பயங்கரமான கனவிலிருந்து திடுக்கிட்டு எழுவது போல்தான் இருந்தது, மொபைலில் படித்த செய்தி.
சுந்தரேசன் இறந்து போய்விட்டான். மரியாதையுடன் சொல்லணும் இல்லையா?
‘…காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.’ வாட்சப் செய்தி.
போன மாதம் வரை அவனது வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டிருந்தவன் இப்போ போயிட்டான்.
உடனே சுந்தரேசனின் மொபைலுக்கே போன் செய்தான்.
அவனது மகள்தான் எடுத்தாள்.
“எப்படிம்மா இப்படி திடீர்னு?”
“தெரியலை அங்கிள். தூக்கத்திலேயே ஹார்ட் அட்டாக் ஆகியிருக்கும்னு டாக்டர் சொன்னார். டயபடிக் அப்படிங்கறதுனால.. சைலண்டா..” விசும்பினாள்.
“நீங்க அவரோட க்ளோஸ் ஃப்ரெண்டுன்னு அம்மா சொன்னாங்க.. நீங்க அப்பாவோட மத்த ப்ரெண்டுகளுக்கு மெசேஜ் பண்ண முடியுமா?”
‘அவனென்ன க்ளோஸ் ப்ரெண்டா எனக்கு? என்னைக் க்ளோஸ் பண்ணக் காத்துக்கிட்டிருந்தவனாச்சே.. சின்ன வயசுலேர்ந்து ஸ்கூல்ல ஒண்ணாப் படிச்சு வளர்ந்ததுனால அவனை நல்லாவே தெரியும். தன்னோட சுயநலத்துக்காக யாரை வேணும்னாலும் கவிழ்த்து விடுவான்… அது மட்டுமா.. முதுகில குத்திவிடுவான்..’
‘வேண்டாம்.. அந்த ப்ளாஷ்பேக் எதற்கு இப்போது? ஆக மொத்தம் சுந்தரேசன் செத்துப் போயிட்டான். அதை நான் எல்லார் கிட்டேயும் சொல்லணும். எப்படி சொல்றது..?’ படுக்கையில் அமர்ந்தபடி யோசித்தான்.

சட்டென்று சிவன் பார்க் வாட்சப் க்ரூப் ஞாபகம் வந்தது. அதில், நூறு பேராவது இருப்பார்கள். அதில் முப்பதுக்கும் குறையாமல் சுந்தரேசனுக்குத் தெரிந்தவர்கள் உண்டு. அதில் ஒரு மெசேஜ் போட்டால் போதுமே என்று தோன்றியது. அது போல ரிட்டயரானவர்களின் குரூப், ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் க்ரூப், யோகா க்ரூப் என்று நிறைய இருக்கு. எல்லாத்திலேயும் போட்டுவிட வேண்டியதுதான்.
ஆனால் நாலு வரியில் ஒரு செய்தியைப் போட்டு அப்படியே அதை விட்டுவிட மனது வரவில்லை அவனுக்கு. அவனது ரத்தத்திலேயே அந்த வழக்கம் இல்லை.
நல்லதோ, கெட்டதோ நேரில் ஒவ்வொருத்தராகக் கூப்பிட்டுத் தம்பட்டம் அடிக்கையில் உள்ளூர ஒரு சந்தோஷம் வருமே. அதுவும் அவன் முதலில் சொல்லித்தான் அவர்களுக்குத் தெரியும் என்றால் கூடுதல் சந்தோஷம்… அது ஒற்றை மெசேஜ் அனுப்புவதில் கிடைத்து விடுமா என்ன?
தற்போது ரிட்டையர் ஆகி வெட்டிப் பொழுது போக்கும் காலத்தில் மட்டுமல்ல, வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போதும் அவன் அப்படித்தான்.
ராயப்பேட்டை கிளை மானேஜர் மாற்றலானாலும், தேனாம்பேட்டை ஆபிசர் சஸ்பென்ஷன் அல்லது ப்ரமோஷன் எதுவாக இருந்தாலும் அவனுக்கு முதலில் செய்தி எப்படியோ வந்து சேர்ந்து விடும். சில சமயம், பெண் ஊழியர்கள் கர்ப்பம் ஆவதும், அபார்ஷன் ஆகிறதுமான செய்தி கூட பழக்க தோஷத்தில் அவனுக்கு வந்து விடும். மண்டல ஆபீசில் ஸ்டாப் டிபார்ட்மெண்ட்டில் இருக்கிற நண்பன் அவனைக் கூப்பிட்டு அதையும் சொல்லித் தொலைப்பான்.
மற்ற விஷயங்களைச் சொல்கிற மாதிரி பொம்மனாட்டி சமாச்சாரங்களைத் தம்பட்டம் அடிக்க முடியுமோ? அதனால் அச்செய்திகளை கூட வேலை பார்க்கிற கேஷியர் சோனா மூலம் கசிய விடுவான். அவளிடம் சொன்னால் உலகத்திற்கே சொன்ன மாதிரி. அவளுக்கு நாலு மொழிகள் வேறு தெரியும். அப்புறம் என்ன? ஓடிடி மாதிரி பல மொழிகளில் செய்தி பரவிவிடும். என்னதானிருந்தாலும், அவரவர் பாஷைகளில் வம்பளப்பதில் உள்ள சுகம் இருக்கே!
மனைவி பெட்ரூமிற்குள் எட்டிப் பார்த்தாள்.
“என்ன இன்னிக்கு… காலையிலேர்ந்து மொபலைக் குடைஞ்சிக்கிட்டு இருக்கீங்க.. காப்பி குடிக்க வாங்க” என்றாள்.
பல்லை அப்புறமாகக் கூட தேய்த்துக் கொள்ளலாம். ராத்திரி பல்லைத் தேய்த்து விட்டுத்தானே படுத்திருக்கிறான். ஒரு நாளைக்கு பல்லைத் தேய்க்காமல் காப்பியைக் குடித்தால்தான் என்ன? தலைக்கு மேல் நிறைய வேலை இருக்கிறது அவனுக்கு.
காப்பியை ஒரு மூச்சில் குடித்துவிட்டு, ஒவ்வொருத்தராய் போனில் அழைக்க ஆரம்பித்தான்.
“எமனே உன் கிட்ட சொல்லிட்டுத்தான் கயிறை வீசுவான் போலிருக்கு.. எமகாதகன்டா நீ… எப்படித்தான் உனக்கு முதல்ல விஷயம் தெரியுதோ..” செய்தியைக் கேட்ட கோபாலன் வருத்தப்பட்ட கையோடு அவனைப் பாராட்டவும் செய்தான்.
ஒரு சில நண்பர்கள் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ந்தார்கள்.
“என்னை விட சின்ன வயசுதானே அவனுக்கு.. “ என்றதுடன் “நமக்கு என்னைக்கோ” என்று வெங்கடராமனும்,
“கொடுத்து வெச்சவன்.. தூக்கத்துல சொல்லிக்காம போய்ச் சேந்துட்டான்.. யாருக்கும் செலவு வைக்காமல்,..” என்று ராமமூர்த்தியும் என்று ரியாக்ஷன் லிஸ்ட் நீண்டு கொண்டு போனது.
போனில் சார்ஜ் தீர்ந்து கொண்டிருந்தது. அதுவும் எப்போது வேண்டுமானாலும் உயிரை விடும். சார்ஜிங் போட்டு அப்படியே அவன் போனில் பேசுவதில்லை. பவர் பாங்க் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அதற்கு சார்ஜ் போட்டால்தானே பலன்? காரின் ஸ்டெப்னி டயருக்கு காற்று அடிக்காமல் வைத்திருந்தா பிரயோசனம் உண்டா..?
ஆனால், பெருவாரியான உரையாடல்களில் இருந்து, அவன்தான் சுந்தரேசனின் மரணச் செய்தியை அறிவித்திருக்கிறான் என்பது உறுதியாகத் தெரிந்தது. அதில் ஒரு திருப்திதான் அவனுக்கு.
“யாரு போயிட்டான்னு.. இப்படி தமுக்கு அடிச்சிக்கிட்டு இருக்கீங்க..?” இரண்டாவது காப்பியுடன் வந்த மனைவி.
“உங்கிட்டே பேசறதுக்கு நேரமில்லை.. ஆனாலும் குவிக்கா சொல்றேன்.. மேலே கேக்காதே.. சுந்தரேசன் போயிட்டானாம்..”
“ஐயையோ.. யாரு உங்க ப்ரெண்டு சுந்தரேசனா?”
“இப்பத்தானே சொன்னேன். பார்லிமெண்ட் செஷன் மாதிரி, கிளைக் கேள்விகள் கேட்கக் கூடாதுன்னு? “ என்றபடி அடுத்த நண்பரை மொபைல்லி அழைத்தான்.
மனைவி அவன் பக்கத்தில் அப்படியே உட்கார்ந்து கொண்டாள்.
அவர்களது இரண்டு மகன்களும் படித்து, வேலைக்குப் போய் கல்யாணமும் ஆகி வெளியூரில் செட்டில் ஆகியாயிற்று. அவளுக்கு அப்படியொன்றும் காலையில் கிச்சன் வேலை ஒன்றுமில்லை.
அப்படி வேண்டுமெனில், சாய் கேட்டரிங்கில் போனில் சொன்னால் போதும். இட்லி, வடை, பொங்கல் என்று ஜமாய்த்துவிடுவான். சாம்பார் கொஞ்சம் காரமாக இருக்கும்.
பரவாயில்லை..
இப்போ சுந்தரேசர்..
மொபைலின் வாயை மூடிக் கொண்டான்.” இப்போ எதுக்குடி எதுத்தாப்புல உக்காந்துண்டு இருக்க?”
“எங்கிட்டத்தானே ஒண்ணும் சொல்ல மாட்டீங்க.. ஆனால் உங்களோட நண்பர்களுக்கு விலாவாரியாச் சொல்றீங்க.. அதை நானும் கேட்டுட்டுப் போறேன்.. இதுல உங்களுக்கு என்ன நஷ்டம்… “ என்று நக்கலடித்தாள்.
கூடவே, “ஆமாம். நாம் துக்கம் விசாரிக்கப் போகணும்தானே.. அதுவும் உங்க பரம சினேகிதன். அவரோட பொண்டாட்டி வேறு சின்ன வயசுலேர்ந்து தெரியும். அப்போ, போய்ட்டு வந்து குளிக்கிறதுக்கு வசதியா ஒரு பழைய சுடிதாரைப் போட்டுக்கிட்டு வந்திடறேன்.. எழவு விசாரிக்கறதுல ஒரு வசதி.. சீவி சிங்காரிச்சிக்க வேண்டாம். புடவைன்னா தலைப்பைப் போத்திக்கிட்டு போனாலும் போதும்..” என்று மூச்சு விடாமல் பேசினாள்.
அவன் பதிலே சொல்லாமல், அடுத்து யாரை அழைக்கவேண்டும் என்று பார்த்தபடி இருந்தான்.
“யாராவது செத்தாப் போதுமே.. நீங்க பிசிதான்.” என்று பழிப்புக் காட்டிவிட்டு மனைவி எழுந்து போனாள்.
அப்பாடி.. என்று நினைத்துக் கொண்டு அடுத்த நண்பரைக் கூப்பிடுவதற்கு ஆயத்தமானான்.
டிங்கென்ற ஒலியுடன் வாட்சப் செய்தி சிவன் பார்க் நண்பர்கள் க்ரூப்பில் வந்து விழுந்தது.
அவசரமாய் அதைத் திறந்து படித்தான்.
.. வேறென்ன.. சுந்தரேசனின் மரணச் செய்திதான்.. அடப்பாவி.. அவனுக்கே மெசேஜ் அனுப்புகிறவன் எவன்..?
போனைப் பார்த்தான். மும்பையிலிருந்து கடன்காரன் ஜோசப் அனுப்பி இருக்கிறான். அவனுக்கு யார் சொல்லித் தொலைத்தார்கள்.. அவனோ மராட்டிக்காரன். அவன் எதற்காக இப்படி முந்திக் கொள்ளணும்.? ‘இன்னும் பாதிக் கிணறு கூட தாண்டவில்லையே..!’
செத்துப் போன சுந்தரேசனோட அவன் என்ன பள்ளிக் காலத்திலிருந்து படித்தவனா என்ன? என்ன உரிமை இருக்கு இந்த ஜோசப் கடங்காரனுக்கு?
உடனே அவனுக்கு போன் செய்தான். ஆரம்ப நல, குசலா விசாரிப்பு. பின்னர், மேட்டருக்கு வந்தான்.
“நான் உனக்கு சொல்றதுக்கு முன்னாடி, சுந்தரேசன் நியூஸ் எப்படித் தெரியும்?” பதில் தெரிந்தே ஆகவேண்டும் அவனுக்கு.
“அவன் டாட்டர்தான் எனக்கு மெசேஜ் போட்டிருந்தாங்க” என்றான் ஜோசப்.
“அப்படியா? ஆச்சரியமா இருக்கே?”
“ஏன் அவன் எனக்கு ப்ரெண்டா இருக்கக் கூடாதா?” என்றவன் தொடர்ந்தான். “உன் ப்ரெண்ட்.. பாம்பேக்கு ட்ரான்ஸ்பர் ஆகி வந்த போது, நான்தான் அவனுக்கு காட்கோபர்ல ப்ளாட் வாடகைக்குப் புடிச்சுக் குடுத்து, பசங்களுக்கு ஸ்கூல் அட்மிஷன்.. அப்படித்தான் நாங்க க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் ஆனோம்” பழங்கதைகளைப் பேசிக் கொண்டே போனான்.
இன்னும் எவ்வளவு பேருக்கு அவன் போன் செய்ய நினைத்திருந்தான். கடங்காரன் போட்ட ஒரே வாட்சப் செய்தியில் எல்லாம் போச்சே?
இனி யாரைக் கூப்பிட்டுச் சொன்னாலும், ‘அதான் தெரியுமே’ என்று சொல்லி விட்டால்? ஆறின கஞ்சி பழங்கஞ்சிதானே?
போனை சார்ஜரில் சொருகிவிட்டு துக்கத்தில் ஆழ்ந்தான் வேதமூர்த்தி.
கணேசனிடமிருந்து போன் வந்தது. வேதமூர்த்தி போன் செய்த போது பிசியாக இருந்தான்.
வேதமூர்த்தியே பேசத் தொடங்கினான்.
“ஒரு விஷயம் தெரியுமா.. சாரி..காலங்கார்த்தல சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க.. ஆமாம்.. இட்ஸ் எ பேட் நியூஸ்.. நம்ம சுந்தரேசன்.. அட செல்பிஷ் சுந்தரேசன்.. ஆமாம். நேத்தி ராத்திரி தூக்கத்திலேயே.. ஹெமரேஜ்.. டயபடிக் வேற.. வலியே தெரியாம.. இட்ஸ் எ சைலண்ட் கில்லர்..” என்று சொல்லிக் கொண்டு போனான்.
“இதைச் சொல்லத்தான் கூப்பிட்டியா? அதுதான் ஜோசப் வாட்சப்புல மெசேஜ் போட்டுட்டானே” என்றான் கணேசன்.
அவனுக்கு சப்பென்று ஆனது.
“ஆனா ஒரு இன்பர்மேஷன் வேணும்..அவனோட பசங்கள்ளாம் உள்ளூர்லதான் செட்டில் ஆகியிருக்காங்களா.. பாடி எப்ப எடுக்கறாங்க? இன்னிக்கா நாளக்கான்னு கேட்டுட்டு அதை வாட்சப்புல மெசேஜ் போடேன்…” என்றான் கணேசன்.
“நோ ப்ராப்ளம் கணேசன். மெசேஜ் எதுக்கு .. உன்னைக் கூப்பிட்டே சொல்லிடறேனே.. சுந்தரேசனுக்காக இதைக் கூடப் பண்ணலேன்னா எப்படி?”
கணேசன் நன்றி சொல்லிவிட்டு போனை வைத்து விட்டான்.
சுந்தரேசனின் மனைவியிடம் அந்தத் தகவலையும் வாங்கிவிட்டால் . அடுத்த ரவுண்டு எல்லோரையும் கூப்பிட்டுத் தகவலைச் சொல்லிவிடலாம். ஜோசப்பிடம் மட்டும் கடைசியாகச் சொன்னால் போதும்.
அடுத்த தலைப்புச் செய்திக்காக சுந்தரேசனின் மனைவிக்கு போன் செய்ய ஆரம்பித்தான்.
எடுத்தாள்.
“இப்ப எதுக்கு போன் பண்ணினே.. ? போன்ல உன் பெயரைப் பார்த்ததும் என்னோட பொண்ணு என்னையே பாக்கறா”
“இல்ல நித்யா.. உன்னோட பசங்கள்ளாம் வந்துட்டாங்களா.. பாடியை எப்ப எடுக்கறாங்க.. அந்த இன்பர்மேஷன் கிடைச்சா.. பிரண்ட்சுக்கு சொல்லிடுவேன்..”
“எதுக்கு.. செய்திகளை முந்தித் தருவது நான்தான்னு தம்பட்டம் அடிச்சிக்கறதுக்கா.. அதுக்கு முன்னால ஒரு ந்யூஸ் சொல்றேன்.. அதை முதல்ல சொல்லு.. எம் புருஷன் ..அதான் உன்னோட பால்ய கால பிரண்டு.. அவனுக்கு நம்மளோட ஸ்கூல் டயத்துல இருந்த க்ரஷ் அவனுக்குத் தெரியுமாம்.. “
“ஐயையோ.. எப்பலேர்ந்து?”
“எங்க கல்யாணம் ஆனதுக்கு அப்புறத்திலேர்ந்து”
“எப்படி.. “
“உன்னை மாதிரி ஒரு ஓட்டை வாய் ப்ரெண்டு எனக்கு இருக்காளே.. அவள் என் வீட்டுக்கு வந்து.. சுந்தரேசனைப் பாத்துட்டு.. ஷாக் ஆயிட்டா.. அப்ப.. வேதமூர்த்திக்கு என்னாச்சுன்னு ஒரே வார்த்தையில போட்டுக் கொடுத்திட்டா”
சுந்தரேசனின் பல வருட விரோதம்.. அதன் காரணம் அவனுக்குப் புரிந்தது.
“நித்யா.. அது விடலைக் காதல்தானே…. “
“ஆனாலும் .. நேத்திக்கு ஏதோ பேச ஆரம்பிச்சு சண்டையில முடிஞ்சு.. எங்கிட்ட கத்தினார் .. நீ வேதமூர்த்தியை கல்யாணம் பண்ணிக்கிட்டு இருந்தா சந்தோஷமா இருந்திருப்பியோன்னு கேட்டார்.. நானும் ஆமாம்னுட்டேன்…. அதிலதான் அவருக்கு பிபி ஏறிப் போய்… பெட்ரூமில போய் படுத்திட்டார்.. தூக்கத்திலேயே.. ஹார்ட் அட்டாக்..”
சுந்தரேசன் எதனால் இறந்து போனான் என்கிற விஷயம் மிகப் பெரிய தலைப்புச் செய்திதான்.
ஆனால் யாரிடமும் போய்ச் சொல்ல முடியாதபடி..
“சாரி.. நித்யா..” என்றபடி வேதமூர்த்தி போனை அணைத்து வைத்தான்.
***
Discover more from சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026
Subscribe to get the latest posts sent to your email.

அருமையான கதை. கடைசியினல் அந்த ‘நச்’ சூப்பர்!!