இந்தியத் தாவரவியலின் முன்னோடிகள் – அச்சுதனும் ரீடியும்

கொச்சியிலிருந்த பிரம்மாண்டமான அந்த டச்சுக்கோட்டை முழுக்க உப்புக் காற்றின் ஈரம் நிறைந்திருந்தது. கொச்சி ஆளுனரான வான் ரீடி மிகுந்த மனவருத்தத்துடன் ஒரு சாளரத்தின் அருகே அமர்ந்து வெளியே விரிந்திருந்த அரபிக்கடலை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.  

அது 1674-ம் ஆண்டு. ஐரோப்பிய இறைப்பணியாளர் மேத்யூவின் உதவியுடன் மலபார் பகுதியின் தாவரங்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் சில ஆண்டுகளாக ஈடுபட்டிருந்த வான் ரீடி, அது ஏறக்குறைய முழுமையடைந்து  கையில் கிடைத்தபோது தாவரங்களின் வகைப்பாட்டில் பிழைகள் இருந்ததையும், பல சித்திரங்கள் துல்லியமாக இல்லாததையும் கண்டு மனமுடைந்து போனார். 

அதுவரையிலும் ஐரோப்பிய தாவரவியலாளர்களை மட்டுமே நம்பி இருந்த வான் ரீடி, மலபார் பகுதியின் தாவரங்களை  எப்படியாவது முறையாக ஆவணப்படுத்த முடிவுசெய்து, தனது நண்பரான கொச்சி அரசரின் உதவியை நாடிச் செல்ல முடிவுசெய்தார். என்ன கேட்டாலும் மறுக்கவே முடியாத உதவியொன்றை அரசருக்கு வான் ரீடி முன்பு செய்திருப்பதால், நிச்சயம் அவரிடம் உதவி கிடைக்கும் என அறிந்திருந்ததால், உடனே கொச்சி அரசரைச் சந்திக்கப் புறப்பட்டார். குதிரையில் செல்லும் வழியில் பழைய நினைவுகளை அவரது மனம் அசைபோட்டது.

1660-களில் கொச்சியில் போர்த்துகீசியர்களுக்கும் டச்சுக்காரர்களுக்கும் இடையே கடும் போர் நிலவியது. அதே சமயம் கொச்சி அரச குடும்பத்திலும் வாரிசுரிமைப் போட்டி தீவிரமாக நடந்தது. அரச குடும்பத்தினரை முழுவதுமாகக் கொல்ல போர்த்துகீசியர்கள் திட்டமிட்டிருந்தார்கள். ஒரு பழைய கோவிலில் கொச்சி ராணி கங்காதர லக்ஷ்மி ஒளிந்திருந்தார். அப்போது மிக இளைஞராக இருந்த வான் ரீடி, அந்த கோவிலுக்குச் சென்று கொச்சி ராணியை ஒரு பிராமணரின் முதுகில் சுமக்கச்செய்து டச்சு முகாமிற்கு   தூக்கிக்கொண்டு வந்து காப்பாற்றினார்.

ராணியைக் காப்பாற்றியதால், டச்சுக்காரர்களுக்கு ஆதரவாக இருந்த வீரகேரள வர்மாவை அரசராக நியமிக்கும் உரிமையை டச்சுக்காரர்கள் அடைந்தார்கள். கைம்மாறாக வீரகேரள வர்மா வான் ரீடியுடன் நல்ல நட்புக் கொண்டிருந்ததோடு, அவரைத் தனது பிரதான ஆலோசகராகவும் நியமித்துக்கொண்டார். இந்த நட்புதான் டச்சுக்காரர்கள் கொச்சியில் உறுதியாகக் காலூன்ற உதவியது.

மிளகு, லவங்கப்பட்டை வணிகத்திற்காக டச்சுக்காரர்கள் சில ஒப்பந்தங்களைக் கொச்சி அரசருடன் ஏற்படுத்திக்கொண்டார்கள். இந்த ஒப்பந்தத்தின் மூலம் வான் ரீடிக்குக் கேரளா முழுவதும் பயணம் செய்யவும், தாவரங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கவும் தேவையான அதிகாரமும் பாதுகாப்பும் கிடைத்தன.

1656-ல் நெதர்லாந்தின் பிரபு குடும்பத்தைச் சேர்ந்த இளம் ராணுவ வீரரான வான் ரீடி (Hendrik Adriaan van Rheede tot Drakenstein), கப்பலில் இந்தியாவிற்கு வந்தார். போர்ச்சுகீசியர்களுக்கு எதிரான பல கடும் போர்களில் ரீடியின் தீரத்தைக்கண்ட டச்சு அரசு அவருக்கு பல  பதவி உயர்வுகள் அளித்தது, விரைவில் ரீடி மலபாரின் ஆளுநராக  வந்து சேர்ந்திருந்தார்.

இளவயதிலேயே தாய் தந்தையை அடுத்தடுத்து இழந்த ரீடி அனாதையானார். உறவினர்களால் வளர்க்கப்பட்ட அவர், இளமையில் பெரும் கலகக்காரராகவே அறியப்பட்டார். தன்னுடைய 20-வது வயதில் ராணுவத்தில் இணைந்தார். ராணுவத்திலும் அவர் துணிச்சல் மிக்க  போர்வீரராகவும், முரட்டுத் துணிச்சல் மிக்கவராகவும் அறியப்பட்டார்.

அப்போது கேரளக் கடற்கரை  முழுவதுமே ஐரோப்பியர்களால் ‘மலபார் பகுதி’ என்று அழைக்கப்பட்டது. தாவரவியலில் முறையான படிப்போ அல்லது பயிற்சியோ வான் ரீடிக்கு இல்லை என்றாலும், மலபார் பகுதியின் தாவர வளம் அவருக்கு மிகுந்த ஆர்வத்தை ஊட்டியது.  நெதர்லாந்தில் வான் ரீடியின்  தந்தை வன அதிகாரியாக இருந்ததே, ரீடிக்குத் தாவரங்களின் மீது ஈர்ப்பு உண்டாக ஒரு முக்கியக் காரணமாக இருந்திருக்கலாம். உள்ளூர்வாசிகள் பல நோய்களுக்கு எளிய மூலிகைகளைக் கொண்டு சிகிச்சை பெற்று குணமடைவதையும் அவர் கவனித்தார்.

வான் ரீடி மலபார் தாவரங்களை ஆவணப்படுத்த விரும்பியதில் அவரது ஆர்வம் மட்டுமல்லாது அரசியலும் கலந்திருந்தது. ரீடியின் மேலதிகாரி ரைக்ளாப் வான் கோயன்ஸ் (Rijcklof van Goens), டச்சு தலைமையகத்தை இலங்கையின் கொழும்புப் பகுதியில் அமைக்க விரும்பி அரசுக்கு மிகுந்த அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார். 

அவருடன் முன்விரோதம் கொண்டிருந்த ரீடி, அதனை முறியடித்து, தனது விருப்பப்படி மலபாரில் தலைமையகத்தை அமைக்க வேண்டி, கொழும்புவைக் காட்டிலும் மலபார் வளம் நிறைந்தது என நிரூபிக்க அப்பகுதியின் அரிய தாவரங்களை ஆவணப்படுத்தி, ஐரோப்பாவிற்கு அனுப்பநினைத்தார், ஆனால் அவர் நினைத்த துல்லியம் அந்தத்தயாரிப்பில் இல்லை.

கொச்சி அரசரிடம்  ரீடி விஷயத்தைச் சொன்னதும், அவர் உடனே மற்ற குறுநில அரசர்களிடமிருந்தும், உள்ளூர் மக்களிடமிருந்தும் தாவரங்கள் மற்றும் தகவல்களைச் சேகரிக்க முழு ஒத்துழைப்பு வழங்கினார். மேலும், அரண்மனை வைத்தியர்களையும், ஈழவ சமூகத்தைச் சேர்ந்த கொச்சியின் மிகப்புகழ்பெற்ற ஆயுர்வேத வைத்தியர் இட்டி அச்சுதனையும் வான் ரீடியிடம் அவர் அறிமுகம் செய்து வைத்தார். 

அரசரின் அழைப்பின் பேரில் கோட்டைக்கு இட்டி அச்சுதன் முழு அரசு மரியாதையுடன் வரவழைக்கப்பட்டார். அவைக்கூடத்தின் அந்தச் சந்திப்பை பலர் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். வான் ரீடி மிக உயரமாக, கட்டுமஸ்தான உடலமைப்புடன், ஐரோப்பியப் பட்டு அங்கியும் பொய்முடியும் அணிந்து கம்பீரமாகக் காட்சியளித்தார். அதற்கு நேர் எதிராக, கொச்சி மண்ணின் மைந்தனான இட்டி அச்சுதன் வெறும் முண்டு மட்டும் உடுத்திக்கொண்டு, கைகளில் பழைய பனை ஓலைச் சுவடிக்கட்டுகளுடன் வந்திருந்தார்.

அவர்கள் இருவருக்குமிடையில் மொழிப் பிரச்சனை இருந்ததால், துபாஷியாக (மொழிபெயர்ப்பாளராக) இம்மானுவேல் என்னும் பல மொழிகள் பேசத் தெரிந்த உள்ளூர்க்காரர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அச்சுதனின் எளிய தோற்றம், அவரது தாவர அறிவைக் குறித்த சந்தேகத்தை வான் ரீடியிடம் உண்டாக்கியது. அவர் அச்சுதனின் அறிவைச் சோதிக்க நினைத்தார்.

ரீடியிடம் இருந்த பிழைகள் கொண்டிருந்த படைப்பில் இருந்த சித்திரங்களைப் பார்த்து, அவற்றின் வாழிடம், வளரியல்பு, மருத்துவப் பண்புகள், அவை வளரும் மண் வகை மற்றும் அவற்றின் மலரும் காலம் ஆகியவற்றைப் பற்றி இட்டி அச்சுதன் மிகத் தெளிவாகக் கூறினார். தோற்றத்தை வைத்து அவரைக் குறைவாக எடைபோட்டிருந்த வான் ரீடி வாயடைத்துப் போனார். ஐரோப்பியர்கள் தாவரங்களை வகைப்படுத்துதலை இன்னும் முழுமையாக செய்து முடிக்காதிருக்கையில், இட்டி அச்சுதனின் இயற்கை அறிவும் வகைப்பாட்டியல் அறிவும் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

தலைமுறைகளாக பாரம்பரிய வைத்தியர்களாக இருந்த அச்சுதனின் குடும்பத்திற்குச் சொந்தமாக ஆயிரக்கணக்கான பழைய பனை ஓலைச் சுவடிகள் இருந்தன. அவற்றில் மூலிகைத் தாவரங்களைப் பற்றிய குறிப்புகள், தாவரத்தின் எந்தப் பாகம் மருத்துவப் பயன்களைக் கொண்டது, மருந்துகளைத் தயாரிக்கும் முறை மற்றும் சிகிச்சை முறைகள் ஆகியவை விளக்கமாக எழுதப்பட்டிருந்தன. அவற்றை ரீடிக்கு அச்சுதன் விளக்கினார்.

வான் ரீடி தயாரிக்கவிருந்த மலபாரின் தாவர ஆவணத்திற்காகத் தயாரித்து வைத்திருந்த லத்தீன் மொழியிலான அட்டவணைகளையும் பட்டியல்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, முழுக்க முழுக்க அச்சுதனின் தாவரவியல் அறிவை மட்டுமே சார்ந்திருக்க அன்றே முடிவு செய்தார்.

வான் ரீடி இட்டி அச்சுதனுக்கு முழு அதிகாரமும் முழு மரியாதையும் அளித்து, அவருக்குத் தேவையான குழுவையும் முறையாக உருவாக்கிக் கொடுத்தார். ஐரோப்பியர்கள் இந்தியர்களை இப்படி நடத்தியது அக்காலத்தில் மிக அரிதாகவே நடந்தது. காலனித்துவ வரலாற்றாளர்களால் வியந்து பேசப்படும் ஒரு விஷயம்  வான் ரீடிக்கும் இட்டி அச்சுதனுக்கும் இடையே நிலவிய மிகச் சிறப்பான இந்த அறிவார்ந்த நட்புத்தான்.

17-ம் நூற்றாண்டின் கடுமையான சாதியக் கட்டமைப்புகள் மற்றும் நிறவெறி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளுக்கு மத்தியில், இவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த பரஸ்பரப் புரிதலும் நட்பும் மிகுந்த ஆச்சரியத்திற்குரியது.

இது அக்காலத்தில் பெரும் விவாதத்திற்கு உள்ளானது; ஏனெனில், அச்சுதன் அக்காலக் கேரள உயர்சாதியினரால் ஒதுக்கப்பட்ட ஈழவ சமூகத்தைச் சேர்ந்த ஒரு பாரம்பரிய வைத்தியர். இப்போது ‘சேர்த்தலா’ என்று அழைக்கப்படும் முந்தைய ‘கடகரைப்பள்ளி’ என்னும் கடற்கரை கிராமத்தில் பிறந்தவர். பிராமண அறிஞர்கள் மற்றும் ஐரோப்பிய அறிஞர்கள் இருந்த அதே குழுவில், அவர்களுக்கு இணையான இடத்தில் அச்சுதனை வான் ரீடி அமர வைத்தார். ஒரு  வைத்தியரை, ஆதிக்கச் சமூக அறிஞர்களுக்குச் சமமாக  ஒரு உயர்பதவியிலிருந்த ஐரோப்பியர் அங்கீகரித்தது, 17-ம் நூற்றாண்டின் சமூகச் சூழலில் ஒரு புரட்சிகரமான செயலாகக் கருதப்படுகிறது.

அச்சுதன், தனது குடும்பச் சொத்தாகத் தலைமுறை தலைமுறையாக வைத்தியர்களாக இருந்து வந்த தனது முன்னோர்கள் பாதுகாத்து வைத்திருந்த பனையோலைச் சுவடிகளிலிருந்து, வான் ரீடிக்குத் தேவையான அனைத்துத் தாவரவியல் தரவுகளையும் வழங்கினார். அந்தப் பனையோலைகளில் இருந்த மருத்துவ ரகசியங்களே ‘ஹோர்டஸ் மலபாரிகஸ்’ உருவாக முக்கிய அடிப்படையாக அமைந்தன.

அக்காலத்தின் கடுமையான சமூகக் கட்டுப்பாடுகளைக் காட்டிலும், இட்டி அச்சுதனின் ஆழமான அறிவின் மீது வான் ரீடி பெரும் மரியாதை கொண்டிருந்தார். வான் ரீடியும் அச்சுதனும் இந்த ஆவணப்படுத்துதல் பணிக்காக, மலபாரின் சதுப்பு நிலங்களிலும் அடர் காடுகளிலும் இணைந்து பயணித்தனர். பல நாட்கள் காடுகளிலேயே தங்கி, அங்கிருந்த அரிய வகைத் தாவரங்களைச் சேகரித்து, அவற்றின் மருத்துவக் குணங்களை ஆராய்ந்து ஆவணப்படுத்தினர்.

வான் ரீடி அமைத்த அந்த ஆய்வுக்குழுவில் ரங்க பட், விநாயக பண்டிட் மற்றும் அப்பு பட் ஆகிய மூன்று கொங்கணி பிராமண அறிஞர்களும் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் மூவரும் வான் ரீடியும் அச்சுதனும் தொகுத்த தகவல்களைத் தங்களின் அறிவுப்புலத்தைக் கொண்டு சரிபார்த்து உறுதி செய்தனர். 

வான் ரீடியின் நண்பரான யோகன்னஸ் காசேரியஸ் (Joannes Casearius) முழு ஆவணப்படுத்துதலையும் மேற்பார்வையிட்டார். குழுவினர் அடர் காடுகளில் தேடி அலைந்து நேரிடையாகத் தாவரங்களைக் கொண்டு வந்தனர். இட்டி அச்சுதன் அவற்றின் அடையாளங்களைக் கண்டு பெயரிட்டு, பிற தகவல்களையும் அளித்தார். அவருடன் இத்தாலிய கத்தோலிக்க இறைப்பணியாளரான பாதர் மேத்யூஸ் (Father Matheus) இருந்தார். இவ்வாறு பல்வேறு சமூகப் பின்னணியைக் கொண்ட அறிஞர்கள் ஒன்றிணைந்து ஒரு அறிவியல் ஆவணத்திற்காக உழைத்தது அந்த காலத்தின்மிக அரிதான ஒரு நிகழ்வு.

தாவரங்களைப் பறித்துச் சென்று உலர வைத்து (Herbarium) அவற்றை பார்த்து வரைவதற்குப் பதிலாக, வான் ரீடி, தாவரங்கள் வளரும் இடத்திற்கே ஓவியர்களை அழைத்துச் சென்றார். குழுவினர் அடர் காடுகளில் தேடி அலைந்து நேரிடையாகத் தாவரங்களைக் கொண்டு வந்தனர். இட்டி அச்சுதன் அவற்றின் அடையாளங்களைக் கண்டு பெயரிட்டு, பிற தகவல்களையும் அளித்தார்.

மலபாரைச் சேர்ந்த ஓவியர்கள் தாவரத்தின் கிளைகள், இலைகளின் அமைப்பு மற்றும் பூக்கள் விரியும் விதம் ஆகியவற்றை மிகத் துல்லியமாக வரைந்தனர். தாவரத்தின் நிஜமான அளவை (Life-size) அப்படியே காகிதத்தில் கொண்டு வர அவர்கள் முயன்றனர். இதற்காகப் பெரிய அளவிலான காகிதங்கள் பயன்படுத்தப்பட்டன.

 அச்சுதன் மலையாளத்தில் சொல்லச் சொல்ல, பலமொழி அறிஞர்கள் அவற்றை அவரவர் மொழிகளில் எழுதிக்கொண்டனர். 15-க்கும் மேற்பட்ட வைத்தியர்களும் தாவரவியலாளர்களும் அக்குழுவில் இருந்தனர்.

200 நபர்கள் தாவரங்களைத் தேடிக் கொண்டு வரும் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். அப்படிச் சேகரித்தவற்றின் பல விதைகள் டச்சு அரசிற்கு அனுப்பப்பட்டு, அங்கு அவை அறிமுகப்படுத்தப்பட்டு வளர்ந்தன. அவற்றில் பல தாவரங்கள் மிக அரியவை என ஐரோப்பியத் தாவரவியலாளர்களால் அடையாளம் காணப்பட்டன.

ஹோர்டஸ் மலபாரிகஸ் நூலின் தாவர வரைபடங்கள் முதலில் செப்புத் தகடுகளில் செதுக்கப்பட்டன. பின்னர், அந்தத் தகடுகளின் மீது மை தடவப்பட்டு, கையால் தயாரிக்கப்பட்ட உயர்தரக் காகிதங்களை அவற்றின் மீது வைத்து அழுத்தம் கொடுத்து அச்சுகள் எடுக்கப்பட்டன. இந்த ‘காப்பர் பிளேட் என்க்ரேவிங்’ (Copper Plate Engraving) முறை காரணமாகவே, 350 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தத் தாவரங்களின் இலை நரம்புகள் முதல் வேர் முடிச்சுகள் வரை மிகத் துல்லியமாக நம்மால் காண முடிகிறது  இம்முறை Intaglio printing  எனப்பட்டது. ஒவ்வொரு செப்புத் தகடு அச்சிலும் அந்தத்தாவரத்தின் பெயர் நான்கு மொழிகளில் (லத்தீன், மலையாளம், தமிழ் மற்றும் அரபி) பொறிக்கப்பட்டது.

17-ம் நூற்றாண்டின் தமிழ் மற்றும் மலையாள எழுத்துருக்கள் அச்சில் ஏறிய முதல் நூல் இதுதான்.   

ஆவணத்திற்காக வான் ரீடி செலவழித்த பெருந்தொகை, அவருடைய உயர் அதிகாரிகளால் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. நிர்வாக ரீதியாக அவர் கண்டிக்கப்பட்ட போதும், தான் செய்யும் அந்தச் செலவு அச்சுதனின் அனுபவ அறிவை நம்பியே செய்யப்படுவதாகவும், இந்தப் பணி வெற்றிகரமாக முடியும் என்றும் ரீடி உறுதியாகப் பதிலளித்தார்.

ரீடியின் பார்வையில், அச்சுதன் உலகின் ஒட்டுமொத்தத் தாவரங்களையும் அறிந்துவைத்திருந்த ஒரு மாபெரும் அறிஞராகத் தெரிந்தார். அதேபோல், அச்சுதனுக்கு வான் ரீடி என்பவர், தனது குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமாக இருந்த மூலிகை ரகசியங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வந்த ஒரு அறத்தூதராகத் தோன்றினார்.

மிகத் துல்லியமான 794  சித்திரங்களுடனும், 742 தாவரங்களைக் குறித்த விளக்கங்களுடனும்  ஹோர்டஸ் மலபாரிகஸ் முழுமையாக உருவானது.

12 தொகுதிகள் கொண்ட, ‘மலபாரின் தோட்டம்’ என்று பொருள்படும் ஹோர்டஸ் மலபாரிகஸ் (Hortus Malabaricus), 17-ம் நூற்றாண்டின் ஒரு மாபெரும் தாவரவியல் பொக்கிஷம். இந்தியத் தாவரங்கள் குறித்த ஆவணங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த மாபெரும் படைப்பை உருவாக்கி முடிக்க சுமார் 30 ஆண்டுகள் (கிட்டத்தட்ட 1674 முதல் 1703 வரை ) ஆனது. தாவரங்களைச் சேகரித்தல், அவற்றை ஓவியங்களாக வரைதல், உள்ளூர் அறிஞர்களான இட்டி அச்சுதன் போன்றவர்களிடம் இருந்து தகவல்களைப் பெறுதல் மற்றும் அவற்றை லத்தீன் மொழிக்கு மொழிபெயர்த்தல் என மிக நீண்ட உழைப்பு இதில் அடங்கியுள்ளது.

இதன் முதல் தொகுதி 1678-ல் வெளியானது. மொத்தம் 12 தொகுதிகள் கொண்ட இந்த வரிசை 1703 வரை தொடர்ந்து வெளியிடப்பட்டது

பல்லாண்டு கால உழைப்பில் உருவான ஹார்டஸ் மலபாரிகஸில் 794 செப்புத் தகடு சித்திரங்கள்  இடம்பெற்றுள்ளன.  இது இந்தியாவின் மலபார் கடற்கரைப் பகுதியில் (இன்றைய கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு பகுதிகள்) காணப்பட்ட தாவரங்களைப் பற்றிய உலகின் மிக விரிவான மற்றும் பழமையான அறிவியல் ஆவணம்.

ஹோர்டஸ் மலபாரிகஸின் முன்னுரையில் உள்ளூர் மக்களின் தாவரவியல் அறிவு தன்னைப் பிரமிக்க வைத்ததாக ரீடி குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் உள்ளூர் மக்களை வெறும் “தகவல் தருபவர்கள்” (Informants) என்று குறிப்பிடாமல், அவர்களை “நூலாசிரியர்கள்” (Authors/Masters) என்றே கௌரவித்துக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நூலின் மிக முக்கியமான வரலாற்று அம்சம், அதன் முதல் தொகுதியில் இடம்பெற்றுள்ள சான்றொப்பங்கள் (Declarations) தான். இதில் இட்டி அச்சுதன் தனது கைப்பட எழுதிய சான்றொப்பம் உலகப் புகழ்பெற்றது. முதல் தொகுதியில் (Volume 1) இட்டி அச்சுதனின் சான்றொப்பம் இடம்பெற்றுள்ளது. இட்டி அச்சுதன் இதனைத் தனது சொந்த மொழியான மலையாளத்தில், அக்காலகட்டத்தின் வரிவடிவமான ‘கோலெழுத்து’ முறையில் எழுதினார்.

 1675 ஏப்ரல் 20-ம் தேதியிட்ட அந்தச் சானறொப்பத்தில், வான் ரீடியின் வேண்டுகோளின்படி மலபார் காடுகளில் உள்ள தாவரங்களின் மருத்துவக் குணங்களையும், பெயர்களையும் தனது குடும்பப் பாரம்பரிய வைத்திய ஏடுகளின் அடிப்படையில் உண்மையாகத் தெரிவித்துள்ளதாகக் இட்டி அச்சுதன் கையொப்பமிட்டுள்ளார். இட்டி அச்சுதனின் அந்த எழுத்துதான், ஒரு இந்தியத் தாவரவியலாளரின் அறிவு ஐரோப்பிய அறிவியல் நூலில் முறையாக அங்கீகரிக்கப்பட்ட முதல் நிகழ்வாகும்.

அச்சுப்பிரசுரம் அறிமுகமாகியிருந்த அந்தத் தொடக்கக் காலத்தில், அவருடைய கையொப்பமும் குறிப்புகளுமே அந்தப் பிரம்மாண்டமான நூலில் முதல் மலையாள அச்சுப் பதிவுகளாக அமைந்தன.

இட்டி அச்சுதனுடன் பணியாற்றிய மற்ற மூன்று கொங்கணி பிராமணர்களும் அதே முதல் தொகுதியிலேயே தங்களது சான்றொப்பங்களை சமஸ்கிருத மொழியில், தேவநாகரி வரிவடிவத்தில் எழுதியிருக்கின்றனர்.

ஹார்டஸ் மலபாரிகஸ் எத்தனை பிரதிகள் உருவாக்கப்பட்டன என்னும் துல்லியமான எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், ஐரோப்பாவின் முக்கிய  நூலகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் டச்சு கிழக்கு இந்திய கம்பெனியின் உயர் அதிகாரிகளுக்காகச் சில நூறு பிரதிகள் அச்சடிக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இன்று உலகம் முழுவதும் உள்ள முக்கிய அருங்காட்சியகங்கள் மற்றும் தாவரவியல் ஆய்வு மையங்களில் இதன் அசல் பிரதிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அந்த 12 தொகுதிகளில் பல  ஐரோப்பாவின் டச்சு இளவரசர்கள், ஆம்ஸ்டர்டாம் நகர மேயர்கள் மற்றும் டச்சு கிழக்கு இந்திய கம்பெனியின்  உயர்மட்ட அதிகாரிகளுக்குச் சமர்ப்பிக்கப்பட்டன. இது அக்காலகட்டத்தின் அரசியல் மற்றும் நிதி ஆதரவைப் பெறுவதற்காகச் செய்யப்பட்டது.  

முதல் தொகுதி  டச்சு குடியரசின் ஆட்சியாளர்களுக்கும் மற்றும் இளவரசர் வில்லியம் III அவர்களுக்கும் சமர்ப்பிக்கப்பட்டது. இரண்டாம் தொகுதி ஆம்ஸ்டர்டாம் நகரின் மேயர்களுக்கும்  டச்சு கிழக்கு இந்திய கம்பெனியின் இயக்குநர்களுக்கும் சமர்ப்பிக்கப்பட்டது. முதல் தொகுதியின் ஒரு பிரதி, திருவனந்தபுரத்தில் உள்ள அவிட்டம் திருநாள் நூலகத்தில் (Sri Chithira Thirunal Granthasala) இன்றும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, வான் ரீடி தனது நூலின் மூன்றாவது தொகுதியை  கொச்சி ராஜா வீர கேரள வர்மாவுக்கு அர்ப்பணித்தார். இந்த மூன்றாம் தொகுதியில்தான் வான் ரீடி, மலபார் காடுகளின் அழகு மற்றும் அங்குள்ள தாவரங்களின் பன்முகத்தன்மை குறித்து மிகவும் உணர்ச்சிகரமான ஒரு முன்னுரையை எழுதியிருக்கிறார்.

‘ஹார்டஸ் மலபாரிகஸ்’ எந்த அளவுக்குத் துல்லியமாக இருந்தது என்றால், பிற்காலத்தில் தாவர வகைப்பாட்டியலின் தந்தை எனக் கருதப்படும் கார்ல் லின்னேயஸ், தனது வகைப்பாட்டியலை உருவாக்கியபோது இந்த நூலைப் பயன்படுத்திக் கொண்டார். அதைக் கொண்டே நூற்றுக்கணக்கான தாவரங்களுக்கு அவர் இருசொற் பெயரிட்டு (Binomial Nomenclature) வகைப்படுத்தினார். ஒரே ஒரு பக்கத்தில் அந்தத் தாவரத்தின் இலை, மலர், கனி, விதை ஆகியவற்றைப் படம் வரைந்து காட்டியதன் மூலம், ஐரோப்பிய தாவரவியலாளர்களுக்கே தாவரங்களை ஆவணப்படுத்துதலில் ஒரு வழிகாட்டுதலையும் அந்த ஆவணம் செய்தது. 

காலனி ஆதிக்கத்திற்குப் பல்லாண்டுகள் முன்பாகவே, இந்தியாவில் இருந்த தாவரங்கள் குறித்த மரபார்ந்த அறிவுக்கும் மேற்கத்திய அறிவியலுக்கும் ஒரு பாலமாக ‘ஹார்டஸ் மலபாரிகஸ்’ திகழ்ந்தது. வரலாற்றிலேயே மலையாள மொழி முதன்முதலில் அச்சில் ஏறியது இந்த நூலின் மூலமாகத்தான். தாவரவியல் ரீதியாக மட்டுமல்லாமல், மொழியியலாளர்களுக்கும் 350 ஆண்டுகளுக்கு முன்பாகப் புழக்கத்தில் இருந்த மொழியைப் பற்றிய ஒரு நேரடி ஆவணமாக ‘ஹார்டஸ் மலபாரிகஸ்’ இன்றைக்கும் இருக்கிறது.

‘ஹார்டஸ் மலபாரிகஸ்’ நூலை அடிப்படையாகக் கொண்டு கேரளாவில் அமைக்கப்பட்டுள்ள ஹார்டஸ்மலபாரிகஸ் பூங்கா திருச்சூர் மாவட்டத்தில் உள்ள செருதுருத்தி என்ற இடத்தில் அமைந்துள்ளது. சுமார்  30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தாவரவியல் பூங்கா, அந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ள 742 தாவரங்களைச் சேகரித்துப் பாதுகாப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 இங்கு 1,700-க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் உள்ளன. குறிப்பாக, அந்த 12 தொகுதிகளில் இட்டி அச்சுதன் அடையாளம் காட்டிய பெரும்பாலான மூலிகைகள் மற்றும் மரங்களை இங்கே நேரிடையாகக் காணலாம

7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அடர்ந்த காடு போன்ற  ரீடியம் என்னும் பகுதி பறவைகளைப் பார்ப்பதற்கும் இயற்கையை ரசிப்பதற்கும் ஏற்றது. மேற்குத் தொடர்ச்சி மலையின் அரிய வகைத் தாவரங்களைக் கொண்ட பழமையான பகுதி மலபார் தோட்டம் எனப்பெயரிடபட்டிருக்கிறது.

இந்தியாவின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளையும் இயற்கையுடனான தொடர்பையும் விளக்கும் ஒரு பகுதியாக இப்பூங்காவில் .யோகினி கோயில் அமைந்திருக்கிறது.  

இந்த யோகினி கோவில், வெறும் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல;  தாவரவியலையும் கலாச்சாரத்தையும் இணைக்கும் ஒரு அற்புதமான இடமாகும். அங்கே அவ்ழிபடு தெய்வமாக தஷபுஷ்பதேவதைகள் இருக்கிறார்கள்.

தசபுஷ்பம் என்பது கேரளாவின் பாரம்பரியத்தில்  பத்து மூலிகைத் தாவரங்களின் தொகுப்பாகும். இவை ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தெய்வத்துடன் தொடர்புடையவை .(கருக , முயல் செவியன் , திருதாளி , நிலப்பனை, கைய்யுண்ணி, விஷ்ணுகிராந்தி, பூவாங்குருன்னல், முக்குட்டி , உழிஞை ,செருபூளை.) 

இந்தப் பூங்காவின் நுழைவாயிலில் அந்தமானுக்குச் சொந்தமான கொடிமூங்கில் படர்ந்திருக்கும் மாமரத்தடியில், வான் ரீடியின் மார்பளவு சிலை இருக்கிறது. 14 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இந்தப் பூங்காவின் ஒரு பகுதி வான் ரீடியின் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த டச்சு-ஜெர்மன் தாவரவியலாளரான கார்ல் லூத்விக் ப்ளூம் (Karl Ludwig Blume), ஒரு முக்கியமான ஒப்பீட்டை முன்வைத்தார். 17-ம் நூற்றாண்டிலேயே லின்னேயஸ் (Linnaeus) போன்ற உலகப் புகழ் பெற்ற தாவரவியலாளர்களுக்கு இணையான அறிவை அச்சுதன் கொண்டிருந்தார் என்பதைச் சுட்டிக்காட்டி, உலகம் லின்னேயஸைத் “தாவர வகைப்பாட்டியலின் தந்தை” என்று கொண்டாடும் வேளையில், அதற்கு நிகரான அறிவைக் கொண்டிருந்த அச்சுதனை வரலாறு மறைத்துவிட்டதை அல்லது மறந்துவிட்டதை ஒரு வரலாற்றுத் துரோகம் என்றார் அவர். 

அச்சுதனின் பெருமையை நிலைநாட்ட விரும்பிய ப்ளூம், ஒரு தாவரப் பேரினத்திற்கு ‘அச்சுடேமியா’ (Genus Achudemia) என்று பெயரிட்டு அவரை கௌரவித்தார்.

கடந்த 2012-ம் ஆண்டில், சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பாக ஹோர்டஸ் மலபாரிகஸ் நூலில் குறிப்பிடப்பட்டிருந்த தாவரங்களைத் தேடும் பணியைத் தாவரவியலாளர்கள் மேற்கொண்டனர். நவீன டி.என்.ஏ பார்கோடிங் (DNA Barcoding) தொழில்நுட்பத்தின் உதவியுடன் அந்தத் தாவரங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக அடையாளம் கண்டறியப்பட்டன.  

ஹோர்டஸ் மலபாரிகஸ் ஆவணத்தைத் சுமார் 30 ஆண்டுகள் கடுமையாக முயன்று, லத்தீன் மொழியிலிருந்து ஆங்கிலம் மற்றும் மலையாள மொழிகளில் முழுமையாக மொழிபெயர்த்த டாக்டர் கே. எஸ். மணிலால் அவர்களின் பணி மிகுந்த பாராட்டுக்குரியது. இந்த மாபெரும் படைப்பை அவர்  அந்த மூல ஆவணத்தின் நாயகனான இட்டி அச்சுதனுக்கே சமர்ப்பணம் செய்திருந்தார். அந்த மொழிபெயர்ப்பு நூலின் முதல் பிரதியானது, இட்டி அச்சுதனின் பூர்வீகமான சேர்த்தலையில் வசிக்கும் அவருடைய நான்காவது தலைமுறை வாரிசுகளிடமே வழங்கப்பட்டது. ஒரு எளிய வைத்தியரின் அறிவுக்கு, நூற்றாண்டுகள் கடந்த பிறகு ஒரு நவீன கால அறிஞர் செய்த மிகச்சிறந்த கௌரவம் இது.

Kaida

இட்டி அச்சுதனின் இறுதிக்காலம் கொச்சியில்தான் கழிந்தது என்றாலும், அவரது மறைவு குறித்த எந்தத் தகவலும் எங்கும் குறிப்பிடப்படவில்லை. அவரது சொந்த கிராமமான கடக்கரைப்பள்ளியில், அவர் டச்சுக்காரர்களால் கப்பல் வழியாக நெதர்லாந்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பயண வழியில் கப்பல் விபத்தில் உயிரிழந்தார் என்றும்;  அவர் ஐரோப்பா சென்றடைந்து அங்குள்ள கடும் குளிரால் நோய்வாய்ப்பட்டு அங்கேயே இறந்தார் என்றும் இருவேறு கருத்துகள் சொல்லப்படுகின்றன.  ஆனால், 1675 முதல் 1700 வரையிலான  ஐரோப்பாவிற்குச்சென்ற கப்பல் பயணிகளின் பட்டியலில் ‘இட்டி அச்சுதன்’ என்றோ அல்லது ‘வைத்தியர்’ என்றோ ஒரு பெயரும் இல்லை என்பதை மணிலால் தெரிவிக்கிறார். எனவே, அவரது மரணம் இன்றும் ஒரு மர்மமாகவே இருக்கிறது.

 ஓலைச் சுவடிகளையெல்லாம் ஒரு பெரிய பிரம்புக் கூடையில் போட்டு, தன் பக்கத்து வீட்டிலிருந்த கொங்கணி பிராமணக் குடும்பத்திடம் பத்திரமாகப் பாதுகாக்கும்படி சொல்லிவிட்டு, தான் தேசாந்திரம் போவதாகச் சொல்லிச் சென்றவர், பின்னர் ஊர் திரும்பவே இல்லை என்றும்  கொச்சிப்பகுதியில் தகவல் சொல்லப்படுகின்றது.

ஒருவேளை ‘ஹார்டஸ் மலபாரிகஸ்’ உருவாக்கப்பட்ட பிறகு, மேலும் தாவரங்களைத் தேடி  அச்சுதன் ஒரு நீண்ட பயணம் சென்றிருக்கலாம் அல்லது ஏதேனும் அடர் காட்டில் மூலிகைகளைத் தேடிச் செல்கையில் உயிரிழந்திருக்கலாம். ஆனால், அவருக்குப் பிறகு அக்குடும்பத்தின் வைத்திய மரபின் சரடு அறுந்து போனது. 

வான் ரீடிக்கு அச்சுதன் உதவிய பனை ஓலைச் சுவடிகள் 1963-ல் முற்றிலுமாக அழிந்தன. ஆனால், அதிர்ஷ்டவசமாக பிரம்புக் கூடையில் அவர் பக்கத்துவீட்டுக்குக் கொடுத்தனுப்பிய ஓலைச் சுவடிகள் மட்டும் பாதுகாக்கப்பட்டிருந்தன.

இட்டி அச்சுதனுக்குத் திருமணம் நடந்ததா, அவரது மனைவி மற்றும் மக்கள் யார் என்பது போன்ற தகவல்களை இன்று வரை அறிந்து கொள்ள முடியவில்லை.  

இட்டி அச்சுதனின் சொந்த வீட்டையும், மூலிகைப்பூங்கா அமைந்திருந்த  நிலத்தையும், அவரது  நான்காம் தலைமுறை வழித்தோன்றலான புஷ்கரன் கடன் சுமையின் காரணமாக இரண்டு வங்கிகளில் அடமானம் வைத்திருந்தார். நிலத்தை மீட்க முடியாமல் புஷ்கரன் தற்கொலை செய்து கொண்டார். புஷ்கரனின் மனைவி உமாயம்மாவும் குழந்தைகளும் இப்போது கடனில் இருக்கும் அந்த நிலத்தின் பின்புறமாக வசிக்கிறார்கள்.

300 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் மருந்துகள் தயாரித்துக் கொண்டிருந்த  குரியால எனப்படும் அந்தச் சிறு குடிசையின் முன்பாக, அவருக்கென்று ஒரு அகல் விளக்கு நாள்தோறும் அவரது அடுத்தடுத்த தலைமுறை உறவினர்களால் இன்றளவும் மாலையில் ஏற்றப்படுகிறது.

சிறிய மரவீடான அது மிகவும் சிதைந்து போய் அழியும் விளிம்பில் இருக்கிறது. 

Marotti

உமாயம்மாவிற்கு ‘ஹோர்டஸ் மலபாரிகஸ்’ என்னும் பெயரைப் பற்றி எதுவும் தெரியவில்லை. அவருக்குத் தெரிந்ததெல்லாம், அவரது முன்னோர்களில் ஒருவர் 300 ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய புகழ்பெற்ற வைத்தியராக இருந்து, வெளிநாட்டவர்களால் அழைத்துச் செல்லப்பட்டு, கப்பல் பயணத்தின் போது இறந்தார் என்பது மட்டும்தான் இன்றும் நெதர்லாந்திலிருந்து பல சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கிறார்கள் என்கிறார் உமாயம்மா

வான் ரீடி திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், பிரான்சினா (Francina) என்னும் டச்சு-மலபார் பெண்ணை மகளாகத் தத்தெடுத்துக் கொண்டார். பிரான்சினா, ரீடியின் இறுதி காலம் வரை அவருடன் இருந்தார். ரீடி மரணமடைந்து அவரது உடல் சூரத்தில் அடக்கம் செய்யப்பட்டபோது பிரான்சினா உடனிருந்தார்.

இலங்கையிலிருந்து சூரத்திற்கு வந்து கொண்டிருந்த ஒரு கடற்பயணத்தின் இடையில், வான் ரீடி 1691-ம் ஆண்டு டிசம்பர் 15 அன்று மும்பைக் கடற்கரைக்கு அருகே கப்பலில் மரணமடைந்தார். அதிகாரபூர்வமாக அவரது திடீர் மரணத்திற்குக் காரணம் அம்மை நோய் என்று சொல்லப்பட்டாலும், நேர்மையாக இருந்து பலரின் எதிர்ப்புகளைச் சம்பாதித்துக்கொண்ட ரீடிற்கு, கப்பலில் நஞ்சூட்டப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.

சூரத்தின் மாபெரும் டச்சுக் கல்லறைத்தோட்டத்தில் உள்ள மிகப்பெரிய கல்லறையில், ‘இந்தியத் தாவரவியலின் தந்தை’ எனச் சொல்லுமளவிற்குத் தாவரங்களை ஆவணப்படுத்திய   ரீடிஉறங்குகிறார்.

இட்டி அச்சுதனும் ரீடியும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், தாவரங்கள் மீதான ஆர்வம் அவர்களை நண்பர்களாக்கியது. ஒருவரிடம் அனுபவ அறிவும், இன்னொருவரிடம் அதை உலகிற்குச் சொல்லும் வசதியும் இருந்ததால் இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய ஹார்டஸ்மலபாரிகஸ் என்னும் அரிய தாவரவியல் தொகுப்பு காலத்தைக் கடந்த ஒரு வரலாற்றுப் பொக்கிஷமாக இருக்கிறது. இவர்கள் இருவரின்  மரணமும்  மர்மமாகவே இருக்கிறது.

Bupariti

மேலும்

Hendrik Adriaan Van Reed Tot Drakestein 1636-1691 and Hortus, Malabaricus: A Contribution to the History of Dutch Colonial Botany

Hendrik Adriaan Van Reed Tot Drakestein 1636-1691 and Hortus, Malabaricus: A Contribution to the History of Dutch Colonial Botany

This text is a reference work for botanists studying the flora of South Asia. As commander of Malabar, van Reed was responsible for compiling the Hortus Malabaricus, a major publication of the flora and medical use of plants.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.