கொன் ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே

‘கொன் ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே
எம் இல்அயலது ஏழில் உம்பர்
மயில் அடி இலைய மா குரல் நொச்சில்
அணிமிகு மென் கொம்பு ஊழ்த்த
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே’

குறுந்தொகையில் 138 வது பாடல் காதலர்கள் உறக்கமில்லாமல் தவிப்பதைச் சொல்கிறது. மயிலின் அடி போல நொச்சி மரத்தின் இலைகள் இருக்கின்றன. அவற்றின் மென்மையான கொம்புகளிலிருந்து பூக்கள் வீழும் ஓசையைக் கேட்டுக் கொண்டு காதலி படுத்திருக்கிறாள். காதலனோ, மலை நாட்டில். இந்த ஊர் தூங்கிக்கொண்டிருக்கிறது, அவளோ பூ விழும் ஓசையைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள்.

தூக்கமின்மை காதலருக்கு மட்டும் தானா? ‘காலமிது, காலமிது கண்ணுறங்கு மகளே, காலம் இதைத் தவறவிட்டால் தூக்கமில்லை மகளே.’

பைஜாமா, காலுறை அணிந்து கொண்டு, பாரிசிற்கு ஏறத்தாழ 70 மைல்களுக்குத் தெற்கே, மாண்டார்ஷி (Montargis)நகரின் ரயில் பாதைக்கருகே, இரவிலே நடந்து கொண்டிருந்த ப்ரெஞ்ச் குடியரசின் தலைவர்,  பால் டேஷனலை, (Paul Deschanel) ரயில்வே ஊழியர் ஒருவர் அடையாளம் கண்டுகொண்டு வினவுகிறார்; வெட்கத்தால் சிவந்த முகத்துடன், தான் கார் டி லியோனில், (Gare-de Lyon) ஓரியன்ட் விரைவு வண்டியில் ஏறிய நினைவு மட்டும் கடைசியாக இருப்பதாகச் சொல்கிறார் அதிபர். இது நடந்தது அவர் அதிபரான சில மாதங்களுக்குள்ளே பிப் 1920ல்.

கேலிக்குரியதாக பார்க்கப்பட்ட இந்த நிகழ்வு, தூக்கமின்மைக்காக அவர் வெகு காலம் உட்கொண்ட க்ளோரல் ஹைட்ரேட்டின் பக்க விளைவாக இருக்கலாம் அல்லது தூக்க மயக்கம், அல்லது தூக்கக் கலக்கம் எதனாலும் கூட ஏற்பட்டிருக்கலாம். பின்னர் வந்த தூக்க அறிவியலாளர்கள் இந்த கலக்க மயக்கத்தை, தூக்கத்தில் ‘அதிக கண்சுழற்சியற்ற நிலை’யால் உண்டாவது (More Non- Rapid Eye Movements) என வரையறை செய்தார்கள். விழிப்பிற்கும், உறக்கத்திற்கும் இடையே இருக்கும் அந்த எல்லைக்கோடு, உறக்கம் கலையும் நிலையில் ஏற்படும் அந்த தூக்கக் கலக்கம், முழு விழிப்பில்லாத நிலை அனைத்தும் கலந்த அந்த பாதி தன்னுணர்வு, அதுவரை அதிக கவனம் பெற்றிருக்கவில்லை; மருத்துவ ஆய்வும், பரிசோதனைகளும் இதை அறிய விழைந்தது.  அது ‘உறக்கம் பற்றிய அறிவியலாக’ பரிணமித்தது.

நூறாண்டுகளுக்கு முன்னர், அரசி விக்டோரியாவிற்கு அரசு மருத்துவராகப்  பணியாற்றிய ஹென்றி ஹாலந்து (Henri Holland) புலம்பினார்: ‘தூக்கத்தின் அருமையை நாம் அறிவதில்லை; வாழ்க்கையில்  தொடரும்  முக்கியமான அவசியமான ஒன்றைப் பற்றி ஏனோ நாம் நினைக்கவில்லை.’ 19ம் நூற்றாண்டின் இறுதியில், ‘பெருமூளைச்சோர்வும், தூக்கமின்மையும்’ பற்றிய ஆய்வுகள் தொடங்கின. ஆனால், தூங்கும் மூளையின் உடலியல் என்ன என்பதை அறிய உதவும் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகே, இத்துறை ஒரு ஆய்வக பரிசோதனையாயிற்று. உறக்கத்தின் போது மூளையின் இயக்கத்தை அறிவதற்கும், பதிவு செய்வதற்குமான கருவியை,Turin ஐச் சேர்ந்த உடலியலாளரான ஏஞ்ஜெலோ மோசோ (Angelo Mosso) உருவாக்கினார்.

“ஆழ்ந்த உறக்கத்தின் போதும், மூளை, வெளிப்புறத் தூண்டுதல்களை, ஏதோ ஒரு நிலையில் கண்டுகொள்கிறது.” சமீபத்தில்  ஏற்பட்ட தலைக்காயத்துடன் வந்திருந்த ஒரு நோயாளிக்காக, சிறப்பாக ‘மனித சுழற்சி சம நிலை’ (Human Circulation Balance) வரைபடத்தில் அளப்பதற்கான செயல்பாடுகளில் அவர் ஈடுபட்டிருந்த போது, ‘தூக்க நிலையும் கூட செயல்படு நிலைதான்’ (Active State) என்று அவர் அறிந்தார். இரண்டாவதாக அவர் அறிவித்த ஒன்று மிகவும் சிறப்பானது- “மிகச் சிறிய ஒலி கூட மூளையின் மேற்பரப்பில் குருதி பாயச் செய்கிறது; மருத்துவ மனையில் மணிக்கொருமுறை கடிகார ஒலி எழும்போது, யாரேனும் மேல் தளத்தில் நடக்கும் ஓசை கேட்கும் போது, நான் நாற்காலியை நகர்த்தும் போது அல்லது என் கைக்கடிகாரத்திற்கு சாவி கொடுக்கும்போது, அடுத்த அறையில் மற்றொரு நோயாளி இருமும்போது,- அதாவது அனைத்து சிறு ஓசைகள் கூட மூளையில் மாறுதல்களை ஏற்படுத்த, என் பதிவுக் கருவியில், அவை , என் நோயாளியின்  மூளை வரைகோடுகளாயின.”

உறக்கத்தில் நிகழும் தூக்க அறுபடல்கள் மனித சமுதாயம் அறிந்த ஒன்றுதான். வாழும் காலத்திலேயே கொண்டாடப்பட்ட அரிஸ்டாடில், உறக்கம் பற்றி எழுதிய கட்டுரைகளை மோசோவின் பரிசோதனை உறுதி செய்தது. மூன்று வகைகளில், தன்னுணர்வு, உறக்கம் என்ற போர்வையின் கீழ் தன்னை உட்படுத்திக் கொண்டாலும், அதை தூக்க மயக்கம் முற்றிலுமாக ஆட்கொள்வதில்லை. உறங்குபவர், தாம் கனவு காண்பதாக முதலாவதாக அறிய வேண்டும்; வெளியிலிருந்து வரும் ஓசைகள் (நாய் குரைப்பது, சேவல் கூவுவது) பதிவாகின்றன என்பது இரண்டாவது; விந்தையாக, தான் விழித்திருக்கும் வேளைகளில் செயல்படுவதைப் போலவே அவர் தூக்கத்திலும் செயல்படுவார் என்பது மூன்றாவது. இதனினும் ஆச்சர்யம் அவருக்கு அது நினைவில் நிற்காதென்பதே.

இந்த அரைத்தூக்க நிலை அல்லது தூக்க மயக்கம் பல சுவையான விவாதங்களுக்கும் இட்டுச் சென்றிருக்கிறது; புதிர் நிறைந்த ஒன்று இது, சட்டமும், தத்துவமும் இதை எப்படிப் பார்க்கின்றன? தூக்கத்தில் நடப்பவர்களுக்கு, பகல் நேர ‘தான்’ என்பது  விடுபட்டு இரவு நேர ‘தான்’ என்று சுயேச்சையாக மாறுகிறதோ? ஆயினும் பகல் நேர ‘தான்’ முழுவதும் விடுபட்டுப் போய்விடுவதில்லை அல்லவா? தூக்க நடையாளரைப் பற்றி கலைக்களஞ்சியங்கள் பதிவு செய்துள்ளன. அதில் குறிப்பிடத்தகுந்த ஒன்று திருச்சபையின் இளைய குருவைப் பற்றியது. அவர் தன் இசையையும், பிரசங்கங்களையும் உறக்கத்தில் இருக்கும்போதே உண்டாக்கியுள்ளார். தூக்க நடையாளர்கள் செய்யும் அனைத்து வரையறுக்கப்பட்ட குறும்புகளும், அவர்களது தூக்கத்தில் தான் தூண்டப்பட்டன என்பதை நம்புவதும் ஐயமே. இன்னதுதான் செய்கிறோம் என்ற விழிப்பில்லாமல், நடந்ததை நினைவுகூற இயலாமல், உறக்க நடையாளர்கள் செய்வதை ‘சோம்னாம்புலிசம்’ என்று சொல்கிறோம்; அதன் மேல்வீச்சாக வலிப்பு நோய், மிகை உணர்ச்சிக் கோளாறு, காணப்படுகிறது. விஸ்வாசிகளின் கவனத்தைக் கோரியும், நல் மதிப்பு பெறவும், முன்னேற்பாடின்றி செய்யப்பட்ட ஒன்றாக நம்ப வைக்கவும் சில ‘தூக்க நடையாள குருமார்கள்’ இதை போலி செய்வார்கள்!

இந்த பகற்கனவுகள் காண்போரையும்,  தெளிவில்லாதவர்களையும், மரியாதைக்குரியவரையும் ‘அலப்பறை, கயிறு திரிப்பவர், abstraction’ என்று 17ம் நூற்றாண்டு முடிவதற்கு முன்னரே ஆங்கில மொழி பேசும் மக்கள் சொல்லத் தொடங்கினார்கள்.  “The Wayward Mind,”ல்  கை க்ளேக்ஸ்டன் (Guy Claxton) சொல்கிறார்: நடுக்காலக் கட்டங்களில், அடுக்குகளாக பரந்து விரிந்து செல்லும் எண்ணங்களை ‘சிந்தனை’ என்றழைத்தனர். இம்மாதிரியான கோரப்படாத நடத்தைகள் சாத்தானுக்கு இரத்தினக் கம்பளம் விரிப்பதைப் போன்றது என்ற சந்தேகம் இருந்தாலும், இந்த சிந்தனைக் கடைசலும், சிதறலுமான, அரைத்தூக்க நிலை, சில துறவு மடங்களில், ஒரு யுக்தியாகப் பயன்படும் வகையில் பயிற்றுவிக்கப்பட்டது. ஒரு சிறு உறக்கத்திற்குப் பிறகு தாமஸ் அக்வைனஸ், (Thomas Aquinas) தன்னையே விழிக்க வைத்து, இன்றைய மனவியலாளர்கள் சொல்லும் ‘மயக்க மயக்கம்’ (hypnagogia) என்ற நிலையில் தரையில் விழுந்து வணங்கி, தான் மறுதினம் என்ன பேசப்போகிறோம் அல்லது எழுதப் போகிறோம் என்பதைப் பெறுவாராம்.

அடுத்தடுத்த நூற்றாண்டுகளில், விழிப்பிற்கும், உறக்கத்திற்கும் இடையிலான அந்தக் கதவு ஆர்வத்தையும் தூண்டியது, அச்சத்தையும் கொண்டு வந்தது. பகல்கனவு காண்பவர்களை, தூக்க நடையாளர்களை, நோயியல் நிபுணர்கள், தனித்த ஒற்றைச் செயலிற்கு உட்பட்ட, தூக்கமின்மையால் பாதிக்கப்பட்ட, கிட்டத்தட்ட பித்து நிலையில் இருக்கும் மனிதர்கள் என்று சொல்கையில், மரியாதைக்கு உரியவர்களின் பலகுரல்கள், படைப்புகள், கலையின் முக்கியக் கருப் பொருள் என்று கொண்டாடப்பட்டது. இந்த விளிம்பு நிலை, மான்டேய்ன், ரூசோ, டே க்யூயிஞ்சி (Montaigne, Rousseau, and De Quincey) போன்றவர்களின் இலக்கியப் படைப்புகளில் பரிமளித்து எழுந்தது. உளவியல் சார்ந்த வசீகரிக்கும் துள்ளல் நாவல்களும் எழுதப்பட்டன. ‘உள்ளார்ந்த அக்னியின் நலுங்கும் சுடரென அது தன் செய்தியை மூளைக்கு அறிவிக்கிறது’ என்று வர்ஜீனியா உல்ஃப் சொன்னார். இந்த நலுங்கும் சுடரைக் கைப்பற்றும் முயற்சியில் படைப்பாளிகள் இருக்க, கல்வியாளர்களும், உளநோய் மருத்துவர்களும், உளவியல் ஆய்வாளர்களும், இதை, மனதை குவிக்க இயலாதவர்கள், கற்பதற்கு தடைகள் உள்ளவர்கள், மனநிலை சரியாக இல்லாதவர்கள், உற்பத்தி திறனில்லாதவர்கள் என்று சொன்னார்கள். விழிப்புறக்க எல்லைக் கோடுகளை கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், மெய்யியலாளர்கள், உளவியல் ஆய்வாளர்கள் குத்தகைக்கு எடுத்துக் கொண்டுள்ளார்கள் என்று சொல்லலாம். விழிப்புறக்க நிலையில் உள்ளவர்களின் மூளையை ஆய்வு செய்ய உதவும் கருவிகள் உருவாகின. அவை தூக்கத்தின் வண்ணங்களைக் காட்டின. (Alfred Lee Loomis) ஆல்ப்ரெட் லீ லூமிஸ் என்ற வால் ஸ்டீர்ட் வங்கியாளர், அறிவியலில் விருப்பமுடையவர், டக்ஸீடோ பார்க் (Tuxedo Park,) என்ற இடத்தில் தன்னுடைய தனிப்பட்ட ஆய்வகத்தில் முதன் முதலில் ஈஈஜி ( EEG) என்ற கருவியை வடிவமைத்தார். 1930களில் அவர் செய்த பல ஆய்வுகள், தூக்கத்தின் ஐந்து நிலைகளை வரைகோடுகளாக பதிவு செய்தது.  அந்த ஐந்து நிலைகளுக்கும் தனிப்பட்ட வரைகோடுகள் பதிவானதன் மூலம், தூக்கத்தில், மூளையின் செயல்பாடுகளைப் புரிந்து கொள்ள முடிந்தது.

தொடர்ந்த தசாப்தங்களில், சிக்கலான, சுழற்சித் தன்மையுள்ள உறக்கத்தைப் பற்றி பல தூக்க அறிவியலாளர்கள் பல ஆழங்களைப் புரிந்து கொள்ள முயன்றனர். சிறப்பாக மேம்படுத்தப்பட்ட ஈஈஜி கருவியின் மூலம், கண் அசைவுகள், கண் அசைவில்லாமை அறியப்பட்டன. (Eugene Aserinsky and Nathaniel Kleitman) யூஜின் அசெரின்ஸ்கி மற்றும் நதேனியல் க்ளெட்மேன் ஆய்வுகள், 4 நிலையிலான, அமைதியான, வேகமற்ற கண் அசைவுகள் பொதுவாக, 80% உறக்கத்தில் நிகழ்கின்றன என்றும், அதிலும் குறிப்பாக இந்த வேகமற்ற கண் அசைவுகளின் போதுதான் தூக்கத்தில் நடப்பது, குழப்பத்துடன் எழுந்திருப்பது போன்றவைகள் நடைபெறுகின்றன எனவும் காட்டின. ஆனால், இவை முழுதுமாக உறக்கக் கோளாறுகளை அறிந்துள்ளனவா, உயிர்வேதியல் துறை எந்த அளவில் இதில் முன்னேறியுள்ளது, தன்னுணர்வின் இந்த எல்லைக்கோட்டினை நாம் புரிந்து  கொண்டுள்ளோமா என்பதெல்லாம் இன்னமும் நாம் செல்ல வேண்டிய தூரம்.

ஆனால், இந்த எல்லைக்கோட்டில் பயணிக்கும், அல்லது அதை உணர்ந்திருக்கும் கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், படைப்பவர்கள், உறக்க அறிவியலாளர்கள் அளிக்கும் திறப்பு சிறப்பான ஒன்று. சாமுவேல் ஜான்சன் மொழியில் இது ‘அந்திப்பொழுது- உறக்கத்திற்கும், விழிப்பிற்குமியடையேயான மெல்லிய நூலாடை. கனவிற்கும், காரணத்திற்குமான இடைநிலை. இருபுறமும் நிகழும் விந்தை. தூக்கச் சுழல்கள்,  K-complexes (ஈஈஜியின் அலை வடிவத்தில் இரண்டாம் நிலை- வேக கண்ணசைவு இல்லாதபோது, சுற்றி வர எழும் ஓசைகளால் மூளை தூண்டப்பட்டாலும், அதில் ஆபத்தொன்றுமில்லை, தொடர்ந்து உறங்கு என்று மூளை சொல்வதும், ‘உறக்க நினைவுகளை அதாவது உறங்குகையில் வரும் நினைவுகள்/ கனவுகள் இவற்றை சேமித்துக் கொள்ள உதவுவதும் கண்டறிப்பட்டுள்ளது) என்ற எத்தனையோ நுண்மின்முனைகள் இருந்தாலும், குறிப்பேட்டில் எழுதப்பட்ட மரியாதைக்குரியவர்களின் விழிப்புறக்க செய்திகளாகட்டும், படைப்புகளில் அதை நாம் எதிர்கொள்ளும் போதாகட்டும், மிக வெளிதான வெளிச்சம் மட்டுமேயுள்ள இந்த இடைகழியில் நாம் நடை பயிலும்போது கிடைக்கும் அனுபவம் தனியானது.

Reverie என்ற சொல்லை நம் கையாளவதற்கு நூற்றாண்டுகள் முன்னரே மிச்சேல் டே மான்டே Michel de Montaigne (1533-1592) என்ற ஃப்ரெஞ்ச் மெய்யியலாளர், தனிமையில் தன்னை ஆட்கொள்ளும் தப்பி ஓடும் எண்ணங்களைப் பற்றி ‘On Some Verses of Virgil’ (1580)ல் சொல்கிறார்.

“என்னுடைய மனதை என் செய்வேன்? சாதாரண தருணங்களில் ஆழமான விசித்திர எண்ணங்கள் வந்தாலும், நான் மிகவும் எதிர்பார்க்காத நேரங்களில் தோன்றி மறையும் விந்தை தானென்ன? அந்தத் தருணத்தில் எழுபவைகளை எப்படி பதிவு செய்ய? என் வேலைகளின் போது , படுக்கையில் இருக்கும் போது வருகிறது; அதிகமாக என் எண்ணங்கள் குதிரைச்சவாரி செய்யும் போது பரந்து விரிகின்றன. நான் தீவிரமாகப் பேசும்போது அதை பிறர் உன்னிப்பாக கேட்க வேண்டும் என்ற அதீத கோரிக்கை என்னிடமுள்ளது; யாராவது இடைபுகுந்தால், என் பேச்சு தடைபட்டுவிடும்; பயணங்களின்போது தெருவின், பாதையின் அமைப்பே தொடர்பேச்சிற்கு இடையூறு. நான் அடிக்கடி தனியேதான் பயணிக்க நேர்கிறது- என்னுள்ளே நான் பேசிக்கொள்ள வசதியாக, தடைகளற்ற எண்ண ஓட்டங்களுக்கு உதவியாக அது இருக்கிறது.

என் கனவுகளும் அதைப் போலத்தான். நான் கனவு காண்கிறேன் என்று கனவை எண்ணத் தெரிந்தவன் நான். அவற்றை என் நினைவுகளுக்கு பரிந்துரை செய்கிறேன். மறு நாள், அவை என்னவாக இருந்தன, எப்படிப்பட்டவைகள் என்றெல்லாம் அறிய முயன்று பிடிபட்டாலும், அவற்றின் பின்புலம் என்ன என்பதை அறிய எத்தனை சிரமங்களை மேற்கொண்டாலும், தெளிவு கிடைப்பதில்லை. சந்தர்ப்பவசமாக எனக்குக் கிடைத்த அவை, என் நினைவில் ஒரு வெற்றுக் குறிப்பாக இருக்கின்றன; மூளையை கசக்கிக் கொண்டாலும், அவ்ற்றின் முழுப் பொருள் அறியாத வருத்தம் மட்டுமே எஞ்சுகிறது.”

மதிப்பிற்குரிய ரூசோ (Jean-Jacques Rousseau (1712-1778) தனது “Reveries of the Solitary Walker” (1782) சொல்கிறார்:

“அதிக மகிழ்ச்சியிலும் ‘இது நீடித்திருக்குமா?’ என்ற ஏக்க எண்ணங்கள் நமக்கு ஏற்படுகின்றன. நம் இதயங்களை வெற்றிடமாக்கி, கடந்து போய்விட்டதே எனவும், எதிர்காலத்தில் கிடைக்குமா என்ற ஏக்கத்திலும் கவலை கொள்ளச் செய்யும் அந்தக் கண நேர இன்பங்களை, இன்பம் என்று சொல்வது சரிதானா? ஆனால், ஒரு ஆத்மா மகிழ்வுற, தன்னைத்தானே உணர, அதிலேயே கவனம் குவிக்க, கடந்த காலத்தை நினைக்காமலும், எதிர் காலத்தைப் பற்றி கவலைப்படாமலும், காலமற்ற நிலையில், நிகழ் காலம் ஒன்றே எனக் கொண்டு அதன் நீட்டிப்பை உணராமலேயே தொடர, நேரம் செல்வதை அறியாமல், சுக துக்கங்களின்றி, வலி வேதனை- இன்பங்கள் என்ற இருமை இன்றி, ஆசைகளும், ஏமாற்றங்களுமற்று, ஆன்மாவை முழுமையாக நிரப்பும் நம் இருப்பை மட்டும் உணர்ந்து கொண்டு, அந்த நிலை நீடித்தால், அது நீடிக்கும் வரை அதுவே, போதுமான, முழுமையான, சரியான, உன்னதமான மகிழ்ச்சி. நாம் வாழ்வில் மகிழ்ச்சி எனக் கொள்வதெல்லாம் இதன் முன் ஒன்றுமில்லை. நான் இத்தகைய பேரானந்தத்தை Saint-Pierreல் என் தனிமையின் இனிமையில், படகில் படுத்துக் கொண்டு நீர் என்னை அழைத்துச் செல்லும் பாதையில் செல்கையில், அல்லது ஆர்ப்பரிக்கும் ஏரிக்கரையில் அமர்ந்திருக்கையில், அழகான ஆற்றங்கரையில், பாறைகளில் முணுமுணுக்கும் ஓடைகளில் உணரும் இந்த நிறைவான இன்பம் எங்கிருந்து வருகிறது? நமக்கு வெளியிலிருந்து அல்ல; நம்மைத் தவிர வேறொன்றிலிருந்து அல்ல, நமது இருப்பிலிருந்து வருகிறது. கடவுளைப் போல நாம் தன்னிறைவு கொள்ளும் தருணமிது.”

ரோமானியாவில் பிறந்த ஃப்ரெஞ்ச்  மெய்யியலாளரான  Emil Cioran வாழ்வில் பெரும்பகுதியில் தூக்கமின்மையால் அவதியுற்றவர். ‘தூக்கமின்மை என்பது நிறைந்திருக்கும் ஒரு வெற்றிடம் என்பதால், அது நேரத்திற்கு விடப்படும் சவால்.’ என்று தன்  நூலான On the Heights of Despair” (1934) ல் சொல்கிறார்.

“தூக்கம் என்பது நம்பிக்கை தருவது என்று சொன்னவர்கள், தங்களுடைய ஊடுருவும் உள்ளுணர்வால், தூக்கமின்மையையும் சேர்த்தே சொல்லியிருக்கிறார்கள். உறங்க முடியாமை என்ற மாபெரும்  கடும்நிலைக்கு ஆட்படும் மனிதனை தூங்க முடியாத விலங்கு என்றே சொல்வேன். மற்ற விலங்குகள் காரணத்துடன் செயல்பட நாம் ஏன் மனிதனை மட்டும் பகுத்தறிவு உள்ளவன் என்று சொல்கிறோம்? தூக்கம் வராமல் தவிக்கும் விலங்குங்கள், மனிதனைத் தவிர படைப்பில் உண்டா? உறக்கம் மறக்கச் செய்கிறது; வாழ்வின் சிக்கல்களும், அபத்த மயக்கங்களும் உறக்கத்தில் காணாமல் போய் விடுகின்றன; புத்தம் புதுக் காலை, பொன்னிற வேளை, இதுவல்லவோ வாழ்க்கை? இனிமையான ஒன்று இந்த விழிப்பிலும், உறக்கத்திலும் உள்ளது- அது வாழ்வு தரும் தொடர்ச்சியில்லாத ஒன்று. 24 மணி நேரத்தில் நாளும், இரவும் மாறி மாறி வருவதுதான் இனிமை. இது மீளுருவாக்க மயக்கத்தைத் தருகிறது. தூக்கமின்மையோ, துன்பத்தை, விரக்தியை, வேதனையைக் கொண்டு வருகிறது. உறங்கா மனிதன், தூக்கமின்மையில் தான் பேசுகிறான். ஒரு மணி நேர தன்னுணர்வற்ற தூக்கத்திற்கு விலையாக ராஜ்யங்களைத் தரலாம்; படுக்கை என்பது, வதை முகாமாக அவனுக்குத் தென்படுகிறது. தூக்கமின்மைக்கும், விரக்திக்கும் இடையே நல்ல தொடர்பிருக்கிறது. தூக்கமில்லையென்றால், நம்பிக்கையில்லை. நீங்கள் சொர்கத்தில் தூங்க முடியும், நரகத்திலல்ல. அறிவைக் கொடுத்து, தூக்கத்தைப் பறித்து கடவுள் மனிதனை தண்டித்துவிட்டார். சிறைகளில் தூங்கவிடாமல் செய்வது கொடும் தண்டனை அல்லவா? தூக்கமின்மையால், பித்துப் பிடிக்கிறது, அவர்களுக்கு மனச்சோர்வு உண்டாகிறது, அவர்கள் விரக்தி அடைகிறார்கள், வாழ்வை வெறுத்து, தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறார்கள். இந்த உணர்ச்சி நிலை, படுகுழியில் விழுவதைப் போல தோன்றவில்லையா? இது ஒரு பைத்தியக்காரத்தனம். பள்ளம் நோக்கிப் பாயூம் அந்த ஆர்வம் தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு இருக்கிறது.”

இந்தியாவின் ஆயுர்வேதம் தூக்கத்தின் அவசியத்தையும், தூக்கமின்மையால் உண்டாகும் அவஸ்தைகளையும் பேசுகிறது. சுஷ்ருதர் சொல்கிறார் “மனிதனின் ஆயுள், உடல் நிலை, மன நிலை, சமூகத்தில் அவன் செய்ய வேண்டிய சிறப்பான பங்களிப்பு, மனித இனத்தின் தொடர்ச்சி, இனிய குடும்ப சூழல் அனைத்தும் அவன் தூக்கத்தில் இருக்கிறது. இயற்கையான தூக்கம், சரியற்ற தூக்கம் என்று உறக்கத்தை இருவகை படுத்துகிறார் அவர். தமோ குணம் அதிகம் உள்ளவர்கள், பகலிரவு பாராமல் தூங்கிவழிவார்கள். ரஜோ குணம் உள்ளவர்கள், காரணமின்றி உறக்கத்தில் ஆழ்வார்கள். சத்வ குணம் உள்ளவர்கள், இயல்பாகவே நடுநிசியில் ஆழ்ந்து தூங்குவார்கள்.

மூன்று குணங்களைப் பற்றியும் அவர் சொல்கிறார். கப தோஷம் குறைந்து, வாதம், பித்தம் மிகுந்திருந்தால், தூக்கமின்மை உண்டாகும். இந்த உறங்காமையும் மூன்று வகைப் படுகிறது- ஏறத்தாழ ஒரு மாதம் போல நீடிக்கும் ஒன்று- சுமாராக ஒரு வாரம் மட்டுமே நீடிக்கும் தூக்கமின்மையும் இருக்கிறது- உடல் மற்றும் மன நிலை சார்ந்து பல மாதங்கள் தூங்க முடியாமல் தவிப்பவர்கள் அவசியம் மருத்துவரை நாட வேண்டும்.

நமது கணித மாமேதை ஸ்ரீநிவாச ராமானுஜனைப் பற்றி மிகச் சிறப்பான ஒரு திறப்பை ரிச்செர்ட் பெய்ன்மன் தந்திருக்கிறார். சிறு வயது முதற்கொண்டே கணிதத்தைத் தவிர வேறு ஒன்றிலும் ராமானுஜனுக்கு நாட்டமில்லை. எண் கணிதம் அவரது மிகப் பெரிய கொடை. அவர், தன் தேற்றங்களைச் சொல்வார், அதன் முடிவினைச் சொல்வார், புதிய சிந்தனைகளைச் சொல்வார், ஆனால், படிப்படியான விளக்கம் தர மாட்டார். ஆராய்ந்து பார்த்தால், அவரது அனைத்து தேற்றங்களும் உறுதிப்படும். அவர் அதனை நாமகிரி அன்னை தன் கனவில் வந்து சொன்னதாகச் சொல்வார். ரிச்சர்ட் சொல்கிறார்: “கணிதமே உயிர் மூச்சென்று வாழ்ந்தவர் ,தன் உணர்வற்ற உறங்கும் பொழுதிலும் அந்தக் கணிதத்தையே பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். நாம்  கணிதத்தை புரிந்து கொள்ள முயல்கிறோம்; அவர் அதன் இயல்பையே பார்த்துக் கொண்டு, அதைப் புரிந்து கொண்டார். நாம் அறிவதை அவர் பார்க்கவே செய்துவிட்டார். தன் இறுதிப் படுக்கையிலும் அவர் கண்டுபிடித்த ‘மாக் தீடா ஃபங்க்ஷன்’ புரிந்து கொள்ள நமக்கு 82 ஆண்டுகளாயின. அவை இன்று நாமறிய முயலும் ‘கருந்துளை’ பற்றியது. ராமானுஜன் வாழ்ந்த காலத்தில் எவரும் கருந்துளை பற்றி அறிந்திருக்கவில்லை. உணர்விலும், உணர்ச்சியிலும் கணிதத்தால் நிறைந்திருந்த அவர் தூக்கமின்மையால் அவதியுறவில்லை; மாறாக தூக்கத்திலும் அதையே அந்த மூளை பற்றிக்கொண்டிருந்தது. தன்னுணர்வில் கலந்த பேருணர்வு அதுவும் நீடித்த ஒன்று.

உசாவிகள்:

https://thereader.mitpress.mit.edu/daydreamers-and-sleepwalkers-crossing-the-borderlands-of-the-unconscious/

Antonio Melechi is a historian of medicine and psychology, specializing in the cultural history of the unconscious. His essays and reviews have appeared in the Times Literary Supplement, Granta, New Statesman, Prospect, and Aeon. He is also the author of “The Unconscious: A Cultural History from Hippocrates to Phillip K. Dick and Beyond,” from which this excerpt is adapted.

குறுந்தொகை

ஸ்ரீநிவாச ராமானுஜன்


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.