்பு அங்கே வலது பக்கம் மண்ணில் தரை முழுவதும் பூ உதிர்ந்த பவள மல்லி மரம் இருக்கும். நிக்டாந்த் அர்பொர் ட்ரைஸ்டிஸ் , அதாவது இரவில் பூக்கும் சோகமான மரம். இலைகள் வாடியது போல மடங்குவதால் சோகமான மரம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள், அவர்களுக்கு பவளம் போன்ற நிறமும் மல்லி போன்ற மணமும் தமிழில் இருப்பது போல தெரியவில்லை.

வீட்டுக்கு முன் இருந்த இடம் கட்டாந்தரையாக இருந்தது. பெரியப்பா நிறைய பூச்செடிகள் வைத்திருப்பார். வித விதமான செம்பருத்தி- ஹைபிஸ்கஸ், காசித்தும்பை , பால்ஸம் என்று சொல்லுவோமே அது எல்லாம் நிறைந்திருக்கும். காசித்தும்பைக்கு “இம்பேஷியன்ஸ் பால்ஸமினா “ என்று பெயர். அதாவது பொறுமை இல்லாதது என்று. அதன் விதைகள் வெடித்து சிதறுவதால் அப்படி பெயர் என்று பெரியப்பா சொல்லிக் கொடுத்தார். இப்போது பூச் செடிகள் எதுவும் இல்லாமல் வெறுமையாக இருந்தது.
நடக்கும் கான்கிரீட் பாதை வெடிப்பு விட்டு காலைத் தடுக்கியது. படிகள் நுனி எல்லாம் சிதைந்து இருந்தன. பகலிலேயே சற்று இருட்டாக இருந்தது. வீட்டின் முன்னால் ஒரு இரும்புக் கம்பி போட்ட கூண்டு இருந்தது. சுவற்றில் மாட்டிய கருத்த பித்தளைப் பலகையில் டாக்டர் எஸ் ராமசாமி, பி எஸ் ஸி, எம் எஸ் ஸி, பி ஹெச் டி ( அக்ரி) என்று மங்கலாக பாசியுடன் இருந்தது. அதை பெரியப்பா பாலிஷ் போட்டு பளபளப்பாக வைத்திருப்பார். எல்லாம் மிகவும் பழையதாக போயிருந்தன. அந்தக் கம்பிகளுக்குள் கைவிட்டு அழைப்பு மணிப் பொத்தானை அழுத்தினேன்.
கலா செருப்பைக் கழற்றினாள், நான் கழற்றாமல் காத்திருந்தேன். அப்போதுதான் இடது புறம் அந்த மரத்தைக் கவனித்தேன். நிறைய அழகான இலைகள். பெரியப்பா அதை எங்கிருந்தோ தேடி நாற்று கொண்டு வந்து வளர்த்தார். அபூர்வமான மரம். அந்த மரத்தின் விதைகள் மரத்திலிருந்து விழுந்து, பிறகு தானே நகர்ந்து போய் தாய் மரத்துடன் ஒட்டிக் கொள்ளும். பெரியப்பா அதை சிறு வயதில் எனக்கு காட்டிய போது மரப் பட்டையில் ஒட்டி இருந்த விதைகளை ஆச்சரியப்பட்டு பார்த்திருக்கிறேன். சே, எனக்கு அதன் பெயர் மறந்து விட்டது. பொடானிகல் பெயர் மட்டும் இல்லை, தமிழ்ப் பெயரும்தான். அழகான தமிழ்ப் பெயர், அதில் ழ வரும். கழஞ்சு ? இல்லை, அதே மாதிரி ஒரு பெயர். எனக்கும் மறதி. கலாவிடம் கேட்க நினைத்தேன், அவள் தெரிந்தாலும் இப்போது சொல்ல மாட்டாள். மொபைலை எடுத்து தேடினேன். சரியாக சிக்னல் இல்லை.
நெடு நேரம் கழித்து கதவு திறந்து, ஒரு முகம் தெரிந்தது, நான் எதிர் பார்த்த உயரத்துக்கு சற்று கீழே. அந்த இருட்டில் பற்கள் பளீரென்று தெரிய சிரித்து “ வாங்க, சின்னம்மா காலையில ஃபோன் செஞ்சு சொல்லி இருந்தாங்க.” என்றாள். அவள் கூண்டையும் கதவுகளையும் திறக்க, வீட்டுக்குள் நுழைந்தோம்.
முதலில் ஆஸ்பத்திரி மாதிரி ஒரு மருந்து நெடியும் வீச்சமும் அடித்தது. இருட்டாக இருந்தாலும் குளிர்ச்சியாக இருந்தது.சிறிய வரவேற்பறையில் அரை இருட்டில் ஒலி இல்லாத டீவிக்கு முன்பு சக்கர நாற்காலியில் இருந்தது பெரியப்பா என்று அறிய ஒரு கணம் தாமதம் ஆனது. நாங்கள் உள்ளே வந்தது அவருக்கு தெரியவில்லை, கண்களை பாதி மூடிய மாதிரி அசையாமல் டீவியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதில் காதலனும் காதலியும் மரத்தைச் சுற்றி ஓடி பாட்டுப் பாடிக் கொண்டிருந்தார்கள். பன்னீர்ப்பூ, ப்ளூமேரியா மரம் அது. பாட்டுதான் கேட்கவில்லை. மறுபடியும் வாசல் மரம் நினைவுக்கு வந்தது.
“உட்காருங்க, அம்மா இதோ வந்திடுவாங்க.” என்று புன்னகையுடன் சோபாவில் அமரச் சொல்லி அந்தப் பெண் உள்ளே சென்றாள். சராசரிக்கு சற்று குள்ளம்தான், நிறமும் மட்டுதான், ஆனால் முகம் நல்ல களை. அவள் துள்ளல் நடையில் நீண்ட ஜடை ஆடியது.
சென்ற முறை வந்த போது பெரியப்பா நன்றாக நடமாடிக் கொண்டுதான் இருந்தார். நல்ல உயரம், தகுந்த உடல் வாகு, அதிரும் குரல். அப்போது அவருக்கு வயது எண்பதுக்கு மேல் என்று சொல்லவே முடியாது.
ஆனால் இப்போது உயரம் குறைந்து, உடல் சுருங்கி சக்கர நாற்காலியில் ஒரு அடிபட்ட வயதான பறவை போல இருந்தார். பக்கத்தில் ஒரு சிறிய மேசையில் கிண்ணத்தில் குழந்தைகள் உணவு போல பாதி சாப்பிட்ட ஏதோ இருந்தது. கழுத்தில் நாப்கின் கட்டப் பட்டிருந்தது. நான் அவரிடம் முதலில் அந்த மரத்தின் பெயரைக் கேட்க இருந்தேன், இப்போது கேட்கத் தோன்றவில்லை.
அந்தப் பெண் வாயைத் துடைத்து விட்டு “அப்பா, யாரு வந்திருக்காங்க பாருங்க “ என்றாள். பெரியப்பா அசைவு எதுவும் இல்லை, காதில் கேட்டதா என்று கூட தெரியவில்லை. மறுபடியும் அந்தப் பெண் காதருகில் “அப்பா” என்று உரத்து சொன்னாள், பெரியப்பா அப்படியேதான் உட்கார்ந்திருந்தார். நானும் கலாவும் சங்கடமாகப் பார்த்துக் கொண்டோம்.
உள்ளே இருந்து கால் தேயும் ஒலி எழுப்பியபடி மெதுவாக நடந்து பெரியம்மா வந்தார்கள்.
“வாப்பா மோகன், வாம்மா கலா, எப்ப வந்தீங்க, பார்த்தே வருஷக் கணக்கா ஆச்சு” , அவரும் ஒடுங்கிய மாதிரி இருந்தார், முகத்தில் ஒளி இல்லை.
“பெரியம்மா, எப்படி இருக்கீங்க ? நாங்க போன வாரம்தான் வந்தோம், இன்னும் ஜெட்லாக் கூட போகல, பாலுதான் பெரியப்பா இப்படி இருக்கிறார்ன்னு ,மெசேஜ் போட்டிருந்தான். பார்க்கணும்னு வந்துட்டோம்.”
“ஏதோ இருக்கோம்பா, யாருக்கும் தொந்தரவு குடுக்காமல் போய்ச் சேரணும். “ என்று பெரியம்மா புன்னகை இல்லாமல் சொன்னார். நான் என்ன சொல்லுவது என்று தெரியாமல் பார்த்தேன்.
கலா “ பெரியம்மா, பாலு, ரமா எப்படி இருக்காங்க ? என்றாள்.
பாலு பெரியப்பா மகன், துபாயில் இருக்கிறான். மகள் ரமா லண்டனில் இருக்கிறாள்.
“ எல்லாம் நல்லா இருக்காங்க, பாருப்பா , இப்படி ஆயிட்டாரு “ என்று பெரியம்மா உட்கார்ந்தார்.
“ நாங்க போன முறை வந்தபோது கூட நல்லாத்தானே இருந்தாரு ?”
“இருந்தாரு, வயசாச்சு இல்லையா ?”
பெரியப்பாவுக்கு வியாதி என்று பெரிதாக இல்லை, ஆனால் வயது. வயதானால் எல்லோரும் இப்படி ஆகி விடுவார்களா ? பாரதி காலனை “எந்தன் காலருகே வாடா, சற்றே உனை மிதிக்கிறேன் “ என்று சொன்னான், காலனை அப்படி சொல்லாம் ஆனால் காலத்தை அப்படி சொல்ல முடியுமா என்று தோன்றியது.
சோபாவில் உட்கார்ந்துகொண்டு
“ எனக்கும்தான் வயசாச்சு, குழந்தை மாதிரி செய்யறாரு, முடியலைப்பா, அதான் பார்த்துக் கொள்ள ஆள் இப்ப.” என்றார்.
நாங்கள் அந்தப் பெண்ணைத் திரும்பிப் பார்த்தோம். அவள் மறுபடியும் புன்னகைத்தாள்.
“குழந்தைதாங்க , ஒரு மணி நேரமா சாப்பிட அடம் பிடிக்கறாரு.” அவருடைய கழுத்தில் கட்டி இருந்த நாப்கினை சரி செய்து
“அப்பா, இன்னும் ஒரு வாய் சாப்பிடுங்க “ என்றாள்.
“ நாங்க போனதடவை வந்த போது நல்லா நடமாடிட்டு இருந்தாரே, தினமும் காலையில எழுந்தவுடன் செடி மரம் எல்லாம் கவனிக்க போயிடுவாரே ?”
“ஆமாம், அப்ப கூட தினமும் தானே மண் வெட்டி எடுத்துக்கிட்டு பாத்தி கட்ட கிளம்புவார். என்னவோ தானா வெளியில போறத குறைச்சுக்கிட்டெ வந்தார், இரண்டு வருஷமா வீட்டை விட்டு வெளியிய போகல, போன வருஷம்கூட வீட்டுக்குள்ள நடமாடிக்கிட்டு இருந்தாரு. இப்ப அதுவும் இல்ல, ஆள் உதவி இல்லாமல் படுக்கையிலிருந்து கூட எழுந்திருக்க முடியாது.”
பெரியப்பா காதில் எதுவும் விழுந்ததாகத் தெரியவில்லை.
“ பெரியப்பா நிறைய படிப்பாரே, இப்பவும் படிக்கிறாரா ?”
பெரியப்பா புத்தகங்கள் நிறைய படிப்பார். வீட்டில் ஒரு கண்ணாடி அலமாரி முழுவதும் புத்தகங்கள் இருக்கும். எல்லாம் மரம், செடி, பூக்கள் பற்றியவை. வண்ண வண்ண படங்களுடன் இருக்கும்.
“ இல்லப்பா, படிக்கறதையே விட்டு நாலு வருஷம் ஆச்சு “
நான் அடுத்த அறையைப் பார்த்தேன். அங்கேதான் புத்தக அலமாரி இருக்கும்.
“ எல்லா புத்தகத்தையும் போட்டாச்சு, வீட்டுல இப்ப நியூஸ் பேப்பர்கூட கிடையாது.”
அவரிடம் எல்லா மரம் செடி பூ எல்லாம் படம் போட்ட குண்டு புத்தகம் இருக்கும். புத்தகத்திலிருந்து அந்த மரத்தின் பெயரை நினைவு படுத்திக் கொள்ளலாம் என்று இருந்தேன். முடியாது போல.
“ அப்படியா, பெரியப்பாவுக்கு புத்தகங்கள் இல்லாமல் இருக்கவே முடியாதே ?”
“நீ நம்ப மாட்ட, புத்தகம் படிக்கிறதை விட்டுட்டு அவர் டீ வி சீரியல் சினிமா பாட்டு எல்லாம் பார்க்க ஆரம்பிச்சுட்டாரு, டீவி போட்டாதான் சாப்பாடு ரெண்டு வாய் இறங்கும்.”
எனக்கு நம்ப முடியவில்லை. யாராவது டீ வி சீரியலை பார்த்தாலும் திட்டுவார், என் அம்மாவிடம் ஒரு முறை “ இதையெல்லாம் பார்த்தால் மூளையே மழுங்கிப் போயிடும், ஏதாவது புத்தகம் படிங்க “ அப்படின்னு சொன்னார். அம்மா அதை மறக்காமல் பல வருடங்கள் சொல்லிக் கொண்டிருந்தார்.
“ நீங்க எப்படி இருக்கீங்க பெரியம்மா ? உங்களுக்கும் ஆர்த்ரைடீஸ் உண்டே?”
“மூட்டு வலிதான், இவ்வளவு வயசுக்கு பிறகு சர்ஜரி எல்லாம் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாங்க, ஏதோ நடக்கறேன்.”
“ நீங்களும் வீட்டை விட்டு வெளிய போறதில்லயா ?”
“ இல்லைப்பா, இவருதான் கைக்குழந்தை மாதிரி ஆயிட்டாரே, பார்த்துக்க ஆள் இருந்தாலும், நான் வெளிய போகறதில்ல.”
“பாலு, ரமா எல்லாம் வருவாங்களா ?”
“ வருவாங்க, அவங்களுக்கும் பசங்க, எவ்வளவோ வேலை, மாறி மாறி ரெண்டு பேரும் மூணு நாலு மாசத்துக்கு ஒரு முறை வந்து ஒரு வாரம் இருந்துட்டு போறாங்க.”
“பாலு பொண்ணு என்ன செய்யறா? அவ பேர் என்ன வர்ஷாவா?”
“ஆமாம், வர்ஷாதான். அவ இப்ப யு எஸ்ல படிக்கறா. வித்யா அவ கூட போய் சில மாசம் இருந்துட்டு வரா. பாலுதான் பாவம் இன்னும் ரிடையர் ஆகல, வேலையும் செஞ்சுகிட்டு தானே சமையல் வீடு அப்படின்னு தனியா கஷ்டப் படறான்.”
“ ஐயோ பாவமே. வர்ஷா யு எஸ்ல எங்க இருக்கா ? “
“ அது என்ன கொலம்பியா யுனிவர்சிடியா, அதுலதான் படிக்கறா.”
“ எங்களை காண்டாக்ட் செஞ்சிருக்கலாமே, நாங்க பக்கத்துலதான் ந்யூ ஜெர்ஸியில இருக்கோம்.”
பெரியம்மா பதில் எதுவும் சொல்லவில்லை.
“ உங்க அண்ணா ரமேஷ் எப்படி இருக்காரு ?”
“அவனுக்கும் வயசாச்சு இல்லையா, அவனுக்கு வேற ப்ராப்ளம், போன வருஷம் ஸ்ட்ரோக் வந்து, இப்பதான் சற்று எழுந்து நடக்கறான், இன்னும் பேச்சு சரியாகலை, ஆனால் அவன் குழந்தை மாதிரி படுத்தறதில்லை.” என்று பெரியப்பாவைப் பார்த்தாள்.
சற்று நேரம் மவுனம் நிலவியது.
“காபி சாப்பிடறீங்களா ?” அந்தப் பெண்தான் கேட்டாள்.
கலா “இல்லம்மா வேண்டாம், நாங்க காலையில ஒரு வேளைதான் காபி.”
“ அப்ப ஜூஸ் ஏதாவது கொண்டு வரட்டுமா ? எலுமிச்சம்பழம் இருக்குது.”
“வேண்டாம்மா, அதுல சர்க்கரை ஆகாது.”
சிட்ரஸ் லிமன், லெமன் என்று நினைவு இருந்தால் லிமன் நினைவுக்கு வந்து விடும். இந்த மரத்துக்கு அப்படி இல்லையே.
“அது எப்படி ஒண்ணும் வேண்டாமுன்னு சொல்லறீங்க ? நான் உப்பு போட்டு கொஞ்சமா சர்க்கரை போட்டு ஜூஸ் எடுத்தாறேன்.” என்று புன்னகைத்தாள்.
பெரியப்பா இன்னும் டீவியில் அரைக் கண்ணுடன் இருந்தார்.
“பெரியம்மா, அவருக்கு நினைவு இருக்குதா ? அடையாளம் தெரியுதா ? நான் போய் பேசிப் பார்க்கட்டுமா”
“ என்னையே அவருக்கு அடையாளம் தெரியறதில்லை, பேசிப்பாரு.”
நான் எழுந்து பெரியப்பா அருகே சென்றேன்.
“பெரியப்பா எப்படி இருக்கீங்க ? நான் யாரு தெரியுதா ?”
பெரியப்பா சலனமில்லாமல் இருந்தார்.
நான் டீவியை மறைத்துக் கோண்டு எதிரே நின்று மறுபடியும் கேட்டேன். இப்போது சிரமப்பட்டு தலையை மெதுவாக உயர்த்திப் பார்த்தார். பேசவில்லை, ஆனால் வாயை ஒரு கணம் கோபத்தில் சுழித்த மாதிரி இருந்தது.
பெரியம்மா எழுந்து வந்து அவரை சற்று உலுக்கினார். “மோகனும் கலாவும் வந்திருக்காங்க, பாருங்க. “
ஒரு காலத்தில் என்னிடம் அப்படி பாசமாக இருந்தவர், வந்தால் நாள் முழுவதும் என்னிடம் பேசிக்கொண்டிருப்பார். பெரியப்பா முகத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை.
“வீட்டுல ஒரு நாய் இருந்துச்சே ? அதுகிட்ட உயிரா இருப்பாரே, அது எங்க, அதன் பேரு என்ன ?” என்றாள் கலா.
“ப்ரௌனி, அதுவும் வயசாகி செத்துப் போச்சு.” என்றார் பெரியம்மா.
நான் இன்னும் அந்த மரத்தின் பெயரை யோசித்துக் கொண்டிருந்தேன். கீழே விழுந்த குழந்தைகளை தழுவி எடுத்துக் கொள்ளும் தாய் மரம்.
அந்தப் பெண் ஜூஸ் கொண்டு வந்தாள். ஒரு ட்ரேயில் இரண்டு பெரிய கண்ணாடி தம்ளர்களும், ஒரு சின்ன தம்ளருமாக ஜூஸ் இருந்தது. எங்களுக்கு கொடுத்து விட்டு, அந்த சின்ன தம்ளரை பெரியப்பாவுக்கு அருகில் எடுத்துச் சென்றாள்.
பெரியப்பா மெதுவாக திரும்பிப் பார்த்து கையை நீட்டினார்.
“ஜூஸ் வேணுமா ?” என்று ஆசையாக கேட்டாள்.
பெரியப்பா தலையை குழந்தை போல மேலும் கீழுமாக அசைத்து கையை மறுபடியும் நீட்டினார். அவள் சின்ன தம்ளர் ஜூசை அவர் வாயருகில் எடுத்துச் சென்றாள். அவசரமாக இரண்டு கைகளாலும் அதை பற்றி எடுத்துக் கொண்டு உறிஞ்சினார். தொண்டையில் புரை ஏறி இருமினார். அந்தப் பெண் தம்ளரை வாங்கி “ ஜூஸ் சிப்ஸ் குடுத்தா இப்படித்தான் அவசரம்”, என்று தலையை தட்டி விட்டாள்.
பெரியப்பா மறுபடியும் உறைந்து போனார்.
நாங்கள் ஜூஸ் குடித்தோம். சர்க்கரை அதிகம் போடாமல், மேலே இரண்டு புதினா இலைகள் மிதக்க விட்டு அந்தப் பெண் நன்றாகவே செய்திருந்தாள்.
பெரியப்பா முகம் ஏதோ சிணுங்கிய மாதிரி இருந்தது. அந்தப் பெண் அருகில் போய் பார்த்தாள்.
“டயாப்பர் மாத்தணும்.” என்றாள்.
நான் கலாவை பார்த்தேன். கிளம்பலாம் என்று அவளும் தலை அசைத்தாள்.
“ பெரியம்மா, நாங்க போயிட்டு வரோம், பெரியப்பாவை இப்படி பார்க்கவே கஷ்டமா இருக்குது.”
ஜன்னல் வழியே இன்னும் பெயர் தெரியாத மரம் உறுத்தியது.
“ஆமாம்பா, என்னவோ தலை விதி, அவருக்கும், எங்களுக்கும். இப்படி மனுஷன் யாரையும் அடையாளம் தெரியாத அளவுக்கு ஆயிட்டாரு.” பெரியம்மா கண்களில் நீர் தன்னிச்சையாக வழிந்தது.
“ நீங்க உடம்பை பார்த்துக்குங்க,உங்களுக்கும் வயசாயிடுச்சு.”
பெரியம்மா கைகளை விரித்தார்.
பெரியப்பா அருகில் சென்று “ பெரியப்பா நான் போயிட்டு வரேன்” என்று சென்னேன், என் குரலும் தழதழத்தது.
அந்தப் பெண் “ அப்பா, போயிட்டு வரேன்னு சொல்றாங்க” என்று உரத்து சொன்னாள்.
ஒரு கணம் மவுனமாக அவரைப் பார்த்துக் கோண்டிருந்தோம். அவரிடம் எந்த சலனமும் இல்லை.
“பாவம்” என்று சொல்லி ,கதவை நோக்கி திரும்பினேன்.
மறுபடியும் ஜன்னல் வழியே அந்த மரத்தைப் பார்ப்பதைக் கண்ட அந்தப் பெண் “ என்ன அப்படி பார்க்கறீங்க ? அது அழிஞ்சில் மரம். அப்பாதான் சொல்லிக் கொடுத்தாரு“ என்றாள். ஆகா, அழிஞ்சில், ஏறழிஞ்சில் என்றும் சொல்லுவோமே ! மனதில் பாதி பாரம் நீங்கியது. அவளுக்கு பொடானிகல் நேம் தெரிந்திருக்காது. நான் அவளை நன்றியுடன் பார்த்து திரும்பினேன்.
“அப்பா, அவங்க என் பெயர்கூட கேட்கல, நீங்க சொல்லுங்க நான் யாரு ?”
அவளைப் பார்த்து பெரியப்பா முகத்தைத் திருப்பினார். நான் கதவருகே நின்றேன்.
பெரியப்பா வாயைத் திறக்க ஏதோ முனகல் ஒலி வந்தது. நான் திரும்பி அருகே வந்தேன். என்ன சொன்னார் என்று புரியவில்லை.
“ ராமு, நான் யாரு ?” என்றாள் அந்தப் பெண்.
“அம்மா” என்று பெரியப்பா மழலை மாதிரி சொன்னார்.
அந்தப்பெண் சிரித்துக் கொண்டு குனிய, இடது கையால் அவள் மூக்கைத் தொட்டு மறுபடியும் “அம்மா“ என்றார் எண்பத்து ஏழு வயது ராமசாமி பெரியப்பா.
Discover more from சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026
Subscribe to get the latest posts sent to your email.

Very well written. Enjoyed every bit.
The writer has really described the plot so well and makes us to feel as if we are there with him and his Periappa in person and witness the scene.
Very nicely narrated the old age issues. Very touching.
நான் நானாக இருக்கும்வரைதான் நான்..
நான் நானாக இல்லாவிடின்
என் வலி பிறருக்கு தெரியுமா..?
அவர்கள் உதவி எனக்கு புரியுமா..?
யோசிக்க வைக்கும் எழுத்து 🙏
அழுகை வந்தது.