தெலுங்கில்: மணி வட்லமானி మణి వడ్లమాని (Mani Vadallamani)
தமிழில்: ராஜி ரகுநாதன்
இரண்டு நாட்களாக ஜுரம் விட்டு விட்டு அடிக்கிறது. ஏதோ மாத்திரைகள் போட்டுக் கொண்டாலும் பெரிதாகப் பலன் தெரியவில்லை. “வரிசையாக மூன்று நாட்கள் வேலை இருக்கும். வேறு எங்கும் வேலை ஒப்புக்கொள்ள வேண்டாம்” என்று முந்தாநாள் சங்கரம் கூடச் சொன்னான். அவர்களுடையது பெரிய கேடரிங் கம்பெனி. அதில் ஏதாவது வேலை கிடைத்தால் கொஞ்சம் பணம் கூடுதாலாகவே தருவார்கள். அதோடு கூட சங்கரத்திற்கு அவள் செய்யும் சமையல் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.
உண்மையில் அவளுக்கு இன்று காலையில் இருந்தே உடம்பு சரியில்லை. ஆனால் இன்று சுபத்ரம்மாவின் வீட்டில் தேவி பூஜை செய்து விருந்து வைத்தார்கள். அது பற்றி முன்பே கூறியிருந்தார்கள். எல்லோரும் சமையல் நன்றாக இருந்ததாகக் கூறியதைக் கேட்க அவளுக்குத் திருப்தியாக இருந்தது.
இப்போதெல்லாம் அவளுக்கு உடம்பில் சுத்தமாகத் தெம்பே இல்லை. சிறிது வேலை செய்தாலே சோர்ந்து போகிறாள். எப்போதும் படுத்துக் கொள்ளவேண்டும் என்றே தோன்றுகிறது. என்ன செய்வது? வேறுவழியில்லை என்று நினைத்துக் கொண்டே ஜானகி நடையை விரைவாக்கினாள். அருகில் இளைஞர்கள் சிலர், “ரங்கம்மா, மங்கம்மா” என்று பாடிக் கொண்டே சென்றார்கள். புது சினிமாவின் பாடல் போலிருந்தது.
தலையைக் குனிந்து நடந்து கொண்டிருந்த ஜானகியை வழியில் பார்த்த ராமநாதம், “நல்லவேளை ஜானகி, உன்னை இங்கயே பார்த்துட்டேன். உங்க வீடு வரைக்கும் அலைய வேண்டாம். எனக்கு ஒரு பெரிய வேலை குறைஞ்சுது. நாளைக்கு கார்த்தால உன் வீட்டுக்காரரை ஒம்போது மணிக்கெல்லாம் ஆஞ்சநேய சுவாமி கோவில்ட்ட வந்து நிக்கச் சொல்லு. ஜகன்னாதம் மாமா வீட்டுல சனி தானம், மிருத்தியுஞ்சய தானம் எல்லாம் இருக்கு. என்கிட்டே சொன்னார். உடனே எனக்கு உங்க நினைவு தான் வந்தது. ஏதோ என்னால் முடிஞ்ச உபகாரம். உங்களுக்குச் செய்யணும்னு தோணித்து” என்றார்.
அவர் கூறியதை கேட்டுக் கொண்ட ஜானகி, “நீங்க எங்களுக்காக சிரமம் பார்க்காமல் வந்து சொன்னதே பெரிசு. கட்டாயம் அவரை அனுப்புறேன்” என்றாள்.
“இதுல சிரமம் என்னம்மா இருக்கு? ஏதோ ஒரே ஊர்ல இருக்கோம். நாம எல்லாரும் வயித்துப் பொழப்புக்காக இங்கே வந்தவா தானே?” என்று கூறி விட்டு, பைக்கை ஸ்டார்ட் செய்து கொண்டு சென்று விட்டார்.

ஜானகி மீண்டும் நடக்கத் தொடங்கினாள். மிகவும் களைப்போடு அடியெடுத்து வைத்தாள். இந்த சம்சாரம் எப்படி நடக்கும் என்ற கவலை ஒருபுறம், உடம்பு ஒத்துழைக்கவில்லையே என்ற வருத்தம் மறுபுறம். எப்படியோ வீடு வந்து சேர்ந்தாள். வீடு என்றால் ஒரு சிறிய அறை. வெளியில் ஒரு வராண்டா. அதையே சமையலறையாக்கிக் கொண்டாள். வாடகையும் இல்லாமல், கரெண்ட் செலவு கூட இல்லாமல் உதவி செய்யும் சாவித்திரம்மாவுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது என்று நினைத்துக் கொண்டே கையில் பிடித்திருந்த பையைக் கீழே வைத்தாள்.
ஜானகி வந்ததைப் பார்த்த ராகவா, அதுவரை பாயில் படுத்திருந்தவன் அவசரமாக எழுந்து வந்து பைக்குள் கையை விட்டு கிடைத்த இரண்டு வாழைப் பழங்களை எடுத்து ஆசையோடு உரித்து வாயில் போட்டுக் கொண்டே ஜானகியைப் பார்த்தான். ஆனால் அவளுடைய பார்வையைத் தாங்க முடியாமல், “பசி தாங்க முடியலை” என்று சமாதானம் சொல்ல நினைத்தான். ஆனால் அவள், “பரவாயில்லை. போறது போங்கோ” என்று கூறிக் கொண்டே பையைக் கையில் வாங்கி, அதிலிருந்த சின்னச் சின்னப் பொட்டலங்களை வெளியில் எடுத்து வைத்துக் கொண்டே, “இவராலேயே பசி தாங்கமுடியலையே, சின்னக் குழந்தைகள் எப்படித் தாங்குவா” என்று நினைத்துக் கொண்டாள்.
அதற்குள் நினைவு வந்தவளாக “ஐயோ, மறந்தே போனேன். சித்த முன்னால பஸ் ஸ்டாண்ட் கிட்ட ராமநாதம் மாமாவைப் பார்த்தேன். உங்களை நாளைக்கு காலம்பர ஒம்போது மணிக்கெல்லாம் ஆஞ்சநேய சுவாமி கோவில் கிட்ட வந்து நிக்கச் சொன்னார்” என்றாள் ஜானகி.
அவள் கூறியதைக் கேட்டு “உம்” என்றான் ராகவா.
வெயில் சரசரவென்று ஏறிக்கொண்டிருந்தது. மார்த்தாண்டன் தன் பிரதாபத்தைக் காட்டிக் கொண்டிருந்தான். காற்றுக் கடவுள் எங்கே சென்றாரோ? இலைகள் அசையாமல் இறுக்கமாக இருந்தன. “உஸ் உஸ்” என்று வாயால் ஊதிக் கொண்டு கோவில் படியில் அமர்ந்திருந்தான் ராகவா. பதினோரு மணிக்குத் தான் ராமநாதம் வந்தார். அதற்குள் ராகவாவுக்கு கண்களும் காலும் சோர்வடைந்து ஓய்ந்து போயிருந்தன.
காலையில் ஜானகி கொடுத்த தண்ணீர் டீ தவிர வயிற்றுக்குள் எதுவும் விழவில்லை. அவருடைய பைக்கில் ஏறி அமர்ந்து கொண்டான். வழியில் அவர் ஏதோ பேசிக் கொண்டே வந்தார். அவை எதுவும் அவன் காதில் விழவில்லை. ஒரு மணி நேரம் ட்ராஃபிக்கில் பல அவஸ்தைகளுக்குப் பிறகு ஜகன்னாதம் வீட்டைச் சென்றடைந்தார்கள்
அங்கே அவர்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கொண்டு நான்கு நாட்களாக அவர்கள் இல்லத்தில் கிரக சாந்தி ஹோமம் நடக்கிறது என்பதை ராகவா புரிந்து கொண்டான். மகனுக்காக சனி ஜபம். பெரிய மகளுக்குப் பிறந்த மகனுடைய நட்சத்திரத்தில் அபமிருத்யு தோஷம் இருந்ததால் அதன் பரிகாரம் எல்லாம் சேர்ந்து இந்த சாந்தி ஹோமங்களை நடத்தினர்.
அதற்குள், “ராகவா, இங்கே வா. இந்த தானத்தை வாங்கிக்கோ” என்று ராமநாதம் அழைத்தார். ஜகன்னாதத்தின் மகள் வந்து நின்றாள். காலை அலம்பி தில தானம் கொடுக்க வைத்தார்கள். ஒரு தட்டில் அரிசி, கொஞ்சம் கருப்பு எள், சில்லறைக் காசுகளோடு கூட கொஞ்சம் பணமும் இருந்தது. அந்த தானத்தைப் பெற்றுக் கொண்டபோது, ராகவா மனதில், “அம்மா, உன்னைப் பிடித்திருக்கும் சனி தோஷத்தை நான் வாங்கிக் கொள்கிறேன். இனிமேல் உனக்கு இந்த தோஷம் இருக்காது” என்று நினைத்துக் கொண்டான். அதன் பிறகு மிருத்யு தோஷ பரிகாரத்தையும், “இந்த மிருத்யு தோஷத்தை நான் வாங்கிக் கொள்கிறேன்” என்று மனத்தில் நினைத்துகொண்டே பெற்றுக் கொண்டான். அதோடு அந்த சடங்கு முடிந்தது. இதெல்லாம் முடிவதற்குள் நட்ட நடு மத்தியானம் ஆனது.
ராகவாவுக்கு வயிற்றுப் பசி “கொண்டா கொண்டா” என்றது. பகபகவென்று உள்ளே அமிலம் எரிந்தது. அதோடு அந்த வெயிலில் பஸ் பிடித்து மூன்று மணி சுமாருக்கு வீடு வந்து சேர்ந்தான்.
பாயில் முடங்கிப் படுத்திருந்த ஜானகியை எழுப்பினான். சோர்வாக இருந்த அவளுடைய முகத்தைப் பார்த்து, “மறுபடியும் ஜுரமா?” என்று கேட்டான். “ஆமாம்” என்று தலையசைத்தாள். “சரி, சரி. படுத்துக்கோ. இந்தா, இந்த பணத்தை பத்திரமா வை” என்றான். அதைப் பார்த்து அவள் கண்களில் கண்ணீர் நிரம்பியது. “இந்த தானம் பெறுபவர் மேல் கொடுப்பவருக்கு எத்தனை இழிவுப் பார்வை? இதன் பின்னால் இருக்கும் அர்த்தம் தெரிந்தும் இத்தனை குறைவாகக் கொடுக்கிறார்களே” என்று நினைத்து, கணவனைப் பார்க்காமல், முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
வெறும் ஊறுகாயும், நீர்த்துப் போன மோரும் வயிற்றை எப்படி நிரப்பும்? அரைவயிற்றுப் பசியோடு பாயில் ஒருக்களித்துப் படுத்தான் ராகவா. பல வித சிந்தனைகள் அவன் மனத்தை அலைக்கழித்தன. வாழ்க்கையின் மேல் ஏற்பட்ட விரக்தி அதிகமானது. அவனுடைய தாத்தா ஓரளவு வசதி படைத்தவர்தானாம். ஆனால் அவர் அகால மரணம்டைந்தார். அவனுடைய தந்தை எதுவுமின்றி செய்வதறியாமல் நின்ற போது அவருடைய தாய்மாமாவின் வழிகாட்டலால், ஈமச்சடங்குகளுக்கும், திவசத்திற்கும், இதுபோன்ற தானங்களுக்கும் செல்லத் தொடங்கினார். ஏதோ பிழைப்பு ஓடியது. அதே வாரிசுரிமை ராகவாவுக்கும் வந்தமைந்தது. நடுநிலைப் பள்ளியோடு படிப்போடு நிறுத்தவேண்டி வந்தது. கொஞ்ச நாட்கள் தந்தையின் அடிச்சுவட்டைப் பின்பற்றி அவரோடு சென்றான். ஆனால் தாத்தாவைப் போலவே தந்தையும் திடீரென்று இறந்து போனார். கதை மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து நின்றது. இருந்த இரண்டு தங்கைகளில் ஒருத்தி, டெயிலரோடு ஓடிப்போனாள். உயிரோடிருக்கிறாளோ இல்லையோ தெரியாது. இன்னொரு தங்கையை பக்கத்து கிராமத்தில் இருந்து ஒருவன் தானாகவே கேட்டு வந்து திருமணம் செய்து கொண்டான். அவன் ஏற்கெனவே இரண்டு குழந்தைகளின் தந்தை. அதனால் என்ன? மனைவியை வைத்துக் காப்பாற்றும் நிலையில் இருந்தான். கல்யாணச் செலவை அவனே பார்த்துக் கொண்டான். அவன் ஒரு தனி இயல்பு கொண்டவன். அவர்களோடு பெரிதாக போக்குவரத்து இல்லை.
சிறிது காலம் கழித்து உறவுக்காரப் பெண்ணான ஜானகியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டி வந்தது. தாயாரும் இறந்து போனாள். அதன் பிறகு சம்சாரம் வளர்ந்தது. வயிற்றைக் கையில் பிடித்துக் கொண்டு பிழைப்பை தேடி இந்த நகரத்திற்கு வந்தார்கள். சாவித்திரம்மாவின் புண்ணியத்தில் இருப்பதற்கு ஒரு கூடு கிடைத்தது.
இது உண்மையா அல்லது காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையா என்று தெரியாது. இப்படிப்பட்ட தானங்கள் வாங்கினால் அவர்களிடம் இருக்கும் ஜீவக்களை போய் விடும். உடல் நிறமும் கருத்து விடும். ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், பிரேதக் களை வந்து விடும்.
அவ்வாறு யோசித்துக் கொண்டே ராகவா தூங்கிப் போனான். விழிப்பு வந்த போது மாலைப் பொழுதாகியிருந்தது. பள்ளிக்குச் சென்ற பிள்ளைகள் வீட்டிற்கு வந்தனர். அவர்களை உற்று நோக்கிய ராகவா, “என்னைப் போன்ற சாமர்த்தியமற்றவனுக்குப் பிறந்த பிள்ளைகள் வற்றி வதங்கி ஈர்க்குச்சி போல இல்லாமல் கொழுத்து பந்து போலவா இருப்பார்கள்?” என்று நினைத்துக் கொண்டான்.
“ஆமாம், ஜானகி எங்கே?” என்று அங்குமிங்கும் பார்த்தான். அதைப் பார்த்த பிள்ளைகள், “அப்பா, அம்மா டாக்டர்ட்ட போயிருக்கா” என்றார்கள்.
அதற்குள், “ஐயா, சாவித்திரம்மா கூப்புடறாங்க” என்று அவர்களுடைய கார் டிரைவர் வந்து அழைத்தான்.
“ஓஹோ, அவுங்க மகன் அமெரிக்காலேர்ந்து வந்திருக்காரா?” என்று கேட்டான் ராகவா.
“ஆமாங்க” என்றான் டிரைவர்.
“இதோ வரேன்” என்று அவன் பின்னால் சென்றான் ராகவா.
*****
என்ன செய்வதென்று தெரியாமல் இருவரும் ரொம்ப நேரமாக அப்படியே ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு உட்கார்திருந்தர்கள்.
“கொஞ்ச நாழி படுத்துக்கோ ஜானகி. ஏற்கெனவே உனக்கு உடம்பு சரியில்ல. மறுபடியும் எப்போ வரச் சொன்னார் டாக்டர்?” என்று கேட்டான் மனைவியை.
“ரெண்டு நாள் கழிச்சு” என்றாள் ஜானகி.
“இப்ப என்ன செய்றது?” என்று கேட்டான்.
“என்னத்தைச் செய்றது? செய்றதுக்கு வேறே என்ன இருக்கு?”
“அதுதான் உன் முடிவா?”
“ஆமாம். உங்க முடிவு என்ன?”
“கிட்டத்தட்ட நம்ப ரெண்டு பேரோட முடிவும் ஒண்ணுதான். கல்யாணம் ஆனதுலேர்த்து அப்படித்தானே? அதே போல செஞ்சுடுவோம்” என்றான்.
“ஐயோ, தூங்குற குழந்தைங்கள முத்தம் கொடுக்கக் கூடாது” என்றாள் கணவனிடம்.
மெளனமாக இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டார்கள்.
*****
“ஐயா, நான் பிழைப்புக்காக திவச மந்திரங்களைச் சொல்லியும், சடங்குகளில் ‘தில தானம்’ பெற்றும் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த உலகத்தில் சனி தானம் வாங்கிக் கொண்டும், இறந்த வீடுகளில் ‘மிருத்யு’ தானம் வாங்கிக் கொண்டும் வாழும் எங்களைப் போன்றவர்கள் மேல் யாருக்காவது உண்மையில் அக்கறை உள்ளதா? எங்களை யாராவது பொருட்படுத்துகிறார்களா? நாங்களும் இந்த சமூகத்தில் ஒரு பகுதி என்று கணக்கில் சேர்த்துக் கொள்கிறார்களா? யாராவது எங்களை மனிதர்களாக மதிக்கிறார்களா? இது என்ன வாழ்க்கை? படிக்க வசதி இல்லை. பிள்ளைகளைப் படிக்க வைக்கவும் பணம் இல்லை. எந்த விதமான உதவியும் எங்களை வந்து சேர்வதில்லை. அதற்குமேல் அலுவலகங்களின் வேலை என்பது எங்களுக்கு எட்டாக் கனி. வேறு என்ன செய்வது? எங்களை எப்படி வாழச் சொல்கிறீர்கள். இதுவே எங்களுடைய தினப்படி கவலையாக உள்ளது. இந்தச் சிந்தனை எங்களை இடைவிடாமல் வாட்டி வதைக்கிறது. “உங்களுக்கு நாங்கள் துணையாக இருக்கிறோம்” என்று ஆறுதல் கூறுபவர் யார் உள்ளார்? இருக்கும் தரித்திரத்திற்குத் துணையாக நோயும் வந்து சேர்ந்தால் நாங்கள் என்ன செய்வோம்? சாப்பிடுவதற்கே கதி இல்லாமல் வறுமையில் வாடும் நாங்கள் மருத்துவச் செலவுக்கு எங்கே போவது? ஏதோ சில இரக்ககுணம் கொண்ட தர்மாத்மாக்கள் கேட்காமலே உதவினாலும் அது எத்தனை காலம் இருக்கும்? குடியிருக்கும் இந்த ஒரு சிறு கூட்டையும் காலி செய்ய வேண்டுமாம். பிள்ளை குட்டிகளோடு காலி செய்து விட்டு எங்கே போகச் சொல்கிறீர்கள்? என் முன்னால் விரிந்திருக்கும் பதிலற்ற இந்தக் கேள்விகளுக்கு யார் பதிலளிக்கப் போகிறீர்கள்? அதனால்தான் இந்த தற்கொலை முயற்சி.
இப்படிக்கு,
வாழத் தெரியாமல் மரணத்தைச் சரணடைந்த மனிதன்”

கடிதம் எழுதி அருகிலிருந்த சுவாமி படத்தின் கீழ் வைக்கப்போன போது யாரோ படபடவென்று கதவைத் தட்டும் ஓசை கேட்டது. ராகவா திடுக்கிட்டான். அந்த ராத்திரி நேரத்தில், நள்ளிரவின் அமைதியில் யாரது நம் வீட்டுக் கதவைத் தட்டுவது? ஜானகி அச்சத்தோடு கணவனைப் பார்த்தாள். ஒரு நொடி நேரம் இருவரும் அசைவற்று நின்றார்கள். மீண்டும் கதவு தட்டப்படவே ராகவா தன்னையறியாமல், “இதோ வந்துட்டேன்” என்றான். “டம்ளர் மேல் போர்வையைப் போட்டு மூடு” என்று ஜானகிக்கு மெல்லிய குரலில் உத்தரவு கொடுத்துக் கொண்டே கதவைத் திறந்தான்.
“ஐயா, தூக்கத்துல எழுப்பிட்டேனா? மறந்துடப் போறேனேன்னு இப்பவே வந்துட்டேன். ராமநாதம் சார் அனுப்பினார். நாளைக்கு உங்களை காந்திநகர்ல இருக்குற வெங்கடேஸ்வர ராவ் வீட்டுக்கு வரச் சொன்னார். உங்களுக்கு அவர் வீடு தெரியாதேன்னு என்னையும் உங்களோடு வரச் சொன்னார். நாளைக்கு விடிகார்த்தால ரெடியா இருக்கணும். நான் சீக்கிரமா வந்து கூட்டிண்டு போறேன். மறந்துடாதீங்கோ” என்றார் வந்தவர்.
“என்ன காரியமாம்?” என்று தொண்டையை செருமிக்கொண்டு கேட்டான் ராகவா.
“நாளைக்கு அங்கே போன பிறகு உங்களுக்கே புரியும். ராமநாதம் சார் புண்ணியத்தால நமக்கு நல்ல காலம் பொறக்கப் போறதுங்கறது மட்டும் நிச்சயம். சரி சரி, ரொம்ப நாழியாச்சு. நான் கிளம்புறேன். கார்த்தால ரெடியா இருக்கணும், என்ன?” என்று மீண்டும் கூறிவிட்டுக் கிளம்பிச் சென்றார் வந்தவர்.
அவருடைய சொற்களைக் கேட்டு திக்குமுக்காடிப் போன ராகவா, “அடடா, அவருடைய பெயரைக் கூட கேட்டுத் தெரிஞ்சுக்கலையே” என்று எண்ணிக் கொண்டே கதவைத் தாழிட்டு விட்டு உள்ளே வந்தான். அதற்கிடையில் அவசர அவசரமாக குளிர்பானத்தில் கலந்த திரவத்தை சாக்கடையில் கொட்டிவிட்டு, அந்த கிளாஸ் தம்ளர்களைக் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு படபடக்கும் இதயத்தோடு நின்றாள் ஜானகி. உள்ளே வந்த கணவனைப் பார்த்ததும் அவனிடம் ஓடிச்சென்று இறுகத் தழுவிக் கொண்டு விம்மி அழுதாள்.
குழந்தைகள் உறங்கிக் கொண்டிருந்த இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். “ஒரு கண நேரத்தில் எத்தனை பயங்கரமான விபரீதம் நடக்க இருந்தது?” என்று முணுமுணத்துக் கொண்டே மீண்டும் மீண்டும் குழந்தைகளை அணைத்து முத்தமிட்டாள்.
ராகவாவின் உள்ளத்திலும் அதே உணர்வு. பதைபதைக்கும் நெஞ்சோடு மனைவியையும் பிள்ளைகளையும் பார்த்துக் கொண்டிருந்தான். “அவர் ஒரு நொடி நேரம் தாமதமாக வத்திருந்தால்?” என்று நினைத்து நினைத்துத் துடித்தான் ராகவா.
மெதுவாக சென்று ஒரு கையால் மனைவியையும் மறுகையால் உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகளையும் அணைத்துக் கொண்டான். “நாளைக்கு ராமநாதம் மாமா வந்து பார்க்கச் சொன்னாராம். நீயும் கேட்டே இல்லயா?” என்றான்.
“ஆமாம்” என்பது போல் தலையசைத்தாள் ஜானகி. அவர்களுடைய கண் முன்னால் பிரகாசமான எதிர் காலம் மகிழ்ச்சியாகக் காட்சியளித்தது. எண்ணற்ற ஆசைகளும், ஆலோசனைகளும் கண் முன்னால் வந்து சென்றன. வாழ்க்கையின் மேல் ஆசை ஏற்படத் தொடங்கியது. புது உற்சாகம் உண்டானது. வாழ்க்கைக்கு ஒரு நம்பிக்கையும் பாதுகாப்பும் கிடைத்தாற்போல் இருவரும் உணர்ந்தனர். அன்றிரவு அளவற்ற மகிழ்ச்சியை அவர்கள் உள்ளம் அனுபவித்தது.
——-
Discover more from சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026
Subscribe to get the latest posts sent to your email.
