பேட்டை நாவல் காலத்தின் ஆவணம்

இலக்கியம் என்பது ஒருபோதும் தனித்து உருவாவதில்லை. ஒரு நாவல் தனிமனிதர்களின் கதையையோ அல்லது ஒரு குறிப்பிட்ட தெருவின் வாழ்வியலையோ விவரிப்பதாகத் தோன்றினாலும், அதன் கதாபாத்திரங்களை வடிவமைக்கும் ஆழமான சக்திகளான அவர்களின் அச்சங்கள், மொழி, லட்சியங்கள் மற்றும் எல்லைகள் எப்போதும் வரலாற்றால் தீர்மானிக்கப்படுபவை. புனைவுகள் அரசியல் நிகழ்வுகளையோ, காலனிய மாற்றங்களையோ அல்லது சமூகச் சீர்திருத்தங்களையோ நேரடியாக விவரிக்காமல் இருக்கலாம்; ஆனால் அந்த வரலாற்றுச் சட்டகங்களே கதாபாத்திரங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைத் தீர்மானிக்கின்றன. வரலாற்று உணர்வு இல்லாமல் இலக்கியத்தை அணுகும் வாசகர்கள் பெரும்பாலும் கதையின் மேலோட்டமான பரப்பை மட்டுமே காண்கிறார்கள். ஆனால், வாசிப்புச் செயல்பாட்டில் வரலாறு நுழையும்போது, இலக்கியம் என்பது வெறும் கதை சொல்லலையும் தாண்டி, ஒரு காலத்தின் ஆவணமாக, சமூக மாற்றத்தின் பிரதிபலிப்பாக, அதிகாரப்பூர்வ வரலாறுகளில் விடுபட்டுப்போன சமூகங்களின் பதிவாக மாறுகிறது.

இந்த வகையில், பேட்டை நாவல் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை வரலாற்று நினைவாக மாற்றும் மரபைச் சார்ந்தது. ஒரு குறிப்பிட்ட பகுதியின் கதையைச் சொல்கிறது, ஆனால் அந்த விவரிப்பின் ஊடாக மதராஸின் சிக்கலான சமூக வரலாற்றையும், குறிப்பாக வடசென்னை மக்களின் வாழ்ந்த அனுபவங்களையும் வெளிப்படுத்துகிறது.

மதராஸின் உருவாக்கம்: ஒரு நவீன நகரின் தொடக்கம்

பேட்டை நாவலின் உலகத்தைப் புரிந்துகொள்ள, முதலில் மதராஸ் எனும் நவீன நகரத்தின் அசாதாரணமான உருவாக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தின் பல நகரங்கள் கோயில் சார்ந்த நாகரிகங்களிலிருந்தோ அல்லது அரச வம்சங்களின் தலைநகரங்களிலிருந்தோ தங்களின் அடையாளத்தைப் பெறுகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலையும் பாண்டியர் மன்றத்தையும் சுற்றி வளர்ந்தது; தஞ்சாவூர் சோழப் பேரரசின் கீழ் செழித்தது; காஞ்சிபுரம் சமய நிறுவனங்கள் மற்றும் கல்வி மரபுகள் மூலம் உருவானது. இந்த நகரங்கள் பல நூற்றாண்டுகளாக இயற்கைச் சமூகப் பரிணாம வளர்ச்சியின் மூலம் படிப்படியாகத் தோன்றியவை. ஆனால், மதராஸ் முற்றிலும் மாறுபட்ட பாதையைப் பின்பற்றியது. கோயில் பொருளாதாரத்தாலோ அல்லது அரச ஆதரவாலோ உருவான பழமையான தமிழ் நகரம் அல்ல. மாறாக, இது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் வணிக நலன்களுக்காகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்தியாவின் ஆரம்பக்கால நவீன காலனிய நகரங்களில் ஒன்று. இந்தத் தொடக்கமே அதன் சமூக அடையாளத்தை ஆழமாக வடிவமைத்தது. மதராஸ் என்பது வணிகம், உழைப்பு மற்றும் தகவமைப்பு ஆகியவற்றின் பங்கேற்பால் அடையாளம் தீர்மானிக்கப்படும் ஒரு நகரமாக மாறியது.

1639-இல் ஆங்கிலேயர்கள் புனித ஜார்ஜ் கோட்டையை நிறுவுவதற்கு முன்பு, சோழமண்டலக் கடற்கரையோரம் மீன்பிடித் தொழிலையும் வேளாண்மையையும் வாழ்வாதாரமாகக் கொண்ட தமிழ் சமூகங்கள் வாழ்ந்து வந்தன. மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, எழும்பூர், நுங்கம்பாக்கம் மற்றும் புரசவாக்கம் போன்ற கிராமங்கள் கடலோர வணிகப் பாதைகள், கோயில் வலைப்பின்னல்கள் மற்றும் விவசாய நிலப்பரப்புகளுடன் இணைக்கப்பட்ட சிறிய குடியிருப்புகளாக இருந்தன. இவர்களின் உலகம் கடல், பருவமழை என்றுதான் பிணைக்கப்பட்டிருந்தது.

கிழக்கிந்திய கம்பெனியின் வருகை இந்தச் சமநிலையைச் சிதைத்தது. புனித ஜார்ஜ் கோட்டை நிறுவப்பட்டவுடன், உலகளாவிய ஜவுளிப் பொருளாதாரத்தில் மதராஸ் ஒரு முக்கியமான வணிக மையமாக மாறியது. பிரிட்டிஷார் இந்த பிராந்தியத்தை காலனிய நிர்வாகத் தர்க்கத்தின்படி மறுசீரமைத்தனர். ஐரோப்பியர்கள் வெள்ளை நகரம் என்ற கோட்டைப் பகுதிக்குள் வசித்தனர், அதே நேரத்தில் இந்திய வணிகர்கள், கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் கருப்பு நகரப் பகுதியில் குடியேறினர். இந்தப் பிரிவினை என்பது வெறும் கட்டடக்கலை சார்ந்தது மட்டுமல்ல; இது காலனிய நிர்வாகத்தின் மேலாதிக்கத்தையும் பொருளாதாரக் கட்டுப்பாட்டையும் பிரதிபலித்தது.

துறைமுகம் விரிவடைந்ததால், மதராஸ் பல பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்தோரை ஈர்க்கத் தொடங்கியது. தெலுங்கு பேசும் வணிகர்களும் அதிகாரிகளும் ஆரம்பகால நிர்வாகத்திலும் வணிகத்திலும் பெரும் செல்வாக்கு செலுத்தினர். பாரசீகம் மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் வணிகத் தொடர்புகள் மூலம் ஆர்மீனிய வணிகர்கள் வந்தனர். போர்த்துகீசிய வம்சாவளியைச் சேர்ந்த கிறித்தவக் குடும்பங்கள் கடற்கரையோரம் சமூகங்களை நிறுவின. காலனிய அதிகாரத்துவத்தில் ஆங்கிலோ-இந்தியர்கள் ஒரு தனித்துவமான சமூகக் குழுவாக உருவெடுத்தனர். முஸ்லிம் வணிகக் குடும்பங்கள் கடல் வணிகத்திற்குப் பங்களித்தன, பின்னர் மார்வாரி மற்றும் குஜராத்தி வணிகர்கள் நகரப் பொருளாதாரத்தில் இணைந்தனர்.

மதராஸின் பூர்வகுடிகள் பிறப்பால் தீர்மானிக்கப்படுபவர்கள் அல்ல; மாற்றங்களுக்குத் தங்களை இசைவாக்கிக் கொண்டவர்களே. மக்கள் இங்கு வாழ்ந்ததற்குக் காரணம் அவர்களின் முன்னோர்கள் இங்கு இருந்தார்கள் என்பதற்காக அல்ல, மாறாக நகரத்தின் பொருளாதாரக் கட்டமைப்புகளையும் சமூகச் சிக்கல்களையும் அவர்கள் கையாளக் கற்றுக்கொண்டதால்தான்.

சிந்தாதிரிப்பேட்டை: நெசவுத் தறிகளின் வரலாறு

இந்த விரிவான வரலாற்றுப் பின்னணியில், நாவலின் மையமாக விளங்கும் சிந்தாதிரிப்பேட்டை என்ற பகுதி அமைகிறது. இப்பகுதியின் வேர்கள் காலனிய ஆட்சியின் கீழ் செழித்தோங்கிய ஜவுளி வணிகத்தில் உள்ளன. ஐரோப்பியச் சந்தைகளில் இந்தியப் பருத்தித் துணிகளுக்கு, குறிப்பாக சோழமண்டலக் கடற்கரையில் தயாரிக்கப்பட்ட காலிகோ துணிகளுக்குப் பெரும் தேவை இருந்தது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய, ஏற்றுமதிக்காக அதிக அளவில் துணிகளைத் தயாரிக்கும் திறன் கொண்ட நெசவு சமூகங்கள் காலனிய நிர்வாகத்திற்குத் தேவைப்பட்டன. ஐரோப்பிய வணிகர்களுக்கும் இந்திய நெசவாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்திய துபாஷிகள் இந்த அமைப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தனர்.

அத்தகைய ஒரு ஆளுமையான மூர்த்தியப்ப செட்டியார், காஞ்சிபுரத்திலிருந்து நெசவுக் குடும்பங்களை மதராஸ் துறைமுகப் பகுதிகளுக்கு அருகில் குடியேற்ற உதவினார். காஞ்சிபுரத்திலிருந்து புலம்பெயர்ந்த பதினேழு நெசவுக் குடும்பங்கள் தங்களின் கைவினைத் தொழிலைச் செய்ய ஒரு குடியிருப்பினை நிறுவின. இது சின்ன தறிப் பேட்டை என்று அழைக்கப்பட்டது, இதுவே காலப்போக்கில் சிந்தாதிரிப்பேட்டை என மருவியது. கூவம் ஆற்றின் அருகே அமைந்திருந்த இப்பகுதி, துணிகளுக்குச் சாயம் ஏற்றவும் சலவை செய்யவும் தேவையான நீரை வழங்கியது.

ஜேம்ஸ் மாக்ரே போன்ற அதிகாரிகளின் ஊழல்கள் மதராஸின் வர்த்தக நிலையைச் சீர்குலைத்த காலகட்டத்தில், கலசாய் செட்டியார் மற்றும் சுங்கு ராமர் போன்ற வணிகர்கள் உருவெடுத்தனர். கூவம் ஆறு மற்றும் காரணேஸ்வரி கோயிலுக்கு அருகே அமைந்துள்ள ராமர் தோட்டம் நாவலின் மையப்புள்ளியாக அமைகிறது. 1719-இல் கல்கத்தா மேலிடத்தின் முறையான அனுமதியின்றி வழங்கப்பட்ட நிலம் எனக் கண்டறியப்பட்டபோது, அங்கிருந்த மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டது. தான் கட்டிக்காத்த நிலத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது சுங்கு ராமர் தற்கொலை செய்துகொண்டது, காலனிய நிர்வாகத்தில் உள்ளூர் மனிதர்கள் எவ்வளவு பலவீனமாக இருந்தனர் என்பதை வெளிப்படுத்துகிறது.

காலப்போக்கில், இந்த நெசவு குடியிருப்பு தொழில்சார்ந்த மற்றும் சாதி ரீதியான வலைப்பின்னல்களால் கட்டமைக்கப்பட்ட அடர்த்தியான நகர்ப்புறப் பகுதியாக வளர்ந்தது. கூவம் ஆறு, நெசவுத் தொழிலின் கழிவுகளால் படிப்படியாக மாசுபடத் தொடங்கியது. தொழில்மயமாக்கலும் நகர்ப்புற வளர்ச்சியும் ஒரு இயற்கை நிலப்பரப்பை மாசுபட்ட சூழலாக மாற்றின. இருபதாம் நூற்றாண்டின் நகர்ப்புறத் திட்டமிடல்கள் இந்தப் பகுதியை மேலும் மாற்றியமைத்தன. சென்ட்ரல் ஜெயிலுக்கு அருகில் குடியிருப்புகள் இருப்பது முறையற்றது எனக் கருதப்பட்டது. பின்னர், 1967-இல் தமிழக அரசு கூவத்தின் ஓரத்திலிருந்த குடிசை வாழ் மக்களுக்கு அங்கேயே குடியிருப்பு அமைத்துக் கொடுத்தது. இந்த மாற்றங்களே பேட்டை நாவலின் கதாபாத்திரங்கள் வாழும் களமாக அமைகின்றன.

கதாபாத்திரங்களின் வாழ்வும் மோதலும்

பேட்டை நாவலின் மையமாக விளங்கும் ராமர் தோட்டத்தின் ரூபன், சௌமியன், பாலன் போன்ற பாத்திரங்கள் 1980 முதல் 2000 வரையிலான காலக்கட்டத்தில் வடசென்னை வர்க்கத்தின் வெவ்வேறு பாதைகளைப் பிரதிபலிக்கிறார்கள். பழைய தலைமுறையைப் பிரதிபலிக்கும் கிளியாம்பா மற்றும் சிங்கப்பூரன் ஆகியோருடன் நாவல் தொடங்குகிறது. இவர்களுக்கு அடுத்ததாக ரெஜினா மற்றும் குணசீலன் ஆகியோரின் குடும்பம் வருகிறது. இதில் நாகோமியம்மா பாட்டி சுவாரசியமான கதாபாத்திரம். கிளியாம்பா எனும் தாதா பின்னணி கொண்ட பெண்ணின் கதையைச் சொல்பவளாக அவள் இருக்கிறாள்.

ராமர் தோட்டத்தின் சமூக நிலப்பரப்பில் மதம் சடங்காக மட்டுமன்றி, வாழ்வாதாரத்தோடும் இருப்பு சார்ந்த பாதுகாப்போடும் பின்னிப் பிணைந்த பெரும் சக்தியாகவே உருவெடுக்கிறது. குறிப்பாக, கிறித்தவம் இப்பகுதியின் குடிசை வாழ் மக்களிடையே ஒரு மாற்றுப் பண்பாடாகவும், சமூக அங்கீகாரமாகவும் வலுப்பெறுவதை நாவல் நுணுக்கமாகச் சித்தரிக்கிறது. மதுரையிலிருந்து புலம்பெயர்ந்து வரும் பாஸ்டர் மோசஸ் போன்ற ஆளுமைகள், வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் அடித்தட்டு மக்களிடையே மதத்தைப் பரப்புவதை ஒரு மீட்பு நடவடிக்கையாகவே முன்னெடுக்கின்றனர். பொருளாதார ரீதியாக விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுக்குத் தேவாலயம் என்பது வெறும் வழிபாட்டுத் தலம் மட்டுமல்லாது, அது அவர்களுக்கு ஆன்மீக ஆறுதலையும் கூட்டுச் சமூகத்திற்குள் தாங்களும் அங்கீகரிக்கப்பட்டவர்கள் என்ற அடையாளத்தையும் வழங்குகிறது.

ரெஜினாவின் கதை இந்த மதமாற்றத்தின் பின்னால் உள்ள உளவியல் ரீதியான பிணைப்பை மிகத் தெளிவாக விளக்குகிறது. வாழ்க்கையின் இடர்ப்பாடுகளால் உளவியல் பாதிப்புக்கு உள்ளாகும் ரெஜினா, தீவிரமான ஜெபத்தின் மூலமே தான் மீண்டு வந்ததாக முழுமையாக நம்புகிறாள். இந்த நம்பிக்கையானது அவளது ஆழ்மனதில் பெரும் நன்றிக்கடனை உருவாக்குகிறது; அதன் வெளிப்பாடாகவே, தனது ஒரே மகன் ரூபனை எதிர்காலத்தில் தேவ ஊழியத்திற்கு அர்ப்பணிப்பதாக வாக்குறுதி அளிக்கிறாள். இந்தத் தியாகம் அவளுக்கு ஒருவிதமான புனிதத்தன்மையைத் தருகிறது. மேலும், அவளுக்குக் கிடைக்கும் ஹவுசிங் போர்டு வீடு போன்ற அடிப்படைத் தேவைகளைக் கூட அவள் தனது உழைப்பின் பலனாகவோ அல்லது அரசின் திட்டமாகவோ பார்க்காமல், இறைவனின் கருணையால் நிகழ்ந்த ஜெபத்தின் சக்தியாகவே பார்க்கிறாள்.

இத்தகைய நம்பிக்கைகள், சமூகப் பாதுகாப்பற்ற சூழலில் வாழும் எளிய மனிதர்கள் தங்களின் அன்றாடத் துயரங்களிலிருந்து தப்பிக்கக் கண்டுகொள்ளும் ஒரு பிடிமானமாக அமைகின்றன. தர்க்கரீதியான காரணங்களை விடவும், அற்புதங்களின் மீதான அதீத நம்பிக்கை அவர்களுக்கு வாழ்வின் மீதான நம்பிக்கையைத் தக்கவைக்க உதவுகிறது. இருப்பினும், இந்த நம்பிக்கையே பின்னாளில் பகுத்தறிவுப் பாதையில் செல்லும் ரூபனுக்கும், ஆன்மீகப் பிடிமானத்தில் இருக்கும் ரெஜினாவுக்கும் இடையே தீர்க்க முடியாத தத்துவ மோதலாகவும், உறவுச் சிக்கலாகவும் உருவெடுப்பதை நாவல் மிக ஆழமாகப் பதிவு செய்திருக்கிறது.

நாவல் என்பது வாசகனை அதன் நிலப்பரப்பிற்குள் இழுத்துச் சென்று, அங்குள்ள மனிதர்களோடு அவனை வாழ வைக்க வேண்டும். இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்கள் நம் கண்ணெதிரே நடமாடுவதைப் போலவும், அவர்களின் துயரம் நம்மை அழவைப்பதும், அவர்களின் மகிழ்ச்சியில் நாம் வாய்விட்டுச் சிரிப்பதும் அந்தப் படைப்பின் மாபெரும் வெற்றியாகும். குறிப்பாக, குடும்பத்தில் இருக்கும் முதியவர்கள் தங்களின் வயதிற்கே உரிய மழலைத் தன்மையோடும், எவ்விதத் திட்டமிடலும் இல்லாத அப்பாவித்தனத்தோடும் பேசும் சில உரையாடல்கள், நம்மை அறியாமலேயே புன்னகைக்கச் செய்கின்றன. நாகோமியம்மா தன்னுள் எழும் உணர்வுகளை, அவை வசவுச் சொற்களாக இருந்தாலும் சரி, அதே வேகத்துடன் கொட்டிவிடும் இயல்புடையவர். அந்தச் சொற்களுக்காகப் பிறகு மன்னிப்புக் கோரும் அவரது வெள்ளந்தித் தனம், அவரது கதாபாத்திரத்திற்கு ஒரு தனி அழகைச் சேர்க்கிறது.

அதற்குச் சான்றாக, சபையில் நடக்கும் உரையாடலை நோக்கலாம்:

“ஏம்மா.. யேசப்பாவா இவன நடிக்க வெய்யேங். வீட்ல ஒரே தொந்துருவு குத்துனுக்றாங்.”

“பாட்டி இவன் ஹைட்டு யேசப்பா வேஷத்துக்கு பத்தாது.”

“யேசப்பா இன்னா ஹைட்டு இருந்தார்னு யாருக்குமா தெரியுங்? எம்புள்ள வசனல்லாம் நல்லாதான சொல்லுவாங்…”

ரெஜினாவின் மகனான ரூபன், தன் தாயின் பார்வைக்கு நேர் எதிரானப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறான். பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு அவன் நாத்திகனாகிறான். இது அவனுக்கும் அவன் தாய்க்கும் இடையிலான உறவில் பெரும் விரிசலை உருவாக்குகிறது. தமிழகச் சமூகத்தில் நிலவும் பகுத்தறிவு அரசியலுக்கும் சமய நம்பிக்கைக்கும் இடையிலான மோதலை நாவல் ஒரு குடும்பத்தின் உணர்வுப்பூர்வமான முண்பாட்டின் மூலம் சித்தரிக்கிறது.

வடசென்னையின் கலாச்சாரம்: கேரம்

வடசென்னையின் நிலப்பரப்பில் தெருக்கள் அந்த மக்களின் கலாச்சாரக் கூடங்களாகவும், திறமைகளை வெளிப்படுத்தும் ஆடுகளங்களாகவும் திகழ்கின்றன. குறிப்பாக, வடசென்னையின் உழைக்கும் வர்க்க இளைஞர்களிடையே நிலவும் கேரம் போர்டு கலாச்சாரம் பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி, சமூக அடையாளமாகவும், கௌரவப் பிரச்சினையாகவும் உருவெடுப்பதை பேட்டை நாவல் மிக நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறது. தெருவோரங்களில் மரத்தடிகளிலும், சிறிய சந்துகளிலும் போடப்பட்டிருக்கும் கேரம் போர்டுகள், அந்தப் பகுதி இளைஞர்கள் தங்களின் அன்றாட வேலைப்பளுவையும், வாழ்வியல் நெருக்கடிகளையும் மறந்து ஒன்று கூடும் புள்ளிகளாக அமைகின்றன. வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி போன்ற இடங்களிலுள்ள போர்டு ரூம்கள் அந்தப் பகுதி இளைஞர்களின் நுட்பமான அறிவுத்திறனையும், நட்பையும் பறைசாற்றும் மையங்களாகச் செயல்படுகின்றன. கேரம் போர்டைச் சுற்றி அமர்ந்திருக்கும் நான்கு பேர் மட்டுமல்ல, அதைச் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் கூட்டமும் அந்த விளையாட்டின் ஒவ்வொரு நகர்விலும் தங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்கள். இது இளைஞர்களுக்கு ஒருவிதமான அதிகார மனோபாவத்தையும், தங்களின் திறமை மீதான பெருமிதத்தையும் வழங்குகிறது.

பாலன் எனும் கதாபாத்திரத்தின் உருவாக்கம் இந்த நிலப்பரப்பின் எதார்த்தமான பிரதிபலிப்பாகும். கூவம் நதிக்கரையின் அசுத்தமான சூழலிலும், பசியும் வறுமையும் வாட்டும் குடிசை வாழ்விலும் வளர்ந்தாலும், பாலனுக்குள் இருக்கும் அந்தத் தனித்துவமான கேரம் விளையாட்டுத் திறமை அவனுக்கு ஒரு புதிய உலகத்திற்கான கதவைத் திறக்கிறது. அவனது விரல் நுனிகளில் இருக்கும் அந்த வேகம், அவனை வெறும் குடிசைப் பகுதிச் சிறுவன் என்ற அடையாளத்திலிருந்து திறமையான வீரன் என்ற நிலைக்கு உயர்த்துகிறது. இந்த விளையாட்டு அவர்களுக்கு ஒருவிதமான விடுபடல் உணர்வைத் தருகிறது. பசியையும், வேலையில்லாத் திண்டாட்டத்தையும் மறக்கச் செய்யும் இந்தக் கருப்பு-வெள்ளை காய்களின் விளையாட்டு, அவர்களுக்குள் ஒரு கூட்டு அடையாளத்தை உருவாக்குகிறது. ஒரு போர்டு ரூமில் ஜெயிக்கிறவன் அந்தத் தெருவின் நாயகனாகக் கொண்டாடப்படுகிறான். இந்தச் சிறு கொண்டாட்டங்களே அவர்களின் கடினமான வாழ்வை நகர்த்திச் செல்லத் தேவையான ஆற்றலை வழங்குகின்றன. நாவலில் கேரம் என்பது விளையாட்டை தாண்டி  வாழ்வியல் அனுபவமாக திகழ்கின்றது.

நாவலின் மிகவும் உருக்கமான, சமகால நிதர்சனத்தைப் பேசும் ஒரு பகுதி ஓவியர் பூபாலனின் வீழ்ச்சி. பல தசாப்தங்களாகத் தமிழகத்தின் திரையரங்குகளையும் அரசியல் மேடைகளையும் தங்களின் விரல் நுணுக்கத்தால் அலங்கரித்த கலைஞர்கள் அவர்கள். பிரம்மாண்டமான கட்-அவுட்கள் மற்றும் பேனர்களில் அவர்கள் காட்டிய அந்த மிகைப்படுத்தப்பட்ட அழகியல், ஒரு காலத்தில் ஒரு பண்பாட்டு அடையாளமாகவே இருந்தது. ஆனால் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வரவு அவரின் தொழிலை முற்றிலும் அழித்துவிடுகிறது. தன் கலையைத் தொழில்நுட்பத்திடம் பறிகொடுத்த பூபாலன், வேறு வழியின்றி ஏடிஎம் பாதுகாப்புப் பணியாளராகத் தஞ்சமடைகிறார். நிலத்தை இழந்து நகரத்தின் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட ஒரு விவசாயியைப் போலவோ அல்லது வாழ்ந்து கெட்ட ஒரு மனிதன் அடுக்குமாடிக் குடியிருப்பு காவலாளியாக மாறுவதைப் போலவோதான் பூபாலனின் நிலையும் இருக்கிறது. ஒரு காலத்தில் கைநிறையச் சம்பாதித்த கலைஞனுக்கு, காவலாளி வேலையில் கிடைக்கும் சொற்ப வருமானமான எட்டாயிரத்தில், மூவாயிரத்தை வேலைக்குச் சேர்த்துவிட்ட நிறுவனமே தரகு என்ற பெயரில் உறிஞ்சிக் கொள்வது, நவீன கார்ப்பரேட் நிலப்பிரபுத்துவத்தின் கொடூரமான முகத்தை அப்பட்டமாகக் காட்டுகிறது. உழைப்பைச் சுரண்டும் இந்தச் சங்கிலித் தொடர், விளிம்புநிலை மனிதர்களை மேலும் அதலபாதாளத்திற்குத் தள்ளுவதை நாவல் வலிமையாகப் பதிவு செய்கிறது.

லாரன்ஸ் எனும் கதாபாத்திரத்தின் வழியாகத் தனியார் மருத்துவமனைகளின் அறமற்ற வணிக அரசியலை நாவல் தோலுரித்துக் காட்டுகிறது. மத்திய அரசு ஊழியராக இருக்கும் லாரன்ஸை ஒரு மனிதராகப் பார்க்காமல், அவருக்கு இருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் தொகையை ஒரு வேட்டைப் பொருளாகவே மருத்துவமனைகள் அணுகுகின்றன. ஒரு நோய்க்கிருமியின் தாக்குதலை விடவும் கொடியது தனியார் மருத்துவமனைகள் கட்டவிழ்த்துவிடும் நோய்கள் குறித்த அச்சமும், அதன் பின்னாலிருக்கும் நிதி அரசியலும் என்பதை லாரன்ஸின் மரணம் உணர்த்துகிறது. முப்பத்தெட்டு லட்ச ரூபாயைத் தின்று தீர்த்துவிட்டு, இறுதியில் ஒரு சடலத்தை மட்டுமே வெளியே தள்ளும் அந்த மருத்துவக் கட்டமைப்பு, நவீனச் சமூகத்தின் அறவீழ்ச்சிக்குச் சான்றாக நிற்கிறது. பூபாலன் தொழில்நுட்பத்தால் வஞ்சிக்கப்பட்டார் என்றால், லாரன்ஸ் நவீனக் காப்பீட்டு முறையாலும் மருத்துவ வணிகத்தாலும் வஞ்சிக்கப்படுகிறார்.

வன்முறையும் மீட்பும்

விளிம்புநிலைச் சமூகங்களில் வன்முறை என்பது வெறும் சட்டம் ஒழுங்கு சார்ந்த சிக்கல் மட்டுமல்ல; அது அந்த நிலப்பரப்பின் வாழ்வியலோடும், அதிகாரப் படிநிலைகளோடும், கௌரவம் சார்ந்த தவறான புரிதல்களோடும் ஆழமாகப் பிணைந்துள்ளது. இருதயராஜ், ஜனா மற்றும் ராஜினி சிவா ஆகியோருக்கு இடையிலான மோதல் போக்குகள், பழிவாங்கலின் முடிவற்ற சுழற்சி ஒரு மனிதனின் வாழ்வை எப்படிச் சிதைக்கிறது என்பதற்கான ஆகச்சிறந்த சான்றாகும். ஒரு கண நேர ஆத்திரத்தில் ஜனா கொல்லப்படும்போது, அது பல தசாப்தங்களுக்கு நீடிக்கப்போகும் ஒரு குருதிப் பகையின் தொடக்கப்புள்ளியாக மாறுகிறது. இருதயராஜின் கதாபாத்திரம் இதில் மிகவும் நுட்பமானது. தான் செய்த கொலையின் பாரத்தைத் தாங்க முடியாமல், குற்றவுணர்வால் உந்தப்பட்டு அவர் கிறித்தவ மதத்தில் தஞ்சம் புகுகிறார். பாவமன்னிப்பு மற்றும் ஜெபம் ஆகியவற்றின் மூலம் தனது கடந்த காலக் கறைகளைக் கழுவிவிடலாம் என்றும் அமைதியான வாழ்க்கையைத் தொடங்கிவிடலாம் என்றும் அவர் நம்புகிறார். ஆனால், மதம் வழங்கும் ஆன்மீகத் தீர்வு தனிமனித அகத்திற்கு வேண்டுமானால் ஆறுதல் அளிக்கலாமே தவிர, புறத்தே அவர் விதைத்த வன்முறை விதை அதன் அறுவடையைக் கோரி நிற்கிறது.

எழும்பூர் பாலத்தில் இருதயராஜ் கொல்லப்படும் காட்சி, வன்முறை ஒருபோதும் யாரையும் மன்னிப்பதில்லை என்பதையும், அது காலமும் இடமும் பார்த்துக் காத்திருந்து தாக்கும் என்பதையும் உணர்த்துகிறது. ஒரு காலத்தில் வேட்டையாடியவன், மற்றொரு காலத்தில் இரையாகிறான். இந்தப் பழிவாங்கும் படலத்தில் ரஜினி சிவா போன்ற நிழல் உலக மனிதர்களின் நுழைவு, தனிப்பட்ட பகையை ஒரு குழுப் போராக மாற்றுகிறது. ரஜினி சிவாவின் மரணமும், அதைத் தொடர்ந்து நிகழும் கொலைகளும் வன்முறைக்கு ஒருபோதும் தீர்வு கிடையாது என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டுகின்றன.

இந்த மோதல்கள் விளிம்புநிலைச் சமூகங்களில் நிலவும் நெருக்கமான பிணைப்புகளை எதிர்மறையான வெளிச்சத்தில் காட்டுகின்றன. அங்கு வாழும் மக்கள் ஒருவருக்கொருவர் மிக நெருக்கமான தொடர்பில் இருப்பதால், ஒரு சிறு அவமானம் அல்லது தாக்குதல் கூட அந்த முழுச் சமூகத்தின் ஆவேசத்தைத் தூண்டிவிடுகிறது. சட்டம் வழங்க வேண்டிய நீதியை விடவும், தாங்களே நிலைநாட்டிக்கொள்ளும் தெருமுனை நீதி அங்கு மேலோங்கி நிற்கிறது. இத்தகைய வன்முறைப் பதிவுகள் மூலம் பேட்டை நாவல், வடசென்னையின் ஒரு இருண்ட பக்கத்தை அந்த மனிதர்கள் எத்தகையதொரு சமூக நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதையும், அங்கிருந்து மீள்வதற்குத் தத்துவமோ மதமோ கூடப் போதுமானதாக இல்லை என்பதையும் மிக ஆழமாகப் பதிவு செய்கிறது.

மானுடப் பற்றும் மனிதாபிமானமும்

நாவலின் இறுதிப்பகுதியை நோக்கி நகரும்போது, ரூபனின் அகப்போராட்டங்கள் மற்றும் அவன் சந்திக்கும் மனச்சிதைவு குறித்த சித்தரிப்புகள் ஒரு தனிமனிதனின் துயரமாக மட்டும் அமையாமல், ஒரு சமூகத்தின் கூட்டு வெளிப்பாடாகவே அமைகின்றன. தனது நெருங்கிய நண்பன் மற்றும் அந்த நண்பனின் தந்தை ஆகிய இருவரின் அடுத்தடுத்த மரணங்கள் ரூபனின் ஆழ்மனதில் ஏற்படுத்திய வடுக்கள், அவனை  தீராத மனப்பிறழ்வுக்குள் தள்ளுகின்றன. மரணம் என்பது வெறும் உடல் சார்ந்த மறைவு மட்டுமல்ல, அது எஞ்சியிருப்பவர்களின் ஆன்மாவில் நிகழ்த்தும் ஒரு பெரும் சூறையாடல் என்பதை ரூபனின் சிதைந்த மனநிலை வழியாக நாவல் காட்டுகிறது.

இருப்பினும், இந்த இருண்ட சூழலிலும் ஒரு மெல்லிய ஒளிக்கீற்றாகத் தெரிவது அவனது நண்பர்களின் மாறாத அன்பும், அவர்கள் காட்டும் பொறுமையும்தான். மனநலக் காப்பகத்திற்குள் ரூபன் சேர்க்கப்படுவதும், அங்கிருந்து அவன் மெல்ல இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதும் மருத்துவ அதிசயமாக அல்லாது சக மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் காட்டும் அளப்பரிய அனுசரணையினால் விளைந்த ஒரு மனிதாபிமான வெற்றி. ஒரு மனிதன் தன்னைச் சுற்றியுள்ள உறவுகளாலும், நட்பாலும் தாங்கப்படும்போது, அவன் எத்தகையதொரு இருண்ட படுகுழியிலிருந்தும் மீள முடியும் என்ற பேருண்மையை நாவலின் இந்தப் பகுதி உரக்கச் சொல்கிறது. மானுடத்தின் மீதான இந்தத் தீராத பரிவும், சக உயிர்கள் மீது கொள்ளும் பேரன்புமே சுரண்டல்களும், வன்முறைகளும் நிறைந்த இவ்வுலகில் மனிதகுலத்தை இன்னும் இயங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. சுரண்டப்படும் வர்க்கத்தின் பிரதிநிதியாக இருக்கும் ரூபன் போன்றவர்கள் சந்திக்கும் புறக்கணிப்புகளும், சமமின்மைகளும் பரஸ்பர அன்பின் மூலமே சமன் செய்யப்பட முடியும் என்பதுதான் பேட்டை நாவல் முன்வைக்கும் ஆகச்சிறந்த அரசியல் தரிசனம்.

மொழி மற்றும் உலகளாவிய ஒப்பீடு

லண்டனின் கிழக்குப்பகுதியிலிருந்து உருவான பேச்சுவழக்கைப் போல, மெட்ராஸ் பாஷை என்பது தமிழ், தெலுங்கு, உருது மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றின் கலப்பில் உருவான ஒரு தனித்துவமான மொழி. இது கொச்சை மொழி அல்ல, நகர வாழ்க்கையின் தகவமைப்புத் திறன். பல ஆண்டுகளாகத் தமிழ் இலக்கிய உலகம் சென்னையின் இந்தத் தமிழைப் புறக்கணித்து வந்தது. ஆனால், பேட்டை நாவல் இந்தத் துடிப்பான மொழியை இலக்கியப் பதிவாக்குவதன் மூலம் ஒரு முக்கியக் கடமையைச் செய்கிறது.

ட்ரெவர் நோவாவின் Born a Crime நாவல் நிறவெறி காலத் தென்னாப்பிரிக்காவின் சமூக எதார்த்தங்களைத் தன் நினைவுகள் மூலம் பதிவு செய்தது போல, பேட்டை நாவல் வடசென்னையின் வாழ்வியலை நெருக்கமான கதை சொல்லல் மூலம் பதிவு செய்கிறது. இந்த இரண்டு படைப்புகளிலும் வறுமை, வன்முறை மற்றும் அதைக் கடந்து வாழத் துடிக்கும் மனிதர்களின் கனவுகள் பொதுவானவையாக உள்ளன. “Literature is a conversation across time” என்பதற்கு இந்த ஒப்பீடு ஒரு சான்று. பேட்டை நாவலின் முக்கியத்துவம் என்பது ஒரு புறக்கணிக்கப்பட்ட நிலப்பரப்பை இலக்கிய நிலப்பரப்பாக மாற்றியதில் உள்ளது. வடசென்னை மக்களின் குரல்கள், பேச்சுவழக்குகள் மற்றும் அவர்களின் வாழ்ந்த அனுபவங்களைச் சித்தரிப்பதன் மூலம், அதிகாரப்பூர்வ வரலாறுகளில் கண்ணுக்குத் தெரியாத சென்னையின் ஒரு பகுதியை இந்த நாவல் பதிவு செய்கிறது. நகரங்கள் என்பது வெறும் வணிகத்தாலும் நிர்வாகத்தாலும் கட்டப்படுபவை அல்ல; அவை சாதாரண மனிதர்களின் அன்றாட போராட்டங்களாலும் கனவுகளாலும்தான் அதன் உண்மையான அடையாளத்தைப் பெறுகின்றன என்பதை பேட்டை நமக்கு நினைவூட்டுகிறது.

Born a Crime நாவலில், ஒரு கட்டத்தில் அவரது தாய் சுடப்பட்டு உயிருக்குத் போராடும் சூழல் வரும். ட்ரெவர் தனது கடின உழைப்பால் ஈட்டிய அத்தனைப் பணத்தையும் தாயின் மருத்துவச் செலவிற்காகச் செலவிடுவார். ஒரு எளிய மனிதன் பொருளாதார ரீதியாகச் சற்று முன்னேற முயலும்போதெல்லாம், எதிர்பாராத ஏதோ ஒரு துயரம் அவனை மீண்டும் பழைய இடத்திற்கே இழுத்துச் செல்லும் இந்தச் சுழற்சி  ஏன் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது என்ற தவிப்பு அந்த நாவலில் வெளிப்படும்.இங்கு சுழற்சி என்பது வெறும் பொருளாதார இழப்பு மட்டுமல்ல; அது அந்த மனிதர்களின் தீராத வாழ்நாள் துயரம் மற்றும் அந்த நிலப்பரப்பில் அவர்கள் பிறந்து வளர்ந்ததாலேயே எதிர்கொள்ளும் துயரம்.  பேட்டை நாவலை வாசித்து முடிக்கும்போதும் சுழற்சி என்ற உணர்வுதான் மேலோங்குகிறது. 


Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.