பின்மதிய மே மாத பகல் நேரம். வாசலில் இருந்த வேப்ப மரத்திலிருந்து அவ்வப்போது வேப்பம்பழங்கள் மஞ்சள் வண்ண சாக்லேட் போல தரையெங்கும் விழுந்துக்கிடந்தன. அங்கங்கே ஒன்றிரண்டு மிதிபட்டு வேப்பங்கோட்டைகளோடு, மூக்குச்சளி போல வெளியே வந்த வேப்பம்பழ கசிவு, கசப்புத்தன்மையை காற்றுக்குக்கொடுத்தது. ஆள் அரவம் இல்லாத தெருவில் சைக்கிள் கிரீச்சிடலோடு கடந்தது. ஒருவர் கட்டைக்குரலில், “பழைய பாட்டில் வாங்கிறது, பழைய பேபர் வாங்குறது” என்று கத்திக்கொண்டே போனார்.
என்ன கத்தினாலும் ஒன்றும் தேறியதாகத் தெரியவில்லை. முன்பக்கக்கூடையில் தராசும், படிக்கல்லும் இருந்தன; பின்பக்கம் ஒரு பெரிய பெட்டியைக் கயிற்றால் கட்டி இறுக்கி வைத்திருந்தார்.
திரிவேணி மாமி ரங்கநாதரைப்போல வாசல் திண்ணை ஓரத்தில், வீட்டுக்கதவை ஒட்டி படுத்திருந்தார். ஒல்லி என்று சொல்ல முடியாத உடல் வாகு. காதுகளில் வெள்ளைக்கல் வைத்த தோடு.வெள்ளை முடியால் நெல்லிக்காய் அளவிலான சிறுகொண்டை. முன்பக்க மண்டை தெரியும் அளவுக்கு முடி அடர்த்தியில்லாமல் ஆகிவிட்டிருந்தது. கழுத்தில் மூன்று சவரனில் நெல் மணி மாலை.பட்டைத் தேய்ந்த மெல்லிய வளையல்கள் அவளை விட்டு எப்போதும் புரிந்ததில்லை என்பது போல கைக்கொன்றாக இருந்தன. கணுக்கால் வரை நீண்ட புடவை.
பெருமாளுக்கு லெட்சுமி தேவி மடியைக் கொடுத்திருப்பார். மாமிக்கு தலைக்குக்கீழே மடித்த கையை வைத்து கொள்ள, சிமெண்டால் ஆன திண்டு இருக்கிறது.
மாமியை பழைய பொருள் வாங்குபவரும், அவரை மாமியும் கண்டுக்கொள்ளவில்லை.
வாசல் பக்கம் ஆட்கள் இல்லை. அவரவர் மதிய சாப்பாட்டை முடித்து பகல் நேர இளைப்பாறலில் இருந்தனர். தெருவின் நேர் எதிர் புறமிருந்த வீட்டுக்காரர்களும் வாசல்களை நாள் தவறாமல் சாணி தெளித்து வைத்திருப்பதால், பூமிக்கு வெளிர் மஞ்சள் நிறம் இயல்பாகியிருந்தது.
நாலு வீட்டுக்கு ஒருவராவது பசுமாடு வைத்திருக்கிறார்கள். அவ்வபோது மாடுகள் அம்மா என்று. தண்ணீருக்கும், உணவிற்கும், இடம் மாற்றி கட்டி வைக்க என்றும் அழைக்கின்றன.

வீட்டின் இருபுறமும் திண்ணைகள் இருந்தாலும், மாமி எப்போதும் பெரிய திண்ணையை இடமாக பாவிக்கிறாள். பெரிய நிலைக்கதவின் இடப்புறம் சிறிய திண்ணையும், வலது பக்கம் பெரியதும் இருக்கின்றன. திண்ணைகளை இரண்டடி உயரத்தில் எழுப்பியிருந்தார்கள். சின்ன திண்ணை அவ்வப்போது தூரம் ஆனவர்களின் தேவைக்கென இருக்கிறது. வாசலில் இருந்து நேர் பார்வையில் தெரியாதபடி அங்கங்கே இடம் விட்டு அடித்த மூங்கில் சட்டம் இரு திண்ணைகளிலும் இருக்கின்றன.
அலசிப் பிழிந்து, சட்டத்தில் ஒரு பக்கம் புடவையின் முனையில் முடிச்சிட்டு உலர்த்திய மடிசார் புடவை திண்ணையின் சட்டம் போட்ட மறைப்பில் காய்ந்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு காற்று அசைவிற்கும் அழுத்தமான வெந்தய நிறமும், சிவப்புக்கரையும், நடுவில் இடதும் வலதுமான வரிகளும் கொண்ட தேவேந்திரா ஒன்பது கஜம் புடவை கொடியைப்போல படபடத்தது.
மாமி படபடத்து பார்த்ததில்லை.
நம்மால் ஆவது என்ன என்பதான பாவனை.
மாநிற முகம். அளவான நாசி, அமைதியான கண்கள்.
எப்போதாவது சிரிக்கும் சிரிப்பழகி. எஞ்சியிருக்கும் பத்து பற்களோடு காலம் தள்ளுகிறாள். இல்லை இல்லை. காலம் அவளைத்தள்ளுகிறது.
வாழ்க்கையில் எதுவும் அவள் வேண்டியோ அவளைக்கேட்டோ நடந்ததில்லை.
பன்னிரண்டு வயதில் திருமணம்.
வரிசையாக எட்டு பெற்றாள். அதுவும் அவளிடம் கேட்டு நடக்கவில்லை.
மாமா நெஞ்சு வலியால் போன நாளில் கடைக்குட்டிக்கு மூன்று வயது. இருபக்க மூக்குத்திகள், கைவளையல்கள், கால் மெட்டி, கொலுசு என்றிருந்த பலவும், அவள் உடம்பை விட்டு தகனத்தோடு போயின. எதுவும் அவளைக்கேட்டு நடக்கவில்லை.
கேட்காமல் இயங்குவது என்பது வாழ்க்கையின் இயல்பென்று ஆனது. நான்கு பெண்கள் திருமணமும், மைத்துனர் முன்னின்று நடந்து முடிந்தன. நான்கு பிள்ளைகளுக்கும் கூட தான்.
கர்ப்பக்காலங்கள் அடிக்கடி வாய்த்ததில் எப்போதும் சுரந்த முலையோடு பால் மணம் மாறாது இளமைக்காலத்தின் பத்தாண்டுகள் கடந்தன. அவளை அறியாமல், இடுப்புப்பெருத்து தன்னையே மறக்கலானாள். சோற்றுக்கோ, சொத்திற்கோ குறைவில்லை.
திடீரென்று இறந்த மாமாவும் குழைந்தது இரவுகளில் தான் எனும்போது, அவரோடும் ஒட்டமுடியவில்லை.
அவள் மனமும், உடலும் ஒன்றுக்கொன்று துணையாகின. வேணி சாப்பிடப்போலாமா என்று உள்ளுக்குள் குரல் எழுந்தால் சாப்பிடுவாள். இல்லையென்றால் படுத்திருப்பாள்.
ரயிலில் ஜன்னலோரம் உட்கார்ந்திருப்பதைப்போல, அவளுக்கு இந்த ஜில்லென்ற சிவப்பு வண்ணம் பூசிய திண்ணைத்தரை ஆகிவிட்டிருந்தது.
மூன்று மகன்கள் வெளியூரிலிருந்து எப்போதாவது வருவார்கள். நான்கு பெண்களும், குழந்தைகளோடு, கோடை விடுமுறைக்கென்று வருவார்கள். யார் வந்தாலும்,
“எப்படியிருக்கேம்மா? சாப்டியா? நான் சித்தப்பா ஆத்துக்குப்போறேன்.”
அமைதியாகத் தலையாட்டுவாள்.
சொற்களில் சிக்கனம் கேட்டு வாய்க்கவில்லை.
“சும்மா இரு சொல்லற என்றலுமே, அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே” என்னும் அருணகிரி யார் என்று வேணி மாமிக்குத் தெரியாது.
தினமும் ஸ்வாமி அலமாரியில் உள்ள தீபச்சுடரை நோக்கி கைகூப்பியபின் கைகள் திருநீற்றைக் கீற்றாய் இடும்.
பிள்ளைகள் எல்லாரும் வெளியூரில் வசிக்க கிராமத்தில் மிச்சமிருப்பவன் தலைச்சன் பிள்ளை ராஜகோபாலன். மின்சாரத்துறை அதிகாரி.
மாமி பகலில் மட்டும் திண்ணை வாசம். இரவில் தூங்கக் கூடத்தில் இடம் இருக்கிறது.
பொழுதுவிடிந்து உமிக்கரியும், பல்பொடியும் கலந்து தேய்த்து, வாய்க்கொப்பளித்த பின், உடுத்திண்டு குளிக்கிற துணியை முழங்காலுக்குக்கீழே வரை மறைகின்ற மாதிரி சுற்றிக்கொண்டு , பித்தளைசொம்பால் தண்ணீரைத்தலையில் ஊற்றிக்கொண்டு குளிப்பாள். பல்லாண்டுகளாக வேம்பின் வாசனை கொண்ட மார்கோ சோப்.புடவையை அலசிப் பிழிந்து, குளித்து, மடி உடுத்தி, திருநீறு அணிந்தபின் காபி. அதன் பிறகு திண்ணை.
கோபாலனின் மனைவி பியூசி வரை படித்த பர்வதம். அவளுக்கு எப்படி இறைவன் அறிவிற்கு எட்டாதவரோ, அப்படி திரிவேணி மாமியும்.
“பரப்பிரம்மம் மாதிரி இருக்கா உங்கம்மா. என்ன கேட்டாலும் பேச மாட்டேங்கிறா” என்று வந்த புதிதில் அங்கலாய்த்து ஓய்ந்து போனாள்.
பர்வதம் எதையும் முன்கூட்டியே திட்டமிடுபவள். வீட்டுச் செலவு கணக்கு, பால் கணக்கு, பள்ளிக்கட்டணம் என்றும் எல்லாவற்றுக்கும் திட்டமிட்டு, அதில் மிச்சமிருந்தால் சேமித்து வைத்துக்கொள்வாள்.
வாழ்க்கையைத் திட்டமிடாவிட்டால் எதுவும் கைமீறிப்போகும் என்பது அவள் நம்பிக்கை.
வார சந்தையில், தக்காளிக்கூட ஒரு வாரத்திற்கு சேர்த்து வாங்கி காற்றாட எடுத்து வைத்து பயன்படுத்துவாள்.
யாராவது எங்காவது அவளை ஏமாற்றி விட நினைத்தால், உண்டு இல்லை என்று பண்ணும் ரகம்.
வீட்டுவேலைக்கு வரும் லெட்சுமி ஒன்றுக்கு ரெண்டுமுறை பால் கறை இருக்கிறதா என்று பார்த்தே பாத்திரத்தைக் கவிழ்த்திச் செல்வாள்.
பர்வதம் கெட்டி மகள் என்று பெயர் எடுத்திருந்தாள்.
பிள்ளைகளை எந்த கேள்விகளைப் படிக்க வைத்தால் தொண்ணூறு வாங்க வைக்கமுடியும், காஸ் சிலிண்டரை நீண்ட நாட்கள் தீராமல் வைத்திருப்பது எப்படி, அரை பக்கெட் தண்ணீரில் சில துணிகளை அலசுவது எப்படி என்று பல எப்படிகளும், அதன் விடைகளுமாக அவள் வாழ்க்கை, அவளைக்கேட்டு, கணக்கு ஒப்படைத்தபடி ஓடிக்கொண்டிருக்கிறது.
அவள் வேண்டி, மகன் , மகள் ஒன்று, குடும்பக்கட்டுப்பாடு ஒன்று என்று வாழ்ந்துகொண்டிருக்கிறாள்.
என்னை காலேஜ் அனுப்பியிருந்தா நான் எப்படி ஆகியிருப்பேன் தெரியுமா என்று மூத்த பெண் ப்ரியாவின் பின்னலைப் பின்னியபடி, பாதி நின்ற வாழ்க்கை கணக்கைத்தொடர அவள் கண்கள் விரியும்.
அம்மா எப்படியும் விடமாட்டாள் என்று உணர்ந்துக்கொண்ட, ப்ரியாவும், கணேஷும் நன்றாகப்படித்தார்கள்.
ப்ரியாவுக்கு பத்து வயதிருக்கும் போது ஒரு நாள், பலகாரங்கள் வைத்திருந்த சம்படம் திரிவேணி மாமி கீழே போட்டதில் நசுங்கியது.
“இந்த சம்படம், எங்க பாட்டி கொண்டு வந்ததாம். எங்கம்மா எனக்கு ஆசையாக்கொடுத்தா. இன்னி நாள்ல இவ்வளவு அழுத்தமா பாத்திரம் கிடைக்காது. அந்நாளையில இது பத்து ரூபாயாம். இன்னிக்கு சாமான் விக்கிற விலையில என்ன விலை இருக்கும் தெரியுமா?”
என்று பொரிந்தாள். திரிவேணி மாமி மௌனமாய்க்கடந்தாள்.
மாலையில் வந்த கோபாலனிடம்
“எங்காத்துலேந்து கொண்டு வந்த சம்படம் உங்கம்மா போட்டு நசுக்கிட்டா. நான் என்ன பேசினாலும் அழுத்தமா ஒண்ணுக்கும் பதில் சொல்ல மாட்டேங்கிறா!” என்றாள்.
அவளுக்குப் பேசாத மாமியார் ஒரு நடமாடும் அதிசயம்.ஒரு முடிவில்லா புதிர்.
தன்னைப்பற்றி என்ன நினைக்கிறாள் என்று தெரிந்துகொள்ள பர்வதத்திற்கு ஆசை. மாமியிடம் கேட்டும் இருக்கிறாள்.
“அம்மா என்னைபத்தி என்ன நினைக்கறேன்?” மெளனமாக ஒரு பார்வை, மெலிதாக ஒரு புன்னகை.
அவள் கூடப்பிறந்த சகோதரிகள் அவரவர் மாமியாரிடம் குட்டு வாங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், தன் மாமியார் பேசாமல் இருப்பது அவளுக்கு புரிந்ததில்லை.
திரிவேணி மாமியின் தங்க ஒட்டியாணம் வைத்த பெட்டி மட்டும் ஒரு நாள் பரணில் கிடைத்தது. உள்ளே பட்டுத்துணியால் தைத்திருந்தது. ஆறு பக்கம் கொண்ட தேக்கு மரப்பெட்டி. அதில் மாமி கொண்டு வந்த ஒட்டியாணம் இருந்ததாம். மாமா போனபிறகு நடந்த நான்கு திருமணங்களில், அவை வேறு நகையாக மாறி , பெண்களின் வீடுகளுக்குப்போய்விட்டன.
அந்த ஒட்டியாணம் இருந்தால் பிரியாவிற்கு பயன்பட்டிருக்கும் என்ற கணக்கில், பெருமூச்சோடு அந்த பெட்டியை மூடினாள் பர்வதம்.
தைப்பொங்கல் முடிந்து, தென்னை மரம் ஏறுபவர், வயலில் வேலை செய்யும் குடியானவர்கள், பாத்திரம் தேய்க்கும் லெட்சுமி என்று பலருக்கும் பொங்கல் காசும் கொடுத்தாயிற்று.
வேறொரு பகல் பொழுது திரிவேணி அம்மாள் எழாமல் விடிந்தது.
பக்கத்திலிருந்த பாலாஜி நர்சிங் ஹோமில் சேர்த்துவிட்டார்கள். சிறுநீர் எடுக்க பை; கையில் ட்ரிப்ஸ். உடல், மடிசாரிலிருந்து நயிட்டி உடைக்கு மாறிவிட்டிருந்தது.
என்ன காரணம் என்று தெரியாமல் உறக்கம் போன்ற கோமா நிலை.
ம்ருத்யுன்ஜெய மந்திரத்தை உச்சாடனம் செய்தால் மாமி உயிர் கஷ்டப்படாமல் பிரியும் என்றார்கள்.
பர்வதம் யாரிடமோ கேட்டெழுதி ஒரு பேப்பரில் கொண்டு வந்தாள்.
தினமும் நூற்றிஎட்டாவது மாமியாரின் தலைமாட்டில் இருந்துகொண்டு சொல்லிவிடுவாள்.
இப்படியே தொடர்ந்தால் எப்படி என்ற சிந்தனை பர்வதம் மனதில் மருட்சியை ஏற்படுத்தியது.
வீட்டுக்குப்போனாலும் மலம் மூத்திரம் அள்ள வேண்டும் என்ற கணக்கு அவளை அழவைத்தது.
சூரியன் உதயம் ஆவதும், அஸ்தமிப்பதும் கதி தவறாமல் நடந்தன.
மிச்சமிருக்கும் ஏழு பேரும் வந்துவிட்டார்கள். அவர்களுக்கு சாப்பாடு, காபி என்று வேலை பெருத்தது.
திரிவேணி மாமியின் மூச்சு ஏறி இறங்குவது சீராக இருந்தது. உள்ளிருந்த மனம், பெற்றவற்றை வேடிக்கை பார்த்தது.
அவள் கேட்டு எதுவும் நடந்ததில்லை. இம்முறையும் அப்படியே காத்திருக்கிறாள்.
நாளைக்கு ரத சப்தமியாம். இஷ்ட ம்ருத்யு வரம் இருந்ததால், பீஷ்மர் அம்புப்படுக்கையில நல்ல நேரம் வரும் வரைக்கும் காத்திருந்தாராம்.
தன்னுடைய பாவங்கள் எல்லாத்தையும் மன்னிக்க சொல்லி சூரியபகவனிடம் வேண்டிண்டு போனாராம்.
மைத்துனர் ராகவன் புதியதாக மஹாபாரதம் படிக்க ஆரம்பித்திருக்கிறார்.
இஷ்டம் என்று திரிவேணி மாமி வாழ்வில் எதுவும் இருந்ததில்லை.
ம்ருத்யுவும் அப்படியே.
வாழ்நாளில் சும்மா இரு என்று இருக்க திரிவேணி மாமிக்கு யாரும் குருமுகமாக உபதேசம் செய்ததில்லை.
கோயில் குளங்கள், புண்ணிய தீர்த்தங்கள் என்று அவள் அலைந்ததில்லை.
தேவாரம் திருவாசகம், சஹஸ்ர நாமம் என்று படித்ததில்லை.
ஏனோ அவள் முகத்தில் ஒரு புன்னகை இருந்தது. எதையும் எதிர்பார்க்காமல், வாழ்க்கை முடியும் போது, அதையும் வெறுமெனே பார்த்திருந்தாள்.
ரதசப்தமியில் திரிவேணி மாமி பெற்ற பிள்ளைகள் அனைவரும் அருகிருக்க விண்ணுலகம் போனாள்.
அதற்குப்பிறகு பர்வதத்தின் பிள்ளைகள் பெரியவர்கள் ஆனார்கள்.
ப்ரியா இன்று சென்னையில் டாக்டர்; கணேசு, பெரிய வழக்கறிஞர்.
இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
ராஜகோபாலன் காலம் ஆகியும் பத்தாண்டுகள் ஆகிவிட்டன. பர்வதத்தின் வாழ்க்கை கணவரின் மறைவுக்குப்பின்னர் ஸ்டிக்கர் பொட்டு தவிர எந்த மாற்றமும் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
கணேசுவின் மனைவி சுபாவோடு எப்போதும் சண்டை வருகிறது.
சிறு துளி பெருவெள்ளம் என்ற அவள் வியாக்கியானம் ஆன்லைனில் பொருள் வாங்கும் சுபாவின் காதுகளில் ஏறுவதில்லை. அது ஏறாத வண்ணம் அவள் இயர் போட் அணிந்து நகர்கிறாள்.
பர்வதத்தால் தன் மாமியாரைப்போல சொல்லற்று இருக்க முடிவதில்லை.
“ஏன் சுபா. காசை கரியாக்கினா தான் உனக்கு சந்தோஷமா? சொல்லிண்டே இருக்கேன். நீ கேக்கவே மாட்டேங்கற”
என்ன கத்தினாலும் அது என்னை பாதிக்காது என்பது போல ஒரு பார்வை பார்த்து நகர்ந்த சுபாவோடு, மல்லுக்கட்டுவது பர்வதத்தின் முகத்தில் புன்னகையை துடைத்தெடுத்தது.
எல்லாருமாக ஏலகிரிக்குப்போகிறேன் என்று கிளம்பி விட்டார்கள்.
டிசம்பர் மாதக்குளிர் ஒத்துக்கொள்ளாது என்று பர்வதம் மட்டும் தங்கிவிட்டாள்.
நான்கு நாட்கள் யாருமில்லாமல் இருக்க வேண்டும் போல இருந்தது. ஆனால் இரவு தூக்கம் வரவில்லை.
டிவியை வைத்தால், அதில் வரும் மாமியார் மருமகள் கதைகள், தூக்கம் வராத அளவுக்கு இருந்தன.
வாழ்க்கையின் பல துகள்களை அவள் மனம் மாறி மாறி அசைபோட்டது. ஹாலில் இருந்த ராதாகிருஷ்ணர் சிலை, அவள் கல்யாணத்தில் தாய்மாமா கொடுத்தது. இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறாள்.
அறுபத்தாறு வயதிலும் திருமணப்புடவைகளை அவ்வப்போது எடுத்து ஒத்தையாக விரித்து இன்றும் பத்திரமாக வைத்திருக்கும் தன் சாமர்த்தியத்தை நினைத்தபோது பெருமையாக இருந்தது.
அவர்கள் காலம் தவறாதவர்கள். எனவே நினைத்த நேரத்தை விட வேகமாக சேர்ந்துவிட்டார்கள். அஷ்டமி திதிக்கு இன்னும் அரை நாழிகை மிச்சமிருந்தது.
வாசலில் யாரோ இருக்கிறார்கள் என்று பர்வதத்திற்குத் தோன்றியது. சிசி டிவியில் யாரையும் காணவில்லை.
மெல்ல எழுந்து கழிவறையை நோக்கி நடந்தாள். அங்கிருந்த பல்லி வாசலில் இருந்த ஏவலர் சொல்படி, மேலே “தப்” என்று விழுந்தது.
மேலே விழுந்த அசூயையில், கத்திக்கொண்டே, கழுவியிருந்த தரை வழுக்கி கீழே விழுந்தாள் பர்வதம். பின்மண்டையிலிருந்து ரத்தம் கசிய ஆரம்பித்தது.
ஏனோ நினைவு மயங்கும் நிலையிலும் அவளுக்கு திரிவேணி மாமியின் ஞாபகம் வந்தது.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
