படுக்கை வரையில் பனி

This entry is part 11 of 9 in the series ஹைக்கூ

கடமைப்பட்டேன்
போர்வையில் பனித்துகள்
புனிதபூமியிலிருந்து

கவிஞர்: கோபயாஷி இஸ்ஸா (1772-1858)

அரிகதா யா
ஃபுசுமானொ யுகிமோ
ஜோதோ யோரி

ありがたや
衾の雪も
浄土より

இந்த ஹைக்கூவை எழுதியவர் கோபயாஷி இஸ்ஸா என உறுதியாகச் சொல்ல முடியாது. கவிதையின் உட்கருத்து தொடர்பான மாற்றுக் கருத்து யாருக்கும் இல்லை. கவிதையை எழுதியவர் இஸ்ஸாதானா என்பதுல்தான் மாற்றுக் கருத்து.

இரவில் வெளியே பனி வீசிக்கொண்டிருக்கிறது. அந்தக் குடிலின் கதவுகளின் இடுக்குகளின் வழியே பனித்துகள் நுழைந்து பரவுகிறது. காற்று வீச வீசப் பனித்துகள் அறையில் நிறைந்து கவிஞரின் படுக்கையை எட்டி அவர் போர்த்தியிருக்கும் கம்பளியின் மீதும் பரவுகிறது. காலையில் கவிஞர் விழித்தெழுகிறார். போர்வையையில் படர்ந்திருக்கும் பனித்துகளைப் பார்க்கிறார். காற்று வீசிய திசை, அந்தப் பனித்துகள் மடாலயம் இருக்கும் திசையிலிருந்து வந்ததாக உணர்கிறார். தன்னுடையை போர்வையைப் புனித மடாலயத்துப் பனித்துகள் நிறைத்ததற்கு நன்றிக்கடன்படுவதாக ஹைக்கூ எழுதுகிறார். எழுதிய ஹைக்கூவைத் தன் தலையணையின் கீழ் வைக்கிறார், இறந்துவிடுகிறார். ஆம், கோபாயாஷி இஸ்ஸா இறந்த பின் அவருடைய தலையணையின் கீழிருந்து இந்த ஹைக்கூ எடுக்கப்பட்டதாக ஒரு கருத்து உள்ளது. 

இன்னொரு பார்வையில், அவர் இதனை எழுதியதற்கு எந்த ஆதாரமும் இல்லாததால் அவருடைய சீடர்கள் தங்கள் குருவின் இறப்பைக் கண்ணியப்படுத்த இதனை அவருடைய கடைசிக் கவிதையாக நம்புவதாகவும் சொல்லப்படுகிறது.

இரண்டில் எது உண்மையாக இருப்பினும், ஒரு கவிஞன் பனிக்காலத்தில் தன் குடிலில் உறங்குகையில் கதவிடுக்குகளின் வழியாக பனித்துகள் அறையில் பரவும்படிதான் அக்குடிலின் கதவுகள் இருந்திருக்கின்றன. மொழிபெயர்ப்பாளர்கள் ஒருபடி மேலே சென்று, இஸ்ஸாவின் குடில் ஏழ்மை நிலையில் இருந்ததாகவும் கதவிடுக்கு, சன்னல் இடுக்கு, சுவர்களில் இருந்த விரிசல் இவற்ரின் வழியாக பனித்துகள் அறையில் பரவி, போர்வையை நிறைத்ததாகவும் விளக்குகின்றனர். 

ஏழ்மையைக் கவிதையாக்கியதுடன், அந்தத் துகள் புனிதமண் – பௌத்தப் புனிதமண் – சொர்க்கத்திலிருந்து வந்ததாக எழுதியது இந்த ஹைக்கூவின் மூன்றாம் அடி திருப்பத்தை இன்னொரு தளத்துக்கு நகர்த்தியிருக்கிறது.    

அあ – ரிり –  கが – தோと – உう அரிகதோவ் என்னும் வார்த்தையின் பொருள் நன்றி. காஞ்சி வரிவடிவத்தில்  有 (அரி) 難 (கதோ) う (உ). இக்கவிதையின் முதல் அடி ‘அரிகதாயா’  ありがたや, கடமைப்பட்டேன் அல்லது நன்றிக்கடன்பட்டேன். செய்நன்றி மறவாத தன்மைக்கும் ஒருபடி மேலாகச் சென்று கடமைப்பட்டேன் என நன்றி நவில்வதை இது குறிப்பிடுகிறது. இதனைக் கொடுப்பினை, பாக்கியம், ஆசீர்வதிக்கப்பட்டேன் என்றும் மொழிமாற்றம் செய்யலாம். ‘யா’ என்னும் கடைசி எழுத்து வியக்கின்ற தொனியைத் தருகிறது. 

‘என்ன தவம் செய்தேனோ? நன்றிக்கடன்படுகிறேன்! ஆஹா!’ என விரித்துச் சொல்லக்கூடிய பொருளாக அரிகதாயா அமைந்து கவிதையின் முதலடி வியப்புடன் தொடங்குகிறது.  

அரிகதாயா

அ(あ) ரி(り) க(が) தா(た) யா(や) [நன்றிக்கடன்பட்டேன்].

கவிதையை உள்வாங்கிய மொழிமாற்றத்தில் ‘கடமைப்பட்டேன்’.

இரண்டாம் அடியில் இரண்டு சொற்கள் உள்ளன போர்வை, பனித்துகள். முதற்சொல் 衾 (ふすま) ஃபு சு ம, போர்வை. இதனுடன் の நொ, இல் சேர்ந்து ஃபுசுமனொ போர்வையில். இரண்டாம் சொல் 雪 (ゆき) யு கி, பனி. இதனுடன் も மோ, உம் சேர்ந்து யுகிமோ பனியும். இரண்டாம் சொல்லில் பனியைக் குறிப்பிடும் காஞ்சி வரிவடிவம் 雪 (ゆき) யுகியினைப் போலவே மழையைக் குறிக்கும் காஞ்சி வரிவடிவமும் இருக்கும். 雨 (あめ) ஆமெ. பொழிவதைக் குறிக்கும் சொல்லான மழையின் காஞ்சிவரிவடிவம் பனிப்பொழிவைக் குறிக்கும் சொல்லில் பாதியாக இணைந்துள்ளது. 

ஃபுசுமனொயுகிமோ

衾 (ふすま) ஃபு சு ம, の நொ [போர்வையில்]

雪 (ゆき) யு கி, も மோ [பனியும்]

கவிதையை உள்வாங்கித் துகளாகப் பனி போர்வையில் கதவிடுக்குகள் சன்னலிடுக்குகளின் வழியாக வீசப்பட்டிருப்பதைச் சொல்ல, மொழிமாற்றத்தில் பனியும் என்று சொல்லாமல் ‘பனித்துகள்’ எனச் சொல்வது பொருத்தமாக இருக்கும்.

போர்வையில் பனித்துகள்.

சித்திரம் வர்த்தமான்

அறைக்குள் போர்வையில் பனி பொழிந்திருப்பது கூரையின் வழியாகவும் இருக்கலாம் எனக் காட்சியமைப்பு விரிவதை நுட்பமாக மூன்றாம் அடியின் திருப்பம் தடுக்கிறது. மேலிருந்து கீழே பனி வீழ்வதைச் சொல்லாமல், புனிதபூமியிலிருந்து எனச் சொல்லி பௌத்த மடாலயம் இருக்கும் புனிதபூமியின் திசையிலிருந்து வீசுகின்ற காற்று பனித்துகளை அறைக்குள் நிறைப்பதைச் சொல்கிறது.

ஹைக்கூவின் முக்கியமான திருப்பம் மூன்றாம் அடியில் நிகழ்வது இயல்பு. இக்கவிதையிலும் அது நிகழ்கிறது. மூன்றாம் அடி ‘ஜோதோயோரி’,  புனிதபூமியிலிருந்து, பூமிப்பரப்பின் இன்னொரு திசையிலிருக்கும் புண்ணியத்தலத்திலிருந்து, மண்ணிலிருக்கும் பௌத்த சொர்க்கத்திலிருந்து, குறிப்பாக மேற்கு திசையிலிருந்து எனப் பலவாறாகப் பொருள் கொள்ளலாம்.

浄土より – ஜோ தோ யோ ரி, இரண்டு காஞ்சி வரிவடிவங்களாலும் இரண்டு ஹிராகனா வரிவடிவங்களாலும் ஆன சொல். 浄 (じょう) ஒன்யோமி முறைப்படி இந்தக் காஞ்சியின் ஒலிப்பு ஜி யோ உ – ஜியோவ் – ஜியோ – ஜோ. இதன் பொருள் களங்கமற்ற. 土 (ど) ஒன்யோமி முறைப்படி இதன் ஒலிப்பு தோ, பொருள் நிலம். யோ (よ), ரி (り) யோரி, இதன் பொருள் இல்+இருந்து. 

ஜோதோயோரி
浄 (じょう) ஜோ [களங்கமற்ற]
土 (ど) தோ [நிலம்]
より (யோரி) [இலிருந்து]

களங்கமற்ற நிலத்திலிருந்து.

கவிதையை உள்வாங்கிய மொழிமாற்றத்தில் சொக்கத்திலிருந்து, புண்ணியத்தலத்திலிருந்து, புனிதபூமியிலிருந்து என விரியும் பொருள்களில் புனிதபூமியிலிருந்து என்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

கடமைப்பட்டேன்
போர்வையில் பனித்துகள்
புனிதபூமியிலிருந்து

இந்த ஹைக்கூவின் வரலாறு இது கோபயாஷி இஸ்ஸா எழுதியதுதான் என உறுதியாகச் சொல்லாவிடினும், கவிதை காட்டுகின்ற குடிலும் கதவிடுக்கும் பனித்துகளும் போர்வையும் நன்றிக்கடனும் புனிதபூமி இருக்கும் திசையிலிருந்து வீசும் காற்றும் கவிஞனின் ஏழ்மையையும் கவித்துவத்தையும் மரபைக் கண்ணியப்படுத்துவதையும் தெளிவாகச் சித்தரிக்கின்றன.

ஹைக்கூ

கிளைக்கு உயரும் மலர்

Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.